உபநதிகள்-2

This entry is part 2 of 17 in the series உபநதிகள்

கோடை விடுமுறையின் தொடக்கத்தில் ஒரு சனிக்கிழமை. பாலைவன சூரியன் உப்பு ஏரியை நோக்கிச் சரியும் நேரம். யூடா பல்கலைக்கழத்தின் மொழியியல் கட்டடத்தில் ஒரு வகுப்பு அறை. அங்கே சாதாரண பள்ளிக்கூட அறை போல பல துறைகளில் பல மட்டங்களில் ஆர்வம்கொண்ட மாணவர்கள் இல்லை. ஒவ்வொருவரும் ‘இலக்கிய நிருபம்’ போட்டியில் அவர்களின் மாநிலத்துக்கான பரிசு பெற்றவர்கள். அங்கே வருவதற்கு முன், (ஒருத்தியைத் தவிர) மற்ற எல்லாருக்குமே எதிர்காலத்தில் ஜே. கே. ரோலிங், இல்லை ஜான் க்ரிஷம் ஆகப்போகிறோம் என்ற எண்ணம். அதற்குத் தேவையான மொழிவன்மை தங்களுக்கு அப்போதே இருப்பதாக நினைப்பு. ஏதோ சாதித்துவிட்டோம் என்ற பெருமை. அங்கே வந்ததும், உன்னைப்போல் உன் ஆசைகளுடன் உன் வயதில் எத்தனையோ பேர் என்று தலையில் ஓங்கி ஒரு குட்டு. 

பதின்பருவத்தின் பின்பாதியில் இருந்த அவர்களுக்கு நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இருந்து ஸால்ட்லேக் சிடிக்குத் தனியாகப் பயணம், பலருக்கு முதன்முறையாக. மதியத்திற்குமுன் விமான நிலையத்தில் ஐந்தாறு பேர்களாகச் சேர்ந்து வளாகத்தின் மாணவர் விடுதிக்கு வந்தார்கள். சிறுவயதில் இருந்தே தனி அறையின் சுதந்திரத்திற்குப் பழக்கப்பட்ட மானஸா இன்னொருத்தியுடன் ஒரு அறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். கல்லூரி வாழ்க்கைக்கு ஒத்திகை. மானஸா தன் பெட்டியைத் திறந்து சாமான்களை அவற்றுக்கான இடங்களில் வைத்தபிறகு அவள் அறைத்தோழி நிதானமாக வந்தாள், சிறிய தோள்-பையுடன். 

“ஹாய் நான் சுகன்யா!” 

“நான் மானஸா!” 

“ஓ! தேசியப்பரிசு வாங்கிய இலக்கியவாதி மானஸா சஹாதேவன்! ஒருவாரம் உன்னுடன் உரசப்போகிறேன். என்ன என் அதிருஷ்டம்!” என்று அவள் தோளுடன் இடித்துக்கொண்டாள்.  

நிஜமான வார்த்தைகள். குரலில் கேலி துளிக்கூட இல்லை. 

“உனக்கும் தகுதி இருப்பதால் தான் நீ இங்கே அழைக்கப்பட்டு இருக்கிறாய்” என்பதை மானஸா நினைவூட்டினாள்.  

“உன் நிருபத்தை நான் படித்தேன். நாடு முழுவதற்குமே மிகச்சிறந்ததாக அதைத் தேர்வாளர்கள் கணித்ததில் ஆச்சரியம் இல்லை. அதை எட்டிநின்று பார்க்கக் கூட என் எழுத்துக்குத் தரம் இல்லை. வேண்டுமானால் என் கடிதத்தைப் படித்துப்பார். எப்போதாவது நீ நையாண்டிக் கதை எழுதினால் அது உதவும்.” 

சாதாரண சட்டை பான்ட்ஸிலும், தடிக் கண்ணாடியிலும், பின்னலிட்ட அரை மீட்டர் கூந்தலிலும் சுகன்யாவுக்கு புத்திசாலிப் பெண்ணின் களை. முகத்தில் மற்ற பெண்களுக்கு இல்லாத முதிர்ச்சி. அதன் காரணம், அவள் பள்ளிப்படிப்பை முடித்து எம்.ஐ.டி. போகிறாள் என்பது பிறகு தெரியவந்தது. 

மானஸா முகத்தின் அவநம்பிக்கையைக் கவனித்த மற்றவள், 

“நான் போனது யூடா எம்.எஸ்.ஈ. அகடெமி. அங்கே எல்லாரும் கணிதம், விஞ்ஞானம், பொறியியல் படிக்கும் ‘நெர்ட்’கள். எங்களுக்கு ஒரேயொரு ஆங்கில ஆசிரியர். வகுப்பில் போட்டியை அறிவித்து ஒரு கடிதமாவது அனுப்பாவிட்டால் அகடெமிக்குக் கெட்ட பெயர் என்று கெஞ்சிய பிறகும் யாரும் எழுத முன்வரவில்லை.”  

“எல்லாருடைய பெயர்களையும் எழுதிக் குலுக்கிப்போட்டு உன் தலையில் கட்டினார்களா?” 

“அந்தமாதிரி தான். யாருக்கு எழுதுவது என்று யோசித்தேன். கற்பனைக் கதைகள் என்றாலே எனக்கு அலர்ஜி. ஹாரி பாட்டர் பிரமாதம் சுவாரசியம் என்று எல்லாரும் புகழ்கிறார்களே என்பதற்காக முதல் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். முப்பது பக்கத்துக்குமேல் தாண்டவில்லை.”   

“த டபில் ஹீலிக்ஸ், த ஜீன், த ஆன்செஸ்டர்ஸ்’ டேல் – போட்டிக்கு இப்படி எதையாது எடுத்திருக்கலாமே.”  

“அதற்கெல்லாம் நேரம் ஆகும். என் அகடெமியும் போட்டியில் பங்கெடுத்தது என்று காட்டிக்கொள்ள பேருக்கு ஒன்று எழுதித்தர வேண்டும், அவ்வளவுதானே. வீட்டில் காவ்யா விஸ்வநாதனின் ‘ஓபல் மேத்தா’ இருந்தது.”  

“இலக்கியத் திருட்டு என்று வெளிவந்த ஒரு வாரத்திற்குள் அதை விற்பனையில் இருந்து தூக்கிவிட்டார்களே.” 

அவளுக்கு எப்படிக் கிடைத்தது?  

“அது பிரசுரத்துக்கு முந்தைய ‘ரிவ்யு காப்பி’. எங்கள் குடும்ப நண்பர் – அவர் இப்போது இல்லை – தேசிகாச்சாரியின் கவனத்துக்கு வந்தது. ஒரே வேளையில் வாசித்து முடித்தேன்.”  

“புத்தகம் எப்படி?” 

“குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றும் இல்லை. அதே சமயம், குறைசொல்லவும் ஒன்றும் இல்லை. காப்பி அடித்தது என்று சொன்ன பகுதிகளை நிதானமாகத் திரும்பப் படித்தேன். எல்லாமே இந்த மாதிரி கதைகளின் ‘கோ, கெட் அ லைஃப்!’ போன்ற மாமூல் வாசகங்கள்.”  

“சிலவற்றில் மூலத்துக்கும் ‘ஓபல் மேத்தா’வுக்கும் சாயல் அதிகம்.”  

“விவரம் தெரிந்த உனக்கு அப்படித் தோன்றலாம். நான் படிப்பது அறிவியல் பாடப்புத்தகங்கள் மட்டுமே. எனக்கு வாக்கியங்களின் உடல் தான் முக்கியம். அவை போட்டிருக்கும் ஆடையில் கவனம் போகாது.” 

“சரி, காவ்யாவுக்கு ஒரு கடிதம். அதில்…”  

“பதின்பருவத்தினரைக் குறிவைக்கும் நாவல்களுக்கு ஒரிஜினாலிடி கிடையாது, அவற்றின் சொற்றொடர்களிலும் புதுமை இல்லை என்பதைக் காட்ட நீயே கதம்பமாக ‘ஓபல் மேத்தா’வை எழுதி இருக்கிறாய். அது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. அந்த வகை நாவல் எழுத நான் ஆசைப்பட்டால் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று ‘ஓபல் மேத்தா’வில் இருந்து தெரிந்துகொண்டேன். அதற்கு மிக்க நன்றி!” 

“கிண்டலாக.” 

“அப்படித்தான் எழுத முயற்சித்தேன், ஆனால் எழுத்தில் அது வெளிப்படவில்லை. ஞாபகம் இருக்கட்டும், நான் உன்னைப்போல சொல்வினைஞர் இல்லை. படித்துப்பார்த்த என் ஆசிரியர் சிரித்துக்கொண்டே கடமைக்காக அதை அனுப்பிவைத்தார். நானும் பொறுப்புவிட்டது என அதை மறந்தேபோனேன். இரண்டு மாதம் கழித்து ஆசிரியர் வகுப்பில் போட்டியின் முடிவை சோக முகத்துடன் அறிவித்தபோது நாங்கள் எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தோம். எதிர்காலத்தில் எனக்கு இலக்கிய நோபல் கிடைக்கும் என்று கேலி.”  

“உன் திறமை உனக்கே தெரியவில்லை.” ஆறுதலா பாராட்டா என்று வித்தியாசம் காணமுடியாத குரலில் சொன்னாள். 

“ஃபைன்” என்றாள் சுகன்யா அலட்சியமாக. “இந்த ஒர்க்-ஷாப் வேறு எங்காவது இருந்தால் நான் பணம் செலவழித்து வந்திருக்க மாட்டேன். என் வீடு இங்கிருந்து தெற்கே பத்து மைலில்.”  

சுகன்யாவுடன் ஒரே அறையில் நாளின் சிலபகுதிகள் செலவழிப்பதை மானஸா தயக்கமின்றி எதிர்பார்த்தாள். 

மைப்பாளர் மாணவர்களை வரவேற்றார். 

“நான் லின்ட்ஸி ஓல்சன். ஏற்கனவே இலக்கியப்பாதையில் காலடிவைத்த உங்களை வரவேற்கிறேன். அப்பாதையில் நீங்கள் தொடர்ந்து நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்பதற்காக இப்பட்டறை. இதேபோன்ற ஒரு பயிற்சி முகாமில் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் செலவழித்த ஒருவாரம் இப்போதும் அழியாமல் என் நினைவில். தற்போது நான் படைப்பு இலக்கியத்தின் ஆசிரியர். எனக்கு உதவியாக மூன்று பேராசிரியர்கள். முதலில் உங்களின் அறிமுகம்.” 

ஒவ்வொருவரும் தங்கள் பெயரையும் மாநிலத்தின் பெயரையும் வரிசையாகச் சொல்ல.. 

மானஸா சஹாதேவன், டென்னஸி 

சுகன்யா பாலமுரளி, யூடா

ஜோசஃப் ஸ்மித், ஃப்ளாரிடா… 

மானஸா எதிர்பார்த்தது போல பெண்கள் அதிகம். ஒரேயொரு கறுப்பு, மூன்று ஆசிய இனத்தைச்சேர்ந்த இளைஞர்கள்.  

“வரும் வாரத்தில் எத்தனையோ நிகழ்வுகள். அது முடியும்போது உங்கள் இலக்கியத்திறன் இரட்டித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.” 

மானஸாவின் காதில் சுகன்யா கிசுகிசுத்தாள், ‘பூஜ்யத்தை இரட்டித்தாலும் பூஜ்யம் தான்.’ 

லின்ட்ஸி நீட்டிய காகிதக்கற்றை சுற்றிவந்தது. ஒவ்வொருவரும் ஒரு தாளை எடுத்துக்கொண்டார்கள். 

யூடா இலக்கிய எழுத்துப்பட்டறை 

ஞாயிற்றுக்கிழமை: மொழிவன்மை 

“பொருத்தமான வார்த்தை பிரயோகத்திலும் பொருளுக்கு ஏற்ற வாக்கிய அமைப்பிலும் சில அறிவுரைகள்.” 

திங்கள்கிழமை: நாவல்களின் வகைகள். வரலாறு, விஞ்ஞானம், மனோதத்துவம், துப்பறிதல், அதீதக்கற்பனை, சிந்தனையைத்தூண்டும் இலக்கியம், கட்டுக்கற்பனை, தனிமனிதரின் வாழ்க்கை வரலாறு 

“எழுத்தில் ஒரு வகை கைவந்ததும் அதன் மூலையில் ஒதுங்கக்கூடாது. விருந்தில் பல பதார்த்தங்களைச் சுவைத்து எது பிடித்திருக்கிறது என்று தீர்மானிப்பது போல எல்லாவற்றிலும் ஒருகை வைக்க வேண்டும்.”  

எளிமைப்படுத்திய விஞ்ஞான நடை சுகன்யாவுக்கு உதவும். ஆனால், அது இல்லை.  

செவ்வாய்: ஸ்க்ரிப்ட் ரைடிங்

“திரைப்படத்துக்கோ தொலைக்காட்சித் தொடருக்கோ எழுதுவது தனிக்கலை. அதற்கென்று ஒரு ‘ஃபார்மெட்’ இருக்கிறது. உரையாடலில் வார்த்தைகளின் சிக்கனம் மட்டுமல்ல, அவற்றின் கதியும் முக்கியம். டென்னிஸ் ஆட்டத்தில் பந்து இரண்டு திசைகளிலும் வேகமாகப் பறப்பது போல வார்த்தைகள் எகிற வேண்டும்.” 

புதன்கிழமை காலை: கவிதை 

“பிற்பகல் உங்கள் வருகை மறக்காமல் இருக்க எல்லாரும் அருகில் இருக்கும் டிம்பனோகாஸ் குகை போகிறோம்.” 

வியாழன் காலை: சிறுகதை. 

“அதிலும் எத்தனை விதங்கள். அதில் கவனம்வைப்பது அவசியம். ஒரு நல்ல சிறுகதை எழுதவரவில்லை என்றால் மற்ற எந்த இலக்கியத்துறையிலும் சிறப்பிக்க முடியாது என்பது என் எண்ணம். நீங்கள் கற்றுக்கொண்டதை எழுத்தில் காட்ட ஒரு வாய்ப்பு. இரவுக்குள் ஏற்கனவே வெளிவராத ஒரு சிறுகதை எழுதி எனக்கு மின் வழியே அனுப்ப வேண்டும்.” 

வெள்ளிக்கிழமை: படைப்புகளை அச்சிலோ மின்வழியிலோ வெளிக்கொண்டு வருவது எப்படி?  

“தனித்துவத்துடன் எழுதினால் மட்டும் போதாது. எழுதியதை மற்றவர்கள் ஏற்கும்படி செய்வது இன்னொரு கலை. அதைப்பற்றிப் பேச ஷார்ப்பர் பதிப்பகத்தில் இருந்து ஏஞ்சல் டியெகோவை அழைத்திருக்கிறேன்.” 

ரு வாரம். 

பழகிவிட்ட வகுப்பு அறை. வழக்கம்போல் முன்வரிசையின் மூன்றாவது இருக்கையில் மானஸா. வார்த்தை, வாக்கியம், புனைவு, கவிதை, சிறுகதை என்று நாட்கள் ஓடிவிட்டன. வகுப்பில் விவாதித்த பல விஷயங்கள் மானஸாவுக்குத் தெரிந்தவை என்றாலும் எழுதும்போது அவை அனைத்தையும் கருத்தில் கொள்வதற்குப் பயிற்சி. முந்தைய தினம் லின்ட்ஸிக்கு அனுப்புவதற்காக ஒரு சிறுகதை எழுத கணினியின் முன் அவள் அமர்ந்தபோது சுகன்யா, ‘உனக்கு ஆந்திரா சமையல் பிடிக்குமா?’ என்று கேட்க… மூளையில் பொறி பரவ… விரல்கள் வேகமாகப் படபடக்க… 

பாடங்களைத் தவிர நினைவில் நிற்கும் பிற அனுபவங்கள். உணவுக்கூடத்தில் சாப்பிட்டபோதும் மாலையிலும் சுகன்யாவுடன் வம்பு. (அவளைத்  தவிர்த்து) தங்கள் மாநிலத்தின் எல்லைகளைத் தாண்டி வந்ததாலும் பதினேழு வயதின் தூண்டுதலாலும், சிலநாள் பழக்கத்திலேயே இணைசேர்ந்த ஜோடிகள். அவர்கள் சொந்த வாழ்வே ரொமான்டிக் கதைகள். அவர்களின் தொடர்பு வீட்டிற்குத் திரும்பியபிறகும் தொடரலாம். ஏன், மானஸாவும் அவள் பக்கத்தில் அமர்ந்து இருந்த ஜோசஃப் ஸ்மித்தும் தான். ஃப்ளாரிடா பல்கலையில் நுழைய இருந்த அவன் மானஸாவிடம் அக்கறை காட்டுவதைக் கவனித்த சுகன்யா அவனுக்கு வழிவிட்டாள். டிம்பனோகாஸ் பயணத்தின்போது இருவரும் பேருந்தின் அடுத்தடுத்த இருக்கைகளில். ஒன்றாக மலையில் ஏறி குகையில் நடந்து கீழே இறங்கினார்கள். குகையின் இருட்டில் கைகள் தழுவி… அப்படிச் செய்வதை ஏதோ தடுத்தது. 

ஆனால் சொந்த விவரங்கள் தடையில்லாமல் நகர்ந்தன. 

மானஸாவுக்கு ஆண்தோழன் என்று அச்சயம் யாரும் கிடையாது. எழுதுவது இரண்டாவது இயற்கை. துணிவும் தன்னம்பிக்கையும் நிறைந்த, அவள் தாய் தான் அவளுக்கு வழிகாட்டி. ஹிந்து மதத்திலும், இந்திய ஆடைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு என்று சொல்வதற்கு இல்லை. 

ஜோசஃபின் பெற்றோர்கள் விசுவாசமான மார்மன்கள். கல்லூரிப் படிப்பு முடியுமுன் மதப்பரப்பு சேவைக்கு அவன் இரண்டு ஆண்டுகள் வெளிநாடு போக வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். அதற்காக அமஸான் பங்குகள் வாங்கிவைத்து இருக்கிறார்கள். அவை நிச்சயம் அவன் செலவுகளுக்குப் போதும். அவனுக்குத் தரப்பட்ட இடங்களில் சென்னையும் ஒன்று. அவனுடன் அங்கே போக விருப்பமா? 

இரண்டு ஆண்டுகள் முடியாது, வேண்டுமானால் கோடையில் இரண்டு மாதங்கள். 

அவளின் தாத்தா பாட்டி? மாமாவின் குடும்பம்?  

மதமாற்றம் என்று சொன்னால் வீட்டிற்குள்ளேயே விடமாட்டார்கள். 

நல்லவேளை! ‘நீ எப்படி?’ என்று அவன் கேட்கவில்லை. ‘தேவதை மொரோனைக் கொண்டுவந்த பொற்கிழிகள் எப்படி மாயமாக மறைந்து போகும்?’ என்ற அவளுடைய மறு-கேள்வியும் எழவில்லை.

ஞ்சல் டியெகோவை லின்ட்ஸி அறிமுகம் செய்தாள். “என் அழைப்பை ஏற்று இங்கே வந்த ஏஞ்சலுக்கு மிக்க நன்றி! அவள் அறிவுரைகள் உங்களுக்கு நிச்சயம் பயன்படும்.”

“வாசகர்களைத் திருப்திப்படுத்தவது எங்கள் தொழில். அவர்கள் ரசனையைக் கலைஞர்களுக்குத் தெரியப்படுத்துவதும், எழுத்தாளர்களின் படைப்பை அவர்களிடையே பரப்புவதும் எங்கள் கடமை. இலக்கியப் பாலம் என்று எங்களைச் சொல்லலாம்.” முன்னுரையைத் தொடர்ந்து ஏஞ்சலின் நாற்பது நிமிட உரை. இறுதியில், “எந்தவிதமான எழுத்து வெற்றிபெறும் என்று முன்கூட்டியே சொல்வதற்கு இல்லை. அதனால், உங்கள் திறனையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்தி எழுதுங்கள்!” என்ற அறிவுரை.

பிறகு கேள்வி பதில்கள். 

மானஸாவுக்குப் பிரமிப்பு! ம்ம்.. எழுதியதை மற்றவர்கள் பார்வைக்குக் கொண்டுவர எத்தனையோ குறுகலான வளையங்கள் வழியாகத் தாண்டிக்குதிக்க வேண்டும். நடுவில் தடுக்கி விழுந்து அடிபட்டாலும் ஆச்சரியம் இல்லை. உழைப்புக்கேற்ற வெற்றியை எதிர்பார்க்க முடியாது. எழுத்தை முழுநேரத் தொழிலாக மானஸா செய்யப்போகிறாளோ என்று அவள் அப்பா கவலைப்பட்டது நியாயம் தான். 

லின்ட்ஸி எல்லாருக்கும் வாழ்த்து தெரிவித்தாள். இளைஞர்களின் “தாங்க்ஸ் அ லாட், டாக்டர் ஓல்சன்! க்ரேட் வீக்!” என்பதைத் தொடர்ந்து வகுப்பு கலையத் தொடங்கியது. 

“மானஸா! ஒரு நிமிடம்” என்று லின்ட்ஸி அவளை நோக்கிச் சொன்னதும் அவள் நின்றாள். மற்றவர்கள் அறையைவிட்டு வெளியேறினார்கள். ஜோசஃப் கதவைத்தாண்டி அவளுக்காகக் காத்திருந்தான். 

மானஸா மேடையை நெருங்கியபோது லின்ட்ஸியும் ஏஞ்சலும் அதிலிருந்து இறங்கியிருந்தார்கள். முன்னவள், 

“நீ எழுதிய கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு சமுதாயக் குறைபாட்டை எப்படித் திருத்தலாம் என்பதை அழகாகக் காட்டுகிறது.” 

அவளை மட்டும் நிறுத்திவைத்து அதைச் சொன்னதால் ‘அவள் எழுதியது மற்றவர்களின் கைவண்ணங்களைவிட சிறப்பானது’ என்று மானஸா அர்த்தம் செய்து பெருமிதம் கொண்டாள்.

“தாங்க்ஸ், டாக்டர் ஓல்சன்!”

அவளைத் தொடர்ந்து ஏஞ்சலும், 

“நானும் ‘ஸ்விம்மிங் வித் த ஷார்க்ஸை’ ரசித்தேன். அவசரத்தில் எழுதியதால் சிறுகுறைகள். நீயே நிதானமாகப் படித்துத் திருத்திவிடலாம்.”  

“பாராட்டுக்கு நன்றி!” 

“இதைப்போல இன்னும்…” 

“நான்கு எழுதியிருக்கிறேன். இரண்டு அச்சில் வந்திருக்கின்றன.” 

“க்ரேட்! இன்னும் ஐந்து கதைகளைச் சேர்த்து எனக்கு அனுப்பிவை! பதிப்பாசிரியர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.” 

ஷார்ப்பர் வணிக அட்டையை எடுத்துக் கொடுத்தாள். மானஸா அதைத் தன் கைப்பையில் பத்திரப்படுத்தினாள். 

“இன்னொரு நன்றி! பள்ளிக்கூடம் திறந்ததும் கல்லூரி விண்ணப்பம் மாணவர் பத்திரிகை என்று நேரம் இராது. அடுத்த கோடை விடுமுறைக்குள், கட்டாயம்.”

“ஒன்றும் அவசரம் இல்லை. திறமையுள்ள இளம் எழுத்தாளர்களை அடையாளம் காண்பது எங்கள் குறிக்கோள்.”

மானஸாவுக்கு எதிர்பாராத சந்தோஷத்தின் மௌனம். அவள் பதிப்பகத்தை நாடாமல் அதுவாகவே அவளைத்தேடி வந்து இருக்கிறது. வீட்டிற்குப் போனதும் முதல் காரியமாக அட்டையைக் காட்டி அப்பாவிடம் பெருமை அடித்துக்கொள்ள வேண்டும். ‘இப்போ என்னப்பா சொல்றே?’ 

இருவரிடமும் விடைபெற்றாள். 

அவளும் ஜோசஃபும் படியிறங்கி கட்டடத்தின் முன் புல்வெளிக்கு வந்தார்கள். அங்கே மாணவ கும்பல். விடுதலை உணர்ச்சி இன்னும் தொடராதா என்ற ஏக்கத்தில் கூடிக்கூடிப் பேசினார்கள். சுகன்யாவுக்கு அன்னிய இடத்தில் இருந்து தப்பித்து, தன் வீடு திரும்பும் அவசரம். அவள் அங்கே இல்லை.  

இருவரும் நின்றார்கள். 

நல்ல சேதியை ஜோசஃபிடம் எப்படிச் சொல்லலாம்? ‘நான் இதை எதிர்பார்க்கவே இல்லை… சத்தியமா… நிஜமாகத்தான்…’ 

ஜோசஃப் அவளை முந்திக்கொண்டான். 

“என் பெயரை ஜம்போ ஸ்ரீவாஸ் என்று மாற்றிக்கொள்ளப் போகிறேன்.”

வேடிக்கைக்காகச் சொன்னது போல் இல்லை. 

‘ஏன்?’ அவனை ஏறிட்டுப் பார்த்தாள். 

“அப்போது தான் என் எழுத்து எடுபடும்.”  

முகத்தில் கலப்படம் இல்லாத பொறாமை. 

“எழுத ஆரம்பிக்குமுன்பே எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். இது வெள்ளை ஆண்களுக்குக் காலம் இல்லை. வாய்ப்பு உன்னைப் போன்றவர்களுக்குத் தான்.”   

அதற்கு என்ன அர்த்தம்? அவளுக்கு வாயடைத்துவிட்டது. 

“இலக்கிய நிருபத்தையே எடுத்துக்கொள்! புனைவு அபுனைவு எதிலும் சேர்க்க முடியாத, யாரும் கேள்விப்படாத சாதாரண புத்தகம். ஆயிரம் பிரதிகள் கூட விற்றிருக்காது. யாரோ ஊர்பேர் தெரியாத சராசரி பள்ளிக்கூட ஆசிரியை. புரியாத அறிவியல் சொற்களைக் கலந்து அவளுக்கு வரைந்த நிருபத்தின் கீழே நீண்ட இந்தியப்பெயர். தேர்வாளர்கள் படிக்கக்கூட வேண்டாம். அதற்குத்தான் தேசியப்பரிசு. ‘ஃபேஸ் சேஞ்ஜ் (Phase Change)’ நியு யார்க் டைம்ஸின் பெஸ்ட் செல்லர். பல திறனாய்வாளர்களின் மதிப்பைப் பெற்ற புத்தகம். ஒரு பெண் வயதுக்கு வரும் அற்புதமான கதை. அதன் இலக்கியத்தரத்தைப் புகழ்ந்து அதன் ஆசிரியருக்கு நான் எழுதிய கடிதத்துக்கு ஆறுதல் பரிசு கூட கிடையாது. என்ன ஓரவஞ்சனை!”

மானஸா அதை வாசித்திருந்தாள். ‘ஃபேஸ் சேஞ்ஜ்’ என்ற அறிவியல் பெயர் கதைக்கு என்ன பொருத்தம்! அந்தத் தலைப்பை அவள் ஒரு கதைக்குப் பயன்படுத்தினால் நன்றாக இராதே என்று வருத்தம். செழிப்பான, விசுவாசமான பெற்றோர்களின் பாதுகாப்பான அரவணைப்பில் பிறந்து, வக்கிரமான தீண்டுதல் இல்லாமல் வளர்ந்த அவள், முற்றிலும் மாறுபட்ட சூழலில் அவதிப்படும் பதின்பருவப் பெண்ணின் அவலத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வைத்தது. உதவிக்கரம் நீட்டும்போது அதை அப்பெண் ஏற்காததும் நடக்கக் கூடியது. ஆனாலும் ‘ஃபேஸ் சேஞ்ஜ்’ அவளுக்கு அநுதாபத்தைத் தரவில்லை. வாசகி என்று இல்லாமல் அதே கதையை அவள் எப்படி எழுதியிருப்பாள் என்கிற பிம்பம் பின்னணியில் இருந்தது காரணமாக இருக்கலாம். ஜோசஃபின் கடிதத்தை இரண்டு நாள் முன்பு படித்திருந்தாள். புத்தகத்தின் சிறப்பைவிட ஆசிரியரின் திறன் பற்றிய மிகையான புகழ்ச்சி. அது தேர்வாளர்களுக்குப் பிடித்திராது. 

“நான் எழுதிய வரலாற்று நாவல் ‘வெற்றிவீரன் மொரோனை’ முழுவதையும் ஷார்ப்பருக்கு அனுப்பினேன். ‘வரப்பெற்றோம்’ என்பதைத் தவிர, ஆறு மாதம் ஆகியும் பதில் இல்லை. உன் ஒரேயொரு சிறுகதையை வைத்து ஒரு நாளுக்குள் ஒரு புத்தகத்துக்கு எழுதாத ஒப்பந்தம். இது என்ன நியாயம்? நான் வேண்டுமானால் பந்தயம் கட்டுகிறேன். அந்த இரண்டு பெண்களுக்கும் பிடித்தமாதிரி நீ எழுதிய சிறுகதை உன் சமுதாயத்தின் சித்திரம். அதில் – ஒரு ஆசியப்பெண் கன்னித்தன்மை இழத்தல், கட்டாயக் கல்யாணம், இரண்டும் கட்டாயம் இருக்கும்.” 

‘இந்திய சமுதாயத்துக்கே என்று சொல்ல அதில் எதுவும் இல்லை. தற்போது ‘ப்ரைவேட் ஈக்விடி’ நிறுவனங்களின் பேராசை பல தொழிலாளர்களின் பிழைப்பில் மண்போடுவது கதையின் ஓட்டம். தைரியமாக என் அம்மா செய்ததை எந்த வெள்ளைப் பெண்ணும் செய்திருக்கலாம்’ என்று மானஸா உரையாடலைத் தொடர்வதற்கு முன்.. 

“ஹாய் ஜோ!” 

திரும்பிப் பார்த்தார்கள்.

லின்ட்ஸி! 

“நீ இதை மறந்துவிட்டாய்.” அவள் கையில் விரிவுரைகளின்போது அவன் எழுதிய குறிப்பு நோட்டு. 

ஜோசஃப் திரும்பிக்கூடப் பார்க்காமல் அவளை நோக்கி வேகமாக நடந்தான். 

மானஸா விடுதிக்கட்டடத்தின் வாசலை அடைந்தபோது சுகன்யா தோள்பையுடன் வெளியே வந்தாள். அவளைப் பார்த்ததும் மானஸா முகத்தின் ஏமாற்றத்தையும் கண்களின் ஈரத்தையும் வேகமாகத் துடைத்து சுமுகத்தைப் பூச முயற்சித்தாள். அதில் முழுவெற்றி கிடைக்கவில்லை. நெருங்கியதும் சிறு வருத்தத்துடன் ஒருவரையொருவர் பார்த்து நின்றார்கள். 

“மானஸா! உனக்கு பயனுள்ள வாரம்” என்பதைத் தொடர்ந்து, “எனக்கும் தான். சென்ற கோடையின்போது அறிவியல் ஆராய்ச்சியில் பயிற்சிபெற எம்.ஐ.டி. போனேன். ஆறு வாரங்கள். அங்கேயும் ஐம்பது பேர். பாதிக்குமேல் ஆசிய இனத்தவர்கள். இங்கே நாம் மைனாரிடி.”  

“உண்மைதான்.” 

“எழுத்துத்துறையில் உன்னிடம் பெரிதாக எதிர்பார்க்கிறேன்.”   

“நீயும் நோபல் பரிசு வாங்கலாம். நிச்சயம் அது இலக்கியத்துக்காக இருக்காது.” அவள் எழுதிய சிறுகதையை முந்தைய தினம் மானஸா சிரமப்பட்டு வாசித்திருந்தாள்.  

சுகன்யா மனம்விட்டு சிரித்தாள். 

“என் நண்பர்களில் மற்ற எல்லாரையும் விட நீ வித்தியாசமானவள். உன் வார்த்தை வன்மை யாருக்கும் கிடையாது. இங்கே தொடங்கிய நம் தொடர்பை அப்புறமும் தொடர ஆசை.”  

“அப்படிச் செய்யப்போவது மற்ற நாற்பத்தியொன்பது பேரில் நீ மட்டும் தான்.”  

அதன் உள்ளர்த்தத்தை சுகன்யா உடனே புரிந்துகொண்டாள். 

“வீட்டிற்குத் திரும்பிப்போனதும் இந்த அனுபவத்தை வைத்து ஒரு கதை எழுது!” என்று ‘எல்லாம் காலப்போக்கில் மறந்துவிடும்’ தொனியில் சொன்னாள்.  

மானஸா மௌனத்தில் அந்த அறிவுரையை ஏற்றுக்கொண்டாள். 

தொலைவில் ஊர்தியின் அழைப்பு ஒலி, சுகன்யாவுக்கு. 

தழுவலுடன் விடைபெற்றார்கள்.  

Swimming with the sharks

சுறாமீன்களுடன் நீச்சல்

ந்திரா அட்ராக்ஷன், தென்னிந்திய பாரம்பரியவழி உணவகம். பொம்மியும் கங்காவும் பழைய நட்பைப் புதுப்பிக்க சந்தித்தார்கள். 

“டீன்-ஏஜ் குழந்தைகளைக் கவனிக்கறதில நேரம் ஓடிப்போயிடுத்து” என்றாள் கங்கா மன்னிப்புக் கோரும் குரலில். 

“எனக்கும் வீட்டில நிறைய வேலை.” 

“சங்கமி சத்வா எப்படி?” 

“பதின்வயதுக்கு முந்தைய பருவம். எப்பவும் சந்தோஷம், எதிலும் ஆச்சரியம். வீட்டு வேலை எது கொடுத்தாலும் முனகாம செய்யறாங்க.” 

“இப்பவே அனுபவிச்சுடு!” 

“மானஸா எழுதின நீச்சல் போட்டி ரிபோர்ட்டை படிச்சேன். நல்லா கட்டுக்கோப்பா இருக்கு.” 

“எழுத்துத்திறமை என்கிட்டேர்ந்து வரல.”  

இருவருக்கும் நடுவில் நிரப்பப்படாத தண்ணீர் தம்ளர்கள். காரமான புளியோதரை சாப்பிடுவது நின்று உரையாடல் தொடர்ந்தது. 

“முன்னல்லாம் இங்கே அடிக்கடி வந்திட்டிருந்தேன். இப்ப ஒரு சம்பளத்தில குடும்பம் நடக்கறதினால மாசத்துக்கு ஒரு தடவை. கடைசியா வந்து மூணு மாசமே இருக்கும்” என்றாள் பொம்மி.  

“சமீபத்தில தரம் குறைஞ்சிருக்க மாதிரி தெரியறது.” 

தாங்களே எடுத்துக்கொள்ளும் மதிய உணவு மேஜை மேல் பரிசாரகன் கொண்டுவந்து போட்ட ‘நான் ‘துண்டுகளில் பல கருகியிருந்தன. தொட்டுக்கொள்ள தால் மற்றும் ஆலுபனீர் மட்டும். பக்கோடா தட்டில் முழுசாக ஒன்றுகூட இல்லை. உப்புச்சப்பு இல்லாத சாம்பார்.  

“நான் கூட கவனிச்சேன். இன்னைக்கு மட்டுமோன்னு சந்தேகமா இருந்தது.”  

“இல்ல, நிரந்தரமாவே. சனிக்கிழமை குடும்பத்தோட வருவேன். வார நடுவில எப்படியும் ஒரு பிசினெஸ் லஞ்ச். இந்தக் கடையில மட்டுமில்ல மத்த இரண்டு இடத்திலும்கூட இதே கதைதான். வேலை செய்யறவங்களும் அக்கறையா இல்ல.” 

ஒருவழியாக பணியாளன் ஒருவன் அவர்கள் காலி தம்ளர்களைக் கவனித்து அவற்றை நிரப்பினான்.  

“தாங்க்ஸ்!”

“நான் படிச்சது ‘ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்’. ஆனாலும் பிசினெஸ் எல்லாத்துக்கும் பொதுவான சில உண்மைகளும் தெரியும். மேனேஜ்மென்ட் மறைச்சு வைச்சாலும் நிர்வாகத்தில எதாவது தகராறுன்னா வேலையாட்கள் கண்ணிலே உடனே பட்டுவிடும். அதுவும் இல்லாம.. ரெஸ்டாரன்ட்ல வேலை செய்யறவங்க சம்பளம் மணிக்கு 2.13 டாலர். மீதி வாடிக்கைக்காரங்க கொடுக்கற டிப்ஸ். விற்பனை குறைஞ்சா அவங்க சம்பளத்தில உடனே பிரதிபலிக்கும்” என்றாள் பொம்மி.  

“வாடிக்கைக்காரங்களோட பசியையும், தாராள மனசையும் நம்பி ஒரு பிழைப்பு. சே! என்ன கொடுமை!”  

“அதிலும் அந்த 2.13 டாலர் இருபது வருஷமா மாறவே இல்ல. இனிமேல மாறும் என்கிற நம்பிக்கையும் இல்ல.” 

“மற்ற தொழிலாளிகளுக்கு மணிநேரக் கூலி தரும்போது இவங்களுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை?”  

“சாப்பாடு பரிமாறவங்களில முக்கால்வாசி பெண்கள்.” அது ஒரு காரணம்.  

“ம்ம்..” 

“வாடிக்கைக்காரங்க நோக்கிலும் இது சரியாப்படல. பத்து டாலர் பீட்ஸான்னு விளம்பரத்தில சொல்லிட்டு, டிப்ஸ் சேர்த்து பதிமூன்று டாலர் தரணும்னு கேட்கறது என்ன நியாயம்? முதலிலேயே முழுவிலை சொன்னா பணம் கொடுக்கும்போது அதிர்ச்சி இருக்காது, இல்லையா?”  

கங்கா சிந்தனையில் ஆழ்ந்தாள். அவளுக்கு சமாதானமாக,   

“இந்த மாதிரி வணிக முயற்சிகளில பாதிக்கு மேல் ஒரு ஆண்டுகூட நிற்காது. டார்கெட் கடைக்கு பக்கத்தில இருக்கற ‘நியு டெலி’ ரெண்டு வருஷத்தில நாலு கை மாறிடிச்சி. இது இத்தனை வருஷமா நிலைச்சு நின்றதே அதிசயம்,” என்றாள் பொம்மி.  

உணவின் தரமும் பணியாட்களின் சேவையும் முக்கிய காரணங்களாக இருக்கும்.  

“இன்னும் எவ்வளவு நாள் போகும்னு சந்தேகமா இருக்கு.”  

“மைசூர் கார்டன் நல்லா இருக்குன்னு ஜானகி சொன்னா. இனிமே அங்கே தான் போகணும்.”  

கங்கா அவ்வளவு சுலபமாக தன் விசுவாசத்தை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.  

“இந்தக் கடையைப் பத்திய விவரம் எனக்கு எங்கே கிடைக்கும்?”  

“‘நாஷ்வில் ஸீன்’ல தேடிப்பார்.”   

பிற்பகல். கங்காவின் மனம் தரம் குறைந்த ஆந்திரா அட்ராக்ஷனின் உணவைத்தவிர வேறு எதிலும் ஒட்டவில்லை. பணத்தையும் உணவையும் மாற்றிக்கொள்ளும் வர்த்தகக்கூடம் என்றாலும், வீடு அலுவலகம் இரண்டிற்கும் அடுத்ததாக அவள் அதிக நேரம் செலவழித்த இடம் அதுவாகத்தான் இருக்கும். தேர்வுகளுக்குத் தயார் செய்வதில் நேரம் செலவழித்து, சமையலறையில் கால்வைக்காத அவள் அன்னிய மண்ணில் கால்வைத்தபோது அவளைத் திரும்ப தாய்நாட்டிற்கு அழைத்துப்போன பறக்காத கம்பளம். பாரிஸைப்போல எப்போதும் அது இருக்கும் என நினைத்திருந்தாள், அதுவரையில். 

ஆந்திரா அட்ராக்ஷனின் ‘ஆப்’ வழியாகப் பலமுறை தன் வருகையையும் தன்னுடன் வரும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் விருப்பங்களை தெரிவித்து இருந்தாள். விடுதியின் வியாபார விவரங்களைத் தெரிந்துகொள்ள அதன் வலைத்தளம். அதைத் தொடங்கியவர் வெல் கிரிதாரி. படத்தில் இருந்த உருவம் அவள் ஞாபகத்துக்கு வந்தது. பணியாளர்களுக்கு நடுவில் நடமாடியதால் அவரை உரிமையாளராக நினைக்கவில்லை. கோவிலுக்குப் பக்கத்தில் முதல் கடை. இந்தியர்கள் பிள்ளையாரைத் தரிசனம் செய்துவிட்டு அவருடைய கைவண்ணத்தையும் ஒருகை பார்த்து இருப்பார்கள். அதன் வெற்றியைத் தொடர்ந்து முதலில் அகநகரிலும் பிறகு தெற்குப்புறநகரிலும் கடைகள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்தபிறகு, ‘அவர் வழியில் நடக்கிறோம்’ என்கிற மாமூல் பெருமை.  

பொம்மி சொன்னது போல ‘நாஷ்வில் ஸீனி’ல் இன்னும் சில தகவல்கள். சில ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நேர்காணல். 

வெல் என்று உங்களை அழைக்கலாமா? 

தாராளமாக. என் வணிக வெற்றிக்குக் காரணம் அந்தப் பெயர் என்பது என் நம்பிக்கை.  

உங்களைப்பற்றி… 

சிறப்பாகச் சொல்ல அதிகம் இல்லை. நான் பிறந்து வளர்ந்தது தென்னிந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில். கல்யாணம் போன்ற வைபவங்களுக்கு மிகப்பெரிய அளவில் சமைப்பது என் தொழில். அங்கிருந்து ஷிகாகோவின் மலபார் ஹில் உணவகத்தில் பிரதான சமையல்காரராகப் பத்து ஆண்டுகள். இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன். அங்கிருந்து குடும்பத்துடன் காரில் ஃப்ளாரிடா பயணம். போகும் வழியில் நாஷ்வில்லில் ஒரு இரவு. வெஸ்ட் என்ட் பக்கத்தில் தங்கினோம். இந்திய உணவகம் தேடியபோது இரண்டு தான். அவற்றிலும் இந்தியப் பாரம்பரியம் மணக்காத சாப்பாடு. சொந்தமாக உணவகம் தொடங்க நல்ல ஊர் எனத் தோன்றியது. என் சகோதரி கொடுத்த ஆரம்பப்பணம் உதவியது. பணியாளர்களின் உழைப்பிலும் மக்களின் ஆதரவிலும் வியாபாரம் வளர்ந்தது. 

விடுதியின் கட்டடங்களைக் குத்தகைக்கு எடுக்காமல் விலைகொடுத்து வாங்கியதாக அறிகிறேன். 

உண்மை தான். 

உங்களுக்கு தன்னம்பிக்கை நிறைய. 

அப்படி இல்லை. அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு இடத்தைக் காலிசெய் என்று துரத்தினால்? சிரமம் மட்டுமில்லை, செலவும் நிறைய. பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களைத் தாங்கி வியாபாரம் நின்று நடக்க நிலையான இடம் வேண்டும்.  

உங்கள் வாரிசுகள்… 

ஒரு பெண் இரண்டு பையன்கள். ஒருவன் கல்லூரிப் பேராசிரியன், மற்ற இருவர் மருத்துவர்கள். அவர்களுக்கு இந்தத் தொழிலில் திறமையோ ஆர்வமோ கிடையாது. நானும் அவர்களை ஈடுபடுத்த முயற்சிக்கவில்லை.   

அப்படியென்றால் அவருக்குப்பிறகு உணவகங்களை யார் எடுத்து நடத்துகிறார்கள்? 

சில நாட்களுக்கு முன் அதே செய்தித்தாளில் வந்த ஒரு குறிப்பு. 

ஆந்திரா அட்ராக்ஷன் உணவகங்களின் பணியாட்கள் ‘கேன்ப்ரிட்ஜ் காபிடல்’ மீது மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சம்பளம் கொடுத்துவிட்டு வேலை நேரத்தை சரியாகக் கணக்கு வைக்காமல் வாரத்துக்கு அறுபது மணி வேலை வாங்கியதாக நிர்வாகத்தின்மேல் குற்றச்சாட்டு. நியாயப்படி பார்த்தால் 220 000 டாலர் அவர்களுக்கு சேரவேண்டும். தொழில்நல சட்டத்தின் நோக்கில் வழக்கின் முடிவு பணியாட்களின் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

யூ.எஸ்.ஸில் பத்துக்கு மேற்பட்ட டாக்டர் கிரிதாரிகள். அவர்களில் மூன்று பெண்கள். ஐம்பது வயதைத் தாண்டியவளையும், சீனாவில் பல ஆண்டுகள் செலவழித்தவளையும் தவிர்த்த பிறகு, மிஸிசிப்பி பல்கலைக்கழகத்தின் கான்சர் சிகிச்சையில் ஒரு அனாமிகா கிரிதாரி.  

தொழில் தொடர்பு எண். அதை அழைத்து அவள் பதில் அளிக்காததால் ஒரு தகவல் பதிவு.  

டாக்டர் கிரிதாரி! நாஷ்வில்லில் இருந்து அழைக்கிறேன். அங்கிருக்கும் ஆந்திரா அட்ராக்ஷன் விடுதிகளை ஆரம்பித்து நடத்திய வெல் கிரிதாரியின் வாரிசாக நீங்கள் இருந்தால்… அந்தக் கடைகள் தீவிரமான பிரச்சினைகளுக்கு உள்ளாகும்போலத் தெரிகிறது. அவற்றைத் தவிர்க்க விரும்பினால் என்னை அழைக்கவும். நான் கங்கா, பல ஆண்டுகளாக அதன் உணவை ரசித்தவள். 

அக்கறை இருந்தால் அவள் கூப்பிடட்டும்! 

அவள் அழைத்தாள் சனிக்கிழமை காலையில். குரலில் நிறைய அக்கறை.  

“நான் அனாமிகா. வேலையின் நெருக்கினால் இப்போது தான் நேரம் கிடைத்தது.”  

“ஹாய், அனாமிகா! என் தகவலை மதித்து அழைத்ததற்கு நன்றி!”  

“எங்கள் உணவகத்தின் நடவடிக்கையில் கவனம்வைத்து என்னை அழைத்ததற்கு நான் தான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும், கங்கா!” 

“தனிப்பட்ட முறையில் உனக்குத் தெரிந்ததைச் சொன்னால் மேற்கொண்டு திட்டமிட உதவும்.”  

கங்காவின் வார்த்தைகள் நிஜமாகப் பட்டிருக்க வேண்டும். சிறு யோசனைக்குப் பிறகு அனாமிகா, 

“எங்கள் தந்தைக்கு சமையல் உயிர்மூச்சு. அவர் கடைகளோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அவற்றை விற்றபின் வரும் உல்லாச ஓய்வுக்கால வாழ்க்கையில் அவருக்கு விருப்பம் சிறிதும் இல்லை. நாங்களும் அவர் வழியிலே போகட்டும் என விட்டுவிட்டோம். அவர் முடிவு எதிர்பாராமல் ஒருசில மணிநேரத்தில் நிகழ்ந்தது…” சோகத்தினால் தொண்டை அடைத்தது. சுதாரித்துக்கொண்டு, “ஒரு மாதம் போனதும் கேன்ப்ரிட்ஜ் காபிடலில் இருந்து ஒருவன் எங்களுடன் தொடர்பு கொண்டான். எங்கள் யாருக்கும் வியாபாரத்தின் அரிச்சுவடி கூடத்தெரியாது. அதனால், நிர்வாகத்தை ஒப்படைக்க ஒத்துக்கொண்டோம். முதல் ஆறு மாதம் ஒவ்வொருவருக்கும் முப்பதாயிரம் டாலர். பிறகு வியாபாரத்தை விரிவாக்க கடனுக்கு ஏற்பாடு என்ற தகவல். அது அவசியம் என நினைத்தோம். சமீபத்தில் எங்களுக்குத் தரும் சன்மானம் ஒருசில ஆயிரங்கள் தான்.”  

“வருமானம் குறைந்ததற்கு சாப்பாட்டின் தரம் இறங்கியதால் இருக்கலாம்.”  

“காரணம்…”   

“நிச்சயமாக சொல்வதற்கு இல்லை. கேன்ப்ரிட்ஜின் ஒப்பொந்தம், கடைசியாக அவர்கள் அனுப்பிய வரவுசெலவுக் கணக்கு இரண்டின் பிரதிகளை எனக்கு அனுப்பி வை! என்னால் ஆகக்கூடியது எதாவது இருந்தால் உன்னை மறுபடி அழைப்பேன்.”  

சிந்தனைக்கான தயக்கத்துக்குப் பிறகு, 

“அப்படியே செய்வோம்.”  

ரு வாரத்துக்குள் ஆந்திரா அட்ராக்ஷனில் மறுபடி சாப்பிடுவதை பொம்மி எதிர்பார்க்கவில்லை.  

“எனக்கு உன்னால ஒரு காரியம் ஆகணும். கடைகளின் ஆறு மாதத்துக்கு முந்தைய வரவுசெலவுக் கணக்கு இதில இருக்கு. எல்லாம் சரியான்னு நீ பார்த்து சொல்லணும். கிரிதாரியின் பெண் அனாமிகா எலெக்ட்ரானிக்கா அனுப்பினா. அதை அச்சடிச்சு இருக்கேன்.” 

எண்கள் மொய்த்த காகிதக்கற்றையை மேஜையில் இருந்து எடுத்து பொம்மி பிரித்தாள். 

“ம்ம்.. கேன்ப்ரிட்ஜ் காபிடல்.” குரலில் எல்லாம் புரிந்ததுபோன்ற தொனி.  

“என்ன?” என்றாள் கங்கா ஆர்வத்துடன்.  

“முழுக்க பார்த்ததும் சொல்றேன்.”  

இரண்டு நாள் கழித்து மறுபடியும் ஆந்திரா அட்ராக்ஷனில் சந்திப்பு. 

“நான் எதிர்பார்த்தபடி தான் நடந்திருக்கு. கேன்ப்ரிட்ஜ் ஒரு ப்ரைவேட் ஈக்விடி கம்பெனி.”  

“அப்படின்னா…”  

“நஷ்டத்தில போகும் கம்பெனியை மலிவா வாங்கி, அதைத் தட்டி சரிப்படுத்தி, நிறைய பேரை வீட்டுக்கு அனுப்பி, லாபத்தில ஓடறபடி மாத்தி அதிக விலைக்கு விக்கறது ப்ரைவேட் ஈக்விடியின் குறிக்கோள்.”  

“அதில ரிஸ்க் அதிகம்.”  

“வருமானமும் எக்கச்சக்கம். அந்த மாதிரி கம்பெனில பணக்காரங்க மட்டும் தான் பங்கெடுக்கலாம்.”  

“வெற்றிகரமா நடக்கற வியாபாரமா இருந்தா..”   

“அதை அனாவசியக் கடனில மூழ்க்கடிச்சு, அது மதிப்பில்லாம போனதும் அதைத் துண்டுபோட்டு நல்ல விலைக்கு விற்றுவிடுவாங்க.”  

“லாபத்தில போற பிசினெஸை எதுக்கு அப்படிச் செய்யணும்?”  

“இப்ப ஆந்திரா அட்ராக்ஷனை எடுத்துக்கிட்டா, அதனோட மொத்த மதிப்பு இரண்டு மில்லியன். அந்தவிலைக்கு அதை வாங்கி நல்லபடியா நடத்தினா வருஷத்துக்கு நூறாயிரம் டாலர் கிடைக்கும். முதலுக்கு வருமானம் ஐந்து சதம்.”  

“அது போதாதா?”  

“அவங்க எதிர்பார்ப்பே வேற.” 

“அப்ப ஆந்திரா அட்ராக்ஷன் கடைகளை…”    

“கேன்ப்ரிட்ஜ் நடத்தி நூறாயிரத்தில இருபதாயிரம் கமிஷன் வச்சிகிட்டு மிச்சத்தை வாரிசுகளுக்குக் கொடுக்கறதா ஒப்பந்தம் இருந்திருக்கும்.”  

“அப்படித்தான் ஒரு வருஷம் போனதா அனாமிகா சொன்னா.”  

“அதில அவங்களுக்கு திருப்தி கிடையாது. முதல் வருஷக் கடைசியில பெரிசுபடுத்தறேன்னு சொல்லிட்டு ஐநூறாயிரம் கடன் வாங்கியிருக்காங்க. அதுவும் அநியாய பதினெட்டு சத வட்டிக்கு. அவங்களுக்கு உடந்தையான ஒரு பாங்க்ல.”  

“நீ சொன்னதும் ஞாபகம் வர்றது. போன வருஷம் வெளியிலே உட்கார்ந்து சாப்பிட இரும்பு டேப்ள் சேர், உள்ளே தாஜ்மகால் மாதிரி அலங்காரம். நிறைய செலவு ஆயிருக்கும்.”  

“இப்ப அந்தக் கடன் கிட்டத்தட்ட எழுநூறு ஆயிரம். அது மட்டுமில்ல…”   

“தெரியும் தெரியும். ‘நாஷ்வில் ஸீன்’ல படிச்சேன். வேலையாட்களுக்கு சரியான நேரத்தில சம்பளம் கொடுக்காம இழுத்தடிச்சிருக்காங்க.” 

“அதை ஒரு மாதத்தில சரிசெய்யாட்டி அதுக்கும் வட்டி கணக்கில சேரும்.” 

பொம்மி கொடுத்த விவரங்களை ஜீரணித்ததும் வருங்காலம் கங்காவின் மனதில் விரிந்தது.  

அன்றைய இனிப்பு குலாப் ஜாமூன். பந்துகளைத் துண்டுபோட்டு பாகில் மூழ்க்கினாள். 

“இதே ரீதியில போனா இன்னும் ஒண்ணரை வருஷத்தில கடைகள் கடன்ல மூழ்கிடும்.”  

“அப்ப கடைகளை இழுத்து மூடிட்டு அந்த இடங்களை ரியல் எஸ்டேட்ல நல்ல விலைக்கு வித்திரலாம்” என்று பொம்மி முடித்தாள்.  

“ஆக மொத்தம், மூணு நாலு வருஷத்தில எந்த முதலும் போடாம, கேன்ப்ரிட்ஜுக்கு இரண்டு மில்லியன் கொள்ளை.”  

“ப்ரைவேட் ஈக்விடியோட மோடஸ் ஆபரன்டி.”  

“நான் அப்படி நடக்கவிட மாட்டேன்.”  

“எப்படி தடுக்கப் போறே?”  

“ஒப்பொந்தப்படி இரண்டு பார்டில ஒருத்தர் எப்ப வேணும்னாலும் கணக்கைத் தீர்த்துட்டு விலகிடலாம். அதைப்படிச்சுப் பார்த்த பகீரத் அப்படித்தான் சொன்னான்.”  

“ஆச்சரியமா இருக்கே.” 

“ஆச்சரியப்பட ஒண்ணுமில்ல. கேன்ப்ரிட்ஜின் லாயர்களும் கிரிதாரிகளின் வக்கீலும் சேர்ந்து அந்த ஒப்பொந்தத்தை எழுதியிருப்பாங்க. இவங்க பக்க வக்கீல் கிரிதாரிகளுக்கு சாதகமா இருக்கட்டும்னு அந்த சாத்தியத்தை சேர்த்திருப்பான். அந்த லாயர்களுக்கும் அதில அப்ஜக்ஷன் இருந்திருக்காது. கடைகளின் தினப்படி நிலவரம் கேன்ப்ரிட்ஜுக்குத் தெரியும். கிரிதாரிகளுக்குத் தெரியாது. முதல்ல அவங்க ஊர்லயே இல்ல. அவங்கவங்க தொழிலை கவனிக்கத்தான் நேரம். நீ சொல்றபடி பார்த்தா, ஒப்பொந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர கேன்ப்ரிட்ஜ் தங்களுக்கு சாதகமான சமயத்துக்குக் காத்திருப்பாங்க.”  

“கடன் இரண்டு மில்லியனைத் தாண்டறதுக்கு முன்னாடியே கிரிதாரிகளுக்கு ஐம்பதாயிரம் கொடுத்து கடைகளைத் தங்க பெயருக்கு மாத்திக்கறது நாடகத்தின் கடைசிக்கட்டம்.”   

“கதை அதுவரைக்கும் போகாது.”  

“நீ நடுவில புகுந்து…”  

“இன்னும் ஒரு வாரத்தில ஒப்பந்தம் முறியும். ஒரு மில்லியன் எல்லா கடனையும் அடைக்க. இன்னொரு மில்லியன் கிரிதாரிகளுக்கு. ஆந்திரா அட்ராக்ஷன் மறுபடி பழையபடி நடக்கும்.”  

“இது ஒரு பெரிய வெஞ்ச்சர் ஆச்சே.”  

“இந்தப் பணம் எதோவொரு வழியில என்னைத் தேடி வந்தது. அதை மைக்ரோசாஃப்டிலும் அலிபாபாவிலும் போடாம எனக்கு வாழ்வு கொடுத்த ஊருக்கு நான் செய்கிற கடன்.”  

“அந்தத் தொழிலாளிகளும் உன்னை வாழ்த்துவாங்க.” 

“கடை என் கைக்கு வந்ததும் அவங்களுக்கு லிவிங் வேஜ் கிடைக்கும். டிப்ஸை நம்பி வேலை செய்ய வேண்டாம். வாடிக்கைகளும் மெனுல போட்டவிலை கொடுத்தா போதும். அவங்களா மனசுவந்து டிப் கொடுத்தா எல்லாருக்கும் பொதுவான கணக்கில சேரும்.”  

“உன் திட்டம் கேட்கவே நல்லா இருக்கு. அது வெற்றி பெற வாழ்த்துக்கள்!”  

னாமிகாவை அழைத்து கேன்ப்ரிட்ஜின் திட்டத்தை விவரித்தாள். 

“அநாவசியக் கடன், பணியாட்களின் சம்பளத்தைக் கொடுப்பதில் காலம் தாழ்த்துவது, மற்றும் உணவின் தரத்தைக் குறைப்பது. இந்நிலைமை அதிகநாள் நீடிக்காது.” 

“ம்ம்..” என்பதைத்தொடர்ந்து நீண்ட மௌனம். “நாங்கள் செய்யக்கூடியது என்ன?” 

“வியாபாரம் மேலும் கீழே இறங்கி படுத்துவிடுவதற்கு முன் ஒப்பொந்தத்தை முறிப்பது அவசியம். உங்கள் வக்கீலுடன் பேசினேன். அவனுடைய அறிவுரையும் அது தான்.” 

“அதற்கு என்ன செலவாகும்?” 

“ஒரு மில்லியன் டாலர்.” 

“அவ்வளவு பெரிய தொகையை எங்களுக்குத் தெரியாத ஒரு தொழிலில் முடக்க முடியும் என்று தோன்றவில்லை.” 

“உங்களால் முடியும் என்று நானும் நினைக்கவில்லை. நான் செய்யப்போகிறேன்.” 

தொடர்பில் ஒலி மட்டும் என்றாலும், ‘நீ ஏன்?’ என்ற கேள்வி. 

“இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் நாஷ்வில் விமானநிலையத்தில் இறங்கியபோது என்னிடம் இருந்தது நான்கைந்து இருபது டாலர் நோட்டுகளும் சில்லறைகளும். இப்போது அதைப்போல பலமடங்கு. ஊருக்கு உதவுவதுடன் கடைகளை லாபகரமாக நடத்தமுடியும் என்கிற நம்பிக்கை.” 

“நீ இப்படி சொல்வதைக்கேட்டு சந்தோஷம். இருந்தாலும், எங்கள் தந்தை கட்டிக்காத்த கடைகள் எங்களைவிட்டுப் போகிறதே என்றுதான் வருத்தம்.” 

“எப்படியும் போகத்தான் போகிறது.” 

“எந்த வணிக முயற்சியும் நம் நேரடி மேற்பார்வையில் இல்லாவிட்டால் இப்படித்தான் முடியும்” என்றாள் கைவிட்ட குரலில். 

“கவலைப்படாதே! வெல் கிரிதாரி உழைத்து அமைத்த பாதையில் நடக்கிறோம் என்று மேலுக்குச் சொல்லாமல் உன் அப்பா பெருமைப்படும்படி விடுதிகள் நடத்துவது என் குறிக்கோள். நீ நாஷ்வில் வரும்போது அங்கே தைரியமாகச் சாப்பிடலாம்” என்றாள்.  

“அதற்காக உனக்கு நன்றி, என் சகோதரர்களுக்கும் சேர்த்து.”  

கேன்ப்ரிட்ஜில் ஆந்திரா அட்ராக்ஷன் கணக்கை மேற்பார்வையிட்டவனுக்கு உள் வக்கீலிடம் இருந்து வந்த குறிப்பைப் படித்து அதிர்ச்சி. திட்டமிட்டபடி போய்க்கொண்டிருந்த படகை உலுக்குவது யார்? இரண்டு மில்லியன் டாலரை ஒருவர் தூக்கியெறிகிறார் என்றால் அது லாட்டரியில் ஜெயித்த பரிசு, இல்லை பேடன்ட்டை விற்றுவந்த பணம். தேடல் விரைவில் முடிந்தது. 

கங்கா எதிர்பார்த்த மிரட்டல் உடனே வந்தது. அழைப்பு யாரிடம் இருந்து என்று தெரிந்தும் அலைபேசியின் தொடர்பை அவள் துண்டிக்கவில்லை.  

“இரண்டு மில்லியனை எதற்கு கம்பர்லன்ட் ஆற்றில் கரைக்கிறாய்? பேசாமல் ஃபேஸ்புக்கிலோ அமஸான்லியோ முடக்கு! நாலு வருஷத்தில் மூணு மில்லியன் ஆகும்.”  

“என் நோக்கில் இது நல்ல முதலீடு.” 

“ஆன்ட்ரா கடைகள் கடனில் மூழ்கட்டுமே, மூணு கிரிதாரிகளும் அதனால் ஏழையாகப் போவது இல்லை.”  

“பணியாட்களில் பலர் கடை தொடங்கியதில் இருந்து விசுவாசத்துடன் உழைத்திருக்கிறார்கள். அவர்கள்?”  

“இதெல்லாம் வியாபாரத்தில் சகஜம். வேறு உணவகங்களில் வேலை கிடைத்துவிட்டுப் போகிறது.”  

“அது என்ன நிச்சயம்? அப்படியே கிடைத்தாலும் வருமானம் குறையும்.” 

“அவர்களை மறந்துவிட்டு உன்னைப்பற்றி யோசி! எங்களுக்கு வழிவிட்டு விலகிப்போவது உனக்கு மிகவும் நல்லது” என்றான் எச்சரிக்கும் குரலில்.  

“போகாவிட்டால்…”  

“ஐ.ஆர்.எஸ்.ஸுக்கு தகவல் போகும். உனக்கு இந்திய பாங்க் ஒன்றில் கணக்கு இருக்கிறது. சென்ற ஆண்டு அதில் இரண்டு தடவை ஐயாயிரம் டாலர் மாற்றியிருக்கிறாய். பேட்ரியட் ஆக்ட்டின்படி நீ ஒரு தீவிரவாதி. நீதிபதியின் முன் ஆஜர் ஆகவேண்டும். எழுபத்தியைந்தாயிரம் டாலர் அபராதம். அத்துடன், விஸா ரத்துசெய்யப்படும். குடும்பத்தைப் பிரிந்து நீ இந்நாட்டில் இருந்து வெளியேற வேண்டி வரும்.”  

“நீ இதைச் சொன்னதும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.” 

“கதைகேட்க எனக்கு நேரம் இல்லை.” 

அவனுக்கு இல்லாவிட்டாலும் கங்கா தொடர்ந்தாள்.  

“பிரதான சாலையில் நுழைவதற்கு முன் காரை நிறுத்தினேன். பின்னால் கவனம் இல்லாமல் வேகமாக வந்த ஒரு ஊர்தி என்னை டமால் என்று இடித்தது. இறங்கிப் பார்த்தபோது பின்னால் பெரிய நசுங்கல். அந்தக்காரை ஓட்டியவளும் இறங்கினாள். என்னிடம் தன் தவறை ஒத்துக்கொண்டு அவளுடைய இன்ஷுரன்ஸ் விவரம் தருவதாக இருந்தாள். அவளுடன் கூட வந்தவன் என் நிறத்தைப் பார்த்து, ‘போலிஸ் வரும்வரை இங்கேயே காத்திருக்கலாம்’ என்று அலட்சியச் சிரிப்புடன் சொன்னான். நான் சட்டவிரோதமாக இந்நாட்டில் வாழ்வதால் போலிஸுக்குப் பயந்து அவர்களை விட்டுவிடுவேன் என்று எதிர்பார்த்தான். ‘தாராளமாக போலிஸைக் கூப்பிடு!’ என்றதும் மரியாதையாக என் காரை ரிப்பேர் செய்ய ஒத்துக்கொண்டான். அதுபோல நீயும் ஐ.ஆர்.எஸ்.ஸிடம் என்னைப் பற்றி விவரமாகச்சொல்! நான் ஆண்டுதோறும் எவ்வளவு வரிசெலுத்துகிறேன் என்று தெரிந்தால் அவர்கள் எனக்கு க்றிஸ்மஸ் வாழ்த்து அட்டை அனுப்புவார்கள்.”   

“இதுவரை ஜிம் குளத்தில் நீச்சல் அடித்திருப்பாய். சுறாமீன்களுடன் கடலில் நீந்தப்போகிறாய். ஞாபகம் இருக்கட்டும்!”  

“எனக்கு எப்போதுமே புதிதாக ஒன்றைச் செய்ய ஆசை. அதையும் செய்து பார்த்துவிடுகிறேன்.”   

(தொடரும்)

Series Navigation<< உபநதிகள் – 1உபநதிகள் – மூன்று >>

2 Replies to “உபநதிகள்-2”

    1. சால்ட் லேக் சிடியில் பத்தாண்டுகள் வசித்ததால் மனதுக்குள் யூட்டா என்று சொல்லிக்கொண்டு யூடா என்று எழுதிவிட்டேன். திருத்திக்கொள்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.