அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம்

அறிமுகம்

“கடும் போட்டிகள் கொண்ட விளையாட்டுகளுக்கு அழகு என்பது ஒரு குறிக்கோள் அல்ல, ஆனால் உச்சப்பட்ச விளையாட்டுப் போட்டிகள் மனித அழகின் மிகச் சிறந்த ஆடுகளம். இதை தோராயமாக போருக்கும் வீரத்திற்கும் உள்ள தொடர்போடு பொருத்திப் பார்க்கலாம்”

டேவிட் பாஸ்டர் வாலஸ்

அமெரிக்க விளையாட்டுக்கள் உண்மையில் இன்றைய அமெரிக்காவை அறிந்துகொள்ள மிகச் சிறந்த திறவுகோல் என்கிறார் டேவிட் பாஸ்டர் வாலஸ். சாதாரண அமெரிக்கரின் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த நேரத்தை நான்கு முக்கிய விளையாட்டுக்களான1 அமெரிக்கக் கால்பந்து, கூடைப்பந்து மட்டைப் பந்து மற்றும் பனி ஹாக்கி எடுத்துக் கொள்வது வெளிப்படை என்பதால் உங்கள் பணி இடத்திலோ, புதிய நபர்களை சந்திக்கையிலோ இயல்பான பேசுபொருளாக (அன்றோ / கடந்த வார இறுதியிலோ நிகழ்ந்த) விளையாட்டுப் போட்டிகள் அமைவது தவிர்க்க முடியாதது.

மேலும் சாதாரண உரையாடல்களில் விளையாட்டு ஒப்புமைகள் வருவதும், அதிலிருந்து பேச்சுக்கள் விரிவதும் நடக்கும். உதாரணமாக ஒருவர் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை தவறவிடுகையில் “He missed an easy layup” என்பார்கள். அதாவது கூடைப்பந்தில் நடப்பது போல் எளிமையாக செய்து முடிக்க வேண்டிய விஷயத்தை தவறவிட்டுவிட்டார் என்ற பொருளில். அது மட்டுமல்லாது இவ்விளையாட்டு வீரர்கள் நாயகர்களாகவும், அவர்களை பயிற்றுவிக்கும் தலைமை பயிற்சியாளர்கள் கடவுளர்களாகவும் பார்க்கப்படுவதும், சமூகத்தின் முன்னுதாரணமாகவும் கொள்ளப்படுவதும் நிகழ்வதால் இவ்விளையாட்டுகளும், அதன் வீரர்களும், பயிற்சியாளர்களும் ஆடுகளத்தை தாண்டியும் முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றனர்.

(இவ்வாறு ஏற்கப்படுவதற்கு உள்ள ஒரே அளவீடு அல்லது தகுதி வெற்றி மட்டுமே. தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் வணிக தந்திரம் தெரிந்தவர்கள் சில காலம் பேச்சுக்களிலும், ஊடகங்களிலும் இடம்பிடிக்கலாம், பின்புல தொடர்புகள் கொண்டவர்கள் அடுத்த பயிற்சியாளர் பதவியை அடையலாம். ஆனால் தொடர் தோல்விகள் அவர்களையும் பின்னுக்குத் தள்ளும் காரணத்தால் அமெரிக்கப் ப்ரோ விளையாட்டுக்கள் பல வகையிலும் தகுதிசார் தேர்வு முறை கொண்ட அமைப்புக்களாகப் பார்க்கப் படுகிறது.)

இந்நான்கு விளையாட்டுகளும் ஒரு ஆண்டில் சரியாக பிரிக்கப்பட்ட போட்டி அட்டவணையை கொண்டு ஒரு அமெரிக்கரின் வாழ்வைக் கச்சிதமாக பங்குகொள்கிறது. உதாரணமாக எந்த ஒரு விளையாட்டின் முக்கிய போட்டிகளும் மற்றொன்றோடு கால் விரலில் மிதிக்காமல் ஆண்டின் வெவ்வேறு மாதங்களில் இறுதிச்சுற்றுகள் வருவது போல் விரித்து அமைக்கப் படுகின்றன.

1. அமெரிக்கக் கால்பந்து செப்டெம்பரில் துவங்கி பிப்ரவரியின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையில் இறுதிப் போட்டியான சூப்பர் பௌல்லுடன் முடியும். போட்டிகள் பெரும்பாலும் ஞாயிறுகளிலும், திங்கள் மற்றும் வியாழன் ஒரு போட்டிகளையும் கொண்டது.

2. கூடைப்பந்து மற்றும் பனி ஹாக்கி அக்டோபரில் துவங்கி ஜூன் முதல் வாரங்களில் முடியும்.

3. மட்டைப்பந்து (கிரிக்கெட் அல்ல) போட்டிகள் மார்ச்சில் துவங்கி அக்டோபரில் முடிவடையும்.

இவற்றில் அமெரிக்கக் கால்பந்துதான் வீச்சிலும், பொழுது போக்கு உள்ளடக்கத்திலும், மக்கள் செல்வாக்கிலும் சூப்பர் ஸ்டார். அமெரிக்கக் கால்பந்தாண்டத்தின் நிர்வாகம், ஊடக ஒளிபரப்பு உரிமை ஒப்பந்தங்கள், ஒருங்கிணைவு, போட்டிகளின் அட்டவணை வடிவமைப்பு மற்றும் விதிகள் மாற்றம் என அனைத்தையும் தீர்மானிப்பது என்.எப்.எல் (NFL) என்ற நிறுவனம்2.

இரு கான்பரன்ஸுகளில் (அமெரிக்கன் மற்றும் நேஷனல்) திசைக்கு நான்கு பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவிற்கும் நான்கு அணிகள் என முப்பத்திரண்டு அணிகளை கொண்டது என்எப்எல். செப்டம்பரில் துவங்கும் என்எப்எல் சீசனில் முப்பத்திரண்டு அணிகளும் பதினேழு போட்டிகள் விளையாடும், ஒவ்வொரு அணிக்கும் ஒரு வாரம் இடைவெளி என மொத்தம் பதினெட்டு வாரங்கள் போட்டிகள் நடைபெறும். ஜனவரி முதல் வாரங்களில் தகுதிச் சுற்றுகளுக்குப் பிறகு கான்பரன்ஸ் சாம்பியன்சிப் போட்டி. இறுதியாக அமெரிக்கன் மற்றும் நேஷனல் கான்பரன்ஸ் சாம்பியன்கள் மோதும் போட்டியே சூப்பர் பௌல்.

கால்பந்து என்று இல்லாமல் அமெரிக்கக் கால்பந்து என்று சிறப்புச் சொல் கொண்டு குறிப்பிடக் காரணம், உலகம் முழுவதும் அறிந்த கால்பந்து என்ற விளையாட்டல்ல இது3. உண்மையில் கால்கொண்டு மிகக் குறைந்த அளவே விளையாடப்படும் முறையைக் கொண்டது. இதன் உத்திகள் மற்றும் விளையாட்டு முறையில் ரக்பியுடன் தோராயமாக பொருந்தியும், வீரர்களின் ஆடைகளில் உள்ள பாதுகாப்பு கவசத்திலும், தலைக் கவசத்திலும் ரக்பியில் இருந்து மாறுபட்டும் காணப்படுகிறது.

இதன் அணிகள், ஆட்ட விதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மிக முக்கியமாக இதன் பொழுதுபோக்கு அம்சம் குறித்து தனியாகத்தான் எழுதவேண்டும். அமெரிக்காவின் வேகமான, வலிமையான, இளம் ஆட்டவீரர்கள் பங்குபெறும் விளையாட்டு என்று சந்தேகம் இல்லாமல் சொல்லலாம். நான்கு பதினைந்து நிமிட கால்பகுதிகளைக் கொண்டது போட்டி, நூறு யார்ட் கொண்டது ஆடுகளம். ஒவ்வொரு அணியிலும் தாக்குதல், தற்காப்பு மற்றும் சிறப்பு அணியென பிரிக்கப்பட்ட 53 வீரர்கள் இருப்பார்கள்4. சுருக்கமாக ஆடுகளத்தில் தன் பக்கமிருந்து துவங்கும் எதிர் அணியை பந்துடன் 100 யார்ட்களை கடந்து மறுபக்கம் செல்ல விடாமல் தடுக்கும் மோதலே(நேரடி அர்த்தத்தில் தான், வீரர்கள் மோதிக்கொள்வது ஆட்ட விதிகளுக்கு உட்பட்டு தலையுடனனோ, உடலின் பிறபகுதிகளிலோ  நிகழும்) இவ்விளையாட்டு.

உதாரணம் கொண்டு விளக்குவது சுலபம் என நினைக்கிறன். போட்டி A அணிக்கும் B அணிக்கும் இடையில், டாஸில் வென்ற A அணி தற்காப்பை தெரிவு செய்கிறது என கொள்வோம். போட்டியின் துவக்கமாக Aவின்  சிறப்பு பிரிவு வீரர்கள்(களத்தில் இரு அணிகளும் தலா பதினோரு பேரை கொண்டிருக்கலாம்) ஆடுகளத்தின் மத்தியில் இருந்து பந்தை B அணிக்கு உதைப்பர். B அணியின் சிறப்பு பிரிவு வீரர்கள் அதை பிடித்து A அணியின் தடுப்பை மீறி ஆடுகளத்தின் எதிர் முனைக்கு கொண்டு சென்றால் டச் டௌன் எனப்படும் ஆறு புள்ளிகளை பெறுவர். அதன் பின் எதிர் முனையில் உள்ள கொடிக் கம்புகளுக்கு இடையில் பந்தை உதைக்கும் வாய்ப்பு தரப்பட்டு அதும் சரியாக நிகழ்ந்தால் பாயிண்ட் அபிடேர் டச்டௌன் (PAT) என B அணிக்கு மொத்தம் ஏழு புள்ளிகள் கிடைக்கும்.

B அணியின் இந்த ஓட்டத்தை A அணி தடுக்கும் பட்சத்தில் ஆடுகளத்தில் தடுக்கப்பட்ட இடத்தில் இருந்து B அணியின் தாக்குதல் விளையாட்டும்; A அணியின் தற்காப்பும் துவங்கும். Bஅணியின் தாக்குதல் பிரிவின் தலைவர் என கொள்ளப்படுபவர் குவாட்டர் பாக் (QB) அவருடன் பந்தை காவிச் செல்ல ரன்னிங் பாக் (RB) மற்றும் புல் பாக் (FB) என வீரர்கள். அடுத்து குவாட்டர் பாக் எரிவதை பிடித்துச் செல்ல வைட் ரிசீவர்கள்(WR) இருவர்(அல்லது மூவர்) இவர்களுடன் ஒரு டைட் எண்டு (TE) என்ற வீரரும் இருப்பார், அவர் குவாட்டர் பாக் எரியும் பந்தை பிடித்து ஓடுவதும் சில சமயம் தற்காப்பு அணியின் வீரர்களை மறிப்பது என இரண்டையும் செய்பவராக இருப்பார்.

உள்ள ஐந்து அல்லது ஆறு வீரர்களில் பந்தை ஆடுகளத்தில் இருந்து தன் கால்களுக்கு இடையில் எடுத்து குவாட்டர் பாக்கிடம் கொடுக்கும் சென்டர்(C) மற்றவர்கள் தாக்குதல் லைன் மென் (OL) என்பவர்கள் A அணியின் தற்காப்பு வீரர்களிடம் இருந்து Bஅணியின் குவாட்டர் பாக்கை காப்பவர்கள். A அணியின் தற்காப்பு வீரர்கள் பிரிவில் ஆறு தற்காப்பு லைன் மென்கள் (DL), அடுத்து வைட் ரிசீவர்களின் ஓட்டத்தை தடுக்க கானர் பாக் (CB) மூவர் கடைசியாக தம் முனையை காக்க இரு சேப்டி (S) என இருப்பர்.

B அணிக்கு ஒரு தொடரில் நான்கு முயற்சிகளில் பத்து யார்டுகள் கடக்க வேண்டும் அவ்வாறு கடந்தால் மேலும் நான்கு வாய்ப்புகள் தரப்படும் இல்லையெனில் அவர்கள் பந்தை A அணிக்கு உதைத்துத் தள்ள வேண்டும். A அணியின் தற்காப்பு இந்த பத்து யார்டுகளை கடக்க விடாமல் தடுப்பதே. மொத்தத்தில் இந்த இரு அணிகளின் எலி-பூனை விளையாட்டே அமெரிக்கக் கால்பந்து.

வேகமான, வலிமையான, இளம் வீரர்கள் பங்கு கொள்ளும் மோதல் விளையாட்டு (collision sport) எனில் மேலே குறிப்பிட வாலஸின் விளையாட்டு மற்றும் போர் என்ற இருமைகளை நினைவு கூர்க. மேலும் மூன்று தனி அணிகள் என பிரிவுகள் கொண்டு விளையாடப்படுவதால் ஒரு அணியின் சிறிய தவறு ஆட்டத்தின் போக்கையே மாற்றும் தன்மை கொண்டிருப்பதால் போட்டியின் ஒவ்வொரு வினாடியும் பார்வையாளரின் கவனத்தை ஈர்த்தபடியே இருக்கும். அதனாலேயே கடந்த வருடத்தில் அதிகம் பார்க்கப் பட்ட நூறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எண்பத்தி ஐந்திற்கும் மேற்பட்டவை அமெரிக்கக் கால்பந்து போட்டிகள் தான்.

இவை எல்லாவற்றையும் விட அமெரிக்க கால்பந்து ஒரு கூட்டுச் செயல்பாடாகவே நுகரப்படுகிறது, தனியாக வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகளைக் காண்பது தவிர்க்க முடியாக் காரணங்களால் மேற்கொள்ளப்படுவது. ஒன்று வீட்டில் உங்கள் நண்பர்கள் சூழ காண்பது இல்லையெனில் பார்களில் முன் அறியாதவர்களுடன் அமர்ந்து கால்பந்து குறித்து பேசிக் கொண்டே காண்பது. இவை இரண்டையும் விடச் சிறந்தது பிடித்த அணிக்கு ஆதரவாக மைதானத்திற்குச் சென்று காண்பது. கூட்டுச் செயல்பாட்டில் மற்றொரு அங்கமாக பணியிடத்தில், நண்பர்வட்டத்தில் சிறு குழுக்களாக தங்களுக்குள் பந்தயம் கட்டி விளையாடும் பாண்டஸி லீக். இதில் நீங்கள் என்எப்எல் வீரர்கள் குறித்து மட்டுமல்லாது அவர்களின் புள்ளிவிபரம் மற்றும் காயங்கள் குறித்தும் தெரிந்தவராக இருப்பது அவசியம். இதும் விளையாட்டை ஆடுகளத்தை தாண்டியும் சுவாரஸ்யமாக்குகிறது.

அமெரிக்க கால்பந்தின் பெரும்பாலான போட்டிகள் ஞாயிறுகளின் மதியத்திற்கு மேல் நிகழ்வதும், ஒரு அணிக்கு ஆதரவாக கூட்டாக மைதானங்களுக்கு பயணப்பட்டு உற்சாகப்படுத்துவது, பிடித்த அணி வீரர்களின் எண்கொண்ட சட்டைகளை அணிவதும், பிடித்த சக அணி ஆதரவாளர்களுடன் மது அல்லது உணவை பரிமாறிக்கொள்வதும், போட்டிக்கு முன்பே அதற்காக ஒருங்கே கூடுவதும் என மதச் செயல்பாடுகளுக்கு உள்ள ஒப்புமை மறைமுகமாக அல்ல மிக வெளிப்படையாகவே காணலாம். அமெரிக்க கால்பந்தாட்டத்தை மத அனுபவமாக குறிப்பது சற்று மிகையாக, உயர்வு நவிற்சியாகத் தெரியலாம், ஆனால் இங்கு நிலவும் மதம் சார் நெகிழ்வும், ஒருங்கிணைப்பு சக்திகள் குறைந்து வருவதும் இவ்விளையாட்டை முக்கிய இணைப்புப் புள்ளியாக விளையாட்டு என்ற தளம் தாண்டி நிறுத்தி இருக்கிறது. 

1 – தொழில்முறை விளையாட்டு வீரர்களைக் கொண்டு போட்டிகள் நடத்தும் ப்ரோலீக்குகளை (Pro-Leagues) மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன். கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுக்களை இங்கு சேர்க்கவில்லை, அவை அமெரிக்க விளையாட்டுக் கலவையில் வேறொரு வண்ணம் சேர்க்கும் கூட்டுச் செயல்பாடு.

2 – என்எப்எல் அதன் வணிக உத்திகளில், செயல்பாடுகளில் லாபம் என்பதையும் 32 பங்குதார்களுக்கு (அணி உரிமையாளர்கள்) அனுகூலமாக செயல்பட வேண்டும் என திட்டம் கொண்டிருப்பதால் அதை நிறுவனம் என்று குறிப்பிடவதே சரியாக இருக்கும்.

3 – அமெரிக்காவில் அனைவரும் அறிந்த (traditional) கால்பந்து என்ற விளையாட்டை சுட்டும் சொல் சாக்கர் (Soccer). இந்நாட்டின் மற்றுமோர் சிறப்பம்சம் தனக்கான சொற்களை உருவாகுவது அல்லது இருப்பதை தன் சூழலுக்கு பயன்படுத்துவது. டேபிள் டென்னிஸ் இங்கு பிங்-பாங் என்றே அழைக்கப்படுகிறது. பில் ப்ரைஸன் அமெரிக்க சிறப்பு சொற்களை அதன் வரலாற்று பின்புலத்துடன் பட்டியலிட்டு “Made in America”  என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.

4 – 53 வீரர்கள், மூன்று பிரிவுகள் கொண்ட அணிகள் என்பதால் தலைமை பயிற்சியாளரின் கீழ் தாக்குதல், தற்காப்பு, சிறப்பு அணிகளுக்கு என தனித் தனி பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி மற்றும் உணவுப் பிரிவு நிபுணர்கள் என ஒரு பட்டாளமே கொண்டது அமெரிக்க கால்பந்து அணி.

அடுத்த பகுதி:

3 Replies to “அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம்”

  1. நல்ல சுருக்கமான விவரிப்பு . எழுத மேலும் நிறைய உள்ளது. மஞ்சள் கொடி மறக்கலாமா !

    இவண், 1984 லிருந்து ஒரு அமேரிக்க இல்லை இல்லை டென்வர் பிராங்க்கோஸ் விசிறி.

    1. மஞ்சள் கொடியை மறக்கவில்லை, அதையும் போட்டியின் நேர மேலாண்மை பற்றியும் விரிவாகவே எழுதலாம். 1984ல் இருந்து டென்வர் ரசிகர் என்றால் ஒரு வகையில் கொடுத்து வைத்தவர் நீங்கள், ஜான் எல்வேயின் சிறந்த ஆட்டங்களை நேரலையில் பார்த்து ரசித்திருப்பீர்கள். நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.