அதிரியன் நினைவுகள் – 9

This entry is part 9 of 10 in the series அதிரியன் நினைவுகள்

தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

வாசகர்களுக்கு இத்தொடர் சார்பாக சிலவற்றின் மீது கவனமீர்க்க விரும்புகிறேன். இரண்டாம் நூற்றாண்டில் (சங்க காலம் என்றால் மிகையில்லை ) உரோமை அரசாண்ட அதிரியன் என்ற மன்னன் தன்னுடைய அரசியல் வாரிசும், வளர்ப்பு மகனுமான மார்க்கஸ் அரேலியஸுக்கு தமது சுயவரலாற்றை, கலை,இலக்கிய, அரசியல் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதுபோல சொல்லப்படும் நாவல் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், எனவே நாவலில் நாம் அல்லது நம்முடைய என்ற சொல் வருகிகிறபோது அது மன்னன் அதிரியன் அவனுக்குப்பின் அரசாள வாரிசாக அறிவிக்கப்பட்ட உரோமானியர்களைப் பற்றி பேசுகிறது என்பதை நினைவுகூர்வது அவசியமாகிறது, தவிர இரண்டாம் நூற்றாண்டு உரோமாபுரி, அதன் கலை இலக்கியம் சார்ந்த நூலென்பதால் மொழிபெயர்ப்பிலும் ஒரு வித இதிகாசகாலத்தை நினைவூட்டும் மொழியில் இது சொல்லப்படவேண்டுமென நினைக்கிறேன். நாவல் 1952இல் எழுதப்பட்டதென்பதையும் நண்பர்கள் மறந்துவிடக்கூடாது. தவிர நாவலில் உரோமானியர் மற்றும் கிரேக்கர் வரலாறு சேர்ந்தே வருகின்றன. இது சார்ந்த சொற்களை உள்வாங்கிக்கொள்வதில் நிச்சயம் சங்கடங்களுண்டு. எல்லா சொற்களுக்கும் குறிப்புகளை தருவது சங்கடமானது,வாய்ப்பிருப்பின் உரோமானிய கிரேக்கவரலாற்றை ஓரளவு தெரிந்துகொண்டு நீங்கள் வாசிக்க முடிந்தால், இப்புதினம் கூடுதல் புரிதலை அளிக்கக்கூடும்.


முதன்முறையாக இல்வாழ்க்கை என்கிற அமைப்பு எனக்கு அறிமுகம். அவ்வாழ்க்கை கிட்டத்தட்ட திணிக்கப்பட்டதொரு வாழ்க்கையெனில் மிகையில்லை. இச்சூழலில் எனக்கு ஆறுதலைத்தந்த மகாராணி புளோட்டினாவின் அழகிய முகமொன்றைத்தவிர பிற அனைத்தையும் வெறுத்தேன். ரோம் நகரில் அரிதாக தங்க நேர்ந்த நாட்களில் என் மனைவி ஏற்பாடு செய்யும் இரவு விருந்துகளில், அரண்மணை உணவு மேசைகள், ஸ்பெயின் மற்றும் மாகாணப்பகுதி உற்றார் உறவினர்களால் நிரம்பிவழிவது தெரியவந்தது. விருந்தினர்கள் வயதானவர்களென சொல்லவியலாது, ஏனென்றால் அந்நாட்களில் மனிதர்கள் மொத்தபேருமே நூற்றாண்டுகாலம் வாழ்ந்ததுபோன்ற அனுபவ முதிர்ச்சிபெற்றவர்கள். எனவே வாழ்க்கை குறித்த ஆழமான புரிதலும், மிதமிஞ்சிய எச்சரிக்கையும் அவர்களிடம் வெளிப்பட்டன. படையெடுப்புகளை முன்வைத்து அதிகம் வெளியில் தங்க நேரிட்டதில் ரோமாபுரி பற்றிய என்னுடைய புரிதலை உயர்த்திச் சொல்வதற்கில்லை, மாறாக மன்னர் திராயான் கிட்டத்தட்ட தம்முடைய வாழ்நாட்கள் அனைத்தையுமே படையெடுப்புகளில் கழித்தவர் என்பதால் ரோம் பற்றிய அவருடைய புரிதலோடு ஒப்பிடுகிறபோது நானே பரவாயில்லை என்பதுதான் நிலைமை. உரோமாபுரி வழங்கிய சிறப்புக்குரியவை அனைத்தும், அல்லது அப்படிப்பட்டவையென சொல்லப்பட்ட அனைத்தும் தம்மைச் சூழ்ந்திருக்க வேண்டுமென்பதில் மன்னருக்கு மிகுந்த ஆர்வமுண்டு. அவருக்கு நெருக்கமான உயர் அதிகாரிகள் கண்ணியத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் என்கிறபோதும், கடுமையான நெறிமுறைகளில் ஊறியிருந்தனர், பலனாக மெய்யியியல் விஷயங்களில் ஆழமான அணுகுமுறை அவர்களிடமில்லை. என் அனுபவத்தில் இயற்கை மெய்யியல் வாதியான பிளினியின் (Pline) போலியான ஒப்புரவை ஒருபோதும் அதிகமாக நான் சுவைத்ததில்லை; அதுபோல மெய்யியல்வாதி தாச்சிட்டுஸ்சுடைய(Tacitus) எதற்கும் பிடிகொடுக்காத உயர்ந்த பண்பு, சீசரின் மரணமான நாளிலிருந்து, எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாகாமல் ஒரு சராசரி குடியரசுவாதியின் உலகம்பற்றிய பிற்போக்குப் பார்வையை இன்றுவரை உள்ளடக்கியவதாகவே எனக்குப் படுகிறது. அரசுநடவடிக்கைகளில் சம்பந்தமில்லாத சுற்றத்தினர், விரும்பத்தகாத ஒன்று என்கிறபோதும், அபாயகரமான புதிய நடவடிக்கைகளில் இறங்கும் தருணங்களில் என்னை அவர்கள் தடுத்தனர். எனவே பல்வேறு பின்புலம்சார்ந்த இம்மனிதர்கள் அனைவரிடமும் இன்றியமையாத கண்ணியத்துடன் நடந்துகொண்டேன். சிலரிடம் மிகுந்த மரியாதையுடனும், வேறு சிலரிடம் இணக்கமாகவும், அவசியமெனில் மோசமாகவும், சிற்சில சமயங்களில் ஓரளவு சாதுர்யத்துடனும் நடந்துகொள்வேன். ஆக சகலகலா வல்லவனாக இருக்கவேண்டிய நிர்ப்பந்தம், ஆட்டத்தின் நெளிவு சுளிவுகளுக்கேற்ப எடுத்த அவதாரங்கள் அவை. இழுத்து விரைப்புடன் கட்டப்பட்டக் கயிறொன்றில் நடந்த அனுபவம். அவ்வனுபவத்திற்கு நடிகனுக்குரிய அப்பியாசங்களன்றி கழைக்கூதாடிக்குரிய பயிற்சிககளும் எனக்குத் தேவைப்பட்டன.

இளமைக் காலத்தில் நம்முடைய உயர்குடிபெண்களான பத்ரீசியன்களுடன் (Patricien) கொண்டிருந்த எனது தகாத உறவு கண்டனத்திற்குள்ளானது. அவற்றிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட இரண்டு மூன்று தொடர்புகள் நான் யுவராஜாவாக ஆனபின்பும் கொஞ்சகாலம் நீடித்தன. பொதுவாகவே நமது உரோமாபுரி இதுபோன்ற தகாத செயல்களுக்கு எளிதாக இடமளிக்கக்கூடியது, இருந்தும் ஆட்சியாளர்கள் சற்று ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென்று அது எதிர்பார்த்தது. மார்க்-அன்ட்டனியும், டைட்டஸும் இதனை புரிந்துகொண்டிருந்தனர். என்னுடைய காதல் விவகாரங்கள் மிதமானவைதான், அவற்றைப் பெரிதுபடுத்திப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. இருந்தும் இந்த விஷயத்தில் எனக்குப் புரியாதது என்னவெனில், ஆட்சியாளர்களுக்கென உரோமாபுரி ஓர் ஒழுக்கநெறியை எதிர்பார்க்கின்ற நிலையில், அரசவை உறுப்பினர்களின் அபிமானத்தைப் பெறத்தவறி, மணவாழ்க்கையிலும் அலுத்திருந்த ஒர் ஆண்மகன் எங்கனம் பலவிதமான பெண்களுடன் வேறுவகையிலான உறவை தொடர்ந்து கட்டிக் காக்கமுடிந்தது என்பதாகும், சேர்வியானுஸ் எனது மைத்துனர், எனக்கும் அவருக்கும் ஆகவே ஆகாது. என்னைக்காட்டிலும் முப்பதுவயது மூத்தவர் என்ற காரணத்தால், ஆசிரியருக்குரிய எச்சரிக்கையுடன் கூடிய கவனம், ஒற்றர் பணிக்குறிய அணுகுமுறை இரண்டையும் ஒன்றிணைத்து எனக்கெதிராக கையாள்வதில் தேர்ந்திருந்தார். இவருடைய தலைமையில் செயல்பட்ட எனது எதிரிகள், பெண்கள் விவகாரங்களில் காதலைக் காட்டிலும் அவற்றின் நோக்கமும், ஆர்வமும் முக்கியமானவையென்பதை எனக்குணர்த்தும்வகையில் நடந்துகொண்டனர். பிறர்மனைப் பெண்களுடன் எனக்கிருந்த நெருக்கமான உறவு அவர்களின் கணவர்களுடைய அரசியல் ரகசியங்களை ஓரளவு அறிய உதவியது. தவிற இப்பெண்களிடமிருந்து பெற்றவை அரிதான தகவல்களாக இருந்ததால், பின்னாட்களில் காவல்துறையின் ரகசிய அறிக்கைகளை வாசிக்கிறபோது அடைந்த சந்தோஷத்திற்கு ஈடாக அவை இருந்தன. இவ்வாறான கள்ள உறவுகளுக்கு ஓரளவு நேரத்தையும் செலவிட வேண்டியிருந்தது, ஒரு கட்டத்தில் தவிர்க்க இயலாமல் அப்பெண்களின் பலவித உடல்வாகும், குணாதிசயங்களும் கொண்ட கணவன்மார்களுடன் நட்பு பாராட்டவும் செய்தேன், உண்மையில் இவர்கள் அனைவருமே கண்களிருந்தும் குருடர்கள். அதேவேளை இதுபோன்ற பிறர்மனை நயத்தல் விவகாரங்களில் எனகேதும் பெரியவகையில் சந்தோஷமோ, பலனோ உண்டா என்றால் இல்லை. இப்பெண்கள் படுக்கையில் என்னிடம் பகிர்ந்துகொண்ட குடும்ப ரகசியங்கள் சிலவற்றில் அவர்களுடைய கணவன்மார்கள் ஏளனத்திற்கு ஆளாக்கப்பட்டதோடு, சரியாக புரிந்துகொள்ளப்பட்டவர்களும் அல்ல என்பது தெரியவர அந்த பாவப்பட்ட மனிதர்களிடம் எனக்கு அனுதாபம் பிறந்தது என்பதையும் மறைக்காமல் உன்னிடம் கூறவேண்டும். இப்பெண்கள் புத்திசாலிகளாக இருப்பின் சந்தோஷமும், அழகாக இருந்தால் நெகிழ்ந்துபோவதும் இத்தகைய உறவுகளில் எனக்கேற்பட்ட அனுபவங்கள். தவிர இப்பெண்களிடம் பழகியபோது, கலைகளை பயில்வதுபோலவும், சிலைகளுடன் நன்கு பரிச்சயம் பெறுவதுபோலவும் உணர்ந்தேன். வீனஸையும்(Venus de Cnite), அன்னப்பட்சியின் பாரத்தில் வருந்தும் லெடா (Léda)வை புரிந்து கொள்வதற்கும் இவ்வுறவுகள் உதவின. இப்பெண்களுடனான என்னுடைய உலகம் கவிஞர்கள் தீபுல்லூஸ்(Tibullus) மற்றும் புரொபெர்ட்டியூஸ்(Propertius) காட்டுகின்ற உலகம்,  அவ்வுலகில் மனச்சோர்வு, பிரிஜீயன்ஸ்(Phrysien)42 சாயல் பாடலின் இன்பம்தோய்ந்த ஒருவகை போலி உற்சாகம், படித்தளத்தின் மறைவில் பரிமாறிக்கொள்ளப்படும் முத்தங்கள், மாரபகங்களில் மிதக்கும் சால்வைகள், அதிகாலைப் புறப்பாடு, கதவருகே வைத்துச்சென்ற மலர்வளையங்களென எல்லாவற்றுக்கும் இடமுண்டு.

இப்பெண்களைக் கூடுதலாக நான் அறிந்தவனில்லை. எனக்கென்று அப்பெண்கள் அளித்த தங்கள் வாழ்க்கையின் பங்கு, முழுவதுமாக திறக்கப்படாத இருகதவுகளுக்கிடையில் சிக்கித் தவித்தது. இப்பெண்கள் இடைவிடாமல் பேசிய காதல்வசனங்கள் சிலசமயங்களில் அவர்கள் சூடியிருந்த மென்பாடுடைய பூச்சரங்களில் ஒன்று போலவும், நவீன, விலையுயர்ந்த, எளிதில் உடையக்கூடிய அணிகலன் போலவும் எனக்குத் தோன்றின. தவிர உதட்டுச்சாயம், கழுத்தணிகள் ஆகியவற்றைப்போலவே காதலையும் இப்பெண்கள் உபயோகிக்கிறார்களோ என சந்தேகித்தேன். என்னுடைய அந்தரங்க வாழ்க்கையிலும் அப்பெண்களுடையதைப் போலவே மர்மங்களுக்குப் பஞ்சமில்லை; இருந்தும் அதனை முறையாகத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக தப்பும் தவறுமாக கற்பனை செய்து பார்ப்பதில் அப்பெண்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். தொடர்ந்து பொய்யாக நடித்தல்; குற்றங்களை ஒப்புக்கொள்ளும்போதும், பிரச்சனைகளை முறையிடும்போதும் மிகைப்பட நடந்துகொள்ளுதல்; மகிழ்ச்சியைச் சிலவேளைகளில் பாசாங்குடனும், வேறு சிலதருணங்களில் மறைத்தும் வெளிப்படுத்துதல்; ஆணும் பெண்ணுமான இருநடனமாந்தர்கள், நடன அரங்கில் ஒருங்கிணையும் காட்சிபோல சந்திப்புகளை அமைத்துக்கொள்ளுதல் என பல்வேறு பண்புகளை சம்பந்தப்பட்ட இருபாலரிடமும் இதுபோன்ற காதல் விளையாட்டுகள் எதிர்பார்க்கின்றன என்பதையும் இறுதியில் புரிந்துகொண்டேன். அன்றியும், பிரச்சனை சண்டையாக மாறுகிறபோது, என்னுடைய பதில் என்னவாக இருக்குமென்பதைக்கூட முன்கூட்டியே அறிந்து அதற்கென அவர்கள் காத்திருந்ததுபோல உணர்ந்திருக்கிறேன், அழகான அப்பெண்கள் கண்ணீர்பொங்க என்னிடமிருந்து தங்கள் கரங்களை விடுவித்துக்கொள்கிற சம்பவம் நாடகமேடையில் அரங்கேறும் காட்சிக்கு ஈடானது.

பெண்களைத் தீவிரமாக மோகிக்கும் காதலர்கள் அதற்குக் கிஞ்சித்தும் குறையாதவகையில் அப்பெண்தேவதையின் சன்னதி மற்றும் வழிபாட்டுப் பொருட்களிடத்திலும் தங்கள் நேசத்தை, உதாரணத்திற்கு மருதாணியிட்ட சிவந்த விரல்களில், வாசனாதி தைலைம் பூசிய உடலில், அழகிற்கு மேலும் மெருகூட்டிக்கொள்ள அல்லது சிற்சில சமயங்களில் மொத்த சரீரத்தையும் உருமாற்றிக்கொள்ள அவர்கள் கையாளும் ஆயிரக் கணக்கான தந்திரங்களில் பிணைத்துக்கொண்டு இன்புறுகிறார்களென அடிக்கடி நான் நினைப்பதுண்டு. மென்மையான இச்சிலைகள் நெகுநெகுவென்று வளர்ந்திருக்கும் காட்டுமிராண்டித்தனமான பெண்களிடமிருந்தும், கனத்த சரீரமும், முரட்டுசுபாவமும் நிறைந்த பட்டிக்காட்டுப் பெண்களிடமிருந்தும் எல்லாவகையிலும் வேறுபட்டவை. அவர்கள் சராசரிப் பெண்கள் அல்ல, பெரிய நகரங்களின் பொன்னிழைச் சுருள்களிலிருந்தும், சாயத்தொழில் செய்பவர்களின் தொட்டிகள் அல்லது கிரேக்க கடல் அலைகளிடை வீனஸ்போல ஈரமான நீராவிக் குளியற் தொட்டிகளிலிருந்தும் பிறந்த தேவதைகள். ஆண்ட்டியோக்கியா(Antiochia) நகரின் ஒரு சில இரவுநேர இன்ப லாகிரியிலிருந்தும், உரோமாபுரியின் காலைநேர பரபரப்புகளிலிருந்தும், அவை சுமக்கும் புகழ்பெற்ற பெயர்களிலிருந்தும், கடைசி இரகசியமென அப்பட்டமாக முன் நிறுத்தப்படும் உண்மைக்கு இடமளிக்கும் சொகுசு வாழ்க்கையிலிருந்தும் விடுபடுவது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் எனக்கு இவைமட்டும் போதவில்லை, மானுடப்படைப்பை வெற்றுடலாகக் காண்பதிலும் அளவுகடந்த நாட்டம். சிற்சிலவேளைகளில் அவள் நோயில் வாடலாம் அல்லது அவளுடைய முதல்குழந்தை பிறந்தவுடன் இறந்திருக்கலாம் அல்லது அவளுடைய முகச்சுருக்கம் கண்ணாடிமுன்நிற்க தெரியவந்த தருணமாக இருக்கலாம், அதனாலென்ன, அவளை அவளாக மட்டுமே பார்க்க விரும்பினேன், அதாவது எந்தவொரு ஆடை ஆபரணமும் இன்றி. வாசிப்பு, சிந்தனை, திட்டமிடுதல் எனக் காலத்தைக் கழிக்கும் மனிதனை ஆண்பாலினம் என்பதைக் காட்டிலும் ஓர் உயிரினம் எனச் சொல்வது மட்டுமே பொருத்தமானதாக இருக்கும். அன்றியும் ஆண்பெண் உறவில் நல்ல தருணங்கள் அமைகிறபோது, ஆண்பிறவியிலிருந்து விடுபடவும் அவனால் இயலும். என்னுடைய காதல் உறவுகள், தமது பெருமையை பெண்கள் பற்றிய சிந்தனையால் அடைந்ததுபோல எனக்குப் பட்டது, அடுத்து, ஆன்மாவென்றும் இதயமென்றும் நான் தேடிய அனைத்துமே உண்மையில் ஒருவித நறுமணம்.

இவ்விவகாரத்தில் வேறு சில விஷயங்களும் இருக்கின்றன: நானும் தக்க தருணத்திற்கென்று திரைமறைவில் காத்திருக்கும் (நாடக) நடிகன் போல, முன்பின் தெரியாத ஒரு நபர் உள்ளே பரபரப்புடன் தெரிவிக்கும் சங்கதிகளை, குறிப்பாக சலசலவென்று பேசுகிற பெண்களின் குரல்களை, வெடிக்கும் கோபத்தை அல்லது சிரிப்பை, சொந்த வாழ்க்கையின் முணுமுணுப்புகளை, மொத்தத்தில் நானிருக்கிறேன் என்பது தெரியவந்த மறுகணம் அடங்கிப்போகும் ஒலிகளை ஆர்வத்துடன் ஒட்டுக்கேட்பதுண்டு. குழந்தைகள், ஆடைகுறித்த தீராத பிரச்சனைகள், பணத்தைப் பற்றிய கவலைகளென, நான் இல்லாத நேரத்தில் பேசப்படும் பொருள் எதுவென்றாலும் எனக்குத் தெரியக்கூடாத முக்கியமானதொரு விஷயம். கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான கணவன்கூட முக்கியத்துவத்தைப் பெற்றுவிடுவான், நேசிக்கப்படுவான். எனது இல்லத்தில் பெண்கள் சிக்கனம், இலட்சியம், வரவு செலவு விவகாரங்களில் கவனம், முன்னோர்களின் மார்பளவு சிலைகளின் பராமரிப்பு என்றிருந்ததால் அவர்கள் முகங்களில் சந்தோஷத்தைக் காண்பது அரிது. இம்முகங்களை எனது வைப்பாட்டிகளின் முகங்களோடு ஒப்பிட்டு பார்த்திருக்கிறேன். நமது அரசகுடும்பத்துப் பெண்களும் ஒருவேளை கொடிவீட்டில் தங்கள் கள்ளக்காதலர்களை ஆரத்தழுவும் ரகமோ ? என்னுடைய அழகுப்பெண்கள், நான் எப்போது வெளியில் செல்வேன் எனக் காத்திருப்பது ஒருவேளை எங்கள் இல்லக் காரியதரிசியிடம் விட்ட சண்டையை தொடரவா ? என்பது போன்ற கேள்விகள் எனக்குள் எழுந்திருக்கின்றன. பெண்ணுலகில் காண்கிற இந்த இருவேறு பண்புகளுக்கிடையிலான இடைவெளியை நிரப்ப இயன்றவரை முயன்றிருக்கிறேன்.

கடந்த ஆண்டு நடந்த சதியில் செர்வியானுஸ் கதையும் முடிந்திருந்தது. சம்பவம் நடந்த குறுகிய காலத்திலேயே, சதியில் தம்முடைய மருமகன்களில் ஒருவனுக்கும் பங்குண்டு என்பதைத் தெரிவிக்க என்னுடைய கடந்த கால வைப்பாட்டிகளில் ஒருத்தி, கடும பயணம் மேற்கொண்டு எனதுமாளிகையான வில்லா(Villa Romaine)விற்கு வந்திருந்தாள். அவள் கூறியவற்றை நான் ஏற்கவில்லை, காரணம் அவள் தன்மருமகன்மீது வைத்தக் குற்றசாட்டிற்கு சொந்த வெறுப்பு காரணமாக இருந்தது, உண்மையற்ற அத்தகவல் எனக்குப் பயன்படுமென்ற நோக்கத்தில் சொல்லப்படவில்லை எனப் புரிந்துகொண்டேன். பாகப்பிரிவினை சம்பந்தமான வழக்குகளில் நான் திரிப்யூன் ஆக இருந்தபோது உயில்கள், நெருங்கிய உறவினர்களுக்கிடையிலுள்ள பகைகள், சதிகள், எதிர்பாராத அல்லது துரதிர்ஷ்டவசமாக முடிந்த திருமணங்களென்று பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன். அன்று அவளுடைய பேச்சும் அவற்றை நினைவூட்டும் வகையில் சுவாரஸ்யமாகவே இருந்தது. ஆயினும், குறுகிய மனப்பான்மைகொண்ட ஓர் பெண்ணுலகும், அணுகுமுறையில் ஓர் இரக்கமற்ற தன்மையும் அவளிடம் இருந்தன. காதலுக்கு இனி இடமில்லையென்கிற கணத்தில் பெண்களின் முகத்தில் காண்கிற மேகம் சூழந்த வானத்தின் தன்மையையும், கடுமையான அணுகுமுறையையும், பெண்களுக்குரிய குறுகிய மனப்பாங்கையும் அன்று அப்பெண்ணிடம் திரும்பவும் கண்டேன். எனது பட்டத்துராணி சபீனாவிவை (Sabine) நினைவூட்டும் வகையில் அப்பெண்மணி முரட்டுத்தனமான விசுவாசத்தைக் காட்டினாள், ஒவ்வாத வகையில் என்னிடம் நடந்துகொண்டாள். அவள் முகக்கூறின் சிறப்பு அம்சங்கள் இளக்கமான மெழுகில்செய்த முகக்கவசத்தை காலத்தின் கைகள் திரும்பத் திரும்பத் தட்டி உருவாக்கினதுபோல இருந்தன. தவிர, அழகென்று ஒரு கணம் எதை நான் ஏற்றுக்கொண்டேனோ அது உண்மையில் மென்மையாததொரு இளம்பருவ மலரன்றி வேறல்ல. மாறாக அவளிடம் கண்ட தளுக்கு மாத்திரம் குலையாமல் இருந்தது என்பதற்கு சுருக்கம் விழுந்த முகம் வெளிப்படுத்திய கள்ளச் சிரிப்பு உதாரணம். உடலுறவு சார்ந்த நினைவுகள் ஏதாவது என்னிடம் இருந்திருக்குமேயெனில், என்னைப் பொறுத்தவரை அவை சுத்தமாக துடைப்பட்டிருந்தன. என்னைபோலவே வயது மற்றும் நோயில் வாடிய ஓர் உயிரினத்திடம் அன்பாகப் பரிமாறிக்கொண்ட வார்த்தைகள் மாத்திரம் நினைவில் இருக்கின்றன, இத்தகைய வார்த்தைகளை சற்றே எரிச்சலுடன் ஸ்பெய்னிலிருந்து வந்திருந்த என்னைக்காட்டிலும் வயதான உறவின் முறை சகோதரியிடம் பரிமாறிக் கொண்டிருக்கிறேன், அவள் நர்போனைச் (Narbonne) சேர்ந்த தூரத்து உறவினள்.

ஒரு கணம், புகைச்சுருள்களாகவும், குழந்தைகள் விளையாட்டின் காற்றுக் குமிழ்களாகவும் வலம்வரும் பழைய நினைவுகளை திரும்பப் பெற முயற்சிக்கிறேன். ஆனால் இவற்றையெல்லாம் மறப்பது வெகுசுலபம்… அத்துணை முக்கியமற்றது மட்டுமல்ல, அவற்றில் என்ன சுகம் கண்டேன் என்பது கூட மறந்துபோயிற்று, இப்படிபட்ட காதல் அனுபவங்களுக்கு பிறகு என்னென்னவோ நடந்துவிட்டது; ஒன்று மட்டும் உறுதி, அவற்றால் நான் பாதிக்கப்பட்டவனில்லை, அந்தவகையில் எனக்கு மகிழ்ச்சி. இருப்பினும, என்னுடைய இந்த ஆசைநாயகிகளில் குறைந்தபட்சம் ஒருத்தியேனும் மிகவும் விரும்பி நேசிக்கின்ற வகையில் இல்லாமலா போய்விடுவாள், அத்தகைய ஒருத்தி இருந்தாள். நாணலையொத்த அவள் மேனி, பிற பெண்களோடு ஒப்பிடுகிறபோது மென்மை, திட்பம், நேர்த்தி, கட்டான உடல்வாகென அனைத்திலும் மீசுரமானது. அலைபோலவும், பட்டுப் போல மென்மையாகவும் இருப்பது உடலின் ஒர் அங்கமான கூந்தல், அதனழகை நான் எப்போதும் ரசிப்பவன், ஆனால் பெரும்பாலான பெண்களின் சிகை அலங்காரமென்பது கோபுரங்கள், சிக்கலான வளைகள், படகுகள் அல்லது விரியன் பாம்பு பொந்துகள் போன்றல்லவா இன்றுள்ளன. அவளோ திராட்சைகொத்துபோலவும் அல்லது பறவையின் இறக்கைபோலவும் எனது இரசனைக்கேற்ப தனது சிகையை அலங்கரித்திருப்பாள். பெருமிதத்துடன் தனது சிரசை என்மீது சாய்த்துக்கொண்டு, முதுகுப்புறமாக படுத்தபடி வியக்கத்தக்கவகையில் தனது காதல் விவகாரங்களை என்னிடம் பகிர்ந்துகொள்ளத் துளியும் தயங்கியதில்லை. இன்பம் துய்க்கிறபோது அவளிடம் நான் கண்ட உணர்ச்சி மிகுந்த காமம், ஒட்டுதலற்ற உறவு, மென்மையற்ற அணுகுமுறை, ஆன்மாவைப் பிளக்க முனைந்ததுபோல வெளிப்படுத்தும் மூர்க்கம் அனைத்தையும் நான் நேசித்துள்ளேன். தனக்கு எத்தனை காதலர்கள் என்பதுபற்றி அவளுக்குத் தெரியாது, அவர்கள் டஜன் கணக்கில் இருந்தனரென்பதை நான் அறிவேன். இக்கூட்டுக் களவில் எனக்கும் பங்குண்டு என்பதன்றி, அவள் என்னிடம் உண்மையாக இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கும் இல்லை. ‘பாத்திலே’(Bathylle) என்ற பெயர்கொண்ட நடனக் கலைஞனிடமும் அவளுக்குக் காதலிருந்தது. அவன் ஓர் ஆணழகன் என்கிற அம்சம் முந்திக்கொண்டு, இவ்விஷயம் சார்ந்த பைத்தியக்காரத்தனமான காரியங்கள் அவ்வளவையும் நியாயப்படுத்த அவளுக்கு உதவின. என் கைகளில் விம்மி அழுகிறபோது, அவனுடைய பெயரை உச்சரித்திருக்கிறாள். இப்பிரச்சனையில் நான் காட்டிய ஆதரவு அவளுக்குத் தைரியத்தை அளித்தது. சிற்சில தருணங்களில் நாங்கள் மூவரும் சிரித்து மகிழ்ந்திருக்கிறோம். மணமுறிவுப் பிரச்சனையொன்று விபரீதமாக முடிய, அப்பெண்ணின் குடும்பம் சுகாதாரமற்ற தீவு ஒன்றிற்கு நாடுகடத்தப்பட்டது. அங்கு அவள் இளம்வயதில் மரணமடைந்தாள். அவள் மூப்பினைக் கண்டு அஞ்சிய பெண், எனவே அவளுடைய இளம்வயது மரணசெய்தியைக் கேட்டு நான் வருந்தவில்லை, மகிழ்ந்தேன், உண்மையாக நேசிக்கின்ற `மனிதர்களின் அகால மரணத்தின்போது நாம் ஒருபோதும் பெற்றிராத மன உணர்வுக்கு அன்று நான் ஆளானேன். அவளுக்குப் பணத்தேவை அதிகமாக இருந்தது. ஒரு நாள் என்னிடம் அவள் ஒரு லட்சம் செஸ்டர்ஸ்(sesterces)43 கடனாகக் கேட்டாள். மறுநாள் அப்பணத்தைக் கொண்டுபோனேன். அவள் தரையில் அமர்ந்தாள், ஆலியொஸ்ஸி(Aliossi)44 ஆட்டத்தை விளையாட முற்பட்டவள்போல என் கண்ணெதிரில் அவளது கச்சிதமான சிறிய உருவம். நான் கொடுத்த பையிலிருந்தவற்றைத் தரையில் கொட்டி, பளபளக்கும் குவியல்களாகப் பிரிக்கத் தொடங்கினாள். வரம்புமீறிச் செலவு செய்வதில் ஆர்வமுள்ள நம் எல்லோரையும்போல அவளுக்கும் இப்பொற்காசுகள் சீசர் தலை அச்சிட்ட சராசரி பணமமல்ல, ஒருவகை மந்திரப்பொருள் என்பதை நான் புரிந்துகொண்டேன், கூடுதலாக அவள் மிகவும் நேசிக்கிற நடனக் கலைஞன் ‘பாத்தில்லே’வை பிரதிமைபடுத்தி தயாரித்த சொந்தப்பணம்போல அதனை அணுகினாள் எனபதும் எனக்குத் தெரியும். நான் ஒருவன் அங்கிருக்கிறேன் என்பதையே மறந்தவள்போல அன்று நடந்துகொண்டாள். அவளுக்கென்றிருந்த பிரத்தியேக அழகை அலட்சியம் செய்து, கிட்டத்தட்ட குரூரமானதொரு தோற்றத்தில், புருவத்தைச்சுருக்கி, பள்ளி மாணவியைப்போல முகத்தைவைத்துகொண்டு, கடினமானதொரு கூட்டல் கணக்கைப்போடுவதுபோல விரல்களை மடிப்பதும் விடுவதுமாக இருந்தாள். அன்றுபோல ஒருபோதும் என்னை அவள் கவர்ந்ததில்லை.

தொடரும்…..

——————————————————————

சில குறிப்புகள் :

42.பிரிஜீயன்ஸ்(Phrygians) இன்றைய துருக்கியின் அணடோலியா பகுதி, உரோமப்பேரரசு காலத்தில் கிரேக்கத்துடன் பண்பாட்டில் நெருங்கிய தொடர்புகொண்ட பிரதேசம்.

43. செஸ்டெர்ஸ் (Sesterces) பண்டைய ரோமானிய நாணயமுறை

44. ஆலியொஸ்ஸி(Aliossi) பண்டைய கிரேக்க விளையாட்டு

Series Navigation<< அதிரியன் நினைவுகள் – 8அதிரியன்  நினைவுகள் – 10 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.