வாயுக்கூண்டும் ஊதுபைகளும்

குறிப்பு:  “இரண்டு இதழ்களில் வந்தால் போதும், கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை,” என்றதற்கேற்ப மூன்று அத்தியாயங்களை இரண்டு இதழ்களுக்குள் அடக்கி ஒரு நிம்மதிப் பெருமுச்சு விட்ட அடுத்த கணமே, “நீ எப்படிப் பெருமூச்சு விடலாம்?  விட்டேனா, பார்!” என்பதைப்போல ஒரு பெரிய பலூனை அமெரிக்காவின் மீது அனுப்பி வைத்தது சீனக் கரடி.  அதற்கு அமெரிக்கக் கழுகு என்ன செய்தது என்று நமக்குத் தெரிந்தாலும், சீனா எப்படியெல்லாம் பல நாடுகளுடன் சித்து விளையாட்டு ஆடியது/ஆடி வருகிறது/ஆடும் என்பதைப் பற்றி எழுதி, இக்கட்டுரைத் தொடரை நிறைவு செய்யலாமென உள்ளேன்.

3.  கரடியா, கழுகா?

அமெரிக்காவுக்கும்,சீனாவுக்கும் இடையில் ஆண்டுதோறும் நடக்கும் ஏற்றுமதி –இறக்குமதி விவரங்களை கீழுள்ள வரைபடம் சுட்டிக் காட்டுகிறது.  2022ல் மொத்தம் 691 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நடந்ததில்.[1]  ஏற்றுமதி 154 பில்லியன் டாலர்கள்; இறக்குமதி 537 பில்லியன் டாலர்கள்.  ஆகவே, நிகர நிலுவை 383 பில்லியன் டாலர்கள்.  வரைபடத்தைப் பார்க்கப் பார்க்க நமக்குப் பூதாகாரமாகாத் தெரிவது என்னவென்றால், அமெரிக்கா ஆண்டுதோறும் சீனாவிடம் கடன்பட்டுக் கொண்டே வருகிறது என்பதே.

அமெரிக்கா-சீனா ஏற்றுமதி-இறக்குமதி

இது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்.  இதற்கு ஏன் அழுத்தம் கொடுக்கவேண்டும்?  இத்தனை கடன் பட்டும், அமெரிக்க டாலர் உலகத்தில் பெரிய செலவாணி மதிப்புடன் இருக்கக் காரணம், சீனா அமெரிக்காவின் பொக்கிஷக் கடன் பத்திரங்களை வாங்கிக் குவித்து வருவதே.  அதை அது திருப்பிக் கேட்க ஆரம்பித்தால், அமெரிக்காவின் டாலர் மதிப்பு, கிடுகிடுவென்று கீழே இறங்கும். 

அப்படி இறங்கினால், அது அமெரிக்காவை மட்டும் பாதிக்காது, உலகநாடுகளின் பொருளாதாரத்தை – சீனாவையும் சேர்த்துத்தான் — மிகமிக பாதித்துவிடும்.  ஆகவே, சீனாவிடம் அமெரிக்கா பட்ட கடன் முள் புதரில் விழுந்த புடைவையைப் போலத்தான்.

அதனால் அமெரிக்காவிடம் கிடுக்கிப்பிடி போட்டுச் சீனாவால் அதன் கடனை வாங்க முடியாது.  அதற்குப் பதிலாகப் பொருள்களாகப் பெறலாம் என்றால், மற்ற நாடுகளைப் போல விலையுயர்ந்த இராணுவத் தளவாடங்களை வாங்கவும் இயலாது.  அதற்கு அமெரிக்கச் சட்டசபைகள் அனுமதிக்கா;  மேலும், அப்படி வாங்கிவிட்டு, உதிரிப் பொருள்களுக்கு கையேந்தி நிற்கவும் சீனா விரும்பாது.  அதன் நட்பு நாடான பாகிஸ்தான், அமெரிக்காவிடமிருந்து எஃப்-16 போர் விமானங்களை வாங்க எப்படித் ததிங்கிணத்தோம் தாளம் போடுகிறது என்பதை அனைவரும் அறிவர்.

அதில் சீனாவுக்குச் சிறிதும் நாட்டமும் கிடையாது.  ஏனெனில், அமெரிக்கா, ரஷ்யா போல அது ஒரு பெரும் வல்லரசாகவே விரும்புகிறது.  வல்லரசு இராணுவ தளவாடங்களுக்கு மற்ற நாடுகளிடம் கையேந்தி நிற்காது.

“எங்கள் பேரரசில் கதிரவன் மறைவதே இல்லை!” என்று மார்தட்டிய பிரிட்டானிய அரசு, பல்லும், நகமும் இழந்த சிங்கமாகத்தான் இருக்கிறது.  தற்காலத்தில் விண்ணில் உயரப் பறக்கும் அமெரிக்கக் கழுகுதான் உலகின் போலீசாகச் செயல்பட்டு வருகிறது.

கிளாஸ்நோஸ்ட் என்று மிக்கைல் கோர்பசாவ் மக்களாட்சிக்கு வித்திடப் பட்டுப் பின்னர் பெர்லின் சுவர் இடிக்கப் பட்டாலும், போரிஸ் யெல்ட்சினின் கீழ் ரஷ்யாவும் தன் பழம்பெருமையை இழந்ததே மிச்சம்.  இப்பொழுது விளதிமிர் ப்யூட்டின் அதை மீட்டெடுக்க முயன்று உலகை மூன்றாம் உலகப்போரின் விளிம்புக்குத் தள்ள முயன்று கொண்டிருக்கிறார்.

அப்படிச் செய்வது அழகல்ல என்பதைச் சீனா நன்கு உணர்ந்தே உள்ளது.  திட்டமிட்டுச் சிறிது சிறிதாகத் தன்னை உயர்த்திக்கொண்டு வருகிறது.

அதற்கு முதல் படிதான் உலகத்தின் தொழிற்கூடமாக அது மாறியதன் நோக்கம்.

ஒலியைவிட வேகமாகச் செல்லும் ஜெட் போர்விமானத்தை (ஹெச்.எஃப்-24) ஆசியாவில் முதன்முதலாக உற்பத்தி செய்ய முயன்றும், தவறான முடிவுகளால் அதில் தோல்வியுற்றது இந்தியா.[2]  அதன்பின் போர்விமானத்திற்கும், அதை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கும் ரஷ்யாவையே முதலில் நம்பியது.

ஆனால், சீனா வேறுவிதமாகத் திட்டமிட்டுச் செயல்படத் துவங்கியது. முதலில் நட்பு நாடான ரஷ்யாவிடமிருந்து போர்விமான வடிவமைப்பு முறையைத் திருடியது.[3]

சீனாவின் ஜே-15 விமானம் அனுமதி பெறாமல் காப்பியடித்த ரஷ்யப் போர்விமானம் எஸ்யு-33வின் வடிவமைப்பே ஆகும்.  இந்த ரஷ்ய விமானம் 1980களில் தயாரிக்கப்பட்ட எஸ்யு-27கே விமானத்தின் கிளைப்பு (derivative).  இது நடந்தேற அக்காலத்தில் உக்ரேன் உதவியுள்ளது என்றால் வியப்பாக இருக்கும்.  டி-10கே-3 என்று பெயரிடப்பட்ட விமானம், எஸ்யு-33 விமானத்தின் முன்மாதிரியாகும்.

“போர்விமானங்களை வாங்கும் செலவை மிச்சப்படுத்துவதற்காக – ரஷ்யாவிடமிருந்து எஸ்யு-33 விமானங்களை வாங்கி, அதை உற்பத்தி செய்யும் அனுமதிக்குப் பணம் கொடுப்பதற்குப் பதிலாக, ரஷ்யாவுக்குத் தெரியாமல் எஸ்யு-33 விமானத்தின் முன்மாதிரியை உக்ரேனிடத்திலிருந்து வாங்கி, அதன் வடிவமைப்பைக் காப்பியடித்தது,” என்று ரஷ்ய இராணுவ வல்லுனர் வாசிலி காஷின் தெரிவித்திருக்கிறார்.

எஃப்-35 லைட்னிங் IIதான் உலகத்திலேயே மிகவும் மேம்பட்ட ஐந்தாம் தலைமுறை மறைவியக்க விமானமாகும். அதன் முவ்வகை வேறுபாடுகள் அமெரிக்காவின் விமானப்படை, கடற்படை, கடல்சார் படை (Marine Corps) இவற்றின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டு இயங்குகின்றன. 

இந்த விமானத்தின் வடிவமைப்பைச் சீனா திருடியது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.[4]

அமெரிக்க நாட்டுப் பாதுகாப்பு முகமையகத்தின்  (US Nataional Security Agency) உடன்படிக்கையாளரான (contractor) எட்வர்ட் சுனோடன் அதுகுறித்த ஆவணங்களை  ஒரு ஜெர்மானிய வெளியீட்டு நிறுவனத்திற்கு 2015ல் கொடுத்து, அது வெளியானவுடன் இந்த விவரம் வெளிவந்தது.

சீனக் கணினி மென்பொருள் திருடர்களால் இந்த விமானத்தின் வடிவமைப்பு திருடப்பட்டு, அது சீனாவின் ஜே-20, ஜே-31 போர்விமானங்களில் இணைக்கப்பட்டது.  இந்த விமானத்தின் படம் சில விஷயங்களில் அது எஃப்-35 போர் விமானத்தை ஒத்திருப்பதைக் காட்டுகிறது.

சீனா படிப்படியாகத் தனது இராணுவ பலத்தைத் திருடியாவது உயர்த்தி வந்திருக்கிறது என்பது கண்கூடு.  இதைச் செய்வதற்கு பணபலம் வேண்டும்.  அந்தப் பணபலம் உலகின் தொழிற்கூடமாக விளங்கியதால் வந்து சேர்ந்துள்ளது. அப்படி விளங்கவேண்டி தொழிலாளர் கூலியையும்  சீனா மிகவும் கட்டுப்படுத்தியுள்ளது.

தன்னிடம் அளவுக்கு மிஞ்சிச் சேர்ந்த பணத்தைப் பல நாடுகளுக்கும் கடனாகக் கொடுத்து, தனக்குச் சாதகமாக ஒப்பந்தங்களை எழுதி, அந்த நாடுகள் கடனைத் திருப்பமுடியாது போனதும், ஒப்பந்தத்தைக் கட்டாயமாக நிறைவேற்றித் தன் இராணுவ தளங்களையும் அந்நாடுகளில் மறைமுகமாகவும், நேராகவும் அமைத்து வருகிறது.

அத்துடன், அந்த நாடுகளின் இயற்கை வளத்தையும் சுரண்டி இரட்டை லாபம் சம்பாதிக்கிறது.[5]  அதனாலேயே, மியன்மார் சீனாவிடம் அண்டி நிற்காது, அமெரிக்கா, ஜப்பான் போன்ற மற்ற நாடுகளிடம் நட்பை வளர்த்து வருகிறது. 

தொழில்வளத்துக்குத் தேவையானவை என்று வகைப்படுத்தப்பட முப்பது கனிமங்களைத் தோண்டியெடுத்து, அவற்றைத் தூய்மைப்படுத்தும் முறையைச் சீனா அறிந்துள்ளது. [6]  

சீனாவின் முன்னாள் அதிபர் தெங்-சியோ-பிங் (Deng Xiaoping), “நடுவண் கிழக்கு நாடுகளிடம் எண்ணெய், சீனாவிடம் அரிதான கனிமங்கள் – இவை உலக ஆதிக்கத்திற்கு முக்கியம்,” என 1987ஆம் ஆண்டிலேயே வலியுறுத்தியுள்ளார்.

வல்லரசாகத் தேவையான பணம், இராணுவ பலம், கல்வியறிவு இவற்றைப் பெற்றது சீனா. பிரிட்டானியரும் ஹாங்காங் தீவை தங்களுடைய ஒப்பந்தப்படிச் சீனாவிடம் விட்டுச் சென்றுவிட்டனர்.  இருந்தாலும், தாய்வான் தீவு இன்னும் அதன்வசம் வராததை பெரும் குறையாக – தான் வல்லரசு முழுவதும் ஆகாததாகத்தான் சீனா உணருகிறது.

தன்னைப் பலப்படுத்த, மற்ற நாடுகளைப் பலவீனப்படுத்த, அது எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்றும், அதற்கு முக்கியமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் எப்படி அதை முறியடிக்க எதிர் நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன என்பது சென்ற பகுதியில் விளக்கப்பட்டது.

மற்ற நாடுகளின் – முக்கியமாக அமெரிக்காவின் பலம் – அதன் பலவீனம் – அது எப்படி தனக்குள் இரகசியத் தகவல் பரிமாற்றம் செய்துவருகிறது என்பதை உளவறியச் சீனா விரும்புகிறது.  “எதிரியின் பலம்-பலவீனத்தை அறிவதே ஒரு படைத்தலைவனின் தலையாய கடமை;  அப்படி அறிபவர்தான் எதிரியை வெற்றிகொள்கிறார்,” என்று ‘போர்க்கலை’ எழுதியுள்ள சீனப் பேரறிஞர் சுன்-சூவின் அறிவுரையை அது பின்பற்றிச் சில ஆண்டுகளாக தானியங்கியாக இயக்கமுடியும் பலூன்களை விண்ணில் செலுத்தி உளவறிந்து வருகிறது.

அதில் முக்கியமான ஒரு நிகழ்வு இந்த ஆண்டு பிப்ரவரி மாத முதல் வாரத்தில் நிகழ்ந்தது.  சீனாவின் உளவறியும் கருவிகள் கொண்ட ஒரு பலூன் அலாஸ்கா மானிலத்தின் மீது பறந்து, பசிபிக் பெருங்கடலைக் கடந்து, அமெரிக்காவின் மான்ட்டனா மானிலத்தைக் கடந்தபோது அது கண்டுபிடிக்கப்பட்டது.[7]  அந்த பலூன் மூன்று பஸ்கள் அளவுக்கும் பெரிதான உளவுக் கருவிகளை வைத்திருந்தது. அந்த பலூன் 200 அடி (70 மீட்டர்) விட்டம் உள்ளதாக இருந்தது.

இந்த உளவு பலூனை அமெரிக்காமீது பறக்க விட்டதற்காக அமெரிக்க மக்களவை ஒருமனதாகக்(!) கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.[8]

“இப்படிப்பட்ட ஒரு உளவுக் கருவி நம் நாட்டின்மீது எப்படிப் பறக்கலாம்?  அதை ஏன் இன்னும் வீழ்த்தாமல் அழகு பார்த்துக்கொண்டிருக்கிறோம்?” என்று அமெரிக்க ஊடகங்கள் பொங்கி எழுந்தன.

அந்த பலூனை மக்கள் வசிக்கும் இடத்தில் வீழ்த்தினால், அது பொருட்சேதம், உயிர்ச்சேதத்தை விளைவிக்கலாம்;  மேலும்,  அந்த பலூனில் ஏதாவது குண்டுகள் இருந்தால் கீழே விழும்போது, எப்படிப்பட்ட தீய விளைவுகள் ஏற்படும் என்று சொல்ல இயலாததால், அது அட்லாண்டிக் பெருங்கடலை அடைந்ததும் அமெரிக்கப் போர்விமானத்தால் வீழ்த்தப்பட்டு, அதன் கருவிகள் அமெரிக்கக் கடற்படையால் மீட்கப்பட்டன.

சீனாவின் உளவு பலூன் நான்கு மிகவும் இரகசியப் பாதுகாப்பான பகுதிகள் மீது பறந்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்ட்டகன் தெரிவித்தது.[9]

இந்த உளவறியும் பலூன் ஐந்து கண்டங்களின் மேல் பறந்து உளவுச் செய்திகளைத் சேகரித்துச் சீனாவுக்கு அனுப்பியதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறைச் செயலர் அந்தோனி பிளிங்கன் தெரிவித்தார்.  மேலும், அது நாற்பது நாடுகள் மீது பறந்ததாகவும் கூறினார்.  சீனாவுக்குச் செல்லவிருந்த பயணத்தையும் ரத்து செய்தார்.  இதைப்பற்றி அமெரிக்கா நட்பு நாடுகளான இந்தியா, ஜப்பான், வியட்நாம், டைவான் இவற்றுக்குத் தெரிவித்தது.[10]

ஆனால் சீனாவோ, எல்லாவற்றையும் புறம் தள்ளி, அமெரிக்கா ‘ஊடகப் போர்’ நடத்துவதாகக் குற்றம் சாட்டியது.

இதையடுத்து, அமெரிக்கா ஆளில்லா, ஆயுதமில்லாக் கண்டம்விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணையைக் (Intercontinental Ballistic Missile) கலிஃபோர்னியாவிலிருந்து அனுப்பிப் பரிசோதித்தது.  அந்த மினட்மென் III ஏவுகணை வாண்டென்பெர்க் விண்வெளி தளத்திலிருந்து ஏவப்பட்டு 4,200 மைல்கள்  (6,800 கி.மீ) பசிபிக் பெருங்கடல்மேல் பறந்து மார்ஷல் தீவுகளிலில் ஒன்றான் க்வாஜாலின் பவளத் தீவுக்குச் சென்றது என்று விமானப் படை அறிவிப்பு தெரிவித்தது.[11]

உளவுக் கருவிகளைக் கடலில் மீட்டெடுத்த அமெரிக்கா, அதை ஆய்ந்துவருகிறது.

இந்தக் கட்டுரையை எழுதும் இச்சமயத்தில் கனடாவின் யூகான் மானிலத்தின் மீது பறந்த – ஒரு கார் அளவு பெரிதான பலூனை அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது.  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “கனடாவின் வானில் அத்துமீறிப் பறந்த அடையாளம் கண்டுகொள்ள இயலாத ஒன்றை வீழ்த்தும்படி ஆணையிட்டேன்,” என்று ட்விட்டரில் தெரிவித்தார்.[12]

ஒரு பத்திரிகை நிருபர் சீனா ஏன் இப்படித் துணிச்சலாக அமெரிக்காவின் மீது பறக்க விட்டிருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வினவிய போது பலமான சிரிப்பே பதிலாக வந்தது.  “சீனாவுக்கு நாம் என்ன செய்வோம் என்று தெளிவாக்கி விட்டோம்.  நாம் பின்வாங்க மாட்டோம்.” என்று பதில் சொன்னார்.[13]

மீண்டும் இரண்டு பலூன்கள் அமெரிக்கா மீது பறந்தது; அதையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுட்டு வீழ்த்த உத்தரவிட்டு விமானப் படையால் அதுவும் நிறைவேற்றப்பட்டது.

இந்த பலூன்கள் சீனாவால் அனுப்பப்பட்டவையா, அல்லது வேறு ஏதாவது ஒன்றா, உளவு பலூன்களா, அல்லது வேற்றுலக மனிதரால் இவ்வுலகத்துக்கு வந்தவையா என்று ஊடகங்கள் பல்வேறு விதமாகப் பேசத் தொடங்கின.

வெள்ளை மாளிகைத் தகவலர் ஜான் கிர்பி, “வேற்றுலக மனிதர்களாலோ, வேற்றுலகச் செயல்களோ இந்தப் பலூன்கள் தோன்றுவதாகத் தெரியவில்லை,” என்றும், “அமெரிக்க மக்கள் இந்த விதமாக இவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்,” என்றும் கூறினார்.[14]

“பல பத்தாண்டுகளுக்கு முன்பு தாழ்ந்த தொழில்நுட்பத்துடன் இப்படிப்பட்ட உளவு பலூன்கள் அனுப்பப்பட்டன. இப்பொழுது வேவு பார்க்கும் தொழில்நுட்பம் மிகவும் உயர்ந்துவிட்டதால், பழைமையை மறந்துவிட்டோம்;  எனவே, கடந்த சில ஆண்டுகளாகச் சீனாவின் உளவு பலூன்கள் அமெரிக்கா மீது பறந்ததை நாம் கவனிக்க மறந்துவிட்டோம்,” என்று டெலாவர் செனட்டார் கிரிஸ் கூம்ஸ் எம்.எஸ்.என்.பி.சி ஊடகக் காணொளியில் கேட்டி டுர் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்தார்.[15]

இதற்கிடையில், சீனா அனுப்பிய உளவு பலூன் வேண்டுமென்றே அமெரிக்க விண்வெளியில் அனுப்பியதா, அல்லது தற்செயலாக அது அமெரிக்கா மீது பறந்ததா என அமெரிக்க உளவுத்துறை ஆய்வதாகத் தகவலும் கிட்டியது.[16]

அதைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறைத் தகவலர் நெட் பியர்ஸ், “இது அதி உயர உளவுப் பலூன்; இது வழிமாறிப் பறந்ததை அமெரிக்கா கண்காணித்து வந்தது.  அமெரிக்கா மேல் பறந்தது அகில உலகச் சட்டமீறல்,” என்று சொன்னார்.[17]

அரிசோனா ஏபிசி ஊடகத்தில் சீன பலூன்களுக்கும், சிறிய பலூன்களுக்கும் என்ன வேறுபாடு என்று வானவியல் நிபுணரிடம் வினயபோது, அவர் தாங்களும் வானவியல் நிலைமைபற்றி அறியத் தாங்களும் பலூன்கள் அனுப்பவதாகத் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுடப்பட்ட சிறிய பலூன்களைப் பற்றி ஊடகங்களில் பேசும்போது, “இவை தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவையாக இருக்கக்கூடும்; ஆய்வுக்கானவையாகவே இருக்கலாம்.  ஆனால் இது பெரிய சீனப் பலூன்களுக்குப் பொருந்தாது,” என்று அமெரிக்க மக்களுக்குத் தன் உரையில் விளக்கினார்.[18]

அவர்கள் அனுப்புவன 20 அடி விட்டம் உள்ளவை என்றும், அவை மேலே செல்லும்போது, காற்று அழுத்தம் குறைவதால், பெரிதாகி வெடித்துவிடும்.  அவை அனுப்பும் தகவல்களை வைத்து, தினசரி வானவியல் அறிக்கைகளை வெளியிடுவதாகவும் விளக்கினார்.[19]

சிறிய பலூன்களை ஆய்வு செய்ததில் அவை உளவு பலூன்கள் அல்ல என்று தெளிவாகியது.

2022, ஜனவரி வாக்கில் வெள்ளையான ஒரு உருளை வடிவம் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மீது, குறிப்பாக போர்ட் பிளேர் நகர்மேல் பறந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.  அது உளவு விண்ணூர்தியோ என்ற கேள்வி எழுந்தபோது, ஷீக்கா என்றும் செய்தித்தாள், “மிகவும் முன்னேற்றமடைந்த செயற்கைக் கோள்கள் மூலம் உளவறியும் இன்னாளில் பலூனை யார் அனுப்புவார்கள் என் நையாண்டி செய்தது.  இதற்கிடையில் ஜப்பான் நவம்பர் 2019லிருந்து செப்டம்பர் 2021வரை  சீனா ஆளில்லா பலூன் போன்ற உளவிகளை அதன் வானில் பறக்கவிட்டதாகத் தெரிவித்தது.[20]

அந்தமான் தீவுகளில் இந்தியா முப்படைத் தளங்களை அமைத்துள்ளது. அதுபற்றி அறியவே சீனா அப்படிச் செய்திருக்கலாம்.  ஆனால் இதையறிந்த இந்தியா அமைதி காத்தது அனைவருக்கும் புதிராகவே இருந்தது.[21]

காலம்சென்ற அமெரிக்க அதிபர் தியடோர் ரூஸ்வெல்ட்டின் வெளியுறவுக் கொள்கைப்படி இந்தியாவும் இதமாகப் பேசி குண்டாந்தடியைக் கையில் வைத்திருப்பது அது – அதன் பாதுகாப்புச் செலவைப் பதிமூன்று விழுக்காடு உயர்த்தியதிலிருந்து (5950 பில்லியன் ரூபாய்கள் – 72.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) தெரியவருகிறது.[22]  

ஆனால், இந்த நிகழ்வு அமெரிக்க-சீன உறவைப் பாதிக்காது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.[23]  ஆகவே, வானத்தில் பறக்கும் (அமெரிக்கக்) கழுகை, (சீனக்) கரடி தாக்க முற்படாது என்றே நம்புவோம்.

அப்படியும் நினைக்கக்கூடாது என்பதுபோல சீனா நடந்து வருகிறது.  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துணிச்சலாக உக்ரேன் தலைநகர் கியவுக்குச் சென்று, உக்ரேனிய அதிபர் வோலொதிமிர் செலென்ஸ்க்கியுடன் கைகோர்த்து நின்று,“இறுதிவரை அமெரிக்கா உக்ரேனுக்குத் துணைநிற்கும்,” என்று அறிவித்தார்.[24]

இரகசியப் பாதுகாப்புத் துறை கடும்போர் நடக்கும் அந்த நாட்டுக்குச் செல்லவேண்டாம் என்று தடுத்தும், அங்கு சென்றதற்குக் காரணம் உக்ரேனின் மக்களாட்சி, அரசுரிமை, எல்லைப் பாதுகாப்பு, இவற்றுக்கு அமெரிக்காவின் தடுமாற்றமில்லாத, தளராத  பொறுப்பை உணர்த்தவே என வெள்ளைமாளிகை அறிக்கை தெரிவித்தது.[25]

இத்தோடு சீனா நின்றுவிட்டது என்று நினைத்தால் அது ஏமாற்றத்தையே அளிக்கும். 

Not all partnerships are created equal: Hierarchy of China’s diplomatic partnerships, in order of closeness

ரஷ்யாவுக்குச் சீனா ஆயுதங்களை அனுப்பப் போகிறது என்ற செய்தியும் மறைமுகமாக அமெரிக்காவைச் சீண்டி, ரஷ்ய -உக்ரேனியப் போரை நீட்டித்து, அதில் குளிர்காய முயல்கிறது போலத் தோன்றுகிறது.  உயிர்க்கொல்லி ஆயுதங்களைச் சீனா ரஷ்யாவுக்கு அனுப்புவதை எதிரித்து அமெரிக்கப் பாதுகாப்புத்துறைச் செயலர் ஆன்டனி பிலின்க்கென் ஜெர்மனியின் மியூனிச் நகரில் நடந்த  பாதுகாப்புக் கலந்துரையாடலில் சீன அதிகாரி வாங் யியை எச்சரித்தார்.[26]

ஆக, சீனாவின் செயல்கள், உலகப் போரில் கொண்டுவந்து விடுமோ என்ற கலக்கமும் ஏற்பட்டுள்ளது.  ஏனெனில் ஒருபக்கம் கடந்த ஓராண்டாக ரஷ்ய-உக்ரைன் போர் நடந்துவரும்போது, அமெரிக்காவுக்குச் சீனா இப்படியொரு தலைவலியைக் கொடுப்பது சரியான செயலா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.

ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டின் பாதுகாப்பைப் பற்றியும், மற்ற தொழில்துறை முன்னேற்றம், இரகசியம் பற்றியும் உளவறிய முற்படுவது இயற்கையே.  அதை எல்லா நாடுகளுமே செய்துவருகின்றன.  அப்படியிருக்கையில் திடுமென்று உலக அமைதியைக் குலைக்கும் வண்ணம் ஒரு பலூனை அனுப்பியும், ரஷ்ய-உக்ரேனியப் போரை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்வதும் ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

கோவிட் இரண்டாண்டுகளாக அமெரிக்கப் பொருளாதாரத்தை முடக்கிப் போட்டுப் பணவீக்கத்தை அதிகரித்தும், அதை அமெரிக்கா மெல்லமெல்லச் சமாளித்துவருகிறது.  ஆனால், சீனாவின் பொருளாதாரம் அந்த அளவுக்கு முன்னேறவில்லை.  உலகத்தையே ஆட்டிப்படைத்த கோவிட் கிருமிகள் சீனாவிலிருந்து வந்ததால் – அது அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்து உயிர்ச்சேதத்தையும் விளைவித்ததால், அந்த நாடுகளும் சீனா அதை வடிமைத்து அனுப்பியது என்ற சந்தேகத்துடன் இருந்துவருகின்றன. 

இந்த அவச்சொல்லிலிருந்து திசைதிருப்ப இப்படிச் சீனா நடக்கிறதா, அல்லது தான் உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு என்று நிறுவ முயலுகிறதா என்றும் தெரியவில்லை. 

உலக நாடுகள் எதுவும் தனித் தீவல்ல.  தனித்துச் செயல்படவும் இயலாது.  ஒன்றையொன்று சார்ந்தே உள்ளன. ஆகவே, போரைத் தூண்டி இலாபம் பார்க்காமால், அமைதியை நிலை நிறுத்துவதே அவற்றை மிகப்பெரிய வல்லரசாக மதிக்கவைக்கும்.

முந்தைய பகுதி:


அடிக்குறிப்புகள்:

[1]      Total value of U.S. trade in goods (export and import) with China from 2012 to 2022, by Yihan Ma,Statista,  Feb 8, 2023, https://www.statista.com/statistics/277679/total-value-of-us-trade-in-goods-with-china-since-2006/

[2]     The Story of India’s Disappointing Marut Jet Fighter, by Sebastianen Roblin, National Interest, Sep 19, 2020, https://nationalinterest.org/blog/reboot/story-indias-disappointing-marut-jet-fighter-174732

[3]      How China Stole Russia’s Jet Fighter Designs, by Michael Peck, The National Interest, Oct 5, 2019, https://nationalinterest.org/blog/buzz/how-china-stole-russias-jet-fighter-designs-and-russia-isnt-happy-85556

[4]      How China Stole the Designs for the F-35 Stealth Fighter, by Eli Fuhrman, July 15, 2021. https://www.19fortyfive.com/2021/07/how-china-stole-the-designs-for-the-f-35-stealth-fighter/ 

[5]      How China is Reshaping International Development, by Matt Ferchen, Carnegie Endowment for International Peace, Jan 8, 2020, https://carnegieendowment.org/2020/01/08/how-china-is-reshaping-international-development-pub-80703

[6]      China’s dominance of strategic resources by Michel Penke, DW.com, 04/13/2021, https://www.dw.com/en/how-chinas-mines-rule-the-market-of-critical-raw-materials/a-57148375

[7]      Chinese spy balloon contained technology to monitor communications, By Adrienne Vogt, Leinz Vales and Matt Meyer, CNN, Feb 9, 2023, https://www.cnn.com/politics/live-news/chinese-spy-balloon-update-02-09-23/index.html

[8]     Chinese surveillance balloon may trigger US ‘action’ against Beijing, by Shannon K. Crawford, February 9, 2023, ABC News, https://abcnews.go.com/Politics/chinese-surveillance-balloon-trigger-us-action-beijing-official/story?id=97003223

[9]     The Pentagon disclosed Chinese missions over four “sensitive sites” in the U.S., ByShannon K. Crawford and Luis Martinez, ABC News, February 8, 2023, https://abcnews.go.com/Politics/blinken-chinese-surveillance-balloon-program-spread-5-continents/story?id=96984852

[10]     Beijing calls US claims over balloons ‘information warfare’ by The Associated Press February 9, 2023, https://abcnews.go.com/International/wireStory/beijing-calls-us-claims-balloons-information-warfare-96998830

[11]     US test launches unarmed intercontinental ballistic missile by The Associated Press, February 10, 2023, https://abcnews.go.com/US/wireStory/us-test-launches-unarmed-intercontinental-ballistic-missile-97032086

[12]       US jets shoot down third unmanned aircraft within a week, this time over Canada, by Tom Vanden Brook and Jeanine Santucci, USA TODAY, Feb. 11, 2023, https://www.usatoday.com/story/news/nation/2023/02/11/us-jets-shoot-down-object-over-canada/11238813002/

[13]     Biden Laughs Out Loud at Reporter’s China Spy Balloon Question, By Tommy Christopher, MEDIA ITE, Feb 7th, 2023, https://www.mediaite.com/news/watch-biden-laughs-out-loud-at-reporters-china-spy-balloon-question/

[14]     White House rules out aliens, but still can’t say who is behind unidentified flying objects, by Joey Garrison, USA TODAY, Feb 13, 2023, https://www.usatoday.com/story/news/politics/2023/02/13/white-house-no-indication-aliens-flying/11250618002/  

[15]     கேட்டி டுர் – டெலாவர் செனட்டர் கிரிஸ் கூம்ஸ் பேட்டி, எம்.எஸ்.என்.பி.சி ஊடகம்

[16]     US intel assessing possibility that Chinese spy balloon’s path over US was accidental, by Natasha Bertrand Katie Bo Lillis, CNN, Feb 15, 2023, https://www.cnn.com/2023/02/15/politics/us-intel-china-balloon/index.html

[17]     US tracked Chinese balloon from launch, may have accidentally drifted, by Alexandra Hutzler, February 15, 2023, https://abcnews.go.com/Politics/us-watched-chinese-balloon-launch-accidentally-drifted-official/story?id=97220283

[18]     Biden says ‘aerial objects’ not looming threat, by Sarah Elbeshbishi, Ella Le, Joey Garrison, David Jackson, Kevin Johnson & Ken Tran,USA TODAY, Feb. 16, 2023, https://www.usatoday.com/story/news/politics/2023/02/16/washington-congress-news-live-updates/11266601002/

[19]     அரிசோனா ஏ.பி.சி 15  ஊடக மாலைச் செய்தி வானிலை அறிப்பு

[20]     Uncontacted tribes and an Indian military base. Did a ‘spy’ balloon snoop on the Andaman and Nicobar islands? Analysis by Rhea Mogul and Andrew Raine, CNN, February 17, 2023, https://www.cnn.com/2023/02/17/india/india-china-spy-balloon-andaman-nicobars-intl-hnk/index.html

[21]     மேற்படித் தரவு

[22]     மேற்படித் தரவு

[23]     Biden says China spy balloon won’t hurt Xi relations by Mark Moore, New York Post, Feb 11, 2023, https://nypost.com/2023/02/09/biden-says-chinese-spy-balloon-wont-damage-us-china-relations/  

[24]     Biden makes surprise Ukraine visit, signaling strong US support in fight against Russia by Kevin Shalvey and Guy Davies, abcNews, February 20, 2023

[25]     The Secret Service Opposed Biden’s Trip to Ukraine. Here’s Why He Went Anyway, by Armani Syed, February 20, 2023, Time, https://time.com/6256941/biden-trip-kyiv-ukraine-zelensky/

[26]     China may be on brink of supplying arms to Russia, says Blinken, by Patrick Wintour, The Guardian, Sun 19 Feb 2023, https://www.theguardian.com/world/2023/feb/19/china-may-be-on-brink-of-supplying-arms-to-russia-says-blinken

One Reply to “வாயுக்கூண்டும் ஊதுபைகளும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.