மிளகு அத்தியாயம் நாற்பது

ஜெருஸோப்பா 1604

1604 பிரஜாபதி வருடம் – ஆஷாட  மாதம் அமாவாஸ்ய  

கோகர்ணம் மஹாபலேஷ்வரர் கோவில் வளாகத்தில் பசுமை பூசி நிலைத்த நந்தவனம் இது. வில்வ மரங்களும், நந்தியாவட்டைச் செடிகளும், தும்பையும் பனியோடு வந்த தூறலில் குளித்தபடி ஆடியசைந்து கொண்டிருந்த புலர்காலம். 

 கோவில் மதிள்களுக்கு உள் பக்கத்தில் சந்நிதிகளும், கருவறை, முன் மண்டபங்களும் வெகு கவனமாகக் கதவுகள் சாத்திப் பூட்டப்பட்டு தீபங்கள் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை பெருக்கி வைக்கப்பட்டு, என்றால் அணைக்கப்பட்டு, இருள் விலகக் காத்திருக்கும் சூழல் எங்கும். ஒன்றிரண்டு தீபங்கள்  பெரிய கண்ணாடிக் குமிழ்களுக்குள்   காற்றுக்கு எதிரே பாதுகாப்பு பெற்று எரிந்து கொண்டிருந்தன.

நந்தவனத்தில் தரையோடு ஒட்டி தாழம்  புதர்களை அடுத்து ஏதோ அசைவு. காட்டுப் பன்றியோ, நரியோ உள்ளே நுழைந்திருக்கலாம். அது கழுதைப்புலியாக இருக்கக் கூடும் என்பது ஏங்கியழுவது போன்ற குரல் எழுப்பியதில் பிரதிபலித்தது. ஆனால் கழுதைப்புலி ஒரு முறை மட்டும் குரல் உயர்த்திவிட்டு நின்றுவிடுமா? 

அதிகாலை நாலரை மணிக்குக் கோவில் கதவுகளைத் திறக்கப்போன அதிகாரி தெற்கேபரம்பில் பரமசிவன்  நந்தவனத்துக்குப் போகலாமா அல்லது வெளியே இருந்து கொஞ்ச நேரம் பார்க்கலாமா என்ற யோசனையில் நின்றார்.  கோல்விளக்கு பிடித்த கையில் விளக்கின் சூடான இலுப்பை எண்ணெய் வழியாமல் துணிக் கந்தையை விளக்கைச் சுற்றிப் பிடித்தபடி நின்றிருந்தார் அவர்.

நந்தவனத் தரையில் ஊர்ந்த பிராணி குப்பாயம் அணிந்திருந்ததாக மெல்ல ஒளி வரும் அதிகாலையில் தெரியவந்ததும், அதிகாரி பரமசிவன் மேலும் நேரம் கடத்தாமல், ‘திருடன் திருடன்’ என்று அலறத் தொடங்கினார். 

தரையில் கிடந்த கோலத்திலிருந்து எழுந்து நின்ற அந்த விநோதப் பிராணி கர்ப்பகிருஹத்தை நோக்கிக் கையில் பிடித்திருந்த துணிப் பொதியை வீசியது. பரமசிவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மிதமான சத்தத்துடன் அந்தத் துணிப் பொதிக்குள் இருந்த ஏதோ வெடித்து நந்தவனத்துச் சுவரில் அடியில் இருந்து பாதி உயரம் வரை விரிசல் ஏற்பட்டுச் சுற்றிலும் புகைந்து கொண்டிருந்தது. 

‘திருடன் வெடி   திருடன் திருடன்’. 

பரமசிவன் அடுத்த முறை உரக்கச் சொல்லியபோது கையில் பிடித்திருந்த கோல்விளக்கு கை நடுங்கியதால் தரையில் விழுந்தது. அங்கே உலர்ந்த மர இலைகளும், சுருங்கிய சருகுகளும் கோல் விளக்கில் இருந்து தீ பரவப் புகைந்து தீப்பிடித்தன. 

தீ என்று அலறலாமா திருடன் என்று கூச்சலிடலாமா என்று பரமசிவன் தீர்மானிப்பதற்குள் சமண தீர்த்தங்கரர்களைப் போற்றும் கோஷங்களோடு அந்த இரண்டு கால் கழுதைப்புலி நந்தவனச் சுவர் தாண்டி கோவில் மதிள் மேல் பல்லி போல் ஏறி மேலே போய் அங்கிருந்து வெளியே குதித்தது. 

தீ தீ என்று பரமசிவன் கூச்சல் போட்டபடி அங்கும் இங்கும் இலக்கின்றி ஓடினார்.

புலரிப் பொழுதின் நிர்மால்ய தரிசனத்துக்காக வந்த அடியார்களும். கோவில் திருக்குளக் கரையில் அமாவாஸ்யை தர்ப்பணம் செய்ய வந்த பித்ருகடன் கழிப்பவர்களும் நந்தவனத்துக்கு ஓடிவர அவர்கள் பார்த்தது வெடித்து விரிசல் கண்ட கோவில் சுவரும் பற்றி எரியும் இலைச் சருகுகளும். அவர்கள்  முகர்ந்தது வெடியுப்பு வாடை சூழ்ந்த நந்தவனத்தை. கேட்டது கோவில் சுவருக்கு அப்புறமிருந்து சமண மந்திரங்கள் கரகரப்பான குரலில்.  கோவில் கபாடம் திறக்க ஒரு மணி நேரம் தாமதத்தில் முடிந்தது அந்த வெடிவிபத்தும், நெருப்புச் சிதறலும். 

 பிரஜாபதி வருஷம் ஷ்ரவண மாதம் ஹொன்னூர் மடம் நவமி

நிகழும் ஷ்ரவண மாதம் நவமி தினம் பிரஜாபதி வருடம் ஹொன்னூர் உத்தரஹள்ளி மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ பத்மாசாரியார் ஸ்வாமி வியோகமானது. 

நூற்றுப் பதினைந்து வயதான ஸ்வாமியின் திவ்ய சரீரத்திலிருந்து வலது கண் வழியாகப் புனிதமான உயிர் பரப்பிரம்மத்தில் மீண்டும் கலக்க எல்லாமுமான ஏதுமில்லாத பெருவெளியில் சென்றடைந்தபோது இடியும் மின்னலுமாக பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. 

ஸ்ரீமடத்தின் உத்யானவனத்தில் பூப்பறிக்கப் பூக்குடலையோடு நகர்ந்து கொண்டிருந்தபோது வியோகமானது. 

மழையில் நனைந்தபடி பூஜ்யரின் புனித சரீரம் மடத்தின் வாசலில் தரிசனத்துக்கு வைக்கப்பட்டிருந்தது. மழை அடித்துப் பெய்ததால் மடத்தின் நீண்டு வளைந்த மரக் கூரையில் இருந்து கனமான தாரைகளாக மழை வெள்ளம் ஸ்வாமியவருடைய மேலே விழுந்து தரைக்கு ஓடியபடி இருக்க, ஸ்வாமியவர்களுக்கு அஞ்சலி செலுத்த அவர் பக்கத்தில் சென்று புஷ்பச் செண்டுகளை நமஸ்காரங்களோடு வைத்துப் பலர் போயினர். 

தேங்காய் எடுத்து வந்து ஸ்வாமியின் பூஜ்ய சரீரத்தின் தலையில் பலமாகச் சமர்ப்பிக்க பல பக்தர்கள் ஆர்வமாக இருந்தாலும் மழையில் தலைமேல் தேங்காய் உடைப்பது உசிதமில்லை என்று பொதுவாகக் கருதி வியோகமான ஸ்வாமிஜி சமாதியில் சகல மரியாதைகளோடும் இருத்தப்பட வேண்டிய காரியங்கள் மளமளவென்று நடந்தேறின. 

சமாதிக்கான பூமியில் குழிக்கக் குழிக்க அங்கே மழைநீர் தேங்கியதால், சீனக் குடைகள் சிலவற்றை விரித்துப் பிடித்து நிற்க  சமாதி தயாரானது.

 பகல் ரெண்டரை மணிக்கு ஸ்ரீலஸ்ரீ பத்மாசார்யார் ஸ்வாமிகளவரு சமாதி எய்த முடிவு செய்தாலும் மடத்தின் அடுத்த தலைமைப் பீடம் நான்கு சிஷ்யர்களில் யாருக்கு அளிக்கப்படலாம் என்று முடிவு செய்ய முடியாமல் பேச்சு வார்த்தைகளில் போக வெளியே மழை வலுத்தது. 

அப்போது, அதாவது பிற்பகல் மூன்றரை மணியைப் போல் ஸ்வாமியின் பூஜ்ய சரீரத்துக்கு அஞ்சலி செலுத்த உயரமான ஒரு இளைஞனும் அவனுடைய கூட அதே வயதில் ஒரு உயரமான பெண்ணும் வந்திருந்தார்கள் என்பது மழைத் தாரைகளுக்கு ஊடே தெரிந்தது. 

உள்ளே தர்க்கம் வலுத்து நான்கில் இரண்டு சிஷ்யர்கள் தட்ஷணமே மடத்தை விட்டு வெளியேற உத்தேசம் இருப்பதாக அறிவித்தார்கள். ஆக தேர்வு மிகுதி இரண்டு சிஷ்யர்களுக்கு இடையே இருப்பதாக மடத்து அன்பர்கள் அவதானித்திருந்தார்கள். 

இந்த வாக்குவாதத்தில் வாசலில் அஞ்சலிக்கு வந்த இளைஞனும் யுவதியும் அந்த யுவதி தோளில் மாட்டியிருந்த துணிப்பையில் இருந்து எடுத்த ஒரு தேங்காயை பூஜ்ய சரீரர் அருகே போய் நின்று பின் மண்டையில்  ஓங்கி அடிக்க வெடி வெடித்த பலமான சத்தம். ஸ்வாமிகளின் குரல் ஒரு வினாடி தீபம் வைக்கச் சொல்லி நிலைக்க, பின் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பூஜ்ய சரீரம் சார்த்தி வைத்திருந்த மடச் சுவரில் இருந்து நழுவி தரையில் பரவியது. வெடி மருந்து வாடையும் புகையுமாக இருந்த அந்த இடத்திலிருந்து  இளைஞனும் யுவதியும் ஓடி மறைய, மழை பின்னும் வலுத்தது. ஓடும்போது அவர்கள் சமண மந்திரங்களை மழையின் சப்தத்தை விட ஓங்கி ஒலிக்கும்படி உச்சரித்து ஓடினார்களாம். 

உயிர் நீத்த ஸ்வாமிகளின் பூஜ்ய சரீரத்துக்கே இப்படியான அவமரியாதை கிடைக்கிறது என்றால் ஜீவனோடு உலவி, உண்டு பசியாறி, நடந்து, அருள் பாலித்து ஆசிர்வதிக்கும் புனிதர்கள் நிலைமை சென்னாதேவி ஆட்சியில் என்னாகும்? நக்ன சமண சாதுக்களின் கைவேலை இதெல்லாம் என்று பெரும்பான்மை ஜனங்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். 

இது உளவு அதிகாரி பைத்யநாத் வைத்தியன் மகாராணிக்கு அளித்த அறிக்கை.

ஜெரஸூப்பா ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி திருக்கோவில் ஆஷாட மாதம் அஷ்டமி

ஜெரஸுப்பா நகரில் புகழ் பெற்ற ஸ்தலங்களில் முதன்மையானது நகருக்கு வடக்கே ஸ்ரீபாத பஹிச்சா என்ற திருவடித் தோட்டம் என்னும் வளம் மிகுந்த செய்வனத்தின் மத்தியில் அமைந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அம்பலம் என்னும் திருக்கோவில் ஆகும். தமிழில் திருமங்கையாழ்வாரும், தெலுங்கில் அன்னமாச்சார்யாவும் பாடிப் பரவிய மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலமாகும் இது. ராமாயணத்தில் வரும், சீதா பிராட்டியின் மெல்லிய பயோதரங்கள் நோகும்படி கீழ்மைச் செயலாகக் காக்கை வடிவெடுத்து வந்து அலகால் கொத்திய அடாத செயலுக்காக ராமபிரானால் உடனே சம்ஹாரம் செய்யப்பட்டவன் காகாசுரன். ராமபிரானால் திரேதாயுகத்தில் சம்ஹரிக்கப்பட்ட அவனுடைய உயிர் இன்னும் முடிவடையாமல் கிருஷ்ண பரமாத்மாவின் துவாபர யுகத்திலும் குற்றுயிரும் கொலையியுருமாக மேற்படி காகாசுரன் ஜெரஸோப்பா ஸ்ரீபாத பஹிச்சாவில் ஆல் மரத்தின் மேல் கிடந்தபோது ஸ்ரீகிருஷ்ணனும் ராதே பிராட்டியும் நகர்வலம் வந்தபோது ஆல்மரம் விட்டுக் கீழே பறந்து, ராதையின் பிடவைத் தலைப்பைப் பிடித்து இழுத்திட ஸ்ரீகிருஷ்ணன் தன் புனிதமான வலங்கையால் காகாசுரன் தலையில் நெற்றிப் பொட்டுகளுக்கு நடுவே விரல் வைத்து அழுத்தினான். காகாசுரன் இருகை கூப்பி வணங்கி, கிருஷ்ணா, நான் ராமாவதாரத்திலேயே திருந்திவிட்டேன். இப்போது உன்னைக் கூப்பிட்டு பணிந்து வணங்கி உயிர் நீக்க இங்கே இத்தனை நாள் காத்திருப்பு வீணாகுமோ எனப் பயந்தேன். நகர உலாவின் போது நகரமே கிருஷ்ணனான உன்னையும் ராதாபிராட்டியையும் வைத்த கண் வாங்காமல், கேட்ட செவி அனங்காமல் இருக்க, கவன ஈர்ப்பு செய்யவே ராதா ராணியின் சேலை முந்தியைப் பிடித்திழுத்தேன். சந்தோஷமாக நான் இறுதி சுவாசம் வலிக்கிறேன் கிருஷ்ணா என்று விடைபெற்றும் காக்கை வடிவில் இருந்து அவன் சுவர்க்கம் புக இயலாமல் இருக்க, பிருகு மகாமுனிவர் சொல்படி ராதா சந்நிதியில் ஒரு மண்டலம் கிடந்து காகாகாகா என்று விடாமல் காக்கச் சொல்லி (கா-கா-கா-கா) இரைஞ்சிட சுவர்க்கம்  புகுவாய் எனச் சொல்லிப் போந்தார். அந்த மாதிரியே செய்து, உய்விக்கப்பெற்று சுவர்க்கம் போகும்போது கிருஷ்ண பகவானிடம் இரைஞ்சியது இப்படி இருந்தது – ஒவ்வொரு ஆண்டும் ராதை சந்நிதியில் காகத்தஷ்டமி என்ற ஆஷாட மாதம் அஷ்டமி தினத்தில் கூடியிருந்து காகாகாகா என்று சத்தம் முழக்கிக் கரைந்தால் காப்பாற்றப்படுவோம். காவெனக் கேட்டதால் காத்து ரட்சித்து சொர்க்கம் புகுவதும் தவறாது நடக்கும். இப்படித் தலபுராணம் கொண்ட ஜெர்ஸுப்பா ஸ்ரீகிருஷ்ணா அம்பலத்தில் முந்தாநாள் காகத்தஷ்டமி என்பதால் பெரிய தோதில் பக்தர்கள் அடியார்கள் திருக்கூட்டம் கூடியிருந்தபோது கூட்டத்தின் வெளியே கோவில் வளாகத்தில் தென்மூலை வெடிப் பரம்பில் காணிக்கை வெடி வெடித்து வெடி வழிபாடு கேரளீய வழக்கம்போல் நடந்தேறியது. அந்நேரம் கோவில் தெற்கு  வசத்தில் இருந்து பலமான வெடிச் சத்தம் கேட்டது. 

சமணர்கள். அவர்களால் கையையும் காலையும் வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. கிருஷ்ணன் அவர்களுக்கும் தெய்வம் தானே? நம் கிருஷ்ணன் இல்லை. அவருக்கு உறவில் வந்த ஒன்பதாம் வசுதேவ கிருஷ்ணன் தான் அவர்கள் வணங்கும் தெய்வங்களில் ஒருவன்.   அரிஷ்டநேமி என்ற பெயரும் கொண்டவன் சமணக் கண்ணன். என்ன கேட்கிறார்களாம் புழு பூச்சியையும் கண்ணை மூடிக்கொண்டு தின்னும் கூட்டத்தினர்? மூட்டைப் பூச்சிக் கடவுளை வணங்கச் சொல்கிறார்களா? கிருஷ்ணன் கோவில் வாசலில் பேசிக்கொண்டு நின்றவர்கள் ஜாக்கிரதே ஜாக்கிரதே என்ற அறிவிப்போடு குடல் தெறிக்க இரண்டு பேர் கையில் தண்டத்துடன் ஓடி வருவது கண்டு பின்னிடுகின்றனர். பிடிக்க வந்தால் ஓடிப் போக முடியும் ஜாக்கிரதையான தூரத்தில் கூட்டமாக நிற்கின்றார்கள். 

மிளகுராணி சென்னபைரதேவியவரு – ஜெயவிஜயிபவ, மிளகு ராணி – தீர்க்காயுஷ்மன் பவ. கோஷங்களோடு சென்னா மகாராணி கிருஷ்ணன் கோவில் வாசலில் ராஜரதத்திலிருந்து கீழே இறங்கினாள். மொணமொணவென்று மக்கள் குரல் சேர்ந்து பிணைந்து மங்கி ஒலிக்கிறது. யாரோ குரலை வேண்டுமென்றே உயர்த்துகின்றனர் –

“சமணர்களுக்கு என்ன தான் வேண்டுமாம்? அரசு, விவசாயம், தொழில் என்று சகலமானதிலும் முதல் இடத்தில் அவர்கள் தான் இருக்கிறார்கள். அதெல்லாம் போதாமல் சிவன் கோவிலையும் கிருஷ்ணன் கோவிலையும் வெடிவைத்துத் தகர்க்கக் கிளம்பியிருக்கிறார்கள்”

சென்னா மகாராணி சற்றே முகம் சுளித்தபடி கோவில் படிகளை நோக்கி நடக்கின்றாள். மலர்ந்த வதனமும் நிறைந்த சிரிப்புமாகத்தான் ஜனக் கூட்டங்களை எதிர்கொள்வாள். கைதட்டும் ஜயவிஜயீபவவுமாக அவளை வரவேற்கும் குரல்கள் எங்கே? அவை இருக்கின்றன தான். சென்னா முகம் மலரும் போது அவையும் திரும்பி வரும். வெடி விபத்துகள் காணாமல் போகும்போது அது நடக்கும். வெடிகள் பற்றிய நினைவை கோவில் வாசலில் விட்டுவிட்டு கிருஷ்ணசாமியிடம் சரண் புகுந்திட விசாலமான கோவில் கபாடங்களைத் திறக்கச் செய்து உள்ளே நடந்தாள் சென்னபைரதேவி ராணி. கருவறைக் கதவுகளும் தாந்திரீக சம்பிரதாயத்தில் சார்த்தி வைத்து கிருஷ்ணனை முதுகுப் புறம் மட்டும் காட்டும் இரண்டாவது உத்தர கன்னடக் கோவில் இது. ஜெர்ஸூப்பா நகரை நிர்மாணித்தபோதே முதலில் கம்பீரமாக எழுந்தது சிறியதென்றாலும் அருளும், புனிதமும் சேர்ந்து அடியார்களை மீண்டும் மீண்டும் தரிசனம் செய்து கொள்ள ஈர்க்கும் கோவில் ஜெர்ஸுப்பா கிருஷ்ணன் கோவில்.

நிறைவான தரிசனம் முடிந்து திரும்பி வந்து ராஜரதத்தில் ஏறும் முன் எதிரே நின்ற கூட்டத்தை ஒரு வினாடி கூர்ந்து பார்த்தாள் சென்னா. முதல் வரிசையில் துருதுருவென்று பார்த்துக் கொண்டிருக்கும் பச்சைப் பட்டுப் பாவாடையும் வெண்மை பரந்த, கைப்பக்கம் புஸ்ஸென்று அழகாக நிற்கும் மேல்சட்டையுமாக நின்ற பத்து வயதுச் சிறுமி மேல் அவள் பார்வை விழுந்தது. அந்தப் பெண்ணைக் கை சுண்டிக் கூப்பிட்டாள் சென்னா. பயமும் ஆர்வமும் அழகான குறுஞ்சிரிப்புமாக அந்தப் பெண்குழந்தை சென்னா பக்கத்தில் வந்தது. குனிந்து தலை தடவி கன்னத்தைத் தடவி பேரு என்னடா செல்லம் என்று கேட்டாள் மிளகு ராணி. ராதிகா என்றாள் அந்தச் சிறுமி. என் பேர் என்னன்னு தெரியுமோ உனக்கு? சிறுமி சற்றே யோசித்துவிட்டு, மகாராணி மிளகு தேவி என்றது. சென்னா பலமாகச் சிரிக்க, கூட்டமே கூடச் சிரித்தது. குழந்தை சொன்னா சரியாத்தான் இருக்கும். சிரிக்காதீங்க யாரும் என்று சென்னா கூட்டத்தை நோக்கிச் சொல்ல, மிளகு ராணி வாழ்க, போர்த்துகீஸிலும் சேர்ந்து ஒலித்தது. அந்தக் கூட்டம் சென்னா என்ன சொன்னாலும் கேட்கத் தயாராக இருந்தது. வெடிவிபத்துகளுக்குப் பின் என்ன இருக்கிறது என்று நிதானமாகப் பேசி முடித்தாள் சென்னா. அவள் நைவேத்தியத்துக்குக் கொண்டு வந்த பழங்களும் அரண்மனையில் தயாராக்கிய இனிப்புகளும் கூட்டத்தில் பிரசாதமாக விநியோகிக்கப்பட்டன. அவள் பேசி முடித்தபோது அந்தக் கூட்டத்தில் சென்னபைரதேவியின் நேர்மையையும் அரசாளும் திறமையையும் யாரும் சந்தேகிக்கவில்லை.

பிரஜாபதி வருஷம் ஷ்ரவண மாதம் ஜெரஸோப்பா சதுர்முகவசதி சதுர்த்தி

ஜெரஸோப்பா சமண பிரார்த்தனைக் கூடத்தில் போன மாதம் அக்‌ஷ்ரானந்தாவின் பளிங்குச் சிலை நிறுவப்பட்டது. திசைகளைப் புனித ஆடைகளாக உடுத்திய கோலத்தில் தீர்த்தங்கரரின் விக்ரஹம் நிர்மாணிக்கப்பட்டு தினமு ஆயிரக்கணக்கான பக்தர்களால் வணங்கப் பட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று சதுர்முகவசதி இரவு ஒன்பது மணிக்கு வழக்கம்போல் சத்சங்கம் முடிந்து பத்திரமாகப் பூட்டப்பட்டு வெளிக்கதவும் பூட்டப்பட்டது. இன்று காலை ஏழு மணிக்கு வழக்கம்போல் வசதி திறக்கப்படும் நேரத்தில் அங்கே நிர்வகிக்கும் ஸ்வேதாம்பர அனந்தரும் ராகூலரும் அதிர்ச்சியடையும்படி கதவெல்லாம் மட்டமல்லாக்காகத் திறந்து கிடக்க, அக்‌ஷ்ரானந்தாவின் கருங்கல் விக்ரகம் பீஜத்தில் உளியால் சிதைக்கப்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருந்தது. எனினும் கருங்கல் விக்ரகம் என்பதால் சேதம் ஏதுமில்லை. ஊரில் சமண மதத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பங்கள் சாரிசாரியாக வந்து கைபிசைந்து துயருற்று, ஆனந்தருக்கு பசுவின் பால் கொண்டு அபிஷேகம் செய்து பிரசாதமாகத் திருப்பி அளிக்கப்பட்டது.

பவ்ய ஜீவன்களாக ஒரு புழு பூச்சிக்குக் கூட துன்பம் வரவழைக்காமல் வாழ்க்கையைக் கடத்தும் சாதுக்களான இல்லறத்தார் சமண மதத்தினரையும், புனிதத் துறவிகளையும் சரீரத்திலும் மனதிலும் காயப்படுத்த பெரும்பான்மை வைதீக சமய இந்துக்கள் முன்கை எடுப்பது துரதிருஷ்டவசமானது என்று வருந்துகிறது ஜெரஸூப்பா ஜைன சபா. பேரரசி சென்னபைரதேவி மகாராணியவரு அவர்களின் நீண்ட புகழுக்குரிய ராஜ்ய பரிபாலனத்துக்குக் களங்கம் கற்பிக்க யாரோ செய்யும் முயற்சிகள் வெற்றி பெறாது போக ஜீவனானந்தா அருளைத் தேடுவதாக சபா அறிவிக்கிறது. 

****

Series Navigation<< மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பதுமிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.