மித்ரோ மர்ஜானி – 8

This entry is part 8 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

சுஹாக்வந்தி எழுந்து உட்கார்ந்து கொண்டாள். பெருமூச்சு விட்டபடியே மாமியாரைப் பார்த்து,  மெல்லிய குரலில், ” அம்மா,  நம் சிற்றறிவை வைத்துக்கொண்டு,  அடுத்தவர்கள் மனதில் இருப்பது பொய்,  குற்றம், கள்ளம், கபடம் என்று முடிவு செய்ய நாம் யார்? என் ஓரகத்தி வெளிப்படையானவள். ஒரு சமயம் பால் போல வெள்ளை. மறுசமயம் இருட்டுக் கருப்பு. அவளுடைய மனதில் இருப்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால், அவளது உடலிலோ ஆயிரம் பானைகளை உடைத்துக் குடித்தாலும் தீராத தாகம் விரவியிருக்கிறது” என்றாள்.

” மருமகளே அவள் உன் கொழுந்தனை பற்றி பேசுவதை எல்லாம் கேட்டால் என் உடலும் மனமும் கொதிக்கிறது.”

எல்லாவற்றையும் புரிந்து கொண்டு சுஹாக் மாமியாருக்கு தைரியம் கூறினாள். “அம்மா,  உங்களுக்கு எதிரே வாய் திறந்து நான் எப்படி பேச? ஏதோ என் மனதில் பட்டதை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்,” என்றாள்.

தனவந்தியின் முகம்  கோபத்தில் சிவந்தது. பிறகு நீண்ட பெருமூச்சு விட்டு, “மகளே! இரவும் பகலும் இறைவனிடம் இவளது பேச்சை பொருட்படுத்தாது கடந்து போகும் பொறுமையை என் மகனுக்கு தரும்படியும், என் மருமகளுக்கு நல்ல புத்தியையும் குல கௌரவத்திற்கு கேடு வராமல் நடக்கும் பண்பையும் தரும்படித்தான் வேண்டிக்கொள்கிறேன்,” என்றாள்.

மருமகள் கொட்டாவி விடுவதைப் பார்த்து தனவந்தி எழுந்து நின்றாள். போர்வையை சரியாக இழுத்து மூடி விட்டு, போகும்போது, ” எந்த கவலையும் வேண்டாம். நிம்மதியாக தூங்கு சுஹாக்வந்தி!  நான் போய் பன்வாரியை அனுப்புகிறேன். அவன் தன் அப்பாவுடன் ஏதோ கதை பேசிக் கொண்டிருக்கிறான்,” என்றாள். வாயில் வரை போன தனவந்திக்கு சுஹாக்வந்தி, ” அம்மா,” என்று பின்னாலிருந்து குரல் கொடுத்தாள் .

கணபதி திரும்பி மருமகளிடம் வந்தாள். “ஏதாவது வேண்டுமா மகளே?” என்று கேட்டாள்.

சுஹாக் தலையசைத்து, ” இல்லை அம்மா. ஒன்றும் வேண்டாம்,” என்றாள். பிறகு,  தயங்கித் தயங்கி,  ” ஏதோ நீங்கள் கேட்டீர்கள்,  நானும் பதில் சொல்லிவிட்டேனே தவிர, எனக்கு என்ன தோன்றியது என்றால், நடுமருமகள் மித்ரோவின் நடத்தை  குறித்து கருத்து சொல்லவோ, அவளை எடை போடவோ நான் யார்?” என்றாள்.

தனவந்தி தன் மருமகளைப் பார்த்துக் கொண்டே நி ன்றாள். மனதில் அவள் மீது பொங்கிய பாசத்தில் கண்களில் தானாகவே கண்ணீர் வழிந்தது. கையை நீட்டி மருமகளின் தலையைத் தடவி ஆசி அளித்து, ” உன் மனது எந்த அழுக்கும் இன்றி நிர்மலமாக இருக்கிறது சுஹாக்வந்தி. கடவுள் உன்னை பல்லாண்டு நோய் நொடியின்றி நன்றாக வாழ வைக்க வேண்டும்,” என்றாள்.

அறையை விட்டு வெளியே வந்த தனவந்தி முற்றத்திலிருந்து பன்வாரிக்கு குரல் கொடுத்தாள்.” மகனே பன்வாரி, இன்னுமா உங்கள் பேச்சு முடியவில்லை. உலகத்து நிறை குறைகளை எல்லாம் இன்றைக்கே பேசித் தீர்ந்து விடப் போகிறீர்களா? உன் அப்பாவுக்குத் தான் நேரம் காலம் தெரியாது. உனக்குமா? அங்கே என் மருமகள் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்,” என்றாள்.

பன்வாரி எழுந்திருப்பதை பார்த்து குர்தாஸ் சிரித்தார். கருப்பு வெள்ளை மீசைக்குக் கீழிருந்து, நகைச்சுவை பொங்கி வந்தது.

“பன்வாரி,  ஊர் உலகமெல்லாம் மாறினாலும், உன் அம்மாவின் வாயில் இருந்து வெளிவரும் சொல் அம்புகள் மட்டும்  என்றும் மாறவே மாறாது,” என்றார்.

கம்பளிச் சால்வையை போர்த்திக் கொண்ட பன்வாரி, அம்மாவைப் பார்த்து சிரித்தபடி,” அப்பா, கெட்டித் தோல் கொண்டவர்களால் மட்டுமே அம்மாவின் அம்புகளை எதிர்கொள்ள முடியும். ஆனால்,  உள்ளத்திலிருந்து வரும் அம்மாவின் பேச்சுக்கு சொக்கத்தங்கம் கூட ஈடாகாது,” என்றான்.

மகன் சொன்னதைக் கேட்டு தனவந்தி மனதுக்குள் மகிழ்ந்தாள். செல்லமாக அவன் முதுகில் தட்டி, ” அப்பாவுக்கும் மகனுக்கும் வேறு வேலையே கிடையாதா? எப்போது பார்த்தாலும் என்னை கிண்டல் செய்வது தான் வேலையா,” என்று போலியாக அலுத்துக் கொண்டாள்.

பன்வாரிலால் நடையை எட்டிப் போட்டுத் தன் அறையை நோக்கிச் செல்கையில், முற்றத்தைக் கடந்து செல்வது அவளுடைய பிள்ளை இல்லை, ஏதோ ராஜகுமாரன் என்பது போல, தனவந்தி, அறை வாயிலில் நின்று கொண்டு,  கண் மலர, அவனைப் பார்த்து அகமகிழ்ந்தாள.

மகன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்வதைப் பார்க்கும் போது,  அந்த நாள் ஞாபகங்கள் கனவைப் போல மனதில் விரிந்தன. ஆம், அன்றுதான் அவன் அவளது கர்ப்பத்தில் வந்தமர்ந்தான். நேற்று நடந்தது போல் இருக்கிறது. அதற்குள் முப்பது வருடங்கள் ஓடிவிட்டன. தனவந்தி புன்னகைத்தாள்.

அறியாப் பருவம் அது. உலகத்தின் நீக்குப் போக்கு அறியாத வெள்ளந்தி வயது.

ஒரு நாள் காலை, அவள் எதுவும் சாப்பிட பிடிக்காமல் தவித்த போது, அவளுடைய கணவன் வீட்டையே இரண்டாக்கி விட்டான்.

“எளிதில் ஜீரணம் ஆகாத பொருள் எதையோ நீ சாப்பிட்டிருக்கிறாய் வந்தி. அம்மாவிடம் கேட்டு ஓமமோ அல்லது  சூரணத்தையோ சாப்பிடு,” என்றார் குர்தாஸ்.

அம்மா அருகில் கூப்பிட்டு விசாரித்த பின், சிரித்துக் கொண்டே, ” குர்தாஸ், உன் சட்ட திட்டங்களை எல்லாம் இனி உன்னோடு வைத்துக் கொள். நீ அதிகாரம் செலுத்திய நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டன. இனி நீ உன் ஆட்டத்தை குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்,” என்றாள்.

வாசலில் சிலை போல் நின்று கொண்டிருந்த தனவந்தியை குர்தாஸ் குரலிட்டு அழைத்தார்.” எவ்வளவு நேரம் வீட்டையும் முற்றத்தையும் பார்த்துக் கொண்டிருப்பாய்? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வீட்டின் வெளிச்சமே நடுமருமகள் மித்ரோ தான். என்னதான் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று அவள் பல சமயம் காரசாரமாக பேசினாலும், ஒரு பட்டாம்பூச்சியை போல இங்கும் அங்கும் பறந்து கொண்டு இருந்தாள். பறவைக்கூட்டம் போல கீச்சிட்டு குதூகலித்துக்கொன்டிருந்தாள்.”

குர்தாஸ், மருமகளைப் புகழ்ந்ததை மனதின் ஒரு மூலையில் ஒதுக்கிவிட்டு,  கதவை அடைத்தாள். 

விளக்கை அணைத்து விட்டு கட்டிலில் படுத்ததும்,  கவலை தோய்ந்த குரலில், “மருமகள்கள் ஒருபுறம் இருக்கட்டும். நமக்கு இருப்பதோ மூன்றே பிள்ளைகள். அதிலும் ஒருவன் வெளியே போய் விட்டான். வீடு எப்படி கலகலப்பாக இருக்கும்?” என்றாள்.

குர்தாஸ் குல்ஜாரியைப் பற்றிய பேச்சை தவிர்க்க விரும்பினார். தனவந்தி ஒரு முறை இந்தப் பேச்சை ஆரம்பித்தால் அது மகாபாரதம் போல நீண்டு கொண்டிருக்கும் என்றும் முந்தையது பிந்தையது எல்லாமும் விவாதிக்கப்படும் என்றும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

பேச்சை மாற்றி, “தனவந்தி உனக்கு தூக்கம் வரவில்லை என்றால் கொஞ்ச நேரம் என் அருகே வந்து அமர்ந்து கொள்,” என்றார்.

தனவந்தி எழுந்து வந்து அவர் அருகே அமர்ந்து கொண்டு, அவரது காலைப் பிடித்து விடத் தொடங்கினாள்.

சற்று நேரத்தில் மனம் லேசாகி, “நினைவிருக்கிறதா உங்களுக்கு? பன்வாரி பிறந்த போது, அம்மா கூடை கூடையாய் லட்டு பிடித்து எல்லோருக்கும் கொடுத்தார்!” என்றாள்.

மனைவியின் கவனம் திசை திரும்பியதில் குர்தாஸ் மகிழ்ந்தார்.”புரிந்து விட்டது தனவந்தி, புரிந்து விட்டது. நீ எதற்கு அடி போடுகிறாய் ஏன் பழைய விஷயங்களை ஞாபகப்படுத்துகிறாய் என்று எனக்கு நன்றாக புரிந்து விட்டது. பேரன் பிறந்தால் அதைக் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறாய். உன் மனது போலவே ஆகட்டும். அம்மா செய்ததை விட இரண்டு மடங்கு அதிகம் லட்டு செய்து நீ எல்லோருக்கும் கொடுத்து மகிழத் தடையேதுமில்லை தனவந்தி!” என்றார் குர்தாஸ்.

இதைக் கேட்டு தனவந்திக்கு புல்லரித்தது. பிறவிப் பயனை அடைந்து விட்டது போல மகிழ்ந்தாள். தேவனை ஒத்த குணம் கொண்ட தன் கணவனின் வாயிலிருந்து தானாக வெளிவந்த சொற்கள், நிச்சயம் உண்மையாகும் என அவள் திடமாக நம்பினாள். பிறகு, “பொறுமையாக இரு தனவந்தி, இவ்வளவு சந்தோஷத்தை ஒரே நேரத்தில் எப்படி ஜீரணிப்பாய்?” என்று தன்னைத்தானே எச்சரித்துக் கொண்டாள்.

எதையோ சொல்ல முற்பட்டபோது கணவன் ஏற்கனவே ஆழ்ந்து தூங்கி விட்டதை பார்த்தாள். போர்த்திருந்த போர்வையை அகற்றி விட்டு எழுந்திருக்க முயற்சி செய்தபோது, தூக்க கலக்கம் எதுவும் இன்றி கணவன் அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தாள்.

குர்தாஸ், விட்ட இடத்திலிருந்து பேச்சை மறுபடியும் துவங்கினார்.”தனவந்தி, இந்த வீடு குடும்பம் என்பதெல்லாம் ஒரு மாயப் பூந் தோட்டம்! ஒருமுறை பூத்துக் குலுங்க வேண்டியதுதான், இந்த நன்றி கெட்ட மனிதன் இறைவனிடம் தொடர்ந்து எதையோ பிச்சை எடுத்துக் கொண்டே இருப்பான்! சின்ன விஷயம்தான்,  நான் சொல்லப்போவது கவனமாக கேள்!  நாம் உயிரோடு இருக்கும்போது ஏதோ கொஞ்சம் தானம் தர்மம் புண்ணிய காரியங்கள் செய்கிறோமே அதுதான் நம் கூட வரும். நாம் இந்த பூமியில் பிறந்து வாழ்ந்ததற்கான பலனும் அதுதான்,” என்றார்.

             *****

தாமரை வண்ண ஆடை அணிந்து, காற்றில் அலைந்து பறக்கும் துப்பட்டாவுடன், மித்ரோ தன் கணவன் சர்தாரி லாலுடன்,  குதிரை வண்டியிலிருந்து இறங்கிய போது, நூர் மெஹல்வாசிகள் ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த மூன்று மாடி கட்டிடத்தின் சொந்தக்காரியான பாலோவின் ஒரே மகள் மித்ரோ, சிரிப்பும் சந்தோஷமுமாக,  தன்னை மணமுடித்த கணவனுடன் பிறந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள். பஜாரின் இருபுறமும் இருந்த கடைகளில், கடைக்காரர்களின் கையில் இருந்த தராசு நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. வழியெங்கும்,  தெரிந்தவர்கள் கூடி நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் மனம் ஏக்கப் பெருமூச்சு விட, சிலர் மனமோ துள்ளி குதித்தது.  சிலருக்கு மார்பு படபடத்தது. சிலர் பாலோவின் செல்ல மகளை கண்களால் விழுங்கி விடுவது போல பார்த்தனர். கையால் துணியை முழம் போட்டுக் கொண்டிருந்த அவதார், தன் பக்கத்துக் கடைக்காரன் ரவேல் சிங்கிடம், “நண்பா ரவேல் சிங்! பனிக்காலம் முடிந்து வசந்தம் வந்துவிட்டது பார்” என்றான்.

ரவேல் சிங் கண்ணடித்தபடியே, ” ஓய் அவதார் சந்த்!  உனக்கு ஏற்கனவே பணி ஆகாது. நண்பனே, நெருப்பு மூட்டி தன் எலும்புகளை சூடாக்கிக் கொள். இல்லாவிட்டால் நாளை களத்தில் எப்படி இறங்குவாய்?” என்று கிண்டலடித்தான்.

அவர்களது விஷம பேச்சு காதில் விழ,  சர்தாரிலால் கோபத்தில் பற்களை நல நறவென்று கடித்துக் கொண்டு,  குனிந்த தலையுடன், மாமியார் வீட்டுத் தெருவை கடக்க முயற்சித்தான்.

மிட்டாய் கடை பேலி ராமும், புதிதாய் ஜிலேபி களை பொரித்தெடுத்த வாறே,  சும்மா இருக்காமல், தன் பங்குக்கு, “நூர் மஹலில் ஒரே ஒரு ஆசனம் தான். ஆனால் ஜன்னல்களோ நூறு நண்பர்களே! ஆனால் பேலி ராமுக்கு என்ன கவலை? அவனுடைய வாணலியிலிருந்து,  ஜிலேபி நிரம்பிய தொன்னைகள் அங்கே போய்க் கொண்டே இருக்கும்! இனி அவனுடைய வியாபாரம் சூடு பிடிக்கும்! என்றான்.

தெருமுனையில் கடை வைத்திருக்கும் லக்கி ஆசாரி, ஊது குழலால் நெருப்பை ஊதியவறே, பக்கத்துக் கடை ரவுடி மத்தியிடம், ஓ மத்தி, நீ உன்னுடைய ரம்பம்,  அரிவாள் எல்லாவற்றையும் சாணை பிடித்து கூராக வைத்துக்கொள்.

போட்டி நிறைய இருக்கும் போல தோன்றுகிறது” என்று பொடி வைத்து ஊதினான்.

மனதுக்குள் சிரித்தவாறே, மித்ரோ, கணவனை உரசியவாறு நடந்து வந்தாள். அவள்  நடந்து வருவதை பார்த்தால், குப்பையும் கூளமும் உள்ள தெருவில் நடக்காமல், மாளிகையைச் சுற்றி இருக்கும் ராஜபாட்டையில்  அவள் நடப்பது போல இருந்தது.

வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த மீசைக்கார பயில்வான், அவர்களை கை கூப்பி வரவேற்ற அதே நேரத்தில், உலகமே அறிந்த அவளுடைய தாயார் மாடிப்படிகளில் பாய்ந்து இறங்கி வந்தாள்.  மித்ரோ ஒரே தாவலில், அம்மாவை இடப்புறமும் வலப்புறமும் அணைத்து, ஆரத் தழுவிக் கொண்டாள். அம்மாவின் மோவாயை வாஞ்சையோடு பிடித்துக் கொண்டு, சிரித்து,” ஆஹா, தங்கம் போல் பளபளக்கும் என் மகாராணி அம்மாவே! எப்போதிலிருந்து கிரீடம் தரிக்க ஆரம்பித்தீர்கள்?” என்றாள்.

வாட்ட சாட்டமான உடல்வாகு கொண்ட பாலோ, மித்ரோவை இறுக அணைத்துக் கொண்டு, கற்கண்டைச் சுவைப்பவளைப் போல வெகு நேரம் உச்சி மோந்தாள். ”என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது,” என்று கூறிப் பரவசமடைந்தாள். அருகில் நின்றிருந்த மாப்பிள்ளையை பார்த்து, “மாயக்காரியே, கொஞ்சம் நகர்ந்து கொள் என் மருமகனையும் நான் பார்க்க வேண்டுமா?” என்றாள்.

சர்காரிலால் குனிந்து தன் மாமியாரின் கால்களைத் தொட்டு வணங்கிய போது, ” ஆயிரம் ஆண்டுகள் இளமையோடும் ஆரோக்யத்துடனும் வாழ் மகனே,” என்று பாலோ அவனை மனதார வாழ்த்தினாள்.

கும்மாளமும் சிரிப்பு மாக தாயும்மகளும் மாடிப்படி ஏறிச் செல்லும் போது, பாலோவின் மஹல், குயில்கள் கூவும் வசந்த கால தோட்டத்தைப் போல ரம்யமாக இருந்தது. தாயும் மகளும் மாறி மாறி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

கைகளை நீட்டிச் சோம்பல் முறித்த மித்ரோ, தன் தாயை குழந்தைப்பருவத் தோழியை பார்ப்பது போல பாசத்துடன் பார்த்தாள். பிறகு, சிரித்தபடியே, “அம்மா உங்கள் இதயப் புறாவை எந்த கூட்டில் அடைத்து வைக்கப் போகிறீர்கள்? அது தினமும் புதிது புதிதாய் தீனி கேக்குமே என்று விஷமத்தனமாக கேட்டாள்.

பாலோவின் உதடுகளில் வெளிறிய புன்னகை தவழ்ந்தது. மகளின் வாளிப்பான உடற்கட்டைப் பார்த்து கொண்டே, ” உன்னுடைய இனிப்பான பேச்சைக் கேட்காமல் நான் தவித்துப் போய் விட்டேன் மித்ரோ” என்றாள்.

மாப்பிள்ளையின் வருகையை ஒட்டி,  மரியாதை செய்யும் விதமாக, பாலோவின் சமையலறையில் விதவிதமான பலகாரங்கள் தயாராயின. அவற்றின் இனிய நறுமணம் காற்றில் கலந்து அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்களின் நாசியை  துளைத்தது.

விலை உயர்ந்த பட்டு  ஆடையணிந்து, தூய வெள்ளை நிற  உயர்தர சால்வையைப் போர்த்திக்கொண்டு,  தன்னருகே அமர்ந்து உணவு பரிமாறும் மித்ரோவின் தாயை, தன் மாமியார் என சர்தாரிலாலால் நினைக்க முடியவில்லை.

வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும், கவர்ச்சி மிக்க பெண்ணாகத்தான் அவளை அவனால் பார்க்க முடிந்தது.  பலமான  கருத்த கைகளில் கல் வைத்த வளையல்கள்! காதுகளில் ஊஞ்சலாடும் நீண்ட குண்டலங்கள்!

தன் கணவனை ஒட்டி உரசிக்கொண்டு உட்கார்ந்திருந்த தாயைப் பார்த்து மித்ரோவுக்கு பாம்பு தீண்டியது போல இருந்தது.

தன்னுடைய சிறு கண்ணசைவில், ஒன்றல்ல ஆயிரம் ஆயிரம் ஆண்களை ஆட வைத்திருக்கிறாள் இந்த பாலோ. ஆனால் ஒரு கணவனுடன் சேர்ந்து வாழ கொடுத்து வைக்காத துரதிஷ்டசாலி அவள்.

மனதில் எழுந்த எண்ணத்தை மறைத்துக் கொண்டு,  பாலோ,  மகளிடம்,” நீ எப்போது இப்படி மாறினாய்? தன் கணவனோடு ஒரே தட்டில் சாப்பிட மாட்டாயா?” என்று கேட்டாள்.

மித்ரவால் தாயின் மனதை முழுவதுமாக படிக்க முடிந்தது.

புருவத்தை உயர்த்தி, “அம்மா நான் தான் அவருடைய நல்லது கெட்டதில் எப்போதும் பங்கெடுத்து கொள்கிறேனே! வேண்டுமானால் நீ இன்று …..என்று அம்மாவைச் சீண்டினாள்.

அம்மாவும் மகளும் இப்படி ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்வதைப் பார்த்து சர்தாரிக்கு வெட்கமாக இருந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் சீண்டுவதும் சண்டையிடுவதும் அவனுக்கு புதிதாக இருந்தது.

ஒரு வழியாக சாப்பிட்டு விட்டு எழுந்த கணவனை நோக்கி மயக்கும் பார்வை ஒன்றை வீசி, “நீங்கள் போய்  படுங்கள் நான் எஞ்சி இருப்பதை சாப்பிட்டு விட்டு இதோ ஒரு நொடியில் வந்து விடுகிறேன்” என்றாள்.

எழுந்து சென்ற சர்தாரிலாலின் கட்டுமஸ்தான உடலை பார்த்து தன் தாயார் மனதுக்குள் பெருமூச்சு விடுவதை, மித்ரோ, பார்த்தே புரிந்து கொண்டாள். தட்டிலிருந்து ரொட்டியை துண்டு துண்டாக விண்டு அம்மாவின் வாயில் இட்டவாறு, மித்ரோ,  தான் சொல்ல நினைத்ததை கனகச்சிதமாகக் கூறினாள். “பீபோ, இந்த ஏழையோடு ஏன் போட்டி போடுகிறீர்கள்? உங்களுக்குத்தான் வாழ்க்கையை கொண்டாட தினமும் புத்தம் புதிதாய் கிடைக்கிறதே! ஆனால், பாவம் மித்ரவுக்கோ தினமும் ஒரே ஆளுடன் தான் வாழ்க்கையை கழிக்க வேண்டி இருக்கிறது,” என்றாள்.

கணவனைக் குறித்து பெருமைப் பட்டுக் கொள்ளும் மித்ரோவின் பேச்சை கேட்டதும் பாலோவின் வயிறு எரிந்தது. தன்னுடைய எண்ணத்தை மனதில் மறைத்துக் கொண்டு, வெளியில் போலியாக அன்பு செலுத்துவது போல நடித்து, ” என் அப்பாவி மித்ரோ,  எனக்கென்னவோ உன்னை பார்த்தால், நீ ’பசியிலும், தீராத தாகத்திலும்’ தவிப்பது போலத்தான் தெரிகிறது,” என்றாள். பிறகு, கைதேர்ந்த வேடிக்கை காட்டும் வீரர்களைப் போல, கண்களை சுழற்றி,  காயை நகர்த்தினாள்.”உனக்கு விருப்பம் இருந்தால் உன் தோட்டத்தை சீர் செய்ய ஒரு தோட்டக்காரரை ஏற்பாடு செய்யவா?” என்றாள்.

மித்ரோவின் மனம் சஞ்சலப் பட்டது. கணவனின் மானம் மரியாதை பற்றிய நினைப்பு காற்றில் பறந்தது. கண்கள் மோகத்தில் ஒளிர்ந்தன. அவளது மார்பகங்கள் விம்மி எழுந்தன. அம்மாவின் கண்களை கூர்மையாக பார்த்து, மெதுவாக, ” ” அய்யோ பீபோ, உங்கள் வாயில் நெய் சர்க்கரை போட வேண்டும். ஆனால் உன் சோம்பேறி மாப்பிள்ளையை என்ன செய்வது?” என்றாள்.

நெருங்கிய தோழியிடம் பேசுவது போல,  பாலோ மித்ரோவைக் கிள்ளி, “அந்தக் கவலை உனக்கெதற்கு? அதை நீ என்னிடம் விட்டுவிடு. இதைவிட பெரிய பெரிய புலிகளை எல்லாம் உன் அம்மா சமாளித்து இருக்கிறாள்,” என்றாள்.

மாலை நேரத்தில் வெங்காய நிறத்தில் ஆடை அணிந்து, நேர்த்தியாக ஒப்பனை செய்து கொண்டு தன் முன் வந்து நின்ற மித்ரோவை சர்தாரிலால் ஆச்சரியத்துடன்  கண்ணிமைக்காமல் பார்த்தான்.

கால்களில் மெட்டி ஒலிக்க, இடுப்பை ஒயிலாக அசைத்தபடி, கையில் பித்தளை கூஜாவுடன் அறைக்குள் வந்த மித்ரோ, சொர்க்கலோகத்து அப்சராவை போல காட்சியளித்தாள். இடுப்பை ஒசித்து கையில் இருந்த கூஜாவை மேஜையின் மீது வைத்தாள். மயக்கும் கண்களால் தன் கணவனை கூர்ந்து பார்த்து, குறும்பாக சீண்டினாள்.” என் அன்புக் காதலனே! என்னை விழுங்கிவிடுவது போல ஏன் பார்க்கிறீர்கள்? உங்கள் மித்ரோவை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா?” என்றாள்.

இத்தர் மற்றும் இதர சில நறுமண திரவியங்களின்  அழுத்தமான மணத்தை  உறிஞ்சிய சர்தாரி, கோபத்துடன், “கடைத்தெருவில் சுற்றி தெரியும் பெண்களைப் போல இது என்ன வேஷம்?” என்று கடுகடுத்தான்.

மித்ரோ மணிகள் சிணுங்கியது போல சிரித்தாள். மறுகணமே, கோபத்துடன், ” இது நம் வீடு இல்லை அன்பரே ! உங்கள் பேச்சை அம்மா கேட்டிருந்தால்…..”

சர்தாரி கண்களை குறுக்கிக் கொண்டு,  கோபம் கொண்டவனைப்போல, நெடுநேரம் மித்ரோவை முறைத்துக் கொண்டிருந்தான். பிறகு, அழுத்தந் திருத்தமாக, ” உன் அம்மா முதல் ரக வேசி. அவளிடம் எனக்கென்ன பயம்?” என்றான்.

கணவனின் கோபம் தலைக்கேறிவிட்டதை புரிந்து கொண்ட மித்ரோ, அவன் மீது சாய்ந்து மார்பில் காதை வைத்து, ” ஆஹா! தெரிந்துவிட்டது! எனக்கு நன்றாக தெரிந்து விட்டது! இந்த மனம் என்ன கேட்கிறது தெரியுமா? சிவப்பு சர்பத். சிவப்பு தண்ணீர்.”

சடாரென எழுந்து, கோப்பையில் சர்பத்தை ஊற்றி, கணவனின் உதடுகளுக்கு அருகே வைத்து, ” என் தலைவா! இன்று நீங்கள் இந்த மித்ரோவின் கைகளிலிருந்து, பிரசாதத்தை பெற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்,” என்று கட்டாயப்படுத்தினாள்.

சர்தாரியின் உடலும் மனமும் பரபரத்தன. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு, ” அப்படி என்னடி கட்டாயம்?” என்று அவளை அதட்டினான்.

மித்ரோ, போலியான சோகத்துடன் முகத்தை தொங்க விட்டுக்கொண்டு, “மனிதப் பிறவி என்பது அடிக்கடி கிடைக்குமா? இந்த இரவை மறக்கச் செய்யுங்கள்.  இந்த மித்ரோ நீங்கள் தொட்டு தாலி கட்டிய மனைவி!” என்றாள். பிறகு, கண்களை சுழற்றி, கணவனின் மூக்கோடு மூக்கை உரசி,” இன்று மித்ரோவை சாங்ரூர் ராணி லாலிபாய் என்று நினைத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

மித்ரோவின் வெட்கங்கெட்ட வினோதமாக நடத்தை சர்தாரிலாலைக் கவர்ந்தது. அருகில் அமர்ந்திருந்த மித்ரோவை விழுங்கி விடுவது போல பார்த்தான். கைகளை விரித்து, ” அப்படி என்றால் இங்கே வா லாலிபாய்!  உன்னையும் பார்த்துவிடுகிறேன்,” என்றான்.

 தன்னுடைய திட்டத்தை நினைத்து மித்ரோவின் உதடுகளில் புன்னகை தவழ்ந்தது. துப்பட்டாவை தோளில் தவழவிட்டுக்கொண்டு, தன் கைகளை கணவனின் கழுத்தில் மாலையாக கோர்த்துக்கொண்டு, கோப்பையை வாயில் வைத்து, “அன்பரே, இந்த இளமைக் காட்டாற்றில், பெரிய பெரிய ஆண்கள் எல்லாம் காணாமல் போய் இருக்கிறார்கள்” என்றாள்.

சர்தாரி மூச்சுவிட்டுக் கொண்டே,  ஒவ்வொரு மிடறாகக் குடித்தான். பிறகு ஒவ்வொரு கோப்பையாக கடகடவென குடிக்கத் தொடங்கினான்.

” இன்னும் கொஞ்சம் ஊற்று லலிபாய்! இன்னும் கொஞ்சம்…”

மித்ரோ பட்டாம்பூச்சியை போல பறந்து சிவப்பு திரவத்தை சர்தாரிக்கு ஊற்றிக் கொடுத்து கொண்டிருந்தாள். சர்தாரி பெரியப் பெரிய மிடறுகளாகக் குடித்தான். பிறகு, மித்ரோவின் முகத்தில் பார்வையை பதித்து, போதையில் லேசாக சிரித்தான். “ஊற்றிக் கொடுப்பவள் உண்மையான ராணி லாலிபாய். அப்படி என்றால் இங்கே குடித்துக் கொண்டிருக்கும் நான் யார் சொல்” என்று திரும்பத் திரும்ப கேட்டான்.

சர்தாரியின் அடர்ந்த தலைமுடியை மித்ரோ, தன் வளையல் குலுங்கும் கைகளால் தடவி விட்டு, ” என் மனம் மயக்கும் ராஞ்சாவே! நான் லாலிபாய் என்றால் நீ அவள் உள்ளங்கவர் மாயக் கள்ளன்!” என்றாள்.

தலையை அசைத்து சர்தார் எதையோ சொல்ல வரும்போது, தொண்டை எரியவே, கையால், ” இன்னும் ஊற்று” என்று சைகை செய்தான்.

மித்ரோ ஊற்றிக் கொண்டே இருந்தாள். பிறகு,  கூஜாவை காலி செய்துவிட்டு, கடைசி முறையாக கோப்பையை நிரப்பி, அவன் வாயருகே வைத்து, ” அவ்வளவு தான். இதை குடித்துவிட்டு என் செல்ல ராஜா சமர்த்தாக தூங்குவாராம்” என்றாள்.

சர்காரிலால் போதை ஏறிய கண்களுடன் எதையோ முணுமுணு தான்.” இந்த சர்ப்பத்தில் நீ நெருப்பை கலந்து இருக்கிறாய். நெருப்பை!” என்றபடி, கட்டிலில் தலை குப்புற சாய்ந்தான். மித்ரோ, நிம்மதியாக பெருமூச்சுவிட்டு,  சோம்பல் முறித்தாள். மிகுந்த காதலுடன் தன் இளஞ்சிங்கத்தை பார்த்து, ” அன்பே! நீங்கள் நல்லவர்தான்! உண்மையான ஆண்மகன் தான்! ஆனால் இந்த நெறி கெட்டவளின் மனதில் எரியும் நெருப்பு, வாட்டுகிறதே” என்றாள்.

அறையை விட்டு மித்ரோ வெளியே வந்த போது, அருகே எங்கோ மறைந்திருந்த பாலோ உள்ளே வந்தாள்.

போதையில் மயங்கி கிடந்த மருமகனை ஒரு பார்வை பார்த்து விட்டு, மகளின் கன்னத்தில் செல்லமாகச் சுண்டி விட்டு, “என்னடீ, உன் அடிமையை  வசப்படுத்தி விட்டாயே!  நீ பலே கெட்டிக்காரி தான்” என்று கேட்டாள்.

மித்ரோ, கோபத்துடன் புருவங்களை நெறித்து, உதடுகளை முறுக்கிக் கொண்டு,” அடிமை என்று சொல்லாதே, அம்மா,  சிங்கம் என்று சொல்! சிங்கம்” என்று கர்ஜித்தாள்.

சிறுக்கிக்கு என்ன  மண்டை கனம்! என்று பாலோ மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். ”நாலைந்து நாட்கள் அடிபட்டால்,  யார்  யாருக்கு கணவன்,  யார் யாருக்கு மனைவி என்பது உனக்கு தெளிவாகப் புரிந்து விடும்” என்று மனதுக்குள் கறுவினாள்.

பாலோவின் விஷம் நிறைந்த கண்கள்,  போலியாகப் பாசத்தைக் கொட்டின. அதை,  கெட்டிக்காரத்தனமாக வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்டு,  மகளை வெளியே அழைத்து வந்து ” ஓஹோ! சிங்கமா? அதனால்தான் குகையில் போதையில் மயங்கிக்கிடக்கிறார் போல! சரி நீ வா,  அங்கே உனக்காக இளம் சிங்கங்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

மித்ரோ, தாய் பேசியதை கண் விரியக் கேட்டாள். பதிலுக்கு, கேலியும் கிண்டலுமாக, “அப்படி என்றால் அந்த தாசில்தாரை நீங்களும் இப்படித்தான் “ஒருமாதிரி ” பார்த்திருக்க வேண்டும் இல்லையா?” என்று குத்தலாகக் கேட்டாள்.

 மகளின் குத்தலைப் புரிந்து கொண்டு, அவளது கண்களை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்து, பாலோ, “உன் அம்மாவுக்கு தெரியாத ஆண்களே இந்த இலாக்காவில் கிடையாது” என்று சிரித்து மழுப்பினாள்.

தாயும் மகளும் பேசிக்கொண்டே வராந்தாவைக் கடந்து, விருந்தினர் அறைக்கு செல்வதற்காக மாடியில் முதல் படியில் கால் வைத்தனர். வசந்த காலத் தென்றல் அவளை எங்கோ தூக்கிச் செல்வது போல மித்ரோவுக்கு தோன்றியது. ஆசையிலும் மோகத்திலும் படபடத்த நெஞ்சை ஒரு கையால் பற்றிக் கொண்டு, எதிரில் விரிந்த மாடிப்படிகளையும், கணவன் சர்தாரிலால் படுத்திருந்த அறையின் கதவையும்  மித்ரோ மாறி மாறி பார்த்தாள். அம்மாவை லேசாக தொட்டு, “உன் மாப்பிள்ளை எழுந்துவிட்டார் என்றால்,  இந்த மித்ரோவின் கதி அவ்வளவுதான்” என்று பதட்டத்துடன் கூறினாள்.

” ஆமாம், உன் கணவன் பெரிய மன்மதக்குஞ்சாக்கும்” என்று சொல்லத் தோன்றியதை மனதிலேயே பூட்டிக் கொண்டு,

“என் செல்ல மகளே,  உன் கணவன் தான் கும்பகர்ணனை போல தூங்குபவன் ஆயிற்றே! வேண்டுமானால் நான் அவன் தலைமாட்டில் காவலாக உட்கார்ந்து கொள்ளவா” என்று கேட்டாள்.

மித்ரோ, கலகலவென சங்கீத ஒலி போல சிரித்து, அம்மாவின் இடுப்பில் கிசுகிசு மூட்டி, ” அப்படி எதுவும் செய்து விடாதே பீவோ. என்னால் என் கணவனை இழக்க முடியாது” என்றாள்.

” வாயை மூடடி வாயாடிப்பெண்ணே! அம்மாவிடம் பேசுகிற பேச்சா இது? என்று போலியாக கடிந்து கொண்டாள்.

மித்ரோ அம்மாவை அன்பொழுக பார்த்து, ” அம்மா அவர் எழுந்திருப்பதற்கு முன்பு உங்கள் மகளை எழுப்பி விடுவீர்கள் தானே?” என்று சந்தேகமாக கேட்டாள்.

பாலோ,  மகளின் காதில் எதையோ கிசுகிசுத்து, “போ. போய் ஆனந்தமாயிரு,” என்றாள்.

(தொடரும்)

Series Navigation<< மித்ரோ மர்ஜானி – 7மித்ரோ மர்ஜானி – 9 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.