
மதிய வெயிலில் டி.எல்.எப் வாசலில் நின்று தூண்டிலிட்டு வருமான வரி விலக்குக்காக ஒரே தவணையில் ஒரு லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்யக்கூடிய ஒரு ஆட்டைத் தேடிப்பிடித்து குளிப்பாட்டி மஞ்சள் பூசி அதனிடம் காசோலையை வாங்கிய சந்தோஷத்தைக் கொண்டாட, சனியிரவு பன்னிரண்டு மணிக்குமேல் அறுபடைவீடு முருகன் கோவிலெதிர் யாருமில்லா கடற்கரையில் நண்பர்கள் இருவருடன் அமர்ந்து வாங்கிச் சென்ற முழு பாட்டில் பிராந்தியையும் குடித்துவிட்டு, இரவு நான்கு மணிக்கு திருவான்மியூர் அறைக்கு வந்து படுத்துறங்கி, ஞாயிறு மதியம் பன்னிரண்டு மணிக்கு எழுந்து தனியே கிளம்பிச் சென்று பெசன்ட் நகர் விஷ்ராந்தியில் நெய்ப்பொடி தோசையும் தலைவலி மாத்திரையும் பில்டர் காபியும் சாப்பிட்டு முடித்துவிட்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு காற்று வாங்க பைக்கைக் கிளப்பி கடற்கரைக்குச் செல்லும் பதினேழாம் குறுக்குத் தெருவுக்குள் நுழைந்தான் சேகர்.
தெருவின் எதிர்முனையில் நடுசாலையில் உயரமாய் ஒடிசலாய் நேற்றுத்தான் கல்லூரி முடித்தவன்போல நின்றிருந்த காவலர் உடையணிந்த இளைஞன் யாரோ ஒருவனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்க பிடிக்கப்பட்டவன் திமிறிக்கொண்டிருந்தான். புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை சுண்டி வீசிய சேகர் வண்டியை ஓட்டிச் சென்று போலீஸ்காரன் அருகே நிறுத்தினான்.
“ஏதும் பிரச்சனையா?” என்று சேகர் கேட்டான்.
“இவனைக் கொஞ்சம் புடிங்க சார்,” என்றான் காவலன்.
சேகர் காவலன் அருகே நின்றிருந்தவனைப் பார்த்தான். கசங்கிய சட்டை, அழுக்கு ஜீன்ஸ் பேண்ட், பாதி நரைத்த கலைந்த தலைமுடி, வற்றிய கன்னம், வீங்கிய வயிறு, குளிக்க வைத்து படிய தலைவாரினால் நாற்பது வயது என்று சொல்லலாம். “விடுங்க ஸார், விடுங்க,” என்று அவன் முனகிக் கொண்டிருந்தான். பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகே செல்லும்போதே சாராய நெடி. சேகர் குடிகாரனின் மற்றொரு கரத்தைப் பிடித்துக்கொண்டான்.
“என்ன சார், டிடியா?” என்றான் சேகர்.
“ஆமாம், ஓடப் பாக்கறான்,” என்ற காவலன் தன் கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
சேகர் சாலையோர மணலில் சாய்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடிகாரனின் வண்டியைப் பார்த்தான். தன் வாழ்நாள் முழுவதும் வாங்கிய அடிகளின் தழும்புகளை அப்பப்படியே தாங்கிக்கொண்டு பாவமாய் நின்றது அந்த பழைய ஹோண்டா.
காவலன் கைப்பேசியில் பேசிக்கொண்டிருக்க குடிகாரன் சேகரிடம் சொன்னான், “தலைவரே, கொஞ்சம் அவர்கிட்ட சொல்லி நம்மளை விடச் சொல்லுங்க.”
கைப்பேசியை பாக்கெட்டில் வைத்துவிட்டு சேகரின் அருகே வந்து குடிக்காரனின் சட்டைக்காலரைப் பிடித்துக்கொண்ட காவலன் சொன்னான், “ரொம்ப தாங்க்ஸ். ஐயா வந்துட்டே இருக்கார். நீங்க கிளம்புங்க.”
சேகர் கேட்டான், “மதியம் டிரங்க் அண்ட் டிரைவ் செக் பண்ண மாட்டீங்களே?”
“செக்கிங் எல்லாம் இல்லை. பீச் பக்கத்து செக்போஸ்ட்ல இருந்து டீ குடிக்கப் போயிட்டு இருந்தேன். இந்த ஆளு ரோட்டு நடுவுல பைக்கை நிறுத்த முடியாம சாய்ச்சு வெச்சு நின்னுட்டு இருந்தான். என்னைப் பார்த்ததும் சார், பைக் ஸ்டாண்ட் இங்க பைக்லயேதான் இருந்துது, இப்பக் காணோம். கொஞ்சம் தேடிப் பாக்கறீங்களான்னு கேக்கறான்.”
“கிடைச்சுதா?”
“போதை சார், கழுதை மாதிரி காத்துல உதைச்சுட்டு நின்னான்.”
சேகர் குடிகாரனைப் பார்த்தான். “சார் ஸ்டாண்ட் நிஜமாவே காணோம். ஐயா வந்துதான் கண்டுபிடிச்சார்,” என்று சேகரிடம் சொன்ன குடிகாரன் திரும்பி காவலனைப் பார்த்தான், “ஐயா, சாந்தி சத்தியமா நான் இன்னைக்கு குடிக்கலை. நேத்து ராத்திரிதான் குடிச்சேன்.”
“யோவ், ஊரே நாறுது.”
சேகர் காவலனிடம் கேட்டான், “பாக்க பாவமா இருக்கே, விட்டுடலாம் இல்ல?”
காவலன் சாலையைப் பார்த்துக்கொண்டே “இப்படி குடிச்சுட்டு பீச் ரோட்ல போறான். அங்க குடும்பம் குழந்தைன்னு நின்னுட்டு இருப்பாங்க. வண்டியை யார் மேலயாவது விட்டுட்டான்னா என்ன ஆகும்?”
“அதுவும் சரிதான்,” என்ற சேகர் குடிகாரனிடம் கேட்டான், “வீட்டுல குடிச்சுட்டு வீட்டுலயே இருக்க வேண்டியதுதான? எதுக்கு குடிச்சுட்டு வண்டி ஓட்டறீங்க?”
“தப்புதான், தப்புதான்,” என்ற குடிகாரன் “ஐயா, நான் எப்பவும் குடிச்சுட்டு நடந்துதான் போவேன்,” காவலன் மேல் சாய்ந்தான்.
“யோவ், சும்மா நில்லுய்யா,” என்ற காவலன் சேகரிடம் சொன்னான், “நீங்க கிளம்புங்க சார்.”
“இதுல என்னங்க இருக்கு, பரவாயில்ல” என்ற சேகர் குடிகாரனின் கைகளை இன்னும் இறுக்கிப் பிடித்தான், “உங்களுக்கு எந்த ஊரு?”
“திருச்சி பக்கம்,” என்றான் காவலன்.
“எனக்கு கரூர். பத்து வருஷமா இங்க சென்னைதான்,” என்றான் சேகர்.
காவலன் தலையாட்டி, “ஐயா இப்போ வந்திடுவாரு,” என்றான்.
இரு நிமிட அமைதி. திடீரென குடிகாரன் திமிறி முன்னால் ஒரு அடி எடுத்து வைக்க சேகரின் பிடி நழுவியது. குடிகாரனின் சட்டைக் காலரை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த காவலன் அவனைப் பின்னால் இழுத்தான். குடிகாரன் முன்னே செல்ல முடியாமல் திணற அவன் கையைப் பிடித்து முறுக்கிய சேகர் “த்தா எங்க போற?” என்று அதட்டினான். குடிகாரன், “சார் சார் சார், வலிக்குது… விடுங்க விடுங்க” என்றான்.
“என்ன பண்றீங்க? முதல்ல கையை விடுங்க நீங்க,” என்றான் காவலன்.
“எவ்வளவு தைரியமா தப்பி ஓடப் பாக்கறான் பாருங்க சார்.”
“நீங்க கிளம்புங்க,”
“இதுல என்ன சார் இருக்கு,” என்றான் சேகர்.
“நீங்க கிளம்புங்க சார், நாங்க பாத்துப்போம்” என்று காவலன் சத்தமாகச் சொன்னான்.
தன் வண்டியைக் கிளப்பிய சேகர் பெசன்ட் நகர் பீச்சுக்குச் சென்று வண்டியை நிறுத்திவிட்டு சாலை முடிவில் இருந்த ஒரு டீக்கடைக்குச் சென்று ஒரு சிகரெட் வாங்கிப் பற்றவைத்துக் கொண்டான். மேகம் சூழ்ந்த அந்த மதியத்தில் கடற்கரையில் பெரிய கூட்டமில்லை.
சாலையோரமாக ஒரு காலை இழுத்திழுத்து நடந்து வந்த ஒரு ஒல்லிப் பிச்சைக்காரன் சேகர் முன்னால் நின்றான். சிக்குப் பிடித்த தலைமுடி, நரைத்து கெட்டிப்பட்ட கழுவாத தாடி, அழுக்கு லுங்கி, கிழிந்த பனியன், திறந்து விடப்பட்ட சட்டை. சேகர் எதுவும் பேசாமல் பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாய் எடுத்து பிச்சைக்காரனிடம் கொடுத்தான்.
“ஒரு டீ சொல்லு” என்றான் பிச்சைக்காரன்.
சேகர் கடைக்குள் டீ போட்டுக் கொண்டிருந்தவரிடம் “ஒரு டீ குடுங்க இவருக்கு,” என்று சொன்னான்.
“ஸ்ட்ராங்க் டீ. நல்லா கழுவின பேப்பர் கப்ல,“ என்று கேட்டு டீயை வாங்கிக்கொண்ட பிச்சைக்காரன் சேகரிடம், “வரட்டுமா” என்று சொல்லி ஒரு அடி எடுத்து வைத்தான். திரும்பி சேகரைப் பார்த்து “அந்த சிகரெட். எனக்கு கொடு,” என்று சேகர் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டை கேட்டு வாங்கிக்கொண்டு “வரட்டுமா” என்று சொல்லிவிட்டு காலை இழுத்து இழுத்து முன்னே சென்றான்.
கடைக்கு வெளியே நின்று டீ குடித்துக் கொண்டிருந்த ஒருவர் சேகரிடம், “சாமியார் சக்தியானவரோ?” என்று கேட்டான்.
“யாரு?” என்று சேகர் கேட்டான்.
“தட்சணை குடுத்திங்களே?”
“சார், அவன் பிச்சைக்காரன் சார்”
“இல்ல டீ வாங்கிக் குடுத்தீங்க. அவர் உங்ககிட்ட உரிமையா சிகரெட் வாங்கிக் குடிச்சுட்டு போனார். அதான் கேட்டேன்.”
“நிறைய தடவை இங்க பாத்திருக்கேன்.”
“பழம்பெரும் பிச்சைக்காரன்போல.”
“ரொம்ப நாளாவே இங்க பாத்துருக்கேன். காசு கேப்பான். குடுத்தா வாங்கிப்பான், இல்லைன்னு சொன்னா போயிடுவான். ஆனா மரியாதையா சொல்லணும். வாடா போடான்னு சொன்னா அவனுக்கு கோவம் வந்திடும். இப்படித்தான் ஒருமுறை பாரீன் கார்ல வந்து இறங்கின ஒருத்தன்கிட்ட பிச்சை கேட்டான். அவன் இல்லைன்னு சொன்னதும் பிச்சைக்காரன் இம்மாம் பெரிய வண்டி வெச்சுருக்கயே ஒரு நூறு ரூபா கொடுத்தா என்னவாம்ன்னு கேக்க அவன் போடான்னு இவனைப் புடிச்சு தள்ளி விட்டுட்டான். பிச்சைக்காரனுக்கு வந்துதே கோவம். கார்காரனைப் புடிச்சு திருப்பி நிறுத்தி கட்டிப் புடிச்சுக்கிட்டான். ஒரு கூட்டமே சுத்தி நின்னு வேடிக்கை பார்த்தாங்க, போன்ல வீடியோ வேற எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. கார் டிரைவர் ஓடி வந்து கஷ்டப்பட்டு பிச்சைக்காரனை பிரிச்சுவிட்டான். விலகும்போது பிச்சைக்காரன் கார்காரனுக்கு ஒரு முத்தம் வேற குடுத்துட்டான்,” என்றான் சேகர்.
“வித்தியாசமான பிச்சைக்காரர்தான். கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்,” என்றார் டீ குடித்துக் கொண்டிருந்தவர்.
“அத்தோட முடியலையே. சுத்தி இருந்த பசங்க நடந்ததை வீடியோ எடுத்தாங்க இல்ல, அதை யூட்யூப், பேஸ்புக்னு நெட்டுல போட்டுட்டாங்க. ஊர் பூரா அந்த வீடியோவைப் பார்த்துச்சு, பரப்பிச்சு. கார்ல வந்தவன் யாரோ அமைச்சர் பையன். பிச்சைக்காரர்களுக்கு அன்பு காட்டுவதும் உதவறதும் அவங்க பரம்பரை குணம்னு சேனல் சேனலாப் போய் பேட்டி குடுத்தான். அவனை எம்.ல்.ஏ ஆக்கணும்னு ஆள் வெச்சு டிவிட்டர்ல டிரெண்ட் பண்ணாங்க.”
“ஆனாரா?”
“ஆயிருவான்.”
“இவ்வளவு நல்லது செஞ்ச பிச்சைக்காரனுக்கு அவரு எதுவும் திருப்பி செய்யலையா?”
“நொண்டறான் பாருங்க. அது அவர் ஆளுங்களை விட்டு செஞ்சதுதான்.”
“சரியாப் போச்சு” என்றவர் சிரித்துக்கொண்டே நகர்ந்தார்.
சேகர் கடற்கரைச் சாலைக்கு வந்து நடைப்பாதைச்சுவர் தாண்டி மணலில் இறங்கி கடலை நோக்கி நடந்தான். ஷ்கிமிட் நினைவகத்துக்கு முன்னே இருந்த மணல் மேட்டைக் கடக்கையில் காய்ந்த இலை, சாம்பிராணி இரண்டும் கலந்து எரித்ததுபோல ஒரு வாசம். சேகர் சுற்றிப் பார்த்தான். இரு இளைஞர்கள் மணலில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் கடக்கும்போது அவர்களில் ஒரு இளைஞன் சேகரைப் பார்த்து சிரித்தான்.
“கஞ்சாவா?” என்று சேகர் சிரித்துக்கொண்டே கேட்டான்.
“ப்ரொ, கஞ்சான்னு சொல்லாதீங்க. ஜாயிண்ட்னு சொல்லுங்க. இல்லை கிராஸ்னு சொல்லுங்க இல்லை இல்லை…” என்று யோசித்தான் அந்த இளைஞன்.
“சரி விடுங்க. நல்ல சரக்கா?” என்று சேகர் கேட்டான்.
“இல்லை ப்ரொ, ஹையே இல்ல. சப்புன்னு இருக்கு.”
“எங்க கிடைக்கும்?”
“டிப்போ பக்கத்து சிக்னல் தாண்டி ஒருத்தன் பைக்ல இருப்பான். அவன்கிட்ட கேளுங்க.”
“ஏதாவது சொல்லிக் கேக்கணுமா?” என்று கேட்டான் சேகர்.
“நீங்க போய் நில்லுங்க. அவங்களுக்கு ஆளைப் பார்த்தா தெரியும்,” என்றான் இன்னொரு இளைஞன். சேகருக்கு அவனை எங்கோ பார்த்ததுபோல இருந்தது. அவர்களிடம் விடைபெற்று யோசித்துக்கொண்டே கடலை நோக்கி நடந்த சேகருக்கு சில நிமிடங்களில் ஞாபகம் வந்தது.
மூன்று நாட்களுக்கு முன் இருட்ட ஆரம்பித்திருந்த ஒரு மாலைவேளையில் கஸ்தூரிபாய் நகர் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்து நடைபாதையில் சேகர் சென்று கொண்டிருக்கும்போது எதிரில் நான்கு இளைஞர்கள் ஓடி வந்தார்கள். வழியிலிருந்து விலகி தன்னைக் கடந்து ஓடிச் செல்லும் நால்வரையும் பார்த்துவிட்டு சேகர் முன்னே பார்க்கும்போது இன்னும் இரண்டு இளைஞர்கள் ஓடிவந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் சேகரை நகரச்சொல்லி கைகாட்ட அவன் அருகில் சிரித்துக்கொண்டு ஓடியவன்தான் சற்றுமுன் சேகரிடம் பேசியவன். ஓடி வந்த இளைஞர்கள் பின்னால் சற்று தூரத்தில் ஒரு போலீஸ்காரர் கையை ஆட்டிக்கொண்டே ஓடி வந்தார். சேகர் அருகே வரும்போது ஓட்டம் தோய்ந்து தளர்ந்து நின்றார். அயர்ச்சியில் கால்முட்டியைப் பிடித்து நின்று மூச்சு வாங்கி “புடிக்க சொன்னேன் இல்லை,” என்றார்.
“நீங்க சொன்னது புரியலை சார்,” என்று சேகர் சொன்னான்.
“திருட்டுப் பசங்க.”
“பிக்பாக்கெட்டா?” என்று சேகர் கேட்டான்.
“இந்திரா நகர் ஸ்டேஷன் பக்கத்துல கால்வாய் ஓரமா உக்காந்து கஞ்சா குடிச்சுட்டு இருக்காங்க. புடிக்கறதுக்குள்ளே ஓடிட்டாங்க,” என்ற போலீஸ்காரர் திரும்பி நடக்க ஆரம்பித்தார். சினிமாவில் வருவதுபோல இளைஞர்களில் ஒருவனையேனும் அடித்து நிறுத்தி இருக்கலாமே என்று சேகர் யோசித்தான்.
அலைகளுக்குப் பக்கத்தில் நனையாத மணலில் நின்று சேகர் கடலைப் பார்த்தான். சில குடும்பங்கள் அலையில் கால் நனைத்து நின்று கொண்டிருந்தார்கள். அம்மாக்கள், அப்பாக்கள், நடுவில் கைப்பிடித்து நிற்கும் குழந்தைகள், சிரிப்பு, மகிழ்ச்சி.
சேகர் சுற்றி மணலில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்தான். அங்கங்கே ஜோடிகள். கொஞ்சம் தள்ளி பதின்பருவத்திலிருந்த இரு இளைஞர்களும் அவர்கள் நடுவே ஒரு இளம்பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். சேகர் இரண்டு அடி நகர்ந்து அவர்களை நெருங்கி நின்று பார்த்தான். அவர்கள் கைப்பேசியில் பேசியபடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இரு இளைஞர்களில் ஒருவன் அந்தப் பெண்ணின் மார்பில் கை வைத்தான். “சீ” என்று அந்தப் பெண் அவன் கையைத் தட்டிவிட்டு கைப்பேசியைப் பார்த்து தொடர்ந்து பேசினாள்.
சற்று தூரத்தில் சில குழந்தைகள் மணலில் கோட்டை கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். சேகர் அவர்கள் அருகே சென்று அமரலாமா என்று யோசித்தான். அந்தப் பெண் ஒன்றும் அவ்வளவு சிறியவள் அல்ல, கல்லூரியில் படிப்பவளாகத்தான் இருப்பாள் என்று சேகருக்குத் தோன்றியது. மறுபடியும் திரும்பிப் பார்த்தான். இன்னும் அவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லா சுடிதாரும் சீருடை அல்ல என்று சேகர் நினைத்துக் கொண்டான். குழந்தைகள் எல்லாம் வெள்ளைச் சுடிதார் அணிவார்களா என்று சேகர் தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். இரு இளைஞர்களும் நகர்ந்து பெண்ணுடன் நெருக்கமாய் அமர்ந்தார்கள். சேகர் மெதுவாய் நடந்து நன்றாகத் தெரியும் தூரத்தில் சென்று அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.