மலையாற்றின் இலையணை

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
山川に
風のかけたる
しがらみは
流れもあへぬ
紅葉なりけり

கனா எழுத்துருக்களில்
やまがはに
かぜのかけたる
しがらみは
ながれもあへぬ
もみぢなりけり

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் ட்சுராக்கி

காலம்: பிறப்பு தெரியவில்லை. இறப்பு கி.பி 920.

ஜப்பானிய வரலாற்றில் இவரைப் பற்றிய குறிப்புகள் அவ்வளவாகக் காணப்படவில்லை. அரண்மனைப் பல்கலைக்கழகத்தில் இலக்கிய ஆராய்ச்சி மாணவராக இருந்த இவரது 3 பாடல்கள் கொக்கின்ஷூ தொகுப்பிலும் 2 பாடல்கள் கொசென்ஷூ தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன. கியோத்தோ அரண்மனையில் செயலாளர் மட்டத்தில் பணியாற்றிவந்த இவர் கி.பி 920ல் இக்கி மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட செய்தியும் ஆனால் அப்பதவியை ஏற்கும் முன்னரே இவர் இறந்துவிட்ட செய்தியும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன.

பாடுபொருள்: நதியில் மிதக்கும் மேப்பிள் இலைகளின் அழகு.

பாடலின் பொருள்: மலையாற்றில் ஓர் அழகான தடுப்பணையைக் காண்கிறேன். காற்று மட்டுமே உலவும் ஆளரவமற்ற இவ்வனத்தில் யார் எதற்காக இந்தத் தடுப்பணையைக் கட்டினார்கள்? ஓ! காற்றுடன் போரிட்டு வீழ்ந்த மேப்பிள் இலைகளின் உடற்கூட்டமா இது?

பழங்குறுநூறு தொகுப்பில் இருக்கும் இப்பாடல் கொக்கின்ஷூ தொகுப்பிலும் இடம்பெற்றிருக்கிறது. அதிலுள்ள முன்னுரையில் “ஷிகா மலைத்தொடரைக் கடக்கும்போது அதன் அழகில் மயங்கினாலும் என்னால் கவிபாட முடியும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஷிகா மலைத்தொடர் என்பது ஜப்பானிய இலக்கியங்களில் பெருமிதத்துக்குரிய பொருளாகப் பல செய்யுள்களில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. நம் தமிழ் இலக்கியங்களில் பொதிகைமலை போல எனக்கொள்ளலாம். தலைநகர் கியோத்தோவில் பொற்கோயில் இருக்கும் கிதாஷிராகவா என்ற இடத்தில் தொடங்கி ஹியெய் மலை, நியோய் சமவெளி வழியாக இன்றைய ஷிகா மாகாணத்தின் ஓட்சு நகரம் வரை நீள்கிறது இம்மலைத்தொடர். அப்போது அது ஓமி மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. முதல் பழங்குறுநூற்றை இயற்றிய பேரரசர் தென்ஜி இந்த ஓட்சுவில்தான் தன் புதிய தலைநகரை நிர்மாணித்தார்.

இச்செய்யுளில் “ஷிகாரமி” என்றொரு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பழங்காலத்தில் ஜப்பானில் ஆறுகளில் மீன்பிடிக்க ஒருவிதமான மதகைப் பயன்படுத்தினார்கள். மரச்சட்டங்களை நீருக்குள் பாய்ச்சி மூங்கில்களை முட்டுக்கொடுத்து நிறுத்தி அதில் இடர்ப்படும் மீன்களைப் பிடிப்பார்கள். அதை இங்கே காற்றில் வீழ்ந்து கிடக்கும் மேப்பிள் இலைகளின் கூட்டத்தைக் குறிக்கப் பயன்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். இச்செய்யுளில் வரும் ஆற்றை மனிதவாழ்வுடன் தொடர்புபடுத்தி அதன் ஓட்டத்தைப் பாதிக்கும் அணையாக உறவுகள் இருக்கின்றன என்பதாக ஓர் உரையாசிரியர் இச்செய்யுளுக்கு உரையெழுதி இருக்கிறார்.

வெண்பா:

மலையினில் ஆற்றினில் காண்பது என்னே
அலையினில் மீன்நில் மதகோ - இலையினில்
ஆனதுவும் வாழ்வில் உறவின் தடுப்பாய்
மிதக்குமோ காற்றில் உதிர்ந்து?
Series Navigation<< நிலவு ஒரு பனியாகிசக்குராவின் சலனம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.