
1
செம்மஞ்சள் பூனை சிகரெட் பிடித்தவாறு வேப்ப மரத்தின் ஒரு கிளையில் உட்கார்ந்துகொண்டு, கிழ வெண்பூனை வருகிறதா என இருட்டில் பார்த்துக் கொண்டிருந்தது. வேப்ப மரத்துக்கு அருகில் இருந்த புதரில் ஒரு கருப்புப் பூனையும், ஒரு சாம்பல் பூனையும் மறைவாகப் பதுங்கிக்கொண்டு செம்மஞ்சள் பூனையின் சைகைக்காக அதையே பார்த்துக்கொண்டு இருந்தன. “சிகரெட்டை அணைச்சிடு. இருட்டில் ஆள் இருப்பது தெரிஞ்சிடும்’’ என்று கருப்புப் பூனை தரையில் வைத்திருந்த பட்டாக்கத்தியைக் கையில் பற்றிக்கொண்டு, புகை மேலே பறந்து போவது போல மெதுவாகக் கூறியது. ஆழமாக ஒரு இழுப்பு இழுத்துவிட்டு, “கையை மட்டும் விட்டுடுங்க. அதை நான் வெட்டுறேன்’’ என்று மரக் கிளையிலேயே சிகரெட்டை நசுக்கி செம்மஞ்சள் பூனை கீழே போட்டது. “துருப்பிடித்த இரும்புத்துருவி வைச்சிருக்கேன். இதை வயித்துல சொருகி, அப்படியே குடலை ஒரு முறுக்கு முறுக்கி, வெளியே இழுத்தால் ஒரு நிமிஷத்தில் எல்லாம் முடிஞ்சிடும். அதுக்கு மேல கையை வெட்டுவியோ, கழுத்தை வெட்டுவியோ, அது உன் விருப்பம்’’ என்று சாம்பல் பூனை கூறிவிட்டு, தூரத்தில் சிகரெட் நெருப்பு தெரிவதைப் பார்த்து, `ஏதோவொரு பூனை வருவதுபோல இருக்கிறது பார்’ என்பது போல செம்மஞ்சளுக்குச் சைகை கொடுத்துவிட்டு, மூச்சின் சத்தத்தையும் கட்டுப்படுத்தியது. “கிழ வெண்பூனைதான் வருது. அதைத் துண்டுதுண்டா வெட்டணும். ஆனா, அது உடனே சாகக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமா அணுஅணுவா சாகணும்’’ என்று செம்மஞ்சள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, `வெண்பூனை அருகில் வரும்வரை பேசாதே’ என்பது போல துருவியைச் சாம்பல் கீழே வைத்துவிட்டு, இரு கைகளாலும் சைகை செய்தது. வெண்பூனை சிகரெட்டை இழுத்துக்கொண்டு, குனிந்தவாறே நெருங்கிநெருங்கி வந்துகொண்டிருந்தது. செம்மஞ்சள் இடுப்பில் வைத்திருந்த குத்துவாளை உருவிக்கொண்டு, வெறியோடு இறங்க ஆயத்தமாகியது. கருப்பும், சாம்பலும் `தாங்கள் வெண்பூனையை வளைக்கும் வரை மரத்தில் இருந்து இறங்க வேண்டாம்’ என்பதைப்போல சைகை கொடுத்தன. அதைக் கேட்காமல் ஆவேசத்தோடு செம்மஞ்சள் மரத்திலிருந்து இறங்க முற்பட, அது கையில் இருந்த குத்துவாள் நழுவி, கீழே ஒரு கல்லின் மீது விழுந்து சத்தம் வர, சுதாரித்துக்கொண்ட வெண்மை சிகரெட்டைக் கீழே எறிந்துவிட்டு உயிரை நோக்கி வேகமாக ஓட்டம் எடுத்தது. ஆனால், புலி பாய்ச்சலெடுத்த கருப்பும், சாம்பலும் சுற்றிவளைத்து வெண்மையின் கால்களைத் தட்டி, கீழே விழ வைத்து, அழுத்தமாகப் பிடித்துக்கொண்டன. குத்துவாளை எடுத்துக்கொண்டு ஓடிவந்த செம்மஞ்சள், வெண்மையின் நெஞ்சிலேயே ஓங்கிஓங்கி வெறியோடு குத்தியது. “ஏன்டா, உனக்குக் கொடுத்தது போக, மீதி கொஞ்சம் சொத்ததான உன் தங்கச்சிக்குக் கொடுத்தோம்’’ என்று வெண்மை சொல்ல வந்தது. “எல்லா மயிரும் எங்களுக்குத் தெரியும். வாய மூடுடா’’ என்று குத்துவாளை முகத்திலேயே பலமுறை இறக்கி விட்டு, கருப்பிடம் இருந்து கத்தியைப் பிடுங்கி, “இந்தக் கையிதான ரிஜிஸ்டர் ஆபிஸ்ல கையெழுத்துப் போட்டுது’’ என்று வெண்மையின் கையை வெட்டி துண்டாக்கியது. “இப்படியே இழுத்துக்கிட்டு இருக்கக்கூடாது. சட்டுப்புட்டுனு முடி. துடிச்சிக்கிட்டே இருக்குப் பாரு’’ என்று கருப்பு கத்தியைப் பிடுங்கி, வெண்மையின் கழுத்தை வெட்டுவதற்குப் போனது. “என் அப்பன் உடனே சாகக்கூடாது. துடிதுடிக்கணும், தூக்குங்க’’ என்றதும், மூன்றும் வெண்மையைத் தூக்கி வந்து தண்டவாளத்தில் போட்டு விட்டு காத்திருந்தன. எக்ஸ்பிரஸ் ரயில் தடதடத்து மேலேறிப் போகும்போது வெண்மையின் அலறலைக் கேட்க வேண்டும் என்று செம்மஞ்சள் அதன் காதுகளை ஆனந்தமாக்கிக் கொண்டே இருந்தது. எக்ஸ்பிரஸ் அடித்துப் போனபோது வெண்மையின் கூழ் தெறிப்பில்கூட சிறு சத்தமும் வரவில்லை.
2
வெகு தூரம் தொடாமல் பின்னால் அமைதியாகவே உட்கார்ந்து வந்துகொண்டிருந்த மனைவியான வெண்சாம்பல் பூனை வனச்சாலை பகுதிக்குள் நுழைந்ததும், தோளில் கையைப் போட்டதும், மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்த கணவனான பழுப்புப் பூனையின் இதயம் பனியில் உறைந்தது போல ஆகி, கொஞ்ச நேரம் தீண்டலின் சுகத்தில் மிதந்தது. பிறகு, அந்தக் கையைப் புதிதாகப் பற்றுவதுபோல, ஆசையோடு தடவிவிட்டு, அதனுடைய இடுப்பைப் பிடித்துக் கொள்ளுமாறு, கையைக் கீழே இழுத்துவிட்டது. அதை ஏற்று, உடனே அதன் வயிற்றைத் தடவியவாறே வெண்சாம்பல் இடுப்பைப் பிடித்துக் கொண்டதும், பழுப்புக்குக் கண்கள் கலங்கிவிட்டது. ` ஆறு மாசமா கோவிச்சுக்கிட்டு, அம்மா வீட்டிலேயே இருந்தவ, அழைச்ச உடனேயே வர்றானா, நம் மேல ஆசையில்லாமலா வருவா? ஒருவேளை பிள்ளைகளுக்காக வர்றாளோ? அவளை வீணாக நான்தான் சந்தேகப்பட்டுட்டேன். அவளிடம் மன்னிப்புக் கேட்கணும். ஆனா, இந்த செல்போனில் மூழ்கிக் கிடக்கும் பழக்கத்தை மட்டும் இன்னும் விடல. இப்போதும் செல்போனில் எதையோ துருவிக்கிட்டுத்தான் வர்றா. சரி, போகப்போக அதுவும் சரியாப் போயிடும்’ என்று நினைத்தவாறே வெண்சாம்பலின் கையை மீண்டும் தடவிவிட்டது. மின்கம்பியில் பெயர் தெரியாத வெந்தயப் பச்சை நிற சிறுகுருவிகள் நான்கைந்து உட்கார்ந்திருந்தன. அவற்றைப் பார்த்ததும் இடுப்பிலிருந்து கையை உருவிக் கொண்டு, செல்போனில் அந்தக் குருவிகளை வெண்சாம்பல் படம் எடுக்க முயற்சித்தது. வண்டி சென்ற வேகத்தில் படம் எடுக்க முடியாமல் வெண்சாம்பல் தவித்தது. உடனே, வண்டியைத் திருப்பிக் கொண்டு வந்து. குருவிகள் உட்கார்ந்திருந்த இடத்திலேயே பழுப்பு நிறுத்தியது. வெண்சாம்பல் இறங்கிப் போய், குருவிகளைப் படம் பிடிக்க கைகளை உயர்த்தியது. அதற்குள் அந்தக் குருவிகள் பதறிக் கொண்டு நாலாப் பக்கமும் பறந்தன. “பரவாயில்ல வா. போற வழியெல்லாம் அந்தக் குருவிங்க தென்படும். படம் எடுத்துக்கலாம்’’ என்றதும், வெண்சாம்பல் வெட்கத்தோடு ஏற்றுக்கொண்டது போல வந்து, வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டது. வழிநெடுக குருவியைத் தேடியவாறே பழுப்பு வந்துகொண்டிருந்தது. செல்போனில் மூழ்கியவாறே வெண்சாம்பல் வந்துகொண்டிருந்தது. விளாமரம் இருந்த மலைக்குன்று பகுதிக்கு வந்ததும், வண்டியை பழுப்பு நிறுத்திவிட்டு, “அந்தக் குன்றுக்கு வா போவோம். அங்க நிறைய குருவிங்க இருக்கும். ஆசைதீர படம் எடுக்கலாம்’’ என்றவாறே வெண்சாம்பலின் தோளில் கையைப் போட்டு அணைத்தவாறே வந்தது. வெண்சாம்பலுக்கு உடலெல்லாம் வியர்த்து, உதறல் எடுப்பதுபோல இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் செல்போனில் ஏதோ பார்ப்பது போலவே வந்து கொண்டிருந்தது. குன்று அருகே வந்ததும் பழுப்பு, “கொஞ்ச நேரம் இங்கேயே இரு. வந்துடுறேன்’’ என்றவாறே போய், மலைக்கற்களுக்குள் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்து வந்தது. வெண்சாம்பல் பதறி, திரும்பி ஓடிவிடலாம் என்பதுபோல கால்களை இரண்டடி பின்னால் எடுத்து வைத்தது. “பயப்படாத’’ என்று சிரித்துக் கொண்டே, “குருவிக்காக உன்னை இங்க அழைச்சிக்கிட்டு வரல. இந்தக் கத்தியைக் காட்டி, உன்கிட்ட மன்னிப்புக் கேட்குறதுக்காகத்தான் அழைச்சிட்டு வந்தேன். உன்னை இங்கு அழைச்சிட்டு வந்து கொல்லணும்தான் முதலில் திட்டம் போட்டிருந்தேன். அதுக்காகத்தான் இந்தக் கத்தியையும் பதுக்கி வைச்சிருந்தேன். நீ இல்லாம ரெண்டு பொம்பள பசங்களும் படுற கஷ்டத்தைப் பாக்க முடியல. அதனாலதான் அந்த முடிவுக்கு வந்தேன். ஆனா, என் மேல இத்தனை அன்போடு இருப்பேன்னு தெரியாமப் போச்சு. இது முன்பே தெரிஞ்சிருந்தா, எப்பவோ வந்து அழைச்சிட்டு வந்திருப்பேன். இனிமே, உன்னைச் சந்தேகப்பட மாட்டேன். அந்த ஆளு பேரச் சொல்லி உன்னைத் திட்டமாட்டேன். எல்லாத்தையும் மறந்துடுவோம். புது வாழ்க்கை தொடங்குவோம். என்னை மன்னிச்சிடு’’ என்று கத்தியைத் தூக்கிப் போட்டுவிட்டு, வெண்சாம்பலை நெருங்கி பழுப்பு முத்தமிடப் போனது. அப்போது எங்கிருந்து வந்தன என்றே தெரியாமல் மூன்று கருப்புப் பூனைகள் பழுப்பைச் சுற்றி வளைத்து கண்டம்துண்டமாக வெட்டிச் சாய்த்தன. வெண்சாம்பலும் ஓடிவந்து ஒரு கருப்புப் பூனையிடம் இருந்து கத்தியைப் பிடுங்கி, “ஏன்டா மயிரு, என்னையாடா கொல்லத் திட்டம் போடுற. நாம வந்த வழியையெல்லாம் செல்போன்ல மெசேஜ் அனுப்பி, இவங்கள நான்தான்டா இங்க வரவழைச்சேன். உன்னை கொல்றத்துக்காகத்தான்டா உன்கூடவே வந்தேன். என்னையாடா தேவிடியான்னு சொன்ன, சாவுடா சாவுடா’’ என்று அவன் கழுத்திலேயே கத்தியைச் சரமாரியாக இறக்கியது. பழுப்பு ரத்தப் பெருக்கோடு துடிதுடித்து, “பிள்ளைகள விட்டுடாத’’ என்று சொல்வதற்குள்ளேயே அதன் உயிர் அடங்கிப் போனது. அதை அறியாமல் வெண்சாம்பல், “ஏன்டா நாய, இவன்கூடதான போகக் கூடாதுன்ன. இப்பப் பாரு உன் எதிரிலேயே அவனைக் கட்டிப் பிடிக்கிறேன்’’ என்று அதன் கருப்புப் பூனையை இழுத்து கட்டிப் பிடித்து முத்தமிட்டுக் கொண்டிருந்தது.
3
போதையில் தள்ளாடியவாறே நள்ளிரவு வந்து சேர்ந்தபோது, வீட்டின் மரக்கதவு பூட்டப்பட்டிருந்ததில் ஆத்திரமடைந்த சாந்துநிறப்பூனை அதை ஆவேசமாக ஓங்கிஓங்கித் தட்டியது. “டேய், நீ வேலையில இருக்கறப்பவே செத்து தொலைஞ்சாவது, எனக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கும். சாவுடான்னாலும் சாகமாட்டுற, கதவத் திறடா நாய.’’ உள்ளுக்குள்ளிருந்து எந்தச் சத்தமும் அசைவும் இல்லாத நிலையில், இன்னும் ஆவேசமாக வெறிக்கொண்டு அடித்ததில், நாலைந்து பேர் வீட்டின் முன் கூடினர். “ இங்க என்ன அவுத்துப்போட்டா ஆடுது. வேடிக்கை பாக்க வந்துட்டீங்க. என் வீடு. அடிப்பேன். உடைப்பேன். ஒருத்தனும் இங்க நிக்கக்கூடாது. நின்னா நடக்குறதே வேற. மானங்கெட்ட கேள்வி கேட்பேன்’’ என்று அவர்களை அடிக்காத குறையாக விரட்டிவிட்டு வந்து, கதவை மீண்டும் அடித்தது. “டேய், என் பொண்டாட்டிய உள்ள வைச்சு பூட்டிக்கிட்டு, என்னை வெளியில விட்டுட்டு என்னடா பண்ணுற தேவிடியா பயல. கதவத் திறடா. இப்ப திறக்கலைனா, மூத்திரம் அடிப்பேன் பாரு.’’ அது மேலேயே தெறிப்பதைப் பற்றிகூட சுரணை இல்லாமல் கதவின் மேல் சிறுநீர் கழித்துவிட்டு, “தேவிடியா பையா, திறடா, திறடா’’ என்று கத்தியது. நாய் ஒன்று வந்து குரைத்தது. அதற்குப் போட்டிச் சத்தம் போல, “திறடா, திறடா’’ என்று கத்திக்கொண்டே இருந்தது, வெளிச்சுவரில் சாய்த்து வைத்திருந்த கடப்பாரையை எடுத்து, நாயை ஒரே அடியாக அடித்துக் கொன்றது. உடல் முழுவதும் தெறித்திருந்த நாயின் ரத்தத்தோடு, கடப்பாரையையும் விடாமல் எடுத்து வந்து, “டேய், கதவத் திறடா. இல்ல, உடைச்சிடுவேன்’’ என்றவாறே கதவைக் குத்தியது. “டேய் திறடா. கதவ உண்மையாவே உடைச்சிடுவேன்டா’’ என்றவாறே கடப்பாரையால் குத்தி குத்தி கதவைச் சுத்தமாக உடைத்து நொறுக்கி கீழே தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தது. சாந்துவின் மனைவிப்பூனை அதன் இரண்டு குட்டிகளை அழைத்துக்கொண்டு உள் அறையில் நுழைந்து, கதவைச் சாத்திக்கொள்ள, சாந்துவின் தந்தைப்பூனையும், தாய்ப்பூனையும் மட்டும் ஆடாமல், அசையாமல் சோபாவிலேயே உட்கார்ந்திருந்தன. கொஞ்சம் நேரம் ஒன்றும் புரியாமல் திகைத்த சாந்து, “ஏன்டா, கதவத் திறக்கல. ஏன்டா, கதவத் திறக்கல’’ என்று தந்தைப்பூனையைக் குத்துவதற்காக கடப்பாரையை ஓங்கியது. அப்போது தாய்ப்பூனை ஆவேசம்கொண்டு, சோபாவுக்கு அடியில் வைத்திருந்த கத்தியை எடுத்து சாந்துவின் இடுப்பில் ஒரு வெட்டு வெட்டியது. பேய் வெறியோடு தந்தைப்பூனையும் கடப்பாரையைப் பிடுங்கி, சாந்துவின் நெஞ்சிலேயே இரண்டு இறக்கு இறக்கியது. கத்தியையும் வாங்கி கழுத்தை நறநறவென அறுத்து தள்ளியது. பிறகு நிதானத்துக்கு வந்தபோது துண்டித்த தலையைத் தூக்கிக்கொண்டு, காவல் நிலையம் போனது. வழிநெடுக ரத்தமும் கண்ணீரும் பின்தொடர்ந்தது.
4
மாந்தோப்புக்குள் நுழைந்ததும் இதமான காற்றால் பனித்துளியைப் போல கறி விருந்தின் வியர்வை மறைந்து போவதை அனுபவித்தவாறே வெண்பூனை கர்ப்பமான சாம்பல்பூனையின் தோளின் மீது கையைப் போட்டவாறே, “யாரோ, பின் தொடர்றா போல இல்ல’’ என்றவாறே திரும்பித் திரும்பி பார்த்தவாறு நடந்து வந்தது. “தோப்பும் கிட்டத்தட்ட வனம் மாதிரிதான். தனியா இருக்குறப்ப, யாரோ பின் தொடர்றா போலவே இருக்கும். ஆனா, யாரும் பின் தொடர மாட்டாங்க. நானும் பலமுறை அதை அனுபவிச்சிருக்கேன். அதுவும் இது நம்ம தோப்பு. இங்க யாரும் வரமாட்டாங்க. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருக்கோம்னு, அப்பாதான் அனுப்பி வைச்சார். ம். அப்பாவுக்குத்தான நீ அதிகம் பயந்த… அவர் எவ்வளவு கனிவா, என் மேல எவ்வளவு பாசமா இருக்காரு பாத்தியா? இப்ப, என்னைவிட உன்கிட்டதான் அவர் அதிகம் பேசுறாரு. மாமாவும் மாப்ளயும் குழையிறத பாக்க முடியல’’ என்றவாறே கர்ப்பப்பூனை வெண்பூனையின் தலையைக் கோதிவிட்டாவாறே வயிற்றில் குட்டி உதைப்பதை அனுபவித்தவாறே நடந்து வந்தது. “உங்க அப்பா நல்லா பேசுறார். ஆனா, உங்க அம்மா நல்லா பேசுறாப் போல தெரியல. ஏதோ, உள்ளுக்குள்ளேயே புழுங்குறாப் போலவே இருக்கு.’’ “அவுங்க எப்போதும் அப்படித்தான். பாசத்தை வெளிக்காட்டத் தெரியாது. ஆனா, அம்மா சம்மதம் இல்லாம, அப்பா எதுவும் செய்ய மாட்டாரு. நமக்காகப் போராடுனது அம்மாதான். அப்பாகிட்ட எவ்வளவு அடி வாங்கியிருப்பாங்க தெரியுமா… அவுங்க இல்லன்னா, நாம இங்க வீட்டுக்கே வந்திருக்க முடியாது.’’ “போதும். உங்க அம்மா புராணம். எனக்குப் பசிக்குது.’’ “இப்பதான சாப்பிட்ட. அதுக்குள்ள பசிக்குதா?’’ “அந்தப் பசி இல்லடீ.’’ “அடி. வயத்துல புள்ளைய வைச்சுக்கிட்டு, பேசுற பேச்சப் பாரு. வீடா இருந்தாவது ஏதாவது பாக்கலாம். இங்கெல்லாம் முடியாது. கொஞ்ச நாள் எல்லாத்தையும் அடக்கிக்கிட்டு இரு’’ என்றவாறே மரங்களின் உச்சிக் கிளை இலைகளுக்கு இடையே மேற்கு திசையில் இருந்து ஊடுருவி வந்த சூரிய ஒளியை கர்ப்பப்பூனை காண்பித்தது. “இப்படி இலைகளுக்குள்ள புகுந்த வர அந்தச் சூரிய ஒளி எனக்கு ரொம்பப் பிடிக்கும். காலேஜ் படிக்கிறப்ப, இங்க வந்துதான் படிப்பேன். அப்ப படிக்கிறேனோ, இல்லையோ சூரிய ஒளியோடுதான் விளையாடிக்கிட்டு இருப்பேன். ஒளியைக் கையிலோ, முகத்திலேயோ ஏந்துறத்துக்காக அங்கஇங்க ஓடிக்கிட்டே இருப்பேன். சில நேரம் மரக்கிளை மேலேயே ஒளி நிக்கிறாப்போல இருக்கும். அதுக்காக மரத்து மேல எல்லாம் ஏறியிருக்கேன். உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன். வீட்டுக்குக்கூட தெரியாது. ஒரு முறை மரத்து மேல ஏறி ஒளியை ஏந்துறேன்னு கீழே விழுந்து, நடுவிரலுல முள்ளு குத்தி உள்ளுக்குள்ள சதை புரண்டுக்கிச்சு. இப்பக்கூட அப்படியேதான் இருக்கு. வெளியில தெரியாது. அந்த விரலை மடக்குனா வலிக்கும். எந்த வேலைக்கும் அந்த விரலு மட்டும் ஒத்துழைக்காது. என்ன… என் சுயபுராணம் அதிகமாயிடுச்சா’’ என்றவாறே வெண்பூனையின் கன்னத்தை இழுத்து, செல்ல முத்தமிட்டு, “ப்பா’’ என்றவாறே வயிற்றைத் தடவியது. “பாப்பா உருளுதா. எங்கக் காட்டு’’ என்றவாறே புடவை மாராப்பை விலக்கி கர்ப்பப்பூனையின் வயிற்றில் வெண்பூனை முத்தமிட்டு, “பாப்பாவுக்கும் ஒளியைக் காட்டுவோமா’’ என்று மாராப்பை நன்றாக விலக்கிவிட்டது. ஒளி நன்றாக, துல்லியமாகப் பட வேண்டும் என்பதைப்போல கொஞ்சம் அங்கும் இங்குமா நகர்ந்து கர்ப்பப்பூனை ஒளியை வயிற்றில் ஏந்தியது. “சூரிய ஒளி நேரா படுறதால, பாப்பாவுக்கு ஏதாவது பிரச்சினை வருமோ’’ என்று வெண்பூனை கேட்டதும், “விபரீதமே வேணாம்பா’’ என்று மாராப்பை இழுத்து மூடிவிட்டு, “இங்க, எனக்குப் பிடிச்ச இன்னொரு இடம் இருக்கு வா காட்டுறேன்’’ என்று தோப்பின் மையத்தில் இருந்த மணற்குழிக்கு அழைத்து வந்தது. “இந்தக் குழியைச் சுத்தி, அப்ப நந்தியாவட்டை நிறைய இருக்கும். வெள்ளை நிறப் பூவா, பாக்கவே அழகா இருக்கும். ஓலைப்பாயை எடுத்து வந்து குழியில போட்டு, உட்கார்ந்துகிட்டு, பூவையே சுத்திப் பாத்துக்கிட்டு இருப்பேன். அப்ப நானும் ஒரு பூவா பூத்திருப்பதுபோல தோணும்’’ என்று வெட்கப்பட்டபோது, “இப்பவும் நீ பூவுதான்டி’’ என்று வயிற்றை முத்தமிடுவதற்காக குனிந்த வெண்பூனை, திடுதிடுவென்று பூமி அதிர பலர் ஓடி வருவது போல சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தது. அதற்குள் அதன் கழுத்திலேயே வெட்டு விழுந்தது. “நாய, உனக்கெல்லாம் என் பொண்ணு கேட்குதாடா. சாவுடா, சாவுடா, சாவுடா’’ என்று உடல் சரியசரிய வெட்டு விழுந்துகொண்டே இருந்தது. “அப்பா, அவர விடுப்பா, அவர விடுப்பா. உன்ன நம்பித்தானப்பா வந்தோம்.’’ என்று அலறியவாறே கர்ப்பப்பூனை அப்பா பூனையைத் தள்ளிவிடுவதற்கு ஓடியது. அதற்குள் உடன் வெட்டிக் கொண்டிருந்த இரண்டு சாம்பல்பூனைகள் கர்ப்பப்பூனையைத் துண்டுதுண்டாக வெட்ட, “அது வயித்துக்குள்ள இருக்கிற சாக்கடையைத் தனியா எடுங்கடா’’ என்று அப்பா பூனை கத்தியது. சிறிது நேரத்தில் எல்லா வேலைகளும் பிசிறு இல்லாமல் நடந்து முடிந்ததும், “அந்த ரெண்டு சாக்கடையையும் எங்காவது காணாம அடிச்சிடுங்க. இந்தச் சனியனை இந்தக் குழியிலேயே போட்டு மூடிடுங்க’’ என்றவாறு அப்பா பூனை திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருந்தது. ரத்தமாக மாறியிருந்த ஒளி நடுக்கத்தோடு இருளத் தொடங்கியது.
5
துண்டிக்கப்பட்ட சிறுவனின் தலையைத் தேடி ஒரு குழு இரு படகுகள் மூலம் நேப்பியர் பாலத்துக்கு அருகிலான கூவத்தின் சாக்கடையில் தேடிக் கொண்டிருந்தபோது, ஜீப்பில் செம்மஞ்சள் பூனையை வைத்துக் கொண்டு, இன்ஸ்பெக்டர் பூனை ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று விசாரித்துக் கொண்டிருந்தது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்த அந்தச் செம்மஞ்சள் பூனை எந்த விசாரணைக்கும் மறுப்பு தெரிவிக்காமல் அழைத்த இடத்துக்கெல்லாம் சென்று முழு ஒத்துழைப்பு கொடுத்தது. “என்னய்யா… உன் ஒருத்தனால, எத்தனை பேருக்குக் கஷ்டம் பாரு. உண்மையைச் சொல்லிடுய்யா.’’ “என்ன உண்மை சார். முண்டமான உடம்பு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ல ஒரு பெட்டில கிடைச்சுது. ஒரு காலு சைதாப்பேட்டை குப்பைத் தொட்டில. இன்னொரு காலு கோட்டூர்புரம் குப்பைத் தொட்டில. ஒரு கை அடையாறு குப்பைத் தொட்டில. இன்னொரு கை நீலாங்கரை குப்பைத் தொட்டில. தலை மட்டும் கிடைக்கல. கூவத்துல கெடக்குதான்னு தேடுறீங்க. என் மேல உங்களுக்குச் சந்தேகம். அங்கங்க அழைச்சிட்டுப் போறீங்க. நீங்க அழைச்சிட்டுப் போற எல்லா இடத்துக்கும் நானும் வரேன். இதுக்கு மேல என்ன உண்மை சார் இருக்கு.’’ “வெட்டுன தலையை நீ கூவத்துல போடப் போறேன்னு உன் ஃப்ரண்டு கிட்ட சொல்லியிருக்க.’’ “ஏன் சார் ஜோக் அடிக்கிறீங்க. அப்படி ஒரு ஃப்ரண்ட் இருந்தா, இன்னேரம் அவனும் இந்த வண்டியில நம்மக்கூடதான சார் வந்துகிட்டு இருப்பான். ஒருவேளை நீங்க சொல்லுற அந்த ஃப்ரண்டுதான் இந்தக் கொலையையே செய்திருப்பானோ, அவன் தான் தலையை எடுத்துவந்து, கூவத்துல போட்டிருப்பானோ…’’ “உன் செல்போன் ரெக்கார்ட்டையெல்லாம் பாத்தா, அந்தப் பையன் வீட்டுக்கிட்ட, அவன் ஸ்கூல் கிட்ட நீ அடிக்கடி போய் வந்திருக்கிறது பதிவாகி இருக்கே.’’ “ரெக்கார்ட் இருக்கும்போது, நான் போகலைன்னு எப்படி சார் சொல்ல முடியும்? போய் இருக்கலாம். ஆனா, எதேச்சையாக போய் இருக்கலாம். இப்ப உங்க போனும், என் போனும் ஒரே இடத்துல இருக்காப் போல ரெக்கார்ட் காட்டும். இப்ப, என்னை யாராவது கொன்னுட்டா, அது நீங்க கொன்னுதா அர்த்தமாகிடுமா சார். அதுவும் இல்லாம, அந்தப் பையனோட தலையே கிடைக்காம, அந்தப் பையன்தான் இறந்தான்னு எப்படி அடையாளம் காண்பீங்க. அதுவே உறுதியாகாதப்ப, என்னை எப்படி சார் சந்தேகப்படுவீங்க’’ என்று சிரித்தது. “உனக்கும், அந்தப் பையனோட அப்பாவுக்கும் ரியல் எஸ்டேட் தொடர்பா முன்விரோதம் இருந்துதுனு சொல்லுறாங்களே.’’ “அது உண்மைதான் சார். மறுக்கல. ஆனால் அவன் பிராடு சார். அயோக்கியன். ஊரை அடிச்சி உலையில போடுறவன். போலி டாக்மெண்ட் ரெடி பண்ணி நிலம் பறிக்கிறவன். ஒயிட் காலர் திருடன். அவனுக்கு என்னோட மட்டும் விரோதம் இல்ல, பலரோட இருக்கு. சார் நீங்க சொன்னதும்தான் ஒண்ணு தோணுது. ஒருவேளை, எல்லோரையும் ஏமாத்தி நிலம் பறிக்கிறானே, அதனால, நிலம் நிலம்னு நாயா அலையிறீயே, உன் புள்ள எங்க கிடக்கிறான் பாருன்னு காட்டணும்ங்கிறதுக்காகத்தான் கை, கால எல்லாம் குப்பைத் தொட்டியில போட்டுட்டு, தலையை மட்டும் கூவத்துல போட்டிருப்பானுகளோ’’ என்று மீசையாலும் சிரித்தது. “எவ்வளவு திறமையா பேசுற. எப்படியும் தலை கிடைக்காதுன்னு நம்புற. கொல்லுறதுன்னு முடிவு எடுத்த நீ, அந்த ஆளையே கொன்னுயிருக்க வேண்டியதுதான. அந்தப் பையன் என்ன பண்ணுனான். பாவம். பத்து வயசு பையன்’’ “என்ன சார். நான் கொன்னா மாதிரியே பேசுறீங்க. காட்ஃபாதர்னு ஒரு இங்கிலீஷ் படம் சார். மார்லன் பிராண்டோ நடிச்சது. அதுல ஹாலிவுட் படத்துல நடிக்க ஒருவருக்கு வாய்ப்புக் கொடுக்கச் சொல்லி, படத்தின் உரிமையை வைச்சிருப்பவரிடம் காட்ஃபாதரின் ஆள் கேட்பான். அவர் உறுதியா தர மறுத்துடுவார். அப்புறம் என்ன நடக்கும்னா, அந்த உரிமையாளர் தூங்கிக்கிட்டு இருக்கும்போது அவர் ஆசையா வளர்த்த அவரோட விலையுயர்ந்த குதிரையின் தலையை வெட்டி, அவருடைய படுக்கையிலேயே வைச்சிட்டு போயிடுவாங்க. அதுபோல, எல்லாரையும் ஏமாத்தி பணம் சேர்க்கிறது எதுக்கு, ஆசை மகனுக்குத்தான. அதனால, அவனையே தூக்கிட்டோம்னா எல்லாம் முடிஞ்சிப் போச்சில்ல. ஆயுள் முழுக்க சேத்தது எல்லாம் பாழ்தான. அதுக்கு அப்புறம் நடைபிணம்தான. அப்படின்னு கணக்கு பண்ணி கொன்னுயிருப்பானுகளோன்னு தோணுது சார்.’’ “அந்தப் பையன நீ ஏன் கொன்னேன்னு சொல்லிட்ட.’’ “பாத்தீங்களா சார். எனக்குத் தோணுனத சொன்னேன். அதனால, நான்தான் கொலை செய்தேன்னு ஆகிடுமா.. சார் காலையில இருந்து சுத்திக்கிட்டே இருக்குறதுல, பயங்கரமா பசிக்குது நல்ல அசைவ ஹோட்டலா பாத்து நிறுத்துங்க. சாப்பிடுவோம். பணம் நான் கொடுக்கிறேன்.’’ “இரு. ஒரு போன் வருது. பேசிட்டு வரேன்.’’ “யோவ். தலை கிடைச்சிடுச்சாம். நீ மாட்டுன.’’ “என்ன தலை சார் கிடைச்சுது. மீன் தலையா. போங்க சார். நல்ல ஹோட்டலா பாத்து நிறுத்துங்க சார்.’’ “ரொம்ப தெளிவுதான்ய்யா நீ.’’ கூவத்தைவிட்டு எக்காலத்திலும் வெளியேறிடாத சாக்கடையும் எலும்புகளும் எப்போதும் சிரிப்பது இல்லை.