
புல்வெளி
மகத்தான புல்வெளித் தருணத்திற்காய்
நீண்டநாள் காத்திருக்க வேண்டிதாய்விட்டது.
இதோ இன்று கண்முன்னே
நீள அகலகணக்குகளுக்குள்
நிற்காததாய்
பெரும் புல்வெளி
கண்கள் முழுதும் முதலில்
பசுமையைப்
பருகவேண்டும்..ஆயிற்று
அடுத்து புல்மணம் நிறைந்த
காற்று..
ஆம் நன்றாகவே இருக்கிறது..
கிச்சுக்கிச்சு மூட்டுகிறது..
சிலஅடி நடந்தவுடன் காலில்
கண்களறியா முட்கள்
குத்தத் தொடங்குகின்றன
நீண்டப் புல்வெளியின்
எனது மையத்தில் வந்து
திரும்பிப் பார்க்கிறேன்..
அர்த்தம் மாறிபோனாலும்
மணமும் பசுமையும்
அப்படியே..
அதன் தொடக்கத்தில்
நிற்பவனின் கண்களில்
உள்ளது..நான் விட்டுவந்த
புல்வெளித் தருணம்.
காடு
வாச வண்ணங்களூடே மலர்காடு
நேற்றும் நாளையுமற்ற
வெளியுனூடே சரிந்திறங்கும்
எண்ணங்களின் சுவடுகள்
சில்லென்ற பறவைகளாலான
ஓடைகள்
வழிந்தோட சிறகெதற்கு? நொடிப்பொழுதின் முடிவில்
இடமாற்றம்
இலைமட்டுமேயான பசுமைக்காடு
மலர் மட்டுமேயான
வண்ண வானம்
உடல்மட்டுமேயான
பறவை ஓடை…
இடை.. வெளி
விரல் நுனியில் உரையாடலை முன்னெடுக்கும் இடைவெளிதான்
இருவருக்கும் என
நினைத்து முடியும்
கணத்தில் தோன்றி
அடுத்த கணத்தில்
விரிபாலையின்
திசைக்கொருப் புள்ளிகளாய்
நிற்கிறோம் நாம்..
இடையே மணற்துமிகளின்
மகோன்னத யுகங்கள்.
பீலித்தனிமை
அத்தனைத் தனிமையையும் வழித்து வாஞ்சையோடு
என் தட்டிலிட்டு செல்கிறான்
அவன்.
செல்லும் அவன் பீலிபோல
என் நெஞ்சும் நடுங்க
உண்கிறேன்..
உண்கிறேன்..
தீர்ந்தபாடில்லை..
இட்டது அவன் கரமெனில்
பெருகத்தானே
செய்யும்?
மிகச்சிறப்பு !!!
கணங்களை கவிதைப்படுத்தியது அற்புதம் !!!