தமிழாக்கம்: மைத்ரேயன்
ரோஜா நிற ஒளிக்கீற்று ஒன்று திரைகளை அகற்றுகிறது. வேலைக்குப் போகப் போடும் முழுக் கால் சராய்களுடன், டான்னாவின் கணவன் படுக்கையின் பக்கத்தில், ஒரு காலைத் தூக்கி மற்ற முழங்கால் மீது வைத்தபடி, அமர்ந்துள்ளான். மேலுடம்பில் துணி ஏதுமில்லை, அவன் வயிறு, தொப்புளின் இரு புறமும் மடிந்த ஓர் உப்புசத்தோடு, இப்போது தளர்ந்து தெரிய, திடீரென்று ஒரு கொத்து முடி அதன் கீழ் போகிறது. அவன் மடங்கி ஒரு பாதத்தின் மேல் காலுறை ஒன்றை இழுக்க முனையும்போது, வயிறு இடுப்புப் பட்டியின் மீது வழிந்து அதை மூடுகிறது. அவனுடைய கைகள் சாதாரணமாகவே வலுவான தசைகள் கொண்டவை, மார்பு உறுதியாகச் செதுக்கினாற்போல உள்ளது, ஆனால் அவனுடைய கைகளைத்தான் அவள் அதிகமும் விரும்புகிறாள். சதுரமான விரல் நுனிகள், தடித்த விசிறி போன்ற எலும்புகள், பின்னங்கையின் சற்றே கருத்த தோலில் முடிப்படலம். அவன் கைகளில் முத்தமிட விரும்புகிறாள். தன் முகத்தை அவனுடைய உள்ளங்கைகளில் புதைக்க விரும்புகிறாள்.
“நல்ல காலை, செல்லம்.” வாந்திக்கான உந்துதல் அவள் கண்களை இழுத்து மூடுகிறது. பேசுவது கூடப் பெருந்துன்பம். பார்ப்பது கூட.
அவன் அவளைப் பார்க்க, உடலை வளைத்துத் திரும்புகிறான், அவள் பாதத்தைத் தடவுகிறான். “நல்ல காலை. எப்படி இருக்கு உனக்கு?”
“மோசம். அந்த வட்டிலை என்கிட்டே கொடு, வாந்தி வருது.”
“நான் உனக்கு ரொட்டியை வாட்டிக் கொண்டுவந்து வச்சிருக்கேன்.”
“பையங்க சரியா இருக்காங்களா?”
“அவங்க நல்லாருக்காங்க. பள்ளிக் கூடம் போய்ட்டாங்க. என்னால ஒரு சட்டையைக் கூடக் கண்டு பிடிக்க முடியல்லை, என் சட்டை ஒண்ணு எங்கே இருக்கும்னு உனக்குத் தெரியுமா?”
“எங்கிட்டே அந்த வட்டியலைக் கொடு.”
“இந்தா. என் சட்டைங்க எங்கேருக்குன்னு உனக்குத் தெரியுமா?”
“சாரி, செல்லம். அதெல்லாமே அழுக்குல இருக்குன்னு நினைக்கிறேன். சலவைக் கூடைல இருக்கும். சாரி, நான் ரொம்ப சீக்கா இருக்கேன்.”
’நான் ஏதாவது பார்த்து எடுத்துக்கறேன்.’ அவளுடைய தொடையை அழுத்தமாகத் தடவிக் கொடுக்கிறான், இடுப்பைத் தட்டுகிறான். குதிரையின் விலாக்களை டான்னா நினைக்கிறாள். “கவலைப்படாதே,” அவன் சொல்கிறான், ‘சும்மா தூங்கு. தூங்கு, டான்னா.’
’ரொம்ப சீக்கா இருக்கறாப்ல இருக்கு எனக்கு.’
அவள் விழிக்கும்போது நாள் விம்மி எழுந்து முழுப் பகலாக, மதியத்தின் வெப்பமாக ஜன்னல் திரைச்சீலைகளுக்குப் பின்னே இருந்தது. அது புதன்கிழமை- பாதி நாள் – அவள் இன்னும் நண்பகல் உணவைத் தயாரிக்கவில்லை; அதற்கு என்ன செய்ய என்று யோசிக்கக் கூட இல்லை.
படுக்கையருகே உள்ள சிறு மேஜைமீது உலர்ந்த கண்ணாடிக் கோப்பை இருந்தது, இரண்டு வறண்ட ரொட்டித் துண்டுகள் இருந்தன. அவள் தன் உதடுகளை உறிஞ்சினாள் – தடித்து, வெடித்திருக்கும் கீழ் உதடு முதலில், பிறகு மேல் உதடு – தன் கோரைப்பற்களால் அவற்றைப் பிடித்து மெலிதான உலர்ந்த தோலை உரிக்கிறாள். அவள் நாறிக் கொண்டிருக்கிறாள் – வேறெப்படி இருக்கும், அவளுடைய இரவு உடைகளின் கீழேயிருந்து உடலின் மாமிச வாடை மேலெழுந்து வருகிறது, பாதங்களில் அழுக்கு படலமாக ஒட்டியிருக்கிறது. படுக்கையின் மேல் விரிப்புக்குக் கீழே, அரிப்பெடுக்கிற ஒரு குதிகாலை இன்னொரு காலின் நுனிவிரல்களால் சொரிகிறாள், அழுக்கு அவள் கால் நகங்களின் அடியில் சுருள்கிறது.
பையன்கள் சீக்கிரமே வீட்டுக்கு வந்து விடுவார்கள், அடுப்பில் எதுவும் இல்லை.
அவள் எழுந்து தன் பிருஷ்டத்தின் மீது அமர்கிறாள், கால்களைப் படுக்கையில் பக்கவாட்டில் திருப்பிக் கட்டிலிலிருந்து இறக்குமுன் மூச்சை இழுத்து நிதானப்படுத்துகிறாள். மேலங்கிக்குள் நுழைந்து கொண்டிருக்கையிலேயே அவளுக்குக் குமட்டிக் கொண்டு வந்து அமிலம் வாயில் எரிந்து கொண்டு நிரப்புகிறது, அவள் வாந்திக்கான வட்டியலை அவசரமாக அள்ளிக் கையில் எடுத்துக் கொண்டு வாயருகே பிடித்தபடி, குளியலறைக்குத் தள்ளாடிக் கொண்டு விரைகிறாள், தன் பைஜாமாவை அவசரமாகக் கீழிறக்கியபடி, திறந்திருந்த டாய்லட்டின் மீது அமர்கிறாள். அவளுடைய ஒவ்வொரு குமட்டலுக்கும், வாந்தியெடுப்புக்கும் சிறு பீய்ச்சலாக மூத்திரம் டாய்லெட்டின் பீங்கானில் பாய்கிறது.
பிற்பாடு அவள் மேல்மூச்சு வாங்க அங்கேயே அமர்ந்திருக்கிறாள், அமிலம் அரித்த தொண்டையில் காற்று எரிச்சலாக உரசுகிறது, கடைவாய்ப் பற்களின் மீது பஞ்சடைத்தாற்போல இருக்கிறது, தன் மடியிலிருக்கும் பாத்திரத்தில் அவளுடைய வாந்தி சுழன்று அசிங்கமாகப் படிகிறது. அது ஒரு உலோகப் பாத்திரம், அதன் உள்ளே அடிப்புறம் எதுவும் ஒட்டாதிருக்கும் பூச்சு உள்ளது. அது அவள் ரொட்டிக்கும், அப்பங்களுக்கான மேல் உறைகளுக்கும் மாவு பிசையப் பயன்படுத்துவது; பாஸ்தாவையும், பஞ்சுரொட்டிகளையும் தயாரிக்கத் தேவையான மாவைப் பிசையவும், முட்டையின் வெள்ளையை அடித்து நுரையான திரவமாக ஆக்கவும் பயன்படுத்துவது. அவற்றின் நினைப்பு, தன் குடும்பத்துக்கு இத்தனை காலம் சாப்பிடக் கொடுத்த அத்தனை கேக்குகளையும், பாஸ்தாக்களையும் ஏதோ ஒரு வக்கிர நடத்தையால் தான் மாசுபடுத்தி விட்டதைப் போல, ஒரு குற்ற உணர்வை அவளுடைய அடிவயிற்றில் எழுப்புகிறது.
கண்ணாடிக்கெதிரே போகுமுன் தலைமுடியை வாரிக் கொள்கிறாள் டான்னா. அவள் கண்கள் பார்க்கவே பயமூட்டுகின்றன: குழியான கண்கள், வெந்த உதடுகள், மூக்கின் பக்கவாட்டில் உப்பி உருமாறிப் போன முகம், கன்னங்களில் இறகு விரிக்கப்பட்டுச் சப்பையான வண்ணத்துப் பூச்சியின் உருவில் படர்ந்த ஓர் இளஞ்சிவப்புக் கறை. பிரசவ உதவிச் செவிலி அதன் பெயரை எழுதி அவளிடம் கொடுத்திருந்தாள் – க்ளோஆஸ்மா (பொன் தவிட்டு நிறப் படர்க்கை நோய்). முகத்தை புளிப்புக்காடியால் (வினெகர்) கழுவும்படி சொன்னாள்.
அவளுக்கு நான்கு மாதங்களாகி விட்டன – அந்தக் குமட்டல் இந்த நேரம் நின்றிருக்க வேண்டும். அவள் பாட்டி சொன்னது சரிதான் என்றாகி விட்டது: ‘பெண் குழந்தைகள்தான் ரொம்பப் பாடு.’
அவளுடைய மற்றப் பிரசவங்களெல்லாம் மரியாதைக் குறைவில்லாத ஆரோக்கியத்தோடு கடக்கப்பட்டிருந்தன- அவள் மின்னினாள், உடற்பயிற்சி செய்தாள், தன் வயிற்றைக் கர்வத்தோடு தடவிக் கொண்டாள், எதுவும் அவளைத் தொல்லை செய்யவில்லை- ஆனால் இது வேறாக இருக்கிறது. இந்த முறை அவள் ஆதரவை நாட வேண்டி இருந்தது, எதுவும் முடியாத சோர்வு, அவள் பிரயோசனமே இல்லாது போயிருந்தாள். அவளுக்குத் தெரியும் இது ஆபத்தானது, அவளுடைய வயதில் இன்னொரு குழந்தை என்று- தேவையற்ற தற்பெருமை இதில் இருந்தது; அவளுடைய ஆரோக்கியமாக வளரும் நான்கு பையன்களுக்காக, நன்றி உணர்வில்லாதவள் என்று தெரிகிறது போல.
தன் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டிருந்தாள், ஆனால் இப்போது பார்க்கிறாள். அவளுடைய கண் மணிப்பாவைகள் கூட நிறம் மங்கி விட்டாற் போலிருக்கின்றன- முன்பு பளிச்சென்ற நீல நிறம் கொண்டிருந்தவை இப்போது சோர்வான சாம்பல் நிறமாகத் தெரிகின்றன- ஆனால் கண்களைச் சூழ்ந்த தோலின் சுருக்கங்கள்தான் அதிரச் செய்கின்றன. அவளுடைய அம்மாவின் கண்கள் போலவா! அதுதான் இது – அவளுடைய அம்மா அவளைப் பார்க்கிறாள், வெற்றிப் பெருமிதத்துடன். இப்போது என்ன சொல்வாளாம் டான்னா?
பகல் சாப்பாடு. பகல் சாப்பாட்டைத் தயாரிக்க மறக்கிற அம்மா இல்லை அவள். வீட்டில் உருளைக் கிழங்கு இருக்கிறதில்லையா? துணி துவைக்கும் எந்திரத்துக்கு அடுத்தாற்போல இருக்க வேண்டும், அவளுக்கு நிச்சயம் தெரியும். உறைபனிப் பெட்டியிலிருந்து அந்த வறுத்த பன்றிப் பதார்த்தத்தை எடுத்தாளே அதை முடித்து விட்டாளா, இருக்கிறதா?
நீரால் முகத்தை அடித்துக் கழுவுகிறாள், குளியலறைக் குழாயில் ஒரு காலை அலம்புகிறாள், கஷ்டப்பட்டுக் குனிந்து கால்விரல்களிடையே இருக்கும் மண் துகல்களைத் தேய்த்து அலசுகிறாள், தரை விரிப்புத் துண்டில் காலைத் தேய்த்து உலர்த்துகிறாள், அது நாய் தன் மலத்தை மூடும் செயல்போல இருக்கிறது அவளுக்கு.
துணி அலமாரியில் தேடுகிறாள், ஏதாவது மங்கிய நிறத்தில், சாதாரண உடைபோல இருக்கிறதா என்று பார்க்கிறாள், ஆனால் அவளுக்குக் கிடைப்பது நேர்த்தியான வரிக்கோடிட்ட ஒரு பிரசவ ஆடைதான், நீலமும், பிரகாசமான இளஞ்சிவப்பு நிறமுமாக இருக்கிறது. கண்ணாடியில் சோதிக்காமல் சமையலறைக்குப் போகிறாள். அந்த ஆடையின் அழகான நேர்த்தியும், அலங்கோலமாக இருக்கும் அவள் முகமும் அருகருகே வைத்ததில் பார்வைக்கு அவளை இன்னும் மோசமாகக் காட்டியிருக்கும். எதானால் என்ன. முதலில் அவள் சாப்பாட்டுத் தயாரிப்பைத் துவங்கணும், பிறகு அவள் தட்டுக் கழுவும் எந்திரத்தில் பாத்திரங்களை நிரப்புவாள், மேஜையைத் துடைப்பாள் –ஒருவேளை வாக்குவம் எந்திரத்தை வைத்து வீட்டில் தூசி, அழுக்குகளை அகற்றிச் சுத்தம் செய்யக் கூட அவளால் முடியலாம்.
மாடிப்படிகளில் கீழ்ப்படியருகே வருகையில் ஒரு தாழ்ந்த, விறுவிறுப்பான முகமுகெனும் ரீங்கரிப்பு ஒலியைக் கேட்கிறாள், அப்போது அவளுக்கு உறைக்கிறது, தான் அந்த ஒலியைக் காலை நேரம் பூராவும் கேட்டிருப்பதாக, ஏதோ தன் கனவுகளை உடைத்து நுழைவதாக- உத்வேகம் கொண்ட பூச்சிகளாலான எந்திரம் ஒன்றின் ஒலியாக.
மூடப்பட்ட ப்ளாஸ்டிக் கூடை ஒன்றின் விளிம்புகளைச் சுற்றி பளபளப்பான பெரிய நீலநிற ஈக்கள் சுழன்று மோதுகின்றன, சில அரை மயக்கத்தில் தரையில் மெதுவாய் ஊர்கின்றன, எழுந்து காற்றில் சுழன்று மறுபடி மறுபடி அந்தப் பெட்டியின் மூடியின் மீது மோதி நிலைகுலைந்து விழுகின்றன. கோழி எலும்புகள் – அதுதான் இருக்க வேண்டும், திங்கள் கிழமை இரவின் கோழி இறைச்சியின் மிச்சங்கள், அந்தக் கரும் பையின் அடியில் கிடக்க வேண்டும். அவள் அந்தக் குப்பைத் தொட்டியைத் தாண்டி நடந்து போகிறாள். புழுக்களின் முட்டைகள் திட்டுத் திட்டாக அந்த விளிம்பில் படர்ந்திருக்கின்றன. அவற்றை அவளால் இப்போது எதிர் கொள்ள முடியாது. அவள் சமையலறைக் கழுவு தொட்டியில் நிரப்ப சுடுநீர்க் குழாயைத் திறந்து விடுகிறாள், அதில் பச்சை வாசனை அடிக்கும் பாத்திரம் கழுவும் சோப்பைத் தாராளமாக அழுத்திப் பீய்ச்சுகிறாள். திட்டமிட்டபடி உருளைக்கிழங்குகளுக்காக ஒரு பாத்திரத்தை முதலில் கழுவுவாள், தண்ணீரைக் கொதிக்க வைப்பாள். பிறகு ரப்பர் கையுறைகளைத் தேடி எடுத்து, அந்தக் குப்பைத் தொட்டியை வெளியே கொண்டு போவாள். ப்ளீச் திரவமும் தேவை. அதைத் தேடி எடுப்பாள்.
ஒரு நெளிசல். ஏதோ ஈரமாக, பெரியதாக; எதுவோ கொழகொழவென்று, திரும்பியபடி, விர்ரிட்டபடி, அங்கே அவளுடைய கால்பெருவிரலின் வளைவுக்குக் கீழே.
சொரசொரப்பான தேய்ப்பானால் பாத்திரத்தைத் தேய்த்துக் கொண்டிருந்தவள், காலடி உணர்ச்சி உந்தும் அருவருப்பைக் கவனிக்காமல் இருக்கத் தீர்மானத்தோடு இருப்பதால் அதை அனேகமாக அலட்சியம் செய்து கொண்டிருக்கிறாள். ஒரு நிமிடம் தன் கற்பனை சக்தியை மனத்துள் திட்டுகிறாள், அது போல எதுவும் இங்கு வீட்டுக்குள் நடக்காது, ஆனால் அது இருக்கிறது, அவளால் உணர முடிகிறது – பலூன் போன்ற அதன் உடல் சுழல்கிறது, அதன் இறகுகளின் உதறல் தெரிகிறது. அது அவளைக் கண்டு பயமேதும் கொள்ளவில்லை, அவள் காலை உயர்த்தும்போது, சிறிதே வெறுப்புடன், அங்கிருந்து ஊர்ந்து அகல்கிறது. அது மிகக் கருப்பாக, கருஞ்சிவப்பாக, இருக்கும் ஒரு முதிர்ந்த நீல ஈ- அதற்கு உரோமம் கூட இருக்குமா என்ன? நெருஞ்சிப் பூவின் மொட்டுப் போல கூர்மையான உரோமம். அவள் வாந்தி எடுக்கிறாள், நியான் நிறத்தில் பித்தம் தொட்டியிலிருக்கும் நுரையை நொறுக்கிப் பாய்கிறது. நல்ல வேளையாக அவள் கழுவும் தொட்டிக்கருகே இருந்தாள்.
கர்ப்பகாலத்தில் மீதமிருந்த நாட்களில் எல்லாம் இந்த உணர்ச்சி அவளுக்குத் திரும்ப வந்து கொண்டே இருந்தது- டாய்லெட்டில், குளிக்கும் தொட்டியில், உருளைக்கிழங்கு உரிக்கையில்- அப்போதே கழுவப்பட்ட அவள் தோல் மீது இறக்கையின் ரீங்கரிப்பும், அது அவமதிக்கப்பட்டாற் போல படபடத்துக் கொண்டு, தடுமாறியபடி ஊர்ந்து போனபோது, நீர்மீது படர்ந்த பெட்ரோல் படலம் போல அந்த ஈயின் உடல் மின்னியதும்.
_____
நாள் காரமான வெண்மையாக, மூடிய ஜன்னல்திரைகளூடே நுழைந்து கொண்டிருந்தது. ஓர் உஷ்ண அலை வருமென உறுதி கொடுக்கப்பட்டிருந்தது. சிசு தோலுக்கடியில் புரண்டது, தன் உடலின் ஒரு பகுதியை – ஒரு கையோ, காலோ – அவளுடைய விலா எலும்பில் செருகிக் கொண்டிருந்தது. அது குறைந்தது பின் மதியமாக இருக்கவேண்டும். படுக்கைக்கு அருகில் இரண்டு வாட்டப்பட்ட ரொட்டித் துண்டுகள் வளைந்து, குளிர்ந்து போய்க் கொண்டிருந்தன.
டான்னா தன் தொலைபேசி எங்கே என்று வியந்து கொண்டிருந்தாள், நேரம் என்ன என்றும் யோசித்தாள், துணிகளைத் துவைப்பதைத் திட்டமிட்டுக் கொண்டுமிருந்தாள் – முதலில் இளஞ்சூடான 90 டிகிரியில் வெளிறிய நிறத் துணிகளுக்கான துவைப்பு, பிறகு ரக்பி துணிகளுக்கு ஒரு துரிதத் துவைப்பு – அப்போது அவள் வாயிற்கதவு மணியின் எலெக்ட்ரானிக் டிங் டாங் ஒலியைக் கேட்கிறாள், முன் கதவு கிரீச்சிட்டுத் திறக்கிறது.
அவள் தன் முகத்தைத் தலையணையில் புதைத்துக் கொள்கிறாள். அவள் வாந்தி எடுக்க மாட்டாள். வாந்தி எடுத்து அவளுக்கு ஓய்ந்து போய் விட்டது.
“டான்னா? யூ-ஹூ? ஹெல்லோ?”
கீழே கடைசிப்படி சிறிதாக முனகுகிறது- யாரோ படியேறி வருகிறார்கள்.
“ஹெல்ல்லோஓஒ? டான்னா?”
“இங்கே!” நேற்றிலிருந்து டான்னா யாருடனும் பேசவில்லை, அவள் குரல் குறுகிப் போயிருந்தது- அது சிரமப்படுகிறது, உடைகிறது, தன்னைப் பார்த்துத் தானே அச்சப்படுகிறது. அவள் மறுபடி முயல்கிறாள் – “ஒரு நிமிஷம்! பொறுங்க!”
அவள் அறையைச் சுற்றிலும் பார்வையிட்டு தன் மேலங்கி எங்கே என்று நோக்குகிறாள்; தேநீர்க் கறையோடு கோப்பைகள், கூடை போதாமல் வழிந்து விழும் அழுக்குத் துணிகள்- அவள் தோற்றுப் போனவள். நடைப்பயிற்சிக்கான விசாலமான கால் சராய்களைப் படுக்கையறையின் தரையிலிருந்து எடுக்கிறாள், அவளுடைய குட்டையான, மிகவும் குட்டையாகி விட்ட பிரசவகால இரவு உடைக்குக் கீழே இழுத்து அணிகிறாள்.
குச்சியான கைகளோடு, சிறிய, கொரி எலி போன்ற உருவுடைய ஒரு மூதாட்டி- அவளுடைய அண்டை வீட்டுக்காரி எஸ்மே- மாடிப்படிகளின் மேல் படியில் நிற்கிறார், ஒரு கை மாடிப்படிக் கைப்பிடியின் மீது இருக்கிறது, முகவாய் நகரவாசிகளுக்கு அறிவிப்புகளை உரக்கக் கூவும் நகரச் செய்தி அறிவிப்பாளரைப் போல உயர்ந்திருக்க, ‘டாஆஆன்னா” என்று ஏறி இறங்கும் இரு வித ஒலிப்புகளால் கூப்பிட்டிருக்கிறார்.
“ஹாய், சாரி,” என்கிறாள் டான்னா. “ஹாய். சாரி, எஸ்மே. இன்னக்கிக் காலையில எனக்கு உடம்பு சரியில்லை.”
எஸ்மேயின் தலை சிறியதாக, ஒரு பறவையின் தலை போல நேர்த்தியாகவும், நீள்வட்டமாகவும் இருந்தது. கன்னங்கள் ஆரோக்கியமான முதிய வயதால் மெத்தென்றிருந்தன. தலைமுடிக்கு வழக்கமான நீலச் சாயத்துக்குப் பதில், துரு நிறக் கருப்புச் சாயம் பூசி, அதை தலையோட்டுக்கு நெருக்கமாக வெட்டியிருக்கிறார். டான்னாவைப் பார்த்து மௌனமாகிறவர், அவளை நன்றாகப் பார்க்க ஒரு கணம் எடுத்துக் கொள்கிறார். பிரசவகாலத்து இரவு ஆடை ரிப்பன்களோடு சாடின் துணியில் உள்ளது, கூடதிகமாக கவர்ச்சியூட்ட முனைகிறது. அவளுக்கு அது பொருத்தமற்று மேலே அமர்ந்திருக்கிறது, ஆனால் விசாலமாக உள்ள கால் சராய் இடையைச் சுற்றி உப்பியிருப்பதால், அவள் ஏதோ ஒரு ரப்பர் வளையத்தின் மேல் மிதப்பது போலத் தெரிகிறாள்.
‘உன்னைத் தொந்தரவு செய்யறேன், மன்னிச்சுக்கோ, கண்ணு…’ எஸ்மே அணிந்திருக்கும் முக்கோண வடிவுக் கம்பளி மேலங்கி வேட்டைநாய்ப் பற்களின் நேர்கோட்டு வரிசைகளாலான பாணியைக் கொண்டுள்ளது. அது டான்னாவுக்குத் தானே சூடாக இருப்பதான உணர்வைக் கொடுக்கிறது. ‘வாசக்கதவு சும்மாத்தான் தாழ்ப்பாள் போட்டிருந்தது. நீ மயக்கமடிச்சுக் கிடக்கியோ எப்படின்னு பார்க்கணும்னு எனக்குத் தோணித்து.’
‘இல்லையில்லை, அதனாலென்ன. நா இப்பத்தான் விழிச்சுகிட்டேன். இப்ப ஒண்ணும் மோசமா இல்லை எனக்கு…’ எஸ்மே தன் புருவங்களை உயர்த்துகிறதை டான்னா பார்க்கிறாள், அவை கருநீல வண்ணமாக இருப்பதையும், வலைப்பின்னலான சுருக்கங்கள் கொண்ட அவள் தோலில் அந்தச் சாயம் கடுமையாக இருப்பதையும் கவனிக்கிறாள். ‘நான் நேத்திக்கு இருந்ததுக்குப் பரவாயில்லைங்கறேன். ஒரு கோப்பை தேநீர் கொடுக்கட்டுமா, எஸ்மே?’
‘அப்படியா…’ எஸ்மே தன் கைக்கடிகாரத்தைச் சோதிக்கிறார். ‘ஒரு கப் காஃபி வேணுமானா சீக்கிரமாக் குடிக்கலாம்,’ என்கிறார். ‘சாப்பிட்டாப் போச்சு.’ டான்னா மாடிப்படிகளை நோக்கி நடக்கிறாள், ஆனால் கிழவி அவளுடைய முழங்கையில் மென்மையாகக் கிள்ளுகிறார். ‘நீ ஒழுங்கா உடையை மாத்திக்க, எனக்கு நேரமிருக்கு. சரியா உடுத்து டான்னா, அது உனக்கு தெம்பைக் கொடுக்கும். நான் சமையலறையில இருக்கேன். உன் பையன்களுக்குக் கொஞ்சம் தேயிலை கொண்டு வந்திருக்கேன் – உன்னால நிறையச் செய்ய முடியல்லேன்னு எனக்குத் தெரியும்.’
குசுப் போன்ற நாற்றத்துடனும், அவலமாகவும் இருந்த படுக்கையறையில், டான்னா தன் இரவு உடுப்புகளைக் களைந்து கால் சராய்களையும் உதறி எறிகிறாள். டாய்லெட்டுக்குப் போகத் தாமதமானதால் தன் கால் மீதே வாந்தி எடுக்கிறாள், சூடான மூத்திரம் அவளுடைய கால் மீது வழிந்து இறங்குகிறது. அழுக்குத் துணிக் கூடையிலிருந்து ஒரு காலுறையை எடுத்து கணுக்காலிலிருந்து, வெண்ணெய் போல மென்மையாக இருக்கும் தொடை வரை துடைக்கிறாள். அழுக்குத் துணிகளின் வாடை அவளுக்கு மறுபடி குமட்டலெடுக்கச் செய்கிறது. மூத்திரத்தில் நனைந்த தன் உள்ளாடையைக் கழற்றி அதிலிருந்து கால்களை எடுத்து வைக்கிறாள்- ஒரு காலை முதலில், அடுத்த காலைப் பின்னர் – அந்தக் கணம் உடனே அவளால் தன் பாட்டியை முகரவும், கேட்கவும் முடிகிறது. அவருடைய கடைசி நாட்களில் எப்படி இருந்தார்; அவருடைய நீண்ட காலப் பழக்கங்கள் எல்லாம் ஒரேயடியாகக் கரைவதால் அவர் உணர்ந்த கடுமையான அவமானம்; உள்ளாடையாக அவர் இன்னமும் அணிந்திருந்த அந்தப் பெரிய வெள்ளை அரைக்கால் சராய்கள்; அவருடைய முன்னங்காலை குழந்தைகளைச் சுத்தம் செய்ய உதவும் துணியால் டான்னா துடைத்தபோது அவர் முகம் சுளித்தார்; ‘ஓ டான்னா,’ என்றார், ‘உனக்கு இப்படி ஆச்சுன்னா அவமானமாயிருக்காதா?’
அதே வரி போட்ட ஆடைதான் – அதைத்தான் அவளால் கண்டெடுக்க முடிந்தது. தன் தலையை அவசரமாக வாரிக் கொள்கிறாள். வயிற்றுக் குழந்தையின் விக்கல்கள் அவளுடைய இடுப்பெலும்பை அதிரச் செய்கின்றன. ஆறுதல் கொடுக்க அவள் தன் உப்பிய வயிற்றை வட்டமாகத் தடவுகிறாள். எஸ்மே குழந்தைகளுக்கு இரவுச் சாப்பாடு தயாரித்திருக்கிறாள். டான்னா ஒன்றுக்கும் உதவாக்கரை.
எஸ்மேயின் மேலங்கி ஒரு மர நாற்காலியின் சாய்மானப் பகுதியில் விரிக்கப்பட்டிருக்கிறது. சமையலறை அவ்வளவு மோசமாக இல்லை. மேஜையில், காலைக் கஞ்சியின் காய்ந்த பொருக்குகளோடு, நான்கு வட்டியல்களும், தேக்கரண்டிகளும்தான் இருக்கின்றன. கடுத்த முகத்துடன் எஸ்மே அவற்றை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் மஞ்சள் நிற ஷீர்சக்கர் மேலாடையும், அவரது தடித்த இடுப்பின் மேல் உயரமாக அமரும் ஜீன்ஸும் அணிந்திருக்கிறார். கற்களோடு கரட்டுத்தனமாகச் சலவை செய்யப்பட்ட அந்த ஜீன்ஸ் 1980களின் பாப் இசை நட்சத்திரங்கள் அணிந்த வகை போல இருக்கிறது. வட்டியல்களைக் கழுவும் தொட்டிக்கு எடுத்துப் போகும்போது அவருடைய மூக்கில் சிறிது சுளிப்பு தெரிகிறது.
’ஓ, வேண்டாம்,’ என்கிறாள் டான்னா,’அப்படியே விடுங்க, எஸ்மே.’
எஸ்மே அவற்றை உலர வைக்கும் மேடையில் வைக்கிறார், சரணடைபவளாகக் கையுயர்த்துகிறார். ‘நான் வேறெதையும் தொடல்லை.’
தான் கொணர்ந்த பெரிய பிரம்புக் கூடையிலிருந்து எடுத்து வைக்கத் தொடங்குகிறார், மேஜையில் வைக்கும் ஒவ்வொன்றின் பெயரையும் அடையாளப்படுத்திச் சொன்னபடி.
‘ப்ளாக்கர்ரண்ட் ஜாம்,’ என்கிறார், ‘உன்னோட அருமையான கணவனுக்கு…’
எஸ்மே ‘அருமையான’ என்று சொல்லும் விதத்தில் எதுவோ – பாதி கேலியாக, பாதி பாசத்தோடு – இருக்கிறது, அது தன் கணவனை நேசிப்பதற்காக டான்னாவை ஒரே நேரம் கொஞ்சம் முட்டாளாகவும், அவனுக்குத் தகுந்தவள் இல்லாதவள் போலவும் உணரச் செய்கிறது. அந்த வாட்டிய ரொட்டித் துண்டுகளை அவன் படுக்கைக்குக் கொண்டு வந்து வைத்ததற்கு, அவள் அவனுக்கு நன்றியாவது சொன்னாளா?
‘… அவருக்கு இது பிடிக்குமில்லையா? அவர் காலையில் ப்ரெட்டில் தடவிச் சாப்பிடலாம் இல்லை வேலையிலிருந்து திரும்பி வந்தபோது ஒரு தின்பண்டம் போல எடுத்துக் கொள்ளலாம்… நீ ஜாம் ஏதும் செய்யறதில்லையா?’
‘இல்லை. ஒண்ணு ரெண்டு தடவை செய்து பார்த்தேன். எனக்குச் சரியா வரதில்லை… என் பாட்டி ஆப்பிள் ஜெல்லி செய்வாங்க…’
அவள் பெரிய பாத்திரம் ஒன்றைப் பயன்படுத்துவாள், சுற்று வேலைகள் செய்யவிருந்த ஒரு அறையில் கொக்கியில் தொங்கவிட்ட சிறுதுளைகள் கொண்ட வலைப்பையை அதற்கு வைத்திருந்தாள்.
‘நான் அடுத்த தடவை செய்யறப்ப சொல்றேன். அந்த வழியெல்லாம் சொல்லித் தரேன்…. அந்த மாதிரி விஷயத்தை எல்லாம் கூகிள்லேர்ந்து கத்துக்க முடியாது. இங்கே வேறென்ன இருக்கு என்கிட்டெ… உனக்கு குமட்டலைத் தடுக்க இஞ்சி டீ- ஹெல்த் கடைல இருக்கற பொண்ணு அதை சிபார்சு செய்தா- ‘
‘உங்களுக்கு நன்றி எஸ்மே, இதெல்லாம் ரொம்ப-’
‘இது ராத்திரி சாப்பாட்டுக்கு.’
டின்ஃபாயிலில் தாராளமாகச் சுற்றி மூடப்பட்ட ஒரு வாட்டுந்தட்டு. அந்த மெல்லிய தகட்டின் ஒரு மூலையைத் தூக்கும் எஸ்மேயின் கையின் மேல்புறத்தில் கட்டிதட்டிய தோல் சுருக்கங்களை டான்னா கவனிக்கிறாள். வெங்காயமும், இன்னதென்று டான்னாவுக்குப் பெயர் சொல்லத் தெரியாத வேறொரு வாசனையும் அங்கிருந்து எழுகிறது.
‘வாட்டற வலைக் கம்பிக்குக் கீழே நாலஞ்சு நிமிஷம் வைக்கணும், போதும்,’ என்கிறார் எஸ்மே, தன் படைப்பு மீது பெருமிதத்துடன் சிரித்தபடி –பன்றி இறைச்சி, வெங்காயம், பச்சையாய் சில இலைத் துண்டுகள், ஈரமான வட்ட வில்லைகளாக வெள்ளைப் பாலாடைக் கட்டித் துண்டுகள் ,மெல்லிய அடுக்குகளாக வாட்டப்பட்ட மாவுப் பொதியின் மீது பொருத்தப்பட்டிருக்கின்றன.
’நீங்க இவ்வளவெல்லாம் செய்திருக்க வேண்டாம், எஸ்மே.’
‘சரிதான், உன்னோட பெரிய பையன்களெல்லாம் பட்டினியாப் போக விடக் கூடாதில்லையா.’
டான்னா முறுவலிக்கிறாள், ஆனால் தன் சிரிப்பு நன்றியைக் காட்டுவதை விட நோய்ப்பட்டதாகத் தெரிகிறதோ, தான் நம்பமுடியாதவளாகத் தெரிகிறோமோ என்று அச்சம் அவளுக்குள் எழுகிறது. அந்த வாசனை – வெங்காயமும், பூண்டும், பழுப்பாகி வரும் வெண்ணெயும், வயதான தோலின் சன்னமான தோற்றமும், அதென்ன பூவின் வாசனை? ஏதோ வாசனைத் திரவியமாக இருக்கலாம் – பாட்டியின் வாசனைத் திரவியம். அவருடைய சமையலறை. வேலை செய்து தடித்துப் போன அவரின் உள்ளங்கைகள், அந்தத் தடவை நடுங்கிய அவருடைய கன்னங்கள்- ’உனக்கு ஆச்சுன்னா அவமானமா இருக்காதா?’- அவருடைய சிக்கனமாக இறுகிய, ஆண்களுடையதைப் போன்ற கால் ஆடுதசைகள்.
எஸ்மே தன் மேலங்கிக்கு அடுத்திருக்கும் நாற்காலியை மேஜையடியிலிருந்து வெளியே இழுக்கிறார், உட்கார்கிறார். ‘அப்ப, உனக்கு உடம்பு இன்னும் சரியாகவே இல்லையா?’
’நிஜமாவே சரியாகல்லை,’ தலையை ஆட்டியபடி டான்னா சொல்கிறாள். ‘நம்பவே முடியல்லெ, அத்தனை மோசம்….’
‘இதென்ன, விசித்திரமா இருக்கே? வழக்கமா முதல் மூணு மாசம்தான் இப்படி இருக்கும். உனக்கு எத்தனை மாசம் இப்பொ? ஏழா?’
டான்னா ஆமோதித்துத் தலையசைக்கிறாள், காஃபிப் பொடியை ஃபில்டரில் இட்டு அழுத்திச் சமன் செய்தபடி. ‘இது என் குடும்பத்தோட பாதிப்புன்னு நினைக்கிறேன். பொண் குழந்தைகள்னா என் பாட்டிக்கும் இப்படித்தான் இருந்ததுன்னு எனக்கு நினைவு.’
‘துடைக்கிற ஸ்பாஞ்ச் ஒண்ணு அங்கே இருக்கா டான்னா? அதை ஈரமாக்கிக் கொடு எங்கிட்டே…. இங்கே சாகொலேட்டோ இல்லெ வேற ஏதோ மேஜைல ஒட்டிக்கிட்டு காஞ்சிருக்கு. ஐஸ் க்ரீம்…’
‘என்னோட பாட்டியைப் பத்தி உங்க கிட்டே முன்னாடியே சொல்லி இருக்கேன், இல்லியா? அவங்கதான் என்னை வளர்த்தாங்க, பொதுவா. அவங்களுக்குப் பதினெட்டு வயசுதான், முதல் குழந்தைக்குக் கர்ப்பமாகிறபோது- அதைச் சொன்னேனா? அவளுக்குத் தெரியறத்துக்கு முன்னாடியே அவளோட அம்மாவுக்குத் தெரிஞ்சுடுத்து, அதனாலே அவங்க அவளுக்கு மஞ்சள் சூப் கொடுத்தாங்க. என் தாத்தா அவளைச் சில மாசங்களாத்தான் பார்த்துப் பேசிக்கிட்டிருந்தாரு…’
‘உனக்குத் துடைக்கற ஸ்பாஞ்ச் புதுசா வேணும், டான்னா. இது பழசாப் போச்சு.’
‘அவங்க சீக்கிரமாக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, ஆனா அவ ரொம்ப சீக்கா இருந்ததாலெ அம்மா வீட்லயே குழந்தை பிறக்கற வரையிலெ இருந்தா. ஆனா அது செத்துப் போயிடுத்து. பிறந்து கொஞ்ச நாள் ஆனபோதே செத்துப் போயிடுத்து.’
‘ரொம்ப வருத்தமான விசயம்.’
‘அந்தக் குழந்தையோட அடக்கம் நடக்கிறப்போ, பாட்டியோட மாமியார், குழந்தையோட சாவு கடவுளோட தண்டனைன்னு சொன்னாங்களாம்.’
எஸ்மே கண்ணைக் கொட்டுகிறார், தலையை அசைக்கிறார். ‘ஜனங்களாலெ ரொம்பவே கொடுமையா நடந்துக்க முடியும், எனக்கு அது நல்லாவெ தெரியும். இங்கே நான் முன்னே குடி வந்தப்ப, நான் ஒரு விதவைன்னு சொன்னேன். கைவிடப்பட்ட பெண்டாட்டின்னு சொன்னா அதுல அவமானம் இருந்துது. ஜனங்களுக்குச் சந்தேகமா இருந்திருக்கு. வம்பு பரவிச்சு, நான் தான் விட்டுட்டு வந்தவன்னு, நியூஸ்பேப்பர் கடையில எனக்கு எதையும் விற்க மாட்டேனுட்டாங்க, அதுதான் இங்கெத்திய உண்மை.’
‘உங்க காஃபியில க்ரீம் போடலாமா எஸ்மே? இல்லை பால் விடணுமா?’
‘மாகிக்கு நான் நல்ல அம்மாவா இருக்கல்லை. அவ ரொம்பக் கஷ்டப்படுத்தற பொண்ணா இருக்கக் கூடியவ. நான் வேலை செய்ய வேண்டி இருந்தது, நான் ரொம்ப தனிமைப்பட்டிருந்தேன் – ஒதுக்கப்பட்டிருந்தேன் – நான் அவளுக்கு அத்தனை நல்ல அம்மாவா இருக்கல்லைன்னு நினைக்கிறேன் –’
‘ஆனா, நீங்க இப்பொ அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு செய்யறீங்களே,’ டான்னா சொல்கிறாள்.
இறுக்கமான சிரிப்பு ஒண்ணு எஸ்மேயின் உதடுகளில் ஓடுகிறது. ‘உனக்குத் தெரியுமா, எட்டு மாசம் கர்ப்பமா இருக்கச் சொல்ல, என்னால இன்னும் வழக்கமான என்னோட துணிங்களைப் போட்டுக்க முடிஞ்சது – அதை உன்னால நம்ப முடியறதா?’
‘ஏயப்பா,’ என்கிறாள் டான்னா, க்ரீம் இருந்த ஒரு அட்டை டப்பாவை உயர்த்திக் காட்டியபடி, ‘எஸ்மே, உங்களுக்குக் க்ரீமா, இல்லை பாலா உங்களோட –’
‘எட்டு மாசக் கர்ப்பிணியா ஓ’கான்னெல் தெரு வழியா நடந்து போய்க்கிட்டிருந்தேனா, அப்ப சில பசங்க என் பின்னாலேருந்து விஸில் அடிச்சாங்க- அந்த நாள்லெ நிறையப் பசங்க என்னைப் பாத்து விஸில் அடிப்பாங்க. நான் உசந்த தரத்தில உடுத்துவேன். பாரு, நான் திரும்பினேனோ இல்லியோ, என் வயறு இருக்கறதைப் பார்த்தாங்க, “ஓ, சாரி,”ன்னாங்க, “சாரி, லவ்”… நான் என்னன்னா என்னைப் பத்தி ரொம்ப சந்தோஷப்பட்டுக்கிட்டிருக்கேன். … எனக்கு வயித்திலெயும் தழும்புல்லாம் எதுவும் இல்லை.”
“பிரசவ வரிங்களா? எனக்கும்தான். அது இதுவரைக்கும் அப்படி. ஆனா, இந்தத் தடவை… யார் கண்டா?”
டான்னா தன் அம்மாவின் கண்களை தன் முகத்திலும் பார்ப்பதையும், ஏதோ கெட்ட நிமித்தம்போலத் தன் முகத்தில் இறக்கைகளின் படர்தேமல் நிழலாடுவதையும் பற்றி அச்சப்படுவதைப் போலவேதான் பிரசவ வரிகளைப் பற்றியும் பயம் கொண்டிருக்கிறாள்.
‘பிரசவ வரிகள்,’ என்கிறார் எஸ்மே, ‘ஆமாம், ஏதுமே இருக்கல்லை.’
கடைசி நாட்களில் ஒரு நாள், டான்னாவின் பாட்டி குளித்து விடச் சொல்கிறார். அவருடைய தொப்புள் வியப்புக்குரிய விதத்தில் மிக உயரத்தில் இருப்பதாக டான்னா நினைத்தாள். அதிலிருந்து மேடும் பள்ளமுமாக, வெளுத்த வரிகள் கண்பாவையின் ஆரக்கோடுகள் போலப் பிரிந்து ஓடின. அதை உண்டாக்கிய தொப்புள் கொடியை யார் கத்திரித்தார்கள் என்றும், டான்னாவின் குழந்தைகளுக்குப் பாட்டி செய்த மாதிரி அதன் மேல் ஒரு நாணயத்தையும், பருத்திப் பஞ்சையும் வைத்துக் கட்டினார்களா என்றும் யோசித்தாள்.
அடுத்த நாள் பாட்டி மருத்துவமனைக்கு எடுத்துப் போகப்பட்டார், அதற்குப் பிறகு அவர் பேசவேயில்லை. அவர் பல எந்திரங்களில் இணைக்கப்பட்டிருந்தார், அவை அவரின் மூச்சைக் கொப்புளங்களாகக் காட்டின, பல நாட்களுக்கு அவரிடமிருந்து வந்த சத்தங்கள் எல்லாம் வான்கோழியின் கெக்கலிப்பைப் போலவிருந்தன, அல்லது புதிதாகப் பிறந்த குழந்தையின் மூச்சுத் திணறல் போல- வெறுமனே உயிருடன் இருக்கப் பெரும்பாடுபடுவதைப் போல- ஒலித்தன. ஆனால் ஊசி மூலம் சொட்டுச் சொட்டாக உள்ளிறங்கியவையும், அவருடைய உடலின் பிடிவாதமான மூச்சும் அவரைப் பிடித்திழுத்து வைத்திருந்ததால், அவள் இருக்கப் பாடுபடுகிறாரா, அல்லது விடுபடப் போராடுகிறாரா என்று சொல்ல முடியவில்லை.
எஸ்மேயின் கோப்பையில் கொஞ்சம் க்ரீமை விட்டு, எந்திரத்தின் பித்தானை அழுத்துகிறாள் டான்னா. எஸ்மேயின் முன் காஃபியை வைக்கிறாள், தனக்கு இஞ்சித் தேநீரை ஒரு கோப்பையில் எடுத்துக் கொண்டு அவள் எதிரே அமர்கிறாள்.
’ஊழலுக்கு மன்னியுங்கள்,’ என்கிறாள்.
எஸ்மே தலையசைக்கிறார்: ‘அந்த மூலையைப் பார்த்தியா?’
பின் ஜன்னலின் தட்டிகள் கொண்ட திரை ஒரு புறம் கோணிக் கொண்டு விரியாமல் சேர்ந்து இருக்கிறது. அது அப்படிக் கோணலாகிப் பல மாதங்கள் ஆயின.
‘அந்த ஜன்னலுக்குப் பொருந்தக் கூடியதாக என்னிடம் லேஸ் திரைகள் இருக்கு,’ என்கிறார் எஸ்மே. ‘உனக்கு வேணும்னா….’
‘நன்றி.’
‘ஒருநாள் உனக்கு நேரமிருந்தா ஒரு மணி போதும், அந்தத் திரையைக் கீழே எடுத்துட்டு, அந்தப் பக்கத்தை சோப்பால ஒரு தடவை துடைக்கணும்..’
‘நன்றி.’
‘நாளைக்கு அதைக் கொண்டு தரேன்.’
‘ஓகே. ஆனால் இதைச் செய்ய எனக்குக் கொஞ்ச நாள் ஆகும்.’
‘அந்த மஞ்சள் சூப்பை எப்படிச் செய்தாங்க?’
‘கருவைக் கலைக்கறத்துக்கா? எனக்குத் தெரியாது. மஞ்சளை வச்சு செய்தாங்களோ? அயர்லண்டில் அப்பொ எல்லாம் மஞ்சள் கிடைக்குமா?’
‘நான் அதைப் பத்திக் கேட்டிருக்கேன். ஆனா எப்படிச் செய்யறதுன்னு தெரியாது.’
‘என்னோட பாட்டிக்கு குமட்டலெடுத்த பிறகு, ஒருநாள் காலைல மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தபோது, அவளோட அம்மா இந்த சூப்பைத் தயாரா வச்சிருந்தாங்களாம். அவள் அந்தக் கர்ப்ப காலம் பூராவும் சீக்காத்தான் இருந்தாங்களாம், அது ஒரு பெண் குழந்தை, செத்துப் போச்சே அது. அதுக்குப் பிறகு அவளுக்கு நிறைய ஆண் குழந்தைங்க பிறந்தப்போ எந்தப் பிரச்சினையும் இருக்கல்லை. கடைசிக் குழந்தைக்கும் அவளுக்கு முழுக்க சீக்கா இருந்ததாம்- அந்தக் குழந்தை என் அம்மா. நான் நினைக்கிறேன் அது பெண் குழந்தைங்கறத்தாலே அப்படின்னு. அப்படித்தான் இருந்ததுன்னு என் நினைப்பு.’
‘பாரு, இந்த ஓட்டுப் போடறது,’
‘பொதுக் கணிப்பு நடத்தறாங்களே அதைச் சொல்றீங்களா? உங்களுக்குத் தெரியுமா, அது இந்தக் குழந்தை பிறக்கலாம்னு குறிச்ச நாள்னு?’
‘ஆ, ராத்திரியும் பகலும் அதைத்தான் ரேடியோல போடறாங்க- சகிக்க முடியாத செய்திங்க; மோசமான விஷயங்கள்; அவங்க பேசறது பூரா அதுங்களைத்தான் எப்பவும்.’
‘எனக்குப் பத்தொம்பது வயசுல அபார்ஷன் செய்துக்கப் போயிருந்தேன்.’ டான்னா சொல்லி விடுகிறாள். அதை ஏன் சொன்னாள்? ‘என் பாட்டி கிட்டே நான் கடைகண்ணிக்குப் போகிறேன்னு சொல்லி இருந்தேன், அவங்க ரொம்ப சந்தோஷமாயிட்டாங்க – எனக்குக் கூடுதலாப் பணமெல்லாம் கொடுத்தனுப்பினாங்க- ஆனா நான் எதையும் வாங்க மறந்துட்டேன். எதுவும் இல்லாம நான் திரும்பி வந்தப்ப அவங்களுக்கு ரொம்ப ஏமாத்தமாப் போயிடுத்து.’
பாட்டி இறந்த பின்பு டான்னா எல்லாரிடமும் இதைச் சொல்ல ஆரம்பித்தாள்- முடிதிருத்தும் பெண்கள், பல் மருத்துவர், ரயிலில் பரிவாக இருந்த சகபயணிப் பெண். சொன்னபிறகு அவளுக்கு எப்போதுமே தன்னைப் பற்றிச் சங்கடமாகவும்,ஏதும் விளங்காமலும் இருக்கும். இப்போதும், எஸ்மேக்கு அது தெரிய வேண்டுமென்று ஏன் நினைக்கிறாள்? அத்தோடு இன்னமும் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறாள். மயக்கமருந்திலிருந்து தலை சுழல விழித்தது பற்றியும், தன் அடிவயிற்றை இலேசாக உணர்ந்த போது தன் எதிர்காலம் அழிக்கப்பட்டு வெறும் இடமானதாக அறிந்ததையும் பற்றிச் சொல்ல விரும்புகிறாள். சமீபத்தில்தான் அப்போது தன் நெஞ்சுக்கூட்டில் தனக்கு ஏற்பட்ட விடுதலை உணர்வு, குமட்டல் உடலிலிருந்து எழுந்து போனது, தன் உடலின் கீழ்ப்பகுதியில் எழுந்த எதிர்ப்பு- அவளுடைய கைகால்களிலும், உடலெங்கும் பரவி கழுத்து வரை எழுந்த துயரம் தோய்ந்த தசைப்பிடிப்பு, அதிர்வூட்டும்படி அன்று இரவு முழுதும் அவளுக்குள்ளிருந்து வெளியே வந்த கரும் ரத்தக் கட்டிகள் ஆகியவற்றைப் பற்றி அவள் நினைக்கத் தொடங்கி இருக்கிறாள். அவளுடைய தோழி டெர்ட்ரெ அப்போது லண்டனில் வசித்தாள். பள்ளியில் அவர்கள் அப்படி ஒன்றும் நெருங்கிப் பழகியிருக்கவில்லை, ஆனால் டெர்ட்ரெ தன் வேலையிலிருந்து ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அவளுடன் அந்த மருத்துவமனையில் காத்திருந்தாள். அவர்கள் சுரங்க ரயிலைப் பிடித்து டெர்ட்ரெயின் அடுக்ககத்துக்குப் போகும்போது தான் அணிந்திருந்த தடுப்புத் திண்டு பெரியதாக இருப்பதை வலி கலந்த கூச்சத்தோடு உணர்ந்தபடி பயணித்ததை டான்னா ஞாபகம் கொள்கிறாள்.
‘நான் அந்தத் தடவையும் நிஜமாகவே சீக்கா இருந்தேன், அதனாலெ, எனக்கு உறுதியாத் தெரியாட்டியும், அப்பவும் அது பெண் குழந்தையாகத்தான் இருந்திருக்கணும்.’
எஸ்மேயின் கைகள் மேஜை மீது விரிந்து தட்டையாக இருக்கின்றன. டான்னாவின் தொண்டையில் அவள் ஏதோ கிழிந்த வலியை உணர்வது எதனால் என்று அவளுக்குத் தெளிவாகவில்லை, தன் முந்தைய நாட்களைப் பற்றி ஒப்புக் கொண்டது அப்படி உணரச் செய்ததா, இல்லை எஸ்மேயின் மிட்டாய்ச் சிவப்பாகச் சாயம் பூசப்பட்ட நகங்கள் கூர்மையான மலரிதழ்கள் போல வடிவில் தெரிந்ததாலா? டான்னாவால் எஸ்மேயின் முகத்தைப் பார்க்க முடியவில்லை, அதனால் அவருடைய கைகளைப் பார்க்கிறாள் – அவற்றில் மென்மையாக விரிந்திருந்த எலும்புகள், சேர்ந்து குவிந்து மடிப்புகளாகவிருக்கும் தோல், ஆங்காங்கே சிதறியிருக்கும் பழுப்பு நிறத் திட்டுகள். எஸ்மே தன் கைகளைக் கீழே இழுத்துக் கொள்கிறார், அதனால் அவை இப்போது மேஜையின் விளிம்பில் தொத்தியிருக்கின்றன, எட்டு விரல் நகங்கள் ஒன்றாக அணிவகுத்தபடி. ஒரு நகத்தை மேஜை மீது தட்டுகிறார் – டிக் டாக்.
அவர் காஃபி கோப்பையை உதடுகளுக்கு உயர்த்துகிறாளர், குடிக்காமல் கீழே வைக்கிறார். ‘எனக்கு ஒரு ஒன்றுவிட்ட சகோதரி இருந்தாள், தெரியுமா. என் இளைய சகோதரி, கெர்ட்டி. கெர்ட்டிக்குப் பதினாலு வயசுதான் ஆயிருந்தது, அவள் ரொம்பச் சாதாரணமா இருப்பா, அவ எப்படி அந்த மாதிரி ஆனாங்கறதைக் கற்பனை செய்யறது கூடக் கஷ்டம். எப்படி அந்த மாதிரி ஆச்சுன்னு அவ எங்கிட்டெ சொல்ல மாட்டேனுட்டா, ஆனா அவளுக்கு உதவி பண்ணனும்னு கேட்டா. எப்படிப் பண்றதுன்னு சொல்லணும்னு கேட்டா- நான் அவளை விட மூத்தவ, எனக்குத் தெரியும்னு அவ நினைச்சிருக்கா. எனக்குத் தெரிஞ்சிருக்கல்லை. நான் கோட் ஹாங்கர், மஞ்சள் சூப் பத்தியெல்லாம் கேட்டிருந்தேன் ஆனா எனக்கு நிசம்மாவே எதுவும் தெரிஞ்சிருக்கல்லை. நான் அதிர்ச்சியடைஞ்சேன், தெரியுமா. அது ஒரு பாவம். கொலை. நான் என் அம்மா கிட்டே சொன்னேன். ஜெர்ரி சீக்கிரமாவே காணாமப் போயிட்டா. அவ ‘லாண்ட்ரிகளுக்கு’ [*1] போனா, அப்புறம் திரும்பி வரவேயில்லை.1
’நான் ரொம்ப மோசமானவன்னு நினைக்கிறீங்களா எஸ்மே.’
‘ஒவ்வொருத்தருக்கும் தங்களோட நியாயம்.’ டான்னாவுக்கு எஸ்மே என்ன சொன்னார் என்று புரிந்து கொள்ளச் சிறிது நேரம் பிடிக்கிறது, ஏனெனில் அவர் அத்தனை வேகமாகச் சொல்லி விடுகிறார், அது ஒரு பறவையின் பேச்சைப் போலத் துரிதமாக ஒலிக்கிறது – ட்வீக்கிட்வூ. பிறகு எஸ்மே மேஜையை மறுபடி தட்டுகிறார். ‘ஆமாம்.’ அவர் தன் தலையைத் திருப்பி, பின் ஜன்னலைப் பார்க்கிறார், கைச்சுவடு படிந்த சுவர்களையும், உடைந்திருந்த திரைத் தட்டிகளையும் கவனிக்கிறார், ஈரமாக மூச்சை வெளி விடுகிறார். ‘நான் கெர்ட்டியைப் பார்க்கப் போகவேயில்லை. எத்தனையோ வருசங்களை அவளைப் பத்திக் கொஞ்சமும் நினைக்காமலே கடந்திருக்கேன்.’
‘அது ரொம்பவே சோகமானது,’ என்கிறாள் டான்னா.
‘ரேடியோவுல இப்ப போடறாங்களே அதெல்லாம் அவளைப் பத்தி என்னை நினைக்க வைக்கிறது. எனக்கு மஞ்சள் சூப் பத்தி எதுவுமே தெரிஞ்சிருக்கல்லை. எங்கெ போய் அந்த மாதிரி விஷயங்களை நாம தெரிஞ்சுக்க முடியப் போகுது? ஆ, சரி, எனக்கு முடிதிருத்திக்க நேரம் கொடுத்திருக்காங்க. காஃபி கொடுத்ததுக்கு நன்றி, டான்னா.’
எஸ்மே எழுந்திருக்கையில், அவர் ஸ்பாஞ்சை மேஜைக்குக் குறுக்காக வீசுகிறார். ‘இதைத் தூக்கிப் போட்டுடு. இது சுகாதாரமானதில்லே. என் வீட்டில இதுல மூணு வச்சிருக்கிறதா இருக்கு. ஒண்ணை உன்னோட தபால் பெட்டில போடறேன்.’
எஸ்மே போன பிறகு டான்னாவுக்குத் தன் தேநீர் நினைவு வருகிறது. குளிர்ந்து போயிருக்கிற அதன் மேல்பரப்பில் எண்ணெய்த் திவலைகள் கிழிந்த திரை போல மேலே மிதக்கின்றன. பின் ஜன்னலில் திரை கோணலாகத் தொங்குகிறது, அந்த வளைந்த பிறையின் மேல் மூலையில்- ஓ, எஸ்மே அதைப் பார்த்தாரோ- சிலந்தி வலையால் மூடப்பட்டு, உலர்ந்த உடலாக ஓர் ஈ.
———-
பிரசவப் பகுதியில் ஜன்னல்கள் இல்லை.
பிற்பாடு டான்னா நினைப்பாள், தனக்கு நாள் என்று குறித்த தினத்தில் சரியாக இந்தக் குழந்தை பிறந்ததில் ஏதோ இருக்கிறது என்று. முந்தைய நாளின் இரவில், பிரசவ வரிகள் முதல் முறையாக அவளுடைய தோலுக்கடியில் திறந்து விரிந்தன, நீர்க்கோடுகளைப் போலத் தெளிவில்லாத உருவில், இளஞ்சிவப்பாக, அத்தனை இலேசாக இருப்பதில் அவை கிட்டத்தட்ட அழகாகவே கூட இருந்தன என்று நினைப்பாள். அந்தப் பிரசவ அறையில் இருக்கையில் அங்கிருப்பது லாண்ட்ரிகளில் (அந்தப் பெண்கள்) இருந்த நிலையைப் போலவே இருக்கிறதா- அவர்களும் தங்கள் முதுகின்மேல் படுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்களா – என்று தான் யோசித்திருந்ததில் ஏதோ அர்த்தமிருந்தது என்று யோசிப்பாள். அவர்களுக்கும் வலியெடுக்கத் தொடங்கியபோது, (பனிக்குடம் உடைந்து) நிணநீர் அவர்களுக்குள்ளிருந்து பீறி வெளிவந்தபோது, தங்களுக்கு என்ன ஆகிக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் அறிந்திருப்பார்களா? கடைசி முறை வெளியே தள்ளும்போது வீறிட்டுக் கத்தினால், மௌனமாக இருக்கச் சொல்லி அவர்கள் கண்டிக்கப்பட்டார்களா, பிரசவத்தில் அச்சம் கொண்டு அலறுவதற்குப் பயந்து, அவர்கள் மௌனமாகப் பிரசவித்தனரா? இப்படித் தன் நிலையை மற்றவர்களோடு இணைத்து யோசிப்பது சுயமையச் சிந்தனையா அல்லது அதற்கு நேர்மாறானதா என்று அவள் யோசிப்பாள். இந்த மாதிரி நினைவு கூர்வது – ஏதோ ஒவ்வொரு கணமும் ஒரு புள்ளிபோலவும் எல்லாப்புள்ளிகளோடும் இணைக்கப்படக் கூடியது என்றும் நினைப்பது – ஒரு விதமான சித்தப் பிரமையா அல்லது அது ஒன்றுதான் தன்னை மறுபடி கண்டெடுக்கும் வழியா என்று யோசிப்பாள்.
‘எனக்காகத் தயவு செய்து படுக்கை மீது ஏறிப் படுங்க,’ என்றார் பிரசவம் பார்க்கும் செவிலி. டான்னா தலையாட்டி மறுக்கிறாள், ‘ஒரு நிமிஷம் இருங்க’ , தன் குதிகால்களில் ஆடியபடி, தன்னை ஆட்டித் திறந்தபடி, தன் முதுகை நீட்டிக் கொண்டு, பெரும் முயற்சியான அது அதிர வைக்கப்போவதற்கு வழி வகுத்துக் கொள்கிறாள். அந்தச் செவிலி டான்னாவை விட இளையவள். இப்படித் தான் சொல்வதைக் கேட்காமல் மறுத்ததற்காகச் சிறிது எரிச்சல்பட்டு, சிறிது எச்சரிக்கையோடு, ஓரக் கண்ணால் ஒரு பார்வை வீசுகிறாள். அவள் இறுக்கமாக இருப்பதுபோலத் தெரிகிறாள், அவள் அந்த சக்கரங்கள் வைத்த இழுப்பறைகள் கொண்ட பெட்டியை நாடாமல் இருப்பாள் என்று டான்னாவுக்கு அவள் மேல் நம்பிக்கை இல்லை, அந்த இழுப்பறைகளின் மேல் சங்கேதக் குறிகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன, வெவ்வேறு விதமான வெட்டும் முறைகள் அவை – கருப்பையின் மேற்புறத்தில் வெட்டித் திறக்கும் சிஸேரியன், சிசு வெளிவருவதை எளிதாக்கப் பெண்குறியில் செய்யப்படும் வெட்டான எபீஸியாடமி – அவற்றை இத்தனை காலம் டான்னா தவிர்த்து வந்திருக்கிறாள்.
இன்னொரு வீரியமான ஒடுக்கம் அவள் உடலூடே நடுக்கத்தோடு ஓடுமுன் அவள் அதற்குள் ஆடியபடி செல்கிறாள், ’இது என்னுடைய ஐந்தாவது,’ என்கிறாள் டான்னா, ‘என்னை நம்புங்க,’ என்றபடி ஒரு திமிங்கிலத்தின் ஒலி போல ஆழ்ந்த அடிக்குரலில், தன்னுள்ளிருந்து பீறி வரும் பெரும் ஒலியையெழுப்புகிறாள்.
‘ஷ்ஷ்ஷ்,’ என்கிறாள் செவிலி. ‘மூச்சை உள்ளே இழுங்க- வெளியே விடுங்க.’
அவளுடைய பாட்டி தன் குழந்தைப் பருவப் படுக்கையறையில் தன் அம்மாவின் உதவியோடு பிரசவித்தாள். அறைக்கு வெளியே கதவுக்குப் பின் நிற்கும் சிறுமியரான தன் சகோதரிகள் பயப்படாமல் இருக்க அவள் மௌனமாகப் பிரசவித்தது பற்றிப் பெருமை கொண்டிருந்தாள். அந்த ஒன்று விட்ட சகோதரி? அவளுக்கு பரிவான கைகள் உதவினவா, அல்லது கசந்த வயிறு கொண்ட கன்னியரா, அல்லது அவள் தனியளாகத் தன் வழியைக் கண்டு கொள்ளும்படி விடப்பட்டிருந்தாளா?
நீர் உடைகிறது, ஒரு பெரும் வீச்சாக புள்ளிகளிட்ட சாம்பல் நிறத் தரையில் கொட்டுகிறது. அது பனிக்கட்டி போலத் தெளிவாக, ஆங்காங்கே சிறு ரத்தப் பூக்களோடு இருக்கிறது.
பிரசவ அறையில், எல்லாம் துரிதமாக ஓடுகின்றன. ஒடுக்கங்கள் நீண்டு, பிடித்திழுக்கும் நடுக்கல்களிலிருந்து வேகமான பெரும் பூகம்பங்களாகின்றன. அதன் பெரும் சக்தியை, பெரும் அலைகளாக மோதும் உணர்வுகள், அவளை அது இழுத்துக் கொண்டு போகும் விதம், அதன் வழியை மட்டுமே அவள் நம்ப வேண்டி இருப்பதை, அவள் மறந்து விட்டிருக்கிறாள். பிறகு அவள் கீழே குந்தி உட்கார்கிறாள், பெரும் ஓலம் அவள் உள்ளிருந்து எழுந்து வருகிறது, நீண்டு கூச்சலாகிறது, தன் ஆத்திரத்தையும், செருக்கையும், எதிர்ப்பையும் அதில் அவளால் கேட்க முடிகிறது, மேலும் அவள் உடலை விடவும் முதியதாகவும், இருண்டதாகவும் ஏதோ அதில் வெளிப்படுகிறது.
’ஷ்ஷ்ஷ்,’ என்கிறாள் செவிலி, ‘மூச்சு விடுங்க. எழுந்திருங்க, நான் அளக்கிறேன்.’
‘இப்பன்னு நினைக்கிறேன்,’ என்கிறாள் டான்னா. ‘அவள் வராள்னு நினைக்கிறேன்.’
ஒரு பெரும் அலறலோடு அந்தத் தலை அவளுக்கு வெளியே திறப்பில் வருகிறது, தோள்கள் திமிறிக் கொண்டு வருகின்றன, அவளால் வயிறிலிருந்து கால் வரை நழுவி வெளியேறுவதை உணர முடிகிறது, பிறகு அங்கு மௌனம் நிலவுகிறது.
பிறகு, குழந்தையின் மேல் சால்வை போலப் போர்த்தியிருக்கும் சாம்பல் நிற சவ்வுக்குப் பெயர் தலையைப் போர்த்திய பனிக்குடப்பை என்று டான்னா புரிந்து கொள்கிறாள். செவிலி அந்தக் குழந்தையை உயர்த்திப் பிடிக்கும்போது அது எத்தனை பெரிய குழந்தையாகத் தெரிந்தது என்று அவள் நினைவு கொள்கிறாள். அதன் திட்டான கண்ணிமையின் சிறு துண்டுகள் மெல்லத் திறந்ததையும், டான்னா கை நீட்டிய போது அவள் எப்படியோ வெகுதூரத்தில் இருந்த மாதிரி தெரிந்ததும், அவளுடைய கழுத்தில் சுற்றி இருந்த தொப்புள் கொடியை எப்படி மெதுவாக அந்தச் செவிலி கழற்றினாள் என்பதையும், அந்தச் செவிலி அந்தக் கொடியை வெட்டுவதற்குச் சிரமப்படும்போது அங்கு இன்னும் எப்படி ஒரு மௌனம் நிலவுகிறது என்பதையும் நினைவு கூர்வாள். கத்தரியின் இரு அலகுகளும் கீச்சிட்டு அதிலிருந்து நழுவுகின்றன, செவிலி முகச் சுளிப்போடு மறுபடி முயல்கிறாள், அது ஏற்கனவே வெட்டப்பட்டிருக்கையில் டான்னா சொல்கிறாள், ‘அதை என் கணவர் வெட்ட வேண்டாமா… கொடியை விட்டு வைங்க. கொஞ்சம் பொறுங்க…’
‘இல்லை. இது ரொம்ப அவசரமான நிலமை. குழந்தை மூச்சு விடணும்.’
குழந்தையைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு, அவள் உடனே போய் விடுகிறாள்.
பிற்பாடு, தான் கடிகாரத்தை மறுபடி மறுபடி பார்த்துக் கொண்டிருந்ததையும், ஆனால் நேரத்தைப் படிக்க முடியாதிருந்ததையும் நினைவு கூர்வாள். தான்,‘ஆனா,’ மற்றும் ‘ஓ, நோ, ஓ. ஓ நோ,’ என்றும் சொல்லிக் கொண்டிருந்ததையும் நினைவு கொள்வாள்.
அவளுடைய கணவன் அவள் தலையைத் தன் தலையோடு சேர்த்துப் பிடித்துக் கொள்கிறான். ‘எல்லாம் சரியாயிடும்.’
‘அவ அசைஞ்சான்னு நான் நினைக்கிறேன்,’ என்கிறாள் டான்னா. ‘நீங்க பாத்தீங்களா அவ அசைஞ்சதை?நான் அவ அசைஞ்சதைப் பார்த்தேன்.’
‘நான் போய் என்ன ஆகிறதுன்னு பார்த்துட்டு வரட்டுமா?’
‘எனக்குச் சொல்லத் தெரியல்லை.’
இரண்டு பேராலும் வேறெதையும் சொல்ல முடிவதில்லை: ஆனால். ஓ நோ. அது சரியாயிடும். ஆனா.
அவளுடைய கணவனின் நெற்றி ஈரமாக இருக்கிறது, அதை அவளுடைய நெற்றிப் பொட்டில் ஒற்றுகிறான்.
அவள் சொல்கிறாள்,’நம்மோட குழந்தை,’ மேலும், ‘ஓ நோ.’
‘சரிதான் கண்ணே, நீ நல்லாப் பண்ணினே. நீ அவ்வளவு நல்லாப் பண்ணியிருக்கே. நாம இங்கேயே இருப்போம். அவங்க வந்து நம்ம கிட்டே சொல்வாங்க.’
அவளுடைய கணவன் அவளை மிக நேசிக்கிறான், அது அவளுக்கு ஒரு அற்புதநிகழ்வாகத் தெரிகிறது, புனிதமான ஒன்றாகப் படுகிறது.
ஆனால் ஓ நோ.
அவள் கீழே தன்னுடைய உடலைப் பார்க்கிறாள்: இளஞ்சிவப்பு நிறக் கோடுகள் ஓடும் வயிற்றில், கர்ப்பப்பையின் தளர்வான உப்பல், இன்னும் விரிந்து கிடக்கும் தன் கால்கள், அவளுக்குள்ளிருந்து வந்து கொண்டிருக்கும் தடித்த தொப்புள் கொடி. தான் வலியேதுமின்றி இருப்பதில் ஒருவித பயங்கரம் இருக்கிறது. தொப்புள் கொடியை இதற்கு முன் அவள் அத்தனை கவனித்ததில்லை- அதன், ஊதாவும், புகை நிறமும், வானத்து நீலமும் கலந்த அபாரமான வண்ணங்கள், அதை மேல்புறத்தில் ஒளி ஊடுருவும் நூல்கண்டு போன்ற உறையின் உரம். வெட்டப்பட்ட அந்தக் கொடியைத் தூக்கிப் பார்க்கிறாள், இழுக்கிறாள், தன் உடலில் அந்த இழுப்பின் தாக்கம் ஏதுமில்லை என்பதில் வியப்படைகிறாள்.
அங்கு வார்த்தைகளேதும் தட்டுப்படவில்லை. உணர்ச்சிகளேதுமில்லை. இது நடக்கிறது. டான்னாவுக்கு அதுதான் தெரிகிறது, இது நடக்கிறது. இது என்னவாக இருந்தாலும், ஏற்கனவே இது நடந்து விட்டது. அவளுக்கு இல்லையென்றாலும், வேறு யாருக்காவது.
அந்தப் பெண்களுக்கு எப்படி இருந்திருக்கும்? தங்கள் குழந்தைகளை அவர்கள் தொட்டார்களா? அவற்றுக்கு அமுதூட்டினரா? அவை அகற்றப்பட்டு எடுத்துப் போகப்படுமுன். அவளுடைய பாட்டிக்கு, தன் விதியை நிரந்தரமாகத் தீர்மானித்த அந்தச் சிறு பெண் மகவை இழந்த போது. இதிலிருந்து பெறுவதற்கு ஞானம் ஒன்றும் இல்லை, ஏதும் இல்லவே இல்லை. டான்னாவுக்கு இப்போது தெரிந்ததெல்லாம் எல்லாவற்றின் பயங்கரமான விவரங்கள்தான்.
அவள் முன்பு பார்த்திராத ஒரு செவிலி அறைக்குள் நுழைகிறாள்.
‘எங்களோட குழந்தை,’ என்கிறான் அவளுடைய கணவன், ‘எங்களோட குழந்தை…’
‘எனக்குத் தெரியல்லை. அதை ஆக்ஸிஜன் கொடுக்க எடுத்துப் போயிருக்காங்க. என்னை இந்த நஞ்சுக்கொடியை எடுக்க அனுப்பினாங்க. அதை அப்படியே விட்டு வைக்கிறது பெரிய ஆபத்தாப் போகும்.’
‘வேண்டாம்,’ என்கிறாள் டான்னா. பிறகு அவள் அவமான உணர்வோடு நினைவு கூர்வாள்: தன் மகளுக்கான நிரூபணமாகவும், தன்னுடைய சாவுக்கு வழி செய்வதாகவும் அது இருக்கட்டும் என்று அதை உள்ளேயே வைத்திருக்கத் தான் விரும்பியதை.
பிரசவ உதவிக்கு வந்த இளம் செவிலி நுழைகிறாள். அவர்களை அவள் பார்க்கவில்லை, ஆனால் அறையைக் கடந்து மறுகோடியில் உள்ள ஒரு கோப்பில் ஏதோ எழுதுகிறாள். பிறகு திரும்புகிறாள், சொல்கிறாள், ‘உங்க குழந்தை….’ அந்தத் தருணம் விரிகிறது. அது எதானாலும், ஏற்கனவே நடந்து விட்டது.

1 https://www.history.com/news/magdalene-laundry-ireland-asylum-abuse 1775-1996 வரை அயர்லண்டில் ‘வழி தவறிய பெண்கள்’ (திருமணமாகாமல் கருவுற்ற பெண்கள்) காப்பாற்றப்படுவதற்காகச் செயல்படுவதாகச் சொல்லப்பட்ட கிருஸ்தவ கருணை அமைப்புகள் அந்தப் பெண்களை அடிமை உழைப்பாளிகளாகப் பயன்படுத்திக் கொடுமைப்படுத்தியதாகச் சொல்லும் கட்டுரை இது. அவை சலவை செய்யும் நிறுவனங்களை நடத்தின. லாண்ட்ரிகளுக்கு அனுப்பப்பட்ட பெண் என்று கதையில் சொல்லப்படுவது இந்த வகை அமைப்புகளையே சுட்டுகிறது.
**********
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
இந்தக் கதை ஐரிஷ் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுப்பிலிருந்து பெறப்பட்டது. அந்தப் புத்தகம், மூலக்கதை விவரங்கள் இங்கே.
ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் (சிறுகதை) – எல்ஸ்கே ராஹில் (எழுத்தாளர்)
பீயிங் வேரியஸ் (கதைத் தொகுப்பின் பெயர்) லூஸி கால்ட்வெல் (தொகுப்பாசிரியர்)
ஃபேபர் அண்ட் ஃபேபர் (பிரசுர நிறுவனம்) 2019 வெளியிடப்பட்ட வருடம்.
மூல ஆசிரியர் எல்ஸ்கே ராஹில் பற்றி: 1982 ஆம் ஆண்டு டப்லின் நகரில் பிறந்தவர். ட்ரினிடி கல்லூரியில் படித்தவர். ‘பிட்வீன் டாக் அண்ட் ஓல்ஃப்’ என்ற நாவலும், ‘இன் ஒய்ட் இங்க்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலும் பிரசுரித்திருக்கிறார். இவருடைய இரண்டாம் நாவல் ‘ ஆன் அன்ராவெலிங்’ 2019 ஆம் ஆண்டு பிரசுரமானது. இரு குழந்தைகளுக்குத் தாயான எல்ஸ்கே ராஹில் ஃப்ரான்ஸ் நாட்டில் பர்கண்டி நகரில் வசிக்கிறார்.
இங்கே ஒரு மதிப்புரை இரண்டாவது நாவலுக்கு: https://www.theguardian.com/books/2019/aug/02/an-unravelling-elske-rahill-review
இவரது நூல்களின் விவரம் தரும் வலைப்பக்கம் இங்கே: https://elskerahill.wordpress.com/
மொழிபெயர்ப்பாளர்: மைத்ரேயன். சொல்வனம் பதிப்புக் குழு உறுப்பினர். சுமார் பதினைந்தாண்டுகளாகக் கதைகள், கட்டுரைகளை இங்கிலிஷிலிருந்து தமிழுக்கு மடை மாற்றி வருகிறார். இந்தக் கதை ஜனவரி/ஃபிப்ரவரி ‘2023 மாதங்களில் மொழி பெயர்க்கப்பட்டது.
****