நிஷ்காம யோகி நாவல்

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

நிஷ்காம யோகி என்ற நாவல் 1956 ல் பிரஜாவாணி பத்திரிக்கையில் தொடராக வெளிவந்தது. பிரஜாவாணி பதிப்பகத்தாரே அதனை வெளியிட்டனர். கைதி நாவலைப் பிரசுரித்த காங்கிரஸ் பத்திரிக்கையை மாநிலக் கமிட்டி இனி நடத்த இயலாது என்று தீர்மானித்த பின் வட்டிகொண்ட ரங்கையா அதனை எடுத்து பிரஜாவாணி என்று பெயர் மாற்றி நடத்தினார். 1954 ல் வட்டிக்கொண்ட ரங்கய்யா மதராசிலிருந்து குண்டூருக்கு இடம் மாறி வந்தபோது பிரஜாவாணி அலுவலகமும் குண்டூருக்கு வந்தது. வட்டிகொண்ட விசாலாட்சியின் நாவல்கள் பிரஜாவாணி பதிப்பகத்தின் மூலமே வெளிவந்தன. 1998ல் வட்டிகொண்ட ரங்கய்யா மரணமடைந்தார். அவருடைய ‘திவ்ய ஸ்ம்ருதிக்கு’ அர்ப்பணிப்பாக நிஷ்காம யோகி நாவலை மீண்டும் பதிப்பித்தார் விசாலாட்சி.

அந்த நாவலின் கதை 1920 லிருந்து 1952 வரை மூன்று தசாப்த காலம் விரிவாக நடகிறது. காங்கிரஸ் தலைமையில் சுதந்திரப் போராட்டமும் கம்யூனிஸ்ட் மக்கள் இயக்கமும் இணையாக நடந்து வந்த காலம் அது. அந்த இரண்டிலும் பங்கு கொண்ட பெண்களுடைய  அனுபவ வரலாறு இந்த நாவலுக்குக் கதையம்சமாக உள்ளது. சுதந்திரப் போராட்டத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் பங்கு கொண்டவர்கள் அவற்றை எவ்வாறு புரிந்து கொண்டார்கள்? எவ்வாறு விளக்குகிறார்கள்? என்று அறிந்து கொள்வது மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கும். தம் காலத்து அரசியல் பற்றி பெண்களின் கோணம் என்பது ஒன்று இருக்கும் என்று காட்டிய அதிகாரபூர்வமான டாக்குமெண்ட் இந்த நாவல்.

1920 செப்டம்பர் நான்காம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை கல்கத்தாவில் நடந்த பிரத்தியேக காங்கிரஸ் மாநாட்டின் தாக்கத்திலிருந்து இந்த நாவலின் கதை தொடங்குகிறது. அந்த மாநாட்டின் தனித்துவமே ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றிய ஒரு புரிதலுக்கு வருவதுதான். ஸ்வராஜ்யமே முழு நோக்கமாக, பிரிட்டிஷ் வந்தேறிகளுக்கு உதவிசெய்வதை நிராகரிப்பது ஒத்துழையாமை இயக்கத்திற்கு உள்ள முக்கியமான அம்சம். இதன் தொடர்புடைய நிகழ்வுகள் நாக்பூர் காங்கிரஸ் 1920 டிசம்பரில். திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் நூல் நூற்பது, உள்நாட்டு கைத்தறி நெசவாலைக்கு உதவுவது, தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக வடிவமைப்பதற்கு முன்பாகவே மாணவர்களுக்கு இந்துஸ்தானி மொழியையும் நூல் நாற்பதையும் கற்பிப்பது போன்றவை அவற்றுள் முக்கியமானவை.

1921 மார்ச் 31, ஏப்ரல் ஒன்றாம் தேதிகளில் பெஜவாடாவில் நடந்த அகில பாரத காங்கிரஸ் காரிய நிர்வாக கூட்டத்தில் அங்கத்தினர்களை அதிகரிக்க வேண்டும், இருபது  லட்சம் ராட்டினங்கள் நூற்க வேண்டும் என்பவற்றை லட்சியமாக ஏற்று நிகழ்ச்சியை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது (போகராஜு பட்டாபி சீதாராமய்யா – காங்கிரஸ் சரித்திரம்).

இந்த மாநாடுகளால் ஆந்திர தேசத்தில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு பிரச்சாரம் விரிவாக நடந்தது. அந்த சந்தர்ப்பத்திலேயே ஏப்ரல் ஆறாம் தேதி காந்தி, விசாலாட்சியின் பிறந்த ஊரான சேப்ரோலுகு வந்திருந்தார். அதன் பிறகு இரண்டு மாதங்களில்  விசாலாட்சி பிறந்தார். தான் பிறந்த போதே ஊரில் வேரூன்றியிருந்த சுதந்திரப் போராட்ட சைதன்யம் குறித்தும் அதன் விஸ்தாரம், மாறுபட்ட நடத்தைகள், பரிணாமங்கள் ஆகியவற்றையும் கதைப் பொருளாகக் கொண்டு தன் 35 வது வயதில் விசாலாக்ஷி எழுதிய நிஷ்காம யோகி என்ற நாவலின் கதை நடப்பது 1930 வது தசாப்தத்தில் என்று கருத முடிகிறது.

நிஷ்காம யோகி நாவலில் ஊரின் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த ஊருக்கு தேசிய போராட்ட நிகழ்வுகளை நடைமுறைக்கு எடுத்து வந்தவர் அச்சய்யா என்பவர். அவர் தன் மனைவிக்கு பண்டிகைக்காக கதர்ப் புடவை வாங்கி வருவதோடு அது தொடங்குகிறது. அவருக்குப் படிப்பறிவு கிடையாது. ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஒரு பகுதியாக கதர் கட்டிக்கொள்வது என்ற முடிவு குறித்து அவர் எவ்வாறு அறிந்து கொண்டாரோ தெரியவில்லை. தானும் தன் மனைவியும் கதரையே கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அதனால்தான் பண்டிகைக்கு அவளுக்கு கதர்ச் சேலை எடுத்து வந்தார். அந்த முரட்டு பார்டர் உள்ள புடவையைத் தான் கட்ட மாட்டேன் என்று அவள் மறுப்பு தெரிவித்த போது, சரோஜினி நாயுடு, கமலாதேவி போன்றோரின் பெயர்களைக் கூறி அவர்கள் கட்டிக் கொள்கிறார்கள் என்று கூறுவதோடு, “இந்தத் துணியை நம் கையால் நாமே தயார் செய்து கொள்ளலாம். நாமே செய்யாவிட்டாலும் கூட நம் உடைக்காக நம் தேசத்தைத் தாண்டி வேறு தேசத்திற்குச் சொல்லத் தேவையில்லை. எந்த இயந்திரங்களும் இல்லாமல் இயற்கையாக நமக்குள்ள கைகளாலேயே இந்த துணியைத் தயாரிக்க முடியும். ஆங்கிலேயர்களின் வியாபாரத்தை நாம் அழிக்க முடியும்” என்று கதரை எதற்காக கட்ட வேண்டும் என்று கூட விளக்குகிறார்.

“இந்த முறை அவர்கள் வரும்போது நம் பஜாரிலேயே, தேவையானால் நம் வாசலுக்கு எதிரில் உள்ள வேப்ப மரத்தின் கீழேயே மீட்டிங் ஏற்பாடு செய்கிறேன். நீ கூட அதைக் கேட்கலாம்” என்றும் கூறுகிறார்.

அவர்கள் என்றால் யார்? காங்கிரஸ்காரர்களைத் தவிர வேறு யார்? மாநில காங்கிரஸ் தம் கடமைகளில் ஒன்றாக ஊர் ஊராக பிரச்சார நிழச்சிகளை நடத்தியது.. அதில் ஒரு பகுதியாக ஊருக்குள் காங்கிரஸ்காரர்கள் வருவது அப்போதே தொடங்கிவிட்டது. அப்படிப்பட்டவர்களின் அறிமுகமும் தாக்கமும் அச்சய்யாவை கதர் கட்டுவது வரை அழைத்துச் சென்றது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

கல்கத்தா காங்கிரஸ், “நூல் நூற்கும் பணி ஒவ்வொரு வீட்டிலும் மீண்டும் வர வேண்டியுள்ளது. லக்ஷக்கணக்கான நெசவாளர்களுக்கு வாழ்வதாரமான கைத்தறி நெசவையும் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்” என்று செய்த தீர்மானம் (காங்கிரஸ் சரித்திரம்) கிராமங்களில் மக்கள் இதயங்களில் எத்தனை தூரம் இடம் பிடித்தது? எத்தனை தூரம் அவர்கள் அதனை சொந்தம் செய்து கொண்டார்கள்? போன்றவை குறித்து அச்சய்யாவின் சொற்களைக் கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது. அவ்விதமாக அச்சய்யாவின் மனைவி பாப்பாயம்மா அந்த ஊரில் கதர்ப் புடவை கட்டிய முதல் பெண்மணியாக ஆனார்.

காங்கிரஸ்காரர்கள் ஊருக்குள் வந்தபோது காங்கிரஸ் பெண்மணிகளும் வந்தார்கள்.  அவர்கள் கிராமப் பெண்களை ஒன்று திரட்டி கூட்டங்களில் பேசியது பற்றியும் இந்த நாவல் குறிப்பிடுவதைக் காண்கிறோம். 

1928 ல் கல்கத்தா காங்கிரஸ், பெண்களுக்கான தடையை நீக்கி, அவர்களை சுதந்திர போராட்டத்தின் வளர்ச்சிக்கு பணி புரியும்படி உற்சாகப்படுத்த வேண்டும் என்று செய்த தீர்மானம் (காங்கிரஸ் சரித்திரம்) அதற்கு வழிகாட்டியிருக்க வேண்டும்.

காங்கிரஸில் பெண் செயல்பாட்டாளர்கள் செய்த பிரச்சாரத்தின் தாக்கம் அந்த ஊரில் பல வீடுகளுக்கு ராட்டினத்தை எடுத்து வந்தது. அது பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்க்கும் செயல் என்று தெரிந்து கூட பெண்கள் ராட்டினத்தில் நூல் நூற்பதற்கு முன்வந்தார்கள்.     போலீசார் கண்டுபிடித்தால் மறைத்து வைக்கவும் கற்றுக் கொண்டார்கள்.

நூல் நூற்பதில் மட்டுமல்ல. மறியல் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை செல்வதற்கும் அவர்கள் முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் பெண்மணிகள் செய்த பிரசாரம் பாப்பாயம்மாவையும் சிட்டம்மாவையும் சிறைக்குச் செல்லத் துணியும் வரை தூண்டியது.

முதலில் அவர்களே ஜெயிலுக்குச் சென்றார்கள். ஆனால் அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆகி வருவதற்கு முன்பே அந்த ஊரிலிருந்து பல பெண்மணிகள் சிறைக்கு சென்றதை அச்சய்யாவின் எண்ணங்களின் மூலம் காட்டுகிறார் ஆசிரியர்.

பெண்கள் ஹிந்தி கற்றுக் கொள்வது பற்றி மட்டுமின்றி காங்கிரஸ் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நாவலின் கதையம்சத்தில் ஒரு பகுதியாக்கியுள்ளார் விசாலாட்சி. இளைஞர்கள் ஹிந்தி கற்றுக் கொள்வதற்கு ஒரு ஆசிரியரைத் தம் ஊருக்கு அழைத்து வரவேண்டும் என்று கூறுவது, கதர் கட்டிய பாப்பாயம்மாவையும் ஹிந்தி  கற்றுக்கொள்ளச் சொல்வது, அச்சய்யா அந்த ஏற்பாட்டுக்கு தலைமை தாங்கி பாப்பாயம்மா கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக தம் வீட்டிலேயே பாடம் நடத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது போன்றவற்றை இந்த நாவலில் பார்க்கிறோம.

தினம் தினம் அதிகமாகின்ற ஹிந்தி பிரச்சாரம் காரணமாக சிறையில் இருந்து மீண்டு வந்து பின் பாப்பாயம்மா காட்டிய ஆர்வத்தைக் கண்டு தேர்வுக்குப் பணம் கட்ட வேண்டும் என்ற லட்சியத்தோடு பல பெண்கள் ஹிந்தி கற்றுக் கொள்வதைக் கூட கவனிக்க முடிகிறது..

1928 ல் கல்கத்தா காங்கிரஸ், தீண்டாமை ஒழிப்புத் தீர்மானம் எடுத்து உடனடியாக  தீண்டாமையை ஒழிப்பதற்கு ஜம்னாலால் பஜாஜ் தலைமையில் ஒரு துணை சங்கத்தை ஏற்பாடு செய்வது கூட நடந்தது. அந்தப் பின்னணியில் தீண்டாமைக்கு எதிராக ஹரிஜன முன்னேற்றத்தைக் கோரிய காங்கிரஸ் நிகழ்ச்சிகளை முன்னெடுக்கும் செயல்  மும்முரமானது. அதையும் பதிவு செய்ய மறக்கவில்லை விசாலாட்சி. 

காங்கிரஸ் தலைவர்கள் வீதிக் கிணற்றில் ஹரிஜனங்கள் இறைத்த நீரைக் கலக்கும் நிகழ்ச்சியை எடுத்து வந்தார்கள். பெண் பரப்புரையாளர்கள் ஹரிஜன சேரிக்குச் சென்று அவர்களுக்கு சுத்தம் சுகாதாரம் கற்பிப்பது, ஊரிலிருந்து உப்பு, பருப்பு, அரிசி எல்லாம் சேகரித்து ஹரிஜனங்களோடு சமபந்தி போஜனம் ஏற்பாடு செய்வது முதலான காந்தி அறிவித்த செயல்கள் பற்றி பெண்களிடம் பிரச்சாரம் செய்து அதனை நடைமுறைக்கு எடுத்து வருவது போன்றவை கதையோட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளன. அவ்விதமாக இந்த நாவலின் கதை 1920 வது தசாப்தத்தின் தேசிய அரசியல், பொருளாதார பரிணாமங்களின் பின்னணியில் தொடங்கி 30 வது தசாப்தத்தில் தொடர்ந்து வளர்கிறது.

1930 ல் நடந்த உப்பு சத்தியாகிரகம் பற்றியும் இதில் உள்ளது. அந்த ஊர் இளைஞர்களும் அதில் பங்கு கொண்டார்கள். திருடர்களை அடிப்பதற்கு உபயோகப்படும் என்று தன்னிடம் சிலம்பம் கற்றுக் கொண்ட இளைஞர்கள் தங்கள் பலத்தையும் உதவியையும் உப்பு சத்தியாகிரகத்துக்கு பயன்படுத்துவதைப் பார்த்து அச்சய்யா மகிழ்ச்சி அடைகிறார். ஊரில் இருக்கும் இளைஞர்கள் வெளியூருக்கு மறியல் செய்யச் செல்வதும் அவர்களுக்காக போலீசார் ஊருக்குள் வருவதும் நடக்கிறது. தேசியக் கொடி பிடித்து ஊரில் ஊர்வலம் செல்வதற்கும் கூட்டம் கூடுவதற்கும் மறியல் செய்வதற்கும் சிறைக்குச் செல்வதற்கும் இளைஞர்கள் தயாராகின்ற ஒளிபொருந்திய காட்சியை நாவலில் சித்திரிக்கிறார் விசாலாட்சி.

உப்பு சத்தியாகிரகம், அந்நியத் துணி விற்கும் கடைகளின் முன்பு மறியல், கைதுகள், சிறைகள் போன்றவற்றோடு கடுமையாக நடந்த ஒத்துழையாமை இயக்கம் காந்தி இர்வின் உடன்படிக்கையோடு 1931 ல் முழுமையாக திரும்பப் பெறப்பட்டது. இரண்டாவது வட்டமேசை மாநாட்டுக்கு காங்கிரஸ் தரப்பில் காந்தி செல்வதற்கு அது வாய்ப்பு ஏற்படுத்தியது. அதன் பின் 1934 ஏப்ரலில் சத்தியாகிரகம் நிகழ்ச்சியைக் கூட காந்தி திரும்பப்பெற்றார். சத்தியாகிரகம் என்பது ஆன்மீகமான அஸ்திரம் என்றும் அதனைப் பயன்படுத்துவதில் சாமானிய மக்களுக்குத் தகுந்த தனித்தன்மையும் வழிகாட்டலும் குறைந்துவிட்டன என்றும் அதனால் ஸ்வராஜ்ஜியத்திற்காக சத்தியாகிரகம் செய்வதை காங்கிரஸ்காரர்கள் நிறுத்த வேண்டும் என்றும் தற்போதைக்கு அதனைத் தன் ஒருவனுக்கே விட்டுவிட வேண்டும் என்றும் ஒரு அறிக்கை விட்டார். அது அதே ஆண்டு அக்டோபரில் நடந்த பாட்னா மாநாட்டில் ஆமோதிக்கப்பட்டது. 

அதோடு சத்தியாகிரக நூற்றாண்டு முடிவடைந்து சட்டசபை நூற்றாண்டு ஆரம்பித்தது. அதன் பலனாக சிறிது காலம் சிறைப்படுத்தப்பட்டிருந்த பேச்சுரிமை  மீண்டும் விடுதலையடைந்தது. தேர்தல் உற்சாகம் எல்லை கடந்தது. காங்கிரஸின் செய்தியை ஒவ்வொரு கிராமத்திலும் பரப்புவதற்கு அது ஒரு வாய்ப்பாக மாறியது 

(காங்கிரஸ் சரித்திரம்).

நாவலில் பாப்பாயம்மா தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளுக்கு பக்கத்து ஊர்களுக்குச் சென்று பல வாரங்கள் தங்கி வருகிறாள் என்று கூறிய விஷயம் இந்த தேர்தலோடு தொடர்புடயவையாகவே இருக்க வேண்டும்.  

சத்தியாகிரகத்தை விலக்கிக்கொண்டதால் மக்களைப் பெரிய அளவில் பங்குபெறச் செய்யும் நிகழ்ச்சி எதுவும் இல்லாமல் போனது குறித்து அன்றைக்கு வெளிப்பட்ட அதிருப்தி குரலைக் கூட இந்த நாவலில் பதிவு செய்ய மறக்கவில்லை விசாலாக்ஷி.

பாரத தேச சுதந்திரம் பற்றிப் பரவிய சந்தேகங்களால் மக்கள் உற்சாகமற்று நிசப்தமாக இருந்துவிட்ட தருணத்தில் மக்களுக்கு உற்சாகத்தையும் சைதன்யத்தையும் தேசிய காங்கிரஸ் தலைமை கொடுக்கத் தவறியது என்பது ஆசிரியரின் கருத்து. அந்த நேரத்தில் வந்த (1939 ) இரண்டாம் உலகப் போர் காங்கிரஸுக்கு ஒரு நிகழ்ச்சியை ஏற்படுத்தும் வாய்ப்பை அளித்தது என்று எழுதுகிறார். இங்கிலாந்துக்கு போரில் உதவி செய்யக்கூடாது என்ற பிரச்சாரமே அந்த நிகழ்ச்சி. தனிமனித சத்யாகிரக இயக்க வடிவில் அது நடக்க வேண்டும். அதற்கு இருக்கும் வரம்புகள் பல. அது எத்தனை பலகீனமான நிகழ்ச்சி என்பதைக்  கூட ஆசிரியை கதையில் தெளிவாகக் காண்பிக்கிறார். இந்த தனி மனித சத்யாகிரக இயக்கத்தில் பங்கு பெற்ற விரும்பியவர்கள் காந்தியின் அனுமதியைப்  பெற வேண்டி வந்தது. கூட்டங்களோ ஊர்வலங்களோ இல்லாமல் ஒவ்வொரு தனி மனிதராக வெளியில் கிளம்பி எங்கோ ஒரு இடத்தில் நின்று யுத்தத்திற்கு உதவி செய்யக்கூடாது என்று கூற வேண்டி வந்தது. அத்தகைய வரம்புகளும் பலவீனங்களும் இருந்த காரணத்தால் அந்த தனிமனித சத்தியாகிரகம் பெரிய தாக்கம் எதையும் மக்களிடமோ அரசாங்கத்திடமோ ஏற்படுத்தவில்லை என்பது ஆசிரியை விசாலாட்சியின் அபிப்பிராயம்.

இந்த நாவலில் பாப்பாயாம்மா காங்கிரஸின் அழைப்பை ஏற்று தனிமனித சத்யாகிரகத்தில் பங்கு கொண்டாள். அவளுக்கு என்றுமே பழக்கமில்லாத கால்நடையாக ஊர் ஊராகச் சென்று போர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தாள். கம்யூனிஸ்ட் சார்பாக அதே விதமாக போருக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஸ்கரம் என்ற இளைஞரின் மூலம் எவ்விதப் பிரயோஜனமும் இல்லாத அந்தப் பணி குறித்து விமர்சனம் இடம் பெயரச் செய்கிறார் விசாலாட்சி.

ஏதோ ஒரு சந்தையில் ஒரு திண்ணையின் மீது ஏறி நின்று யுத்தத்திற்கு உதவி செய்ய மாட்டோம் என்று ஒரு மனிதர் கூறும் வார்த்தையை ஒருவர் கூட கேட்கவில்லை என்றும் அது மக்கள் மீது காட்டும் தாக்கம் எதுவும் இல்லை என்றும் அதனால் போலீசார் கூட அவர்களை கைது செய்ய மாட்டார்கள் என்றும் கூறும் அந்த இளைஞன், “எதற்காக சிரமப்படுகிறீர்கள்? ஊருக்குத் திரும்பிச் சென்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்” என்று அவளுக்கு அறிவுரை கூறுகிறான். “காந்தி கூறியபடி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். செய்கிறேன்” என்று அவள் பதில் கூறுகிறாள்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மற்றொரு முக்கியமான கட்டம் வெள்ளையனே வெளியேறு இயக்கம். பிரிட்டிஷ்காரர்கள் பாரத தேசத்தை விட்டுச் சென்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் மேற்கொண்ட இயக்கம் அது. 1942 ஆகஸ்ட் 8 ல் தொடங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த போராட்டம் ஆகஸ்ட புரட்சியாக அழைக்கப்படுகிறது. காந்தி அதனை அகிம்சைப் இயக்கமாகத் தொடங்கினாலும் மிகுந்த அளவில் அது உள்ளூர் மக்கள் தலைவர்களின் கைகளுக்கும் புரட்சிக்காரர்களின் கைகளுக்கும் சென்றது. தந்திக்  கம்பிகளை வெட்டுவது, ரயில் தண்டவாளங்களை நீக்குவது போன்ற செயல்கள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பேர் கைதானார்கள். சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன. கட்டுப்பாடுகள் அதிகரித்தன. பலர் தலைமறைவானார்கள். 1944 செப்டம்பர் வரை இரண்டாண்டு காலம் நடந்த இந்த போராட்டமும் நிஷ்காம யோகி நாவலின் கதையோட்டத்தில் ஒரு பகுதியானது.

இவற்றை சம்பவங்களின் தொகுப்பாக அன்றி கதையில் குறிப்பாகக் காட்டுகிறார் ஆசிரியர். இருந்தாற்போலிருந்து ஒருமுறை ஒரு பெரிய புரட்சி வெடித்தது என்று கூறுவது அதை குறித்துத்தான். 

தனி மனித சத்தியாகிரகத்தால் எரிச்சலடைந்த தேசியவாதிகள் வெள்ளைக்காரர் மீது பகையோடு வெள்ளை அரசாங்கத்திற்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று ஒரு புரட்சியை எடுத்து வந்தார்கள் என்றும் பாப்பாயம்மா அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறாமல் போனாலும் பங்கு பெற்றவர்களை மெச்சிக்கொண்டு இன்றோ நாளையோ சுதந்திரம் வந்துவிடும் என்று கூறிக் கொண்டிருந்தாள் என்றும் எழுதுகிறார் ஆசிரியர். அந்தப் போராட்டம் அடக்கப்பட்ட பின்பு காந்தி அதனோடு தனக்கு சம்பந்தம் இல்லை என்று அறிவித்த விஷயமும் இதில் குறிப்பிடப்படுகிறது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின் தவிர்க்க முடியாத சர்வதேச சூழ்நிலைகளால் பிரிட்டிஷ் அரசாங்கம் பாரத தேசத்தின் மீதான தம் அதிகாரத்தை ரத்து செய்து சுதந்திரம் அளித்தது.

உடனே சட்டசபைகளுக்கு தேர்தல்கள் நடந்தன. அதற்கு முன்பு காங்கிரஸ் ஹரிஜன இயக்கத்தில் குலங்கள் இல்லாமல் செய்தார்கள் என்று நிதித்தவர்கள் கூட காங்கிரசுடையதே இனி அதிகாரம் என்று நினைத்ததால் தாமும் காங்கிரஸ்காரரே என்று கூறிக் கொள்வது பற்றியும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். 

பாப்பாயம்மாவுக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் நினைப்பதையும் அவளும் ஆசைபடுவதையும் கூட குறிப்பிடும் ஆசிரியர், ஆனால் காங்கிரஸ் அந்த இடத்திற்கு நிறைய பணம் செலவழிக்க கூடிய வேட்பாளரை நிறுத்தி வைத்தது என்று சொல்வதன் மூலம் விசாலாட்சி, காங்கிரஸின் பார்லிமென்டரி ஜனநாயக இயல்பு ஆரம்பத்திலேயே பணத்தையும் அதிகாரதத்தையும் முக்கியமாக பலப்படுத்தும் நிலையை இந்த நாவலில் விமர்சிகிறார். 1952ல் நடந்த  தேர்தல்களையும் அவற்றின் பரிணாமங்களையும் சித்திரிப்பதோடு இந்த நாவல் முடிகிறது

6

காங்கிரஸ் அரசியலோடு கூட கம்யூனிஸ்ட் அரசியலும் இந்த நாவலின் கதைப் பொருளில் ஒரு பகுதியாக விளங்குவது இதில் உள்ள மற்றுமொரு சிறப்பு. 

மார்க்சிஸ்ட் சிந்தனை கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற இளைஞர்கள் காங்கிரஸில் சேர்ந்த (1929)  ஐந்தாண்டுகளிலேயே (1934 ) சோசலிஸ்ட் பார்ட்டி காங்கிரஸில் ஒரு பகுதியாக ஆனது. அவர்களுடைய செயல்முறையில்  காந்திக்கு ஒப்புதல் இல்லை. அவர்கள் காங்கிரஸில் அதிக எண்ணிக்கையில் இருந்தால் காங்கிரசுடன் தொடர்பை அறுத்துக் கொள்வதற்குக் கூட தயாராகும் அளவுக்கு அவருக்கு அதோடு முரண்பாடு இருந்தது. ஆனால் நேரு, ஏழ்மை ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சோசலிஸ்ட் சமுதாயத்தை ஸ்தாபிப்பதை இலக்காக கொண்டவராகத் தன்னை அறிவித்துக் கொண்டவர். சோசலிஸ்ட் சிந்தனை உள்ளவர்கள் காங்கிரஸில் ஒரு பிரத்தேக பார்ட்டியாக அமைவதற்கு அது ஒரு வாய்ப்பாக ஆகியிருக்கும் 

நிஷ்காம யோகி நாவலில் பாப்பாயாம்மா மற்றும் பிற அரசியல் ஆர்வம் கொண்ட   பெண்கள் அனைவரும் சேர்ந்து ஏற்படுத்திக் கொண்ட லைப்ரரியில் ஒரு நாள் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த பாப்பாயம்மா, நேரு ஆந்திரப் பிரதேசத்திற்கு    வந்த போது சோசலிஸ்ட்கள் ஏதேதோ கேள்வி கேட்டு மீட்டிங் சரியாக நடக்க விடாமல் செய்தார்கள் என்று கூறி, “இந்த சோசலிஸ்டுகளால் பெரிய தொல்லை” என்கிறாள்.

பதினாறு வயது லைலாவுக்கு நேரு பற்றித் தெரியும். ஆனால் சோசலிஸ்ட் பற்றி கேள்விப்படுவது அதுவே முதல் முறை. காங்கிரஸின் பெரிய தலைவரான நேருவை அவர்கள் கேள்வி கேட்டார்கள் என்று அவர்கள் மேல் லைலாவுக்கு  ஒரு சிறு வெறுப்பு ஏற்பட்டது. அவள் மாமியார் வீட்டுக்குச் சென்ற பின் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் பாப்பாயம்மா மீட்டிங் வைத்து அழைத்தபோது செய்த பிரசங்கம் முழுவதும் காங்கிரஸையும் காந்தியையும் புகழ்வதற்கே சரியாக இருந்தது என்று ஆட்சேபித்துக் கூறுகிறாள். அதற்கு லைலா, “ஆமாம். எங்கள் ஊரில் அனைவரும் அப்படித்தான். அனைவரும் காங்கிரஸ்காரர்களே” என்று கூறுகிறாள். காங்கிரஸை மறுக்கும் உறவினரை, “நீங்கள் சோசலிஸ்டா?” என்று வினா எழுப்புகிறாள். “இல்லை. கம்யூனிஸ்ட்” என்று கூறுகிறாள் உறவுப் பெண்மணி. 

இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி 1925 ல் ஏற்பட்டாலும் வலிமையோடு பரவியது 1934 க்குப் பின்னர்தான். மிகச் சிறு காலத்திலேயே கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராட வேண்டி வந்தது. ரகசிய செயல்முறை தவிர்க்க முடியாததாக ஆனது. கம்யூனிஸ்ட் கட்சி பாப்பாயம்மாவின் ஊரில் செயல்படுவதை அவளுடைய  எண்ணங்கள் மூலமாகவே குறிப்பிடுகிறார் ஆசிரியை. 

தனிமனித சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டு ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்த   பாப்பாயம்மாவுக்கு ஒரு ஊரில் தம் ஊர்காரர்களான பாஸ்கரம் மற்றும் சில இளைஞர்கள் எதிர்ப்பட்டார்கள். அண்மையில் தொடங்கப்பட போர் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் எடுத்த தனி மனித சத்யாகிரக இயக்கத்தில் உள்ள பலவீனங்களை எடுத்துக் கூறி ஏளனம் செய்து பேசிய பாஸ்கரம் இவன்தான்.

தன் பணியையும் காங்கிரஸ் கட்சின் நிகழ்ச்சியையும் குறைத்து மதிப்பீட்டுப் பேசினான் என்று ஆத்திரப்பட்ட பாப்பாயாம்மா, “இவன் படிக்கும் பேப்பர்கள், இவன் விநியோகிக்கும் காகிதங்கள் அனைத்தும் ரகசியமே. இவனைப் பற்றிய ரகசியம் சற்று வெளிப்பட்டால் எங்கிருப்பான் இவன்?” என்று நினைத்துக் கொள்கிறாள்.  அதனைக் கொண்டு பாஸ்கரம் தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்காக பணி புரிபவன் என்று அறிய முடிகிறது. பாஸ்கரம் லைலாவுக்கு பெரியம்மா மகன். 

மாமியார் வீட்டில் உறவுக்கார பெண்மணியோடு சோசலிஸ்ட் பற்றியும் கம்யூனிஸ்ட் பற்றியும் எதார்த்தமாக நடந்த ஒரு உரையாடல், இயல்பாகவே    ஆர்வம் அதிகமுள்ள லைலாவை கணவரைக் கேட்டு அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளும்படிச் செய்தது. கணவன் மோகனராவு பரீட்சை எழுதுவதற்காக நகரத்திற்கு சென்ற நேரத்தில் பெண்களுக்காக அந்த ஊரில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அரசியல் பள்ளியில் சேர்ந்து அரசியல் அறிவை வளர்த்துக் கொள்கிறாள். கற்ற அறிவு, அவளை செயல்பாட்டுக்கு உந்தித் தள்ளியது.  கம்யூனிஸ்ட் பார்ட்டியின் பெண்கள் சங்கத்திற்குச் செயலாளராக சேவையை  ஆரம்பித்து சொற்பொழிவாற்றத் தொடங்கினாள். எழுத்தாளர் சங்கத்திலும் சேர்ந்தாள். பாஸ்கரம் தன் தங்கை தன் கட்சியில் சேர்ந்து பணி புரிவது குறித்து    மகிழ்ச்சி அடைந்தான்.

1941 ல் கம்யூனிஸ்ட் கட்சி போர் குறித்து அதற்கு முன்னெடுத்த எதிர்ப்பு வழிமுறையை விட்டுவிட்டு இரண்டாம் உலகப் போர் மக்கள் போர் என்று அறிவித்ததால், அரசாங்கம் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் மீதிருந்த தடையை விலக்கியது (கொண்டபல்லி கோட்டேஸ்வரம்மா, நிர்ஜனவாரதி 2012). 

அந்தப் பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் முறையின் விரிவாக்கம்,   மக்களுக்குள் அது ஊடுருவி செல்வது போன்றவை பாப்பாயம்மாவின்  எண்ணங்கள் மூலமாக இந்த நாவலில் இடம் பெறுகின்றன.

பாஸ்கரம் வெளியில் வந்து பணிபுரிவது, பிரசாத் போன்ற மிருதுவான மனிதர்கள் கூட கம்யூனிஸ்டாக மாறுவது போன்றவற்றை கவனித்த பாப்பாயாம்மா, “இனி என்ன உள்ளது? அந்தக் கட்சியை எவ்வாறு அழிப்பது?” என்று எண்ணி நிராசைக்கு உள்ளாகிறாள். 

ஆனால் 1947 ல் முதல் சுதந்திர இந்தியாவை ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றிய காங்கிரஸ், காங்கிரசை விமர்சிக்கும் கட்சிகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் தடை விதித்தால், அதை நல்ல வாய்ப்பாக எண்ணிய பாப்பாயம்மா கம்யூனிஸ்ட்களான பாஸ்கரம் மற்றும் பிற இளைஞர்களைப் பிடித்துக் கொடுத்து  தன் பழைய பகையைத் தீர்த்துக் கொள்கிறாள்.  

பாஸ்கரம் பார்ட்டி அதாவது கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் முறையில் ஏற்பட்ட  மாற்றங்களைப் பற்றியும் இந்த நாவல் பேசுகிறது. ஆயுதப் போராட்ட  செயல்முறைகளை விலக்கிக் கொள்வது என்ற தீர்மானமே அந்த மாற்றமாக இருக்க வேண்டும்.   

ஹைதராபாத் சமஸ்தானத்தை பாரத தேசத்தில் சேர்க்கும் ராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் அரசாங்கத்தின் தாக்குதல்களையும் படுகொலைகளையும் எதிர்கொண்ட நிலையில் கம்யூனிஸ்ட் பார்ட்டியின்  தலைமையில் நடந்த தெலங்காணா ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்தது. கட்சிக்குள் நடந்த விவாதங்களுக்குப் பிறது   1951 அக்டோபரில் நிபந்தனையற்ற போராட்ட நிறுத்தம் செய்வதாக கட்சி முடிவெடுத்தது. பாஸ்கரம் தலைமறைவிலிருந்து வெளியில் வந்து பணி செய்வதற்கும் 1952 தேர்தலில் போட்டியிடுவதற்கும் அது வழி வகுத்தது.  

இவ்விதமாக ஒருபுறம் காங்கிரஸ் கட்சியின் நிர்மாணம், சுதந்திரப் போராட்ட தேசிய இயக்கம், மறுபுறம் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சியவாதச் செயல்பாடுகள் – இவ்விரண்டின் சமநிலையை அடிப்படையாகக் கொண்டு முன்னேற்றத்தை முன்னிறுத்திய தேசிய வரலாற்றையும் சமகால அரசியல், பொருளாதார மோதல்களின் பரிணாமங்களையும் ஒரு வரைபடமாக, நாவலுக்கான  கதையம்சமாக மாற்றிக்கொள்வதில் வட்டிகொண்ட விசாலாட்சியின் வரலாற்று அறிவும், வரலாறின் மீது விமர்சனபூர்வமான கண்ணோட்டமும்  வெளிப்படுகின்றன. 

அது ஒன்று மட்டுமே என்றால், நிஷ்காம யோகி நாவலுக்குப் பெரிய சிறப்பு எதுவுமில்லை. அதைவிட அதிகமாக அந்த வரலாற்று, அரசியல், பொருளாதார மோதல்கலும் தொடர்புகளும் மனித உறவுகளை உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் எவ்விதம் தாக்கம் ஏற்படுத்தி எந்த திசைக்கு நடத்தியது? தனி மனித ஆளுமைகளை எவ்விதம் மாற்றியமைத்தது? என்று காட்டுவதால் இது சிறந்த நாவலாக ஆகிறது. 

அதிலும் முக்கியமாகப் பெண்களின் அனுபவக் கோணத்தில் இருந்தும், சிந்தனைக் கோணத்தில் இருந்தும் நாவலின் கதையை நடத்துவது இதற்கு மேலும் மதிப்பை அதிகரித்துள்ளது.

Series Navigation<< வட்டிகொண்ட விசாலாட்சிவட்டிகொண்ட விசாலாக்ஷி-2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.