
இனிப்பிலிருந்து தொடங்கலாம்.ஒரு லட்டை எடுத்துக் கொண்டு ஒரு விள்ளலை மட்டும் விண்டு சுவைப்போமானால் அந்த முழு லட்டின் நிறம், சுவை,மணம் அனைத்தையும் அச்சிறு துண்டிலேயே நம்மால் உணர முடியும்.அவ்வாறே கம்பராமாயணத்தின் அறச்சிறப்பு, பாத்திரப் படைப்பு,இயற்கை வருணணை, சந்த ஓசை நயம், ஆழ்ந்த பொருளமைதி, கவித்துவம் அனைத்தையும் அயோத்யா காண்டத்தில் உள்ள தைலம் ஆட்டுப் படலம் என்ற ஒற்றைப் படலத்திலேயே நாம் காணவியல்கிறது.
கம்ப ராமாயணத்தில் படலங்களுக்கான பெயர் அப்படலத்தில் நிகழும் உச்சம் அல்லது மையநிகழ்வையொட்டியே அமைகிறது. திருஅவதாரப் படலம் என்றால் இராமன் பிறப்பு, கடிமணப் படலம் எனில் சீதை இராமன் மணம் இவ்வாறு.
இப்படலத்தில் காவியத்தின் முக்கிய பாத்திரமான தசரதனின் இறுதி நிகழ்கிறது. ஆனால் அவனின் இறப்பைக் குறிக்காது அவனின் உடலைப் பதப்படுத்தி பாதுகாத்து வைப்பதைக் குறிப்பதாய் பெயருள்ளது. தயரதன் இறந்து பட்டான்; இராமன் கைகேயியின் வரத்தால் தந்தையின் ஆணையால் வனம் புகுந்துள்ளான்; பரதனுக்கு ஆட்சி என்ற முடிவு உள்ளது. ஆனால் கேகயத்திலிருந்து திரும்பும் பரதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் போவதில்லை. வனம் சென்று, இராமனின் திருவடிகளைப் பெற்று அரியணை ஏற்றப் போகிறான். நந்தியம்பதியில் இருந்து கொண்டு அயோத்திக்குள் நுழையப் போவதில்லை. அப்படியானால் பதினான்கு ஆண்டுகள் நடக்கும் ஆட்சி யாருடையது இராமனுடையதா தசரதனுடையதா. வசிட்டரின் வழிகாட்டலில் சுமந்திரனால் தசரதனின் ஆட்சியே தொடர்கிறதெனலாம். அதற்கான குறியீடாக இப் பெயரைச் சிந்தித்தால் காவியச் சுவை கூடுகிறதல்லவா
காவியத் தலைவனாகிய இராமன் ஆட்சியாளனாக அறத்தின் மூர்த்தியாக எவ்வாறு மிளிர்கிறான் என்பதற்கு வலு சேர்க்கும் நிகழ்வுகள் இதில் நிகழ்கிறதெனலாம்.
நகர் நீங்கிய இராமன் பின் பின் தொடரும் பெருந்திரளை நேர்த்தியுடன் கையாள்வது, சுமந்திரனை எந்தையே என விளித்து அவன் தசரதனிடத்தில் இருந்து ஆற்ற வேண்டியனவற்றை ஆற்றுப் படுத்துவது, பரதனைக் குறித்து உய்த்துணர்ந்து அவனுக்கு வேண்டியது சொல்லி அனுப்புவதென ஆட்சிப் பொறுப்பையேற்காத ஓர் ஆட்சியாளனாகவேத் திகழ்கிறான்.சுமந்திரனிடம் அவனாற்றும் அறம் குறித்த உரை காவியம் முழுமையும் அவனொழுகும் அறத்திற்கான வரையறையெனக் கொள்ளலாம்.
'இன்பம் வந்து உறுமெனின் இனிது ஆயிடைத் துன்பம் வந்து உறுமெனின் துறக்கலாகுமோ' 'இறப்பினும் திருவெலாமிழப்ப எய்தினும் துறப்பிலர் அறம் எனல் சூரராவதே'
என்ற இராமனின் என்றும் மாறாத அறம் குறித்த சொற்கள் இன்றைய சிறுகதையான ஜெயமோகனின் ‘அறமென்ப’ வின் மையம் வரை கோடிழுக்கத் தக்கது.
சுமந்திரன் ‘தென்புலக் கோமகன் தூதின் செல்லனோ’ எனவும், வசிட்டன் ‘முடிந்தனன் மன்னன்’ எனவும் உய்த்துணரும் தசரதனின் இறுதியை இராமனும் உணர்ந்தேயிருப்பான். எனினும் அறிந்தே தந்தையே இறப்பினும்,நாடாகிய திருவை இழப்பினும் அறத்தின்பால் நின்று அறத்தின் மூர்த்தியாய் பேருரு கொள்கிறான்.
' தையல்தன் கற்பும், தன் தகவும், தம்பியும், மைஅறு கருணையும் , உணர்வும், வாய்மையும், செய்ய தன் வில்லுமே சேமமாகக் கொண்டு, ஐயனும் போயினான், அல்லின் நாப்பணே. '
என்ற பாடல் எவையெல்லாம் அவனின் நீங்காத சேமமமென்பதைக்காட்டுவதாகயுள்ளது.இதிலமைந்த வைப்புமுறை எண்ணி நோக்கத் தக்கது.
இவ்வாறாக மொத்த அயோத்தியையும் இராமன் தன் தோளில் தாங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஒரே பாடலில் சீதையின் ஆளுமையை விளக்குகிறான் கம்பன்.
சுமந்திரனிடம் அவள்
'அரசர்க்கு அத்தையர்க்கு என்னுடைய வணக்கம் முன் இயம்பி யானுடைப் பொன்னிறப் பூவையும் கிளியும் போற்றுக என்று' தங்கையர்க்கு சேதி அனுப்புகிறாள்.
இராமன் வனம் புக நேர்ந்தமைக்காக அனைவரும் பெருந்துயரமும்,சீற்றமுமாய் கொந்தளிக்கையில் இராமனும், நாகணவாய்ப் புள்ளும், கிள்ளையும் மட்டுமேயானது அவளுலகு. இராமனுக்காய் வாழ்வை முழுதளித்த போதிலும் இலக்குவன் பற்றிக் கொண்டிருக்கும் மிகை சினமோ, பரதனுடனிருக்கும் பழியச்சமோ எதுவுமின்றி முழுதாகத் தன்னளிப்பு செய்த தாயாராய் அவளைக் காண்கிறோம். வைணவ தத்துவத்தின் வழி தேவி முதற்படியில் இருப்பதன் விளக்கமாக கம்பனளிக்கும் ஆழ்ந்த, செறிந்த சித்திரமென இதைக் கொள்ளலாம்.
மன்னனாகிய கப்பல்தலைவனையிழந்த உடைந்த கலமாகிய அயோத்தியை பதினான்காண்டுகள் தாங்கப் போகிற மாலுமி வசிட்டனென்பதை
'உந்து கடலில் பெருங்கலமொன்று உடைய நிற்கத் தனி நாய்கன் நைந்து நீங்கச் செயல் ஓரா மீகாமனைப் போல்'
என்ற வரிகள் தெளிவாக்குகின்றன.
பொதுவாக தசரதனையும் இராமனையும் இரு வேறு ஆளுமைச் சிறப்புடையவர்களாகவே நாம் எண்ணி வந்துள்ளோம். அதற்கான வலுவான கூறாக தசரதன் அறுபதினாயிரம் மனைவியர் என்றால் இராமன் ஏக பத்தினி விரதன் எனலாம்.ஆனால் இப்படலத்தில் இருவருக்குமான ஒருமைகளுக்கான குறிப்புகளை காணவியல்கிறது.
சுமந்திரன் மீண்டானெனும் போது இராமனும் வந்துள்ளானா என்ற அவாநிரம்பிய தசரதனின் நோக்கை
‘புரைதபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி’ என்ற சொற்கோவையால் காண்கிறோம். இதை மந்திரப் படலத்தில் தசரதனின் அழைப்பைக் கூறும் சுமந்திரனிடம் இராமன் காட்டும் எதிர்வினையான
‘புண்டரிகக்கண் புரவலன் பொருக்கென எழுந்து’ என்பதோடு ஒப்பு நோக்கலாம்.
மேலும் தசரதன் உடல் மேல் விழுந்து அழும் கோசலையை
‘முகில் வாய்மின் துடித்தாலென்ன ‘என வருவதை காவியத்தில் மீளமீள கார்மேகமாக நாம் காணும் இராமனின் சித்திரத்துடன் பொருத்திப் பார்க்கலாம்.
'வனத்து விட்டனை மனக்கு அரும்புதல்வனை என்றல் மன்னவன் தனக்கு அருந்தவம் அது தலைக் கொண்டேகுதல் எனக்கு அருந்தவம்'
என்ற இராமனின் கூற்றும் அவர்களுக்கான ஒருமையைச் சுட்டுகிறதெனலாம் .
இதில் தொடர்ந்து சென்றோமானால் தேவர்களுக்காக சம்பாசூரனையும், இராவணனையும் அழித்தல், பேரறத்தின் பொருட்டு ஒருவன் அரும்புதல்வனையும்,மற்றொருவன் காதல் மனையாளையும் வனத்திற்கனுப்பல்,சிற்றரசர்கள் சூழ பேரரசனாக நல்லாட்சியாளராகவிளங்குதல் என விரிந்து கொண்டே செல்கிறது.
முந்துசினமுடைய இலக்குவன்,மதிப்பீடுகள் மற்றும் நெறி வழி போற்றி வாழும் சுமந்திரன்,பேரரசனின் மனைவியாகவும்அன்னையாகவும் அறத்திற்கும் பாசத்திற்குமான ஊடாட்டத்தில் தவிக்கும் உயர் கோசலை,சுமத்திரை ,இராமனின் மேல் பெரும்பித்தும்,பேரன்பும் பூண்ட அயோத்திமாந்தர் என பாத்திரங்களின் ஆளுமை துலங்கும் நிகழ்வுகள் படலம் முழுதும் நிகழ்கின்றன.
‘மாதரார்கள் அறுபதினாயிரரும் ‘ என எண்ணிக்கையாகக் கடந்து செல்லும் தசரதனின் மனைவியர் பற்றிய சித்திரம் வழி சென்றால் நம் கொடிவழியும் வெறும் எண்ணிக்கையில் ஒன்றாக மாறலாமென்ற பதைப்பின் வழி வரம் பெற்ற கைகேயின் ஆழுள்ளத்தை புரியவியல்கிறது.
இயற்கை வருணணையை கதையோடு இழைத்துச் செய்யும் கம்பனின் மாயம் இப்படலத்திலும் நிகழ்கிறது.
இராமன் வனம்புகும் துயரால்,
‘கான்புகக் காண்கிலேன்’ என ‘கல்லதர் தான்புக முடுகும்’ கதிரோன்’
‘முகிழ்த்து அழகு இழந்த முளரி ஈட்டம்’
‘கைவிளக்கெடுத்ததென்ன வந்தது கடவுள் திங்கள்’ வரும் சித்திரம்
தசரதன் முடிவிற்கு பின் ‘யானே காப்பன் இவ்வுலகை’எனவரும் கதிரோன் ஆகிய அனைத்தும் கதைச் சூழலுக்கேற்ற வருணணைகளாய் எண்ணயெண்ண சுவையூட்டுபவை.
‘அழுங்குபேரறா இடியுறத் துவளுவது’
‘குயின்றன குலமணிகள்’போன்ற சிறந்த உவமைகள் படலமெங்கும் விரவி வருகின்றன.
‘பிறவிப் பெரிய கடல்கடக்க
உய்த்து மீண்ட நாவாயில்
தாமும் போவார் ஒக்கின்றார்’
என்ற கம்பனின் தனித்துவம் மிக்க சொற்கள் உடலாகிய நாவாயின் வழி பிறவிப் பெருங்கடலை கடக்கும் தசரதனின் உடல்வழியாகவே தாமும் கடக்குபம் உடன்கட்டையேறுதலை விளக்கும் முறை எண்ணியெண்ணி சுவைக்கத் தக்கது.
ஒரு பருந்துப் பார்வையில் விரியும் காட்சியாக அமையும்,
'வட்டம் ஓர் ஓசனைவளைவிற்றாய் நடு எள்தனையிடவும் ஓரிடம் இலாவகை புள்தகு சோலையின் புறத்துப் போர்த்தென விட்டதூ குரிசிலை விடாத சேனையே'
என்ற பாடல் ஓசனை தூரத்திற்கு வட்டமாய் விரிந்துள்ள நெருக்கமான பெருந்திரள்,அதன் மையப் புள்ளியாய் திகழும் இராமனை காட்சிப் படுத்துகிறது. அயோத்தியின் நிலையை விளக்கும் குறியீடாகவும் இக்காட்சி நமக்கு சிலிர்ப்பைத் தருகிறது.
காவியத்தில் பயின்று வரும் சந்த ஓசை நயம் பாடலை எந்த உணர்வில் நாம் வாசிக்க வேண்டுமென நமக்கு கம்பன் தரும் குறிப்பாகவே அமைகிறது.
தொலைநோக்குப் பார்வையில் பெருந்திரளைக் காட்டி சந்தத்தை வேறுபடுத்தி நம்மை நுண்சித்தரிப்புக்குள் இட்டுச் செல்கிறான்.
'வாவிவிரி தாமரையின் மாமலரின் வாசக் காவிவிரி நாள்மலர் முகிழ்த்தணைய கண்ணார் ஆவிவிரி பால்நுரையின் ஆடை அணையாக நாவிவிரி கூழை இள நவ்வியர் துயின்றார்'
என்ற வரிகளை சந்தத்தோடு நாம் வாய்விட்டு வாசிக்கையில் வெட்டவெளியில் வயின்தோறும் வயின் தோறும் சிததறிக்கிடந்த மக்கள் உணரும் குளிரையும், மெல்லிய பாலாடை போன்ற ஆடையாலும் அவர்கள் பெறும் சிறு கதகதப்பையும் நம்மால் உணரமுடிகிறது.
பெருந்துயருக்குப் பின் சமநிலை நோக்கிச் செல்வது இயற்கை.இராமன் வனம் புகல்,தசரதன் இறப்பு என்ற உச்ச துயரங்களுக்குப் பின் சமநிலை நோக்கி கதை நகரும் சித்திரம் படலத்தில் படிப்படியாய் தோன்றி வருகிறது.
பெருந்துயர் கொண்ட சுமந்திரன் இராமனின் உரைக்குப் பின்
‘ஆறினன் போல் சிறிது அவலம் அவ்வழி’
எனச் சற்று ஆறுதலாவதில் தொடங்கும் சமநிலை,தசரதனின் மறைவிற்கு துயர் கொண்டாலும் வசிட்டன் பின்’தையற் கடல் நின்றெடுத்து’ மன்னனுடலை ‘தயிலக் கடலில் தலை உய்த்தல், ‘தண்தார்ப் பரதற் கொண்டு’என பரதனுக்கு சேதி அனுப்புதல்,சுமந்திரனை செயற்பாற்கு உரிய செய்க’ என ஆற்றுப்படுத்தல் என வளர்ந்து
கதிரவன் 'யானே காப்பென் இவ்வுலகை என்பான் போல எறிகதிரோன்' என கதிரவன் உதயமும் வெள்ளத்திடை வாழ்வடவனலை அஞ்சி வேலைகடவாத பள்ளக்கடலின் முனிபணியால் பையுள் நகரம் வைகிட'
என அயோத்தி மாந்தரும்கரைக்குள் அடங்கும் வெள்ளமாய் மாறும் சமநிலையுடன் படலம் முடிகிறது.இவ்வகையில் பெருந்துருக்குப்பின் சமநிலை நோக்கிசெல்லும் களிற்றியானை நிரையுடன் இதனை ஒப்பு நோக்கலாம்.