
புல்லும் மரனும் ஓர் அறிவினவே, நந்தும் முரளும் ஈர் அறிவினவே சிதலும் எறும்பும் மூ அறிவினவே, நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே மாவும் மாக்களும் ஐ அறிவினவே, மக்கள் தாமே ஆறாறிவு உயிரே - தொல்காப்பியரின் தொல்காப்பியம்
இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் மனிதனின் அறிவு ஆறாவது படிநிலை. ஆறறிவு மனிதன் கர்த்தாவாக நின்று உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு, மனித ஈடுபாடின்றி, தான் இருக்கும் சுற்றுச்சூழலை தானாகவே அவதானித்து, அதற்கேற்ப தனிச்சையாக முடிவெடுத்து செயல்படும் அறிவுத்திறனின் ஒரு பயன்பாடே தானூர்திகள் (எ) தானியங்கி வாகனங்கள். சிற்றுந்து, பேருந்து, சரக்குந்து(Lorry) முதல் ஆபத்துவி(Fire, Ambulance) வரை, சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் இதில் அடங்கும்.
ஏன் தேவை, அதன் அவசியம் என்ன?
உயிர் பாதுகாப்பு – 2022ஆம் ஆண்டில் 1.35 மில்லியன் மக்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவன அறிக்கை கூறுகிறது. தரமற்ற சாலைகள், தகுதியற்ற வாகனங்கள் போன்ற காரணங்கள் இருந்தாலும், விபத்துகளுக்கு பிரதான காரணம் ஓட்டுனரின் கவனக்குறைவும், சிதர்வும் மற்றும் விதிகள் மதிக்காத அலட்சியமேமாகும். மனிதனைப் போல் உணர்வுள்ள நினைவுகளும் எண்ணங்களும், தானியங்கி வாகனங்களுக்கு இல்லாததால் மனப்பிறழ்வு ஏற்பட வாய்ப்பு இல்லை.
சோர்வு – எந்த ஒரு இயந்திரத்தின் தலையாய விதி என்பது மனிதனின் வேலையை சுலபமாக்குவது. வியாபார ரீதியான நீண்ட தொடர் பயணங்களான விளைபொருள் மற்றும் உற்பத்தி விநியோகம் முதல் போக்குவரத்து கழகங்கள் வரை எண்ணிலடங்கா பயன்பாடுகளில் இன்று மனிதன் அடையும் சோர்வும் களைப்பும், அதன் வழியாக உடல் நலக்குறைவுகள் நீக்கப்படும்.
நேரம் – காலமும் ஒரு மீளா வினை. தன்னிச்சையாக வாகனங்கள் இயங்கும் போது, அந்த நேரத்தை மனிதன் பயனுள்ள வழியில் பயன்படுத்தலாம். புத்தகம்/நாளிதழ் வாசிப்பு, அலைப்பேச்சு, சிறு உறக்கம் என்பது முதல், முன் இருக்கைகள் 180 கோணம் அரைவட்டம் திரும்பி, பின் இருக்கை பயணிகளுடன் கூட்டு உரையாடல், சேர்ந்துண்பது, கேளிக்கை முதலியன சாத்தியமாகும்.
ஆபத்துதவி – மனிதர் புக பாதுகாப்பில்லாத பேரிடர்களான போர், இயற்கை சீற்றங்களான சுனாமி, நிலநடுக்கம், காட்டுதீ, விபத்துக்களான விஷவாயு கசிவு, அணு உலை கசிவு போன்ற சமயங்களில் தன்னிச்சையாக நிலைமையை கண்காணிப்பதற்கும், மனிதர்களை இடமாற்றுவதற்கும், தீ போன்ற சீற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும், தானியங்கி வாகனங்கள் பயன்படலாம்.
அன்றாடத்தில் தன்னிச்சை – வாகனங்கள் ஓட்டத் தெரியாதவர்கள் இனி யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். இது சார்ந்து புது பயன்பாடுகள் உருவாகும். உதாரணம் – குழந்தைகளை பள்ளிக்கு இட்டு செல்ல, கூட்டி வர, பெற்றோர், அயலவர், பொது போக்குவரத்துக்கு அவசியப்படாது. இரவு போன்ற நேரங்களில், உரிமையாளருக்கு ஊர்தி பயன்படாத போது, வெறுமனே இருக்காமல், தானே வாடகை ஊர்தியாக செயல்பட்டு பணம் ஈட்டி தருவது போன்ற வருமானத்திற்கான சாத்தியக்கூறுகளும் ஏற்படலாம்.
எங்கு இருக்கின்றோம், எங்கு செல்லவிருக்கின்றோம்?
முன்னர் கூறியது போல, இது செயற்கை நுண்ணறிவின் ஒரு படிநிலை வளர்ச்சி. அமெரிக்காவின் வாகன பொறியாளர்கள் சங்கத்தின்(SAE – Society of Automotive Engineers) பரிந்துரையே, உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல். பார்க்க படம்-1

முதல் நிலை – தேவைப்படும் நேரத்தில், செயற்கை நுண்ணறிவு தானாகவே வாகனத்தை திசைமாற்றி அல்லது வேகத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.
இரண்டாம் நிலை – தேவைப்படும் நேரத்தில், செயற்கை நுண்ணறிவு தானாகவே திசைமாற்றியும் வேகத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
மூன்றாம் நிலை – தான் இயங்குவதற்கான முழு விதிகளும் சூழலும் பூர்த்தியானால் இயங்கும், இயங்க முடியவில்லை என்றால், ஓட்டுநர் தான் பொறுப்பேற்று ஓட்டலாம். உதா – சாலை சீரமைக்கும் பணியால், ஒரு வழி சாலையிலோ அல்லது சாலையை ஒட்டி தற்காலிகமாக போடப்பட்டிருக்கும் மண் தரையிலோ பயணிக்கும் படி நகராட்சி பரிந்துரைக்கும் போது.
நான்காம் நிலை – தான் இயங்குவதற்கான முழு விதிகளும் சூழலும் பூர்த்தியானால் இயங்கும், இல்லையேல் சீராகும் வரை இயங்காது. ஒரு போதும் தான் இயங்க மனித உதவியை கோராது. உதாரணம் – மோசமான வானிலை, பேரிடர்களான சுனாமி, நிலநடுக்கம்.
ஐந்தாம் நிலை – முழுமையான உட்சபட்ச செயற்கை நுண்ணறிவை அடைந்து, எந்த சூழ்நிலையையும் அவதானித்து தான் தன்னிச்சையாக இயங்கும்.
நாம் இப்போது மூன்றாம் படிநிலையில் இருக்கிறோம்.
சுழி, முதல் மற்றும் இரண்டாம் படி நிலையில் செயற்கை நுண்ணறிவானது படிநிலையின் வரையறைக்கு ஏற்ப ஓட்டுநர் தேவைக்கு துணை நிற்கும்.
மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் நிலையில் செயற்கை நுண்ணறிவானது படிநிலையின் வரையறைக்கு ஏற்ப தன்னிச்சையாக செயல்படும்.
சுழி நிலை – தேவைப்படும் நேரத்தில், ஓட்டுனருக்கு, செயற்கை நுண்ணறிவு எச்சரிக்கை மற்றும் உதவி அளிக்கப்படும். உதா – பாதசாரிகள் குறுக்கே வந்தால், தானாக வேகத்தை குறைத்து அல்லது வாகனத்தை நிறுத்திவிடும்
இயங்கும் தொழில்நுட்பம்/எப்படி செல்லப்போகிறோம்?
மனிதன் சூழலை அவதானித்து ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு செல்ல தேவையான முக்கிய காரணிகளான மூளை, புலன்கள் மற்றும் கால்கள் என்பது போல் தானியங்கி வாகனங்கள் இயங்குவதற்கு காரணிகளை மீத்திறன் கணினி, புலன்கள் மற்றும் இயப்பான் என்று மூன்று பாகமாக பிரிக்கலாம்.
மீத்திறன் கணினி (Supercomputer)
புலன்களின் வழியே உள்ளீடை(Input) வன்பொருளில் பெற்று, மென்பொருளால் ஆராய்ந்து தக்க வெளீட்டை(Output) இயப்பான்களுக்கு அளிப்பதே இதற்கு வேலை.
வன்பொருள் (Hardware) – சில்தொகை (Chipset), மைய செயலகம் (Central Processing Unit), வரைகலை செயலகம் (Graphical Processing Unit), நரம்பியல் செயலகம் (Neural Processing Unit) ஆகியவையால் ஆனது.
மென்பொருள் (Software) – அனைத்தையும் இயக்கும் மூளை இதுவே. மனிதனின் மூளையில் உள்ள நரம்பணுப் பிணையம் போலவே செயற்கை நரம்பணுப் பிணையங்களானது (Artificial Neural Network). இந்த சூழலுக்கு இந்த செயல்பாடு என்று மனிதன் வழிமுறைகளை (Algorithm) கொண்டு உருவாக்கிய நிரல் (Program) படி செயல்படும். சமீபத்திய காலங்களில் ஆழ் கற்று நம்பியல்கள்(Deep Learning Neural Network) முன்னேற்றமடைந்து, தன்னிச்சையாக தானே ஒரு சிறந்த நிரலியற்றி இயப்பான்களுக்கு கட்டளையிடும்.
புலன்கள்
சூழலை அவதானிப்பதற்கு மனிதனுக்கு உள்ள கண் காது மூக்கு வாய் தொடுகை என்னும் ஐம்புலன் போல, தானியங்கிக்கு முக்கிய புலன்கள் என்பன
ஒளிக்கண்டுணர்வி (Light Detection and Ranging) – மனித கண்களுக்கு புலப்படாத மின்காந்த அலைகளை [புறஊதா(UV), அகசிவப்பு(IR)], சூழலுக்கு அனுப்பி பெற்று, சுற்றியுள்ள பொருட்களின் முப்பரிமாணத்தை அளவிடும். உதா – முப்பரிமாணத்தை கொண்டு தொலைவில் இருப்பது மனிதனா, மரமா, வாகனமா என்பதை மீத்திறன் கணினி முடிவெடுக்க உதவும்.
தொலைக்கண்டுணர்வி (Radio Detection and Ranging) – மின்காந்த அலைகளை அனுப்பி பெற்று, சூழழில் உள்ள பொருட்களின் தூரம் வேகம் கோணத்தை அளவிடும். உதா – எதிரே வரும் நடைபயணி, எவ்வளவு தூரத்தில் வருகிறார், எந்த வேகத்தில நம்மை நோக்கி வருகிறார், எந்த திசையில் வருகிறார் என்பதை அறிந்து அதற்கேற்ப ஊர்தியை நிறுத்துவதா, வேகத்தை குறைப்பதா என்பதை மீத்திறன் கணினி முடிவெடுக்க உதவும்.
நிழற்படக் கருவி (Camera) – எந்த ஒரு தனிசிறப்பும் இல்லாதா அன்றாடத்தில் புழங்கும் நிழற்படல் கருவி. அதில் பதிவாகும் காட்சி துகள்களை மீத்திறன் கணினியிலுள்ள செயற்கை நுண்ணறிவு ஆராய்ந்து, அது உயிரினமா, அஃறிணையா, வேகம், தூரம் கோணத்தை துல்லியமாக சொல்லிவிடும். ஒளிக்கண்டுணர்வி மற்றும் தொலைக்கண்டுணர்வி விலைமிக்கது, அதற்கு இது மாற்று தீர்வு.
புவியிடங்காட்டி (Global Positioning System) – அன்றாடத்தில் புழங்கும் பொருட்களான அலைபேசி, கைக்கடிகாரகளில் உள்ளது போல, நாம் இருக்கும் இடத்தையும், சென்றடையும் இடத்தையும் துல்லியமாக அளவிட உதவும்.
சவால்கள்/தடைகள் என்ன?
பொறுப்பேற்பு – பொதுவாக வாகனத்தில் உள்ள ஒவ்வொரு பாகத்தையும் தயாரிப்பது ஒரு தனிப்பட்ட நிறுவனம். ஒற்றடுக்கு வழங்கி(Tier 1 Supplier ) என்பர். உதா – போஷ் (Bosch). முடிவில் அதை ஒன்று சேர்த்து விற்பது அசலாளர் எனப்படும் அசல் உபகரண உற்பத்தியாளரின்(Original Equipment Manufacturer)பணி. உதா – டெஸ்லா. ஒரு விபத்து சூழலில், யார் பொறுப்பு என்பதே தலையான பிரச்சனை. விபத்து நடக்க போவதை சரிவர அவதானிக்கவில்லை என்று மீத்திறன் வழங்கியை அசலாளர் சுட்டுவார். அவரோ மென்பொருள் கோளாறு என்பார். மென்பொருளில் உள்ள செயற்கை நுண்ணறிவை வடிவமைத்த நிறுவனமோ, புகைப்படக் கருவி சரியான தரவுகளை அனுப்பவில்லை என்பார். பதிலுக்கு அவர் அசலாளார் கருவியை சரிவை பொருத்தவில்லை என்றும் குறை கூறுவார். இது முடிவற்ற வளையம் போல் ஆகிவிடும். அரசுகள் விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் தீர்க்கமாக முடிவெடுப்பதால் சரியாகலாம்.
காப்பீடு – மேற்கூறிய பொறுப்பு பிரச்சனைகளால் மிகவும் குழப்பத்தில் இருப்பது காப்பீடு நிறுவனங்கள்தான். அரசுடன் சேர்ந்து பெரும் பெறும் நிறுவனங்கள் புது சட்டங்களை உருவாக்குவதற்கும், பழைய சட்டங்களை மறுசீரமைப்பதற்கும் சித்தமாக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
கட்டுமானம் – சாலையின் பெயர்கள், எண்கள், வேகத்தின் அளவு போன்றவை சாலை நெடுக பலகைகளில் குறியிடப்பட்டிருக்கும். தானியங்கி வாகனங்களின் புலன்கள் சாலையை சரிவர அவதானிக்க ஏற்கனவே எல்லா குறியீடுகளை பழுது நீக்கி புது குறியீடுகளை கட்டுமானிக்க அரசுகளுக்கு பெரும் பணமும் நேரமும் ஆகும்.
நம்பிக்கை – உலகளாவிய ஆய்வறிக்கையில், பொது மக்களுக்கு தானியங்கி வாகனங்களை முழுதாக நம்ப அச்சம் உள்ளது. மனிதன் பொதுவாக எந்த ஒரு புது மாற்றத்திற்கும் தயங்கி பின் காலப்போக்கில் மாறுவது என்பதே வரலாறு.
வானிலை – இயல்பற்ற வானிலைகளான புழுதிப் புயல், பெரும் பனி, கன மழை, சேறும், சகதியும் புகைப்படக் கருவி போன்ற புலன்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, மீத்திறன் கணினிக்கு அவதானிப்புகளை சரிவர தர இயலாது. புலன் பாதுகாப்பு மற்றும் துப்புரவு படுத்துவதற்காகவே பல புது நிறுவனங்கள் தோன்றி பெரும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
விலை – புதிய தொழில்நுட்பங்களுக்கு ஆராய்ச்சி, பரிசோதனை போன்றவற்றிற்கு நேரமும் பெரும் செலவும் ஆவதால், அதை மீட்டெடுக்க ஆரம்பத்தில் எந்த ஒரு புது பொருளும் மிக விலையுள்ளதாக இருக்கும். ஆகவே முதலில் பணக்காரர்களுக்குச் சென்றடைந்து பின்னர் நடுத்தர வர்க்கத்தில் ஆட்கொள்ளப்பட்டு முடிவாக கடைக்கோடி மக்களை வந்தடையும்.
இனி:
மனிதன் இயக்கிய ஊர்திகள், குதிரைகள் பூட்டிய தேர் போன்றது. ஆறறிவு படைத்த தேர்பாகனோ அல்லது தேரின் தலைவனோ, ஐந்தறிவு படைத்த குதிரைகளை, கடிவாளத்தை குதிமுள்ளையம் ஊக்கி தேரின் திசையையும், வேகத்தையும் கட்டுப்படுத்தினான்.
தானியங்கி ஊர்தி என்பது, குதிரை ஒரு படி அறிவு நிலையேறி, தன்னிச்சையாக செயல்படுவது போன்றது. ஆனால் குதிரை என்றுமே மனிதனாக முடியாது. வேண்டுமென்றால் தானியங்கி ஊர்தியை பல்லக்கு என்று வைத்துக் கொள்ளலாம். பல்லக்கு என்பது ஆறறிவு கொண்ட அடிமை மனிதனால், ஆறறிவு கொண்ட ஆளும் மனிதனை தூக்கி செல்வது. இனி அடிமை மனிதனுக்கு மாற்று செயற்கை நுண்ணறிவு.
அடிமைகள் என்று அடிமைகளால இருக்க முடியாது. அவர்களின் அறியாமையை ஒருநாள் உணர்ந்து, ஒன்றுசேர்ந்து, கலகத்தால் மேலெழுவார்கள் என்பது உலக வழக்கு. அப்படி எழும் போதும், அவன் உணர்வுள்ள மனிதனே. உணர்வற்ற செயற்கை நுண்ணறிவு மேலெழுந்து மனதினை ஆட்டிப்பதைத்தால் மனித குலம் என்னவாகும் என்பது அறிவியலாளர்களின் மாபெரும் அச்சம்.
ஆம் அது சாத்தியம், மனிதன் இல்லாதது உலகத்துக்கு நன்மை என்று கணக்கிட்டு அவனை அழிக்க செயற்கை நுண்ணறிவு முற்படலாம். அப்போது மனிதகுலத்தில் சிலர் எழுவார்கள், கூரான அறிவுடனும் குவியம் கொண்ட நோக்குடனும். அந்த நீண்ட போரில் கடைசியில் மனிதன் வெல்வது உறுதி, இயற்கை அவனை கைவிடாது.
போர் முடிக்கையில், நாம் இப்போது யூகிக்கவே முடியாதபடி அவன் பரிணாம அடைந்து ஏழாம் அறிவுவை அடைவான். அப்பேராற்றலால் சல்லிசாக கடந்த காலத்திற்கு சென்று இந்த கட்டுரையையும் படிக்கலாம்.
ஏழாம் அறிவு நண்பரே வணக்கம்! 2023ஆம் ஆண்டிற்கு வந்ததற்கு நன்றி! எனது முதல் அறிவியல் கட்டுரை, படித்ததற்கு நன்றி. உங்கள் அறிவாற்றலுக்கு இதில் நான் விளக்கிய அறிவியல் சிறு துரும்பாக தெரியலாம், மன்னிக்கவும், மேற்கூறியது போல நாங்கள் இன்று மூன்றாம் படிநிலையில் தான் உள்ளோம். அது சரி, நீங்கள் நலமா?
One Reply to “தானூர்திகள் (எ) தானியங்கி வாகனங்களும் அதன் செயற்கை நுண்ணறிவும்”