
புதிய கருதுகோள்கள்:
அறிவியல் புனைவுகள், உண்மையில் நடை பெறும் சாத்தியங்கள் உள்ளன என நம்பும் விதத்தில், வான மண்டலத்தியல் கண்டு தெளிகிறோம் நாம்.
மிக நுட்பமான, அதி உன்னதமான கருதுகோள்களை நாசாவின் முன்னேறிய கருதுகோள் அமைப்பு ( என் ஐ ஏ சி -Nasa Institute for Advanced Concepts) வரவேற்கிறது, உற்சாகப்படுத்துகிறது. தன் எதிர்காலக் குறிக்கோள்களுக்கான கூர்மையான தொழில் நுட்பங்களை அது ஆதரிக்கிறது. சனி கிரகத்தின் சந்திரனான டைடனில் (Titan) பறக்கும் கடல்- விமான ஊர்தியைப் (Sea-Plane) போன்ற ஒரு கருவியைப் படைப்பதற்கும், செவ்வாயில், உயிரினங்களின் குடியேற்றத்திற்கான தானே வளரும் செங்கற்களை உருவாக்கும் கருத்திற்கும் நாசா சமீபத்தில் நிதி அளித்துள்ளது. திரவ வானத் தொலைநோக்கி, (Fluid Telescope) ஆயிரக்கணக்கில் செயற்கைக் கோள் அடங்கிய மெய்நிகர் தொலைநோக்கி, பூமி 2.0 கண்டுபிடிக்க வானக் கண்காணிப்பகம் போன்றவைகளும் இந்தப் பிரபஞ்ச இரகசியங்களை அறிந்து கொள்ள உதவக்கூடும் என்பதால் இவைகளுக்கும், என் ஐ ஏ சி அமைப்பு நிதி அளித்துள்ளது. இந்த முதல் நிலை வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் $1,75,000 கிடைத்துள்ளது; அவர்கள் ஒன்பது மாதங்களில் அந்தந்தக் கருத்துக்களின் சாத்தியங்களை நிரூபிக்க வேண்டும்.
2022ல் ஒரு சிறிய ஹெலிகாப்டர் செவ்வாயில் பறந்தது; விண்கல்லை நாசா வானிலேயே மோதி பாதையை மாற்றியது; ஜேம்ஸ் வெப் வானியல் தொலைநோக்கி பிரமிப்பூட்டும் விஷயங்களை படம் பிடித்துக் காட்டுகிறது. கற்பனைக் கதைகளில் இடம் பெற்ற இந்த நிகழ்வுகள், நிஜத்தில் நடைபெற பல பத்தாண்டுகளின் உழைப்பும், திட்டமிடுதலும், பின்னணியாக உள்ளன.
நாசாவின் நிர்வாகி பில் நெல்சன்,(Bill Nelson) ‘செய்ய முடியாததை செய்வதுதான் எங்களுக்கான சவால்’ என்கிறார். புதியதைக் கண்டுபிடிப்பவர்கள், சட்டகத்திற்கு வெளியே சிந்திப்பவர்கள், செயல் முனைவோர் இவர்களால், எதிர்கால வானியல் அற்புதங்களை எங்களால் கற்பனை செய்யவும், அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கவும் முடிகிறது என அவர் சொல்கிறார். இவ்வகையில் இந்த ஜனவரியில் 14 கருதுகோள்களுக்கு $1,75,000 முதற்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வாளர்கள் வரும் 9 மாதங்களில் தங்கள் கற்பனையின் செயலாக்கச் சாத்தியங்களை நிரூபித்தல் அவசியம். அதைப் பொறுத்து சிந்தனையின் உண்மை சாத்தியம் மற்றும் செயலாக்கத்திற்காக அவர்களுக்கு $6,00,000 தரப்படும்.
கனக தாரா
பூமியிலிருந்து 11,000 ஒளியாண்டுகளிலுள்ள இரு விண்மீன்கள் தங்க மழை பொழியப் போகிறது. விண்மீனின் வாழ்வின் இறுதியில் அது வெடித்துப் பேரொளியாய்த் தோன்றுவதை ‘சூப்பர் நோவா’ (Supernova) அதாவது மீயொளி விண்மீன் நிகழ்வு எனச் சொல்வோம். ஆனால், மந்த மங்கலாக ஒரு மீயொளி, நம்மிடமிருந்து 11000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இரு நக்ஷத்திரங்களின் இடையே, ஏற்பட்டுள்ளதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இது நாள் வரை அறிந்துள்ளதில் உறுதிப்படுத்தப்பட்ட இந்த விண்மீன் அமைப்பு ‘கிலோநோவா’வை (Kilonova) ஒரு நாள் ஏற்படுத்தும். ‘கிலோநோவா’ என்பது ந்யூட்ரான் விண்மீன்கள் மோதி வெடிக்கையில், வான் வெளியில் தங்கத்தையும், கனரகத் தனிமங்களையும் உண்டாக்கும் ஒன்று. நம் பால்வீதி மண்டலத்தில் இருப்பதாக நம்பப்படும் 10 நக்ஷத்திர இணைகளில் அரிதான ஒரு ஜோடி இது.
இதைக் கண்டுபிடித்ததே சுவையான ஒன்றுதான். வானில், ஓரிடத்தில், நாசாவின் நீல் கேரெல்ஸ் ஸ்விஃப்ட் கண்காணிப்பகம் (NASA Neil Gehrels Swift Observatory) மிகப் பெரும் மின்னலொளியை 2016-ல் பார்த்தது. பளிச்சிடும், வெப்பமான, பி- ரக (Be-type- A main sequence star of spectral type B and luminosity V- இந்த விண்மீன்களில் முக்கியத் தொடரான ஒன்று நிறமாலையின் நீல நிற வெளிச்சத்தை பளீரெனச் சிந்தும்) விண்மீன்கள் இருந்த வட்டாரத்திலிருந்து அந்த ஒளிப்பிழம்புகள் வந்தன. இந்த ஒளிக்கும், அந்த விண்மீன்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என அறிய வானியலாளர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. எனவே, செர்ரோ டோலோலோ இன்டர்-அமெரிகன் கண்காணிப்பத்தின் (Cerro Tololo Inter-American Observatory) 1.5 மீட்டர் அளவிலான தொலை நோக்கியின் மூலம் தரவுகள் திரட்டப்பட்டன.
எம்ப்ரி ரிடில் ஏரோனாடிகல் பல்கலையில் (Embry Riddle aeronautical University) இயற்பியல் மற்றும் வானவியலில் துணைப் பேராசிரியராகப் பணி புரியும் நோயல் டி ரிச்சர்ட்சன், (Noel D Richardson) இந்தத் தரவுகளைக் கொண்டு மேலும் அந்த விண்மீன்களைப் பற்றி அறிய முயன்றார். அந்தப் பல்கலையில் பயின்று வந்த க்ளரிசா பாவோ, (Clarissa Pavao) வானவியல் ஆய்வுகளில் அனுபவம் பெற நோயலை அணுகினார். பெருந்தொற்றுக் காலம் முழுதும் அவர் தொலைநோக்கி வழங்கி வரும் தகவல்களைச் சலித்து, திரிபுகளை அகற்றி வந்தார்.
தொலைநோக்கி ஒரு விண்மீனைப் பார்க்கும் போது அதன் ஒளியனைத்தையும் எடுத்துக் கொண்டு அது எந்தத் தனிமங்களாலானது என்று அறிவதற்கு உதவும். பி-ரக விண்மீன்களைச் சுற்றி பொருள் வளையங்கள் உள்ளதால், அதனூடே பார்ப்பது கடினமான ஒன்றாகும்.
முதலில் பாவோ அனுப்பியவை சிதறல்களாகத்தான் நோயலுக்குத் தென்பட்டது. அது இரு விண்மீன்கள் அமைப்பின் சுற்றுப்பாதை என்பது பின்னர் தெளிவாகியது. இந்தப் பைனரி (Binary) விண்மீன்களின் சுற்றுக்கள் இவை என்பது புரிந்தது. அந்த மீன்கள் சி பி டி 29 2176 (CPD 29 2176) என்று பெயரிடப்பட்டன.
பொதுவாக பைனரி விண்மீன்கள் ஒன்றையொன்று முட்டை வடிவப் பாதையில் சுற்றும்; இந்த சி பி டி 29 2176 வட்ட வடிவப் பாதையில் ஒவ்வொரு முறையும் 60 நாட்களில் வலம் வந்தது; இதில் ஒன்று பெரியது; மற்றொன்று சிறியது. இரண்டும் நெருக்கமாகச் சுற்றின. காலப்போக்கில் பெரிய நக்ஷத்திரம் ஹைட்ரஜனை அதிகமாக எரித்து, சின்ன மீனுக்குப் பொருட்களை வழங்கத் தொடங்கியது; அதுவும் எப்படி? பெரும் வள்ளலாக; நம் சூரியனின் எடையைப் போல 8 அல்லது ஒன்பது மடங்கு எடை கொண்டிருந்த சின்ன விண்மீன், சூரியனைப் போல 18 அல்லது 19 நிறை கொண்ட ஒன்றாக வளர்ந்தது. நம் ஆதவனின் எடை என்ன தெரியுமா? பூமியைப் போல3,33,000 தடவை!
முக்கிய விண்மீன், தன் எரிபொருளை எரித்து சிறுத்து சிறுத்து வர, சின்னது பெரிதாகியது. அதனால், பலவீனப்பட்டு, சக்தி மிகுந்த, வெடிப்பை நிகழத்த முடியாமல், தன்னிடம் மீதமுள்ள பொருட்களை வான் வெளியில் செலுத்த முக்கிய விண்மீனால் முடியவில்லை. தீபாவளியின் போது நமுத்த பட்டாசு வெடிப்பது போல அது வெடித்தது.
தீவிரமற்ற இந்த சூப்பர்நோவாவின் அடர்த்தியான எச்சங்கள் ந்யூட்ரான் விண்மீன் என்று அழைக்கப்படுகிறது. வேகமாகச் சுழலும் அந்தக் கன விண்மீனை இது இப்போது சுற்றுகிறது. இந்த வானக இணை 5-7 மில்லியன் ஆண்டுகள் இந்தக் கட்டமைப்பில் இருக்கும். நிறையும், கோண உந்துதலும், இந்த பி-ரக விண்மீனுக்கு மாற்றப்படுகிறது- அது தன்னைச் சுற்றி வாயு வளையத்தை இதனால் அமைத்துக்கொண்டு, தன் நிலையைப் பேணி, தான் சிதறுபடாமல் பார்த்துக் கொள்கிறது.
முதல் விண்மீன் செய்ததைப் போலவே இந்த விண்மீனும், தன் எரிசக்தியை வெளியேற்றி, பரந்து, பொருட்களை வெளியேற்றும். ஆனால், அந்தப் பொருட்கள் ந்யூட்ரான் விண்மீனின் கொள்ளவிற்கு அதிகம் என்பதால், வான் வெளியில் இப்பொருட்கள் வெளிவரும். இந்த இரண்டாம் விண்மீனும், மந்தமான வெடிப்பை நிகழ்த்தி தானும் ஒரு ந்யூட்ரான் மீனாக மாறும். சில பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டு ந்யூட்ரான் விண்மீன்களும் இணைந்து, ‘கிலோ நோவா’வில் வெடித்து, அகிலத்தில் தங்கம் போன்ற கனத்தனிமங்களைத் தரும்.
அந்தத் தங்க மழை பொழியும் நாளில் நாமிருந்தாலும் (!) இல்லாவிட்டாலும், நம் சந்ததிகள் அதைப் பெறுவர். நமது வாழ்க்கையை இது பாதிக்காது. தங்கம் பிறந்ததே இம்மாதிரியான விண்மீன் சூப்பர் நோவாவால் என்று ரிச்சர்ட்சன் சொல்கிறார். இந்த உலகை அறிந்து கொள்ள, அதில் நம் இடம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வானவியல் மிகச் சிறந்த ஒன்று என்று அவர் மேலும் சொல்கிறார். ‘இவைகளைப் பார்க்கையில் காலத்தைப் பின்நோக்கிப் பார்க்கிறோம்; இந்த அகிலத்தின் பிறப்பையும், நம் சூர்யக் குடும்பம் எதை நோக்கிச் செல்கிறது என்பதையும் அறிகிறோம்; நாமும் இந்த நக்ஷத்திரங்களைப் போலவே, அதே தனிமங்களால் தொடங்கினோம்’ என்று சொல்கிறார் பாவோ.
கடல் விமானங்கள்
சனி கிரகத்தின் சந்திரனான டைடனின் அடர்த்தியான வளிமண்டலம், மீதேன் ஆறுகள், ஏரிகள் வானவியலாளர்களை எப்போதுமே வசீகரித்து வந்துள்ளது. நம் சூர்யக்குடும்பத்தில் தனி இடம் பெற்றுள்ள அதில் நடக்கும் வேதிச் செயல்பாடுகள், முன்னர் பூமியில் நிகழ்ந்திருக்கக் கூடிய ஒன்றாக இருக்கலாம் என்பதே இந்த ஆர்வத்திற்குக் காரணம். இந்த சனி- நிலாவில் மிகப் பொடித்துள்ளதாகவும், உலர்ந்ததாகவுமுள்ள கரிமப் பொருட்களை ஆய்வதற்காக 2027-ல் ரோவர் (Rover) அளவிலான ‘ட்ரேகன் ஃப்ளை’ (Dragonfly) என்ற தட்டான் விமானம் அனுப்பப்பட இருக்கிறது.
வாஷிங்டனில் இருக்கும் ‘ஜிக்’ துறைமுகத்தில், (Gig Harbour) ப்ளேனெட் என்டர்ப்ரைசஸ்ஸில் (Planet Enterprises) முதன்மைப் புலனாய்வாளராக இருக்கும் க்வின் மோர்லி, (Quinn Morley) வாஷிங்டன் பல்கலையில் இத்துறையில் பணிபுரிவோருடனும், அத்தகைய சில அமைப்புகளுடனும் இணைந்து, ‘டைடன் ஏர்’ (Titan Air) என்ற கடல்- விமானம் ஒன்றை டைடனின் ஈரப் பகுதிகளுக்கு மேற்சொன்ன தட்டான் விமானத்தின் தோழனாக அனுப்பும் முயற்சிகளில் உள்ளார். கடல்- விமானமான இது டைடனின் வளிமண்டலத்தில் மேலே உயரப் பறந்து அதன் ஏரிகளில் கப்பலைப் போலப் பயணிக்கும். அந்த அன்னிய சந்திரனின் முக்கிய இரகசியங்களை ‘ட்ரேகன்ஃப்ளை’ காட்டிய பிறகு ஏறத்தாழ பத்து வருடங்களில் ‘டைட்டன் ஏர்’ அங்கே செல்லும். அந்த நிலவின் மழை மேகங்களிடையே பயணித்து விமானத்தின் முன் சிறகின் மீது படியும் மீதேனை அது குடித்து, தன்னிடமுள்ள கருவிகளால் அந்தத் திரவத்தை ஆய்வு செய்து, தரவுத் தகவல்களை பூமிக்கு அனுப்பும். இந்த விமானம் செல்ல முடியாத பகுதிகளுக்கு, ஒரு சின்ன ‘ரோவரோ’ அல்லது ஹெலிகாப்டரோ சென்று மாதிரிகளை எடுத்து, விமானத்திற்கு அனுப்பும். ‘ஒரே ஒரு சாதனத்தைக் கொண்டு மேகங்கள், ஏரிகள், கடற்கரைகள் ஆகியவைகளைப் பற்றிய தகவல்களை மூன்று நூதன வழிகளில் பெறுவதின் மூலம் அகிலத்தில் வேறெங்கும் உயிர்கள் உள்ளனவா என்று அறிய முடியும்’ என்று அவர் சொல்கிறார். கடல்- விமான வடிவமைப்பில் பொறியியல் மாணவர்களைத் துணை கொள்ளப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஃப்ளூட் தொலைநோக்கி (Fluidic Telescope)
அதிக அளவில் பொருள், நேரம், நிதி ஆகியவற்றைச் செலவிட்டு, அதிகளவில் பரிசோதனைக்கு உட்படுத்தி ஹப்பிள், ஜேம்ஸ் வெப் போன்ற தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டன. இன்றைய அவசர உலகத்திற்கு இன்னும் விரிதான, செலவு குறைந்ததான, விரைவில் தயாரிக்கக்கூடியதான தொலைநோக்கிகள் தேவைப்படுகின்றன. என் ஐ ஏ சி (NIAC) ஆர்வம் காட்டும் முக்கியத் துறை இந்த உலகத்தை அறிந்து கொள்வதாகும்.
கலிஃபோர்னியாவிலுள்ள எய்ம்ஸ் ரிசர்ச் மையத்தில், (Ames Research Center) அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றும் எட்வர்ட் பாலாபான், (Edward Balaban) தன் இணையாளர்களுடன் ஒரு திரவத் தொலைநோக்கி உருவாக்குவதைப் பற்றிய கருத்தினை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் ‘வைப்பர் சந்திரச் சுற்றுக் கருவி’ (Vaiper Lunar Rover) அமைப்பதில், பெரும்பாலும் நுட்பத் திட்டமிடுதலிலும், செயற்கை நுண்ணறிவிலும் செயலாற்றிய எட்வர்ட்டிற்கு திரவ தொலைநோக்கி அமைப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. ஒரு பெரிய தொலைநோக்கியை சுற்றுப்பாதையில் அமைப்பதற்கு திரவங்களைக் கையாள்வது சிறந்த ஒன்றாக இருக்கும் என்று அவரும், டெக்னியான் இஸ்ரேல் தொழில் நுட்ப அமைப்பும், (Israel Teknion Technologies) எய்ம்ஸ்ஸில் உள்ள துறைசார் வல்லுனர்களும் கருதினார்கள். முக்கியக் காரணம் தொலைநோக்கியின் அளவு, அதை ஏவும் வாகனத்தைப் பொறுத்திருக்காது என்பதுதான்; அதாவது மிகப் பெரிய தொலைநோக்கிகளை விண் சுற்றுப் பாதையில் வைக்க திரவங்கள் உதவக்கூடும். இந்தத் திட்டத்தின்படி இரு விண்சாதனங்கள் ஏவப்படும். ஒன்றில் திரவங்கள் நிரம்பியிருக்கும். இந்தத் திரவசட்டகம் 50 மீட்டர் அளவிலான பெரும் கண்ணாடியாகும். மற்றொன்று கருவிகள் அடங்கிய சாதனம். அது இந்தத் திரவக் கண்ணாடியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் வானில் வைக்கப்பட்டு, படங்களை, தகவல்களை பூமிக்கு அனுப்பும். கண்ணாடியாகச் செயல்பட உருகிய உப்புக்கள் (Molten Salts) என்று அழைக்கப்படும் அயனி திரவங்கள் (Ionic Liquids) உட்பட பல திரவங்களை அவர்கள் பரிசோதித்து வருகிறார்கள். சட்டக வடிவமைப்பு, கருவிவாகன கட்டமைப்பு ஆகியவற்றில் தங்களுக்குக் கிடைத்துள்ள மான்யத்தைப் பயன்படுத்துகிறார்கள். வெப் தொலைநோக்கி சந்தித்த சிறிய விண்கல் சேதம், இத்தகைய திரவ தொலைநோக்கிகளுக்கு ஏற்படாதென்றும், திரவங்களை விண்கற்களால் ஊடுறுவ முடியாதென்றும் அவர் சொல்கிறார். ஃப்ளூயிடிக் தொலைநோக்கி என்பதால், இதை ‘ஃப்ளூட்’ என்று அழைக்கிறார்கள். முதலில் தோன்றிய விண்மண்டலங்களின் மங்கலான ஒளியை, ஃப்ளூட், தன் பெரும் பரப்பால் பார்த்துவிடும் அல்லது புறக்கோள்களின் வளிமண்டலத்தின் உள்ளே பார்க்கும் சாத்தியங்களும் ஏற்படும். ‘நம்பினால் நம்புங்கள், அருகிலிருக்கும் புறக்கோள்களின் மேற்பரப்பு அம்சங்களை நாம் பார்க்க முடியும்; ஊசிமுனை வெளிச்சங்களென பார்த்த ஒன்றில் கண்டங்கள் உள்ளதா என்பதைப் பார்க்க இது உதவலாம்’ என்று அவர் சொல்கிறார்.
செவ்வாயில் குடி புகுவோமா?
நெப்ராஸ்கா லிங்கன் பல்கலையில் (Nebraska Lincoln University) துணைப் பேராசிரியராக பணி புரியும் காங்க்ரூயி ஜின், (Congrui Jin) தன் உதவியாளர்களுடன், காங்க்ரீட் கட்டமைப்பில் வரும் விரிசல்களை நுண்ணியிர்கள் மற்றும் பூஞ்சைகளைக் (Bacteria&Fungi) கொண்டு பூசினார். இந்தக் கருது கோளை ஏன் விண்ணிற்கு எடுத்துச் செல்லக் கூடாது என்று அவர் சிந்தித்தார். சிவப்பு கிரகத்தில் வளர்த்து, செங்கற்களால் கட்டிடம் கட்டி மனித இனம் அங்கும் எதிர்காலத்தில் வசிக்கக்கூடும்.
நுண்ணுயிர்கள் மற்றும் பூஞ்சைகளை உயிரியக்கியுடன் (Bioreactor) செவ்வாய்க்கு அனுப்பினால், அங்கே அவை வினையாற்றும். செவ்வாயின் கடின தட்ப வெப்பத்தைத் தாக்குப் பிடிக்க இந்த உயிரியக்கி உதவும். மண், சூர்ய ஒளி, நைட்ரஜன், கரியமில வாயு, உருகும் பனி நீர் ஆகியவற்றை கிரகமே கொடுத்துவிடும். நுண்ணுயிரி பிராண வாயுவைத் தந்து, கரிம கார்பனை பூஞ்சையில் உருவாக்கும். உயிரியக்கியினுள்ளே நடைபெறும் இந்தச் செயற்பாடுகள், ஒட்டும் பசையாக கால்சியம் கார்பனேட்டையும் தரும். இந்த மூலப்பொருட்கள், செவ்வாயின் மண்ணைப் பிணைத்து, தொகுப்பு அமைப்புகளாக்கும்; இதைக் கொண்டு தரைகள், சுவர்கள், அறைகலன்கள் அமைக்க முடியும்.
ஜின்னும் அவரது சகாக்களும் தற்சமயம் எந்த நுண்ணுயிரி, எந்த பூஞ்சை, சிறப்பாக இணையும் என்று ஆராய்ந்து வருகிறார்கள். செங்கற்களை (சதுர தொகுப்புக் கட்டமைப்பு) செவ்வாயில் உற்பத்தி செய்யக் கூடிய பயோ ரியாக்டரையும் கட்டி வருகிறார்கள். இந்த உயிரியக்கி செவ்வாயின் தட்பவெப்பம், வளிமண்டலம், காற்றழுத்தம், தேவையான ஒளி இவற்றைக் கணக்கில் கொண்டு கட்டப்படுகிறது. ‘தானே செயல்படுதல் என்பது இந்தக் கருதுகோளின் சிறப்பம்சம்; மனிதர்கள் பங்கேற்கத் தேவையில்லை. சிறிதளவு வித்துக்களை, அதாவது நுண்ணுயிரி, பூஞ்சை ஆகியவற்றைத் தொடக்கத்தில் அளித்துவிட்டால், தானே உருவாகி வந்துவிடும்’ என்று ஜின் சொல்கிறார்.
தேடுக பொன்னுலகம்.
ஏன் ஒரே ஒரு பூமி? இந்தப் பிரபஞ்ச பிரும்மாண்டத்தில் நாம் இருக்கும் பூமியில் மட்டுமா உயிரினங்கள் உள்ளன?
ரென்ஸ்சிலியர் பாலிடெக்னிக்கில் (Renssealaer Polytechnic) இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், வானவியல் ஆகிய துறைகளில் பணிபுரியும் ஹெய்தி ஜோ ந்யூபெர்க் (Heidi Jo Newberg) மற்றும் அவருடன் இந்தத்துறையில் உள்ளவர்கள் பூமி-எண் 2ஐ கண்டுபிடிக்கும் தொலைநோக்கி அமைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். ‘டைசர்’ (Dicer – Diffractive Interfero Coronograph Exoplanet Resolver) என்ற பெயருள்ள இது மாறுபடும், தலையிடும், ஒளிவளைய வரைவு மூலம் தீர்வு தரும் என ஒருவாறாகப் பொருள் கொள்ளலாம். அதாவது, பல நூற்றாண்டுகளாக குறிப்பட்ட வடிவத்தில் அமைக்கப்படும் தொலைநோக்கியின் வடிவமைப்பை மாற்றி அருகிலுள்ள புறக்கோளை அறிந்து பூமி- 2ஐ கண்டுபிடிப்பது இதன் குறிக்கோள்.
நமது பூமியின் அளவை ஒத்து இருக்கும் புறக்கோள்கள், அவை சுற்றிவரும் விண்மீன்களின் ஒளியால், மங்கலாக, சிறியதாகத் தான் தெரிகின்றன. ஆறரை மீட்டர் விட்டமுள்ள பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப்பை விட மூன்று மடங்கு அதிக விட்டமுள்ள தொலை நோக்கி இருந்தால், அருகிலுள்ள புறக்கோள்களைப் பற்றி அறிய முடியும். அத்தகைய பெரும் கண்ணாடிகள் கொண்ட தொலைநோக்கியை விண்ணில் நிறுவ இன்றைய சூழலில் இயலாது. டைசருக்கு இரு சிறு கண்ணாடிகள், இரண்டு பத்து மீட்டர் ஒளித்தட்டுக்கள் அல்லது ஒளியை மாறுபாடு செய்யும் ஒளியியல் சார்ந்த பொருட்கள் அடங்கிய கண்ணாடிகள் போதும்; ஒரு ஏவுகணையில் இதை அடக்கிவிடலாம். ஒளி மாறுபாட்டுத் தட்டுக்கள் என்பது நீங்கள் சிறிய வட்ட ஒளி-ஒலித் தகடுகளை (சிடிக்கள்) வெளிச்சத்தில் தூக்கிப் பார்க்கையில் பின் பகுதியில் தெரியும் நிறமாலை போன்றதுதான். அதுதான் இதன் அடிப்படை. இந்த ஒளி மாறுபாட்டுத் தட்டுக்கள், 20 மீட்டர் விட்டமுள்ள கருவிக்கு இணை- அந்த அளவிற்கு ஒளியைச் சேகரிக்கும்.
இவர்களது குழு ஒளிப்பிடிப்பிற்கு ஏற்ற கருவிகளை, அதுவும் ஒளி மாறுபடும் விதத்தில் தட்டுக்களைக் கொண்டு அதன் விகிதங்களை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்க வேண்டியவற்றில் ஆய்வு செய்து வருகிறது. புறக்கோள்களின் வளிமண்டலத்தையும் இதன் மூலம் ஆராய முடியுமா என்றும் சிந்திக்கிறார்கள்.
ஒளியா, ஒலியா?
பல தொலைநோக்கிகள் ஒளிவெள்ளத்தைப் படம் பிடிக்கின்றன. பூமியின் மேல் வளிமண்டலத்தில் ஏற்படும் பலவகை சப்தங்களால், குறைந்த வானொலி அலைவரிசை ஒலி அலைகளை, (Low Frequency Radio Waves) இங்கே பூமியில் அறிய முடிவதில்லை. இந்த நிறமாலையை நாம் கண்காணிக்க முடிவதில்லை. மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப அமைப்பின் ஹேஸ்டேக் கண்காணிப்பகத்தில் (Haystack Observatory) ஆராய்சியாளராகப் பணி செய்யும் மேரி நேப் (Mary Knapp) இதற்கான ஒரு தீர்வை சிந்தித்தார். ‘கோ லோ’ (Go-low- Great Observatory for Long Wavelengths) என்பதுதான் அது. காலணிப் பெட்டி அளவிலான ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்கள் ஒற்றை மெய்நிகர் தொலை நோக்கியாக ஒற்றுமையாகச் செயல்படும். சிறிய செயற்கைக்கோள்கள் அதிகம் செலவு பிடிக்காதவை; ஒரு பெரிய ஏவுகணையின் மூலம் ஒரே நேரத்தில் செலுத்தவும் முடியும். அப்படிச் செல்லும் செயற்கைக்கோள்கள் தரும் விவரங்களிலிருந்து குறைந்த மின்காந்தக் கதிரியக்கத்தை இந்தக் கண்காணிப்பகம் பதிவு செய்யும். இந்தத் தகவல்கள் வானியலாளர்களுக்கு தங்கச் சுரங்கம் போன்றது. மிகப் பழமையான விண்மீன்களை, அவற்றின் மண்டலத்தை, புறக்கோள்களின் காந்தப் புலனை இதன் மூலம் அறிய முடியும். கிரகங்களின் வளிமண்டலத்தைத் தக்க வைப்பதற்கு காந்தப் புலம் உதவுவதால், குடியேற்றத்திற்கான கிரகங்களைப் பற்றி இதன் மூலம் அறிய முடியும்.
இவர்கள் செயற்கைக்கோள்களின் உணர் கொம்புகளையும், (Antenna) அவற்றின் வடிவ அமைப்பினையும் பற்றிய உரையாடல்களில் உள்ளனர். இந்தக் கோ-லோ செயல்முறை கண்டால், வானத்தின் சில இரகசியக் கதவுகள் திறக்கலாம்.
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான் எனதென்றவரைக் கூத்தாட்டு வானாகி நின்றானை என் சொல்லி வாழ்த்துவனே” மாணிக்க வாசகர்.உசாவி: https://edition.cnn.com/2023/02/04/world/futuristic-space-exploration-science-newsletter-wt-scn/index.html by Ashley Strickland, CNN