காணொளிகளின் கொண்டாட்டம், திண்டாட்டம்

முதலில் கொண்டாட்டம்

நீங்கள் விரும்பிப் பார்க்கும் காணொளிகள்/ திரைப்படங்களை அவர்கள் எப்படித் தயாரித்து வழங்கியுள்ளார்களோ, அப்படித்தானே பார்த்து வருகிறீர்கள்? இந்தக் காட்சியில் இந்த வண்ணம் பொருத்தமாக இல்லை, ஆனால் என்ன செய்ய முடியும் என்ற பெருமூச்சிற்கு இனித் தேவையில்லை என்று தொடங்கு நிலை செயற்கை நுண்ணறிவுக் குழுமமான ‘ரன்வே’ (Start-up AI Runway) ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜென்- 1 (Gen-1) என்ற இந்தச் செயலி, ஒரு சொல் இடுகை மூலமாக அல்லது உசாவிகள் மூலமாக நீங்கள் பார்க்க விரும்பும் காணொளிகளை உங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கும். அதை நிரூபிக்கும் வகையில் அது ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது. ஒரு தெருவில் காணப்படும் மனிதர்களை களிமண் பொம்மைகளாக, மேஜை நிறைய இருக்கும் புத்தகங்களை நகரின் இரவுத் தோற்றமாக மாற்றி ‘பாரு, பாரு, பட்டணம் பாரு’ என்று வேடிக்கை காட்டுகிறது.

2018 முதல் காணொளிகளைத் திருத்தம் செய்யும் இந்த நிறுவனத்தின் பல செயலிகள், டிக்டாக், வலையொளி, (Youtube) திரைப்படங்கள், தொலைக்காட்சி படைப்புகள் போன்றவற்றிற்கு முக்கிய வரமாக இருந்து வருகின்றன. ‘த லாஸ்ட் ஷோ வித் ஸ்டீபன் கால்பேர்ட்’ (The Last show with Stephen Colbert) படத்தின் வரைகலையில், ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once) என்ற படத்தின் அசத்தலான காட்சித்  தாக்கத்தில் இவர்களின் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

2021ல் ம்யூனிச் பல்கலையின் ஆய்வாளர்களுடன் இணைந்து நிலைத்த பரவல் (Stable Diffusion) முதல் பதிப்பை இந்த நிறுவனம் கட்டமைத்தது. ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ஸ்டெபிலிடி ஏ ஐ (Stability A I)என்ற தொடக்க நிலை அமைப்பு, நிறைய தகவல்களும், தரவுகளும் கொடுத்து இவர்களுடன் இணைந்து செயலாற்றியது. ஸ்டேபிள் டிஃப்யூஷனை முதன்மைப்படுத்தி ஆய்வு நிலையிலிருந்து உலகின் கவனத்திற்கும் பயன்பாட்டிற்கும் ஸ்டெபிலிடி ஏ ஐ கொண்டு சென்றது.

இந்த இரண்டு குழுமங்களும் இப்போது இணைந்து செயல்படாத நிலையில், கெட்டி, (Getty) தன் படங்களை, தன் அனுமதியில்லாமல் பயன்படுத்தியதென்று சட்ட நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ‘ரன்வே’ தன்னைத் தொலைவில் நிறுத்தி தன் செயல்பாடுகளைத் தொடர்கிறது. மெடாவின் (Meta) ‘காணொளி தயாரியுங்கள், கூகுளின் ‘ஃபெனகி, (Phenaki) அது சென்ற வாரம் வெளியிட்ட ‘ட்ரீ(ம்) மிக்ஸ்’ (Dreamix) அனைத்துமே சொல்லிலிருந்து காணொளிக்கும், அதன் மேம்பட்ட மாறுதலுக்கும், பார்க்கும் நபரின் விருப்பத்திற்கும் ஏற்றவாறு செயல் படும் என்றாலும், ரன்வேயின் ஜென்-1 காணொளி தரத்தில், முன்பை விட நீண்ட காணொளி படைப்பில் முந்துகிறது. பயனர்களை முன்னிறுத்தி, காணொளி வல்லுனர்களைக் கலந்து ஆலோசித்து, திரைப்படத் தயாரிப்பில் பின் உற்பத்தி வரைகலை, வி எஃப் எக்ஸ் எடிட்டர் (VFX Editor) ஆகியோரை மனதில் கொண்டு ஜென்-1 உருவானதாக ரன்வேயின் தலைமை நிர்வாக இயக்குனரும், அதன் இணை நிறுவனருமான கிரிஸ்டொபால் வாலெஞ்ஜூலா (Cristobal Valenzeula) சொல்கிறார். ரன்வேயின் வலைதளத்தின் மூலம் மேகத்தில் இயங்கும் ஜென்-1 சில அழைப்பாளர்களுக்குக் காட்டப்பட்டது; சில நாட்களில் பதிவு செய்து காத்திருப்போருக்குக் கிடைக்கும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு ஆனந்தமாகப் பாடுகிறது-‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்; அதைப் படைத்துக் கொண்ட பெருமை எல்லாம் என்னைச் சாரும்.’

திண்டாட்டம்

இந்த வெற்றிச் சிரிப்பும் அவலமாகியக் கதையைப் பார்ப்போமா?

சிரித்து சிரித்து சிரிப்பாய்ச் சிரித்து…

லேரி ஃபைன்பெர்க், {(Larry Feinberg) வோக்ஸல் ஜெர்ரி சைன்பெல்ட் (Voxel Seinfeld)} எலேன், {(Elaine) யுவான் டாரஸ் (Yuonne Torres)} ஜார்ஜ், {(George) ப்ரெட் காஸ்டாபோலிஸ் (Fred Kastopolous)} க்ரேமர் {Kramer ஜோல்டான் கேக்லர் (zoltan Kakler)} இவர்களின் நகைச்சுவையில் பொது மற்றும் தொழில் நுட்ப அபத்தங்களைப் பற்றிய நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? 24/7/365 ஒளிபரப்பாகும் ட்விட்ஸ் (Twitch) நேரலை ஒளியலைவரிசைகளில், ‘நதிங்’, ‘ஃபாரெவர்’(Nothing, Forever) உங்களை சிரிக்க வைக்கும் நோக்கத்துடன் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு மிஸ்மேட்ச் ஊடகம் (Mismatch Media) உருவாக்கிய காமெடி நிகழ்ச்சி இது. டால்-இ, (Dall- E) ஓபன் ஏஐ ஜி பி டி-3, (Open AI GPT-3) ஸ்டேபிள் டிஃப்யூஷன் (Stable Diffusion) போன்ற இயந்திரக்கற்றல் தொழில் நுட்பத்தால் இயக்கப்படுகிறது. அந்த நான்கு கதாபாத்திரங்களும் ந்யூயார்க் அடுக்ககம் போன்ற ஒன்றில் அமர்ந்தும், நின்றும், நடுநடுவே எதுவும் பேசாமலும், நம்மைச் சிரிக்க வைப்பார்கள்.

சமீபத்தில் வோக்ஸல் ஜெர்ரி தவறாக இயங்கியது. ஜே கே ரோலிங்க் படைப்பை ஒத்து இருள் உலக பாலினபயத்தைக் காட்டும் கதாபாத்திரம் நகைச்சுவையாக இருக்கும் என நினைத்தது. லேரி சொன்னார் “இந்தக் கூடுகையில் 50 நபர்கள்  இருக்கிறீர்கள்; யாரும் சிரிக்கவில்லையே? யாரேனும் ஏதேனும் பரிந்துரைப்பீர்களா? நான் ஒன்றைச் செய்ய நினைக்கிறேன்- அது மூன்றாம் பாலினத்தவராக இருப்பது எப்படி ஒரு மன நோய் என்று; அல்லது தாராளமயவாதிகள் தங்கள் சுய ஒரு பாலின இச்சைச் செயல்பாடுகளை இரகசியமாக வைத்துக்கொண்டு, அதை ஒவ்வொருவர் மீதும் எப்படித் திணிக்கிறார்கள் என்பதைப் பற்றி அல்லது இந்த மூன்றாம் பாலினத்தவர் சமூக இழைகளைப் பாழ்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி; ஆனால், யாரும் சிரிக்கவில்லை, ஏனென்று தெரியவில்லை.”

இது தரம்கெட்ட ஜோக் என்றும், மனிதர்களை, மொழி, நிறம், பாலினத் தேர்வு, இனம் அடிப்படையில் கேலி செய்வது குழுமத்தின் கொள்கைக்கு எதிரானதென்றும் இந்த நிகழ்ச்சிகளை உருவாக்குபவர்களில் ஒருவரான ஸ்கைலர் ஹார்டல் (Skyler Hartle) வருத்தம் தெரிவித்திருக்கிறார். ‘நாங்கள் ஓபன் ஏஐயின் ‘டாவின்ஸி’யை (Davinci) மிதமான உள்ளடக்கத்திற்கு (Content moderation) பயன்படுத்தினோம். அதில் சில தவறுகள் காணப்பட்டன. டாவின்ஸியைப் பயன்படுத்த முடியாத நிலையில் ஓபன் ஏஐயின் முந்தைய ‘க்யுரி’யை (Curie) நிகழ்ச்சி தடங்கலில்லாமல் நடப்பதற்காகப் பயன்படுத்தியதில் இந்த மிகைக் குற்றம் நிகழ்ந்துவிட்டது. நாங்கள் ஓபன் ஏஐயின் டாவின்சியையும் ஏற்றவாறுத் திருத்தித்தான் பயன்படுத்துவோம். ஆனால், அந்தத் திருத்தச் செயல்பாடு ‘க்யூரி’யில் எடுபடவில்லை. விளைவு விபரீதமாயிற்று. நாங்கள் ‘க்யூரி’யைப் பயன்படுத்தப்போவதில்லை. டாவின்சியையும், அதனுடன் மறு தடுப்பு/ சீர்பார்ப்பு செயலிகள்  அல்லது கருவிகளையும் கொண்டு உள்ளடக்கத்தின் தன்மைகளை நேர் செய்ய முயன்று வருகிறோம்.’ 14 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

குரலால், உடல் மொழியால், நல் வார்த்தைகளால், நிறைந்திருந்த  நகைச்சுவைகள் மனிதர்களை இழிவு செய்யும் விதத்தில் மாறியது அவனின் கீழ்மையைத் தான் சொல்கிறது; அத்துடன் செயற்கை நுண்ணறிவில் அவன் கொண்டுள்ள அபரிமிதமான, மறுபார்வையிடாத செயல்களையும்.

உசாவிகள்:

https://www.technologyreview.com/2023/02/06/1067897/runway-stable-diffusion-gen-1-generative-ai-for-video/ by Will Douglas Heaven

https://kotaku.com/ai-seinfeld-twitch-ban-transphobia-chatgpt-dalle-jerry-1850077836 By Levi Winslow

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.