உபநதிகள் – 1

This entry is part 1 of 17 in the series உபநதிகள்

கூக்கில் யுகத்தில் தன் பெயரைப் புகுத்திப் பார்ப்பது ஒரு வினோத ஆசை. தனக்கே தன்னைப்பற்றித் தெரியாத விவரம் அகப்படலாம். தான் சொன்னதை, இல்லை எழுதியதை யாராவது திரித்துக் குறைசொல்லி இருந்தால் அதைத் திருத்தக்கூட முடியலாம். கீதா ஸ்ரீனிவாசன், லோரன் பார்க்கர், தேவிகா குல்கர்னி என்ற பெயர்களில் தேடல் மிகவும் சிரமம். கும்பலில் தன்னை மட்டும் எப்படிக் கண்டுபிடிப்பது? பெயருடன் சொந்த ஊரையோ, இல்லை படித்த கல்லூரியையோ சேர்க்கலாம். அப்போதுகூட தேடல் ஒரு குறிப்பிட்ட நபருடன் முடிவது அபூர்வம். அப்பெயரில் யாராவது பிரபலம் இருந்தால் வைக்கோல் போரில் தொலைந்த ஊசி.

மானஸா சஹாதேவன் 

அவளுக்கு அந்த சிரமம் இல்லை. எப்போதாவது அதைச் செய்தால் நான்கு பக்க பதிவுகள் அவள் ஒருத்திக்கு – பள்ளிக்கூட ஓட்டங்கள், பதின்பருவப் பத்திரிகைகளின் கட்டுரைகள், துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிரான கோஷங்கள், பெண்கள் உரிமைக்குப் போராட்டங்கள்… 

பிறகு மானஸா, சஹாதேவன் எனத் தனித்தனிச் சுட்டிகள். எதோவொரு வழியில் தங்களைத் தனிப்படுத்திய மானஸாக்கள் மற்றும் சஹாதேவன்கள். 

ஆனால், கூக்கிலைப் பொறுத்தவரை ஒரேயொரு மானஸா சஹாதேவன். அப்பெயரில் நிச்சயம் யாராவது இருப்பார்கள். அவர்கள் அதன் வலையில் சிக்கவில்லை, அவ்வளவுதான். 

ஒன்று

ள்ளிக்கூட விதியின்படி மானஸா அலைபேசியை அணைத்திருந்தாள். மதிய உணவுக்கு சாப்பாட்டுக்கூடத்தில் நுழைந்ததும் அதைத் தட்டியெழுப்பினாள். 

பள்ளிக்கூடம் முடிந்ததும் நேராக வீட்டிற்கு வா! குளிர்சாதனத்தை சரிபார்க்க வருகிறவனுக்குக் கதவைத் திற!

(தம்பி) அலெக் டென்னிஸ் பந்தயம் விளையாட ஹாட்லி பார்க் போகிறான். முடிந்ததும் அவனையும் அவன் நண்பன் டேவிடையும் அழைத்து வா!

இவை போன்ற குளிர்காலம் முடிந்ததைக்காட்டும் அம்மா கங்காவின் ஆணைகள் அதில் இல்லை. சில நிமிடங்களுக்கு முன் வந்த வேறொரு அழைப்பு. அது ஏற்கப்படாததால், ஒரு தகவல்.

முடிந்தபோது அழைக்கவும். (202)……. 

தொலைபேசியின் எண்கள் அவளுக்குப் புன்னகையை வரவழைத்தன. தகவலின் சந்தோஷச் செய்தியைக் கேட்டு அனுபவிக்குமுன்  அது தோற்றுவித்த இரு மனச்சித்திரங்கள். 

கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னால்… 

பதினாறாம் பிறந்தநாளை எதிர்பார்த்திருந்த மானஸாவைக் காரோட்டுவதில் பழக்க அவள் தந்தை சஹாதேவன் பள்ளிக்கூடத் திடலுக்கு அழைத்துப்போனார். காரின் இயக்கத்தை நிறுத்தியதும்,

“நீ கணக்கில் முதல். எல்லா அறிவியல் பாடங்களிலும் நன்றாகச் செய்கிறாய். சோஷியாலஜியையும் விட்டுவைக்கவில்லை. ஆங்கில ஆசிரியைகளுக்கு நீ எது எழுதினாலும் பிடித்திருக்கிறது. அதனால், உன்னைப்பற்றி எப்போதும் நான் கவலைப்பட்டது இல்லை.”

அப்படியென்றால், இப்போது அப்பாவுக்கு ஒரு புதுக்கவலை. 

“நேற்று பொம்மி ஆன்ட்டி வந்திருந்தபோது உன் எதிர்காலம் பற்றிக்கேட்டாள்.”  

‘எழுத்துத்துறையில் சாதனை செய்ய ஆசை’ என்று அவள் சொன்னது தப்பாகப் போய்விட்டது.

“உனக்கு என் அறிவுத்திறனில் நம்பிக்கை இல்லை, டாட்!” என்று போலிக் கோபத்துடன் அவரைப் பார்த்துச் சொன்னாள்.

“எந்த வழியை எடுத்தாலும்  நீ முழுமனதுடன் ஈடுபடுவாய்.”  

“அப்புறமும் ஏன்?”  

“நீ படிக்கும் யூ.எஸ். சரித்திரத்தில் இது இராது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் இருந்து ஆரம்பிப்போம். அதுவரை ஐரோப்பியர் அல்லாதவர்கள் பெரும்பாலும் சமுதாயத்தின் அடிமட்டத்தில். தினம் வேலை செய்தால் தான் சாப்பாடு. வெள்ளையர்களில் கூட வட ஐரோப்பிய சந்ததியினருக்குத்தான் உயர்மட்ட வேலை வாய்ப்புகள். ஸ்பெய்ன், இத்தாலி, போலன்ட், க்ரீஸ் -இங்கிருந்து வந்தவர்கள் ஒருபடி மட்டம். பொருளாதாரப் பெருக்கத்தினால் உலகின் பிற பகுதிகளில் இருந்து மக்கள் குடியேறினார்கள். அவர்களில் சிலர் கடும் உழைப்பினால் மெல்லமெல்ல வெள்ளைகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட இடங்களை ஆக்கிரமித்தார்கள். கல்விக்கூடங்களில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள். பிறகு, வர்த்தக நிறுவனங்களில் உயர் நிர்வாகம்.”  

“இந்திரா நூயி.” 

“ஜேய் நாகர்கட்டி, விவேக் சங்கரன், சுந்தர் பிச்சை என்று இன்னும் எத்தனையோ பேர்.”  

“அம்மாவே ஆந்திரா அட்ராக்ஷனைத் திறம்பட எடுத்து நடத்துகிறாள்.”  

“நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.” சிறு இடைவெளிக்குப் பிறகு, “வெள்ளைகளின் அதிகாரம் இப்போது சட்டம், அரசியல், ஊடகம் – இவற்றில் மட்டும் தான்.”   

கிட்டத்தட்ட எல்லா பெரிய சட்ட நிறுவனங்களில் வெள்ளைகள் மட்டுமே என்பதுடன் அவை தாத்தா அப்பா பையன் மருமகள் என்று குடும்ப விருட்சம். அதனால் அவள் தந்தை யாருடனும் கூட்டுசேராத, அவ்வப்போது ‘ப்ரோ போனோ’ வேலையும் செய்யும் சில்லறை வழக்கறிஞர். 

“நான் எழுத்துத்துறையில் தானே நுழையலாம் என இருக்கிறேன்.”   

“அதிலும் அரசியல் போல பிரபலமான பெற்றோர்கள் அவசியம். ராஸ் டௌதட், மாத்யு இக்ளேஷியஸ், பெக்கி நூனன். அவர்களின் மொழிவளம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் எழுதும் விஷயங்கள் பூஞ்சக்காளான் பூத்த ரொட்டி. தந்தைவழி வந்த பெருமைதான் அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு நுழைவு டிக்கெட்.”  

“நான் எழுத விரும்புவது தனிப்பட்ட முறையில்.”  

“புனைவு, அபுனைவு.”  

“இரண்டுமே.” 

“அப்படியே வைத்துக்கொண்டாலும் நீ வெள்ளைகள் ராஜ்ஜியத்தில் நுழைய வேண்டும்.”  

‘நுழைய எனக்குத் தைரியம் இருக்கிறது’ என்று சொல்ல வாயெடுத்தாள். 

“அம்மாவை வேலையில் யாரும் அசைக்க முடியாது. அதுபோல நீயும் வெள்ளைகள் சிரமப்படும் துறைகளில்…”  

“அதாவது, கணிதம் அறிவியல்.”  

“உனக்கு நான் சொல்ல வேண்டும் என்பது இல்லை.”  

“எழுத்தை நம்பி நான் கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தப்போவது இல்லை. நிலையான வருமானம் தரும் வேலையை உதறிவிட்டு முழுநேரம் கதையோ கவிதையோ எழுதப்போவதும் இல்லை. ஸ்டான்ஃபோர்ட், ப்ரின்ஸ்டன் மாதிரி மிகச்சிறந்த கல்லூரியில் பயாலஜி மேஜர், அத்துடன் சோஷியாலஜி. அங்கே ரைட்டிங் பாடங்கள் எனக்குத் தேவையில்லை. புது வழியில் சிந்திக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு. அதை மற்றவர்கள் ரசிக்கும்படி எழுதும் திறமை இருப்பதாகவும் நினைக்கிறேன். எழுதுவதில் ஒரு தனி மகிழ்ச்சி. எழுதியது எவ்வளவு பேருக்குப் பிடிக்கும் என்று தெரியாது. அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதும் இல்லை.”  

எழுத்தின் வழியாக வரும் வருமானத்தை நம்பி அவள் பிழைக்கப்போவது இல்லை என்ற நிம்மதியுடன் அவர் காரில் இருந்து இறங்கி மானஸாவுக்கு வழிவிட்டார். 

சராசரி பதின்பருவப்பெண் போல அவள் சாப்பாட்டைப் பகையாக எண்ணாததால் சற்றே பூசினாற்போன்ற உடல். அப்பாவின் தோளுக்கும் குறைவான உயரம். எப்போதுமே எதையாவது யோசித்து புருவ மத்தியில் ஒரு பள்ளம்.   

“ஒன்றே ஒன்று பாக்கி” என்ற தந்தையை ஏறிட்டுப்பார்த்தாள். “வாசகர்கள் வாயில் சுலபமாக நுழையும் புனைபெயர். மேனா ஹேட் (Mana HADE) எப்படி?” 

“மானஸா சஹாதேவன் எடுபடாவிட்டால்…” 

அன்றைய பயிற்சி முடிந்தபோது அவள் காரை இயக்குவதில் அவருக்கு முழு நம்பிக்கை. 

அடுத்த காட்சி…

இலையுதிர் கல்விப்பருவம் முடிவுக்கு வருமுன் ஆங்கில ஆசிரியை மானஸாவை அழைத்தாள். 

“மானஸா! உன் கிறிஸ்மஸ் விடுமுறையை நான் கெடுக்கப்போகிறேன்.” 

‘எங்களுக்கு அந்தப் பண்டிகை அவ்வளவு முக்கியம் இல்லை’ என்று சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் ஆசிரியை நீட்டிய தாளில்…

காங்க்ரஸ் நூலகத்தின் ஆதரவில் இலக்கிய நிருபம் போட்டி

பள்ளிக்கூட மாணவர்களின் எழுத்துத் திறனுக்கு ஒரு சவால்! 

தங்களுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தின் ஆசிரியருக்கு (உயிருடன் இருக்க வேண்டும் என்பது இல்லை) அப்புத்தகம் தங்களிடம் ஏற்படுத்திய பாதிப்பைப் பற்றி ஒரு கடிதம் வரைய வேண்டும். 

“நிறைய யோசிக்காதே! முதலில் எந்தப் புத்தகம் மனதில் தோன்றுகிறதோ அதன் ஆசிரியரை நேரில் சந்தித்துப் பேசுவதுபோல எழுது! அப்போது தான் இயற்கையாக இருக்கும்.” 

“எவ்வளவு நீளம்?” 

“மின்னஞ்சலில் விவரம் அனுப்புகிறேன்.” 

“தாங்க்ஸ், மிஸ் மால்னர்!” 

“ஞாபகம் வைத்துக்கொள்! புத்தகத்தின் உள்ளடக்கத்தைவிட அது உன்னிடம் என்ன மாற்றங்களை விளைவித்தது என்பது தான் முக்கியம்.” 

மானஸா தகவலில் இருந்த எண்களைத் தொட்டபோது, ஆசிரியையின் அறிவுரைகளை ஏற்று அவள் எழுதிய நிருபத்திற்குப் பரிசு என்ற செய்தி கூடத்தின் கூச்சலுக்கு நடுவே தெளிவாகக் கேட்டது. போட்டியில் மானஸா பங்கெடுத்தது அப்பாவுக்குத் தெரியாது. அவள் அனுப்பப்போகும் html முகவரியை அவர் திறக்கும்போது, டென்னஸிக்கு மட்டுமல்ல நாடு முழுவதற்குமே மிகச்சிறந்த நிருபத்தை எழுதிய மாணவரின் பெயர் கண்ணில்பட….

2018 ஆண்டுக்கான இலக்கிய நிருபம் போட்டி

தேசியப்பரிசு பெற்ற கட்டுரை 

அன்புமிக்க பரிமளா கோலப்பன், 

அறிவியல் நூல்கள் தரமான இலக்கியங்களாகவும் இருக்கலாம் என்பது தெரிந்த உண்மை என்றாலும், உங்கள் ‘ரான்டம் அன்ட் சான்ஸ்’ படித்தபோது தான் அதை நான் நிதர்சனமாக உணர்ந்தேன். கணக்கிலும் உயிரியலிலும் எனக்கு மிகுந்த ஆர்வம். அவற்றில் ஆழ்ந்து போவதுடன் அவற்றை இலக்கியத்தில் பதித்துப் புதுமைசெய்ய வேண்டும் என்கிற ஆவல். அது சாத்தியமா என்ற சந்தேகம் என் பெற்றோர்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் இருந்தது. உங்கள் நூலைப் படித்ததும் அது தீர்ந்தது. அதற்கு அளவுகடந்த நன்றி! 

பொதுவாகப் பார்க்கும்போது கந்தரகோளமான இயக்கங்களும் தற்செயலான நிகழ்வுகளும் ஒன்றுபோலத் தோன்றும். அவற்றுக்கு இடையே நுண்ணிய வேறுபாடுகளை நீங்கள் நிலைநாட்டி யிருப்பது புதுமை. அவற்றை ஓரளவு கல்வியறிவு உடையவர்களும் புரிந்துகொள்ளும்படி விளக்கியிருப்பது சாதனை. பகடையை உருட்டும்போது அதன் ஆறு பக்கங்களில் குறிப்பிட்ட ஒன்று மேல்நோக்கி நிற்பதற்கான சாத்தியக்கூறு (chance) ஆறில் ஒன்று. ஒரு டிஎன்ஏ சங்கிலியில் பிறழ்வு எங்கே நிகழும் (random) அதன் விளைவு எதுவாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிவதற்கு இல்லை. 

புத்தகத்தைப் படித்ததில் இருந்து வாழ்க்கையைப் புதிய கோணத்தில் பார்க்கிறேன். அது நூலின் சிறப்பு. 

கந்தரகோளமான இயக்கங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. அவற்றில் மனதை ஈடுபடுத்துவதோ அவற்றுக்காகக் கவலைப்படுவதோ வீண். ஆனால், அவை வாழ்க்கைக்கு சுவை கூட்டுகின்றன. பிரபலம் இல்லாத (அது ஊடகத்தின் அறிவுக்குறை) உங்கள் நூல் என் கைக்கு வந்ததே ஒரு எதிர்பாராத நிகழ்வு. கல்வியாண்டின் முடிவில் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாகச் செய்த மாணவர்களுக்குப் பரிசு தருவது எங்கள் பள்ளிக்கூட வழக்கம். கணிதம் என்றால் எப்போதும் ஒரு சயின்டிஃபிக் கால்குலேடர். ‘பார்ன்ஸ் அன்ட் நோப்ல்’ கடையில் கால்குலேடர்கள் விற்றுப்போனதால் சென்ற ஆண்டின் பரிசுகள் கணித ஆசிரியரைக் கவர்ந்த புத்தகங்கள். ப்ரீ-கால்குலஸின் எல்லா தேர்வுகளிலும் முதலாவதாக வந்த எனக்கு ‘ரான்டம் அன்ட் சான்ஸ்’! கோடை விடுமுறையில் அதைப்படிக்கத் தொடங்கினேன். கற்பனைக் கதைகளைவிட சுவாரசியமாக இருந்த அதை இரண்டு நாளில் முடித்துவிட்டேன். ஆனால், அதன் கருத்துக்களை ஜீரணிக்க இரண்டு வாரங்கள். 

தொடக்கப்பள்ளியின் புதிய வகுப்பில் நுழைவதற்கு முன்பே யார் என் சகமாணவர்கள் என்று கவலைப்படுவேன். உலகில் இருக்கும் மில்லியன் கணக்கான என் வயதுச் சிறுவர்களில் அந்த குறிப்பிட்ட பேர் ஏன் என் பாதையில் குறுக்கிட வேண்டும்? என்ற பதில் தெரியாத கேள்வி என்னை அலைக்கழிக்கும். இப்போது வேறுவிதமான சிந்தனை. எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மேலுக்கு எப்படித் தோன்றினாலும், ஒரு சிலருடன் நான் இழைவது ஏன் என்கிற ரசனை.  

தற்செயலான நிகழ்வுகளில் ஒரு சிலவற்றின் சாத்தியக்கூறுகள் அதிகம். அவற்றில் முயற்சியை ஈடுபடுத்த வேண்டும் என்பது வெளிப்படை. தேர்வுக்கும் கல்லூரி சேர்க்கைக்கும் நேரம் ஒதுக்கி மூளையை ஈடுபடுத்தி தயார் செய்வது வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும். 

அதே சமயம், சாத்தியக்குறைவான நிகழ்வுகள் வாழ்க்கையின் போக்கை மாற்றலாம். அவற்றை அலட்சியம் செய்யலாகாது என்பது நல்ல அறிவுரை. ஹிந்து கோவில் பிராகாரத்தை வேண்டுதலுக்காக ஒருவர் நூற்றியெட்டு முறை சுற்றுவது எப்போதாவது தான் நிகழும். கோவிலுக்கு ஒரே நாளில் இரண்டு தடவை, ஒன்றரை மணி வித்தியாசத்தில், ஒருவர் வருகை தருவதும் தினசரி நடப்பது இல்லை. இரண்டு சம்பவங்களும் ஒரே சமயத்தில் ஒரே புனிதமான இடத்தில் நடந்தது மட்டுமல்ல, பின்னவர் முன்னவரின் முகவாட்டத்தைக் கவனித்து அதைத்தீர்க்க முயற்சி எடுத்ததால் தான் நான் இவ்வுலகில் நுழைந்தேன். 

சம்பந்தம் இல்லாத இரு சம்பவங்கள் – விருந்துக்கு இருவர் முன்பே பேசிவைக்காமல் ஒரே ஆடையில் வருவது – ஒரே சமயத்தில் நடந்தால், அதற்கு ஏதோவொரு உள்ளர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். கடவுளின் திருச்செயல் என்று சிலர் அதைச் சொல்லலாம். புத்தகத்தில் தரப்பட்ட அறிவியல் விளக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது. இரு நேரான இணைகோடுகள் எப்போதும் சந்திப்பது இல்லை, ஆனால் இரண்டு தாறுமாறான வளைகோடுகள் நீண்டுகொண்டே போனால் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்பு உண்டு. திட்டமிடாத மனித வாழ்க்கை எப்போது எங்கே எப்படி திசைமாறும் என்று தெரியாத வளைகோடு. உலகின் கோடிக்கணக்கான மனிதர்களில் இருவரின் வாழ்க்கைப்பாதைகள் ஒரேமாதிரி அமைவதில் அதிசயம் இல்லை. அப்படி என் வாழ்வில் நடந்தால் உங்களை நிச்சயம் நினைத்துக்கொள்வேன்.

உங்கள் நூலின் கருத்துக்களையும் சாத்தியங்களையும் இன்னும் அடுக்கிக்கொண்டு போகலாம். 

இப்போதைக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன் 

மானஸா சஹாதேவன் 

Swimming to Palk Strait – பாக் ஜலசந்திக்கு நீச்சல்

ங்காவின் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டிய நேரம். 

மாநில அலுவலகம் போகும் வழியில் கோவில். புகுந்த நாட்டில் ஐந்து ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்த கடவுளுக்கு நன்றி! ‘எல்லாரும் மைக்ரோசாஃப்ட், அடோபின்னு பெரிய கம்பெனிக்கு சியாட்டில், சான்ஹொசே மாதிரி பெரிய ஊருக்குப் போகும்போது நீ மட்டும் ஊர்பேர் தெரியாத இடத்துக்குப் போறியே’ என்ற அம்மாவின் கவலை அநாவசியமாகப் போய்விட்டது. சின்ன ஊரின் சின்ன நிறுவனம் திடீரென்று ஒருநாள் காணாமல் போய்விடவில்லை. அது வளர்ந்தது, அவள் வருமானம் இரட்டித்தது. வேலையின் சவால்கள் அவள் தன்னம்பிக்கையை மேலும் வளர்த்தன.   

பார்வதி, சிவன், விஷ்ணு, பிள்ளையார், ஜகன்னாதர் – ஒவ்வொரு சன்னிதானத்தின் தட்டிலும் ஐந்து டாலர் நோட்டு. உண்டியலில் ஐம்பது.   

திங்கள் காலை என்பதால் கோவிலில் எண்ணி நான்கு பேர், அவளையும் சேர்த்து. கணினித்திரையில் கணக்கு பார்த்த மேலாளர், அங்கும் இங்கும் அலைந்த பிரதான குருக்கள். அவள் கவனத்தைக் கவர்ந்த ஒருவன் பார்வையை நேராக வைத்து பிராகாரத்தைச் சுற்றிவந்தான். நல்ல கறுப்பு, சுருட்டைத் தலைமயிர், சுமாரான உயரம். அவள் நவக்கிரகங்களை ஒன்பதுமுறை பிரதட்சணம் செய்து முடித்தபோதும் அவன் சுற்றுதல் தொடர்ந்தது. அவளைப்போல அவனும் புதிய நாட்டில் வேர் ஊன்றியதைக் கொண்டாடலாம்.  

படியிறங்கும் இடத்தில் லட்டுத்தட்டு. காலியாக இருந்த அதை அவள் பார்த்து நின்றாள். மேலாளர், “அரைமணி”யை ஐந்து நிமிடமாகக் குறைப்பது போல விரல்களை ஒன்றுகூட்டிப் பிரித்தார்.  

ர்திகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை விரைவில் முடிந்தது. அந்த சந்தோஷத்தில் திரும்பிவந்த போதும் கங்கா கோவிலில் நுழைந்தாள். நடைவழியில் சாத வகைகள். மாலையில் சமைக்க வேண்டாம். முதலில் லட்டு. அதை வாங்க காலணிகளைக் கழற்றி படியேறினாள். முடிவில் தட்டு நிறைய மஞ்சள் உருண்டைகள். காகிதப்பையில் எடுத்துக்கொண்ட ஐந்து லட்டுகளுக்கு ஐந்து டாலர். பர்ஸில் இருபது டாலர் நோட்டுகள் தான். ஒன்றைக் கையில்வைத்து பார்வையால் தேடினாள். 

முன்பு நடந்தவன் இன்னும் அதே நேர்பார்வையில் காலடிவைத்தான். ஒன்றரை மணி நேரமாகவா ஒருவன் நடப்பான்? 

அவளைப்போல மேலாளருக்கும் ஆச்சரியம். “இது எத்தனாவது சுத்து?” என்று அவனை மறித்தார்.  

முகத்தைத் திருப்பாமல், “இது தான் கடைசி.”  

கங்காவைப் பார்த்ததும் அவர் மேஜையின் எதிர்ப்பக்கம் சென்று இழுப்பறையைத் திறந்தார். அவளின் இருபது டாலருக்கு ஒரு பத்தும், ஒரு ஐந்தும். 

“தாங்க்ஸ்.”  

மாரத்தான் சுற்றலை முடித்து பிள்ளையார் முன்னால் உடல் முழுக்கத் தரையில் படிந்து வணங்கியவனை மேலாளர் உரையாடலில் இழுத்தார். 

“பதினெட்டு மிஞ்சிப்போனா முப்பத்தியாறு பிரதட்சணம் செஞ்சவங்களைப் பார்த்திருக்கேன். நூத்தியெட்டு தடவை சுத்திருப்பீங்க போல இருக்கு.” 

கணக்கு சரிதான் என்ற புன்னகை. 

ஒரு சுற்றுக்கு ஒரு நிமிடம் என்று வைத்துக்கொண்டால்… 

அவர் உரையாடலை வளர்ப்பதற்காக,  

“பகீரதப் பிரயத்தனம்” என்றார்.  

“என் பேரே பகீரதன் சார்!”   

“பொருத்தம்தான். உங்களை அடிக்கடி பார்த்திருக்கேன். ஸ்டூடன்ட்டோ?”  

“வான்டர்பில்ட்ல லா சொல்லிக்கிறேன்.”   

பகீரதப் பிரதட்சணம் எதற்காக என்று தெரிந்துகொள்ள ஆவல். ஆனால் நேராகக் கேட்கத் தயக்கம். 

“உடம்புக்கு ஒண்ணும் இல்லையே?” 

“நன்றாகத்தான் இருக்கேன்.”  

“நெருங்கிய சொந்தத்தில யாருக்காவது…”   

“அப்படி யாரும் கிடையாது.”  

அவன் முகத்தில் பிரச்சினை தீர்ந்ததற்கு நன்றி தெரிவிக்கும் நிம்மதி இல்லை. வழிகாட்டலுக்கு தெய்வத்திடம் இறைஞ்சுவது போலத் தோன்றியது. அவன் பிள்ளையார் சன்னதியைப் பார்த்து கூடத்தின் தரையில் அமர்ந்து இளைப்பாற அவள் படியிறங்கினாள். 

எலுமிச்சை புளியோதரை இரண்டிலும் இரண்டு பொட்டலங்கள் கங்காவின் கோவில் வருகையை முடித்தன.  

மாலையில் கோவில் சாப்பாட்டுப் பொட்டலங்களைப் பிரித்ததும் பிரதட்சணம் செய்தவனின் நினைவு. நுற்றியெட்டு சுற்றுகளுக்கு என்ன வேண்டுதல்? மேலாளர் மறைமுகமாகக் கேட்டும் அவன் குறிப்பாகக்கூட அதை வெளியிடவில்லை. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அதனால் ஒரு நல்ல மனையாளுக்கு நூறுநிமிட நடை. சேச்சே, அவன் முகத்தில் அதைவிடத் தீவிரமான பிரச்சினையின் நிழல். 

அவனைப்பற்றி அவளுக்குத் தெரிந்த – வான்டர்பில்ட்டில் சட்ட மாணவன், பெயர் பகீரதன் – தகவல்களை வைத்து அவனைக் கண்டுபிடிக்க அதிக நேரம் ஆகவில்லை. எல்எல்.எம். பட்டப்படிப்பில் அகப்பட்டான். முழுப்பெயர் பகீரத் சஹாதேவன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் எல்எல்.பி. தமிழ் உச்சரிப்பின் ரீங்காரம் நினைவுக்கு வந்தது. இலங்கைத் தமிழன் என்றால் அவனுக்கு ஒரேயொரு பிரச்சினை தான். அவனுக்கு உதவிசெய்வது மனிதாபிமானம். மறுநாள் காலை வான்டர்பில்ட் சட்டக்கல்லூரியில் எல்எல்.எம். பகுதியின் மேற்பார்வையாளரை அழைத்தாள். செயலர் ஒருத்தியின் வரவேற்கும் குரல்.  

“குட் மார்னிங்!” 

“குட் மார்னிங்! என் பெயர் கங்கா. ‘யுடெர்பி ம்யுசிக் க்ரூப்’பில் இருக்கிறேன். மிஸ்டர் சஹாதேவனுடன் தொடர்பு கொள்ள விருப்பம்.”  

சட்டம் சம்பத்தப்பட்ட அழைப்பு என்ற கணிப்பில்,   

“வர்த்தக இசையின் சட்ட நுணுக்கங்களுக்கு மிஸ்டர் டேவிட் தாம்ஸ்சனுடன் பேசுவது நல்லது.”  

“இது வேறொரு காரணத்துக்காக.”  

“மிஸ்டர் சஹாதேவனுக்குத் தகவல் வைக்கிறேன்.”  

“ஹலோ! கங்கா சிவசெல்வம்…”  

“நான் தான்.”  

“நான் பகீரத். செயலர் கொடுத்த தகவலைப் பார்த்து அழைக்கிறேன். ஹெள ஆர் யு?”  

“ஐ’ம் ஃபைன். நீங்கள் எப்படி என்று நான் திருப்பிக் கேட்கப்போவது இல்லை. நேற்று கோவிலில் கவலை தோய்ந்த முகத்துடன் நீங்கள் பல சுற்றுகள் நடந்ததைக் கவனித்தேன். ஒருநாளில் தீரும் பிரச்சனை போலத் தோன்றவில்லை.”  

நினைவில் அவளைத் தேடும் மௌனம்.  

“மேனேஜரின் பக்கத்தில் லட்டு வாங்கிய…”  

“அந்தப்பெண் நான் தான்.” 

“என்னைக் கவனித்தது, அத்துடன் நில்லாமல் என்மேல் அக்கறையெடுத்து அழைத்தது. இரண்டுக்கும் நன்றி.”   

“உங்கள் பிரச்சினையில் என்னால் உதவ முடியுமானால்…” 

முன்பின் தெரியாத ஒருத்தியின் உதவியை ஏற்பதா என்கிற தயக்கம் இல்லாமல், 

“பிரச்சினையைக் கேட்டபிறகு நீங்களே அதைத் தீர்மானிக்கலாம்.”  

“அதை எங்கே செய்யலாம்?” 

“நீங்கள் குறிப்பிடும் இடத்தில்.” 

“கோவிலில்…”  

“மகிழ்வுடன். எப்போது?” 

“சனிக்கிழமை காலை.” 

முன்பின் தெரியாத ஒருவனை சந்திப்பது கங்காவுக்குப் புதிது அல்ல. வேலை சம்பந்தமாக, ‘இணைதேடல்’ இணையத்தளம் வழியாக, பலரை சந்தித்திருந்தாள். ஒரு வித்தியாசம், உணவு விடுதிகளுக்குப் பதிலாக கோவில். முதன்முறை அவனை அங்கே பார்த்ததால் அவள் வாயில் கோவில் என்று வந்துவிட்டது. கடவுள் சன்னதியில், வருமானத்தை இரட்டித்தோ வயதில் ஐந்தைக் குறைத்தோ சொல்லமாட்டான். 

கோவில் வாசலில் கங்கா பகீரதனை அடையாளம் கண்டாள். முகத்தின் கலவரம் சற்றுக் குறைந்தாற்போல் தோன்றியது.       

“ஹாய், பகீரத்!” 

“ஹலோ கங்கா!” 

“உள்ளே கும்பலா இருக்கும்.”  

கொடிக்கம்பத்துக்கு எதிரே இருபது படிகள். மேல்படியில் அமர்ந்தார்கள். அங்கிருந்து தொலைவில் தெரிந்த மரங்கள், அவற்றின் நடுவே கட்டடங்கள். கங்கா வார்த்தைகளை வீணாக்காமல், 

“விசாவில் தகராறு, சரியா?”  

“நீங்க நல்லவிதமா யோசிக்கிறீங்க.”  

“சாதாரண குடும்பத்தில பிறந்து வளர்ந்தா அந்த குணம் தன்னால வரும்.”  

“ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை நீங்க பேப்பர்ல படிச்சிருக்கலாம். அதையெல்லாம் மீட்டிப்பாக்கறதுக்கு பதிலா மறக்கறது நல்லது.”  

“ஓகே! மறந்துடுவோம்.”  

“அப்போ… எனக்குத் தெரிஞ்ச நிறைய பேர் கனடால அடைக்கலம் கேட்டுப்போனாங்க. நான் எல்எல்.பி. முடிக்க இருந்தேன். வான்டர்பில்ட்ல மாஸ்டர்ஸுக்கு அழைப்பு வந்தது. பாதி சம்பளம். சேமித்த பணத்தில இங்கே வந்தேன்.” 

“படிப்பு விஸா பணம் – மூணும் இன்னும் சில மாதங்களில முடியப்போறது.” 

“சரியான வேலை கிடைக்கல. இங்கேயிருந்து அடைக்கலம் கேட்டு கனடாவில நுழைய முடியாது. ஸ்ரீலங்காக்கு திரும்பிப்போயாகணும். அதிலும் பிரச்சினைகள்.” 

“அதனால தான் நூற்றியெட்டு பிரதட்சணம்.”  

“சட்டம் படிச்ச நான் இதையெல்லாம் முன்னாலயே யோசிக்காதது பெரிய தப்பு.”  

“உங்க பேருக்குப் பின்னால ஒரு புராணக்கதை இருக்கு.”  

“தெரியும். பகீரதன் தவம் செய்து மேல் லோகத்திலேர்ந்து கங்கை நதியைக் கொண்டுவந்தான்.”  

“நீங்களும் பகீரதப் பிரதட்சணம் செஞ்சதினால உங்களுக்கு ஒரு பூலோக கங்கா.”  

அதன் அர்த்தம் புரிந்ததும் கண்ணீர் பெருக்கெடுத்தது. 

“என்ன சொல்றதுன்னு தெரியல.”  

“ஏன் சம்மதம்னு சொல்லலாமே.”  

“கேட்காமலே தேவதை வரம் தரும்போது…” என்று எழுந்து அவளைச்சுற்றி வந்தான். 

“நூற்றியெட்டு தடவை அவசியம் இல்ல.”  

ஸ்ரீலங்கா திரும்பிப்போவதைத் தவிர்க்கும் சோதனையில் பகீரதனுக்குக் கடைசிக்கட்டம். குடியேற்ற அதிகாரியுடன் நேர்காணல். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே அரசாங்கக் கட்டடத்தில் காத்திருந்தார்கள். தனித்துத் தெரியாத சம்பிரதாய ஆடைகள். அவன் நீலநிற கோட் ட்டை பான்ட்ஸில். அவள் முழங்காலுக்கும் தாழ்ந்த கறுப்புப் பாவாடை, வெள்ளை சட்டை, கழுத்தைச்சுற்றி சாம்பல்நிறத் துண்டு. கணவன் மனைவி இருவரும் அவரைத் தனித்தனியே சந்திக்க வேண்டும். அலுவலக அறையில் இருந்து ஒரு பழுப்பு ஆணும் அதிகாரியும் வெளியே வந்தார்கள். அவனை எதிர்கொண்ட பெண்ணும் அவனும் ஏமாற்ற மௌனத்துடன் வெளிவாசல் நோக்கி நடக்க… 

“மிஸ் சிவசெல்வம்!” 

அவளை முதலில் அழைத்தவுடன் பகீரதனுக்கு நிம்மதி. கங்கா எழுந்து அவள் அருகில் சென்றதும் இருவரும் அறையின் உள்ளே நுழைந்தார்கள்.  

அதிகாரியின் முகத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதி என்கிற இறுக்கம்.  

“யு மே சிட் டௌன்!”  

“தாங்க்ஸ்.”  

இருவரும் அமர்ந்ததும் மேஜையைத் தாண்டி தாக்குவது போல் வந்த முதல் கேள்வி. 

“இது எத்தனையாவது திருமணம்?”   

“முதலாவது.” 

“இந்தியாவில்?” 

“அங்கிருந்து வந்தபோது எனக்கு இருபத்தியோரு வயது தான்.”  

“உன்னிடம் நான் அதைக் கேட்கவில்லை.”  

“இந்தியாவிலும் எனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கவில்லை.” 

அது கூட கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமான பதில் என்பது அவள் முகத்தில் வெளிப்பட்டது.   

“அவன் எங்கே உன் சம்மதம் கேட்டான்?”  

“அவன் கேட்கவில்லை. நான் என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.”   

“ஏன்?”  

“ஹிந்து கோவில் இருக்கும் ஓல்ட் ஹிக்கரி சாலை வழியாக நீ போயிருக்கலாம்…”  

“யெஸ்.”  

“பிரார்த்தனைக்காக அதன் பிராகாரத்தை அவன் நூற்றியெட்டு முறை சுற்றியதைக் கவனித்தேன். அதற்கு ஒன்றரை மணியாவது ஆகும். கோவில் மேலாளளருடன் பேசியதில் இருந்து வான்டர்பில்ட் சட்ட மாணவன் என்று அறிந்தேன். அவனைப் பற்றிய விவரங்களை பல்கலைக்கழகத்தின் தளத்தில் படித்தபோது அவன் பிரச்சினை என்ன வென்று தெரிந்தது.”  

“எல்டிடிஈ வன்முறையில் ஈடுபட்டது சரியில்லை.”  

“உண்மை தான். ஆரம்பத்தில் இருந்தே இலங்கைத் தமிழ் மக்கள் அரசாங்கத்துடன் சமாதானமாகப் போவது தான் பெரும்பாலான இந்தியத் தமிழர்களின் விருப்பம்.”  

“பகீரத் போராட்டத்தில் பங்கு எடுக்கவில்லை என்று நிச்சயமாகத் தெரியுமா?” 

“இங்கே வருவதற்கு முன் அவன் சட்டம் படித்து சட்டங்களைப் பின்பற்றிய ஒரு கல்லூரி மாணவன் என்பதில் சந்தேகம் இல்லை. அதையெல்லாம் பார்த்துதான் வான்டர்பில்ட் எல்எல்எம் பட்டப்படிப்பிற்கு அனுமதித்தார்கள்.”  

“அப்படியென்றால் திரும்பிப்போக ஏன் தயக்கம்?” 

“அவன் பெற்றோர்கள் இப்போது இல்லை.” 

நியு யார்க் டைம்ஸின் ஒரு துண்டை கைப்பையில் இருந்து எடுத்து அவள் முன் வைத்தாள். தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்கள். மஞ்சள் நிறப் பட்டைக்கோடுகளுக்கு அடியில் பௌதீகப் பேராசிரியர் சஞ்சயன் சஹாதேவன், அவர் மனைவி ரமா. அதைப் பார்த்துவிட்டு அதிகாரி அவளிடமே திருப்பிக்கொடுத்தாள்.  

“இம்மாதிரி போராட்டங்களில் தள்ளிநிற்பவர்களும் இன்னல்களுக்கு இரையாவது இயற்கை.” 

குரலில் இலேசான இரக்கம் தொனித்தது. 

“முற்றிலும் உண்மை.”  

“அப்படியென்றால் இது இரக்கத்தினால் வந்த உறவு.” 

குரலில் மறுபடி கடுமை. ‘இந்த சொந்தம் நிரந்தரமானது அல்ல’ தொக்கிநின்றது. 

“இரக்கம் மட்டுமல்ல, ஆழ்ந்த கடவுள் பக்தி இவனை நம்பலாம் என்கிற எண்ணத்தைக் கொடுத்தது.”  

“இருந்தாலும் அதிகம் பழகாத ஒருவனை நம்பினால் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும்.”    

உன் வழியாக பச்சை அட்டை வாங்கியதும் உன்னை உதறிவிடுவான். அதற்கு முன் இப்போதே அவனிடம் இருந்து விலகிவிடு! 

“எந்தப் புதிய முயற்சியிலும் ஆபத்து இருக்கத்தான் செய்யும். வழி கண்ணுக்குப் புலப்படாத பாதையில் போவது என் பிறவிக்குணம். நான் யூ.எஸ். வருவதற்கு முன், ‘நாஷ்வில் ஏன் ம்யுஸிக் சிடி என அழைக்கப்படுகிறது?’ என்பது எனக்குத் தெரியாது. எனக்கு வேலை வாய்ப்பு அளித்த யுடெர்பி நிறுவனத்தின் பெயரை அதுவரை கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனாலும் யுடெர்பியின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இங்கே வந்தேன்.”  

“உன் விவரங்களில் நான் கவனித்தேன். அங்கே என்ன செய்கிறாய்?”  

“புதிய இசைக்கலைஞர்களைக் கண்டுபிடிப்பது யுடெர்பியின் வியாபாரக் குறிக்கோள்களில் ஒன்று. ஒருவருக்கு சங்கீதத்தில் எவ்வளவு திறமை இருக்கிறது, அவர் தொழில்முறையில் எவ்வளவு தூரம் முன்னேறுவார் என்பதை அளவிட நான் அமைத்த ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் உதவுகிறது.”   

“கால்பந்தில் ‘க்வார்ட்டர் பாக்’கின் வெற்றியைக் கணிப்பது போல.”  

“சரியான உவமை.”  

“நேர்காணலுக்கு சம்பந்தம் இல்லாத கேள்வி. வரும் ஆகஸ்ட்டில், என் பதினான்கு வயதுப்பெண் ஹியும்-ஃபாக் ஆர்ட்ஸ் ஸ்கூலில் சேரப்போகிறாள். அவள் திறமையைக் கணிக்க முடியுமா?”  

“அவள் சைல்ட் ப்ராடிஜியாக இருந்தால்…”  

“அவ்வளவு தூரம் போக மாட்டேன், ஆனால் நிறைய ஆர்வம்.”  

“அவளை எங்களிடம் அழைத்துவரலாம். இந்த வயதில் அவள் எதிர்காலத்திற்கு நாங்கள் ஜோசியம் சொல்ல முடியாது. ஆனால் ஒரு முதல்தர கலைஞர் ஆவதற்கு அவள் என்னென்ன செய்தால் நல்லது என்பதற்கு அறிவுரை தர முடியும். அதற்கு செலவும் அதிகம் ஆகாது.”  

“உன் மெய்மையான பதில் எனக்குப் பிடிக்கிறது.”  

“தாங்க்ஸ்.”  

“மறுபடி பகீரத். உங்கள் திருமணம்.”  

“நாங்கள் முதலில் சந்தித்த அந்தக் கோவிலில்.”  

“ஹிந்து சம்பிரதாயப்படி.”  

“கரெக்ட்.” 

“எவ்வளவு பேர்?”  

“முப்பது. பகீரத் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. ஸ்ரீலங்காவில் இருந்து வருகிறபடி நெருங்கிய உறவினர்கள் இல்லை. என் பெற்றோர்கள். இருவரின் நண்பர்கள்.”  

“நீ ஒரு ஃப்ரீ ஸ்பிரிட். எதிர்காலத்தில் உன் பெயரைச் செய்தித்தாளில் படிக்க நேர்ந்தால் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று எழுந்தாள்.

அதிகாரி உணர்ச்சி இல்லாத இயந்திரம் இல்லை. 

“தாங்க்ஸ்.” தன் வணிக அட்டையைக் கைப்பையில் இருந்து எடுத்துக்கொடுத்தாள். “இந்த எண்ணில் அழைத்தால் உன் பெண்ணை என் பாஸ் சந்திக்க ஏற்பாடு செய்வேன்.” 

“தாங்க்ஸ். அடுத்த வாரத்தில்.”

கங்காவை வெளியே அழைத்துப்போனாள். 

“இப்போது, பகீரத்துடன் சில வார்த்தைகள்.”  

அவர்களைப் பார்த்ததும் அவன் எழுந்துவந்தான். கங்காவின் கண்களில் ‘கவலைப்படாதே!’ என்ற தைரிய வார்த்தை.  

(தொடரும்)

Series Navigationஉபநதிகள்-2 >>

2 Replies to “உபநதிகள் – 1”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.