இது வேற லெவல்…!

சமீபகாலங்களில் எனக்கொரு சந்தேகம். உங்களுக்கும் இருக்கலாம். தமிழில் வார்த்தைகளுக்கு அத்தனை பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா என்பதே அது. சந்தேகம் சும்மா வரவில்லை. பல நாட்களாக, பல பேரிடம் பேசும் பொழுது சட்சட்டென்று இந்த எண்ணம் வந்து போகும். எதனால் என்று கேளுங்கள்… ஒரு நண்பரிடம் அவர் சென்று வந்த பயணம் குறித்து கேட்டபோது “tour வேற லெவல்” என்றார். புதிதாக வந்திருக்கும் படம் பார்த்துவிட்டு வருவோரிடம் படம் எப்படியிருக்கிறது என்று தொலைக்காட்சியில் கேட்கிறார்கள். அனைவரும் “படம் வேற லெவல்” என்கின்றனர். சூர்யகுமார் யாதவ் அடிக்கும் சிக்ஸும் வேற லெவலாம், சுவையாய் இருப்பின், உருளைக்கிழங்கு சிப்ஸும் வேற லெவலாம்! இப்போதெல்லாம் சற்று தயக்கத்துடன் தான் “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்கிறேன். “நான் வேற லெவலில் இருக்கிறேன்” என்று பதில் வந்து விட்டால்? நல்ல வேளை, இன்னும் நிலைமை அந்தளவு மோசமாகவில்லை போலும். நன்றென்று உணர்த்த நினைக்கும் எதையும்”வேற லெவலில்” அடக்கம் செய்து விட்டோம் என்ற ஆற்றாமையை எப்படி போக்குவது?

நேரடியாக கம்பன் வீட்டுக்கே சென்று கதவைத் தட்டினேன். கதவைத் திறந்தவர் “யாரப்பா நீ” என்றார். சரியாக எழுதாத தேர்வின் விடைத்தாள் பெற ஆசிரியர் முன் நிற்கும் போது வயிற்றில் ஒரு உருளை நகருமே அது போன்றதொரு பயம். “ஒரு சந்தேகம். அது நீங்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்” என்றேன். “என்னை உனக்கு எப்படித் தெரியும்?” என்றார் கம்பர். சற்றே தயங்கியபடி, “நெல்லிக்கனி படத்தில் வரும் ‘நானொரு கோவில் நீயொரு தெய்வம்’ என்னும் பாட்டின் மூலம் தான் நீங்கள் அறிமுகம். பள்ளி செல்லும் வயதில் தினந்தோறும் இப்பாடல் கேட்காமல் கடந்த நாட்களே இல்லை எனலாம். சாலைகள் தோறும் ஏதோவொரு வீட்டிலிருந்தோ கடையிலிருந்தோ இப்பாடல் இலங்கை வானொலி வழியே வந்து கொண்டே இருக்கும். இப்பாடல் முழுவதும் கேட்பதற்கென்றே பேருந்தை பலமுறை தவறவும் விட்டிருக்கிறேன். அதில் 

‘கங்கை வேடன் தன்னை ராமன் தோழன் என்று கொண்டானே 

கர்ணன், கொண்ட தோழமைக்காக ஆவி தன்னை தந்தானே

கவிவேந்தன் கம்பன் வந்து நம்மைப் பாட மாட்டானோ

கதையல்ல உண்மையென்று வரலாறு காட்டோனோ’

என்ற வரிகள் உண்டு. அதன் மூலம்தான் நீங்கள் அறிமுகம்” என்றேன். “என்னது சினிமா வழியாகவா?” என்றார் சற்றே கோபத்துடன். “மன்னியுங்கள் கம்பரே. சேற்றின் வழியே சென்று தாமரையைப் பறிப்பது போல, சில நல்ல சினிமா பாடல்கள் வழியாகவும் இலக்கிய அறிமுகம் நேர்வதுண்டு” என்றேன். சற்றே அமைதியடைந்தவர் போல மாறியது அவர் முகம். “வந்த விடயத்தைச் சொல்” என்றார்.

“இப்போதெல்லாம் எந்தவிதமான மகிழ்ச்சியோ, ஆச்சரியமோ, உயர்வையோ குறிக்க, நாங்கள் ‘வேற லெவல்’ என்றே சொல்கிறோம். நம் மொழியில் வார்த்தைகளுக்கா பஞ்சம்…ஏன் இப்படி அனைத்திற்கும் ஒரு சொல் அதுவும் ஆங்கிலச் சொல் என்றானோம் என்று சந்தேகமும் ஆற்றாமையும் இருக்கிறது. இதற்கு மாறான பல சொற்கள் தமிழில் இல்லையா? ” என்றேன். “வியப்பிடைச் சொல் கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்றார் கம்பர். “ஆஹா…ச்சே… போன்றவற்றைத் தானே சொல்கிறீர்கள்” என்றேன். “ஆமாம். அது சொல்லாக மட்டும் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு சொற்தொடராகவோ,  பல வரிகளாகவோ கூட இருக்கலாம். ‘வேற லெவல்’ என்பது நீங்கள் தற்சமயம் புழக்கத்தில் விட்டிருக்கும் வியப்பிடைச் சொற்தொடர்” என்றபடி சிரித்தார். புலவர்களின் வர்ணனைகள் பெரும்பாலும் வியப்பிடை வரிகளால் நெய்யப்பட்டதுதானே என்று சட்டென்று தோன்றியது. 

“என் இராமாயணம் படித்திருக்கிறாயா?” என்ற அவரின் கேள்விக்கு சற்றே தயக்கத்துடன் “நுனிப்புல் மேய்ந்திருக்கிறேன்” என்றேன். “அடிப்புல்லில் ஆசையில்லையோ?” என்றார் நக்கலாக…” சுமார் இருபது வருடங்களாக படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். முடித்து விட்டேன் என்று நினைக்கும் அளவு திருப்தி வரவில்லை. சில பாடல்கள் அப்படியே வாரக்கணக்கில் மனதில் அமர்ந்திருக்கும் – மத்தியான வெயிலில் மரத்தடியில் அமர்ந்திருக்கும் மாடு அசைபோடுவது போல…” என்ற என்னை ஒரு பார்வை பார்த்தார். அதிலிருந்தது பச்சாதாபமா வாஞ்சையா என்று தெரியவில்லை. “நீ சொன்ன சினிமா பாட்டின் போக்கிலேயே  போய் வருவோமே” என்று விளக்கத் துவங்கினார்.

“இராமனுக்கு நிகராக குகனின் புற மற்றும் அக அழகை நிறுத்த எண்ணினேன். அதற்கேற்றாற்போல் சில பாடல்களை புனைந்தேன். குகனின் தலைமயிரும், புருவமும் கூட ‘வேற லெவல்’ என்று காட்டுவதற்கு,

அல் தொடுத்தன்ன குஞ்சியன், ஆளியின்

நெற்றொடு ஒத்து நெரிந்த புருவத்தான்… 

என்றேன். அதாவது, இருட்டைப் பின்னலாய் கட்டியது போன்ற தலைமயிர்! ஆளி என்றால் நீங்கள் “flax seeds” சாப்பிடுகிறீர்களே அதுதான் ஆளி. அந்த விதை போன்ற புருவம் கொண்டவன்! (கம்பன் எப்படி ஆங்கிலம் பேசுவான் என்று கேட்காதீர்கள். இன்று கம்பன் இருந்தால் தமிழின் அருமை நம் தலைக்குள் ஏற எந்த மொழி வழியாகவும் பேசியிருப்பான்தானே?) மேலும்,

பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி

வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன்,

கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்,

எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான்

என்று அவன் உடலமைப்பைக் கூறினேன். பனஞ்செறும்பு பார்த்திருக்கிறாயா? பனையின் நரம்பு அது. குகனின் நீண்ட கையிலிள்ள ரோமங்கள் அதனை ஒத்தவை. இருளின் மீது எண்ணெய் பூசினால் எப்படியிருக்கும்? கற்பனை செய்து பார். அத்தகைய பளபளக்கும் கருமை நிறம் கொண்டது அவன் மேனி! பனைமரம் தேடிச் சென்று அதன் செறும்புகள் பார்த்துவிட்டு மீண்டும் ஒரு முறை பாடலைப் படி” என்றார். “

“குகனின் பார்வையும் குரலும் எத்தகையது என்பதை, 

‘சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்

கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான்’ 

அதாவது அவனது சாதாரண பார்வையே தீ கக்கும், அவனது குரல் யமனுக்கே பயத்தை ஏற்படுத்தும் என்று எழுதினேன்.” என்றார்.

“கம்பரே, நீங்க வேற லெவல்” என்றேன். “பொறு தம்பி. இரண்டே பாடல்களில் இறுமாப்பு அடைபவனல்ல இக்கம்பன். குகன் வந்திருக்கிறான் என்பதை இராமனிடம் இலக்குவன் எப்படி தெரிவிக்கிறான் தெரியுமா?

‘தாயின் நல்லான்’ வெளியில் காத்திருக்கிறான் என்கிறான். தாயைவிட நல்லவன் என்பதை விட ஒருவன் வேற லெவல் பண்புடையவனாக முடியுமா? 

இராமனுக்காக தேனும் மீனும் கொண்டு வந்திருக்கிறான் குகன். இராமனுடன் முனிவர்கள் பலரும் உடனிருக்கின்றனர். குகன் மீன் கொண்டு வந்திருக்கின்றானே? என்ன செய்வது? இராமனின் சிந்தனை வேற லெவலில் இருக்கிறது. 

பரிவினின் தழீஇய என்னின்

பவித்திரம்; எம்மனோர்க்கும்

உரியன; இனிதின் நாமும்

உண்டனெம் அன்றோ?’

என, அன்புடன் தரப்படும் எதுவும் புனிதத்தன்மை கொண்டதே என்கிறான் இராமன்” என்று சொல்லி முடிப்பதற்குள் நான், “கவிவேந்தே குகப்படலத்தில் அம்பி, தும்பி, தம்பி, வெம்பி என்று சொல்வித்தையால் விளையாடியிருப்பீர்களே அதுவும் வேற லெவல் தானே” என்றேன். மகிழ்ச்சி அடைந்த கம்பர், “ஓ குகன் இரவு முழுவதும் இராமனின் நிலை எண்ணி அழுதபடி இருப்பானே…

தும்பியின் குழாத்தின் சுற்றும்

சுற்றத்தன், தொடுத்த வில்லன்,

வெம்பி வெந்து அழியாநின்ற

நெஞ்சினன், விழித்த கண்ணன்

தம்பி நின்றானை நோக்கி,

தலைமகன் தன்மை நோக்கி,

அம்பியின் தலைவன் கண்ணீர்

அருவி சோர் குன்றின் நின்றான்

என்னும் பாட்டு அது. தும்பி என்றால் யானை. அம்பி என்றால் படகு. தம்பியும் வெம்பியும் அனைவருக்கும் தெரிந்த பொருள். யானைக் கூட்டத்தைப் போன்ற சுற்றம் சூழ்ந்த, கங்கையிலோடும் படகுகளின் தலைவன், எப்போதும் நான் பூட்டிய வில்லுடன் தயார் நிலையில் இருக்கும் வீரன் குகன், தூங்காது நின்றிருக்கும் இலக்குவனனைப் பார்த்து, இராமனின் வனவாச நிலையை எண்ணி, தூங்காது விழித்தபடி, இரவு முழுவதும், அருவி விழும் மலையைப் போல கண்ணீர் பெருக நின்றான் என்று பொருள்” என்றார்.

கம்பரை எந்த லெவலில் மெச்சினாலும் போதாது என்பதால் வார்த்தையற்று சிலிர்த்து நின்று “நீங்கள் அனுமதி கொடுத்தால் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன்” என்றேன்.  தலையசைத்தார்…

“இருவரின் சந்திப்பு நிகழ்ந்தபின் வரும் அந்தியையும் அடுத்த நாள் காலையையும் நீங்கள் சூரியனை வைத்துச் சொல்லும் பாடல்களில் வேற லெவலில் புகுந்து விளையாடியிருக்கிறீர்கள்.

‘விரி இருட் பகையை ஓட்டி,

 திசைகளை வென்று, மேல் நின்று,

 ஒரு தனித் திகிரி உந்தி,

 உயர் புகழ் நிறுவி, நாளும்

 இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து

 இருந்து, அருள்புரிந்து வீந்த

 செரு வலி வீரன் என்னச்

 செங் கதிர்ச் செல்வன் சென்றான்.’

என்னும் பாடலில் சூரிய அஸ்தமனத்தை பாடுவது போல் பாடி, தசரதனின் பண்புகளை ஒத்த சூரியன் மறைகிறான் என்கிறீர்கள். அடுத்த நாள் காலையில் நிகழும் உதயத்தையோ,

‘துறக்கமே முதல ஆய

 தூயன யாவை யேனும்

 மறக்குமா நினையல் அம்மா! 

 வரம்பு இல தோற்றும் மாக்கள்

 இறக்குமாறு இது என்பான்போல்

 முன்னை நாள் இறந்தான், பின் நாள்,

 பிறக்குமாறு இது என்பான்போல்

 பிறந்தனன் பிறவா வெய்யோன்.’

என்கிறீர்கள்.

உலகின் உயிர்கள் அனைத்தும் பிறப்பதும் இறப்பதுமாய் கடக்கும் நிலையாமையை நம் நினைவில் நிதமும் நிறுத்துவதற்காகவே தினமும் தோன்றி மறைகிறது பிறப்பும் இறப்புமற்ற சூரியன் என்பது எத்தனை அற்புதமான கற்பனை…

தத்தவம் சொல்லி விட்டு அடுத்த பாடலிலேயே,

‘செஞ்செவே சேற்றில் தோன்றும்

     தாமரை, தேரில் தோன்றும்

வெஞ் சுடர்ச் செல்வன் மேனி

     நோக்கின விரிந்த; வேறு ஓர்

அஞ்சன நாயிறு அன்ன

     ஐயனை நோக்கி, செய்ய

வஞ்சி வாழ் வதனம் என்னும்

     தாமரை மலர்ந்தது அன்றே’

என்று கற்பனையின் உச்சத்தில் காதலைத் தொடுகிறீர்கள். வெஞ்சுடர் சூரியனைப் பார்த்து மலரும் செக்கச்சிவந்த தாமரை போல கருஞ்சூரியனான இராமனைக் கண்டு சீதையின் முகம் மலர்ந்தது என்பதும் வேற லெவல் தானே!” என்றேன்.

கம்பரிடம் நன்றி சொல்லிவிட்டு கிளம்புகையில், “பரவாயில்லை நுனிப்புல் ஓரளவு மேய்ந்திருக்கிறாய்” என்று தட்டிக் கொடுத்து, “வாட்ஸப், ஃபேஸ்புக் என்று நேரத்தை வீணடிக்காமல் வாசிப்பை அதிகப்படுத்திவிட்டு அடுத்த முறை வா” என்றார். கம்பன் சொல் கசக்குமா என்ன?

4 Replies to “இது வேற லெவல்…!”

  1. நன்று, நன்று! “வேறே லெவல்” என்ற ஒரு சரள சொல்லாடலை விளக்க கம்பனையே போய் பார்த்து விட்டு வந்து விட்டீர்கள். அருமை! கவிஞர்கள் உயர்வு நவிற்சி அணியை கையாளுவது இது போன்ற மிகைப் படுத்தப் பட்ட, அடிக்கோடிட்ட விஷயத்தை வாசகர்களுக்கு உணர்த்துவற்காக என்பது என் எண்ணம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.