ஆயிரம் அடி விழுந்தும் ஏன் தொடர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும்?

இந்தக் கட்டுரையை இதுவரை படித்த வாசகருக்குத் தோன்றும் நியாயமான கேள்வி, “இப்படி ஆயிரம் அடி விழுந்தும் ஏன் தொடர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும்?” பணத்திற்காக அல்லாது, எதற்காக இப்படி அல்லாட வேண்டும்? இத்தனை முயற்சிகளுக்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது.

  1. இந்தத் தொழிலில் தொடர்ந்து வண்ணப்படம் எடுக்கும் நுட்பங்கள் பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருக்க, இந்தத் தோல்விகள் எனக்கு வழி வகுக்கின்றன. முகநூல் போன்ற அமைப்புகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் ஒரு வண்ணப்படக் கலைஞனைச் சிக்க வைத்துவிடும். இதற்கு முன்னர் என்னிடமிருந்த 6 அல்லது 7 காமிராக்களை இந்த அளவு பயன்படுத்தவில்லை. இன்று, பின்நோக்கிப் பார்க்கையில், இந்தப் படிப்பினை முன்னமே இருந்திருந்தால், ஒரு 15 வருடங்கள் முன்பு இந்தத் துறையில் சீரியஸாக ஈடுபட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
  2. எந்தப் படம் விற்கிறது என்ற ஆராய்ச்சி, அந்தப் படத்திலுள்ள பின்னணியைப் புரிந்து கொண்டு, நம் நுட்பத்தை மேலும் மெருகேற்றிக் கொள்ள வாய்ப்பளிக்கிறது. இந்த ஆராய்ச்சி சரியா தவறா என்பதை விட, ஏதோ ஒரு படிப்பினை, ஒவ்வொரு நிராகரிப்பிலும் உள்ளது என்பது என் கணிப்பு
  3. இந்தத் துறையில் தோல்விகள், என்னை வெவ்வேறு புதிய முறைகளை கறகத் தூண்டுகிறது. உதாரணத்திற்கும் vector images என்ற கணினி மூலம் (படம் முழுவதும் கோண கணக்குதான்) முற்றிலும் உருவாக்கும் புதிய கலையை நான் 2020 முதல் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். முன்னம் சொன்னது போல, அதில் பெரும் வெற்றி இன்னும் எனக்குக் கிட்டவில்லை. ஆனாலும், குளிர்காலத்தில் அதிகம் வெளியே சென்று படம் பிடிக்க முடியாத நிலையில், கணினி மூலம் உருவாக்கப்படும் வண்ணப்படங்கள் என்றோ விற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அத்துடன், இந்தக் கலையில் இன்னும் கற்றுக் கொள்ளவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.
  4. ஆரம்ப காலத்தில் இருந்த தோல்வி கண்டு தொய்வுறும் மனப்பான்மை, இன்று முற்றிலும் மாறிவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த அறிவுரை இத்துறையில் இதுதான்: “ஒரு 3,000 வண்ணப்படங்கள் இருந்தால்தான் நீங்கள் எதையும் சாதிக்க முடியும். பல மில்லியன் படங்களுக்கு நடுவே, சில சமயம், எண்ணிக்கைதான் உங்களைக் காப்பாற்றும்.” வியாபாரத்தில் சொல்லுவதைப் போல, சில வண்ணப்படங்கள் loss leader –ஆகச் செயல்பட்டு, மற்ற வண்ணப்படங்களை விற்க உதவும். மேலும், புதிய வண்ணப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும் பட்சத்தில், விற்பனைக்கு அதிக வாய்ப்பு உண்டு
  5. 2022 -ல் என்னுடைய புதிய வண்ணப்பட முயற்சி, அகண்ட இயற்கைக் காட்சிகள்- இது panorama photography என்று அழைக்கப்படுகிறது. இத்துறையில் ஈடுபட்ட பின்புதான் ஒன்று புரிந்தது: பலவிதமான நல்ல வண்ணப்படங்களை எடுக்க, மீண்டும் மீண்டும் புதிய காமிரா வஸ்துக்களை வாங்கத் தேவையில்லை. இருப்பதை வைத்துக் கொண்டு நிறைய சாதிக்கலாம்! Panorama வண்ணப்படங்கள் 2022-ல் மிகவும் வெற்றி பெற்ற ஒரு புதிய வகை முயற்சி.
  6. கடந்த 4 ஆண்டுகளாக வண்ணப்படக் கலையைப் பற்றி நிறைய யுடியூப் காணொளிகளைக் கண்டு, மேலும் கற்றுக் கொண்டே இருக்க இந்தத் தொழில் தூண்டுகோலாக இருப்பது, விலை மதிப்பற்றது. புதிய மென்பொருள் முறைகள், புதிய வண்ணப்படப் பதிவு வழிகள், எதையும் கணினி கொண்டு உருவாக்கும் vector graphics என்று என் ஓய்வு நேரம் நல்ல பயனுள்ளதாக மாறியதையும் சொல்ல வேண்டும்
  7. இந்தத் துறையில், மென்பொருட்கள் மிக வேகமாக முன்னேறி வருகின்றன. உதாரணத்திற்கு, சமீபத்திய வெளியீடு ஒன்றில், Affinity Photo ஒரு புதிய உத்தியை வெளியிட்டது. இதனால், ஒரு சிறிய டிசைன் மற்றும் பொருளைக் கொண்டு, பல்வேறு patterns உருவாக்க முடியும். கணினி, இதைச் செய்வதால், குறுகிய நேரத்தில், பல டிசைன்களை உருவாக்கலாம்
  8. புதிய வண்ணப்பட மென்பொருட்கள், சில பழைய வண்ணப்படங்களையும் மெருகேற்றவும் வாய்ப்பளிக்கின்றன. எல்லா வண்ணப்படங்களையும் இவ்வாறு ஒப்பேற்ற முடியாது. ஓரளவு நல்ல தரம் வாய்ந்த படங்களை புதிய உத்திகளைக் கையாண்டு, மெருகேற்ற முடியும்
  9. வண்ணப்பட மென்பொருட்கள் படிப்படியாக செயற்கை நுண்ணறிவு கொண்டு, பங்களிப்பாளரின் வேலைப் பளுவைக் குறைக்கவும் வழி செய்ய முயற்சிக்கின்றன. இன்று, அவை ஆரம்ப நிலயில் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால். காமிராவிலிருந்து கணினிக்கு மாற்றிய வண்ணப்படம் ஒன்றில் பங்களிப்பாளர் செய்யும் பல்வேறு பணிப்படிகளை இவை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வேகத்துடனும், துல்லியமாகவும் செயல்பட வைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை
  10. நாம் உருவாக்கும் வண்ணப்படம் எத்தனைக்கு விலை போகிறது என்பது முக்கியமில்லை. யாருக்கோ பயனளிக்கிறது/ மகிழ்ச்சியளிக்கிறது என்பது ஒரு கலைஞனுக்கு மிகவும் முக்கியம்.
  11. இதுவரை நாம் கடந்து வந்த பாதை போலவே, எதிர்காலமும் இருக்கும் என்று நம்புவது அசட்டுத்தனம். வண்ணப்படத் தேவைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இன்று Drone –களிலிருந்து எடுக்கப்படும் உயர்கோண வண்ணப்படங்கள் வரவேற்பைப் பெறுகின்றன. Drone Photography என்பது புதிதாக வளரும் ஒரு துறை. இதைக் கற்றுத் தேருவது, வண்ணப்படக் கலைஞர்களுக்கு மிகவும் அவசியம். 27 நிமிடத்தில் (பெரும்பாலான வண்ணப்பட drone –களின் பாட்டரியின் உயிர் 27 நிமிடம்) எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் மிகவும் புதியன.
  12. என்னுடைய வண்ணப்பட முயற்சிகளில் பல தோல்விகள் இருந்தாலும், வெற்றிகளும் கூடவே இருந்தன. ஆனால், என்னுடைய விடியோ பயணம் முற்றிலும் தோல்வியைத் தழுவிய ஒன்று. இது என் எதிர்கால சவால்களில் ஒன்று
  13. யுடியூப் மூலம் புதிய உத்திகளைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு, வண்ணப்படக் கலையில் பல்லாண்டுகள் ஈடுபட்டுள்ளதால், ஒரு ஆலோசனை: பல யுடியூப் காணொளிகள், ஏதாவது புதிய காமிரா வஸ்துவின் மீது உங்களுக்கு மோகம் ஏற்படுத்த உருவாக்கப்பட்டவை. அத்துடன், இவற்றில் பல காணொளிகள், அடுத்த வருடம் வந்தால், பயனற்றது. வண்ணப்படக் கலை சார்ந்த பல நல்ல சேனல்கள் யுடியூப்பில் உள்ளன. அவற்றை நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். கூகிள் முன்வைக்கும் காணொளிகள் பெரும்பாலும், விற்பனைத் தந்திரம் லேசாகப் பின்னணியில் ஓடும் வகை
  14. இந்தக் கலைக்கு வந்துள்ள பெரிய போட்டி, செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள். Stable Diffusion, Jasper Art, Midjourney, Doll E2 போன்ற மென்பொருட்கள், பலவகை வண்ணப்படங்களை உருவாக்கும் திறமை கொண்டவை. இந்த நிறுவனங்களுடன் இறுதிப் பயனாளர் ஒரு கணக்கைத் திறந்தால், அவர்களது தேவையை ஒரு கேள்வியாக முன்வைத்தால், தகுந்த சில உபரி சூசகங்களுடன், மென்பொருள் படம் ஒன்றை உருவாக்கும். இறுதிப் பயனாளருக்கு அந்த படம் சரியாக இருந்தால், ஏஜன்சியிடம் போகவே தேவையில்லை. எந்திரங்களுடன் போட்டியிடும் முதல் கலைஞர்கள் என் போன்ற வண்ணப்பட கலைஞர்கள் என்று சொல்ல வேண்டும்

கடைசியாக, ஒன்றைச் சொல்லியாக வேண்டும்; இல்லையேல், சொல்வனம் ஆசிரியர் குழு, தாளித்து விடுவார்கள்! அதென்ன ‘வண்ணமும் எண்ணமும் ஆயிரம்” தலைப்பு?

அதென்றுமில்லை,. நான் இத்துறையில் கால்வைத்த பின் இதுவரை, என்னுடைய 1,000 வண்ணப்படங்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 1,000 வண்ணப்படங்கள் 2025 -முடிவிற்குள் நிகழும் என்பது என் கணிப்பு.

(முற்றும்)

Series Navigation<< என் முயற்சிகளில் சிலவும் அவை தந்த அனுபவமும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.