அதிரியன் நினைவுகள் – 8

This entry is part 8 of 10 in the series அதிரியன் நினைவுகள்

தமிழாக்கம் : நா. கிருஷ்ணா

எளிய சிப்பாயொருவனின் குறிப்பிட்ட சில தீரச் செயல்கள் கவனத்தைப் பெறாமல் போவதற்கு வாய்ப்பிருந்தது, ஆனால் அவைகளே என்னுடையதெனில்  ரோம் நகரில்  நற்பெயரையும், இராணுவத்தில் ஒரு வகையான கீர்த்தியையும் பெற எனக்கு உதவி இருக்கின்றன. தீரம் மிக்கதெனச் சொல்லப்பட்ட எனது பெரும்பாலான செயல்பாடுகள் பயனற்ற சூரத்தனங்களன்றி வேறில்லை. சற்று முன்பாக ஏறக்குறைய புனிதநிலையில் வைத்து பூரிப்புடன் குறிப்பிட்டவற்றிலும் கூட  என்னுடைய சந்தோஷத்திற்கும், பிறர் கவனத்தைப் பெறவும்  எதையும் செய்யத்தயார் என்கிற இழிவான குணம் என்னிடமிருந்ததென்பதை இன்று  வெட்கத்தோடு அறியவந்தேன். இப்படித்தான்  இலையுதிர் காலத்தில் ஒரு நாள், நான் பட்டாவியா(les Batave)35 வீரர்களுக்குரிய சாதனங்களின் பெரும்பாரத்துடன், மழைக் காரணமாக வெள்ளப்பெருக்குடன் ஓடிக்கொண்டிருந்த தான்யூபு நதியைக்  துணிச்சலுடன் குதிரையில் கடந்தேன்.  இத்துணிவுமிக்க காரியத்தில் தீரச்செயலென்று  ஒன்றிருக்குமானால் அப்பெருமைக்கு என்னுடைய குதிரை காரணமன்றி நானல்ல. ஆனால் பைத்தியக்காரத்தனமான இதுபோன்ற காரியங்களை நிகழ்த்திய இந்தக் காலகட்டம் துணிச்சலிலுள்ள பல்வேறு அம்சங்களை வேறுபடுத்திப் பார்க்க எனக்குக் கற்றுக் கொடுத்தது. எப்பொழுதும் என்னிடம் இருக்கவேண்டுமென நான் விரும்பும் தைரியம் அலட்டிக்கொள்ளாதது, பற்றற்றது,  உடலிச்சைக்குக் கட்டுப்படாதது, உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காமல் மனத்தைச் சமநிலையில் வைத்திருப்பதில் கடவுளுக்கு நிகரானது . அதுபோல ஒன்றை என்றோ அடைந்துவிட்டேன் என்பதாகத் தெரிவித்து என்னை நானே கொண்டாடிக் கொள்ளப் போவதில்லை. பிற்காலத்தில் அசலென்று நம்பி நான் உபயோகித்த துணிச்சல்களில் சில, மோசமான நாட்களில் வாழ்க்கையை பொறுப்பற்று குறைகாணும் வகையிலும், நல்ல நாட்களில் கடமை உணர்வை ஊட்டும்வகையிலும் இருக்கப்போக, நான் இரண்டாவது வகையுடன் ஒட்டிக்கொண்டேன். இருப்பினும், வெகுவிரைவில் தொடந்து ஆபத்தை நான் எதிர்கொள்ள நேர்ந்தபோது, குறைகாணும் பண்பும், கடமை உணர்வும், ஓர் அசட்டு துணிச்சலுக்கு இடம்கொடுத்தன, மனிதனின் ஊழ்வினையும், விசித்திரமானதொரு பரவசமும் கைகோர்த்த வகை அது.  அந்த வயதில், இப்படியொரு துணிச்சல் போதைக்கு  இடைவிடாமல் அடிமைப்பட்டுக் கிடந்தேன். வாழ்க்கையில் இப்படியொரு நெருப்போடு விளையாடுவது மரணத்தை எதிர்பார்த்து அல்ல, உண்மையில்  அங்கு மரணமென்ற ஒன்று இல்லை, காரணம், மனிதன் தன்னுடைய தீரச்செயல்கள் ஒவ்வொன்றிலும், மரணத்தை ஏற்க மறுக்கிறான்.  இருந்தும் அப்படி அவன் அடைய நேரிட்டிருப்பின், ஒருவேளை அதை  அறியாமல் பெற்றிருக்கலாம்;  அந்தவகையில் அவனுக்கது ஓர்  அதிர்ச்சி அல்லது எதிர்பாராத தாக்குதல் மட்டுமே. தேய்ந்துபோன இந்த உடலின் தவிர்க்க இயலாத முடிவினைத் தீர்மானிக்க பலவழிமுறைகள் இருக்கலாம், எனது மனத்தில் ஓடிய இரண்டு சிந்தனைகளில் ஒன்றை எனது சொந்த மரணத்திற்கு இன்று அர்ப்பணிக்கிறேன், என்பதை எண்ணிப் பார்க்கிறபோது கசப்புடன் புன்னகைக்க வேண்டியுள்ளது. இதே மனிதன் இளைஞனாக இருந்தகாலத்தில் கூடுதலாகச் சில ஆண்டுகள் உயிர்வாழத் தவறினால் வாழ்க்கையில் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்கிற கவலையில்  ஒவ்வொரு நாளும் தனது எதிர்காலத்தைப் பணயம் வைத்தவன். 

தனது புத்தகங்களுக்காக மன்னிக்கப்பட விரும்பும் ஒரு அதீத எழுத்தறிவு படைத்த இராணுவ வீரனின் கதையாக மேற்கூறியவற்றைக் கட்டமைப்பது எளிது.  ஆனால்  இராணுவ வீரன் குறித்த இந்த எளிமையான பார்வையில் தவறுகள் உள்ளன. ஒருவர் மாற்றி ஒருவரென பலவிதமான மாந்தர்கள் எனக்குள் வாசம் செய்து என்னை ஆட்டிப் படைத்திருக்கின்றனர்.  ஒருவரும்  நீண்ட காலம்  இல்லை, ஆனால்  என்னுள் புகுந்த கொடுங்கோலன் மாத்திரம், விழுந்த குறுகிய காலத்திலேயே எழுந்தவன், அதிகாரத்தைத் திரும்பப்பெற்று மீண்டும் என்னுள் அமர்ந்துவிட்டான். அவ்வகையில் எதையும் திறம்படச்செய்யும் ஆற்றல், இராணுவ நெறிமுறைகளில் வெறித்தனமான அபிமானம் இவற்றோடு யுத்தமற்ற காலங்களில் தன்னுடைய சக மனிதர்களுடன் சந்தோஷமாக  நாட்களைக் கழிக்கத் தெரிந்த ஓர்  இராணுவ அதிகாரி;  கடவுள்களைக் குறித்து கவலைக்குரிய கனவுகளில் ஆழ்ந்திருக்கும் ஒரு மனிதன்;  கணப்பொழுது மயக்கத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஒருகாதலன்;  தமது கூடாரத்திற்குத் திரும்பிய கணத்தில், விளக்கொளியில் வரைபடங்களைப் பரிசீலித்து, உலகம் போகும் போக்கு குறித்து தமக்குள்ள கசப்பை ஒளிக்காமல் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்ட கர்வம் மிக்க ஓர் இளம் இராணுவ அதிகாரி; பின்னர் ஓரு எதிர்கால ராஜதந்திரி இப்படி அனைத்துவகையான மாந்தர்களையும் என்னுள்  குடியிருக்க அனுமதித்திருக்கிறேன். இவர்கள் தவிர, அரண்மனை விருந்தில் பிறர் வருத்தப்படக்கூடாதென்பதற்காக  மது அருந்தச் சம்மதிக்கும் ஓர் இழிபிறவி; அபத்தமான நம்பிக்கையில், சகட்டுமேனிக்கு ஒரு பதிலைத் தெரிவிக்கத் தெரிந்த ஒரு விடலைப் பருவ இளைஞன் ; வார்த்தைகளைக் கவனத்துடன் உபயோகிக்கத் தவறி சமயத்தில் நல்ல நண்பனைக்கூட  இழக்கத் தயாராக இருந்த ஓர் உளறல் ஆசாமி;  படைவீரனுக்குரிய அடிப்படையான கிளாடியேட்டர்  கடமைகளை எந்திரத்தின் துல்லியத்துடன் நிறைவேற்றிய ஒரு சராசரி இராணுவ வீரன் போன்றோரும்  என்னுள் குடியிருந்தனர், என்பதையும் மறக்காமல் இங்கே நான் குறிப்பிடவேண்டும். மேலே குறிப்பிட்ட மனிதர்களுக்கு மத்தியில் காலியான இருக்கையை நிரப்ப வந்த ஜென்மமும் ஒன்றுண்டு, வரலாற்றில் இடம்பிடிக்கப் போதாத அவ்வுருவத்திற்கு பெயர்கிடையாது,   பிற அனைவரையும் போலவும், என்னைப் போலவும் இருந்த ஒன்று என்கிறபோதும்  எளிய விளையாட்டுப் பொருள், சரியாகச் சொல்வதெனில் ஒரு ஜடம்.  கூடாரக் கட்டிலில் கிடந்தபடி ஏதோவொரு வாசத்தில் திளைக்கும், தேனீயின் ஓயாத ரீங்காரத்தை ஏனோதானோவென்று காதில் வாங்கியவண்ணம், அவ்வப்போது வீசும் காற்றினால் சலனப்படும், பிறகு என்னுள் மெல்ல மெல்லப் புதியவர்கள் பணியில் சேர்ந்தார்கள், அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது நாடகக் குழு நிர்வாகியையும்,   மேடை இயக்குனரையும். எனது நடிகர்களின் பெயர்களை நான் தெரிந்துவைத்திருந்தேன்; காட்சிக்குள் அவர்கள் வருவதும் போவதும் நம்பத்தகுந்த வகையில் இருந்தது; பயனற்ற வரிகளை நீக்கினேன்;  பயனாக மோசமான விளைவுகளின் விழுக்காட்டினைத் தவிர்க்க முடிந்தது. இறுதியாக நாடக அரங்கின் தொடக்கவுரையைத்  தவறாகப் பயன்படுத்தக்கூடாதென்பதையும்  கற்றுக்கொண்டேன். காலப்போக்கில் இவை என்னை வடிவமைக்க உதவின.

எனது இராணுவ வெற்றிகள்  மன்னர் திராயானைப் போன்ற மாவீரர்களிடத்தில்  பகை உணர்வை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. துணிவென்ற மொழியை மட்டுமே உடனடியாகப் புரிந்துகொள்ளக்கூடியவராக அவர் இருந்தார். அதன் சொற்கள் நேரிடையாக அவர் நெஞ்சத்தைத் தொட்டன. என்னைத் தம்முடைய வலதுகையாக, ஏன்  கிட்டத்தட்ட ஒரு மகனாகவே கருதினார். அதன் பின்னர் எங்கள் இருவரையும் முழுமையாக பிரிக்கின்ற வகையில் எந்தச் சம்பவமும் குறுக்கிடவில்லை.  என்னைப் பொறுத்தவரை, அவரது கருத்துக்களைப் பற்றிய  எனது ஆரம்பகால ஆட்சேபணைகளை அவர் இராணுவத்தில் வெளிப்படுத்திய போற்றத்தக்க மேதமையை அறிந்தமாத்திரத்தில் குறைந்த பட்சம் தற்காலிகமாக ஒதுக்கிவைக்க ஆரம்பித்து, பின்னர் மறக்கவும் செய்தேன். கைதேர்ந்த நிபுணர்கள்  செயல்படும் விதத்தைக் காண்பதில் எனகெப்போதும் மகிழ்ச்சி. பேரரசர், அவரது தரப்பில் ஈடிணையற்ற ஒருவகையான சாதுர்யமும்,  அதனை நன்குக் கையாளக்கூடிய திறமையும் பெற்றிருந்தார். மினர்வியன் லெஜியன்(Légion Minervienne)36 படைப்பிரிவுக்குத் தலைமையேற்க வேண்டியிருந்தது, அனைத்து வகையிலும் மிகவும் புகழ்பெற்றதொரு படைப்பிரிவு.  இரும்பு வாயில்கள்(Les Portes de Fer) என்கிற  பகுதியிலிருந்த  எதிரிகளின் பாதுகாப்பு அரண்களை  அழிக்க நான் நியமிக்கப்பட்டிருந்தேன். சர்மிசெகெட்டூசா(Sarmizégthuse)37 கோட்டையைச்  சுற்றி வளைத்தபின், பேரரசரைப் பின்தொடர்ந்து நிலவற மண்டபத்திற்குள் சென்றேன், அங்கு மன்னன் டேசெபால்(Decebale)38  ஆலோசகர்கள்  தங்கள் இறுதி விருந்தில் நஞ்சுண்டு மாண்டிருந்தனர்; இறந்த மனிதர்களின் இந்த விசித்திரமான குவியலுக்கு  தீ வைக்க அரசர் என்னைக் கேட்டுக்கொண்டார். அன்று மாலை, யுத்தகளத்தின் செங்குத்தான சரிவுநிலத்தில்வைத்து,  நெர்வா மன்னர் அவருக்களித்திருந்த  வைர மோதிரத்தை  எனது விரலுக்கு மாற்றினார், மன்னர் திராயானுக்குப் பிறகு  அதிகாரத்திற்கான வாரிசு நானென்பதைக் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் பிணையாக அது இருந்தது. அன்றைய இரவு, நான் மகிழ்ச்சியாக உறங்கினேன்.

மக்கள் பரவலாக என்னை அறியத்தொடங்கியிருந்தார்கள். அதனால் ரோம்நகரில் இரண்டாவது முறையாக நான் தங்க நேரிட்டபோது ஒருவித பரவச உணர்வுக்கு ஆளானேன். அத்தகைய உண்ர்வுக்குத் திரும்ப ஆளானது  வெகுகாலத்திற்குபிறகு எனது ராஜயோக நாட்களில், ஆனால் இம்முறை சற்றுத் திடமாக. மன்னர் திராயான் இரண்டுமில்லியன்  செஸ்டேஷுஸ்களை (sestertius)39 மக்களுக்கு வழங்கவென்று என்னிடம் கொடுத்தார், உண்மையில் அப்பணம் போதாது, ஆனால் செல்வத்தில் கொழித்து அதனை நிர்வகிக்கும் பொறுப்பிலும் இருந்துவந்த எனக்கு பணத்தைப் பற்றிய கவலைகளே அப்போதில்லை. பிறர் மனதைப் புண்ப்டுத்திவிடுவேனோ என்கிற மோசமானதொரு அச்சம் வெகுவாக என்னிடம் குறைந்திருந்தது. கன்னத்திலிருந்த  ஒரு தழும்பைச் சாக்காகவைத்து   கிரேக்க தத்துவஞானிகளிடம் காணமுடிகிற குறுந்தாடியை நானும் வைத்திருந்திருக்கிறேன். ஆடைவிவகாரங்களில் எளிமையைக் கடைபிடித்தேன், அப்போக்கு முடிசூட்டிக்கொண்டபிறகு மிதமிஞ்சிப்போக கைகாப்புகள்,  வாசனை தைலங்கள் உபயோகித்தல் போன்றவை கடந்தகாலத்திற்குரியவை ஆயின.  தவிர எளிமை ஒரு பிரச்சனைக்குரிய விஷயமே அல்ல என்றானது. நாளடைவில் எளிமைக்கென்றே பழகிக்கொண்டேன், விலையுயர்ந்த கற்கள் அவற்றை சேகரித்த கையுறை அணியாத கைகள் எனக் காணநேர்ந்தபோது, எளிமைக்கும் பிறவற்றுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்து அதனை நேசிக்கவும் செய்தேன்.  ஆடைகள் விஷயத்திற்கு வருகிறேன், திரிப்யூனாக மக்கள் மன்றத்தில் பணியாற்றிய வருடங்களில் தீர்க்கதரிசனத்திற்கு  வாய்பளிக்கும் வகையில் ஒரு சம்பவம். அன்று மோசமானதொரு காலநிலை, பொதுமேடையில் பேசவேண்டும், கொலுவா(Gaulois)40 மக்களின் தடித்த மழைக்குரிய கம்பளி அங்கியை உடுத்தாமல் டோகா(Toga)41 அங்கியோடு  உரையாற்றவேண்டிய கட்டாயம். பெய்தமழை நீர்,  அங்கியின் மடிப்புகளை வடிகாலாக பயன்படுத்திக்கொண்டு வடிந்தது, இன்னொரு பக்கம் கண்களில் வடியும் மழைநீரைத் தவிர்க்க என் கைகொண்டு  ஓயாமல் நெற்றியைத் துடைத்துக்கொள்ளச் செய்தேன். ரோம் நகரில், மழையில் நனைவதும், ஜலதோஷம் பிடிப்பதும், சக்கரவர்த்திக்குரிய சிறப்பு சலுகையாக இருக்கவேண்டும், காரணம் டோகா அங்கியுடன் வேறு எதையும் கூடுதலாக அவர்கள் அணியும் உரிமை அவர்களுக்கில்லை. இந்நிலையில் அன்றையதினத்திலிருந்து அப்பகுதியில்   சில்லறை விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்களும், தர்ப்பூசணி விற்பனையாளர்களும் நான் மழையில் நனைந்ததை வைத்து எனக்கு சக்கரவர்த்தியாகும் அதிர்ஷ்டம் இருப்பதை தீர்க்கதரிசனமாக உணர்ந்திருந்தார்கள்.

இளமைக்காலம் என்றதும் அடிக்கடி நாம் பேசுவது கனவுகளையன்றி   அப்பருவகால கணக்கீடுகளை அல்ல, அவற்றை அதிகம் மறந்து விடுகிறோம். அவையும் கனவுகளே என்பது ஒருபக்கம் இருக்கட்டும், பைத்தியக்காரத்தனத்தில்   கனவுகளுக்கு எவ்விதத்திலும்  அவை குறைந்தவை இல்லை. ரோமானியப் விழாக்காலங்களில் அவ்வாறான கணக்கீடுகளுடன் நற்பெயருக்கான போட்டாபோட்டியில் நான் ஒருவன்மாத்திரமல்ல:  ஒட்டுமொத்த இராணுமும்,  இறங்கியது. அப்படியொரு இலட்சிய பாத்திரத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் நானும் ஏற்றேன். என்றாலும், ஏற்றபிறகு பாத்திரத்தில் ஒன்றியும், பிறர் உதவின்றி தொடர்ந்து பாத்திரத்திற்குரிய வசனத்தைப் பேசவும் ஒருபோதும் என்னால் முடிந்ததில்லை. செனட்டின் நடவடிக்கைகளைக் குறிப்பெடுக்கும் க்யூரேட்டர் பதவி,, அலுப்பு தரும் பணியும் என்கிறபோதும் அதைச் சரிவர நிறைவேற்ற ஒப்புக் கொண்டேன், அனைத்து சேவைகளையும் பயனுள்ளதாக  மாற்றினேன். ஒரு சக்கரவர்த்தியின் வார்த்தைச் சிக்கனம் இராணுவ நடவடிக்கைகளில் எடுபடும், ஆனால் தலைநகர் ரோம் வாழ்க்கையென்பது வேறானது. இலக்கிய ரசனையில் கிட்டத்தட்ட என் அளவிற்கிருந்த மகாராணி புளோட்டின்(Plotine), மன்னர் திராயானிடம் அவருடைய உத்தியோக பூர்வ பேச்சுக்களைத் தயாரிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்க வற்புறுத்தினார். மகாராணியின் நற்காரியங்களில்  இது முதன்மையானது. இதுபோன்ற பணிகளைச் சந்தோஷத்துடன் செய்யப்பழகியவன் என்பதால் எனக்கிட்டவற்றை நன்றாகவே செய்தேன். பணியின் ஆரம்பகாலத்தில் சிரமங்கள் இருந்தன, அப்போதெல்லாம் என்னபேசுவது அல்லது எப்படி கோர்வையாக பேசுவதென்கிற ஞானமின்றிருந்த செனெட்டர்களுக்கு வேண்டிய பேச்சுகளை தயாரித்தளிப்பேன், அவர்களோ தங்கள் சொந்த உரையை ஆற்றியதுபோன்ற நினைப்பில் திளைப்பார்கள். மன்னர் திராயான் பொருட்டு ஆற்றிய இப்பணியில் கிடைத்த இம்மகிழ்ச்சி, பதின்வயதில் மேடைபேச்சுகென பயிற்சிகளை மேற்கொண்டபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு நிகரானது ; எனது அறையில் தனித்து கண்ணாடி முன்நின்று, அவ்வுரைகள் என்னுள்  ஏற்படுத்துகிற மாறுதல்களை அறிய முயல், சக்கரவர்த்தியாகவே என்னை கற்பிதம் செய்துகொள்வேன். உண்மையில்,   அடாவடி காரியங்களில் எனக்குப் போதாமை இருந்தன, ஆனால் அப்பாரத்தை என்னுள் இருந்த மற்றொருவர் தோளில் ஏற்றியபோது,  என்னால் எளிதாகச் செயல்படுத்த முடிந்தது. சக்கரவர்த்தி மனத்தில் உதிக்கும் கருத்து எளிமையானது ஆனால் தெளிவற்றது, அவ்வகையில் இருண்மையானதுங்கூட, இருந்தும் அவற்றுக்கு நான் நன்கு பழகிக்கொண்டேன்; அவரைக் காட்டிலும், அவரது எண்ணத்தை நன்றாக புரிந்துவைத்திருந்தது நான் என்பதில் எனக்குப் பெருமையும் கூட. மன்னர் படையெடுப்பின்போது உரைகளில் கடைபிடிக்கும் பாணியை செனெட் அவை உரைகளிலும் பிரதிபலிக்க  விரும்பினேன்,  செனெட்டின் வழக்கமான உரைகளிலிருந்து மாறுபட்ட அவற்றுக்கு  நானே பொறுப்பு.  அவ்வாறே மன்னர் திராயான் தமது அலுவலக அறைக்குள் இருக்க நேரிடும் நாட்களில் , அவர் சார்பில் உரையை  செனெட் அவையில் நான்  வாசிப்பேன், ஆனால் எப்படி உச்சரிக்கிறேன், என்ன வாசிக்கிறேன் என்பதுபற்றிய விவரங்களில் அவர் அக்கறைகொள்ளமாட்டார்.  இந்நிலையில் குறைகளுக்கு இடமின்றி எனது உச்சரிப்பு பின்னர்   ஒலிம்போஸ்(Olimpos) துன்பவியல் நாடகப் பாத்திர வசனத்தின் பெருமைக்கும் உதவியது.

ஏறக்குறைய இந்த இரகசிய ஏற்பாடுகள் எனக்கும் பேரரசருக்குமிடையில் நெருக்கத்திற்கு வித்திட்டதோடு,  நம்பிக்கையையும்  பெற்றுத்தந்தன, ஆனால்  என்மீதான பழைய விரோதம் அவரிடம் குறையாமல் இருந்தது. எனினும் தம்மோடு இரத்தப்பந்தம்கொண்ட இளைஞனொருவன்,  இராச்சிய விவகாரங்களில் போதிய அனுபவம் இல்லையென்கிறபோதும் தாம் நினைத்தது போலவே அரசாங்க சேவையில் ஆர்வம்காட்ட தொடங்கியிருப்பதும், எதிர்காலத்தில் தமதிடத்திலிருந்து கடமையைத்  தொடர இருப்பதையும் நினைத்து, வயதான மன்னர் அடைந்த மகிழ்ச்சி, தற்காலிமாக என்மீதுகொண்டிருந்த வெறுப்பை விலக்கிக் கொண்டது. இம்மகிழ்ச்சி கணிசமாக  மன்னரிடம் வெளிப்பட்டது சர்மிசெகெதுசா37 போர்க்களத்தில், அவ்வுற்சாகம்  அடுக்கடுக்கான பல  அவநம்பிக்கைகளை அப்போது உடைத்திருந்தது ஒருவேளை அதற்கு காரணமாக இருக்கலாம். மேலும், நான் என்ன நினைக்கிறேன் எனில், பெரும் மனவேதனையை  அளித்த சச்சரவுகள், எங்கள் மனப்பாங்கிற்கு இடையிலான வேறுபாடுகள் என்பவற்றைத்  தவிர, மன்னர் முதிர்ந்தவயதும், அவ்வயது மனிதர்களுக்கென்றுள்ள மனப்போக்குங்கூட என்னைவெறுக்க போதுமானவை, இருந்தும் இவற்றுக்கும் மேலாக வெறுப்பு அவரிடம் அழுந்த  காலூன்றிக்கொள்ள ஏதோ ஒருகாரணம் இருக்கவேண்டும். மிகவும் இன்றியமையாத ஊழியர்களைக்கூட அரசர் தமது உள்ளூணர்வு சொல்வதைக் கேட்டு வெறுத்தார். எனது விஷயத்தில் பணியில் அர்ப்பணிப்பும்  ஒழுங்கின்மையும் கலந்தே இருந்தன, அரசர் இதனை நன்றாகப் புரிந்துகொண்டிருந்தார். செய்யும்பணியில் எவ்வித குற்றமும் காணமுடியாத வகையில் எனது பணியை நிறைவேற்றவும் செய்தேன், அதுவே என்னை சந்தேகிக்கவும் காரணமாக அமைந்து, என்னிடம் அவருக்கிருந்த மனக்கசப்பை வெளிப்படையாக அறிய நேர்ந்தது, எனது சேவையின் அவசியம் கருதி, மன்னர் திராயானுடைய உறவின் முறை பேர்த்தியை எனக்கு மணம் செய்துவைக்கும் ஏற்பாட்டில் மகாராணி  இறங்கிய போது.  இல்லறத்தை நடத்துவதற்குரிய நற்பண்புகள் எனக்கு இல்லையெனத் தெரிவித்து மன்னர் அதனைக் கடுமையாக எதிர்த்தார், மணப்பெண் பதின்வயது சிறுமி என்பதில் ஆரம்பித்து கடந்தகாலத்தில் அரசாங்க கருவூலத்தில் நான் பட்டிருந்த கடன்கள் வரை, எனது திருமணத்தை எதிர்ப்பதற்கு காரணங்களாக அவரிடம் இருந்தன. பேரரசி இத்திருமணத்தை நடத்தியே தீருவதென உறுதியாக இருந்தார்;  இத்தூண்டிலில் நானும் சிக்கினேன்; மணப்பெண் சபீன்,  பதின்வயது சிறுமி என்கிறபோதும் ஓரளவு வசீகரமாகவே இருந்தாள். ஏறக்குறைய தொடர்ந்து நான் வெளியில் தங்க நேர்ந்ததால் இம்மணவாழ்க்கை  ஓஹோவென்றில்லை, அதனால் எரிச்சலுற்றேன், உபத்திரவத்திற்கும் ஆளானேன்,  இன்றும் அதை நினைத்துப்பார்க்க கடினமாக உள்ளது, இருந்தும் தனது இலட்சியத்தில் குறியாகவிருந்த  இருபத்தெட்டுவயது இளைஞனுக்கு அன்றது தோல்விக்குரிய விஷயமே அல்ல.

தொடரும்……

———————————————————————————————————————–

பிற்குறிப்புகள்

35. பட்டாவியா (les Bataves) பண்டைய ரோமானிய பேரரசு எல்லையில் வாழ்ந்த மக்கள், இன்றைய நெதர்லாந்தைச் சேர்ந்தவ்ர்கள். 

36. மினர்வியன் லெஜியன்(Légion Minervienne) : ஜெர்மானிய பழங்குடிமக்களுக்கு எதிராகப் போரிட பேரரசர் டொமீத்தியன் திரட்டிய படைப்பிரிவு. பின்னர் திராயான் டேசியர்களுக்கு எதிராக இப்படைபிரிவை உபயோக்ப்படுத்திக்கொண்டார். 

37. சர்மிசெகெட்டூசா(Sarmizégthuse) : பண்டைய கிரேக்கத்திற்குட்பட்ட டேஸ் மாகாண தலை நகரம். 

—————————————————————————————————————————-

Series Navigation<< அதிரியன் நினைவுகள்  – 7அதிரியன் நினைவுகள் – 9 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.