வோல்காவின் வால்

“நீ ஒரு கோழை”   என்றாள்  வோல்கா, என்னை உற்றுப் பார்த்தபடி.  நான் அவள் பார்வையைத் தவிர்த்தேன். “நான் கோழையாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் நிஜமாகவே  அவனைக் கொல்ல வேண்டும் என்கிறாயா? எனக்கு என்னமோ அது சரியாகப் படவில்லை”.   “பெட்ரோ சொல்வதும் சரி தான். முப்பது வருடம் முன்னால்’ யாரோ செய்த பாவத்திற்கு எதற்காக இவனைக் கொல்ல வேண்டும்?” என்றார் கிரில் தாத்தா.  “என்ன தாத்தா! உமக்கு மூன்று வயதாகி விட்டதும் புத்தி மழுங்கி விட்டதா?  நமக்கு பத்து தலைமுறை முன்பு நடந்த விஷயமானலும்  நாம் கேட்டு கேட்டு மறக்காத கொடூரம்  அல்லவா  அந்த பயங்கரம்?”.  கண்ணை மூடிக்கொண்டாள் வோல்கா. நாங்கள்  இருவரும்  அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. எங்களுக்கு  நன்றாகத் தெரியும்.  சாதாரணமாகவே வோல்கா ஒன்று முடிவெடுத்தால் அதை மாற்றுவது கடினம்.  இந்த மாதிரி ஒரு தலைமுறை தலைமுறையாக ஆழமாக வேரூன்றிய ஒரு வேதனைக்கு பழி வாங்கும் திட்டத்தை வோல்கா அவ்வளவு சுலபமாக மாற்ற மாட்டாள்.

நான் மறுபடியும் வோல்காவைப் பார்த்தேன்.  அவள் மூடிய கண்களின் ஓரத்தில் கண்ணீர்த் துளி. தலையை லேசாக சிலிர்த்து கொண்டாள்.  வெள்ளையும் கருப்புமான உடல். நீள வால்.  வோல்காவின் வால் ஆடி நான் எப்பொழுதும் பார்த்ததே இல்லை.எங்கள் நாய்கள் கூட்டத்திலே அவள் ஒரு தனி அழகு. இப்போது இங்கே நங்கள் ஒரு இரண்டாயிரம் பேர் இருக்கிறோம். எல்லோரும் பார்ப்பதற்கு சுமாராக இருப்போம். ஆனால் நான்கு  வருடம் வாழ்ந்தாலே அதிகம். 

எங்கோ ஒரு ஊளை சத்தம் கேட்டது, கதை நேரத்தை அறிவிக்க.  எங்கள் நாய்கள்  கூட்டம் மெதுவாகக் கூடியது.    எங்களுக்குள் பல கூட்டங்கள் உண்டு. எல்லோரும் தனி தனியாக இருந்தாலும் எங்களை இணைப்பது எங்கள் கதை. தினமும் அத்தனை கூட்டமும் ஒரு முறையாவது அந்த கதையே கேட்டே ஆகா வேண்டும்.  எங்கள் கூட்டத்திற்காக  முப்பது வருடம் முந்தைய கதையை சொல்ல ஆரம்பித்தார், கிரில் தாத்தா.

” ஒரே ஒரு ஊர். அதன் பெயர் பிரிபியட். பசுமையான பைன் மரங்களடர்ந்த ஒரு கண்ணுக்கு இனிய ஒரு சிறிய நகரம். பிரிபியட் ஆறு அதன் அழகுக்கு  அழகூட்டியது. நம் முன்னோர் நாய்களும், மனித நண்பர்களும்  இணைந்து வாழ்ந்த ஒரு பூலோக  சொர்கம்.  பெரும்பாலான நமது நண்பர்கள்  பொழுது  கழிக்க வேலைக்கு சென்றது அருகில் இருக்கும் செர்னோபில் அணு உலையில்.  ஒரு நாள் அணு உலையில் ஒரு பெரும் விபத்து. உருகியது யுரேனியம்.  மூண்டது பெரும் தீ. கசிந்தது அணுக்  கதிர் வீச்சு. மனித நண்பர்கள் மத்தியில் கூச்சலும், குழப்பமும். சிலர் தீயினால் மடிந்தனர்.  அதை விடக்  கொடுமை  பலர் கதிர் வீச்சால் பாதிக்கப் பட்டு  துடி துடித்து மாண்டனர்.  ஐம்பதாயிரம் மக்கள் வசித்த அந்த ஊரின் அத்தனை இல்லங்களையும் காலி செய்யும்படிஅன்றைய அரசாங்கம் ஆணையிட்டது  .  ஆயிரத்து இரு நூறு பேருந்துகள் அணி வகுத்தன நமது ஊருக்கு.”

தாத்தா கண்ணை மூடிக்கொண்டு ஒரு கவிதையாக உணர்ச்சி  இல்லாமல் இதுவரை சொன்னார்.  இந்த இடத்தில்  மட்டும் எப்போதும் நிறுத்துவார். நா சற்றே  தழுதழுக்கும்.  

“பேருந்து வந்த பின் தான் தெரிந்தது  மானிட புத்தி. நம் முன்னோர்களை, தம் கூடவே வாழ்ந்தவர்களை, கூட்டி செல்லவே  இல்லை.  ஈவு இரக்கம் இல்லாமல், நன்றியில்லாமல் சுய நலத்த்துடன் தங்கள் மக்களை மட்டும் பேருந்துகளில் ஏறிச்சென்றனர்.பல நாய்கள் பேருந்தின் பின்னாலயே ஓடின. மனிதனின் சுயநலம் பற்றி அப்போதும் அவர்களுக்கு விளங்கவில்லை.”

“அதை விட கொடுமை பின்னால் வந்தது.  அரசாங்க  காவலர்கள் நம்மை  வேட்டையாட துப்பாக்கியுடன் வந்தனர் கண்ணில் பட்ட எந்த விலங்கையும் அவர்கள் விடவில்லை.  அதிஷ்ட வசமாக ஒரு சிலர் மட்டும் தப்பி விட்டனர். அவர்கள் தான்  தாம்  மதிப்பிற்குரிய நமது முன்னோர்கள் .  அவர்களின் பேர்  சொல்லும்  சந்ததியினர் தான் நாம்.  நம் முன்னோர்கள்  தியாகத்தை  ஒரு போதும்  மறக்க கூடாது!

வாழ்க நம் முன்னோர்! வாழ்க நாய்க்  குலம்!!”

தாத்தா எப்போதையும் விட இன்று கூடவே உணர்ச்சி வசப்படுவதாக எனக்கு தோன்றியது. அவர் முடிப்பதற்காகவே காத்திருந்த மாதிரி வோல்கா எழுந்தாள்.  

“நம் முன்னோர்களை நினைத்துக்கொண்டு  தினமும் அழுவதில் ஒரு பலனும் இல்லை.  அவர்களுக்கு செய்யும் கைம்மாறு பழிக்கு பழி. இரத்தத்திற்கு  இரத்தம்.  நாளை  இரவு கொல்வோம்  ஒரு காவலனை” என்று குலைத்தாள் வோல்கா.  அவள் குலைப்பு  ஒரு கர்ஜனை போல இருந்தது.

காவலன்  என வோல்கா  குறிப்பிட்டது  செர்னோபில் அணுஉலையை  இரவும் பகலும் காக்கும் காவல் படையை.  செர்னோபில் விபத்திற்கு பின் எல்லா மக்கள் வசிப்பிடமும் காலி செய்யப்  பட்டன. மனித நடமாட்டம் என்றால் இந்த  காவலர்கள் மட்டுமே.  சில காவலர்கள் இன்னமும் எங்கள் நாய்கள் கூட்டத்துடன் நட்புடனே இருக்கிறார்கள். நாங்கள்  தான்  அவ்வளவு நெருங்குவது இல்லை.  அப்போது  அப்போது  அவர்கள் போட்ட ரொட்டித் துண்டங்களை நான் தின்றது என்னமோ  நிஜம்  தான்.

“என்ன பகல் கனவு. அவர்கள்  போடும் ரொட்டி  இனிமேல் கிடைக்காது என்ற கவலையா?”, வோல்காவின்  குரல் என்னை உலுக்கியது.  நிஜமாகவே நான் அரண்டு விட்டேன். வோல்காவிற்கு ஏதாவது  மந்திர சக்தி ஏதாவது இருக்கிறதா என்ற சந்தேகம் வந்தது .  “அதெல்லாம் ஒன்றுமில்லை, வோல்கா. உன் திட்டம் தான் என்ன?”.

“இந்த  முட்டாள் மனிதர்களை வீழ்த்த ஒன்றும் பெரிய திட்டம் தேவையில்லை. அவர்கள் ஒரு பலஹீனமான பிறவிகள். மோப்ப  சக்தியே இல்லாமல்  ஒரு பிராணி எப்படி வாழ்கிறது என்பது இன்று வரை எனக்கு புரியாத ஒரு விஷயம். நம்மை மாதிரி ஓடக்கூட முடியாது. அவர்களின் துப்பாக்கி  மட்டும் கையில் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றாள்  வோல்கா. “எப்படி? நீ  எத்தனை பேரைக் கொல்லப்  போகிறாய்?”.  “நான்  கொல்லப்போவது  ஒருவனை தான்.  அது யாராக இருந்தாலும் எனக்கு கவலை இலலை.  நமது கோபம் அவர்களுக்கு தெரிய வேண்டும்.  அவர்கள் செய்த பாவத்தின்  பலனை அவர்கள் அனுபவிக்க  வேண்டும்”.

வோல்கா சிந்தனையில் ஆழ்ந்தாள். “ஒன்று செய்யலாம்.  நாம் நாடியாவை முதலில் அனுப்பலாம்.  அந்த  முட்டாள் அவளுடன் விளையாடும் போது துப்பாக்கியை நீ நகர்த்தி விடு.  நாங்கள்  மூன்று பேர் போதும், அவனைப் பரலோகம் அனுப்ப!”.  எனக்கு தூக்கி வாரிப் போட்டது. “என்ன உளறுகிறாய், வோல்கா? நாடியா ஒரு குட்டி.  அவள் பிறந்து நான்கு  வாரங்கள்  தான்  ஆகிறது “.  

“அதனால் என்ன?  மனிதர்களுக்கு குட்டி நாய்கள் மட்டும் தான் பிடிக்கும். கொஞ்சம் வளர்ந்தவுடன் விட்டு விடுவார்களே ரோட்டிலோ, இல்லை காப்பகங்களிலோ. காப்பக நாய்கள் பலதும் போவது சொர்க்கத்திற்கே!  பேசாமல் காப்பகத்தைக் கொல்லகம்  என்று மாற்றி விடலாம்”.  நான் வாய் அடைத்து போனேன்.  இந்த  உக்ரைன் காட்டுக்குள் இருந்து  வோல்காவிற்கு உலக நடப்பு எப்படித் தெரியும் என்பது எனக்குப் புரியாத புதிர். 

நாங்கள்  என்ன தான் திட்டத்தை  இரகசியமாக வைத்திருந்தாலும், அது  கசிந்து விட்டது.   பெரும்பான்மை நாய்களுக்கு இந்த திட்டத்தின் தாக்கம் தெரியவில்லை. அவர்களின் கவனம் எப்போதும் அன்றாட உணவு தான்.  சில அறிவு ஜீவிகளுக்கு  திட்டம் புரிந்தது. ஆனால்  சரியா தவறா   என்று முடிவு எடுக்க இயலவில்லை. ஒரு சிறு பான்மையினருக்கு திட்டம் கொஞ்சம் கூட பிடிக்க வில்லை. ஏனென்றால் பலருக்கு அந்த  காவலர்களுடன் நல்ல நட்பு.  மனிதர்  போட்ட உணவை  உண்டு  துரோகம் செய்வது கண்டிப்பாக நாய்க்குணம் இல்லை  என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து இருந்தது.ஆனால்  வோல்காவை எதிர்த்துப் பேசும் தைரியம் யாருக்கும் இல்லை.  ஆனால் அத்தனை  குழுக்களும் விழித்திருந்து உறு  துணையாக இருப்பது என்று முடிவு எடுத்தன.  

வோல்கா சம்பவம் நடத்தக்  குறித்த நேரம் இரவு  11 மணி.  நாங்கள் ஆறு பேர் தயாராக இருந்தோம்.  வோல்கா, நாடியா, நாடியாவின்  அம்மா,  அலெக்ஸ், காரின் மற்றும் நான்.  கிரில் தாத்தா எப்போதும் போல உறங்கச்  சென்று விட்டார்.  ஆனால்  அத்தனை நாய்களும்  விழித்திருந்து  எங்கள் பின்னால்  வருவதாக எனக்கு தோன்றியது.  மொத்தமாக ஒரு இரு நூறு  காவலர்கள்  அணு உலையை  ரோந்து செய்வார்கள்.   ஆனால்  வெளியே இருப்பவர்களுக்கு இடையே நிறைய இடைவெளி  இருப்பதால்  ஒருவனை மட்டும் அணுகுவது சுலபம் தான். 

“அதோ பின் கதவின்  பக்கம்  இருக்கிறானே, அவன் தான்” என்றாள்  வோல்கா.   அவனை நன்றாகப் பார்த்தேன்.  போன வாரம் தான் எனக்கு  ரொட்டி துண்டு போட்டிருந்தான்.  “அவனா, வேண்டாமே” என்று இழுத்தேன். நல்ல வேளை நான் முணுமுணுத்தது  வோல்காவின்  காதில் விழவில்லை.  “எல்லாம் தயாரா? நாடியா முதலில் போகட்டும் “.   ” இரு. கொஞ்சம் பொறு” என்றான் அலெக்ஸ்.  அவன் காதுகள் விறைத்து  கொண்டன.  இப்போது எங்களுக்கும் கேட்டது.   மனிதர்கள். சத்தமில்லாமல் வருவதாக நினைத்துக் கொண்டு வருகின்றனர்.  நாங்கள் காவலர்களைப்  பார்த்தோம்.  எல்லாரும் அரைத் தூக்கத்தில் இருந்தனர்.  எங்களுக்கு புரிந்து விட்டது. நாங்கள் செய்ய  நினைத்த  வேலையை வேறு சிலர் செய்ய போகிறார்கள்.

“ரஷ்யர்கள்” என்றாள்   வோல்கா.  அவள் முகம் தெளிவடைந்து இருந்தது.  முன்பு இருந்த  இறுக்கம் இல்லை. “நாம் யார் என்பதை மனிதர்களுக்குக் காட்டும் நேரம் வந்து விட்டது.  நாம் காக்க வேண்டியது காவலர்களை. தாக்க வேண்டியது ரஷ்யர்களை”  என்று அருகினில்  இருந்த ஒரு பாறை மீதேறி காடே அதிரும்படி குலைத்தாள் .  அவள் குலைப்பு  ஒரு போர் முழக்கம் போல எங்கள் அதனை போரையும் உலுக்கியது.  எங்கள் மொத்த  கூட்டமும் குலைக்க  ஆரம்பித்தோம்.  எங்கள் குலைப்பு  அரை தூக்கத்திலிருந்த அத்தனை காவலர்களையும்  எழுப்பி விட்டது. அவர்களுக்கு ஏதோ அசாதாரணமான ஏதோ ஒன்று  நடக்கிறது அன்று புரிந்து விட்டது.   எல்லோரும் துப்பாக்கியுடன் தயாராகி  விட்டனர். நாங்கள்  எல்லோரும்  அவர்களுக்கு முன்னால்  ஒரு அரணாக  நின்றோம்.   நான் வோல்காவைப் பார்த்தேன்.  முதல் முறையாக அவள் வால் ஆடிக்  கொண்டு இருந்தது.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.