வயோதிகம்

தமிழாக்கம்: கா. சரவணன்

யுஸெல்கோவ் சிவில் கவுன்சிலர் அந்தஸ்தில் இருக்கும் ஒரு கட்டிடக் கலைஞன். மயானத்தில் இருந்த தேவாலயத்தைச் புனர் நிர்மாணம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதன் பேரில் அவன் தன் சொந்த ஊருக்கு வந்திருந்தான். அவன் பிறந்தது அந்த ஊரில்தான்; பள்ளிக்குச் சென்றது அங்கேதான்; வளர்ந்து பின்னர் திருமணம் செய்து கொண்டதும் அங்கேதான். இருப்பினும் ரயிலில் இருந்து இறங்கிய போது அந்த ஊரை அடையாளம் கண்டு கொள்ள அவனுக்கு மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. எல்லாம் மாறிப் போயிருந்தன….பதினெட்டு வருடங்களுக்கு முன்பு அவன் பீட்டர்ஸ்பெர்கிற்குக் குடிபெயர்ந்த சமயம்— குறிப்பிட்டு சொல்வதாயிருந்தால் புகைவண்டி நிலையம் இருந்த இடத்தில்தான் அந்தக் காலத்தில் தெருவில் திரியும் சிறுவர்கள் மலைப்பெருச்சாளிகளைக் பிடித்து விளையாடுவது வழக்கம். இப்போது அங்கிருந்த பிரதானத் தெருவொன்றுக்குள் ஒருவர் சென்றால் நான்கு அடுக்கு  மாடிகளைக்கொண்ட உணவகம் ஒன்று அவருக்கெதிரே நின்று கொண்டிருந்தது…அந்த நாட்களில் அந்த இடத்தில் பார்ப்பதற்கு அசிங்கமான, சாம்பல் நிறத்தில் வேலியொன்று இருந்தது. வேலிகளாகட்டும்; வீடுகளாகட்டும் வேறு எதுவுமே அங்கிருந்த மக்கள் மாறியதைப் போல் மாறியிருக்கவில்லை.  அவனுடைய நினைவில் இருந்த மனிதர்களில் பாதிக்கு மேல் இறந்து போய்விட்டதாகவும், பலர் பஞ்சப்பராரிகளாக ஆகிவிட்டதாகவும், மறக்கப்பட்டுவிட்டதாகவும் உணவகத்தின் சேவகர் மூலமாக அவன் அறிந்து கொண்டான்.

”உனக்கு யுஸெல்கோவை ஞாபகம் இருக்கிறதா?” என்று தன்னைப் பற்றி அவன் அந்த வயதான உணவகச் சேவகனிடம் கேட்டான். ”தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்ட கட்டிடக்கலைஞன் யுஸெல்கோவ். ஸ்வியெரபெயெவ்ஸ்கி தெருவில் அவனுக்கு ஒரு வீடும் கூட இருந்ததே…உனக்கு கட்டாயம் ஞாபகம் இருக்கும்.”

”எனக்கு ஞாபகம் இல்லையே ஐயா” 

”அது எப்படி உனக்கு ஞாபகம் இல்லாமல் இருக்கும்? அந்த வழக்கு ஏகத்துக்கும் சர்ச்சையைக் கிளப்பியிருந்ததே! காரோட்டிகளுக்குக்கூட அது பற்றி தெரியுமே! இப்போது நன்றாகச் ஞாபகபடுத்திப்பார்! வழக்கறிஞன் ஷாப்கின் இருக்கிறானே….அவன்தான் எனக்கு ஒருவழியாக விவாகரத்துப் பெற்றுத் தந்தான். அந்த ராஸ்கல்…மனசாட்சியே இல்லாத லாட்டரி ஏமாற்றுக்காரன்…மன்றத்தில்  ஒரு நாள் அடி வாங்கினானே அவன்தான்”

”இவான் நிக்கோலைட்ச்”

”ஆமாம்…ஆமாம்…நல்லது….அவன் உயிரோடு இருக்கிறானா அல்லது செத்து விட்டானா?”

”கடவுள் அருளால் உயிரோடுதான் இருக்கிறான் ஐயா. தற்போது அவன் ஓர் ஆவண எழுத்தர்; தனியாக அலுவலகமும் உண்டு. இப்போது பணக்காரனாகியிருக்கிறான். கிர்பிட்சினி தெருவில் அவனுக்கு இரு வீடுகளும் உண்டு….அவனுடைய மகளுக்குக் கொஞ்ச நாள்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.”

யுஸெல்கோவ் அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தான்; கொஞ்ச நேரம் சிந்தனை செய்துவிட்டு ஷாப்கினை அவனுடைய அலுவலகத்தில் சென்று சந்திப்பதென சலிப்பாக முடிவெடுத்துக் கொண்டான். உணவகத்தை விட்டு வெளியே வந்து கிர்பிட்சினி தெருவை நோக்கி இலக்கற்ற மெது நடையில் அவன் சென்ற போது நண்பகலாகியிருந்தது. ஷாப்கினை அவனுடைய அலுவலகத்தில் சந்தித்தான்; அவனை அடையாளம் கண்டுகொள்ளவே சிரமமாக இருந்தது. நல்ல உடலுடனும் துடுக்குத்தனமானவனாகவும் குடிபோதையேறிய முகத்துடனும் திறமை மிக்க ஒரு வழக்கறிஞனாக நடந்து திரிந்த ஷாப்கின் தற்போது அமைதியான, நரைத்த தலையுடன் அடங்கி ஒடுங்கிய ஒரு கிழவனாக மாறிப்போயிருந்தான்.

”என்னை ஞாபகம் இருக்கிறதா? என்னை மறந்து விட்டாயா என்ன?” என்று ஆரம்பித்தான் யுஸெல்கோவ். ”நான் உன்னுடைய பழைய வாடிக்கையாளன் யுஸெல்கோவ்”

”யுஸெல்கோவ்! எந்த யுஸெல்கோவ்? ஆ!!” ஷாப்கின் நினைவுபடுத்தி பின் அடையாளம் கண்டுகொண்டான். பழைய நினைவுகள் அவனை ஆட்கொண்டன. பிறகு ஆச்சரிய விசாரிப்புகளும், கேள்விகளும், ஞாபக மீட்சிகளும் தாரையாக அதனைத் தொடர்ந்தன.

”இது ஆச்சரியமானது. எதிர்பார்க்காத ஒன்று” என்று விகாரமான சிரிப்புடன் சொன்னான் ஷாப்கின். ”உனக்கு என்ன வேண்டும்? ஷாம்பெயின் பிடிக்குமா? ஒருவேளை உனக்கு கிளிஞ்சல்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அன்புக்குரிய நண்பா! உன்னிடமிருந்து நான் ஏராளமாகப் பெற்றிருக்கிறேன்; சூழலுக்குத் தகுந்த ஒன்றை என்னால் தர முடியாது என்பதில்லை.”

”உன்னைச் சிரமப்படுத்திக்கொள்ளாதே” என்றான் யுஸெல்கோவ். ” ஒதுக்குவதற்கு என்னிடம் நேரமில்லை; நான் உடனடியாக கல்லறை சென்று தேவாலயத்தைச் சோதனையிட வேண்டும். அதன் புனர் நிர்மாணிப்பை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன்”

”அது வணிகம். கொஞ்சம் சிற்றுண்டியும் மதுவும் அருந்திவிட்டு இரண்டு பேரும் ஒன்றாகவே செல்லலாம். என்னிடம் குதிரைகள் உண்டு. உன்னை நான் அங்கே அழைத்துச்சென்று கல்லறைக் காப்பாளரிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன். எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன். அது சரி… என் தேவனே…ஏன் என்னைக்கண்டு பயந்தவனைப்போல் காணப்படுகிறாய்? என்னை உன்னிடம் இருந்து தூரத்தில் வைத்திருக்கிறாய்?. கொஞ்சம் பக்கத்தில் வந்து உட்கார். இப்போதெல்லாம் என்னைப் பார்த்துப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு காலத்தில் அது உண்மைதான்…நான் ஒரு வஞ்சகனாக, நாயைக் காட்டிலும் கேவலமானவனாகத்தான் இருந்தேன். என்னிடன் வருவதற்கு எவருக்கும் தைரியம் இருந்ததில்லை. ஆனால் தற்போது நான் நீரைக் காட்டிலும் நிலையானவன்; புற்களைக் காட்டிலும் பணிவானவன். நான் வயதானவனாகி விட்டேன்; சம்சாரியாகி விட்டேன்; எனக்கு குழந்தைகள் இருக்கின்றனர்; இப்போது இருப்பது நான் இறந்துபோய் விட்ட காலம்”

நண்பர்கள் மதிய உணவை முடித்து கொண்டனர்; மது அருந்தினர்; இரண்டு குதிரைகளோடு நகரை விட்டு வெளியே சென்று கல்லறைத் தோட்டத்தை நோக்கி பயணித்தனர்.

”ஆமாம்……அவையெல்லாம் அப்படிப்பட்ட காலம்தான்…..ஷாப்கின் நினைவுகூர்ந்து கொண்டே பனிச்சறுக்கு வண்டியில் உட்கார்ந்தான். ”அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் உன்னால் நம்ப முடியாதுதான். உன்னுடைய மனைவியை எப்படி நீ விவாகரத்து செய்தாய் என்பது உனக்கு ஞாபகம் இருக்கிறதா?  ஏறக்குறைய இருபது வருடங்கள் ஓடி விட்டன. நீ எல்லாவற்றையும் மறந்து விட்டாய் என்று அடித்துச் சொல்வேன். ஆனால் உன்னை நேற்றுதான் விவாகரத்து செய்தது போல் எனக்கு நினைவிருக்கிறது; கடவுளே! அதன் பொருட்டு எனக்குத்தான் எத்தனை கவலைகள் இருந்தன? நான் ஒரு புத்திக் கூர்மையுள்ளவனாகவும் தந்திரமாக சூழ்ச்சிகள் அறிந்தவனாகவும் அதே சமயம் விரக்தி மேலிட்ட மனிதனாகவும் இருந்தேன்…சில நேரம் குறுக்குவழியில் சில வியாபாரங்களை செய்ய குறிப்பாக பணம் அதிகமாகப் ஈட்டித் தருகின்ற வியாபாரங்களைக் கைக்கொள்ளுவதற்கு நேரம் தேடிக்கொண்டு இருப்பேன்….உதாரணத்திற்கு உன்னுடைய வழக்கு.. அந்த சமயம் நீ எனக்கு எவ்வளவு தந்தாய்? ஐந்து அல்லது ஆறு ஆயிரங்கள் இருக்குமா!!! தொல்லைகளைத் தாங்கிக் கொள்ளவதற்குத் தகுதியான பணம்தான்…இல்லையா? உன் மனைவி மிஹைலோவ்னா தன்மானமுள்ளவளாக, கர்வமிக்கவளாக வணிகக் குடும்பத்திலிருந்து வந்தவளாக இருந்த போதினும் நீ எல்லாவற்றையும் என் கைகளில் தந்து என்னால் இயன்ற மட்டும் சிறப்பாகச் செய்யச் சொல்லி விட்டு பீட்டர்ஸ்பெர்கிற்குப் போய்விட்டாய். குற்றத்தைத் தானே ஏற்றுக்கொள்ளும்படிச் சொல்லி  அவளுக்குப் பணத்தைத் தருவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது; அசர வைக்கும் அளவுக்கு கடினமாக இருந்தது. அவளைப் சாந்தப் படுத்துவதற்காக நான் அவ்வப்போது செல்வதுண்டு….என்னைப் பார்த்ததுமே அவள் தன் வேலைக்காரியைக் கூப்பிட்டுச் சொல்வாள்: “மாஷா…இந்த போக்கிரியை உள்ளே விடக் கூடாதென்று நான் சொன்னேனா இல்லையா”. இதனால் ஒன்றிருக்க ஒன்றை நான் முயற்சி செய்ய வேண்டியிருந்தது…..அவளுக்கு நான் கடிதங்கள் எழுதுவதுண்டு. சந்திப்பதற்குக் கூட வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ள திட்டமிட்டேன்… ஒரு பயனும் இல்லை. மூன்றாம் நபரின் மூலமாகவே நான் செயல்பட வேண்டியிருந்தது. அவளுடன் எனக்கு நீண்ட காலமாக சச்சரவுகள் இருந்து கொண்டேதானிருந்தன. நீ பத்தாயிரம் கொடுப்பதற்குச்  சம்மதித்ததற்குப் பின்புதான் அவள் வளைந்தாள்…பத்தாயிரத்தை ஒதுக்க அவளுக்கு மனமில்லை. அவளால் மறுக்க முடியவில்லை….அழுதாள்…..என் முகத்தில் காறி உமிழ்ந்தாள். ஆனால் இறுதியில் ஒப்புக்கொண்டாள். குற்றத்தை தன் மீது ஏற்றுக் கொண்டாள்..”

”அவள் என்னிடமிருந்து பதினைந்தாயிரத்தைப் பெற்றதாக அல்லவா நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். பத்தாயிரம் அல்ல” என்றான் யுஸெல்கோவ்.

”ஆமாம்…ஆமாம்…பதினைந்துதான்…நான் தவறாகச் சொல்லி விட்டேன்” என்று குழம்பியபடி சொன்னான் ஷாப்கின். ”எல்லாம் செய்து முடிந்து விட்டது. இனி மறைப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. அவளுக்குப் பத்தாயிரம் கொடுத்தேன். மீதி ஐந்தை நானே பதுக்கி வைத்துக்கொண்டேன். உங்கள் இரண்டு பேரையும் நான் ஏமாற்றிவிட்டேன்…எல்லாம் செய்து முடிந்தாகி விட்டது. வெட்கப் படுவதில் ஒரு பயனும் இருக்கப் போவதில்லை. மேலும், போரிஸ் பெட்ரோவிட்ச்! உண்மையாக நீயே உணர்ந்து சொல்…எனக்குப் பணத்தை தண்ணீராக செலவழிக்க வல்ல மனிதனாக நீ இருந்ததில்லையா என்ன? நீ ஒரு பணக்காரனாக இருந்தாய். நீ விரும்பிய எல்லாம் உன்னிடம் இருந்தன. உன்னுடைய திருமணம் ஒரு சோம்பேறித்தனமான சபலம். அதைப் போலத்தான் உன்னுடைய விவாகரத்தும். நீ அதிக அளவில் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தாய். ஓர் ஒப்பந்தத்தில் நீ இருபதாயிரம் அள்ளிக் கொண்டு போனது எனக்கு ஞாபகம் உள்ளது. உன்னை மொட்டையடிக்காமல் நான் யாரைப் போய் மொட்டையடிப்பது? உன்னைப்பார்த்து பொறாமைப்பட்டேன் என்பதை நான் ஒப்புக்கொண்டேயாக வேண்டும். அவர்கள் தர முயன்ற எல்லாவற்றையும் நீ பிடுங்கி வைத்துக்கொண்டால்…ஒரு ரூபிளுக்காக அவர்கள் என்னை நையப் புடைத்தபோது…மன்றத்தில் என் முகத்தில் அறைந்தபோது…சரி விட்டுத்  தொலை…அதைப்போய் ஏன் நினைத்துப்பார்க்க வேண்டும்? அதை மறந்து விடுவதற்கு இதுதான் தக்க சமயம்..”

”தயவு செய்து எனக்குச் சொல்…அதற்குப் பிறகு சோஃபியா மிஹைலோவ்னா எப்படி சமாளித்தாள்?”

”அந்தப் பத்தாயிரத்துடன்தானே? மிகவும் கஷ்டப்பட்டாள். அது என்னவென்று கடவுளுக்குத்தான் தெரியும்- அவள் தன்னிலை இழந்தவளானாள். ஒருவேளை, அல்லது தன் சுய கவுரவத்தை விற்றுவிட்டதற்காக அவளுடைய கர்வமும் மனசாட்சியும் அவளைக் கிழித்தெறிந்து இருக்கலாம். அல்லது உன்னை மிகவும் விரும்பியவளாக இருந்திருக்கலாம்; ஆனால் உனக்கொன்று தெரிந்தாக வேண்டும்…அவள் குடிக்கு அடிமையாகி விட்டாள்…குடிபோதை, வீண்செலவு, சிற்றின்ப ஒழுக்கக்கேடு…அதிகாரிகளுடன் விடுதிக்குச் செல்லும் போது கூட ‘போர்ட்’ ரக லேசான மதுவுடன் திருப்தியடைய மாட்டாள். மிகவும் செறிவான பிராந்தி மற்றும் மட்ட ரக மசாலாக்கள் அவளை வாயடைக்கத் தேவையாக இருந்தன.”

”ஆமாம், அவள் விசித்திரமானவள்தான்…அவளிடமிருந்து பொறுமைகாக்க வேண்டி நான் பொறுத்துக்கொண்ட விஷயங்கள் பல. சில நேரம் ஏதாவது ஒன்றைப்பற்றிக்கொண்டு குற்றம் காண்பாள். அதற்குப் பிறகு அதன் பொருட்டு வலிப்பு நோய் வந்தவளைப்போல் நடந்து கொள்வாள்…சரி. அதற்குப் பிறகு என்ன நடந்தது?”

”ஒரு வாரம் கழிந்தது. பிறகு இன்னொரு வாரமும் கழிந்தது…நான் என் வீட்டில் உட்கார்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்தேன்; அந்த சமயம் கதவு திறந்தது; அவள் உள்ளே நுழைந்தாள்…குடித்திருந்தாள். ”இந்தா எடுத்துக்கொள் உன்னுடைய சபிக்கப்பட்ட பணத்தை” என்று சொல்லிக்கொண்டு சுருளாகக் கட்டியிருந்த பண நோட்டுகளை என் முகத்தில் விட்டெறிந்தாள். அவளால் அந்தப் பணத்தை வைத்துக்கொள்ள முடியவில்லை. நான் அந்தப் பணத்தைப் பொறுக்கிக் கொண்டு எண்ண ஆரம்பித்தேன். பத்தாயிரத்திற்கு ஐநூறு குறைவாக இருந்தது. ஐநூறை மட்டும் வைத்துக்கொண்டுதான் அவள் இதுவரை சமாளித்திருக்கிறாள்.”

”பணத்தையெல்லாம் எங்கே வைத்தாய்?”

”அது எல்லாம் பழங்கதை; அதை மறைப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. கண்டிப்பாக என்னுடைய சட்டைப்பைக்குள்தான்- ஏன் என்னை அப்படிப் பார்க்கிறாய்? கொஞ்சம் பொறு. அதை பின்னர் விளக்குகிறேன். இது ஒரு சராசரி நாவல் போன்றதுதான். ஒரு சோகமான படிப்பினை; இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் இரவு அருவெருப்பான நிலையில் குடி போதையில் என் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்….சென்று ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினேன்…அங்கே பார்த்தால் …சோஃபியா மிஹைலோவ்னா என்னுடைய சோஃபாவில் அமர்ந்திருந்தாள். மித மிஞ்சிய குடிபோதையால் வெறியேறிய நிலையில் தோன்றினாள். கூச்சலும் குழப்பமும் உள்ள இடத்திலிருந்து தப்பியோடியவள் போலக் காட்சியளித்தாள். 

”என் பணத்தைத் திருப்பிக் கொடு. என் மனதை நான் மாற்றிக் கொண்டுவிட்டேன். நான் சீரழிந்து போகவேண்டும் என்றால் நான் பாதியாகச் சீரழிந்து போகமாட்டேன்; என்னுடைய பங்கு எனக்குத்தேவை. சீக்கிரம்!! பண்ணாடையே! என் பணத்தை என்னிடம் கொடு” என்று கத்தினாள். “பார்பதற்கே அருவெறுப்பாக இருந்த ஒரு காட்சி அது”

”அப்புறம்…நீ பணத்தைத் தந்தாயா?”

”ம்ம்ம்..நான் கொடுத்தேன்…பத்து ரூபிள்களைக் கொடுத்ததாக நினைவிருக்கிறது”

”ஓ! இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்ள உன்னால் எப்படி முடிந்தது? ” என்று யுஸெல்கோவ் அழுதவாறே வேதனையில் ஆழ்ந்தான். ”உன்னால் இயலாமல் போயிருந்தாலோ கொடுக்க மனமில்லாமல் போயிருந்தாலோ எனக்கு ஒரு கடிதம் எழுதித் தொலைத்திருக்கலாமே! இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போயிற்றே! எனக்குத்தெரியாமல் போயிற்றே!” என்று அரற்றினான். 

”அன்பானவனே! பிறகு மருத்துவமனையில் படுத்த படுக்கையாக அவள் இருந்த சமயம் அவள் உனக்கு எழுதிய கடிதத்தை படித்தபின்னர் நான் என்ன எழுதியிருந்தாலும் அதனால் என்ன பயனும் இருந்திருக்காது”

”ஆமாம். எனது இரண்டாவது திருமணத்தில் மூழ்கிப்போய் கிடந்தேன். கடிதங்களைப் பற்றி எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு நான் சூழ் நிலைகளின் சுழற்சியில் மாட்டியிருந்தேன். ஆனால் நீ ஓர் அன்னியன்…சோஃபியாவிடம் உனக்கு பகைமை என்ற ஒன்றும் இல்லை.. பிறகு ஏன் நீ அவளுக்கு உதவிக்கரம் நீட்ட வில்லை?…”

”போரிஸ் பெட்ரோவிட்ச்! இன்றைய தினத்தின் அளவுகோல் கொண்டு அதனை எடை போட முடியாது…அப்படித்தான் நாம் அதனைப் பார்க்க வேண்டியுள்ளது. அந்த நேரத்தில் வேறு மாதிரியாகச் சிந்தித்தோம். இன்று நான் அவளுக்கு பத்தாயிரம் ரூபிளைக்கூட தரலாம். ஆனால் அந்த நேரம்…அந்த பத்து ரூபிளைக்கூட நான் ஒன்றும் சும்மா அவளுக்குத் தந்துவிட வில்லை. அது ஒரு கேவலமான வியாபாரம்! நாம் கண்டிப்பாக அதை மறந்து விட வேண்டும்!…நாம் ஏற்றுக்கொண்டு கடந்து போக வேண்டிய விஷ்யம் இது.”

பனிச்சறுக்கு வண்டி கல்லறைத் தோட்டத்தின் வாசலில் வந்து நின்றது. யுஸெல்கோவும் ஷாப்கினும் அதிலிருந்து வெளியே வந்து வாசலுக்குள் சென்றனர்….நீண்டு பரந்திருந்த தெருவின்  வழியாக நடந்து சென்றனர். மொட்டையாக நின்றிருந்த செர்ரி மரங்களும் கருவேலங்களும் சாம்பல் நிறச் சிலுவைகளும் சமாதிக் கற்களும் உறைபனியால் வெள்ளியைப் போல் மாறிப்போயிருந்தன. பனியின் ஒவ்வொரு துகளும் பிரகாசமான இளஞ்சூடான தினத்தைப் பிரதிபலித்தன. கல்லறைத் தோட்டத்தில் ஒரு மணம் கமழ்ந்து கொண்டே இருந்தது- ஊதுபத்திகளின் நறுமணம், மிகச் சமீபமாகத் தோண்டப்பட்ட மண்ணின் வாசனை….

”நமது கல்லறைத் தோட்டம் அழகான ஒன்று! அமைதியான ஒன்று” என்று சொன்னான் யுஸெல்கோவ்.

”ஆமாம்…ஆனால் திருட்டுப்பயல்கள் சமாதிக் கற்களைத் திருடிக்கொண்டு போய்விடுகின்றனர். அங்கே….வலது புறமுள்ள நினைவிடத்திற்கு அப்பால்தான் சோஃபியா புதைக்கப் பட்டிருக்கிறாள்..நீ பார்க்க விரும்பிகிறாயா?”

நண்பர்கள் இருவரும் வலதுபக்கம் திரும்பி ஆழமான பனிப்படலத்திற்கு ஊடே இரும்பால் கட்டப்பட்ட நினைவிடத்தை நோக்கி நடந்தார்கள்.

”இங்கேதான் அது இருக்கிறது” என்று வெள்ளைப் பளிங்கிலான ஒரு பட்டையைக் காட்டிச் சொன்னான் ஷாப்கின். ஒரு லெஃப்டினண்ட்தான் இந்தக்கல்லை அவளுடைய கல்லறையின் மீது பதித்துள்ளான்”

யுஸெல்கோவ் தன் தொப்பியை மெதுவாக நீக்கித் தன் வழுக்கைத் தலையை சூரியனுக்குக் காண்பித்தான். அவனைப் பார்த்து ஷாப்கினும் தன்னுடைய தொப்பியைக் கழற்றினான்- இன்னொரு வழுக்கைப் பரப்பும் சூரிய ஒளியில் மின்னத் தொடங்கியது. காற்று மண்டலம் மரணித்து விட்டதைப் போன்ற ஓர் அசைவற்ற நிலை கல்லறைத் தோட்டத்தைச் சுற்றி நிலவியது. நண்பர்கள் அவளுடைய கல்லறையைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். நினைவுகளில் ஆழ்ந்தார்கள்; ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.

”அவள் அமைதியாக உறங்குகிறாள்” என்று அங்கிருந்த மௌனத்தை உடைத்தவாறு சொன்னான் ஷாப்கின். ”பழியைத் தானாகவே வலிய ஏற்றுக்கொண்டது, பிராந்தியைக் குடித்தது எல்லாம் தற்போது அவளைப் பொறுத்தவரை ஒன்றுமே இல்லாத விஷயங்கள். ஒன்றை நீ ஒப்புக்கொண்டேயாக வேண்டும் போரிஸ் பெட்ரோவிட்ச்!”

‘ஒப்புக்கொள்ளவேண்டுமா? எதை?’- இருண்மையுடன் கேட்டான் யுஸெல்கோவ்.

”ஏன்…கடந்த காலம் எவ்வளவுதான் வெறுப்புக்குரியதாக இருந்தபோதும் தற்போது உள்ளதை விடச் சிறந்ததாகவே அது இருந்தது.”

ஷாப்கின் தனது நரை கூடிய தலையைச் சுட்டிக் காட்டிச் சொன்னான்.

”சாகப்போகிற மணித்துளியைப் பற்றி நான் எண்ணிப்பார்த்ததில்லை. ஒருவேளை நாங்கள் இருவரும் நேருக்குநேர் சந்தித்துக்கொண்டால் சாவிற்கு நான் மதிப்பெண்களைத் தந்து விடுவதைப்போலவும் விளையாட்டில் வென்றுவிடுவதைப்பொலவும் நான் கற்பனை செய்துகொண்டதுண்டு. ஆனால் இப்போது அதைப்பற்றி பேசுவதால் என்ன நன்மை விளையப்போகிறது?”

யுஸெல்கோவ் துயரச்சுமையால் அழுந்தப்பட்டவனானான். திடீரென்று அழுதால் நன்றாக இருக்கும் என்ற பரிவார்ந்த ஏக்கம் அவனுக்கு ஏற்பட்டது. அன்புக்காக அந்தச் சமயம் ஏங்கத் தொடங்கி விட்டான். அவனுடைய கண்ணீர் இனிப்பாகவும் புது மலர்ச்சியுடன் இருப்பதைப்போன்று உணர்ந்தான். கண்களில் ஈரம் கட்டிக் கொண்டது. தொண்டைக்குள் உருண்டை ஒன்று மாட்டிக்கொண்டதைப்போல உணர்ந்தான். ஷாப்கின் அவனுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். ஒரு சாட்சிக்கு முன்னால் தன் பலவீனத்தைக் காட்டிக்கொள்வதற்கு யுஸெல்கோவிற்கு வெட்கமாக இருந்தது போலும். திடீரென்று வெடுக்கென திரும்பிக் கொண்டு தேவாலயத்திற்குள் நடக்கத் தொடங்கினான்.

இரண்டு மணி நேரம் கழித்து தேவாலயக் காப்பாளனிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு தேவாலயத்தைப் பார்த்தவாறே ஷாப்கின் பாதிரியாரிடம் பேசிக்கொண்டிருந்த அந்தத் தருணத்தை தக்க சமயத்தில் பற்றிக்கொண்டு வேகமாக அழத் தொடங்கினான். ரகசியமாக ஒவ்வொரு நிமிடமும் அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டு சமாதியின் சமீபமாக திருட்டுத்தனமாக நடந்து சென்றான். அந்தச் சிறிய வெள்ளைப் பளிங்குப்பலகை அவனை சோகம் கலந்த, துக்கம் செறிந்த வெகுளியான பார்வையுடன் பார்த்தது. கீழே கிடப்பது ஆதரவற்ற விவாகரத்தான மனைவியல்ல; சின்னஞ்சிறிய சிறுமி ஒருத்திதான் என்பதைப்போல இருந்தது அது.

”அழு!…அழு!…என்று நினைத்தான் யுஸெல்கோவ்.

ஆனால் கண்ணீர் வர வேண்டிய தருணம் தவறிப்போயிருந்தது. கண்களைப் படபடத்து வெறித்துப்பார்த்த பின்பும் கூட, அவனுடைய உணர்ச்சிகளை எல்லாம் கூட்டிப்பெருக்கியும் கூட அவன் கண்களிலிருந்து கண்ணீரோ தொண்டையில் உருண்டையோ வர மறுத்தன. பத்து நிமிடங்கள் நின்ற பின்பு விரக்தியான ஓர் அங்க அசைவுடன் ஷாப்கினைத் தேடிச் செல்லலானான் யுஸெல்கோவ். 

*******

மூலம் : ஆன்டன் செகாவின் “The Old Age” சிறுகதை. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.