- ஜெயந்தி சூரம்மா & தேவமணி சத்யநாதன்
- மல்லவரபு சுப்பம்மா, வேமூரி ஆண்டாளம்மாள், வேங்கட செல்லாயம்மா & காஞ்சனபல்லி கனகாம்பா
- புலவர்த்தி கமலாவதி தேவி எழுதிய ‘குமுத்வதி’ வரலாற்று நாவல்
- பிராட்டம்மா எழுதிய நாவல் ‘சோபாவதி’
- ஆ. ராஜம்மா எழுதிய நாவல் சம்பகமாலினி
- அயிதம் இந்திரா, பாரதி தேவி, காவேரிபாய், தேவமணி சத்யநாதன்
- மல்லாதி வசுந்தராதேவி எழுதிய நாவல் தஞ்சாவூர் பதனம்
- மாலதி சந்தூர், ரேணுகா தேவி
- கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம்
- ஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு
- வட்டிகொண்ட விசாலாட்சி
- நிஷ்காம யோகி நாவல்
- வட்டிகொண்ட விசாலாக்ஷி-2
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

வட்டிகொண்ட விசாலாட்சி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தாக்கத்திலிருந்து வந்த முதல் நாவலாசிரியை. சுதந்திரப் போராட்டத்தின் தாக்கத்தால் கவிதைகள் கதைகள் எழுதியவர்கள் இருக்கிறார்களே தவிர அதனை கதைப் பொருளாகக் கொண்டு நாவல் எழுதிய எழுத்தாளர் சமகாலத்தில் ஹவாய் காவேரிபாயைத் தவிர வேறொருவர் தென்படவில்லை. துர்காபாய் தேஷ்முக் போன்றவர்கள் இருந்ந்தாலும் நேரடியாக செயலில் இறங்கி பங்கு பெற்றதாக அறியப்படும் ஆதாரங்கள் அவ்வளவாக இல்லை. வட்டிகொண்ட விசாலாக்ஷி அவ்வாறல்ல. அவர் கம்யூனிஸ்ட் பார்ட்டி சித்தாந்தத்தின் மீது பிடிப்போடும் அந்த கட்சியின் கொள்கைகளுக்கு அனுகூலமாகவும் ஏற்பட்ட முன்னேற்ற எழுத்தாளர்கள் சங்கம் அமைத்த உறுப்பினர்களில் இருந்த ஒரே பெண்மணி. அந்த அனுபவத்திலிருந்தும் அந்த சைதன்யத்திலிருந்தும் அவர் நாவல்களை எழுதினார். அதுதான் அதில் உள்ள சிறப்பு. அவர் ஆறு நாவல்கள் எழுதினாலும் பாரத நாரி, தபோ பங்கம், ஆத்ம பலம் ஆகியவை கிடைக்கவில்லை. யுக தர்மம், கைதி, நிஷ்காம யோகி ஆகிய மூன்று நாவல்கள் மட்டுமே கிடைக்கின்றன.
1943 ல் ஆந்திர பிரதேசத்தில் சர்வ தேச அரசியல், பொருளாதார, கலாச்சார மாற்றங்களின் எதிரொலியாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்பட்டது. இரண்டாவது உலக யுத்தம். ஹிட்லரையும் பாசிசத்தையும் உலக மேடைக்கு எடுத்து வந்தது. சர்வாதிகாரமும் ஆணவமும் மனிதப் பண்பாட்டிற்கு தீராத துரோகத்தை ஏற்படுத்தின. அந்த நிலையில் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமையை தோளில் சுமந்து 1935ல் மாக்ஸிம் கோர்கி, ஹெச்.ஜி. வேல்ஸ், ரோமரோலா போன்ற ஐரோப்பிய தேச எழுத்தாளர்களின் உதவியோடு பாரிசில் நடந்த சர்வதேச எழுத்தாளர்கள் மாநாட்டுக்கு அப்போது மேற்படிப்புக்காக இங்கிலாந்தில் இருந்த சஜ்ஜாத் பஷீர், முல்க்ராஜ் ஆனந்த், எம்.டி டஸ்ஸீர், பிரமோத் சென்குத்தா போன்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தாக்கத்திற்கு உள்ளான இந்திய இளைஞர்களும் பங்கு பெற்றதால் இந்தியன் ப்ராக்ரசிவ் அசோசியேஷன் இங்கிலாந்தில் பிறந்தது. 1935 டிசம்பரில் இந்தியாவில் அலகாபாத்தில் தீட்டப்பட்ட திட்டங்களோடு நிலைபெற்றது. 1936 ல் பிரேம்சந்த் தலைமையில் நடந்த அகில பாரத முற்போக்கு எழுத்தாளர் மாநாட்டிற்குச் சென்று வந்த அப்பூரி ராமகிருஷ்ணாராவு தெலுங்கு பிரதேசங்களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கங்களை ஏற்படுத்துவதற்கு ஸ்ரீஸ்ரீயையும் புரிபண்டா அப்பலசுவாமியையும் சேர்த்துக்கொண்டு முதல் முயற்சியைச் செய்தார். 1942 ல் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் உற்சாக உதவியோடு அப்யுதய எழுத்தாளர் சங்கம் ஏற்படுவதற்கு களம் சித்தமானது.
1943 பிப்ரவரி 13, 14 தேதிகளில் தாபீ தர்மாராவு தலைமையில் நடந்த முதல் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்க செயற்குழுவில் வட்டிக்கொண்ட விசாலாட்சி கூட இருந்தார். விசாலாட்சி எங்கிருந்து, எவ்வாறு அங்கு சென்று சேர முடிந்தது?
ஒன்று
வட்டிக்கொண்ட விசாலாட்சி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பமான காலத்தில் 1921 ம் ஆண்டு ஜூன் மாதம் குண்டூர் ஜில்லா சேப்ரோலு கிராமத்தில் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தார். தாயார் வெங்கட சுப்பம்மா. தந்தை புன்னய்யா. கிராமத்திலேயே ஆரம்ப பாடசாலையில் நான்காவது வரை படித்தார். வீட்டிலேயே பெற்றோர் சமஸ்கிருதம் படிக்க ஏற்பாடு செய்தனர். கையில் கிடைத்த புத்தகத்தை படிக்கும் பழக்கம் விசாலாட்சிக்கு ஏற்பட்டது. 1936 ல் குண்டூர் ஏசி காலேஜில் எம்.ஏ படித்து வந்த வட்டிகொண்ட ரங்கய்யாவோடு அவருக்குத் திருமணம் ஆனது. புகுந்த ஊர் கிருஷ்ணா ஜில்லா வீருலபாடு. வரதட்சணை எடுத்து வராததால் மாமியாரின் கொடுமையில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. ஆனாலும் அங்கு அவருக்கு சப்தமஞ்சரி, அமரகோசம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகசந்தேசம் முதலான சம்ஸ்கிருத காவியங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீருலபாடு அவரை கம்யூனிஸ்டாக மாற்றியது. கம்யூனிஸ்ட் கட்சியின் மீது தடை இருந்த அந்தக் காலத்திலேயே பார்ட்டி பத்திரிகையின் பரிமாற்றம் அந்த ஊரில் ரகசியமாக நடைபெற்றது. அவர் அந்த பத்திரிகையை வாசகியானார். பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அரசியல் பள்ளிக்கு விசாலாட்சி சென்று வந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயண் எழுதிய ‘சோஷலிசம் எதற்காக?’ என்ற புத்தகம் விசாலாட்சி மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. வீருலபாடுவில் கம்யூனிஸ்ட் கட்சியின் சங்க காரியதரிசியாக பொறுப்பேற்றார் விசாலாட்சி. அந்த வகையிலேயே அவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கும் வர முடிந்தது. கணவர் வட்டிகொண்ட ரங்கய்யா கம்யூனிஸ்ட் பார்ட்டி அங்கத்தினராக இருந்தத்தோடு கவிஞராகவும் எழுத்தாளராகவும் இருந்தார். அதே வழியில் விசாலாட்சி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு அவை பயன்பட்டன.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்பட்டதிலிருந்து விசாலாட்சி அதில் சுறுசுறுப்பாக பங்கு வகிக்க ஆரம்பித்தார். சங்கத்தின் கொள்கையையும் நோக்கங்களையும் புரிந்து கொண்டு அதனை கவிதைகளாக எழுத கற்றுக் கொண்டார். எழுத்தாளர் சங்கக் கூட்டங்களில் படித்து வந்த அந்த கவிதைகளைச் சேர்த்து ஆறு மாதங்களுக்குள் ‘அப்யுதய கீதாலு’ என்ற பெயரில் 1943 ஆகஸ்டில் புத்தகமாக பிரசுரித்தார்.
உன்னவ லட்சுமி நாராயணா, ஜி.வி கிருஷ்ணராவு, கோபிசந்த், பாலகும்மி பத்மராஜு, கொடவடிகண்டி குடுமபாராவு, சலம் முதலானவர்களின் உரைநடை எழுத்துக்களும் அவற்றில் இருந்த முற்போக்குப் பார்வையும் விசாலாட்சியைக் கவர்ந்தன. வேலை விஷயமாக மதராஸ் சென்றபோது சதலவாட பிச்சய்யாவோடு ஏர்பட்ட சின்ன பிரச்னை காரணமாக வட்டிகொண்ட ரங்கய்யாவால் அப்யுதய எழுத்தாளர் சங்கத்தில் அதிக காலம் நீடிக்க இயலவில்லை. கணவருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் விசாலாட்சி மட்டும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தொடர்ந்து இருந்தார். அதனால் கோபம் கொண்ட ரங்கய்யா மனைவியோடு பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனாலும் அவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளிவருவதற்கு விரும்பவில்லை. அதனால் கணவர் அவரை அழைத்துச் சென்று பிறந்து வீட்டில் விட்டு விட்டார். தான் கூறியபடி நடந்தால்தான் மீண்டும் அழைத்துச் செல்வேன் என்று கூறினார். ஆனாலும் விசாலாட்சி தன் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு ராஜினாமா செய்வது என்பது தன்னைத்தானே சிறுமைப்படுத்திக்கொள்வதாகும் என்று கருதினார். அதைவிட அவரவர் வழியில் இருப்பது மேல் என்று கூறி தாய் வீடான சேப்ரோலுவிலேயே இருந்து விட்டார். சிறிது காலம் கழித்து கணவர் வந்து ராஜினாமா பற்றி எதுவும் பேச்செடுக்காமலே அவரைத் தான் உத்தியோகம் செய்யும் மதரஸுக்கு அழைத்துச் சென்றார். மதராஸில் இருந்தால் ஆந்திர தேசத்தில் உள்ள முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு அவர் செல்லும் வாய்ப்புகள் இருக்காது என்று அவர் கருதினார். அதுவே உண்மையாயிற்று. பரம்புரம் என்ற ஊரில் நடந்த இலக்கிய பாடசாலைக்குச் செல்ல வேண்டும் என்று சாப்பிடாமல் இருந்து பிடிவாதம் பிடித்தாலும் கூட விசாலாட்சி நினைத்ததை சாதிக்க இயலாமல் போனார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெற்றிகரமாக அவரை வெளியேற்ற முடிந்ததாக கணவர் மகிழ்ந்தார். தனக்கு விருப்பமான சாகித்ய சங்கத்தில் பணி செய்யும் சுதந்திரதத்தை தன்னிடமிருந்து பிடுங்கி கட்டுப்படுத்திய கணவர் மீது அதிருப்தியில் இருந்த விசாலாட்சி உரைநடை இலக்கியத்தின் மீது பார்வையைத் திருப்பினார். 1951ல் இருந்து கதைகளும் நாவல்களும் எழுதத் தொடங்கினார். சொந்த அனுபவங்களை பெண்களின் கோணத்தில் பார்த்து அன்றைய இயக்கங்களையும் போராட்டங்களையும் மதிப்பிட்டு அவர் படைத்த கதைக்கருக்கள் அதற்கு முன்பு யாரும் எழுதாதவை.
யுகதர்மம் நாவல்
கிடைக்கும் விசாலாட்சியின் நாவல்கள் மூன்றில் கைதியும் நிஷ்காமயோகியும் பிரத்தியேகமாக பரிசீலிக்க வேண்டிய நாவல்கள். யுக தர்மம் மீதி இருப்பவற்றை போலவே 1956 ல் முதல் முறை பிரசுரிக்கப்பட்டது. குண்டூரில் இருந்த பிரஜாவாணி பதிப்பகத்தில் இருந்து மூன்றாவது பதிப்பு ஆண்டு குறிப்பிடப்படாமல் வெளிவந்தது. அதில் கதைப்பொருள் விசித்திரமாக உள்ளது. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அக்கா தங்கைகள் இருவரும் ஒரே தாய்மாமனை திருமணம் செய்வது இதில் உள்ள கதை. திருமணத்திற்கு மூன்று ஆண்டுகள் முன்பிருந்தே சரோஜாவுக்கு தாய் மாமனோடு தொடர்பை இருப்பதையும் இருவரும் அந்த விஷயத்தை மறைத்து தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்றும் பின்னர் எப்போதோ அறிந்துகொண்ட அக்கா சாந்தா அவர்கள் இருவரோடும் தொடர்பை விடாமலேயே தாம்பத்திய தொடர்பிலிருந்து தப்பிக் கொள்வதற்கு பிரம்மச்சரிய தீட்சை எடுத்துக் கொள்வது இந்த நாவலின் கதைப்பொருள். பெண்கள் ருக்மணிகளாக இருந்து, ஆண்கள் கிருஷ்ணனாக கிரீடைகள் நடத்திய காலம் இது அல்ல என்று குறிப்பிட்டபடியே இந்தக் கதை முடிகிறது. அதற்கு மேல் இந்த நாவலுக்கு எந்த ஒரு தனித்துவமும் இல்லை. பிரயோஜனமும் இல்லை.
கைதி நாவல்
கைதியும், நிஷ்காம யோகியும் அவ்வாறல்ல. சுதந்திரப் போராட்ட காலத்து கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பின்னணியில் இருந்து பெண்களின் வாழ்க்கையை விமர்சிக்கும் நாவல்கள் இவை. இவற்றுள் கைதி முதலாவது. காங்கிரஸ் பத்திரிக்கையில் 1952 ல் பிரசுரமானது. அந்தக் கணக்கில் இது அவருடைய முதல் நாவலாக இருக்க வேண்டும். 1956 ல் குண்டூரில் இருந்த பிரஜாவாணி பதிப்பகத்தில் இருந்து வெளிவந்தது. இரண்டாவது பதிப்பு கூட வந்துள்ளது. ஆண்டு தெரியவில்லை.
ஒரு பெண் அரசியல் கைதி, ஒரு சிறை மருத்துவமனை டாக்டர் – இவர்கள் இருவருடைய சினேகம், உரையாடல், தொடர்பு, ஒருவரைப் பற்றி ஒருவர் மனதில் எழும்பும் உட்போரட்டங்கள் ஆகியவை இந்த நாவலுக்கு கதைப்பொருளாக உள்ளன. அவரவர் கோணத்தில் இருந்து அவரவர் கூறும் தற்கூற்றுக் கதைகளும் இருவரைப் பற்றியும் ஆசிரியர் கூறும் கதையும் இதில் உள்ள பிரத்தியேகமான வடிவமைப்பு. அதுமட்டுமல்ல கதை நிகழும் காலத்தில் இருந்து கடந்த கால ஞாபகங்கள் வடிவில் பயணித்து மீண்டும் நிகழ் காலத்திற்கு வந்து தொடர்கிறது.
இரண்டு
இந்த நாவல் நடந்த கதைக் காலம் 1940 வது தசாப்தம். இன்னும் கச்சிதமாக கூற வேண்டும் என்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கம், மகளிர் சங்கங்களை ஏற்படுத்தி மக்களிடம் தம் அஸ்திவாரத்தை பலப்படுத்திக் கொண்டு, சுறுசுறுப்பாக பணி செய்து, தடைக்கும் கட்டுப்பாட்டிற்கும் ஆளாகி, தலைமறைவாக இருந்து அரசாங்கத்தின் தொல்லைக்கு ஆளாகி, செயல் வீரர்களை இழந்து வரலாற்றை உருவாக்கிய காலகட்டம்.
1948 ல் இருந்து 1951 வரை ஆந்திர தேசத்தில் போலீஸ் ராஜ்ஜியம் நடந்த நேரம். ஆனால் அந்தக் காலத்து வரலாற்றை விட அந்த வரலாற்றுப் பின்னணியில இரு மனிதர்களின் அந்தரங்க போராட்டங்களும் தொடர்புகளும் இதில் முதன்மையாக உள்ளன. இந்த நாவலில் கதாநாயகிக்குப் பெயர் இல்லை. கைதி. ஆயுள் கைதி. அவ்வளவுதான். மாணவர் இயக்கத்தில் இருந்து மகளிர் இயக்கத்திற்கு வந்து தலைமைப் பொறுப்பை ஏற்கிறாள். அரசாங்கத்தின் பார்வை அவள் மேல் பட்டது. அதன் பலனாக சிறையில் தள்ளப்பட்டாள்.
கதாநாயகன் சிறை மருத்துவமனையின் டாக்டர். என்ன நடந்தது? அவனுடைய பின்னணி என்ன? என்பவை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. திடீரென்று அவன் கைது செய்யப்படுகிறான். பெண்கள் சிறையில் அவளுக்கு அவனைப் பற்றிய சிந்தனையும் ஆண்கள் சிறையில் அவனுக்கு அவளைப் பற்றிய சிந்தனையும் ஏற்படுகின்றன. அவனுடைய தங்கை இறந்து போவதால் பரோலில் அவன் வெளியில் வருகிறான். அதே நேரத்தில் தாயின் உடல்நிலை சரியில்லாததால் அவளைக் கூட பரோலில் வீட்டுக்கு அனுப்புகிறார்கள். அவன் அவள் வீட்டுக்கு வந்து பார்த்து பேசி விட்டுச் செல்கிறான். போகும்போது அவளையும் அவள் அண்ணனையும் தன் வீட்டுக்கு வரும்படி அழைக்கிறான். பரோல் முடிந்த பிறகு திரும்பிச் செல்லும் வழியில் அவனுடைய ஊரில் இறங்கி இரண்டு நாட்கள் இருப்பதாக முடிவு செய்கிறார்கள். அண்ணன் வேறு ஏதோ வேலை இருப்பதாகக் கூறி அவளைத் தனியாகவே அனுப்புகிறான். அங்கு டாக்டரும் அவளும் காதலில் இருப்பதாகத் தெளிவாகிறது. அவன் அவளிடம் அவளுடைய நெருக்கத்தை கோருகிறான். கோரிக்கைகள் இல்லாமல் இருக்க முடியாதா என்று அவள் தர்க்கம் செய்கிறாள். இருவரும் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியவர்களே. திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புகள் தென்படாத போது அதற்கு மாற்றாக இருவரும் ஒன்று என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது அல்லவா என்பது அவனுடைய அபிப்பிராயம். அந்த மனக் கிளர்ச்சியின் இடையில் தோட்டத்தில் இருவரும் ஒன்றிணைகிறார்கள். அது அவளுக்கு சற்று திகிலை ஏற்படுத்துகிறது. பரோல் முடிந்து அவள் சிறைக்குச் செல்கிறாள். அவன் சிறைக்குச் செல்லாமல் தலைமறைவாகி விடுகிறான்.
சிறிது காலத்திற்குப் பின்னர் பெண் கைதிகளை விடுதலை செய்கிறார்கள். அவ்வாறு அந்தப் பெண் கைதி வீட்டுக்குச் செல்கிறாள். தலைமறைவாக இருந்த அவனை அவ்வப்போது சந்திக்கிறாள். ஒருபுறம் காதலும் விருப்பமும் அவளை ஈர்க்கிறது. மறுபுறம் அவ்வாறு அவனுக்காக செல்வதைப் பார்த்து உலகம் என்ன நினைக்கும் என்று உள்ளுக்குள்ளே கவலை. தாய்க்கு அவள் செயலில் விருப்பமில்லை. ஆதலால் அவனோடு திருமணம் சாத்தியம் இல்லை என்பது புரிகிறது. அப்படியிருக்கையில் அவனுக்காக செல்வது என்றைக்கானாலும் ஆபத்தே என்று உணருகிறாள். அவனுடைய தொடர்பு வேண்டாம் என்று எண்ணி அவ்வாறே இருக்க வேண்டும் என்று மனதை திடப்படுத்திக் கொள்ள முடியாமல் வேதனையடைகிறாள்.
அந்தச் சூழ்நிலையில் டாக்டர் போலீசால் சிறை பிடிக்கப்படுகிறான். அவனை எங்கு அழைத்துச் செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்ற செய்தி எதுவும் தெரியவில்லை. அவனைப் பற்றி சிந்தித்து பெண் கைதிக்கு துயரமும் வேதனையும் அதிகமாகிறது. “நான் சிறையில் வாழ்ந்த போது மட்டும் கைதி அல்ல. வெளியில் வந்த பின்னரும் நிரந்தரம் கைதியாகவே வாழ்கிறேன். இந்த சமுதாயத்தில் நிலவும் அறியாமையே எனக்கு ஆயுள் தண்டனையாகிவிட்டது. இந்த குறுகிய மனப்பான்மை கொண்ட சமுதாய அமைப்பு என்னை சுற்றிலும் சிறைக் கம்பிகளைப் போல காவல் காக்கிறது. அதனால் இங்கு இருப்பவர்கள் யாருமே டாக்டரை சுகப்படுத்த முடியாமல் உள்ளார்கள்” என்ற கவலையோடு அவள் ஜுரத்தில் விழுகிறாள் என்பதோடு இந்த நாவல் முடிகிறது.
கம்யூனிஸ்ட் போராட்டத்தைப் பற்றி அன்றி போராட்டப் பின்னணியில் ஆண் பெண்களின் மனோ பாவனைகளின் விசித்திரத்தையும் நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தும் கதையம்சத்தோடு நடக்கும் இந்த நாவலில் கதை நடக்கும் இடங்கள் பிரதானமாக சிறையும் சிறை மருத்துவமனையும். அந்த வகையில் சிறை வாழ்க்கை கதையம்சத்தின் ஒரு பகுதியாகிறது. அதன் பின் இதில் முக்கியமான கதையம்சம் காதலையும் பாலியல் உறவையும் சுற்றி நடக்கிறது. அந்த வகையில் இந்த நாவல் அவற்றைப் பற்றி விவாதிக்கும் முறை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இது அன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை புரட்சிகரமான கதையம்சமே.
கைதி, டாக்டர் இருவரின் மூலமாக சிறை வாழ்க்கை ஒரு சிறு சித்திரமாக இந்த நாவலில் அறிமுகம் ஆகிறது. அதிகாரம் கொண்ட வார்டன்கள் சிறைப் பணியில் திருட்டுத்தனம் செய்வதை பெண் கைதி கவனிக்கிறாள். சிறையில் அரசியல் கைதிகளை சி கிளாஸ் கைதிகளை விட வேறுவிதமாகப் பார்த்த முறையை டாக்டரால் பார்க்க முடிகிறது. குற்றவாளிகள், குற்றம் சுமத்தப்பட்டவர்கள், தண்டனை அனுபவித்து வருபவர்கள் அனைவரும் மனிதர்கள் தானே! சகலவிதமான மனித உரிமைகளும் அவர்களுக்கும் உள்ளன அல்லவா? அந்த அறிவோடு நடக்கும் அநியாயத்தைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள்.
இது என்ன என்று கேள்வி கேட்டதற்கு அடித்துத் துன்புறுத்தும் சிறை அமைப்பு பற்றியும் தற்காப்புக்காக முயற்சி செய்தால் அது எதிர்த்து நிற்றல் என்று தடுத்து அதற்கு முன் அளித்திருந்த மிகச்சிறிய சௌகரியங்களைக் கூட ரத்து செய்து துன்புறுத்துவது பற்றியும் பெண் கைதி எதிர்ப்புக் குரல் எழுப்புகிறாள். கைதிகளுக்கு வீட்டில் இருந்து வரும் கடிதங்களைக் கொடுக்காமல் தொந்தரவு செய்வதும் வீட்டிற்கு கடிதம் எழுத விடாமல் கட்டுப்படுத்துவதும் பற்றி அவள் வருத்தம் அடைகிறாள். உள்ளிருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்று வெளியில் இருப்பவர்களும் வெளியில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்று உள்ளிருப்பவர்களுக்கும் தெரியாமல் கவலைப்படுவது பற்றி இங்கு எடுத்துரைக்கப்படுகிறது.
கைதிகள் தம்மை ஏன் குறைவானவர்களாக பாகுபடுத்திப் பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்டதற்கு அதிகாரிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை நேரடியாக பார்க்கிறான் கதாநாயகனான டாக்டர். சிலர் மரணித்தார்கள். பலர் தீவிரமாக காயமடைந்தார்கள். அவர்களைப் பார்த்து இளகிய மனமுள்ள டாக்டர் வருந்துகிறான். சிறை மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் இல்லாமல் இருப்பதையும் டாக்டர் கவனிக்கிறான். இவ்வாறு இருந்தால் எவ்வாறு சிகிச்சை செய்வது என்று மேல் அதிகாரிகளைக் கேட்டபோது இருப்பதை வைத்து வேலை செய் என்று உத்தரவிடும் முறையைப் பார்க்கிறான்.
அரசியல் கைதிகளுக்கு விமுக்தி எப்போது என்று வருத்தத்தோடு கேட்ட டாக்டரிடம், “உலகில் மக்களுக்கு கஷ்டம் என்பது இருக்கும் வரை எங்களுக்குப் பூட்டப்படும் விலங்குகள் தளராது. உலக மக்கள் அனைவரும் தங்கள் கஷ்டங்களுக்கான காரணங்களை அறிந்து கொண்டு அவற்றுக்கான நிவாரணத்தைக் காணும்போதே அவர்களுடைய சுகங்களுக்கு தடையாக உள்ள சிறைக் கதவுகளோடு கூட எங்கள் விலங்குகளும் களையப்படும்” என்று பெண் கைதி கூறிய பதில் சோசலிஸ்ட் நடத்தையோடு தொடர்புடையது.
அத்தகைய நடத்தையை நோக்கமாகக் கொண்டபோது தனிமனித சுகங்கள் அதன் முன் அற்பமானவையாகத் தோன்றும். அவற்றை விட்டுவிட வேண்டும். ஆனால் அது அத்தனை எளிதானதா? அந்த நோக்கத்தோடு செயல்படும் மனிதர்களிடம் விருப்பங்கள் எழாமல் தடுக்க முடியுமா? இலக்குகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் மனிதர்கள் எத்தனை தூரம் நசுங்கி வருந்துகிறார்கள் என்பதை இந்த நாவல் காட்டுகிறது.
மூன்று
சிறையில் பெண் கைதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது சிகிச்சைக்காக சிறை மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறாள். அங்கு மருத்துவம் செய்த டாக்டருக்கும் அவளுக்கும் இடையில் நட்பும் உரையாடலும் தொடர்கிறது. ஒருவரிடம் ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. டாக்டருக்கு கைதியின் மேல் ஆசை, ஈர்ப்பு. அவளுக்கு டாக்டரைக் குறித்து தினமும் சிந்தனை. காதல் பாடல்கள் இயற்றிப் பாடுவதும் எழுதி கையில் அளிப்பதுமாக அந்த உறவு வளர்கிறது. அவர்கள் தம் காதல் குறித்துப் பேசவில்லை. இருவருக்கும் அது மனதிற்குள் இருக்கும் உணர்வே தவிர வெளியில் சொல்லவில்லை. ஆனால் ஒருவரின் மனது மற்றவருக்குத் தெரிகிறது. மேகம் நிறைந்த மனங்களாக கனத்து இருந்தது. வெளியில் பாடலாகக் கசிந்து மென்மையும் கூர்மையுமாக மாறியது.
பரோல் முடிந்து திரும்பும் முன்பு அவள் அவனுடைய வீட்டுக்குச் சென்ற போது அவனே முதலில் தன் காதலை வெளியிடுகிறான். “உங்கள் மனதில் உள்ள எண்ணத்தை வெளிப்படுத்துங்கள்” என்று அவளிடம் கேட்கிறான். அவள் தன் புத்தி போர்க்களம் ஆகிவிட்டது என்கிறாள். ஆசைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் இடையில் தனக்குள்ளேயே நடக்கும் போராட்டம் பற்றிக் கூறுகிறாள்.
அந்த இரண்டிற்கும் இடையே முரண்பாடு உள்ளதா என்பது அவனுடைய கேள்வி. இரண்டும் ஒரே மனிதனில் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? அவ்வாறு இருந்தால் அது தவறா? என்று வினா எழுப்புகிறான். தீவிரமாக எழும்பும் கோரிக்கைகளை மிகவும் பலமான ஆதரிசங்களைக் கொண்டு தோல்வியடையச் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் அவள் படும் வேதனை பற்றி எச்சரிக்கிறான்.
இருவரும் ஆயுள் கைதிகளாக இருக்கும் போது, இருவரும் சேர்ந்து வாழும் வாய்ப்புகள் தென்படாத போது, அவன் தன்னவன், அவள் அவனவள் என்று நினைப்பதிலும் சொல்லிக் கொள்வதிலும் பிரயோஜனம் என்ன இருக்கிறது என்பது அவளுடைய தர்க்கம்.
இந்த விஷயம் அவனுக்கு தெரியாததல்ல. இருக்கும் அவகாசத்தையாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசரம் அவனுக்குள் இருந்தது. பரோலில் இருவரும் வெளியில் இருக்கும் போது சந்தேகப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று அவன் நினைக்கிறான்.
“ஆணும் பெண்ணும் வேறு வேறு மனிதர்கள் என்று நினைக்கும் போது ஒரு விதமாகவும், நண்பர்கள் என்று நினைக்கும் போது இன்னொரு விதமாகவும், காதலர்கள் ஆகும்போது வேறொரு விதமாகவும் இருப்பார்கள். இப்போது நாம் அனைத்து நிலைகளையும் தாண்டி இறுதி நிலையில் உள்ளோம். இந்த நிலையில் கூட இன்னும் சூழ்நிலை அனுகூலமாக இல்லை என்றும் எனக்கு ஏதோ சில நியமங்களும் எல்லைகளும் இருக்கின்றன என்றும் கூறுவதில் அர்த்தம் இல்லை” என்று அவன் வாதிக்கிறான்.
பெண் கைதி விடுதலை அடைந்த பின்பு தலைமறைவாக உள்ள டாக்டரை அவ்வப்போது சந்திப்பதும் இணைவதும் நடக்கிறது. அவன் ஒரு பெண்ணின் வீட்டில் தங்கி இருப்பதை பார்த்தபோது பெண் கைதி கலவரப்படுகிறாள். தன்னை மறந்து, துறந்து அவளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டானோ என்று அவளுக்கு சந்தேகம் வருகிறது. அவ்வாறு சந்தேகிப்பது சரியல்ல என்றும் அவளுக்கு தெரியும். டாக்டர் தன் தோழியோடு காலம் கழிப்பது குறித்து அவளுக்குப் பொறாமை இல்லை. ஆனாலும் அவள் மேல் அவனுக்குக் காதல் குறைந்து விட்டது குறித்து அவளுக்கு வருத்தம் ஏற்படுகிறது.
அந்த சந்தர்ப்பத்தில் காதல் பிறப்பது, அது தோல்வியடைவது போன்ற எண்ணங்கள் பல அவளுக்கு ஏற்படுகின்றன. காதல் எப்போதும் தானாகவே ஏற்படாது. தானாகவே தோல்வியும் அடையாது. காதல் பொய்த்து விட்டது என்றால் காதலிக்கும் பொருளிலோ காதலிக்கும் மனிதரிலோ தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டு, மாற்றிக்கொள்வது சாத்தியமில்லாத போது, இனி தனக்கு அது கிடைக்காது என்று தெரிந்த போது, நிராசைக்கு உள்ளான போது, காதல் பொய்த்துப் போகும். அந்த பொருளுக்கும் மனிதருக்கும் தொலைவாகச் சென்று தவித்துத் தளர்ந்து இனி அது கிடைக்கவே கிடைக்காது என்ற நிராசையோடும் கவலையோடும் மறக்க வேண்டுமென்றால் காதலுக்கு வேறு ஏதோ ஒரு பொருளோ மனிதரோ பற்றுக்கோடாகத் தேவை.
காதல் எவ்வாறு வரும்? எப்போது போகும்? காதல் ஒரு மனிதரிடமிருந்து வேறொரு மனிதர் மீது எவ்வாறு மாறும்? ஏன் மாறும்? போன்ற கேள்விகள் எண்பதுகளில் பெண்ணிய சிந்தனைகளை குறித்த விவாதங்களிலும் பாலியல் சுதந்திரம் பற்றி விரிவாக நடந்த விவாதங்களிலும் ஒரு பாகமாக தெலுகு இலக்கிய உலகில் பரவின.
அதற்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்பே வட்டிகொண்ட விசாலாட்சி அப்படிப்பட்ட கேள்விகளை கேட்டுக்கொண்டு சிந்திப்பதற்கு முயற்சிப்பது இந்த நாவலில் தென்படும் சிறப்பு. அது மட்டுமல்ல. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாலியல் தொடர்பு விஷயத்தில் கூட ஒரு பெண்ணின் அனுபவ கோணத்தில் இருந்து சம்பிரதாய நிபந்தனைகள் மீது விமர்சனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்த முதல் நாவலாகக் கூட இதற்கு ஒரு தனித்துவம் உள்ளது.
ஒரு பெண்ணுக்கு ஒரே ஆண், ஒரு ஆணுக்கு ஒரே பெண் என்ற சமுதாய விழுமியத்தின் அஸ்திவாரம் இந்த நாவலில் சர்ச்சைக்கு உள்ளாவதைக் காண முடிகிறது. சமுதாயம் ஏற்படுத்திய நியமங்களின்படி வாழ்க்கை முழுவதும் ஒரு பெண்ணை ஒரு ஆணும், ஒரு ஆணை ஒரு பெண்ணும் காதலிப்பதற்கு மட்டுமே அருகதை உள்ளது. சமுதாயத்தில் உள்ள குளறுபடிகளால் அது உபயோகப்படாமல் போகிறது என்பது டாக்டரின் அபிப்பிராயம்.
ஒரு ஆணை ஒரே பெண்ணும், ஒரு பெண்ணை ஒரே ஆணும் காதலித்து அதன் பொறுப்பை அவரவர் வகிப்பதை விட்டுவிட்டு அந்த பொறுப்பை சமுதாயத்தின் மீது சுமத்துவதால் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பாரமாக மாறுகிறார்கள் என்பது அவனுடைய புரிதல்.
தலைமுறைவாக இருந்த டாக்டர் தன்னை வந்து சந்திக்கும்படி அவளுக்கு நீண்ட நாட்கள் வரை தகவல் தெரிவிக்காமல் இருந்தது பற்றி பெண் கைதி கவலையை வெளிப்படுத்திய போது, “உங்களை மறந்து விட்டேன் என்று பயப்படுகிறீர்களா? பெண்களுக்கு சந்தேகம் அதிகம்” என்கிறான்.
“அப்படிப்பட்ட பயம் எனக்கு இல்லை. ஆனால் ஒருவரை ஈர்க்க முடிந்தவர்கள் இன்னொருவரைக் கூட ஈர்க்கும் வாய்ப்பு அதிகம்” என்கிறாள்.
“ஒரு இடத்தில் மனம் நிலைத்து விட்டால் ஈர்ப்பு மாறாது” என்று அவன் கூறிய சொற்களுக்கு பதிலாக அவள், “உலகெங்கும் ஒரே பெண்ணோடு ஒரு ஆணும், ஒரே ஆணோடு ஒரு பெண்ணும் வாழ்நாள் முழுவதும் இருக்கிறார்களா?” என்ற சந்தேகத்தை எழுப்புகிறாள். நேரடியாகவோ மறைமுகமாகவோ நடக்கும் விதியை மீறும் செயல் பற்றி எடுத்துரைக்கிறாள்.
“அதற்குக் காரணம் அவரவரின் பலவீனமே. அல்லது வேறு வழியில்லாததே காரணமாக இருக்கும்” என்று டாக்டர் எடுத்துக் கூறினாலும் அவளுக்குத் திருப்தி ஏற்படவில்லை.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பில் உடலுக்கு இருக்கும் பங்கு குறித்து யார் எத்தனை குறைவுபடுத்தி மோசமாகப் பேசினாலும் அது ஒரு வாஸ்தவமான உண்மை. அது மனிதனை எத்தனை வேதனைப்படுத்தும் என்ற கருத்தை விவாதிக்கிறது இந்த நாவல்.
டாக்டரால் ஈர்க்கப்பட்ட பெண் கைதிக்கு அந்த ஆகர்ஷணத்தில் இருந்து வெளியில் வரும் சக்தி இல்லாத நிலையில் வாழ்க்கையில் இதுவரை எப்போதும் பெறாத அத்தகைய ஆனந்த அனுபவத்தை பெற்றால் என்ன தவறு? என்ற கேள்வி எழுகிறது. அதன் காரணமாக அவளுக்குள் நடந்த போராட்டம் பல கேள்விகளை முன்னெடுக்கிறது.
உடல்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளாமல் ஆனந்தம் அனுபவிக்க முடியாதா? உண்மையில் ஆனந்தம் என்றால் என்ன? அதைப் பற்றி விளக்குவது எவ்வாறு? என்பவை அவற்றில் சில கேள்விகள். நமக்குள்ளேயே மகிழ்ச்சி உள்ளது. அதனைப் பார்க்க வேண்டும் என்பார்கள். அவ்வாறு நமக்கு நாமே ஆனந்தம் ஏற்படுத்திக் கொள்வது ஏன் சாத்தியமாகவில்லை என்று எண்ணி வருந்துகிறாள் பெண் கைதி. நமக்கு நாமே ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் தன்னிறைவு வேண்டும். தன்னிறைவு இல்லாவிட்டால் சுயப் பிரகாசம் அனுபவத்திற்கு வராது. சுய நிறைவும், சுய பிரகாசமும் பெறுவது சாத்தியமா என்று குழப்பதில் ஆழ்கிறாள்.
அவள் மாணவி. கம்யூனிஸ்ட். இயற்கையின் இயங்கியல் பற்றி அறிந்தவள். ப்ரக்ருதியும் பிரபஞ்சமும் ஒன்றின் மீது ஒன்று ஆதாரப்பட்டு தம் இருப்பை நிலைநிறுத்திக் கொள்கின்றன. பூமி, சூரியன், சந்திரன், மற்ற கிரகங்கள் அனைத்தும் ஒன்றின் மீது ஒன்று ஆதாரப்பட்டு ஈர்ப்போடு சுற்றிவருகின்றன. டாக்டருக்கும் தனக்கும் இடையில் ஈர்ப்பும் அத்தகைய இயற்கையின் இயல்பே என்ற புரிதல் அவளுக்கு ஏற்படுகிறது.
மனிதர்களின் இடையில் எந்த விதமான உறவுக்கும் வெளிப்பாடு என்பது கை குலுக்கிக்கொள்வதில் இருந்து கட்டியணைத்துக் கொள்வது வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தாய் குழந்தையின் கன்னத்தில் கன்னம் வைத்து முத்தமிடுவதில் உள்ள பரவசமும், ஸ்பரிச சுகத்திற்காக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உண்டாகும் ஈர்ப்பும் அத்தகைய வெளிப்பாடே. அப்படி இருக்கையில் பரஸ்பரம் ஈர்ப்புக்கு உள்ளான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஸ்பர்சம் பற்றிய ஆசை இருப்பதில் ஆச்சரியம் இல்லை. டாக்டரிடம் ஏற்பட்ட அந்த விதமான ஆசை தவறா சரியா என்று கைதியின் அந்தரங்கத்தில் ஏற்படும் சிந்தனைகள் இந்த நாவலில் மிகவும் முக்கியமானவை. ‘உடல் அரசியல்’ மீது முதல் வெளிச்சத்தை பரப்பிய எண்ணங்கள் அவை.
உடல் ஸ்பரிசம் வேண்டும் என்று உள்ளுக்குள் உற்சாகம். ஆனால் தொடுதல் என்றால் பயம். அந்த இரு முரண்பாடான இயல்புகளை ஆராய்கிறது அவளுடைய அந்தரங்கம். இரண்டும் வாஸ்தவமே. ஒரே மனுஷியில் இரண்டும் இருப்பதற்கு இடம் இருக்கிறது. முதலாவது இயல்பானது. இரண்டாவது சமுதாயம் ஏற்படுத்தியது. புத்திக்குள் ஏற்றப்பட்ட கருத்துக்களின் விளைவே அவை என்று அவள் அடையாளம் காண்கிறாள்.
சில சுயநலவாதிகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சாஸ்திரங்கள், புராணங்களின் மூலம் மனிதர்களின் இயல்புக்கு மாறான சில நியமங்களையும் அபிப்பிராயங்களையும் மனிதர்களின் புத்திக்குள் ஏற்றி விட்டன என்று அவள் நினைக்கிறாள். அது பெண்களின் விஷயத்தில் கொஞ்சம் அதிகமாகவும் பிரத்தியேகமான தண்டனையாகவும் உள்ளது என்று எண்ணுகிறாள். இவ்வாறான அவளுடைய சிந்தனை பாலின அரசியலுக்கு அருகாமையில் உள்ளதாகவே கருத இடமிருக்கிறது.
பதிவிரதைத் தன்மை, ஏகபத்தினி விரதம், விவாகத்திற்கு முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது போன்ற விதிகளையும் தடைகளையும் கேட்டுக் கேட்டு சரீரம் என்றாலும், ஸ்பரிசம் என்றாலும் பயப்படும் நிலை ஏற்பட்டு விட்டது என்று அவள் முடிவுக்கு வருகிறாள்.
உடலில் சீதோஷ்ண நிலையையும் கடினத்தன்மையையும் மிருத்தன்மையையும் உணர்ந்து கொள்ளும் சக்தி இருக்கும் வரை ஸ்பரிச சுகத்திற்காக ஆசைப்படுவது இயல்புதான். ஸ்பரிசம் பற்றி சமுதாயம் ஏற்படுத்திய அச்சங்களின் மாயக் குரல்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் உடல் அனுபவம் பெற ஆசைப்படுவது சகஜம்தான் என்பதைப் புரிந்து கொண்டாள்.
ஆசை டாக்டருக்கு மட்டுமா? தனக்கு இல்லையா? என்று வினவிக் கொள்கிறாள். சாமானிய உலகியல் அறிவும் பகுத்தறியும் சிந்தனையும் ஆசையும் டாக்டருடையதே. ஆனால் அது பலனளித்தது என்றால் தன்னுடைய பங்கும் அதில் இருந்துதானே தீர வேண்டும்? அதன் பலன் தனக்குக் கூட அனுபவம் ஆகிறது அல்லவா என்று அங்கீகரிக்கும்படியாக அவர்களுடைய சிந்தனை நீண்டது.
உறவினர்களையும் சினேகிதர்களையும் சம்மதிக்க செய்து திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. வாய்ப்பு வரும் வரை காத்திருக்க முடியுமா? வந்த வாய்ப்பை உபயோகித்துக் கொள்வதா? என்ற குழப்பத்திற்கு அவள் உள்ளானாள். திருமணம் செய்து கொள்ளாமல் பரஸ்பரம் விருப்பத்தின் மீது ஆணும் பெண்ணும் ஒன்றுசேர்வது என்பது அவளுடைய கற்பனைக்கு எட்டாத விஷயமாகவே இருந்தது.
சமுதாயத்திற்கு பயப்படுவதால்தான் டாக்டரின் விருப்பத்தை ஏற்க முடியாமல் போகிறேனா? என்று அவள் தன் மனதிடம் கேள்வி கேட்டு அறிந்து கொள்ளும் முயற்சியைக் கூட செய்கிறாள். பயங்களை ஒதுக்கிவிட்டோ, வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று துணிந்தோ, டாக்டரின் விருப்பங்களின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டோ – மொத்தத்தில் அவனோடு ஒன்றிணைவதை அவளால் தடுக்க முடியவில்லை.
அந்த இணைப்புக்குப் பின்னர் இனி தன்னுடையது பொய் வாழ்க்கையே அல்லவா என்று வேதனை அடைகிறாள். தனக்குள் பல கொலைகள் நடந்து விட்டதாக எண்ணுகிறாள். உடலின் தாகத்தை தீர்த்துக் கொள்வது செய்யக்கூடாத செயல் என்று வருந்துகிறாள். இவையெல்லாம் குற்ற உணர்ச்சியின் இயல்புகளே என்று தீர்மானிக்கிறாள்.
சமுதாயத்தின் சம்மத முத்திரை இல்லாமல் பாலியல் விருப்பத்தைத் தீர்த்துக் கொள்வது பாவம், குற்றம் என்று நினைப்பது, மனித சமுதாயம் முடிவெடுத்த விழுமியங்களின் அழுத்தத்தின் விளைவே என்று எண்ண வேண்டும்.
இந்த சம்பிரதாய பாலியல் ஒழுக்க நியதியே விருப்பங்களை துச்சமானவையாக எண்ணும்படிச் செய்தது. கோரிக்கைகளை நியமங்களுக்கு எதிரியாக நிற்க வைத்தது. ஒழுக்க நியமம் இல்லாத வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டும் என்று நம்பும்படிச் செய்தது. ஆசைகள் என்னும் விஷ சர்ப்பங்கள் படமெடுத்து ஆடும் போது அவற்றை உறங்க செய்வதற்கு நல்ல நோக்கங்களின் மீதும் ஆதரிசங்களின் மீதும் பார்வையைத் திருப்பிய சந்தர்ப்பங்கள் அவளுக்கு நினைவுக்கு வந்தன.
ஆனால் டாக்டரோடு தோழமை ஏற்பட்டபின் உள் மனதுடன் அவள் நடத்திய வாக்குவாதங்களும் மோதல்களும் அவளிடம சிறிது சிறிதாக ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணமாயின. அதற்கு முன்பு விருப்பங்களை விஷ சர்ப்பங்களாக நினைத்த அவள், சுக அனுபவம் தொடர்பான ஆசை மனித இனத்திற்கு இயல்பான குணமே என்ற கருதும் நிலைக்கு வந்தாள். மனிதநேயம் ஒழிந்தால் அன்றி ஆசை அழிவதற்கு வாய்ப்பில்லை என்று முடிவுக்கு வந்தாள்.
ஆனாலும் ஆசையை தீர்த்துக் கொள்வதற்கு சமுதாய தடைகளைத் தாண்ட வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு ஏற்படாமல் இருந்தது. அதுவே அவளுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட துயரத்திற்கு உண்மையான காரணம்.
தான் கூறியது போல் திருமணம் செய்து கொண்டால்தான் தன் மகள் சுகப்படுவாள் என்று நினைத்த தாய்க்கு மகள் சிறையில் இருந்து வெளியில் வந்த பின் பிரதான வாழ்க்கை ஓட்டத்தில் சேராமல் தலைமறைவாக உள்ள டாக்டரை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று கூறி கஷ்டத்தை விலைக்கு வாங்குவது பிடிக்கவில்லை. தாயின் தொந்தரவு தாளாமல் இப்போதைக்கு நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று தாய்க்கு உறுதி அளிக்கிறாள். ஆனால் அந்த வாக்குறுதி பெண் கைதிக்கு சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. தாய்க்குக் கொடுத்த வாக்குறுதிக்காக இயல்பான ஆசைகளைக் கொல்ல வேண்டி வருகிறதே என்ற கவலை அவள் இதயத்தை துளைத்துக் கொண்டே இருந்தது. ஆசைகளைக் கொல்வதற்கு செய்யும் ஒவ்வொரு முயற்சியும் மகிழ்ச்சியின் மதிப்பை நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. டாக்டரை போலீசார் பிடித்துக் கொண்டு சென்ற பின் அவனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியாத நிலையில் இதயம் சிதறியவளானாள். சிறையில் இருக்கும்போது மட்டுமல்ல வெளியில் கூட பெண்கள், சமுதாயத்திற்கும் அதில் இருக்கும் அறியாமைக்கும் மனிதர்களுக்கும் அடிமையான கைதிகளே என்ற குறிப்போடு பெண் கைதியின் அந்தரங்க வாழ்க்கைச் சித்திரம் முடிகிறது.
நான்கு
வர்க்க அறிவோடு இயக்கத்தில் சேர்ந்த பெண் கைதிக்கு பெண்களின் அனுபவம் என்ற கோணத்திலிருந்தும், பெண்களின் நலன் என்ற கோணத்தில் இருந்தும் ஒவ்வொன்றையும் பரிசீலிக்கும் திறமையும் தீர்ப்பு கொடுக்கக்கூடிய கண்ணோட்டமும் கூட பழக்கமாயின.
பெண் கைதியான கதாநாயகி பெண்களை அவமதிக்கும் எந்த ஒரு விமர்சனத்தையும் அங்கீகரிக்க மாட்டாள். டாக்டர் ஒருமுறை பேச்சுவாக்கில், “பெண்கள் எந்த காரணத்திலாவது தீவிரமான கோபத்தோடு இருந்தால் முன்பின் யோசிக்கும் சக்தியை இழந்து விடுவார்கள்” என்று கூறிய போது அவள் அதனை எதிர்க்கிறாள். ஓரொருமுறை முன்னும் பின்னும் ஆலோசிக்க முடியாத பெண்களும் இருப்பார்கள், ஆண்களும் இருப்பார்கள் என்பது அவளுடைய அபிப்பிராயம். நல்ல குணங்களுக்கு ஆண் பெண் என்ற பேதம் இல்லை என்று கூறுகிறாள்.
பெண்களின் மனதை ஆழும் காண முடியாது என்று டாக்டர் சொன்ன சொல்லுக்கு அவள், “பெண்களை ஆழத்திற்கு தள்ளி விட்டது ஆண்களே” என்று அழுத்தமாகக் கூறி, “ஆழத்தில் கிடக்கும் அவர்களுடைய மனதின் ஆழம் எவ்வாறு உங்களுக்குச் சிக்கியது?” என்று வினா எழுப்புகிறாள்.
ஆழத்திற்கு தள்ளப்பட்டதனால் பெண்களுக்கு ஏற்பட்டுப்போன பலவீனங்கள் அனைத்தின் மீதும் ஒரு தெய்வ குணத்தை ஏற்றி, இனி அவர்கள் என்றுமே கிளர்ச்சி செய்யாதபடி செய்தது ஆண் சமுதாயமே என்பது அவளுடைய அபிப்பிராயம்.
பரோலில் வெளிவந்து மீண்டும் சிறைக்குச் செல்லும் பெண் கைதி டாக்டரின் வீட்டுக்குச் சென்ற போது இருவரும் தோட்டத்திற்கு செல்கிறார்கள். டாக்டருக்கு அவளை நீ என்று ஏக வசனத்தில் அழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அன்று அங்கு அவர்கள் இருக்கும் வரை அவ்வாறே அழைக்கிறான்.
அவள் மணத்தக்காளி பழங்களைப் பறித்துத் தின்றபோது, “என்ன இது பைத்தியக்கார தீனி?” என்று கூறி அவளுடைய கையைத் தட்டி விட்டான்.. பழங்கள் எல்லாம் கீழே விழுந்தன. அதன் பின்பு தோட்ட அறையில் காபி குடித்த போது கொஞ்சம் காபி புடவையின் மீது சிந்திய போது அவன், “அப்பப்பா! உனக்கு சற்றும் புத்தி இல்லை” என்று எரிந்து விழுந்தான்.
அவளால் எதிர்வினையாற்றாமல் இருக்க முடியவில்லை. “பாவம். இந்த டாக்டருக்கு ஒரு பெண் மனைவியாக வேண்டும் என்றும் மனைவி என்ற பெண் ஏதாவது தவறு செய்தால் அவளை கண்டிக்க வேண்டும் என்றும் எத்தனை நாள்களாக ஆசை உள்ளதோ? இதனைத்தும் பெண்ணடிமைத்தனம் ஜீரணித்துப் போன லட்சணமே என்று மனதில் எண்ணுகிறாள். அதையே அவனிடமும் கூறுகிறாள்.
வாழ்க்கையையும், அதில் உள்ள ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பாலினக் கோணத்திலிருந்து பார்க்க முடியும் என்றும் பார்க்க வேண்டுமென்றும் பெண்ணிய இயக்கம் எடுத்துக் கூறுகிறது. தெலுங்கில் அந்த சைதன்யம் 1990 வது தசாப்தத்தில்தான் வேகம் பிடித்தது. அது அளித்த விமர்சனபூர்வமான பார்வையும் விவாதத்திற்கு எடுத்து வந்த பாலியல் உறவோடு தொடர்புடைய எண்ணங்களும் நான்கு தசாப்தங்களுக்கு முன்பே விசாலாட்சி எழுதிய கைதி நாவலில் முளை விட்டிருப்பதைக் காண முடிகிறது.
பெண் கைதியின் அந்தரங்க வேதனை, சிந்தனையின் செயல்முறை போன்றவை மூலம் நவீன கருத்து நிர்மாண பிரசாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படைப்பு என்பதால் இதனை ‘ஆலோசனைகளின் நாவல்’ (Novel of Ideas) என்று கூறலாம்.