- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
ஹொன்னாவர் 1604

கோகர்ணம் மகாபலேஷ்வர் கோவிலுக்கு வெகு அருகே மஹா கணபதி ஆலயத்தில் ரோகிணியை பரமன் திருமணம் செய்துகொண்டார்.
ரோகிணி இந்திய போர்த்துகீஸ் கலப்பினப் பெண். பரமனை விட நானூறு வயது மூத்தவள். ஊமத்தை யுத்தத்தில் முழு போர்த்துகீஸ் இனத்தவனான அண்டோனியோ சகாரியோ என்ற தன் முதல் கணவனை இழந்தவள். அதற்கு அப்புறம் முழுக்க இந்திய வம்சாவளியினளாகத்தான் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறாள்.
லிஸ்பனில் சிறிய பூர்வீக வீடு, உறவுக்காரர்கள் என்று இருந்தாலும் உத்தர கன்னடப் பிரதேசமான ஜெருஸப்பா, ஹொன்னாவர், பட்கல், உள்ளால் இப்படி இங்கே வசிப்பதைத்தான் மரியாதைக்கும் மகிழ்ச்சிக்கும் உரியதாக உணர்கிறாள்.
முதல் கணவன் இறந்தபிறகு இந்திய மிட்டாய்க்கடை வைத்து செல்வம் கொழிக்கிறாள். ராஜகுமாரன் நேமிநாதனுடைய தொடுப்புப் பெண் அவள். அவன் மூலம் பெற்றெடுத்த பிள்ளை மஞ்சுநாதனுக்கு மூணு வயது.
மஞ்சுவுக்குத் தகப்பனாக பரமனைக் காட்டுகிறாள் ரோகிணி. எங்கப்பாவும் எங்கம்மாவும் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க என்று மஞ்சுநாதன் ஒத்த வயதுக் குழந்தைகளோடு விளையாடும்போது சொல்லி வைத்து அந்த நாள் இன்றைக்கு அவனுக்கு லட்டுருண்டை வடிவிலும் ரவைலாடு வடிவிலும் சந்தோஷம் கொண்டு வந்தது.
கல்யாணத்தை ஜெருஸோப்பாவில் நடத்தத்தான் முதலில் திட்டம். கோவில் சூழ்ந்த கோகர்ணத்தில் வைத்துக் கொண்டால் தெய்வ சந்நிதியில் திருமணம் நடப்பதோடு, ஜெருஸோப்பாவின் பெருங்கூட்டம் ஏதுமின்றிப் போகும் என்று அடுத்து ரோகிணி முடிவு செய்தாள்.
கோகர்ணம் ஹொன்னாவரிலிருந்து முப்பது கல் தொலைவில் என்பதால் ஹொன்னாவர் மிட்டாய்க்கடை ஊழியர்கள் தங்கள் கடை உடமையாளர் ரோகிணிக்கும் முக்கிய மடையர் பரமனுக்கும் கல்யாணம் என்று ஒரு சாரட் வண்டியிலும். இன்னொரு வாகன் குதிரை வண்டியிலும் வந்து இறங்கிப் பத்து நிமிஷம் ஆகிறது. மொத்தம் பதினாலு பேர் மாப்பிள்ளை, மணப்பெண்ணைச் சேர்த்து.
மொணமொணவென்று முணுமுணுப்பாக தூறல் மழை காது மடலை நனைத்துக் கொண்டிருக்க பரமன் ஒரு சாரட்டில் இருந்து இறங்கினார். அவர் மனம் முணுமுணுத்தபடி இருந்தது –
‘இது சரியில்லே. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுத்து. இன்னொரு கல்யாணம் செய்துக்க மனம் இல்லை. என் பெண்டாட்டி ஷாலினிதாய் இறந்ததால் நான் விதவன். ரோகிணியின் கணவன் அண்டானியோ இறந்ததால் அவள் விதவை. ரெண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ராஜகுமாரரே ரோகிணியிடம் சிபாரிசு செய்திருக்கிறாராம். அதை ஏன் ரோகிணியிடம் சொல்ல வேண்டும்? என்னிடம் இல்லையா சொல்லணும்?’
அவரவர்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. ராஜகுமாரர் நேமிநாதனுக்கு ஜெருஸுப்பா அரசராக வேண்டும். போர்த்துகீசியர்களோடோ, ஒல்லாந்தியரோடோ சேர்ந்து காசு சேர்க்க வேண்டும். ரோகிணியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். ரோகிணிக்கோ ஒன்று நேமிநாதனோடு முதல் ராணியாக அரசாங்கத்தை நடத்த வேண்டும். ஜெருஸுப்பாவிலும் ஹொன்னாவரிலும் பக்கத்து கிராமங்களிலும் வீடும் மாளிகையும் நிலமும் தன் பெயரில் இருக்க வேண்டும். பரமனைக் கல்யாணம் செய்து கொண்டு நேமிநாதனின் காமக்கிழத்தியாக, புறம்பெண்ணாக இருப்பதில் அவளுக்குக் குற்ற உணர்வு ஏதுமில்லை. பரமனுக்கு இங்கே நடப்பதெல்லாம் எந்த விதத்திலும் அவரைப் பாதிக்காது. ஒரே ஒரு லட்சியம் எப்படியாவது நாக்பூருக்கோ பம்பாய்க்கோ அவருடைய காலத்துக்குத் திரும்பப் போக வேண்டும். அதற்காக என்ன வேணுமானாலும் செய்வார் அவர்.
”ஒவ்வொருத்தரா வாங்கோ. எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்திலே உள்ளே வந்தா பின்னாலே இருந்து தரிசனம் பண்ணிண்டு இருக்கறவாளுக்கு ஒண்ணும் தெரியாது”. கோவில் ஸ்தானிகர் சோமசுந்தர பட்டர் கணீரென்ற குரலில் சொல்லித் தமிழில் பழம்பாடல் எதுவோ பாட்டும் இல்லாமல் வாசிப்பும் இல்லாமல் ராகம் இழுக்கிறார். தேவாரமா என்று கேட்கிறார் பரமன். அவர் முகம் தீபாராதனை வெளிச்சத்தில் தமிழ்ப் பாடல் கேட்ட பெருமகிழ்ச்சியில் மலந்திருக்கிறது. ’தேவாரமா?’ என்ற கேள்வியை எப்போதாவது சந்திக்கும் பட்டரும் சந்தோஷம் அடைகிறார்.
”ஆமா, திருக்கோகர்ணம் தேவாரம். அப்பரும் பாடியிருக்கார். சம்பந்தரும் பாடியிருக்கார். இது அப்பர் தேவாரம்” என்று பாட ஆரம்பிக்கிறார் –
சந்திரனும் தண்புனலும் சந்தித்தான்காண்
தாழ்சடையான் காண் சார்ந்தார்க்கு அமுதானான்
மொழி புரியாவிட்டாலும் உதவி மடையன் ரமணதிலகனும் சுற்றுப் பற்றுக் காரியம் நோக்கும் பெருந்தேவனும் பரமன் பின் நின்று பாடல் முடியும்வரை கண்மூடிக் கைகுவித்து நெக்குருகி இருக்கிறார்கள்.
கோவில் வாசலில் இன்னொரு சிறிய சாரட் வந்து நிற்கிறது. ரோகிணி காஞ்சிபுரம் பட்டுத் துணியில் நெய்த புதுப் பிடவை உடுத்து நிற்கிறாள். பக்கத்தில் பிடவை அணிந்து மணப்பெண்ணின் தோழியாக கஸாண்ட்ரா. ரோகிணியின் கண்கள் உறக்கம் காணாமல் சற்றே களைத்திருக்கின்றன. அவள் கையைப் பிடித்தபடி மூன்று வயது மஞ்சுநாத்- அவளுடைய மகன் நிற்கிறான்.
நேற்று ராத்திரி பாதிரா வரை பரமனின் கையைப் பிடித்துக்கொண்டு ரோகிணி அழுது கொண்டிருந்தாள். எல்லாம் மஞ்சுநாத்தின் எதிர்காலம் பற்றித்தான். நேமிநாதன் வந்து போக இருக்க அவன் கர்ப்பதானம் கொடுத்த பீஜ வித்து, மஞ்சுநாத்.
நாளையே அரசு மிளகுராணியிடமிருந்து சாதாரணமாகவோ, முயற்சி கடினமாக்கியோ நேமிநாதனுக்குக் கிடைத்தால் ரஞ்சனாதேவி அரண்மனையின் ஒரு சிறு பகுதியில் இருக்க வைக்கப்படுவாள். மகாராணியாகப் போவது ரோகிணி தான்.
ஒரே ஒரு இக்கட்டு, அவள் மட்டும் வர வேண்டும். மஞ்சுநாத்தை எங்கோ துரத்திவிட்டாலோ, உயிர்ச்சேதம் செய்தாலோ நேமிநாதன் கண்டுகொள்ள மாட்டானாம். பதவியா பாசமா என்று தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது ரோகிணி தான் என்று கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறானாம். மஞ்சுநாத்தை பரமன் தான் காப்பாற்ற வேண்டுமாம்.
இந்தத் திட்டமும் நேமி சொன்னதுதான். பெயருக்குக் கல்யாணம். மஞ்சுவின் தந்தை ஆவார் பரமன். அவருடைய காலத்துக்குப் பரமன் போக வழிசெய்ய ரோகிணியும் நேமிநாதனும் ஆப்ப்ரிக்காவில் சிறந்த மகாமந்திரவாதிகளைப் பயன்படுத்துவார்கள். மிளகுக் கிழவியை ஒழித்துக்கட்ட மந்திரவாதம் நடத்த அந்த மந்திரவாதிகள் நன்னம்பிக்கை முனையில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்களாம். அதோடு பரமனுக்காகவும் அவர்கள் மந்திரவாதம் செய்வார்களாம். காலம் நழுவி வந்தவர்களை அவரவர் காலத்துக்கு அனுப்பிவைத்த அனுபவம் உள்ளவர்களாம் அவர்கள்.
“ஆக, நம் மூன்று பேருக்கும் நினைத்தது கிடைக்கும். சரி என்று சொல்லுங்கள்” என்று கெஞ்சினாள் ரோகிணி. புலரும் நேரம் தான் சம்மதம் சொன்னார் பரமன். இந்த கோகர்ண யாத்திரை அதன் பின் நடப்பாகிறது.
வழியெல்லாம் பரமன் இந்தப் புதுப் பந்தத்தைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டே வந்தார். இரண்டு பேர் இன்றிலிருந்து அவருடைய பொறுப்பில் வந்திருக்கிறார்கள். எப்படி இது பாதிக்கும்?
ரோகிணியோ நேமி கடன்காரனோ ஆப்பிரிக்க மந்திரவாதியோ சீன மந்திரக்காரனோ இல்லை இரண்டு பேரையும் கூட்டுச் சேர்த்தோ ஏதோ யந்திரமோ வேறெதுவோ செய்து பரமனை அவருடைய காலத்துக்கு நாக்பூருக்கோ பம்பாய்க்கோ கொண்டு போய்த் திருப்ப விட்டால் எப்படி இருக்கும்?
தனியாக இல்லை, பாண்டுப் சாலில் அவரோடு கச்சு அணிந்து புடவை கர்னாடகத்துக்கும் கர்னாடகமான மோஸ்தரில் அணிந்து தலையில் நீளமான கொண்டையோடு அம்புலிமாமா குழந்தைகள் பத்திரிகையில் வரும் சித்திரங்களிலிருந்து இறங்கிய மாதிரி வந்தால் எல்லோரும் என்ன நினைப்பார்கள்? மூன்று வயது மஞ்சுநாதனை எப்படி வரவேற்பார்கள்?
திலீப் நானூற்றுச் சில்லரை வயது மூத்த, ஆனால் பார்க்க மூன்றாம் வயதில் நிற்கும் சிறுவனாக அவனை அண்ணா என்று கூப்பிடுவானா, அல்லது தம்பி என்று அழைப்பானா?
பாண்டுப் சால்? 1960-ஆம் வருஷம் இருந்ததென்னமோ உண்மைதான். இன்னும் இருக்குமா என்ன? இப்போது என்ன வருஷம்?
திலீப் எங்கே போயிருப்பான்? ஷாலினி இருப்பாளா? சக்களத்தி சண்டை வருமா, இருந்தாள் என்றால்?
கோவில் மணியோசை பரமன் மனதை மஹாகணபதிக்கு முன் மறுபடி நிற்க வைத்தது.
கோகர்ணம் மஹாகணபதி சந்நிதியைத் தனிக் கோவிலாகவே வணங்குவதால் சின்னக் கோவிலுக்கு வந்துடுங்கோ எல்லாரும் என்று கோவில் பட்டர் சொன்னதும் எல்லோரும் கணபதி சந்நிதிக்கு நடந்தார்கள்.
அதற்கு முன், மஹாபலேஷ்வருக்கும் கோகர்ணேஸ்வரிக்கும் தீபாராதனை எடுத்து மஞ்சுநாதன் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது.
மதறாஸ் நீலகண்டன் பரமேஸ்வர ஐயர் மற்றும் அவர் தர்ம பத்னி பரதேசவாசி லிஸ்பன் துரைக்கு ஏகபுத்ரி ரோகிணி மதுரங்காடி ஆகியவர்களின் புத்ரனான, சீமந்த அதெல்லாம் வேணாம் என்று வெறும் புத்திரனாக்கினார் பரமன், புத்ரனான மஞ்சுநாதனுக்கு ஆயுள் தீர்க்கமாக இருக்கவும்.. அர்ச்சனைக்கு முன் உரிமைப் பட்டியல் படிக்கப்பட்டது.
கோகர்ணம் மகா கணபதி க்ஷேத்ரத்தில் கோவில் ஸ்தானிகர் சுருக்கமாக மந்திரம் சொல்ல, கஸாண்ட்ராவும், ரமணதிலகனும் ரோகிணிக்கும் பரமனுக்கும் மாலை எடுத்துத்தர, மாலை மாற்றித் திருப்பூட்டியானது.
பிள்ளையார் சந்நிதி வெளிப் பிரகாரத்திலேயே ஓர் ஓரமாக கல்யாண விருந்தாகக் கொண்டு வந்த ஜெயவிஜயிபவ இனிப்பு, பிஸிபேளாஹூளியன்ன, மிளகு சாதம், எலுமிச்சை சாதம், ததியோன்னம் என்று இலைத் தொன்னைகளில் வழங்கப்பட்டு கடைசியாக பால் பாயசமும் பருகத் தந்து கல்யாணம் ஒரு வழியாக நிறைவேறுகிறது.
சடங்குகள் நிகழும்போது கல்யாணப் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தரோடு ஒருத்தர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதும், அந்தப் பதினாலு பேர் கூட்டத்தில் தணிந்த குரலில் விருந்தாளிகள் பேசியது மட்டுமல்லாமல், மஞ்சுநாத் சிறுபையலைத் தவிர ஓடியாடி உற்சாகமாகப் பொழுது கழிக்க யாரும் முற்படவில்லை என்பதும் குறிப்பிடத் தகுந்தது.
கல்யாணம் முடிந்த பிறகு ஏதோ சம்பிரதாயத்தை நிறைவேற்றுவதுபோல் கல்யாண கோஷ்டியே கோகர்ணம் கடற்கரைக்குப் போய் அலைகளைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தது. பெரியவர்கள் விளையாடும் பொழுது குழந்தை மஞ்சுநாதன் உறங்கிவிட, சாரட்டின் உள்ளே துயில வைக்கப்பட்டான்.
கோகர்ணம் கடற்கரையில் இருந்து இரண்டு சாரட் வண்டிகளும் புறப்படும் முன் ராஜகம்பீரமாக இன்னொரு சாரட் அங்கே வந்து நின்றது. யாரும் மகிழ்ச்சியையோ ஆத்திரத்தையோ தெரிவிக்கும் முகபாவங்கள் இல்லாது பார்த்துக் கொண்டிருக்க, சாரட்டில் இருந்து நேமிநாதன் இறங்கினான். வந்தவன் பரமனை நகரச் சொல்லிவிட்டு, சாரட்டில் ரோகிணியைத் தனியாக ஏறச் சொன்னான். உள்ளே அவன் பலமாகச் சிரிக்கிற சத்தம் அலைகளோடு போட்டியிட்டுக் கேட்டது. கல்யாணப் பெண்ணை எப்படி முத்தமிடணும் என்று கேட்டபடி சாரட் கதவை அவன் சார்த்தி ஐந்து நிமிடம் சென்று திறந்தது பிடிக்காமல் கஸாண்ட்ரா அலைகளில் கலந்து அவன் முகத்தில் வடியட்டும் என்று சொல்லித் துப்பிய எச்சில் அமிலமாக கோகர்ணம் கடற்கரையைத் தகித்தது.
ராத்திரி பதினொரு மணிக்கு சோபான ராத்திரிக்கு ரோகிணியை அழைத்து வந்து கஸாண்ட்ராவும், பரமனைக் கூட்டி வந்து ரமணனும் காத்திருக்க, நேமிநாதன் அதிரடியாக உள்ளே வந்தான். பரமனை வெளியே போகச்சொல்லிக் கைகாட்டி ரோகிணியைக் கதவைச் சார்த்தச் சொன்னான். அவள் பரமனைக் கெஞ்சுவது போல் பார்த்துக்கொண்டு தன் விதிக்கு சுயபச்சாதாபப்பட்டது போல் முகம் தழதழத்திருக்க கதவைச் சார்த்தப் போனாள். உண்மையாகவே அப்படி நினைப்பு இருக்கும். அல்லது இதுதான் தேவைப்படும் உணர்ச்சி என்று கருதி முகத்தில் அணிந்திருக்கலாம். பரமன் போகும்போது ரோகிணியைக் கட்டி அணைத்து அவள் வளைகள் குலுங்க நேமிநாதன் முத்தமிட்ட சத்தம் நாராசமாகப் பரமன் காதில் ஒலித்தது.
உள்ளே இருந்து வந்த ஒலிகளைக் கேட்டுக்கொண்டு குழந்தை மஞ்சுநாதன் அருகில் படுத்துக் கிடந்தார் பரமன். அந்த சத்தம் தேய்ந்து மறைய ராப்பறவை ஒன்று ஒலியிட்டு மெல்லப் பறந்து போனது. கடல் வீட்டுக்கு அருகே வந்தது போல் தோன்றியது.
ஹொன்னாவர் கடற்கரையில் அலைகள் மூர்க்கமாக மோதி நேமிநாதனை சபிப்பதைக் கேட்டபடி அவர் சற்று நேரத்தில் உறங்கியும் விட்டார்.