மித்ரோ மர்ஜானி – 7

This entry is part 7 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

தனவந்தியின் முகம் கறுத்தது.

” வீடு நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். இங்கு ஒளிவு மறைவு என்பதற்கு இடமே இல்லை” என்றாள்.

பன்வாரி பெருமூச்சு விட்டான். தலையை தடவிக் கொண்டே, ” என்ன சொல்லட்டும் அம்மா. நீங்கள் தான் பிரமையில் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த வீட்டு மானம் மரியாதை என்று எதுவும் இப்போது மீதம் இல்லை. ஒவ்வொரு விரலாகச் சொடுக்கி, அம்மாவிடம் தன் மனதில் இருந்ததை எடுத்து வைத்தான். நடு மருமகள் மித்ரோவின் பொருட்டு, பத்து இருபது கண்கள் இந்த வீட்டை எந்நேரமும் சுற்றி சுற்றி வருவதும் நோட்டம் விடுவதும் நல்லதிற்கில்லை அம்மா. அன்பாக பேசி, நான்கைந்து மாதங்கள் அவளைத் தன் அம்மா வீட்டில் இருந்து விட்டு வரச் சொல்லுங்கள்” என்றான்.

தனவந்தியின் கண்களின் முன் சம்மந்தி பாலாவின் முகம் தோன்றி மறைந்தது. “மித்ரோவின் அம்மா பலே கைகாரி ஆயிற்றே. அங்கே போனால் இவள் இன்னும் திமிர் பிடித்து அலைவாளே! எல்லாம் நம் போதாத காலம் பன்வாரிலால்! இவள் நம் தலையில் வந்து விடிய வேண்டும் என்று இருந்திருக்கிறது. இல்லாவிட்டால் அம்மாவையும் மகளையும் பற்றி நமக்கு யாராவது ஏதாகிலும் தகவல் சொல்லி இருக்க மாட்டார்களா? விதியை யாரால் வெல்ல முடியும்?” என்றாள்.

வாசற்படியில் நின்று கொண்டு, சுஹாக், ” அம்மா பாலை உறை ஊற்றி விடவா?” என்று கேட்டாள்.

கவனம் எங்கோ இருக்க, தனவந்தி சரி என்று தலையசைத்தாள்.

சுஹாகின் தலை மறைந்ததும், ” மகனே, நம் தலையில் வந்து விடிந்திருப்பதை பொறுத்துக் கொண்டு தானே ஆக வேண்டும்? மறந்தும் கூட சுஹாக் கவலைப்படும்படியான விஷயம் எதையும் அவளிடம் பகிர்ந்து கொள்ளாதே. ஆமாம், இன்று சர்தாரி கண்ணில் படவே இல்லையே?” என்றாள்.

“பக்கத்து கிராமத்தில் கணக்கு வழக்கு பாக்கி இருக்கிறது. அதை முடிக்கப் போயிருக்கிறான் அம்மா. மாலைக்குள் திரும்புவானா என்பது சந்தேகம்” என்றான் பன்வாரி.

அறையின் வாசல் வரைக்கும் சென்று, தனவந்தி, திரும்பிப்பார்த்து, ” குல்ஜாரியை எப்போதாவது பார்க்க முடிந்ததா?”என்று கேட்டாள்.

பன்வாரி அம்மாவை பார்த்த சிரித்து, ” கொஞ்ச நாள் அவன் மாமியார் வீட்டு சாப்பாட்டை சாப்பிடட்டும் அம்மா. லாலா தானே வழிக்கு வருவான்” என்றான்.

தன்வந்தி எழுந்து வெளியே வந்தாள். மித்ரோவின் அறைக் கதவு மூடி இருப்பதை பார்த்து ஒரு நிமிடம் நின்றாள். கதவைத் தட்டி குரல் கொடுத்தாள்.”மகளே சுமித்ரா வந்தி, இன்று சீக்கிரமாகவே தூங்கி விட்டாயா?” என்று கேட்டாள்.

கதவை திறப்பதற்கு முன்பே, மித்ரோ மாமியாருக்கு மரியாதை செலுத்தினாள்.

“சுமித்ரா வந்தி, சுமித்ரா வந்தி, இந்த வீட்டில் நிம்மதியாக தூங்கக்கூட முடிவதில்லை. என்னை மருமகளாகவா நடத்துகிறீர்கள்? வாசற்படியில் கட்டி தொங்கவிட்டி ருக்கிற முத்துக் குஞ்சலம் போலத்தான் நானும். எந்த நிமிடம் திருடன் கொண்டு போவானோ, கொள்ளைக்காரன் கொண்டு போவானோ என்று தானே எப்போதும் கவலை!” என்று பொரிந்து கொட்டினாள்.

மித்ரோ கதவை திறப்பதற்குள், தனவந்தி என்னவெல்லாமோ யோசித்து விட்டாள். அவளது இதயம் வெகு வேகமாகத் துடித்தது. சர்தாரி வேறு இன்று வீட்டில் இல்லை. வேறு ஏதாவது விபரீதம் செய்து வைத்திருப்பாளோ?

கதவு திறந்தது. மித்ரோ கடுகடு வென்ற முகத்துடன், ” நான் இல்லாமல் அப்படியென்ன குடி முழுகி விட்டது அம்மா? தூங்கிக் கொண்டிருப்பவளை எழுப்பும்படி அப்படி என்ன தலை போகிற அவசரம்? எனக்கு பாலும் தேனும் கொடுக்க வந்திருக்கிறீர்களா ? ” என்றாள்.

தனவந்தி அறைக்குள் வந்து நின்று கொண்டாள். “மகளே உன்னை விட பாலும் தேனும் உயர்வானதா என்ன? வேண்டுமானால் இனி தினமும் கொண்டு வருகிறேன். உன் கிழ மாமியாரை என்ன வேண்டுமானாலும் சொல். நான் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டேன்” என்றாள்.

மித்ரோ மாமியாரை கூர்ந்து பார்த்து, புருவங்களை நெறித்து,” இந்த வீண் பேச்சு எல்லாம் என்னிடம் வேண்டாம். இப்போது எதற்காக வந்திருக்கிறீர்களோ அதை முதலில் சொல்லுங்கள்” என்றாள்.

தனவந்தி மருமகளை முதல்முறையாக ஆசீர்வதிப்பவள் போல, ” நீ நூறாண்டு சந்தோஷமாக வாழ வேண்டும். நான் உன் கொழுந்தனிடம் உனக்கு ஜிமிக்கி செய்ய வேண்டும் என்று சொல்லத்தான் வந்தேன்” என்றாள்.

மித்ரோவின் உதடுகளில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது. உடலை ஒயிலாகக் குலுக்கிக் கொண்டு, “எனக்கா? என் மீது என்ன திடீர் கருணை அம்மா? மித்ரோ உங்களுக்கு பேரன் பேத்தியை பெற்று தரப் போகிறாளா என்ன? ஜிமிக்கியை உங்களுக்கு பேரணைப் பெற்றுத் தரப் போகிற அந்த அதிர்ஷ்டசாலி மருமகளுக்கே கொடுங்கள்” என்றாள்.

தனவந்திக்கு கோபம் வரவில்லை. அவளை சமாதானப்படுத்துகிற விதத்தில், ” உன் ஓரகத்திக்கு மட்டும் என்ன அதிசயமாக குழந்தை பிறக்கப் போகிறதா? நீ மனது வைத்தால் ஒன்றென்ன ஏழேழு குழந்தைகள் இந்த முற்றத்தில் ஓடி விளையாடுவார்கள்” என்றாள்.

மித்ரோ முதலில் மாமியாரை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் பிறகு தரையில் சப்பனம் கொட்டி அமர்ந்து கொண்டு தலையை அசைத்து, “இன்னும் நனைத்து நனைத்து நன்றாக அடியுங்கள் அம்மா. ஆறேழு எதற்கு? எனக்கு ஐம்பது நூறு பிறக்கும். முடிந்தால் எண்ணி கௌரவ சேனையை பெற்று போடுவேன். ஆனால், அம்மா, உங்கள் மகனுக்கும் ஏதாவது வழி பாருங்கள். அப்படியாவது இந்தக் கற்சிலையிலும் ஏதாவது அசைவு ஏற்படுகிறதா என்று பார்க்கலாம்” என்றாள்.

தனவந்திக்கு உடல் முழுவதும் முள் குத்துவது போல் இருந்தது.

” ச்சீ! ச்சீ மருமகளே, இப்படி எல்லாம் தவறாகப் பேசக்கூடாத.’ பிறகு, மகன் பன்வாரி கூறியதை நினைவுபடுத்திக் கொண்டு, ” நீ இப்படி மனதை தளர விடலாமா? இதற்கு நூறு மந்திரங்கள், பூஜைகள், நோன்பு விரதங்கள் என எத்தனையோ வழிகள் இருக்கின்றனவே! போதாததற்கு நீயும் ஆரோக்கியமாக தானே இருக்கிறாய்?” என்றாள்.

இதைக் கேட்டு மித்ரோ குலுங்கி குலுங்கி சிரித்து,

“அம்மா, நான் வரம் கொடுக்க எப்பொழுதும் தயாராகத்தான் இருக்கிறேன் ஆனால், பாவம், பக்தனுக்குத் தான்….”

தனவந்தி மருமகளின் வாயை பொத்தி, ” போதும் நிறுத்தி விடு மருமகளே” என்றாள். பின்பு வந்த கோபம் அனைத்தையும் விழுங்கி விட்டு, வாஞ்சையுடன், “நான் சொல்வதையும் ஒரு முறை கேட்டு தான் பாரேன் சுமித்ரா ராணி” என்றாள்.

மித்ரோ உண்மையிலேயே தன்னை நம்பிக்கையுடன் பார்ப்பதைப் பார்த்து, இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள எண்ணி, தனவந்தி காய்களை வீசினாள்.” மகளே, நீ வேண்டுமானால் இரண்டு மூன்று மாதங்கள் உன் அம்மா வீட்டிற்கு சென்று தங்கி விரதமோ நோன்போ செய். இங்குள்ளவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன். நீ விரத பூஜைகளை முடித்துவிட்டு இங்கு வரும்போது, உன் மனம் போல் நடக்கும்” என்றாள்.

வாய் திறந்து எதுவும் கேட்காமலேயே, தான் விரும்பியது கைக்கெட்டப்போவதில், மித்ரோ பெரு மகிழ்ச்சி அடைந்தாள். பிறந்த வீட்டிற்குச் சென்று தன் பழைய தோழர்களையும் தோழிகளையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப்போவதில், மித்ரோ அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. உற்சாகத்துடன் மாமியாரை குனிந்து வணங்கி, ” பெரிய மகாராணி! உங்கள் ஆக்கினையை நான் தட்ட மாட்டேன். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, எப்படி சொல்கிறீர்களோ, முற்றிலும் அதே போலவே செய்வேன். உங்கள் மகனிடமிருந்து நான் விரும்பியதைப்பெற, ஒன்றிரண்டு மாதங்கள் என்ன, இருபத்தினாலு பக்ஷங்கள் கூட விரதம் இருக்க தயார்” என்று குதூகலித்தாள்.

****

அம்மா மகளைப் பார்த்தாள். மகளோ அண்ணன்களை பார்த்துக் கொண்டிருந்தாள். யாரும் எதுவும் சொல்வதற்கு முன்பாக குஜாரிலால், படி ஏறி மேலே வந்தான்.

மாயவந்தி மகள் ஃபூலாவை முறைத்து பார்த்தாள்.” உன் இளம் சிங்கத்தின் வினோதமான நடவடிக்கையை பார்த்தாயா? காலையில் போனவர், துரை, இப்பொழுது தான் வருகிறார். வீட்டில் இருப்பவர்களிடம் ஒரு பேச்சு உண்டா? வணக்கம் உண்டா? இவரை சாதாரணமாக எடை போட்டு விடாதே. சரியான நெஞ்சழுத்தக்காரன்” என்று படபடவென பொரிந்தாள்.

பலகையில் இருந்து ஏப்பம் விட்டுக் கொண்டே எழுந்த ஃபூலாவின் அண்ணன் சத்தி, விரலைச் சொடுக்கி, ” அம்மா, அவரிடம் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். உட்கார்ந்த இடத்திலேயே சாப்பிட, இங்கு ஒன்றும் அன்னச்சத்திரம் எதுவும் திறந்து வைத்திருக்கவில்லை. சின்ன வேலை சொன்னால் கூட குப்த காசியில் போய் ஒளிந்து கொண்டு விடுகிறார்” என்றான்.

மாயாவந்தி நாற்பறமும் கவனமாக பார்த்து, ஜாடையால் மகளை சும்மா இருக்கும்படி சொல்லிவிட்டு, மருமகளுக்கு குரல் கொடுத்தாள்.” மருமகளே, மாப்பிள்ளை குல்ஜாரி லால் களைத்து வீடு திரும்பியிருக்கிறார். அவருக்கு தட்டு வைத்துச் சாப்பாடு பரிமாறு” என்றாள்.

கோபத்தில் உள்ளூர எரிந்து கொண்டிருந்த ஃபூலா, நேரே மாடிக்கு போனாள். திரைச்சீலையை தள்ளிக் கொண்டு உள்ளே சென்று, கட்டிலில் படித்துக் கொண்டிருந்த குல்ஜாரியை நோக்கி கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்தாள்.

” இன்றைக்கு சவாரி எங்கெங்கெல்லாம் ? சொல்லுங்கள், நானும் தெரிந்து கொள்கிறேன்” என்றாள்.

குல்ஜாரி திரும்பிப் பார்க்கவும் இல்லை. எதுவும் பேசவும் இல்லை.

ஃபூலா இன்னும் கொஞ்சம் கொதித்தாள். ” என் அம்மா பாவம், உங்களுக்காக சாப்பாட்டை வைத்துக்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறாள். முதலில் சாப்பிட்டுவிட்டு வாருங்கள். பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்றாள்.

குல்ஜாரி லால் இப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. கண் மூடிப் படுத்திருந்தான். முகத்தில் கோபம் படர்ந்திருந்தது.

கணவனின் புறக்கணிப்பால் ஃபூலோவின் நெஞ்சு கொதித்தது. எழுந்து, அருகில் வந்து, கணவன் போர்த்திருந்த போர்வையை அகற்றினாள்.

“உங்களுக்கு என்னைப் பார்க்க வெறுப்பாக இருந்தால், கொஞ்சம் விஷம் வாங்கி கொடுத்து விடுங்கள். என் வீட்டு மனிதர்கள் முன்பாவது என் மானம் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

குல்ஜாரி வெறுப்புடன் ஃபூலோவை ஒரு முறை பார்த்து விட்டு, மறுபடியும் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டான்.

ஃபூலாவந்திக்கு குழப்பமாக இருந்தது. “அய்யோ, என் அம்மா உண்மையத்தான் சொல்கிறாள்.” கண்டிப்பாக தன் அம்மாவை தரிசனம் செய்து விட்டுத் தான் வந்திருப்பார். ஃபூலாவந்தி, சடாரென முந்தானையால் மூக்கை சிந்தினாள். உடனே கண்களிலிருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. இரண்டொரு நொடிகளில், பெரிதாக குரல் எடுத்து கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள்.

குல்ஜாரி சுவர் பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு படுத்ததைப் பார்த்ததும், ஃபூலாவந்தி, படார் படாரென்று தலையில் அடித்துக்கொண்டாள். ” மந்திரம் மாயம் செய்து என்னை உன்னிடமிருந்து பிரிக்க நினைப்பவர்கள் செத்துப் போகட்டும். கண்டதையும் சொல்லி உன்னிடம் என்னைப்பற்றி கோள் மூட்டுபவார்கள் நாசமாய் போகட்டும்” என்று விரல் நொடித்து சாபமிட்டாள்.

அழுகுரல் கேட்டு, நடுவில் புகுந்து சமாதானம் செய்ய, மாயாவந்தி மேலே ஏறி வந்தாள். கையில் சாப்பாட்டுத் தட்டுடன் அறை வாசலில் நின்று கொண்டு மகளை கடிந்து கொண்டாள். ” கொஞ்சமாவது அறிவிருக்கிறதா உனக்கு? காலையிலேயே கிளம்பி வேலைக்கு போய்விட்டுக் களைத்துத் திரும்பி இருக்கிறார். வந்ததுமே சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டாயே. மகனே குல்ஜாரி, கொஞ்சமேனும் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொள்” என்றாள்.

குல்ஜாரி மாமியாருக்கும் அசைந்து கொடுக்கவில்லை.

“மகனே குல்ஜாரி, உங்கள் இருவருக்கிடையே இருக்கும் கோபதாபம் எல்லாம் அன்பின் நிமித்தம் தான். எழுந்து வந்து சாப்பிட்டுவிட்டு படுங்கள். வேலை முடிந்தால் இந்த கிழவியும் சமையலறையை சுத்தம் செய்து விட்டு படுக்கப் போவேன்” என்றாள்.

மாமியார் அடம் பிடிப்பதைப் பார்த்து, குல்ஜாரிலால் படுக்கையிலிருந்து எழுந்து, ” எனக்குப் பசியே இல்லை பாவோ! நீங்கள் சமையலறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள்” என்றான்.

ஃபூலாவந்தி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, ” பசி எப்படி எடுக்கும் பெரிய முதலாளிக்கு? அம்மா வீட்டில் வசவும் கேலியும் கிண்டலும் சாப்பிட்டுவிட்டு வந்திருப்பாரே! அதிலேயே வயிறு நிரம்பி இருக்கும்! என்றாள்.

மாயவந்தி போலியாக மகளை வாயை மூடச் சொல்லி அதட்டினாள். பிறகு மாப்பிள்ளை குல்ஜாரியின் பக்கம் திரும்பி, ” மகனே குல்ஜாரி, இந்த அப்பாவியின் பேச்சை பொருட்படுத்தாதே. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் உன் நினைப்பில் தான் இவளும் சாப்பிடாமல் இருக்கிறாள். ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்கவில்லை. மாலையிலிருந்தே உன்னை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். நீ சாப்பிட்டால் தான் இவளும் கொஞ்சம் சாப்பிட்டு தொண்டையை நனைப்பாள்” என்றாள்.

குல்ஜராரி ஏதோ சொல்ல வருவதற்குள், ஃபூலாவந்தி, கண்கள் இருண்டு, தலை சுற்றி, கீழே விழுந்தாள். அவளுடைய தலை, எதிரே இருந்த சுவற்றில் மோதியது.

” ஐய்யய்யோ! யாராவது வாருங்கள். தண்ணீர் கொண்டு வாருங்கள்” என்று அலறியபடி மாயாவதி தன் மகளை தாங்கிக் கொண்டு மடியில் படுக்க வைத்துக்கொண்டாள். மாப்பிள்ளையை பார்த்து, ” இப்படி கல்நெஞ்சக்காரனாய் இருக்காதே. எழுந்து வந்து உன் மனைவியை கவனித்துக் கொள்” என்றாள்.

மாமியாரின் வசைச் சொற்களைக் கேட்ட பிறகும் குல்ஜாரி அசையாமல் படுத்துக் கிடக்கவே, மாயாவந்திக்கு உடலும் மனமும்

எரிந்தது. தொண்டை கிழிய தன் மகன்களுக்கு குரல் கொடுத்தாள்.

தத்தம் மனைவிமார்களிடம் இந்த சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொண்டு, சத்தியும் கிருஷ்ணாவும் தடதடவென மேலே வந்தபோது, மாயாவந்தி தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

“மகனே இவனை அப்புறம் கவனித்துக் கொள்ளலாம். முதலில் தங்கையை காப்பாற்றுகிற வழியைப் பாருங்கள்” என்றாள்.

குல்ஜாரியை கூரிய கத்தியால் கிழித்து விடுவது போன்று, ஒரு பார்வை பார்த்துவிட்டு சத்தி தங்கையின் முகத்தில் தண்ணீரை தெளித்தான்.

மாயாவதி ஃபூலாவின் வாயில் சிறிது தண்ணீரை ஊற்றினாள். அது தொண்டைக்குள் போகாமல் வெளியே வலிந்தது. திடீரென ஃபூலாவந்தியின் கால்கள் இழுத்துக் கொண்டன. அவளது உதடுகள் “ஒரு வெள்ளை வெளேர் பூதம் என் மார்பை கிழித்து கொண்டிருக்கிறது” என்று முணுமுணுத்தன.

மாயவந்தி, மூக்கு விடைக்க, குஜராிலாலை வன்மமாக பார்த்துவிட்டு, மகளின் தலையை கோதி, “கண்ணே, அந்த பூதம் தன் ரத்தத்தைத் தான் குடிக்கும். நீ கண்ணை திறந்து பாரம்மா உன் அம்மா உன் அருகில் தான் இருக்கிறேன்” என்றாள்.

மகள் லேசாக கண் திறந்து உடனே மூடிக்கொண்டாள். மயக்கத்திலேயே மறுபடியும் பேச ஆரம்பித்தாள் – என் ஹரியின் கோவிலுக்குச் செல். நான் அங்கே போய் சன்னியாசிணியாகிவிடுவேன். என் மீது என் எதிரிகள் யாரோ சாபமிட்டு விட்டார்கள்! என் கடவுள் என் கணவன் என்னிடம் பாரா முகமாக இருக்கின்றான்!” என்று புலம்பினாள்.

இரு கண்களிலிருந்தும் கண்ணீர் தாரையாக வழிந்தது.

மாயாவதி தொடர்ந்து மகளின் கண்ணீரை தன் முந்தானையால் துடைத்துக் கொண்டிருந்தாள். அவளது காதுகளில் கிசுகிசுத்தாள்.

“உன் பகைவர்களின் தலையிலேயே அந்த சாபம் விடியட்டும். கொஞ்சம் கண்ணை திறந்து பார் மகளே” என்று புலம்பினாள்.

பதிலளிக்கும் விதமாக ஃபூலோ மறுபடியும் முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

“பாவோ, நான் இறந்துவிட்டால் உன் மாப்பிள்ளையை குற்றம் சொல்லாதே. அவருக்கு சர்க்கரைப்பாகில் தோய்த்த பூரிகள் என்றால் மிகவும் உயிர்” என்றாள்.

மாயவந்தி குல்ஜாரியை கண்ணால் எரித்து விடுவது போல பார்த்து, “கேள்! என் ஆசை மகள் என்ன சொல்கிறாள் என்று கேள்!” என்று பொரிந்தாள்.

எதுவும் பேசவோ சொல்லவோபோவதில்லை என்று சபதம் செய்தவன் போல, குல்ஜாரி தலை குனிந்து மௌனமாக இருந்தான். மாமியாரும் மைத்துனர்களும் கேட்டு கேட்டுப் பேசி அலுத்த பின்பும் குல்ஜாரி வாய் திறக்கவில்லை.

எனவே அண்ணன்கள் தங்கையை கையில் தூக்கிக்கொண்டு பக்கத்து அறையிலிருந்த அம்மாவின் படுக்கையில் கிடத்தினர்.

நாத்தனாருக்கு பாலும் பாதாமும் தண்ணீரும் எடுத்துக்கொண்டு ஃபூலாலவந்தியின் சிறிய அண்ணி, மேலும் கீழும் ஏழெட்டு முறை ஏறி இறங்கினாள். சமயம் பார்த்து அறைக்குள் எட்டிப் பார்த்தபோது குல்ஜாரிலால் இன்னமும் கட்டிலிலேயே படுத்துக் கொண்டிருப்பதை பார்த்து அவளது சிறிய உதடுகளில் பெரிய விஷமப் புன்னகை பரவியது. பார்வையை தாழ்த்திக் கொண்டு மெல்ல அருகே சென்று, கிசுகிசுப்பான குரலில், ” சபாஷ்! என் அருமை நாத்தனாரின் அன்புக் கணவரே! சபாஷ்! இந்த நாடகக்கார அம்மா பெண்ணின் நாடகத்தை நீங்கள் என்றைக்காவது ஒரு நாள் புரிந்து கொள்வீர்கள் என்று நீங்கள் வந்த முதல் நாளே நான் நினைத்தேன். அப்படியே நடந்து விட்டது” என்று சொல்லிவிட்டு விடுவிடு என்று கீழே இறங்கிப் போனாள்.

******

ஃபூலாவந்தி பிறந்த வீட்டிற்கு போன கையோடு ஜன்கோவும் தன் புக்ககம் திரும்பினாள்.வீட்டில் மறுபடியும் கலகலப்பு திரும்பியது. தனவந்தி மருமகளுக்காக புது துணிமணிகள் வாங்கினாள். அம்மா சொன்னதின் பேரில் பன்வாரி தம்பி மனைவிக்கு புது ஜிமிக்கிகள் செய்து தந்தான். சுஹாக் ஓரகத்திக்காக, துப்பட்டாவின் இருபுறமும் வெவ்வேறு கலர் சாயம் ஏற்றி, அதில் தன் கைகளால் ஜரிகைப் பூவேலை செய்து கொடுத்தாள்.

மகிழ்ச்சியில், தரையில் கால் பாவாமல் துள்ளி ஆடிக் கொண்டிருக்கும் மித்ரோ, அண்ணி சுஹாக்வந்தியிடம், ” இங்கு எல்லாம் தலைகீழாக நடக்கிறது அண்ணி! பிறந்து வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு போகும் போது தான் இப்படி சீர் செலுத்தி நகைகள் செய்து போட்டு பெண்ணை அனுப்புவார்கள்! இங்கு, புகுந்த வீட்டிலிருந்து பிறந்து வீட்டிற்கு போகும் எனக்கு வகைவகையாக சீர் செய்து அனுப்புகிறீர்கள் என்று கூறி மகிழ்ந்தாள்.

சுஹாக் சிரித்துவிட்டு, ” நீ பிறந்த வீட்டிற்கு போய்விட்டு சந்தோஷ மூட்டையைச் சுமந்து கொண்டு வருவாய் என்றுதான் அம்மா உன்னை அனுப்பவே சம்மதித்தார்கள்” என்றாள்.

மித்ரோ கண் சிமிட்டி, ” நன்றாக சொன்னீர்கள் அண்ணி. என் பிறந்த வீட்டில் சந்தோஷ மரமா நட்டு வைத்திருக்கிறார்கள், நான் பிடுங்கிக் கொண்டு வர?” என்றாள்.

சுஹாக் புன்னகைத்து, ” உண்மையைத்தான் சொல்கிறாய் சகோதரி! சந்தோஷத்தை வளர்க்கவோ விற்கவோ முடியுமா என்ன? அது அவரவர் மனதில் அல்லவா உருவாகிறது!” என்றாள்.

” அட! இப்படி ஆன்மீக விஷயங்களை பேசிப் பேசி, நீங்களும் ஒரு நாள் சன்னியாசினியாக மாறி உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள் போலிருக்கிறதே! அண்ணி! அழகாக உடை உடுத்தி, மனதுக்குப் பிடித்ததை சாப்பிட்டு சந்தோஷமாக இருங்கள்! இந்த உயிர் பறவையை எப்படி நம்புவது? இன்றிருக்கும். நாளை பறந்து விடும்!”

சுஹாக் பேச்சை திசை திருப்பி, ” உனக்கு எது வரை விடுமுறை தந்திருக்கிறார்கள்? என்று கேட்டாள்.

மித்ரோ, கண் சிமிட்டி, ” போக வர எல்லாம் சேர்த்து இரண்டு மாதங்கள் தான்” என்றாள்.

சுஹாக் சிரித்தாள்.”என் கொழுந்தன் சர்தாரியையும் நீ சன்னியாசி என்று நினைத்து விட்டாயா சகோதரி? உன் நினைப்பு வந்த உடனேயே தன் அழகு சுந்தரியை கூட்டிக்கொள்ள பறந்து வந்து விட மாட்டாரா என் கொழுந்தன்! என்றாள்.

மித்ரோ ஓரகத்தியின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து கேட்டாள் – “நான் வர மறுத்தால்?”

“வராமல் எப்படி இருப்பாய் சகோதரி? சிவன் இருக்கும் இடத்தில் தானே பார்வதியும் இருப்பாள்!” என்றாள்.

மித்ராவுக்கு அண்ணியின் மீது பாசம் பொங்கியது. அவளது மோவாயை பிடித்துக் கொண்டு, “அண்ணி நான் திரும்பி வந்தவுடன் உங்களுக்கும் உங்கள் மகா தேவருக்கும் என் கையால் ஹல்வாவும் பூரியும் செய்து தருவேன், சரியா?” என்றாள்.

சுஹாகின் மந்தப் புன்னகையை பார்த்து, மித்ரோ அவளை கேலி செய்தாள். “அண்ணி உண்மையைச் சொல்லுங்கள் இப்போது நீங்கள் உங்கள் கணவரை விட்டுப் போவதாக இருந்தால், எத்தனை நாளில் திரும்பி வருவீர்கள்?”

சுஹாக், லேசான வெட்கத்துடன், “ஒன்று, இரண்டு…இல்லை..நான்கு… அதிகபட்சம் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள்! அதற்கு மேல் எப்படி?” என்று சொல்லத் தவித்தாள்.

ஓரகத்தி கணக்குப் போட தவிப்பதை பார்த்து, மித்ரோவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கண் சிமிட்டி, உதடுகளை நாவைச் சுழற்றி நனைத்து, “கலியுகம் அண்ணி! கடுமையான கலியுகம்! உங்களைப் போன்ற வெள்ளந்தியான பெண்ணின் மனதில் கூட இத்தனை ஆசைகளா?” என்றாள்.

சுஹாக் மித்ரோவை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருத்து விட்டு, மெல்லிய குரலில், ” மாமியார் உன்னை பிறந்து வீட்டிற்கு போய்விட்டு வரச் சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் நீ என் கொழுந்தனின் சம்மதத்தோடு போகிறாயா?” என்று கேட்டாள்.

மித்ரோவின் கண்களில் ஒரு நொடி நேரம் மின்னல் ஒன்று பளிச்சிட்டு மறைந்தது. முகத்தை சுளித்துக்கொண்டு, ” இந்த மாதிரி அடக்கி ஆள்கிற ஆண் வர்க்கத்திற்கு ஒத்து ஊதுகிற அடிமை அல்லவா நான்! அவருக்கு பல நாட்கள் என்னிடம் பேச, ஏன், என் கண்களைப் பார்க்க கூட நேரம் இருப்பதில்லை. நான்தான் அவரது குர்தாவின் நுனியை இழுத்துக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது” என்று அலுத்துக் கொண்டாள்.

சுஹாக், உதட்டில் விரலை வைத்து, மித்ரோவை எச்சரிக்கும் குரலில், “என் கொழுந்தன் சர்தார் தெய்வத்துக்கு சமமானவன்! சகோதரி, அத்தகையவனிடம் நீ எத்தனை நாள் பொய் பித்தலாட்டம் செய்ய முடியும்? கெட்ட வழியில் மனம் செல்வதை நிறுத்திவிடு சகோதரி! ஒரு நாள் நாம் அனைவருக்குமே அந்த நியாயாதிபதியின் சபையில் ஆஜராக வேண்டிவரும்!”

எப்போதும் போல, மித்ரோ கண்களை சிமிட்டி, ” பயம் எனக்கெதற்கு? எல்லாரையும் விடப் பெரிய அந்த நீதியரசனின் சபையில் ஆஜராகும் போது, அந்தப் பெரிய சபையில் நீதி அளிப்பவர்களும் ஆண் வர்கம் தானே. உன் ஓரகத்தியின் முறை வந்து, பெயரைச் சொல்லி கூப்பிடும் போது அந்த எல்லாம் வல்ல ஆண்டவனின் பார்வை, அவள் மீதும் படும் இல்லையா?” என்று கேட்டுவிட்டு வழக்கம்போல கலகலவென்று சிரித்தாள்.

மித்ரா சிரிப்பதை பார்த்து, சுஹாக் அவள் தலையில் தட்டி, தலையை லேசாகக் கீழே அழுத்தினாள்.” ஹே ராம்! உன் பேச்சை கேட்டதில் நானும் பாவியாகி விட்டேன்! சகோதரி, தலைவணங்கி கடவுளிடம் மன்னிப்பு கேள்!” என்று அதட்டினாள்.

மித்ரோ அப்படி எதுவும் செய்யவில்லை. சிரித்துக் கொண்டே எழுந்து நின்றாள்.பிறகு, ஓரகத்தியை சீண்டும் விதமாக, தனது இரண்டு கட்டை விரல்களையும், நெற்றிக்கு மேல் வைத்து அசைத்தபடியே,”போதும் அண்ணியாரே இந்த உருட்டல் மிரட்டலையெல்லாம் உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். பிறப்பு இறப்பு கணக்கை பரிபாலிக்கும் அந்த எல்லாம் வல்ல இறைவன், உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை; மித்ரோவுக்கும் அவன் உறவு தான்” என்றாள்.

*****

தனவந்தி சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். பாலை சுண்டக்காய்ச்சி, ஊதி அதை ஒரு லோட்டாவில் ஊற்றி, புடவை தலைப்பால் மூடிக்கொண்டு மருமகள் சுஹாகின் அறையை நோக்கி நடந்தாள். ஜன்னல் வழியாக அறையிலிருந்து விழுந்த வெளிச்சத்தை பார்த்து தாயின் மனம் பெரிதும் மகிழ்ந்தது. கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். கட்டிலில் படுத்திருந்த மருமகளைப் பார்த்து பூரித்துப் போனாள். தளர்ந்திருந்த மேல் சட்டையில் வெளிறிய முகத்துடன் படுத்திருந்த மருமகளை பார்த்ததும், மனதிற்குள்ளேயே இறைவனை கையெடுத்து கும்பிட்டுக் கொண்டாள். மருமகள் சுஹாக்வந்தி மகாராணியை போலல்லவா படுத்திருக்கிறாள்!

வாஞ்சையோடு ‘சுஹாக்வந்தி’ என்று அழைத்தாள். மாமியாரின் இனிய குரலைக் கேட்டுச் சோர்ந்து படுத்திருந்த சுஹாக் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். கூச்சத்துடன், “எனக்கு குரல் கொடுத்திருக்கலாமே அம்மா” என்றாள்.

முந்தானை நுனியில் முடிந்து வைத்திருந்த இனிப்பிலிட்ட நெல்லிக்காய் துண்டுகளை மருமகளின் உள்ளங்கையில் வைத்து, ” இதை சாப்பிடு. கூடவே ஒரு வாய்ப்பாலும் குடித்துவிடு. வயிறு குளிர்ச்சியாக இருக்கும்” என்றாள்.

பால் குடித்துவிட்டு லோட்டாவை கீழே வைத்த மருமகளை நேராக படுக்க வைத்து, தனவந்தி, அவளது கைகள், தோள்கள், இடுப்பு, கால் என ஒவ்வொரு அங்கமாக மிருதுவாக பிடித்து விட்டாள்.சுஹாகிற்கு முதலில் தயக்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது. பிறகு அந்த சுகத்தை அனுபவித்தவாறு, மாமியாரின் முகத்தை பார்த்துக் கொண்டே படுத்துக் கிடந்தாள்.

” அம்மா மித்ரோ போய் சேர்ந்து தகவல் எதுவும் இல்லையே. கொழுந்தனும் இன்னும் திரும்பி வரவில்லையே” என்று கேட்டாள்.

“இரண்டு மூன்று நாட்கள் இருந்து விட்டுப் போகும்படி வற்புறுத்தி சம்பந்தி அம்மாள் நிறுத்திக் கொண்டிருப்பாள் மகளே! உன் கொழுந்தன் அடிக்கடி மாமியார் வீட்டுக்கு போகிறானா என்ன?” என்றாள்.

தனவந்தி, மனதுக்குள்ளேயே எதையோ கூட்டி கழித்து கணக்கு போட்டுக் கொண்டு, வெகு நேரம் வரை மௌனமாக உட்கார்ந்திருந்தாள். பிறகு சுஹாகிடம், ” மகளே, நீயும் தான் ஓரிரு வருடங்களாக உன் ஓரகத்திடன் பழகி வருகிறாய். உண்மையாகச் சொல், இந்த உலகம் உன் ஓரகத்தியைப் பற்றி ஏதேதோ கதைகளை கட்டுகிறதே, அவையெல்லாம் உண்மையாக இருக்கும் என்று நீ நினைக்கிறாயா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.

***

Series Navigation<< மித்ரோ மர்ஜானி 6மித்ரோ மர்ஜானி – 8 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.