
மதிய நேர உணவு இடைவேளையில், பள்ளியை விட அதிக இரைச்சலாக இருக்கிறது. கொரோனோவிற்குப்பிறகு, பணியாளர்களை வேலைக்கு நேரில் வர ஊக்குவிக்க அலுவலத்திற்கு உள்ளே மதிய உணவு தரப்படுவதே அதற்குக்காரணம். புதன் அன்று இந்திய வகை உணவும், மற்ற நாட்களில், மேற்கத்திய, அல்லது, மலாய் மற்றும் சீன உணவுகளும் இருக்கின்றன.
விலைவாசிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள நகரங்களில், உலக மாதாவின் நெற்றியில் உள்ள மிகச்சிறிய பொட்டு போல இருக்கும் குட்டித்தீவும் ஒன்றல்லவா?
சிங்கப்பூரில் மதிய உணவு இலவசம் என்பது நல்லெண்ணம் கொண்ட நிறுவனங்கள் செய்யும் புது முயற்சி. எல்லாருமாக உணவருந்தும் நேரம், பிணைப்பும் அதிகமாகும் என்று அவை நம்புகின்றன.
புதனன்று மசாலா வாசனை தூக்கலாக உள்ள சிக்கன் பிரியாணியும், வடை போன்றவையும், மேற்கத்தியர்களை ஈர்த்தாலும், பெரும்பாலும், கொதிக்க வைத்தே இறைச்சியைச் சாப்பிடப்பழகிய சீனர்களுக்கு அது கஷ்டம் தான்.
மஞ்சள் முகத்தில் அசூயை ஒட்டியபடி இருக்கும் வேலரியைப்பார்த்தால் அதிசயமாக இருக்கும்.
எப்போதும் மஞ்சள், மல்லி, மிளகாய் என்று வாழும் இந்தியர்களும், பெரும்பாலும் வேக வைத்தே சாப்பிடும் மெல்லிய தேகம் கொண்ட சீனர்களும், உலகின் முக்கிய நாகரிகங்களின் எச்சங்கள் என்பது முரண்.
அன்று ஜின் லியோங் ஐரோப்பாவிற்கு தேனிலவு சென்று திரும்பியிருந்தான். பாரிஸ், லண்டன் என்று சில நகரங்களுக்கு சென்று வந்த சந்தோஷம் அவன் முகத்தில் பளிச்சிட்டது.
தன்னுடைய பெட்டிகள் தொலையாமல் இருக்க அதில் ஒரு தடம் நோக்கும் மின்னணு சாதனத்தைப் (GPS Tracker) பெட்டிகள் ஒவ்வொன்றிலும் இணைத்ததாகச் சொன்னான். நான்காக வாங்கினால், அமேசான் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறதாம்.
விமானத்தினுள் ஏறிய பிறகு, தன் கைபேசியில் பெட்டிகள் விமானத்துக்குள் வந்துவிட்டன என்று உறுதி செய்துகொண்டதாகச் சொன்னான்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், திறன்பேசி இல்லை. அன்று இருந்ததெல்லாம் அடிப்படை வசதி மட்டுமே கொண்ட ஒரு கைபேசி. யாராவது அழைத்தால் பேசலாம். விமானத்துக்குள் அதை மறந்தும் பயன்படுத்தமுடியாது.
அமெரிக்காவிலிருந்து, புறப்படும்போதிருந்த பெப்ரவரி மாதப் பனிப்புயலில் சிக்கி, ஒரு நாள் இரவை நியூயார்க் விமான நிலையத்திலேயே கழித்து, கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்ததில், என் பெட்டியைக் காணவில்லை.
பெட்டிக்குள் பல பரிசுப்பொருட்கள் இருந்தன. கிடைத்தால் பெட்டியும், கிடைக்காவிட்டால் நஷ்ட ஈடும் கிடைக்கும் என்றார்கள். ஒரு வாரம் கழிந்ததும், முற்றிலும் பிளாஸ்டிக் மேல் உடை அணிந்த பெட்டி, பத்திரமாய், பனிப்புயலில் சேதமின்றி வீடு வந்து சேர்ந்தது.
தடம் நோக்கி இருந்தால் மட்டும் என்ன? நான்கு விமானங்கள் மாறிய நெடும்பயணத்தில் நடுவழியில் இறங்கி பெட்டி இல்லை என்றா நின்றிருக்க முடியும்?
இன்றைய செய்தி: கேரளாவிலிருந்து துபாய் சென்ற விமானத்தின் சரக்குப்பகுதியில் பாம்பு இருந்ததாம். பாம்பின் குடும்பம் தடம் வழி செயலியைப் பயன்படுத்தி இருந்தால், திரும்பி வர முடியாத நெடுவழிப்பயணத்திலிருந்து தங்கள் குடும்ப உறுப்பினரைத் தப்ப வைத்திருக்கலாம்.
சிந்தனையின் ஓட்டத்தில் இருந்த என் கவனத்தைக்கலைத்தாள் வேலரி.
“அந்தக்கருவி எத்தனை வெள்ளி? உன்னிடம் உள்ளதை நான் வாங்கிக்கொள்ளலாமா?
“நான் என் மனைவியைக் கேட்க வேண்டும்” என்றான் ஜின் லியாங்.
“அது சரி. நீங்கள் தான் சிங்கப்பூரை விட்டு வெளியூர் பயணம் போவதில்லையே. உங்களுக்கு எதற்கு?”
“என் மகன் இப்போது தொடக்க நிலை நான்கில் படிக்கிறான். அவனுக்குத் துணைப்பாட வகுப்பு, பள்ளியில் உள்ள மாணவர் பராமரிப்பு நிலையத்துக்கு வெளியே சில நூறு மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அவன் சரியாக வகுப்புக்குப்போகிறானா என்பதைக்கண்காணிக்க இது நிச்சயம் உதவும்”
அதிர்ச்சியாக இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல், தட்டிலிருந்து உணவை மென்றேன்.
“ஏன் அவனைக் கண்காணிக்க வேண்டும்?”
“இது விளையாட்டுப்பருவம் தானே. அப்படியே அவன் ஓரிரு நாட்கள் பொன்டெங் செய்தாலும், அதனால் உங்களுக்கு ஒரு பெரிய நட்டம் வராது. புகை பிடிப்பது போன்ற பழக்கமெல்லாம் தொடக்க நிலை வகுப்பில் எங்கே வரப்போகிறது?”
என்றபடி அவளை யோசிக்க வைக்க முயன்றான் ஜின் லியாங். அவன் சொன்ன எதுவும் அவள் செவியில் நீண்ட மஞ்சள் நிற நெகிழி தொங்கட்டான்களைத் தாண்டி உள்ளே புகவில்லை.
“பொன்டெங் என்றால்?”
இந்த குழுவில் இருக்கும் ஒரே இந்தியதேசத்துப் பிரஜை என்பதால், அவர்கள் சிங்கிலிஷ்(Singlish) பயன்படுத்தும்போது எனக்கு அருஞ்சொற்பொருள் சொல்ல வேண்டியிருக்கிறது.
“அது ஒரு மலாய் சொல். பள்ளிக்குப் போக வேண்டியவன் அங்கு போகாமல் வேறெங்கோ போவதைக்குறிக்கும்” பற்கள் தெரியச் சிரித்தபடி சொன்னாள் வேலரி. முன்னாள் சிங்கப்பூர் விமான முன்னாள் பணிப்பெண்ணான அவளின் முத்துப்பல் வரிசை சினேஹாவை ஞாபகப்படுத்தும்.
காதில் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை இருந்த தோட்டின் அடையாளமாக ராமநாதபுரம் ஆச்சி பாணியில் பெரிய ஓட்டையோடு இருந்த ஜின் லியாங் என் கண்களுக்கு “தொளைக்காது சித்தர்” போலவே தோன்றினான்.
வயது முப்பத்துக்குக்கீழே தான் இருக்கும். அவனுக்கு இருக்கும் பக்குவம் கூட இருபிள்ளைகளின் தாயான வேலரிக்கு இல்லையே ?
“அவன் பள்ளிப்பையில் கோர்த்துவிடலாம் என்று நினைக்கிறேன்”
“ஆனால் அவன் பள்ளிப்பையைக் கூடைப்பந்து மைதானத்தில் வைத்துவிட்டு எங்காவது பள்ளியை விட்டு வெளியே சென்றுவிட்டால்? “
“எனக்கு அவன் சாலையை ஒழுங்காகக் கடக்கிறானா என்று தெரியவேண்டும்.
விளையாடாமல் ஒழுங்காக வகுப்புப்போகிறானா என்று பார்க்கவேண்டும்.”
“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்…” வேண்டும் வேண்டும் என்று வள்ளலார் வேண்டியது வேறு வகை. நாகரிக அம்மா வேண்டுவது முற்றிலும் வேறு வகை.
“பக்கத்தில் ஆப்பிள் சாதனங்கள் இருந்தால் மட்டுமே அவை, உங்கள் கருவி இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை உங்கள் திறன்பேசிக்குக்கொடுக்கும். சாலையில் அந்நேரம் யாரும் ஆப்பிள் செயலியோடு போகவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?”
“அப்படியா சொல்கிறாய்? நான் இருபத்திநான்கு மணிநேரமும் உடனடியாக தடம் பார்க்கும் என்று நினைத்தேன்” ஏமாற்றத்தோடு கடைசி வாய் பீ ஹுனை முள்கரண்டியில் எடுத்து மென்றபடி சொன்னாள்.
“இப்போது அவனுக்குத் தெரியாமல் போகலாம். இரண்டொரு ஆண்டுகளில் அவனுக்கு அம்மா தன்னைச் சென்ற இடமெல்லாம் தொடர்கிறாள் என்பது தெரிந்துவிட்டால், அவன் அதிர்ச்சி அடையலாம். உங்கள் மேல் அவனுக்கு உள்ள நம்பிக்கை குறையும்போது அவன் பதின்பருவத்தை எட்டியிருப்பான்.”
இந்த செயலியால் விளையப்போகும் தீங்கைப்பற்றி விரித்துச்சொன்னான் ஜின் லியாங். நாங்கள் எல்லாருமே அவனை வழிமொழிந்தோம்.
உணவோடு, அன்றைய பேச்சும் முடிந்தது.
அறிவியல் உபகரணங்களைத் தன் வசதிக்கேற்ப பயன்படுத்தத்துடிப்பவள் வேலரி.அவளின் இரண்டாவது குழந்தை வீட்டில், மிரண்ட ஒரு இந்தோனேசியப்பணிப்பெண் துணையோடு இருக்கிறது.
வீட்டுவேலைகளைச் செய்வதில் மும்முரமாக இருந்த பணிப்பெண் பார்க்கும்முன்னே ஒரு நாற்காலியில் ஏறி நின்ற குழந்தையை, ” கீழே இறங்கு” என்ற குரல் மிரளச்செய்ததை நானும் பார்த்தேன்.
வேலரி உற்றுநோக்கும் தொலைக்காட்சியோடு(CCTV), தன் ஒலிவாங்கியையும் சேர்த்திருந்தாள். குழந்தை அம்மா வந்துவிட்டாளா என்று அவள் குரலை குரலைக்கேட்டு அங்கும் இங்கும் தேடியது கொடுமையாக இருந்தது. எல்லா நேரமும் நம்மை ஒருவர் கண்காணித்தபடி இருக்கிறார் என்ற நிலை அந்த பணிப்பெண்ணுக்கு எப்படி இருக்கும்?
அன்றைய நாளின் எஞ்சிய மணிநேரங்களை , தாள்களைத் துண்டாகும் கருவி(Shredder) போல, வேலையும், கூட்டங்களும் மென்றன.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு நான் விடுமுறைக்காக இந்தியா போகிறேன். மூன்றாண்டுகளுக்குப்பின்னர் போகப்போகும் முதல் பயணம். சென்ற முறை இருந்த ருக்மிணி அத்தையும், ராமாமிர்தம் சித்தப்பாவும் கொரோனாவில் காணாமல் போய்விட்டார்கள்.
சொந்தங்களைப்பார்க்க போகும் ஆசையில் பெட்டியைக்கட்ட ஆரம்பித்திருக்கிறேன். அம்மாவுக்குப்பிடித்த முஸ்தபா வழு வழு சேலைகள், கோடாலி தைலம், இங்குக் கிடைக்கும் நூடுல்ஸ் வகைகள், பிடியுள்ள பால் காய்ச்சும் பாத்திரம், தலைக்கான மூங்கில் தலையணை, அப்பாவுக்கு சட்டைகள், புத்தகங்கள், சாக்லேட் வகைகள் என்று எடுத்து வைத்திருக்கிறேன். நான் இல்லாத இரண்டு வாரங்களில் என் வேலையைப்பங்கீடு செய்து என் குழுவில் உள்ள ஐவரிடமும் ஒப்படைப்பு செய்து வருகிறேன்.
இந்தியா ஒரு தேசமல்ல, அது என்னை ஆளும் வேறு உலகம். சென்னை விமான நிலையத்தில் கால்கடுக்க இரவு பதினோரு மணிக்கு நின்று, பெட்டிகள் வந்தவுடன் அவற்றை எடுத்துக்கொண்டு திறந்த ஜன்னல் இருந்தாலும் ஒரு வித சூடு உடலில் பரவ, பண்பொலியைக்கேட்டுக்கொண்டே ஓட்டுனருக்கு வழி சொல்லியபடி வீடு வந்து சேரும் வரை ஒரு வித பரவசமும், புன்னகையும் இருந்துகொண்டே இருக்கும்.
அடுத்து வரும்நாட்களில் அக்கம்பக்கத்தினர் கேட்கும், . “எப்போ வந்தே?” “எப்போ கிளம்புவ?” போன்ற மீள் கேள்விகளில் புன்னகைத்தபடி பதில் சொல்லிக்கொண்டிருப்பேன்.
இம்முறை அம்மாவோடு நல்லிக்கும், அம்பிகா அப்பளம் அங்காடிக்கும், டீ.நகருக்கு, கம்மல், சுடிதார் வாங்க என்று சுற்றி வந்துவிட்டேன்.
அம்மாவும் என்னோடு சுற்றத்தான் ஆசைப்படுகிறாள். அப்பாவின் பொறுமையின்மைக்கு, ஈடுக்கட்ட, என்றாவது வரும் மகளின் வருகையை அம்மாவின் மனம் எதிர்பார்த்தபடி இருக்கிறது.
ஆளுக்கொரு மல்லிகைக் கோர்த்த சரம் வாங்கித்தலையில் வைத்துக்கொண்டோம். பெசன்ட் நகர் கடற்கரையிலும் கால் நனைத்தாகிவிட்டது. கபாலீஸ்வரரைக் குசலம் விசாரித்தோம்.
இரு வாரங்கள் சிமெண்ட் தரையில் வெய்யில் நேரத்தில் சிந்திய நீரைப்போல போன சுவடுத் தெரியாமல் மறைந்துவிட்டன.
மீண்டும் போகும் நம்பிக்கையோடு,அம்மாவின் அன்பு என்று சொல்லாமல் சொல்லிய அப்பளம், ஊறுகாய்களோடு சாங்கி விமான நிலையம் வந்துவிட்டேன்,.
நாளையிலிருந்து மீண்டும் அலுவலகம் போக வேண்டும். மனதால் அம்மா வீட்டிலும், உடலால் சிங்கப்பூரிலும் இருக்கும் இந்த இரவில் அத்தனை வேகமாக தூங்க முடியாது.
அலுவலகத்துக்கென்று கைமுறுக்கும், சீடையும் எடுத்துக்கொண்டேன். சிங்கப்பூரர்களில் சீனர்களுக்கு, இந்திய இனிப்புகள் பொதுவாகப்பிடிப்பதில்லை. அவர்களுக்குப்பிடித்த உணவு முறுக்கும், தோசையும் தான்.
“வெல்கம். எப்படி இருந்தது உங்கள் விடுமுறை?” புன்னகையோடு பலரும் கேட்ட ஒரே கேள்வியை எதிர்கொண்டேன்.
நான் எல்லா நாடுகளுக்கும், மின் துடைப்பான்களை அவரவர் விற்பனைத் தேவைக்கேற்ப, தயார் செய்யும் ஆணை வழங்கும் பொறுப்பில் இருப்பவள்.
முதலில் தற்போதைய நிலவரத்தைத்தெரிந்துக்கொள்ளலாம் என்று கணினியைத்திறந்தேன். வேலரியின் பொறுப்பிலிருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் அதிக சரக்கு செல்லும்படியாக திட்டங்கள் மாற்றப்பட்டிருந்தன.
இன்று நான் இதைப் பார்த்திருக்காவிட்டால், மற்ற நாடுகள் விற்பனைக்கானச் சரக்கு இல்லாமல், கடைசி நேரத்தில் விமான வழி அனுப்பச்சொல்லி இருக்கும். அதற்கான மேல் செலவு சில மில்லியன் டாலர்களாவது இருந்திருக்கும்.
கடைசி நிமிடத்தயாரிப்பு, ஏற்றுமதி என்று எல்லாமே, திருமணத்திற்கு அதிக விருந்தினர்கள் வந்தால், சமாளிக்கும் சமையல்காரனைப்போல, அடித்துப் பிடித்து செய்ய வேண்டியிருக்கும். மேல் பதவிகளில் இருக்கும் பலருக்கும் நான் பதில் சொல்லும்படி ஆகலாம்.
நாங்கள் இருப்பது உலகத்தலைமையகம். ஒரு தாய் எப்படி எல்லா பிள்ளைகளின் தேவையையும் கருத்தில் கொள்வோளோ, அப்படித்தான் நாங்கள் இருக்க வேண்டும் என்பது விதி.
என்ன நடந்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது.
கணினித்திரையைப்பூட்டிவிட்டு வெலேரியை நோக்கி நடந்தேன்.
“ஹாய் வஸுதா. எப்படி இருந்தது உன் பயணம்?”
என்று பெரிதாய் பல்லைக்காட்டினாள். பொறுமையாக பதில் சொல்லிவிட்டு, “என்ன வேலரி! உன் பொறுப்பில் இருக்கும் நாடுகளுக்கு மட்டும் அதிக சரக்கு வரும்படி செய்திருக்கிறாயே?” என்று சொன்னமாட்டில், பெரிதாய் சிரித்தாள். எரிச்சலாக இருந்தது.”கண்டுபிடித்துவிட்டாயா? வெரி ஸ்மார்ட்!” என்றவளுக்கு அவள் செய்யும் இம்மாதிரி வேலைகளைத் தடம் பார்க்கும் கருவி என்று வரப்போகிறதோ?
அருமையாக இருந்தது மா.. .. கதை என்று கூறமுடியாது.. எதார்த்தமான நிகழ்வுகள்.. அதில் தான் எத்தனை சோகங்கள்.. எதிர்பார்புகள்…