பசி

மாலை நேர மெதுவோட்டத்திற்குப் பிறகு ஏதாவது சாப்பிட்டுவிட்டு வந்திருக்க வேண்டும். அவசர அவசரமாக குளித்து, கிராப் வண்டி ஒன்றைப் பிடித்து பேருந்து நிலையம் வருவதற்கும் விரைவுப் பேருந்து புறப்படும் நேரமும் சரியாய் இருந்தது. அதிலும் கிராப் ஓட்டுநரைக் கொஞ்சம் அவசரப்படுத்தி!  கிராப்பை விட்டு இறங்கிய இடத்தில் ஒருவன் பர்கர் விற்றுக் கொண்டிருந்தான். பர்கர் உண்பதில்லை. உண்ணக்கூடாது என்ற வைராக்கியத்திலும் இருந்தேன். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது அல்லவா! இப்போதிருக்கும் நிலையில், புல்லை என்ன .. எதைக் கொடுத்தாலும் தின்னும்.

இரண்டு மூன்று நாள்களுக்கு முன் வாங்கி வைத்த ரொட்டிகள் வேறு வீட்டில் இருந்தன. அதையாவது பையில் தூக்கிப் போட்டு எடுத்து வந்திருக்கலாம். எல்லாம் என் நேரம்!

எப்போதும் மூன்று கிலோ மீட்டர் மட்டும் மெதுவோட்டம் ஓடிவிட்டு, அடுத்து இரண்டு கிலோ மீட்டர் மெதுநடை நடப்பது வழக்கம். இன்று தலையில் ஏதோ ஏறி உட்கார்ந்து கொண்டு ஐந்து கிலோ மீட்டர்களையும் மெதுவோட்டம் ஓட வைத்தது. அதுவும் கடைசியில் விரைவோட்டம் வேறு. பசிக்காமல் வேறு என்ன செய்யும்? இந்தக் கால்களுக்கும் வயிற்றுக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். கால்கள் சொல்லி வயிறு மிக மோசமாய் பழிவாங்கத் தொடங்கியிருந்தது.

பேருந்தை நெருங்கும்போது, அங்கு ஒருவன் ஏதோ தின்பண்டம் விற்றுக் கொண்டிருந்தான். வாங்கிக் கொள்ளலாம் எனத் திரும்பிய நேரம்.. பஸ் புலாவ் பினாங் இப்போது புறப்படுகிறது… சீக்கிரம் என்று எவனோ உயிர் போவதுபோல் அலறிக் கொண்டு பயமுறுத்தினான். ஓடிச் சென்று பேருந்தில் அமர்ந்தேன். பேருந்து நிரம்பியதாகத் தெரியவில்லை. வெற்று இருக்கைகள் என்னைப் பார்த்துச் சிரிப்பதுபோல் இருந்தன. பெரும்பாலும் இந்த விரைவுப் பேருந்துகள் இருக்கைகள் நிரம்பாமல் கிளம்பாது. பெரும்பாலும்தான். சில நேரங்களில் ஓரிருவர் இருந்தாலே பேருந்து கிளம்பிவிடும். இடையில் ஷா ஆலாமிலும் கோலாலம்பூரிலும் எப்படியும் ஆள் கிடைத்துவிடும். அமர்ந்து 10 நிமிடம் ஆகியும் பேருந்து நகரவில்லை. அலறியவன் மட்டும் கையில் கிடைத்தால் இன்று அவன்தான் இரவு உணவு. 

கிள்ளானிலிருந்து பினாங்கு செல்ல எப்படியும் ஐந்து மணி நேரம் பிடிக்கும். வயிறு தாங்குமா … இதில் கேஸ்டிரிக் சிக்கல் வேறு… நெஞ்செல்லாம் ஒருவகை வலியும் எரிச்சலும் பரவி உயிரை எடுக்கும். அந்த வலி சில சமயங்களில் கைகளுக்கும் இறங்கி நெஞ்சு வலி போன்ற பதற்றத்தையும் உண்டாக்கிவிடும். நல்ல வேளை.. கேஸ்ட்ரிக் மாத்திரைகள் இருந்தன.

கிளம்பும்போதுகூட வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த டோயோட்டா விநோஸ் நக்கலாய் சிரிப்பது போலிருந்தது. வழக்கமாக எங்குப் போனாலும் கார்தான். இன்று என்ன ஆனதோ தெரியவில்லை. எல்லாம் தலைகீழாய் நடந்து கொண்டிருந்தது.

என்னை விட்டுட்டு பஸ்சுல போறியோ.. போ.. போ.. என்னை விட்டுட்டுப் போனதுக்காக நீ வருத்தப்படல… என் பேரை மாத்திக்கிறேன் என்று கூறுவதுபோல் இப்போது காதோரம் கேட்கிறது.  ஒருவனுக்கு எதற்கு மகிழுந்து ? பேருந்தே போதுமே என எண்ணம். காரில் வந்திருந்தால், விருப்பப்பட்ட நேரத்தில் கிளம்பி, விரும்பும் இடத்தில் சாப்பிட்டு, செவிக்கினிய பாடல்களைக் கேட்டுக்கொண்டு வந்திருக்கலாம். ம்ம்ம் … இப்போது புலம்பி என்ன?  நான் படும் பாட்டைக் கண்டால் கண்டிப்பாக டோயோட்டா வியொஸ் தன் பெயரை மாற்றிக் கொள்ளும்.

நமக்கு இக்கட்டான நிலை ஏற்படும்போது பழியை மற்றவர் மேல் போடுவதுதானே வழக்கம்.  அந்த வழக்கத்தில் இன்றும் தினா சிக்கினான். 

“பினாங்கு போக வேண்டும் வாடா..போய்ட்டு மறுநாளே வந்திரலாம். எல்லா செலவும் எனது” என்று கூப்பிட்டேன். வரவில்லையெனக் கூறிவிட்டான். அவன் மட்டும் வந்திருந்தால், காரில் வந்திருப்பேன். இப்போது? அவன்மேல் கோபம் கோபமாக வந்தது. இந்நேரம் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பார்த்துக் கொண்டிருப்பான். இந்நேரத்தில் அவன் வீட்டில் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டு இருளில் மூழ்க வேண்டும். என்னுடன் வராமல் இருந்ததற்காக அவன் வருந்த வேண்டும். 

“ச்சே.. என்ன மோசமான எண்ணம்,” என்னை நானே வைது கண்டேன். 

அப்படி இப்படி பேருந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார். தமிழர்தாம்!

“அண்ணே, எத்தனை மணிக்கெல்லாம் பினாங்கு போயிரலாம்?”

“ம் … இரண்டு மணிக்கெல்லாம் பட்டவர்த் போயிரலாம். பினாங்குல நீங்க எங்க போகனும்?”

“சை லேங் பார்க் னே”

அவர் கேட்டதாகத் தெரியவில்லை. இரண்டு மணிக்குச் சை லேங் பார்க்கில் சீனக் கடைகள் ஏதாவது ஒன்று திறந்திருக்கும். சீன உணவுகளுக்குச் சை லேங் பார்க் புகழ்பெற்ற இடம். இல்லையென்றால் பெலித்தா உணவகம். விடியற்காலை நான்கு மணிக்குச் சென்றாலும் கூட்டம் நிரம்பி வழியும். நம் நாட்டுக்குச் சுற்றுப் பயணம் வந்த யாரோ ஒரு டென்மார்க் பயணி, மலேசியர்கள் 24 மணி நேரமும் தின்று கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னானாம். நினைவுக்கு வந்தது. அந்தப் பட்டியலில் நானும் சேரப் போகிறேன். ரொம்பப் பெருமையாக இருந்தது.

ஒரு பெரும் ஹாரன் சத்தத்துடன் பேருந்து தன் பெருத்த உடலைத் தூக்கிக் கொண்டு நிலையத்தை விட்டு நகரத் தொடங்கியது. அதன் கனத்த தேகம் என் பசியைவிட சிறியதாகத் தோன்றியது எனக்கு. மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்தேன். இடது இருதயத்தின் பக்கம் லேசாக ஓர் எரிச்சல் ஊறத் தொடங்கியது. இது கண்டிப்பாய் அந்த வயிற்றின் வேலையாகத்தான் இருக்கும். பேருந்து ஓட்டுநரின் கையில் கைப்பேசி. ஒரு கையில் வலசைசையும் மற்றொரு கையில் கைப்பேசியும் வைத்துக் கொண்டு யாருடனோ வேகமாகப் பேசிக்கொண்டு பேருந்தைச் செலுத்திக் கொண்டிருந்தார். கைப்பேசியில் பேசிக் கொண்டே பேருந்து ஓட்டக்கூடாது என்பது போக்குவரத்துச் சட்டங்களில் ஒன்று. எவன் கேட்கிறான். அதாவது பரவாயில்லை.

‘’அதுவா…. இப்பதான் நாசி கோரேங் ஆயாம் ஒன்னு சாப்பிட்டேன். கம்முனு இருக்கு. அப்படியே நாசி லெமாக் ஆயாம் ஒன்றும் வாங்கிட்டேன். வழியிலா பசிச்சா சாப்பிடாம்ல,’’ என்று கூறிக் கொண்டிருந்ததை மட்டும் காது லபக்கென்று வாங்கிக் கொண்டது. என்னது நாசி லெமாக ஆயாமா ? இந்தப் பசிக்கு இப்போ கிடைச்சா ? கேட்கலாமா என்று மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல். ச்சே.. ச்சே.. எவ்வளவு அற்பத்தனம். அறிவு அறிவுரை கூறியது. பசி நாக்கை நீட்டிக் கொண்டு பத்ராளிகாளியாய் சிரிக்கத் தொடங்கியிருந்தது. நல்லவேளை பக்கத்து இருக்கையில் யாரும் இல்லை. ஒரு கனிம நீர் பாட்டிலாவாது வாங்கியிருக்கலாம். எவ்வளவு முட்டாள்தனம். காரில் எப்போதும் கனிம நீர் ஒரு பெட்டியாகவே இருக்கும். காரில் போய் பழக்கப்பட்டுவிட்டதால் இது போன்றவற்றில் கவனம் இல்லாமல் போய்விட்டது. 

அந்தச் சமயத்திலா அந்தப் பாழாய்ப் போன வாசம் மூக்கில் நுழைய வேண்டும் ? பின்னால் திரும்பிப் பார்த்தேன். நான்கு இருக்கைகள் தள்ளி இரு சீனத் தோழிகளின் மடியில் கே.எஃப்.சீ. பெட்டி ஒன்று இருந்தது. இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டே கோழி இறைச்சியைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து ஒரு சிறு புன்னகையை வீசினேன். பதிலுக்கு ஒரு கோழித் துண்டாவது வீசுவார்கள் இல்லையா? ஆனால், அவர்களின் பார்வை என்மேல் படவில்லை. கேட்டுப் பார்க்கலாமா….. அதைவிட பசியால செத்தே போயிரலாம் என்று தனமானம் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு கூறியது. அடி பாவிகளா…. அந்தக் கோழி வாசம் இல்லாம உங்களால தின்ன முடியாதா?

பசியின் கோபம் அதிகமாகியதுபோல் தோன்றியது. இதுதான் கொலை பசியோ!

விரைவுப் பேருந்து விரைவுப் பேருந்துதான். பேருந்து ஏறி ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும். இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது பேருந்தின் குளிர் என்னை மிகவும் அச்சுறுத்தும் . கல்லூரிக் காலங்களில் பேருந்து ஏறியது. வேலைக்குச் சென்று கார் வாங்கியவுடன் பேருந்து ஏறுவதை நிறுத்தியாகிவிட்டது. எனவே, பேருந்துகளைப் பற்றி நண்பர்கள் கூறும் தகவல்கள்தாம் நமக்குச் செய்தி. பேருந்து தாப்பாவை நெருங்கிக் கொண்டிருக்கும்போது வேகம் குறையத் தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் நின்றும் விட்டது. 

‘’ஆக்சிடெண்ட் ஆயிருக்காம். எனவே, போக்குவரத்துத் தடை குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு நீடிக்குமாம். பினாங்கைச் சென்று சேர மணி நான்குமேல் ஆகிவிடுமாம். ஓட்டுநர் சொல்லச் சொல்ல வயிறு தனியாக வந்து இறங்கி அதுவே உணவைத் தேடிக் கொண்டு சென்றுவிடுமென கூறுவதுபோல் இருந்தது. என்னது….. இரண்டு மணி நேர தாமதமா.. பின்னாலிருந்து யாரோ அலறுவதுபோல் ஒரு குரல். கழிப்பறைக்குப் போகனும் என்று ஒரு மலாய்க்கார ஆடவர் கத்திக் கொண்டிருந்தார். 

‘’சரி… சரி…இன்னும் கொஞ்ச நேரத்துல ஓர் ஓய்விடம் இருக்கு. அங்கே பேருந்தை நிறுத்தறேன். யார் யார் கழிப்பறைக்குப் போக வேண்டுமோ போய்ட்டு வந்துருங்க.’’ என்று ஓட்டுநர் கூறிக் கொண்டிருக்க பின்னால் திரும்பி அந்த ஆடவரைப் பார்த்தேன். அவரைக் கையெடுத்துக் கும்பிட வேணும்போல் இருந்தது.

மெல்ல ஓட்டுநரை நெருங்கினேன். 

‘’அண்ணே, அங்க சாப்பாட்டுக் கடை ஏதும் இருக்குமா,’’ எனக் கேட்க, ஏதோ ஒரு வேற்றுலக வாசியைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தார். 

‘’இப்ப இருக்குமானு தெரில,’’ என்று கூறியபடி தன் கைப்பேசியில் தன் கவனத்தைச் செலுத்தினார். இந்தப் பாழாய்ப் போன போக்குவரத்து நெரிசல் இப்போதுதான் ஏற்பட வேண்டுமா… எல்லாமே எனக்கு எதிராய் இருப்பதுபோல் தோன்றியது. 

கொஞ்ச நேரத்தில், பேருந்து விரைவுச் சாலையை விட்டு ஒதுங்கத் தொடங்கியது. அங்கே வரிசையாய் கழிப்பறைகள் இருந்தன. பழக்கமான இடம்தான். ஒரு வெள்ளை நிற மூடுந்தில் அங்கே பலகாரங்களும் நாசி லெமாவும் விற்றுக் கொண்டிருப்பார்கள். வயிற்றின் வாயில் வெண்பற்கள். பேருந்து நின்றதும் அந்த வெள்ளை வேனைத் தேடினேன். ம்ம்ம்…. எங்கும் இல்லை. பசி தன் போரப் பற்களைக் காட்டத் தொடங்கியது. சற்றுத் தொலைவில்… தொலைவில் என்றால் ஏறக்குறைய ஒரு நூறு மீட்டர் தூரம் இருக்கும். சிவப்பும் மஞ்சளுமாய் வண்ண விளக்குகள். மாலாய்க்கார உணவுக்கடைகள் அப்படித்தான் இருக்கும்.  பேருந்து ஓட்டுநரை நெருங்கினேன்.

‘’அண்ணே, ரொம்ப பசிக்குது. அங்க போய் சாப்பிட்டு வந்திடுறேன்,’’ என்றேன். 

‘’இங்க கழிப்பறைக்குப் போக மட்டும்தான் நிறுத்தினேன். அப்புறம் உங்களைப் பார்த்து மற்றவர்களும் போனா பிரச்சினையாகிவிடும்,’’ என்றார்.

‘’அண்ணே முடிலனு,’’ கெஞ்ச, 

‘’சரி, சீக்கிரம் போய்ட்டு வந்துடுங்க,’’ என்று சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டார்.

நன்றி சொல்லக்கூட நேரம் இல்லாம அந்த விளக்குகளை நோக்கி ஓடினேன். நினைத்தபடியே ஒரு மலாய்க்கார ஆடவர் சில உணவுப் பொருள்களை விற்றுக்கொண்டிருந்தார். அவசரத்துக்கு நாசி கோரேங்கும் பொறித்த கோழியும் வாங்கித் தின்றுவிட்டு…… தின்றுவிட்டுத்தான்…(சாப்பிட்டு விட்டல்ல என்று தெளிவுபடுத்திக் கொள்கிறேன்) பேருந்துக்குத் திரும்பினேன். என் ஒருவனுக்காக மட்டுமே காத்திருந்ததுபோல், நான் ஏறியதும் பேருந்து நகரத் தொடங்கியது. பசி தன் வாலைச் சுருட்டிக் கொண்டு உறங்க ஆரம்பித்தது. சாலையில் மெதுவாய் ஊரத் தொடங்கிய பேருந்து, சற்று நேரத்தில் வேகமெடுத்தது. பின்னால் திரும்பிப் பார்த்தேன். சீனக் குமரிகள் இன்னும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

கண்களை நோக்கி உறக்கம் படையெடுப்பதுபோல் ஓர் உணர்வு. கண்களை மூடத் தொடங்கிய போதா அது நிகழ வேண்டும். வயிறு புரள்வதுபோல் இருந்தது. மேல்வயிற்றிலிருந்து அடிவயிறுவரை குடல் உருளத் தொடங்கியது. வயிற்றுக்குள் ஒரு பெரும்போர் நிகழ்வதுபோல் தெரிந்தது. சாப்பிடும்போதே நாசி கோரேங்கில் ஒரு புளித்த வாசம் வந்தது. கோழி இறைச்சி மூன்று நாளாய் எண்ணெயில் போட்டுப் புரட்டி புரட்டி எடுக்கப்பட்டதுபோல் தெரிந்தது. இப்போது ஒவ்வொரு முடிச்சாக அவிழத் தொடங்க, நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டே வந்தது. அடக்கி வைக்க நான் பசி இல்லேடா என்று வயிறு கூற.. அண்ணே என்று ஓட்டுநரை நெருங்கினேன்.

2 Replies to “பசி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.