நிலவு ஒரு பனியாகி

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
朝ぼらけ
ありあけの月と
見るまでに
吉野の里に
降れる白雪

கனா எழுத்துருக்களில்
あさぼらけ
ありあけのつきと
みるまでに
よしののさとに
ふれるしらゆき

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் கொரேனொரி

காலம்: பிறப்பு தெரியவில்லை. இறப்பு கி.பி 930.

அரசவைக் கவிஞர்களாக இல்லாவிடினும் அரசர்களுக்கு நெருங்கிய வட்டத்தில் இருந்த குடும்பத்தினர். இவரது தாத்தா தமுராமரோ (பேரரசர் கன்முவின் போர்ப்படைத் தளபதியாக இருந்த இவர் ஜப்பானின் வடக்கு எல்லையிலிருந்த எமிஷி எனும் பழங்குடியினரை வென்று அப்பகுதியை ஜப்பானுடன் இணைத்தவர்), இப்பாடலின் ஆசிரியர், இவரது மகன் மொச்சிக்கி (கொசென்ஷூ தொகுப்பை உருவாக்கியவர்களுள் ஒருவர்) எனப் பல தலைமுறைகளாகக் கவிபாடி வந்திருக்கின்றனர். அந்நாளில் ககா என்றழைக்கப்பட்ட இன்றைய இஷிகவா மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரரும்கூட.

கெமாரி எனப்படும் பந்து விளையாட்டில் சிறந்து விளங்கினார். தற்போதைய கால்பந்தாட்டத்தைப் போலல்லாமல் ஒருவர் மட்டுமே கால்பந்து அளவுள்ள ஒரு பந்தைத் தரையில் விழாவண்ணம் காலால் மேல்நோக்கித் தட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கி.பி 905ல் அரசவையில் நடந்த ஒரு போட்டியில் இவர் 206 தடவைகள் தட்டிப் பேரரசர் தாய்கோவிடம் பாராட்டுப் பெற்றார்.

காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 40 பாடல்களை இயற்றியிருக்கிறார். அவற்றில் 8 பாடல்கள் கொக்கின்ஷு தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.

பாடுபொருள்: பனியை ஒத்த நிலவின் வெண்மை.

பாடலின் பொருள்: இரவெல்லாம் யொஷினோ கிராமத்தின் வெண்ணிற அழகைக்கண்டு பால்நிலா பொழிந்துகொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டிருந்தேன். விடிந்த பிறகும் வடியாத வெண்மை உணர்த்தியது பொழிந்தது பனியென்று.

யொஷினோ என்பது இன்றைய நரா மாகாணத்தின் யொஷினோ நகராகும். இப்பாடல் இயற்றப்பட்டபோது அது கிராமமாக இருந்தது போலும். தலைநகர் கியோத்தோவுக்கு அருகில் யொஷினோ என்ற பெயரிலேயே மூன்று இடங்கள் இருக்கின்றன. இப்பாடலில் வரும் யொஷினோ கிராமம். முன்னர்த் தலைநகராக இருந்த யொஷினோ நகரம், இவ்விரண்டுக்கும் அருகிலேயே அமைந்துள்ள யொஷினோ மலை. இம்மூன்று இடங்களுமே பழங்குறுநூறு செய்யுள்களில் இடம்பெற்றிருக்கின்றன.

இத்தொகுப்பில் வெண்மையைப் போற்றும் இன்னொரு பாடல். முன்பொரு பாடலில் பனியை மலரின் இதழாக எண்ணியதுபோல் இப்பாடலில் பனியை நிலவின் ஒளியாக எண்ணி மயங்கியதாகப் பாடல் இயற்றப்பட்டிருக்கிறது. அக்காலகட்டத்தில் கவிஞர்களிடையே இந்த உத்தி புகழ்பெற்றிருந்ததாகக் கூறுகிறார்கள். இது மிதத்தே என்று அழைக்கப்படுகிறது. சீனக் கவிஞர் லீ பாய் அவர்களின் புகழ்பெற்ற ஒரு சீனக்கவிதையால் ஈர்க்கப்பட்டு ஜப்பானியக் கவிஞர்களும் இந்த உத்தியைப் பின்பற்றியிருக்கிறார்கள்.

வெண்பா:

பிழிந்தது பால்நிலா தண்ணொளி என்றே
மொழிந்தது உள்ளம் எனினும் - பொழிந்தது
வான்செல் நிலவன்று வெள்ளைப் பனியெனக் 
காட்டும் விடியல் நிலவு
Series Navigation<< பிரிவினும் உளதோ பிரிதொன்று?மலையாற்றின் இலையணை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.