தமிழாக்கம் : ராமலக்ஷ்மி

நான் நினைக்கிறேன் வாரத்தின் நாட்கள் யாவும்
அலை பாய்கின்றன பாறைகளின் வரிசையிலும்
சமுத்திரத்தின் தண்ணீரிலும்.
தண்ணீர் பேசுகின்றது அலைகளை வேகமாக அவற்றின் மேல் வீசி
பாறைகள் பதிலளிக்கின்றன தங்கள்
மேற்பரப்பை அவை அணிந்து கொள்ள அனுமதித்து
மொழியின் மேன்மையை நேரத்தின் தொன்மையில் அறிகிறோம்,
ஆயின் நான் என் உடலின் வேகம்
மொழி அல்ல
நான் நினைக்கிறேன் சிந்திப்பதற்குப் பல காலநிலைகள் உள்ளன
மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்
எப்பொழுதும் தட்டச்சுவது மட்டுமே என்பது எவ்வளவு கடினமானதென
எனது சந்தம் நீளமானது தொடர்ச்சியானது
என் தலைக்குள் இருக்கும் சப்தங்களை போன்றதன்று
ஊளையிடும் காற்றின் கொல்லும் தேவையுடன் இந்த சப்தங்கள்
பேச விரும்பும் தேவையுடன் இந்த சப்தங்கள்
ஆயின் அமைதியாக உடல் செல்வதை நோக்கி
நான் பாதையை உணருகிறேன் எப்போதும்
மொழியின் மேன்மையை நேரத்தின் தொன்மையில் அறிகிறோம்,
ஆயின் நான் என் உடலின் வேகம்
மொழி அல்ல
மற்றும் மீளுயரும் எல்லைக்கோட்டை என்னால் உணர இயலும்.
*
மூலம்: . “I Am the Pace of My Body and Not Language”
By Adam Wolfond
**
இருபது வயதான இளம் கவிஞர் ஆடம் உல்ஃபான்ட் ஆட்டிஸத்தின் பாதிப்பால் பேச இயலாதவர். தட்டச்சுவதன் மூலமும், நகருவதன் மூலமும் தன்னை வெளிப்படுத்துகிறவர். சிறந்த உரைநடை எழுத்தாளர், ஓவியர், பட்டதாரி மற்றும் பல்கலைக் கழக விரிவுரையாளர். நான்கு புத்தகங்கள் எழுதியவர். அமெரிக்கக் கவிஞர்கள் கலைக் கழகத்தின் ‘தினம் ஒரு கவிதை’ தொடரில் தோன்றிய மிக இளம் வயது எழுத்தாளர் என்ற பெருமையைக் கொண்டவர். இவரது படைப்புகள் பன்னூடகக் கண்காட்சிகள், ஆவணப்படங்கள் மற்றும் கல்வி ஆய்விதழ்களில் முதன்மைப் படுத்தப்பட்டுள்ளன.