தெளிவு

“தம்பி சங்கரு வாப்பா… சின்னம்மா வாம்மா… ஏழு மணி வண்டிக்கு வந்தீங்களா..” 

  “ஆமாச்சி இந்த வண்டியத்தான் புடிக்க முடிஞ்சிச்சு. என்னாச்சு பெரியப்பா இப்படி பண்ணீட்டாங்களே” 

“அண்ணனுக்கு இப்படியொரு வியாதி வந்திடுச்சுன்னு நாங்களெல்லாம் தவிச்சிட்டு இருக்கப்ப இவரு இப்படிப் பண்ணியிருக்காரே… என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்… ” 

“சரிச்சி அழாதா.. ராவெல்லாம் அழுது கண்ணெல்லாம் ரத்தரத்தமா செவந்திருக்கே.. ஒண்ணும் தப்பா நடத்திருக்காது. தேடிப் பாப்போம்… ஏம்மா ராணி ஆச்சிக்கு கொஞ்சம் நீராகாரம் கொடும்மா” 

“இப்பதாண்ணே குடுத்தேன். குடிக்காம திண்ண மேல வைச்சிடுச்சு” 

“என்னதாம்மா நடந்துச்சு. போன்ல சொன்னதுதான். அரக்கப்பறக்க கெளம்பி வந்துட்டோம். ஒண்ணுமே புரியல. வீட்டுக்கு பெரிய மனுசன் ஏன் இப்படி பண்ணாரு..” 

“அண்ணனுக்கு அந்த வியாதின்னு கேட்டதிலேர்ந்து பித்து பிடிச்ச மாதிரி அம்மாவோட போட்டோவைய பாத்துக்கிட்டு இருந்திருக்காரு.  எம் புள்ளங்கள நாத்தனார் வீட்ல விட்டுட்டு நான் முந்தாநாளு சாயந்திரம் இங்க வந்தேன். ராத்திரி சாப்பிடறப்ப  அண்ணன காலையில பாக்கப் போலாம்னு பேசிக்கிட்டிருந்தம்..”

“நீங்க பேசுனப்ப பெரியப்பா கேட்டுக்கிட்டு இருந்தாரா..” 

“அவரு பக்கத்துலதான் இருந்தாரு. ஆனா கவனிச்ச மாதிரியில்ல. ஆச்சி தோச ஊத்துச்சு. சாப்பிடச் சொன்னா வேண்டவே வேண்டாம்னுட்டாரு. நாளைக்கு அண்ணன வேற பாக்கப் போகனுமேன்னு நாங்க மட்டும் சாப்பிட்டு படுத்தோம்..” 

“பெரியப்பா எங்க படுத்தாரு…”

“எப்பவும் திண்ணையிலதான் படுப்பாரு… நாந்தான் பனி அதிகமா இருக்குன்னு உள்ளேயே வாராண்டாவுல படுக்கையப் போட்டோம். நான் நடுவுல ஒரு மணியப்போல எந்திரிச்சு பாத்ரூம் போயிட்டு வந்து படுத்தேன்..” 

“அப்ப அப்பா தூங்கிட்டிருந்தாரா..” 

“படுத்திருந்தாரு. தூங்கிட்டு இருக்காருன்னுதான் நெனச்சுக்கிட்டு நான் படுத்தேன். கொஞ்ச நேரம் தூக்கம் வரல. நடுவுல முழிச்சிட்டா  எல்லா நெனைவுகளும் வரிசையா வந்திச்சி.  தூக்கம் வர கொஞ்சம் நேரமாச்சு. எப்ப தூங்குனேன்னு தெரியல. ஆச்சிதான் எழுப்புச்சு”

“எத்தனை மணிக்கு”

“ஒரு அஞ்சரை இருக்கும். கனவா நெனவான்னு எனக்கு ஒன்னும் புரியல. ஆச்சி என்னய உலுப்பி அப்பா எப்ப எந்திரிச்சாங்கன்னு கேட்டுச்சு”

“ஆச்சி எப்ப எந்திரிச்சுச்சு” 

“ராணி நீ காப்பி போட்டுக்கிட்டு வா. தம்பியும் சின்னம்மாவும் வழியில எங்கையும் குடிச்சிருக்க மாட்டாங்க”

“நீங்க பேசிட்டு இருங்க. இந்தா வந்திடறேன்”

“ஆச்சி நேத்துக் காலையில நீ எப்ப எந்திரிச்ச” 

“என் மாமியார் காலையில அஞ்சு மணிக்கு எழுப்புச்சு. இவங்கள பாத்துட்டுப் போயி வேலைகள ஆரம்பிக்கலாம்னு இங்க வந்தேன். வழியில சோலையக்காதான் ஏண்டி ஒங்கப்பா கெழக்க போறாரே என்ன விசயம்னு கேட்டாங்க” 

“கெழக்கையா.. கம்மாய்க்கு போற ஒழுங்கையிலயா…” 

“ஆமா. அந்தப் பக்கம் போனதத்தான் பாத்துச்சாம். என்னன்னு தெரியலையேன்னு ஓடி வந்து இங்க பாத்தா இவ தூங்கிட்டிருக்கா. அப்பாவோட பர்ஸு, பீரோ சாவி எல்லாம் அம்மா படத்துக்கு கீழே இருக்குது” 

“அச்சச்சோ… அப்ப  ஏதோவொரு முடிவெடுத்துதான் கெளம்பியிருக்காரு”

“வடக்க போயிருந்தா அப்படியே புதுப்பட்டிக்கு போயி பஸ்ஸேறி அண்ணன பாக்கப் போயிருக்கலாம்னு நெனைக்கலாம். இவரு கெழக்கையில்ல போயிருக்காரு. அதுவும் பணம் ஏதும் எடுத்துக்காம போயிருக்கிறாரேன்னுதான் ரொம்ப ஆவலாதியா இருக்கு” 

“நேத்து முழுக்க தேடுனீங்களா”

“ஆமா. எம் பையன் மேல வீட்டுப் பசங்க, பழனி மாமா அவரு பையன் எல்லோரும் கம்மாய் கிணறு கோயில்லுன்னு எல்லா எடத்துலயும் தேடுனாங்க. ஆனா எந்தத் தடயமும் இல்ல. ஆள் உயிரோட இருக்குறது சந்தேகம்னு தோணுச்சு.  அதுக்கப்புறம்தான் ஒங்களுக்கு தகவல் சொன்னோம்…”

“எங்க போனாரோ எப்படி இருக்காரோ… மவராசனா வாழ்ந்தவரு இப்படி போயிட்டாரே… எங்கள நிர்கதியா விட்டுட்டு போக எப்படித்தான் மனசு வந்துச்சோ…” 

“ஆச்சி அழாதச்சி. பெரியப்பாவுக்கு எதுவும் ஆயிருக்காது. ஏதாவது கோயில்ல போயி இருப்பாரு. போய் தேடிப்பாப்போம்” 

“ராணி… ஆச்சிக்கு கொஞ்சம் காப்பி கொடு”

“கொடுக்குறேன் நீங்க எடுத்துக்குங்க. சின்னம்மா நீங்களும் எடுத்துக்குங்க. ஆயா இந்தக் காப்பிய எடுத்துக்க…” 

“இப்பதான் குடிச்சிட்டு வந்தேன். வாயில வெத்தலை இருக்கு இப்ப வேண்டாம். ஒன் ஆச்சிக்கு கொடு” 

“ஏம்மா ராணி, பெரியப்பாவ வெளியில தேடிப் போகாம ஊர ஒட்டியே தேடுனீங்க” 

“இந்த ஆயாதான் சொன்னுச்சு..”

“என்னத்தா இப்டி செல்லிட்ட.. நானாவா சொன்னேன்.. அந்த கோடாங்கி சொன்னான். அதச் சொன்னேன்”

“எந்தக் கோணங்கி ஆயா ..”

“இந்த எச்சியத் துப்பிட்டு வர்றேன் இரு. த்தூத்தூ.. தூ…”

 “உங்க பெரியப்பனக் காணோம்னு தெரிஞ்சவுடன எம் பேரனக் கூப்பிட்டுக்கிட்டு அம்புராணி சேலையம்மங் கோயில் கோடாங்கிக்கிட்ட போனேன். அவந்தான் வெத்தலையில மையத் தடவி கோடாங்கி அடிச்சுப் பாத்துட்டு இங்கே கம்மாக் கரையில இருக்குற ஆலமரத்துக்கு நேரா அஞ்சடி ஆழத்துல கெடக்குறதா சொன்னான். அதத்தான் நான் சொன்னேன்” 

“ஓ அதுக்கப்புறம்தான் ஒடனே எங்கள வரச்சொல்லி சொன்னாங்களா..”

“ஆமா  எப்படியும் ஒடம்பு கெடச்சிடும். தண்ணியில கெடந்தத ரொம்ப நேரம் வச்சுக்க முடியாதுன்னு நாந்தான் ஒங்களுக்கெல்லாம் சொல்லச் சொன்னேன்”

“ஆனா ஒரு நாள் முழுக்கத் தேடியும் கண்டு பிடிக்க முடியலியே..” 

“அதான் எனக்கும் புரியல..”

“ஏ மச்சான் சங்கரு, காப்பி குடிச்சிட்டியா. இங்கேயே ஒக்காந்து கதை கேட்டுட்டு இருக்கப் போறியா. இல்ல எங்க கூட தேட வர்றீயா..” 

“இந்தா வர்றேன். அம்மா கதிர் மச்சாங்கூட போயிட்டு வர்றேன்” 

“முள்ளுச் செடிகளுக்கிட்ட போறப்ப கவனமா போங்க. பூச்சிபட்டைங்க கெடக்கும். அப்பப்ப போன் பண்ணுங்க…”

*******

“வரப்பெல்லாம் புல் நல்லா வளந்திருக்கே மச்சான்” 

“பனி காலத்துல நல்லா துளுக்கும். அறுவடை முடிஞ்சதால  ஆடு மாடுகள நேரா வயலுக்குள்ளேயே மேய்க்கலாம்” 

“அது சரி. ஏம் மச்சான் எங்க பெரியப்பா இப்படி போயிட்டாரு. பையன்மேல பாசமிருந்தா அவரத்தான பாக்கப் போகனும். பக்கத்துல இருந்தாத்தானே ஆறுதலா இருக்கும்…” 

“சின்னப் பையன் நீயே இப்படி யோசிக்கிறப்ப அவரு யோசிச்சிருக்க மாட்டாரா. ஏதோவொரு பெரிய சஞ்சலத்துலதான் அவரு கெளம்பியிருக்காரு”

“அது என்னவாயிருக்கும்னு நீதான் சொல்லேன்” 

“சரி நான் சொல்றேன், வரப்புல பாத்து நட. ஓரமா வளந்திருக்குற மீன் முள்ளுச் செடி கால்ல கீறிடும்…”

“சரிதான். முள்ளுச்செடிங்ககூட செழிப்பாத்தான் வளந்திருக்கு”

 “ஒங்க பெரியம்மா ஏன் பூச்சி மருந்தக் குடிச்சு செத்துச்சுன்னு ஒனக்கு தெரியுமில்ல”

“ஆங் தெரியுமே. எங்க பெரியப்பா அதிகமா குடிச்சிட்டு வந்து  அண்ணன அடிச்சதனாலதானே. அப்படித்தான் எங்கம்மா சொன்னுச்சு”

“ஆமா அதனாலதான். ஆனா அதுக்கப்புறம் ஒங்க பெரியப்பா அவரு மகன எதுக்குமே அடிச்சதே இல்லை. அவரு குடிக்க ஆரம்பிச்சப்பவும், இவருக்கு விருப்பம் இல்லாத பொண்ண கூட்டியாந்தப்பவும் ஒங்க பெரியப்பா திட்டக்கூட இல்ல” 

“அதான் எனக்கும் தெரியுமே. அது சரி…  இந்த அய்யனார் கோயிலோட கம்பி வேலிய யாரு பிரிச்சுப் போட்டது. கோயில் கும்பாபிசேகம் பண்ணி ஒரு மாசங்கூட இருக்காதே. என்னாலதான் வரமுடியாமப் போச்சு..” 

“நேத்து சாயந்திரம் நாங்கதான் பிரிச்சோம்” 

“நீங்களா. ஓலைக் கொட்டகையா செதஞ்சு நின்ன கோயில எங்க பெரியப்பா முன்ன நின்னு கட்டி விழா நடத்துனதாச்சே. அவரு காணாமப் போனவுடனே பிரிச்சிட்டீங்களா” 

“அவருதான் எடுத்துக் கட்டினாரு. எதுக்காக கட்டினாரு தெரியுமா… அவரு புள்ள வாழ்க்க நல்லபடியா இருக்கனுமேன்னு..” 

“அதுல ஒங்களுக்கென்ன பிரச்சன. கோயிலுக்குன்னு ஒன்னு செய்யறப்ப வேண்டுதல் இருக்கிறதுல தப்பில்லையே..”

“வேண்டுதல் இருக்கிறதுல தப்பில்ல. திறந்தவெளியில இருந்த அய்யனார கம்பி வளையத்துக்குள்ள கட்டி வச்சாரே அதான் தப்பு” 

“அப்ப அண்ணன் குடிச்சு ஈரல் செதஞ்சு போனதுக்கும் எங்க பெரியப்பா காணாமப் போனதுக்கும் கம்பிவேலிதான் காரணம்னு சொல்றீங்களா” 

“நாங்க சொல்லலை. கோடாங்கி சொன்னாரு… மழையில நனைஞ்சிக்கிட்டோ வெயில்ல  காஞ்சுகிட்டோ சுதந்திரமா இருக்கிறதுதான் அய்யனாரோட இயல்பாம். அவர வேலிக்குள்ள கட்னது தப்பாம்”

“எந்தக் கோனாங்கி. எங்க பெரியப்பா கம்மாய்க்குள்ளதான் கெடக்குறார்னு அடிச்சுவிட்டவரா” 

“அவரில்ல. இவரு அணிக்கனி பூசாரி. கோயில்ல போட்ட கம்பிவேலிய பிரிச்சா ஒங்க பெரியப்பாவ பத்தின தகவல் கெடைக்கும்னு சொன்னாரு. எதத்தின்னா பித்தந்தெளியும்னு தவிச்சுக்கிட்டு இருக்குற நாங்க வேறென்னதான் செய்யறது. இதப் பிரிச்சா கெடைப்பாருன்னா பிரிச்சுப் பாப்பமேன்னுதான் பிரிச்சோம்” 

“அய்யனாரு கம்மாக்கரையில நிக்கிறாரே.. சாமிக்குன்னு வைக்கிற சாமான்கள எவன்களோ தூக்கிட்டு போறானுகளோ இல்ல நாய் நரி தூக்கிட்டு போகுதோ… அத பாதுகாக்குற மாதிரி இப்படி வேலி போடலாம்னு ஊர்ல கேட்டுத்தானே பண்ணாரு. அப்ப எல்லாரும் ஒத்துக்கிட்டீங்கதானே. அப்ப பிரச்சனை எல்லாருக்கும்தானே வரணும்…” 

“ஏம் மச்சான். மொதல்ல நீ என்ன சொன்ன… ஒங்க பெரியப்பாருதான் எடுத்து செஞ்சாருன்னுதான. ஊரு செஞ்சிச்சுன்னு சொல்லலையில்ல. இப்ப பிரச்சனைன்னு சொன்னவுடனே ஊருதான செஞ்சிச்சுன்னு சொல்ற பாத்தியா…” 

“எல்லாரும் ஒத்துக்கிட்டதுக்கு அப்புறம்தானே செய்யலாங்குற முடிவ எடுத்தாரு. யாருக்குமே தப்பா தோனலைல. அதான் கேட்டேன்..” 

“கம்பிவேலி போடறது சாமியக் கட்டிப் போடறது மாதிரின்னு யாருக்கும் தோனல. எதாலயும் கட்டுப்படுத்த முடியாததுதான் சாமின்னுதானே எல்லோரும் நம்புறோம். ஆனா இந்த கோடாங்கி சொன்னத யோசிச்சு பாத்தா இவரு சொல்றதும் சரின்னுதானே தோனுது… சரி பேச்சுக் கவனத்துல அந்த வேலிகளுக்கிட்ட பாக்குறத விடறாத…”

“நேத்து இங்கேயெல்லாம் பாக்கலையா”

“கோயிலுக்குள்ள பாத்தோம். கொஞ்சம் பதட்டத்துல பாத்தோம். தவறவிட்டிருக்கவும் வாய்ப்பிருக்குன்னுதான் திரும்ப ஒருதடவை இந்த புதருகளுக்குள்ளே எல்லாம் நல்லாப் பாக்கலாம்னு நெனைச்சேன்…” 

“சரி நீங்க அந்தப்பக்கம் பாத்துக்கிட்டு வாங்க. நான் இந்தப் பக்கம் பாத்துக்கிட்டு கம்மாக்கரைவரைக்கும் வர்றேன். அதுக்கு மேல சேர்ந்து போகலாம்..”

****

“என்ன மச்சான் கிடைக்கலையா. அவரு சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. மயக்கம் போட்டு எங்கேயாவது கெடந்தா கண்டு புடிக்கிறது கஷ்டமாயிடும்”

“எனக்கென்னவோ அவரு தப்பான முடிவு எதுவும் எடுத்திருக்க மாட்டாருன்னுதான் தோணுது… அப்படி இருந்தா இன்னேரம் தட்டுப்பட்டிருக்கனும்ல” 

“ஆமா… அம்புராணி கோடாங்கி சொன்னாருன்னு கம்மாய முழுசா சலிச்சோம். சுத்தியிருக்குற கோயிலுக எல்லாத்தையும் அலசியாச்சு. வேறென்ன பண்றதுன்னு தெரியல”

“ராஜாவுக்கு ராஜா நான்டா… எனக்கு மந்திரிங்க யாருமில்ல…”

“நீங்க, பெரிய ராஜாதான் மச்சான். போன அட்டன்ட் பண்ணுங்க” 

“சொல்லுங்க அத்தாச்சி. ம்  ம்  அப்படியா   சரி    சரியத்தாச்சி ஓகே..”

“மச்சான் ஒங்க பெரியப்பாவ வாளரமாணிக்கம் பக்கத்துல ஒருத்தர் பாத்திருக்காரு..”

“அப்டியா எப்ப மச்சான்”

“நேத்து காலையில அஞ்சரை மணிக்கு வாழைக் கொல்லைக்கு தண்ணி பாச்சுறதுக்காக எங்களுக்கு தெரிஞ்ச ராமுங்கிறவரு போயிருக்காரு. அப்பதான் வேகவேகமா ஒங்க பெரியப்பாரு நடந்து போனாராம். ஏதாவது அவசர வேலையாப் போறவங்கள பின்னாடிக் கூப்பிடக் கூடாதேன்னு இவரும் கூப்பிடலயாம். தண்ணி பாச்சிட்டு அப்படியே அறந்தாங்கிக்கி அவரு மாமியார் வீட்டுக்குப் போயிட்டு இப்பதான் வந்தாராம். ஊருக்குள்ள ஒங்க பெரியப்பாவ தேடுற விசயத்த கேள்விப்பட்டு ஒங்க ஆச்சிக்கு போன் பண்ணாராம்” 

“அப்ப ஊரவிட்டு வெளிய போயிருக்காருன்னு தெரியிது. எங்க போனாருன்னு கண்டுபிடிக்கிறது சிரமமாச்சே.  திரும்பி வரனும்னு  அவரா நெனச்சாத்தான வருவாரு” 

“அதத்தான் அத்தாச்சியும் சொல்றாங்க. எப்படியிருந்தாலும் ஊருக்குள்ள இல்லைங்கிறது உறுதியாயிடுச்சு. தேடுனது போதும் திரும்பி வாங்கன்னு  சொல்றாங்க” 

“இவ்ளோ நேரம் கோயில சுத்தியும், கம்மாய்க்கரை முழுசா இருக்குற புதருக்குள்ளல்லாம் குனிஞ்சும் பாத்ததெல்லாம் வீண்தானா…” 

“அட இதுக்கே அலுத்துக்குற நேத்து காலையிலேர்ந்து நாங்க தேடுறோம். ராத்திரில கூட அத்தாச்சி பையனும் அவஞ்செட்டு பசங்களும் தேடுனானுங்க. நேத்துலேர்ந்து ஒன்னுமே தெரியாம தேடுனதுக்குப் பதிலா இப்ப ஊரவிட்டு வெளியில போயிருக்காருங்குற தகவல் ஒரு தெளிவக் கொடுக்குதில்ல..” 

“சரி வாங்க மச்சான்  நடந்துக்கிட்டே பேசலாம். நான் வெளியூர்ல இருக்கேன். எனக்கு சரியா புரியல. பெரியப்பா எதுக்காக வீட்டவிட்டு போயிருப்பாருன்னு நெனைக்கிறீங்க” 

“பையன அடிச்சதுக்காத்தான் தன் பொண்டாட்டி செத்துச்சுன்னு முடிவுக்கு வந்துட்டாரு. இனிமே பையன அடிக்கவோ கண்டிக்கவோ மாட்டேன்னு அவங்களுக்கு மனசுக்குள்ள சத்தியம் பண்ணியிருக்காருன்னு சொல்றாங்க. அப்பா கண்டிக்காதத சாதகமா எடுத்துக்கிட்ட ஒங்கண்ணன் பண்ணாத சேட்டையில்ல. செத்துப்போன பொண்டாட்டிக்கு கொடுத்த சத்தியத்த மீற முடியாம எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணாரு. இவரோட நல்லவேளை இவரையும் கவனிச்சுக்குறதுக்கு வசதியா மூத்த பொண்ணுக்கு உள்ளூர்லயே ரெண்டு வீடு தள்ளி சம்மந்தம் அமைஞ்சிச்சு. இப்ப பையனோட தவறான நடத்தையினால அவரோட ஈரல் மொத்தமா கெட்டுப் போச்சாம். அத மாத்தி வைக்க ஆபரேசன் பண்ணாக்கூட பயனில்லையாமே. சத்தியத்தைக் கருதாம பையனக் கண்டிச்சிருந்தா இப்படியொரு நிலைமை வந்திருக்காதுன்னு பலபேர் பேச ஆரம்பிச்சுட்டாங்க. இப்பவே இப்படி பேசறவங்க புள்ள செத்துட்டா என்னவெல்லாம் பேசுவாங்கன்னு யோசிச்சுதான் தன்னை மாய்ச்சுக்க முடிவு பண்ணீட்டாருன்னு சில பேரு நெனைக்கிற மாதிரிதான் எனக்கும் தோணுது” 

“தன் சொல் பேச்சு கேக்காத புள்ளைய நெனைச்சு சாகப்போறவரு தன் பொண்ணுகள பத்தி நெனைக்கல பாத்தீங்களா. ஆச்சியும் ராணியும் அப்பா உயிரோட இருக்கனுமேன்னு அழுவறதப் பாக்க முடியல மச்சான்” 

“மனுசங்க எப்ப எப்படி முடிவெடுப்பாங்கன்னு யாராலையும் யோசிக்க முடியறதில்லை. உண்மையிலே அவங்கதான் முடிவெடுக்குறாங்களா. இல்ல உள்ளுக்குள்ள இருந்து யாராவது சொல்றத செய்யிறாங்களான்னுகூட எனக்கு அப்பப்பத் தோணும்”.

“நகரத்துலதான் அன்னியமாவே தோண வைக்கிற உயரமான பெரிய பெரிய கட்டடங்க, கண்ண குறுக்கியபடியே நடக்க வைக்கிற தூசி, பதட்டமாவே ஓடுற வண்டிங்க, பட்டும்படாமலுமே பழகுற மனுசங்கன்னு ஒரு மாதிரி தத்தளிப்பாவே இருக்கும்.   ஊர்ல அப்படியே பச்சை கிளை பரப்பியிருக்கிற மா, புளிய மரங்களும், வெயில் நேரத்துல நுங்கா கொடுக்குற பனமரங்களும், ரெண்டு பக்கம் இருக்குற கம்மாயில கெடக்குற தண்ணியில வளர்ற வயலுகளையும் பாத்துக்கிட்டு கிராமத்திலேயே இருக்குறது எத்தனை சொகமாயிருக்கும், எங்கப்பாதான் எதோவொரு ஈர்ப்புல நகரத்துக்கு வந்திட்டாருன்னு எனக்குத் தோணும்…”

“இப்பவும் அப்படித்தான் தோணுதா மச்சான்..”

“உறுதியா இல்ல. ஆனா ஏன் இருக்குறத அனுபவச்சிக்கிட்டு நிம்மதியா இருக்கமாட்டேங்குறாங்கன்னு தோணுது. நீங்க ஊர்ல இருக்குறது மனசுக்குப் புடிச்சா… இல்ல வேறவழி இல்லாததாலயா”

“ரெண்டும்தான். சில நேரம் இங்கேயே இருக்கலாம்னு நெனைப்பேன். ஊர்லேர்ந்து வர்றவங்களப் பாக்குறப்ப நாம மட்டும் ஏன் இங்கே கெடக்கனும்னு கெளம்பி திருப்பூர் பக்கம் போவேன். அந்த நெருக்கடிய தாங்க முடியாம ஓடிவந்திடுவேன். இப்படித்தான் ரெண்டுங்கெட்டானா போயிட்டிருக்கு. ஒரு வயல்ல தெளிக்கிற மருந்து தண்ணி மூலமா ஊடுருவி அடுத்த வயல்லயும் கலக்குற மாதிரி நகரங்கள்ல இருக்குற பதட்டம் அங்கேயிருந்து வந்து போறவங்களால இங்கேயும் பரவியிருச்சு. அதைத் தவிர்க்க முடியாது”.

*********

“இப்படி ரோடு வழியா வந்தது நல்லதாப் போச்சு. ஒங்க ஆச்சி வீட்டுக்காரர் வண்டியில வர்றாரு. கூடப் போயிடு மச்சான்” 

“உங்கள தனியா விட்டுட்டு நான் போகல. சேந்தே போவோம்..”

“பரவாயில்ல மச்சான். நான் தெனமும் நடக்குறவன். நீங்க அதிகமா நடந்து பழகாதவரு. நடக்க கஷ்டப்படறது தெரியுது. நீங்க போங்க. நான் வந்திடறேன்”

“ஆ மச்சான் சங்கரு.. வா.. வா நல்லாயிருக்கீங்களா. எப்ப வந்தீங்க” 

“வாங்க அத்தான். காலையில வந்தோம். ஒங்கள பாக்க முடியல. வந்தவொடனே கோயில்பக்கம் தேடலாம்னு மச்சான் கூட்டிட்டு போயிட்டாப்ல. நீங்க வெளிய எங்கேயோ போயிட்டு வார மாதிரியிருக்கு” 

“வா வண்டில ஏறு..”

“சரியா ஒக்காந்திட்டேன். எடுங்க அத்தான்” 

“சரி… ஒங்க பெரியப்பா ஊரவிட்டு போனது தெரிஞ்சதும் ஒங்க ஆச்சிதான் போலீசுல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திட்டு வாங்கன்னு சொன்னா. அங்க போனா கம்ப்ளைன்ட வாங்க மாட்டேனுட்டாங்க. எழுபது வயசுக்கு மேலானவங்கள காணாமுன்னு கேஸ் பதிஞ்சா ஆளு கெடைக்கிற வரைக்கும் நிலுவையிலேயே இருக்கும். பல தடவ ஆளுங்க அம்படறதேயில்ல. அந்த மாதிரி பல கேஸுங்க அப்படியே கெடக்குன்னுட்டாங்க”

“அப்ப கம்ப்ளைன்ட எடுத்துக்களையா..”

“அப்படி விட்ற முடியுமா. நம்ம வார்டு மெம்பர்கிட்ட சொல்லி அவரு எம் எல் ஏ கிட்ட சொல்லி, அவரு ஸ்டேசனுக்கு போன் பண்ணாரு. அதுக்கப்புறம் உள்ள கூப்பிட்டு விவரத்தக் கேட்டுட்டு போட்டோவ வாங்கிக்கிட்டாங்க. எல்லா ஸ்டேசனுக்கும் அனுப்பறதாவும் விவரம் தெரிஞ்சா போன் பண்றேன்னும் சொல்லியிருக்காங்க”

“அப்ப எப்படியாவது தகவல் கெடச்சிடும்ல அத்தான்” 

“அப்படித்தான் நெனைக்கிறேன். ம்ம் பாப்போம்”

****

“ஏம்மா ராணியும் ஆச்சியும் இப்படி அழுவுறாங்க. அதான் பெரியப்பா வெளிய எங்கேயோ போயிருக்குறாருன்னு தெரிஞ்சிடுச்சில்ல…” 

“ஊருக்குள்ளேயே தேடி உயிரோட கண்டு பிடிச்சிடலாம்னு நெனச்சாங்க. ஆனா வெளியூர் போயிருப்பார்னு தெரிஞ்சதும் அவங்களால தாங்க முடியல” 

“ராணி ஏம்மா… ஏன் இப்படி அழுவுற பெரியப்பாக்கு ஒன்னும் ஆயிருக்காதும்மா. வந்திடுவாரு” 

“சாகனும்னு முடிவு பண்ணவரு அம்மா மாதிரி இங்கேயே ஏதாவது பண்ணிக்கிட வேண்டியதுதானே”

“ஏம்மா இப்படி வெறுத்துப் போய்  பேசற. அவருக்கு ஒன்னும் ஆயிருக்காது”

” ஊரவிட்டு போனவர எங்கேயின்னு தேடுறது. கீழவீட்டு சுந்தரம் இப்படித்தான் பத்து வருசத்துக்கு முன்னாடி போனாரு. இருக்காறா செத்தாரான்னு அந்தக் குடும்பம் இன்னும் அல்லாடுது”

“அவரு ஏன் போனாரு”

“அதத்தான் ஏற்கனவே ஒங்கிட்ட சொல்லியிருக்கேனே”

  “மறத்திட்டேன்போல… திரும்பச் சொல்லும்மா”

“சுந்தரம்  அவரோட கூட்டாளியோட பொண்ண தன் பையனுக்கு எடுத்துக்கிறதா வாக்கு  கொடுத்திருந்தாராம். இவர் பையன் வேறொரு பொண்ணத்தான் கட்டிக்குவேன்னு முரண்டு புடிச்சிருக்கான். கொடுத்த வாக்க காப்பாத்தாம எப்படி மத்தவங்க மூஞ்சில முழிக்கிறதுன்னு இவரு ஊர விட்டு போயிட்டாரு..”

“ஓஒ”

“போனதுலேர்ந்து ஆறு மாசத்துக்கொருத்தர் அவரோட சாயல்ல ஒருத்தர அந்த ஊர்ல பாத்தேன்..  இந்தக் கோயில்ல பாத்தேன்னு யாராவது  சொல்லுவாங்க.  இவங்களும் போயித் தேடி வெறுங்கையோட வருவாங்க. இன்னைக்கி வரைக்கும் அவருக்கு காரியம்னு ஒன்னு பண்ணாம அந்தக் குடும்பம் தவிக்குது. அதத் தெரிஞ்சும், எங்களையும் இப்படி பரிதவிக்க விட்டுட்டு போயிட்டாரே…”

“அப்பா புள்ளமேல உள்ள கோபத்துல போயிருக்காரே. அண்ணன் பாட்டுக்க நிம்மதியா போயி சேந்திடுவாரு. நாங்கள்ள இங்கெ கெடந்து தவிக்கனும். அவ்ளோ பெரிய ஆக்ரோசம்னா இங்கேயே ஏதாவது பண்ணிக்கிட வேண்டியதுதானே… இங்கேயே செத்திருந்தா இன்னேரம் தூக்கிப் போட்டுட்டு மூணு நாளு அழுதிட்டு அடுத்த வேலையப் பாக்கப் போயிரலாமே. இப்ப துக்கத்துலேர்ந்து வெளிய வரவே முடியாதபடி இப்படி ஊரவிட்டு போயிட்டாரே…”

“அத்தாந்தான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்குறாரே. எப்படியாவது கண்டு புடிச்சிடலாம் அழாத ராணி”

“இனிமே கெடச்சு வந்தாலும் முன்ன மாதிரி இருக்கமுடியுமா… எதுவுமே சரியா இருக்காது..”

*****

“ராஜராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேவி நீதான்…” 

“ஓ.. அத்தானோட ரிங்டோனா..” 

“ஹலோ… ஆமா போலீஸ் ஸ்டேஸன்லேர்ந்தா… தகவல் ஏதும் கெடச்சதா.. சரி சொல்லுங்க சார்… ம்ம் சரி சார்” 

“என்ன விசயம் அத்தான். காயா பழமா..”

“என்ன விசயம்னே நான் இன்னும் சொல்லை.  ஆனா கவலையெல்லாம் மறைஞ்சு ஒங்க எல்லாரோட மொகமும் தெளிஞ்சிடுச்சே…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.