சபிக்கப்பட்ட வீடு

ஃப்ரெஞ்ச் – ஆங்கில மொழிபெயர்ப்பு – E.C.Wagenner. 1891

தமிழாக்கம் : கே.வி. கோவர்தனன்

வைக்கோம் டி பி…. வசீகரமான, நல்லியல்புள்ள இளைஞன் . வருடத்திற்கு 30 ஆயிரம் லிவ்ரேக்கள்(கிட்டத்தட்ட 6600 ஃப்ராங்குகள்) சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தவனுக்கு, துரதிர்ஷ்டம், வாழ்வனவற்றிலேயே மிகக் கருமியான ஒரு சித்தப்பா, செத்து, கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் அளவுக்கு அவனுக்கு சேர்த்திருந்த சொத்தின் மூலம் வந்தது.

அவருடைய சொத்து பத்திரங்களை சரிபார்த்த பொழுதுதான் விக்டோய்ர் தெருவில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்துக்கு அவன் உடைமையாளனானது தெரிந்தது. மேலும் வீட்டு சாமான்களேதுமின்றியும் வாடகைக்கு விடப்பட்ட வீடுகள் உள்ள அந்த கட்டிடம், 1849ல் மூன்று லட்சம் ஃபிராங்குகளுக்கு வாங்கப்பட்டதும், வரி ஏதும் பாக்கியற்று வருடத்திற்கு 82,000 ஃபிராங்குகள் வாடகை தருவதுமாயுள்ளதும் தெரிந்தது.

இவ்வாடகை அக்கட்டிடத்திற்கு “மிக அதிகம், மிக மிக அதிகம், நிச்சயம்”, என்று வைக்கோம் எண்ணினான். ” என் சித்தப்பா அநியாயவட்டி பெறுவது போல வாடகையை வசூலித்து வந்துள்ளார். இதை மறுப்பதற்கே இல்லை. என்னைப்போல நற்பெயர் உள்ள ஒருவன் இதைப் போன்ற கொள்ளையில் ஈடுபடலாகாது. நாளையே வாடகையை குறைக்க போகிறேன். என்னுடைய வாடகைதாரர்கள் என்னை வாழ்த்துவார்கள்”.

இம்மேன்மையான எண்ணத்துடன் வைக்கோம் அவனுடைய கட்டிட மேற்பார்வையாளரை வரச் சொன்னான். அவரும் வில் போன்ற வளைந்த முதுகுடன் உடனடியாக வந்தார்.

அவரிடம், “பெர்னார்ட், என் நண்பரே, போய் எல்லா உங்கள் வாடகைதாரர்களிடமும் நான் வாடகையை மூன்றில் ஒரு பகுதியாக குறைத்துள்ளதாக சொல்லுங்கள்”.

இதுவரையில் குறைப்பு என்ற வார்த்தையே அறிந்திராத பெர்னார்டின் தலையில் கல் விழுந்தது போல் இருந்தது. சரியாக கேட்கவில்லையோ அல்லது புரியவில்லையோ என்று எண்ணினார்.

“குறைப்பா” என்று இழுத்தானர். “திரு வைகோம் உங்கள் தகுதிக்குத் தாழ்ந்து அவசரத்தில் எதையும் சொல்ல வேண்டாம். ஐயா, நீங்கள் வாடகையை உயர்த்துவதைப் பற்றி சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்”.

வைக்கோம், “என் வாழ்க்கையில் இவ்வளவு உறுதியாக இதுவரை இருந்ததே இல்லை, என் நண்பரே” என்று பதிலுரைத்தான். “நான் முன்னமே சொன்னேன், மறுபடியும் சொல்கிறேன், வாடகையை குறைக்கத்தான்போகிறேன்”.

இதுவரையிலும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் இருந்த கட்டிட மேற்பார்வையாளர் தன் நிதானத்தை இழந்தார்.

ஐயா நீங்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். நீங்கள் இதற்காக இம்மாலையே வருந்துவீர்கள். வாடகைதாரர்களின் வாடகையை குறைப்பதா? இதுவரை கேள்விப்பட்டிராதது ஐயா. வாடகைதாரர்கள் இதைப்பற்றி அறிந்தால் என்ன நினைப்பார்கள்? நம் அயல் குடியிருப்பாளர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்வார்கள்? நிஜமாகவே…

வைகோம் மிடுக்குடன்,”திரு பெர்னார்ட், நண்பரே, நான் என்னுடைய கட்டளை மறுபேச்சின்றி நிறைவேற்றப்படுவதையே விரும்புவேன். கேட்டீரல்லவா… கிளம்பலாம்”. என்றான்.

குடித்தவனைப் போல் தள்ளாடியபடி திரு பெர்னார்ட் உடைமையாளரின் வீட்டிலிருந்து வெளியே சென்றார்.

அவருடைய எல்லா அறிவுரைகளும் வீணாக தூக்கி எறியப்பட்டது கண்டு குழப்பத்திற்கு ஆளானார். இது கனவில் நிகழும் விளையாட்டா அல்லது கொடும் கனவா, அவர் பியர் பெர்னார்ட்தானா அல்லது பெர்னார்ட் போன்ற வேறொருவரா? குழம்பியேவிட்டார்.

“வாடகையை குறைக்கணுமாமில்ல, வாடகையை குறைக்கணுமாமில்ல”, அரற்றினார். “நம்பவே முடியல, ஏதோ வாடகைக்காரர்களே கேட்டுகிட்டாப்போல. ஆனால் அவங்க யாரும் குறையே சொல்லலையே. அவங்க எல்லாம் தவறாம வாடகை குடுத்துகிட்டு தானே இருக்காங்க? இவரோட சித்தப்பாவுக்கு மட்டும் இது தெரிஞ்சா சமாதியில் இருந்து எழுந்து வந்துடுவார். அவருடைய மகனுக்கு பைத்தியம்தான் புடிச்சிருக்கு. நிச்சயம்.வாடகையை குறைக்கணுமாமில்ல. இவரைக் கொண்டு போய் குடும்ப நல குழுவின் முன் தான் நிறுத்தணும். முடிஞ்சிடுவார். யாருக்கு தெரியும் இதுக்கு அப்புறமா இவர் என்ன செய்வார்னு? மதியமும் காலையும் நல்லா வயிறார சாப்பிட்டு இருப்பார் போல”.

இப்படியாக குழம்பியிருந்த பெர்னார்ட் அவருடைய வீட்டில் நுழைந்தார். அவருடைய வெளிர்ந்த, தளர்ந்த தோற்றத்தை கண்ட அவருடைய மனைவியும் மகள் அமாண்டாவும் ஒரே சமயத்தில் கூவினர். “கடவுளே என்னது, உங்களுக்கு என்ன ஆனது?”

“ஒன்றுமில்லை”, பின் சற்றே மாறிய குரலில்”ஒன்றுமே இல்லை” என்றார்.

“என்னை நீ ஏமாற்ற பார்க்கிறாய்”, நிச்சயமாய் சொன்னார் திருமதி பெர்னார்ட். “நீ என்னிடமிருந்து எதையோ மறைக்க முயல்கிறாய். என்னிடம் சொல். நான் அதை தாங்கக்கூடியவள்தான். அந்த புது உடைமையாளர் என்ன சொன்னார்? நம்மை கிளப்ப பார்க்கிறாரா?”.

“அது மட்டும் தான் பாக்கி. அவர் வாயிலிருந்து என்ன சொல்லி இருப்பார் என்று யூகித்துப்பார். அவர்… ஆ.. நான் சொல்லுவதை நீ நம்பப்போவதில்லை”.

“நிச்சயமாக நம்புகிறேன். மேலே சொல்”.

“சொல்றேன். ஆனா…… ஆனா, அவர் என்ன சொன்னார்னா இல்ல உத்தரவு போட்டார்னா, எல்லா வாடகைக்காரங்களுக்கும் அவர் வாடகையை மூன்றில் ஒரு பங்கா குறைச்சிட்டாராம். நான் சொன்னதை சரியா கேட்டியா, வாடகைகாரங்களுக்கு வாடகையை குறைச்சிட்டாராம்!”.

ஆனால் திருமதி பெர்னார்டோ, மகள் அமாண்டா பெர்னார்டோ இருவரும் சரியாக கேளாமல் சுழன்றபடியே கெக்கலிட்டு சிரித்தனர்.”குறைப்பு” என்றவர்கள் “ஆ என்ன ஒரு நல்ல தமாஷ், என்ன ஒரு கேலிக்கூத்து ஆசாமி! வாடகைக்காரங்களுக்கு வாடகையை குறை!”.

ஆனால் பெர்னார்ட் அமைதி இழந்து அவர் சொல்வதை அவர் வீட்டில் எல்லோரும் நம்பத்தான் வேண்டும் என வலியுறுத்தலானார். விரைவில்அவர் மனைவியும் அமைதி இழந்ததும் சண்டை தொடங்கிற்று. திருமதி பெர்னார்ட் தெருமுனையில் இருக்கும் விடுதியில் உள்ள ஒரு லிட்டர் வைனிடமிருந்துதான் இந்த அருமையான உத்தரவை திரு பெர்னார்ட் பெற்று வந்துள்ளார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நம்புவதாய் அறிவித்தார்.

ஆனால் அமாண்டா, தம்பதியர் இருவரும் அடித்துக் கொள்ளத்தான் போகிறார்கள் என நம்பியிருந்த வேளையில் திருமதி பெர்னார்ட் தான் ஒன்றும் அத்தனை மதியற்றவள் அல்ல என்று நிரூபிக்க முக்காடு போர்த்திக் கொண்டு இதை விசாரிக்க உடைமையாளரின் வீட்டுக்கு விரைந்தாள். பெர்னார்ட் என்னவோ உண்மையைத்தான் சொன்னார். அவளும் அந்த முலாம் பூசிய பெரிய வளையங்களிட்ட காதில் அதை நன்றாகவே கேட்டாள். ஆனால்,அவள் மட்டும் புத்திசாலியாயும் நடப்பு தெரிந்தவளுமாய் இருந்திருந்தால் “ஏதும் எழுதிக் கொடுத்தாரா” என்று தம்மை காத்துக் கொள்ளும்படியாக அல்லவா கேட்டிருப்பாள்?”

இடி இறங்கியவளாய் அவள் திரும்பி வந்ததும் அன்று இரவு வீட்டில் அப்பா அம்மா மற்றும் மகள் மூவரும் நாம் இவ்வுத்தரவை மதிக்கத்தான் வேண்டுமா அல்லது இந்த பைத்தியக்கார இளைஞனின் சொந்தங்களிடம் இவருக்கு புரிய வைக்கும்படி சொல்லலாமா என விவாதிக்கலாயினர்.

முடிவில் உத்தரவை மதிப்பதாக முடிவானது.

மறுநாள் காலை பெர்னார்ட் அவரிடமிருந்த நல்ல கோட்டை அணிந்து கட்டிடத்திலிருந்த 23 வீடுகளிலும் அந்த நல்ல செய்தியை அறிவிப்பதற்காக புறப்பட்டார்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு விக்டோய்ர் தெருவில் இருக்கும் அந்த கட்டிடத்தில் விவரிக்க இயலாத அளவில் குழப்பமும் கொந்தளிப்பும் நிலவியது. ஒரே தளத்தில் 40 வருடங்களாய் வாழ்ந்த போதிலும், ஒருவருக்கொருவர் நேரில் கண்டாலும் மதிக்காதிருந்தவர் தற்போது கும்பல் கும்பலாய் கூடி பேச ஆரம்பித்திருந்தனர்.

“உங்களுக்கு தெரியுமா ஐயா?”.

“இது அதிசயத்தக்கதே”.

“இதுவரை கேள்விப்பட்டிராதது”.

“வீட்டு உடைமையாளர் என் வாடகையை குறைத்து விட்டாராம்” .

“மூன்றில் ஒரு பங்கு அல்லவா, எனக்கும்தான்”

“அபாரம். இது ஒரு தவறுதலாயிருக்கக்கூடும்”.

பெர்னார்ட் குடும்பத்தினர் நன்கு உறுதிப்படுத்தியும், எழுத்து மூலம் உள்ளதாயும் கூறியும் கூட ஒரு சில சந்தேகப் பிராணிகள் இன்னமும் எல்லாவற்றையும் சந்தேகத்துடனேயே பார்த்தனர்.

அதில் மூன்று பேர் நிஜமாகவே வீட்டு உடைமையாளருக்கு மேற்பார்வையாளர் மூலம் அனுப்பிய செய்தி பைத்தியக்காரத்தனமானது என்று கௌரவமான தொனியில் கடிதம் எழுதவும் செய்தனர். ஆனால் வீட்டு உடைமையாளரோ பெர்னார்டிடம் கூறியது சரியே என்றது அவர்களது சந்தேகத்தை போக்கியது.

அதிலிருந்து எதிர்வினைகளும் பேச்சுக்களும் ஆரம்பமாயின.

“ஏன் வீட்டு உடைமையாளர் வாடகையை குறைக்க வேண்டும்?”

“ஆமாம் ஏன்?”

“காரணங்கள் என்ன?”, எல்லோருக்கும் கேள்விகள். “இந்த ஒரு மாதிரியான ஆளை நம்பத்தான் வேண்டுமா? இதற்கு அவருக்கு ஏதாவது அழுத்தமான காரணங்கள் இருக்கத்தான் வேண்டும். எந்த ஒரு சுயபுத்தியுள்ள நல்ல மனிதனும் நல்ல கொழுத்த, பாதுகாப்பான வருமானத்தை சுயமாக இழப்பானா? எவனும் கட்டாயத்தினாலோ அல்லது பலமான, மோசமான காரணங்களால் மட்டுமே இம்மாதிரி நடக்கக் கூடும்.

எல்லோரும் தனக்குள் சொல்லிக் கொண்டனர்

“இதற்குப் பின்னால் எதுவோ உள்ளது”

“ஆனால் அதுதான் என்ன?”

முதலாம் மாடி முதல் ஆறாம் மாடி வரை அனைவரும் தம்முள் கூடி விவாதித்ததும் அல்லாமல் தனியே இதற்கான காரணங்களை தம் மூளைக்குள் தோண்டித் துருவலாயினர். ஒவ்வொரு குடியும் ஏதோ தாம் மட்டுமே ஒரு சங்கேதத்தகவலை பிரித்தெடுப்பது போன்ற எண்ணத்தில் மிதந்தனர். எல்லா மூலையிலும் ஏதோ ஒரு அமானுஷ்ய மௌனம் நிலவியது.

அதில் ஒரு குடியிருப்பாளர் ” இந்த மனிதர் தான் செய்த ஏதோ ஒரு கொடுங்குற்றத்தை மறைத்து வைத்துள்ளார். அதற்கு பிராயச்சித்தமாகத்தான் இந்த மனித நேயம்” என்று அறிவிக்குமளவிற்குச் சென்றார்.

” அவருக்கு அது பிடித்திராமலுமிருக்கலாம். இந்த சந்தேகத்திற்கிடமான மனிதரருகில் வாழ்வதென்பது, முடியவே முடியாத காரியம். அவரென்னவோ தன் தவற்றை தற்போது உணர்ந்திருக்கலாம். ஆனால் அக்குற்றத்தை மறுபடி செய்யும் ஆவல் அவருக்கு வராது என்பது என்ன நிச்சயம்?!”.

மற்றோருவரோ “இந்த கட்டிடம் ஒரு வேளை மோசமாக கட்டப்பட்டதாயும் இருக்கலாம்” என்று கவலையுற்றார்.

“ஹ்ம்ம், இருந்தாலும் இருக்கலாம். யாராலும் சொல்ல இயலாது. ஆனால் எல்லோருக்கும் ஒன்று நிச்சயமாய் தெரியும். இக்கட்டிடம் மிக மிகப் பழமையானது”.

“உண்மையே! இல்லையென்றால் போன வருடம் புதிதாக சாக்கடை வெட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது, அதுவும் மார்ச் மாதத்தில்”.

“அல்லது மேற்கூரையாகவும் இருக்கலாம். ஏனெனில் கட்டிடத்தின் மேற்பகுதி மிக கனமாக உள்ளது அல்லவா?”

“அல்லது ஒரு வேளை…..”, மேல்கூரையினருகில் குடியிருப்பவர், ” கள்ளப்பணம் அடிக்கும் இயந்திரம் அட்டத்தில் இருக்கலாம். ஏனென்றால் அடிக்கடி இரவில் நாணயம் அச்சடிக்கும் இயந்திரத்தின் மெல்லிய ஒலியை கேட்டுள்ளேன்.”

மற்றொருவரின் அபிப்பிராயம், ரஷ்ய அல்லது ப்ரஷ்ய தேச ஒற்றர்கள் இக்கட்டிடத்தில் ஊடுருவியுள்ளனர் என்பது. முதலாம் மாடியில் வசிக்கும் ஒருவரோ, நில உடைமையாளர் இக்கட்டிடத்தை எல்லா சாமான்களுடனும் சேர்த்து தீ வைத்து எரித்து இன்ஷூரன்ஸ் கம்பெனிகளிடமிருந்து பெரும் தொகையை கறக்க திட்டமிட்டுள்ளதாக நம்பினார்.

இப்படி எல்லோரும் தத்தம் அபிப்பிராயங்களுடன் இருக்கையில் திடீரென அசாதாரண, பயமூட்டும் நிகழ்வுகள் நிகழலாயின. ஆறாவது மாடி மற்றும் கூரையின் கீழ் குடியிருப்போர் இனம் தெரியாத ஒலிகளை கேட்கலாயினர். பின், அந்த நாலாவது மாடியில் வசிக்கும் தாதி, ஓர் இரவில், நிலவரையில் ஒயின் திருடச் சென்ற போது இறந்து போன உடைமையாளரின் பேயைக்கண்டாள். அவர் கையில் அவள் வீட்டு வாடகை ரசீதை கூட வைத்திருந்தார். அதனாலயே அவரை அவளால் அடையாளம் காண முடிந்தது! மொத்தத்தில், மேற்கூரையில் இருந்து நிலவரை வரை எல்லோருடைய தவிப்பும், “இதன் எல்லாவற்றிற்கும் பின்னால் ஏதோ உள்ளது” என்பதே.

கனத்த அமைதி பயமாக மாறியது. விரைவிலேயே அது எல்லோருக்கும் பீதியையும் கிளப்பியது. ஆகையினால், மிக விலை உயர்ந்த பொருட்களுடன் முதல் மாடியில் வசிக்கும் கனவான், வீட்டை காலி செய்வதற்கு முடிவெடுத்து மேற்பார்வையாளர் மூலம் நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.

பெர்னார்ட் இது பற்றி கட்டிட உரிமையாளரிடம் அறிவித்தபோது அவர் “சரி, அந்த முட்டாள் போகட்டும். விடுங்கள்” என்றார்.

ஆனால், அடுத்த நாளே, எந்த விலை உயர்ந்த பொருட்களுக்கும் அச்சப்பட அவசியமேயில்லாத இரண்டாவது மாடியில் வசிக்கும் அந்த கால் முட நீக்கு வைத்தியரும் கீழே வசிக்கும் கனவானைப்பின்பற்றினார். பின் மணமாகாதவர்களும், சிறு குடும்பங்களும் கால் முட நீக்கு வைத்தியரை பின்தொடர்ந்தனர்.

அதிலிருந்து மற்றெல்லோரும் வெளியேற முண்டியடிக்கலாயினர். அந்த வார இறுதியிலேயே எல்லோரும் தத்தமது வீடுகளைகாலி செய்யும் நோட்டீஸ்களை கொடுத்து விட்டனர். எல்லோரும் ஏதோ ஒரு பேரழிவை எதிர்பார்த்து இருந்தனர். யாருக்கும் உறக்கம் இல்லை. குழு அமைத்து காவல் இருந்தனர். வீட்டு வேலையாட்களோ, தற்காலிகமாகவே இருப்பினும், மும்மடங்கு சம்பளம் தந்தால் தான் வேலை செய்வோம் என்று அறிவித்தனர்.

பெர்னார்டும் கூட பேய் பிடித்தவர் போலவே உலவினார். பயம் அவரை வெறும் நிழல் போல் ஆக்கி வைத்திருந்தது. ஒவ்வொரு காலி நோட்டீஸ் அறிவிப்பின் பின்னும் திருமதி பெர்னார்ட் மிகுந்த சோகத்துடன், “இல்லை, இது சரியல்ல” என்று திரும்பத் திரும்ப கூறிக்கொண்டேயிருந்தாள்.

இதற்கிடையில், இருபத்தி மூன்று “வீடு வாடகைக்கு” பதாகைகள் வீட்டு முன்புறம் தொங்கவிடப்பட்டு எதேச்சையாக ஒரு வாடகைக்கு வீடு தேடுபவரையும் வரவழைத்தது.

பெர்னார்ட் சலிக்காமல் அவரை எல்லா மாடியையும் ஏறி ஒவ்வொரு வீட்டையும் காண்பித்தார். “நீங்கள் உங்கள் விருப்பப்படி எதையும் தேர்வு செய்யலாம்”, பெர்னார்ட் வீடு பார்ப்பவரிடம் சொன்னார். ” இந்த கட்டிடத்தில் உள்ள எல்லா வீடுகளும் தற்போது காலியே. எல்லா வாடகைதாரர்களும் ஒரே சமயத்தில் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்துவிட்டனர். அவர்களுக்கு ஏனென்று சரியாக தெரியாது, சில விஷயங்கள் நடந்தன. ஆம், இதுவரையிலும் கேட்டிராத கட்டிட உடைமையாளரின் வாடகை குறைப்பு அதிலொன்று!”

அந்த புதிதாக வீடு பார்க்க வந்தவரும் பறந்து ஓடினார்.

வீடு காலி செய்யும் நோட்டீஸ் காலமும் முடிந்தது. இருபத்திமூன்று வாகனங்கள் இருபத்திமூன்று வீட்டு வாடகைதாரர்களின் சாமான்கள், மூட்டை முடிச்சுகளுடன் அகன்றன. எல்லோரும் காலி செய்து விட்டனர். மேலிருந்து கீழ் முதல், அடித்தளத்தில் இருந்து கூரை வரை. வீடு வாடகைதாரர் இன்றி காலியானது.

எலிகள் கூட புழங்குவதற்கு ஏதுமில்லாததால் விட்டொழிந்தன.

மேற்பார்வையாளர் பெர்னார்ட் மட்டும் சாம்பல் பூத்த கண்களுடன் அவர் குடியிருப்பில் பயத்துடன் இருந்தார். அச்சமூட்டும் காட்சிகள் அவர் கனவில் வந்தன. இரவில் சோக ஊளைகளும், வஞ்ச கிசு கிசுப்புகளும் பயத்தில் அவர் பற்களை கிட்டித்து அணிந்திருந்த பருத்திக்குல்லாவின் கீழ் மயிர் கூச்செறியச்செய்தன. திருமதி பெர்னார்டுக்கோ பொட்டு தூக்கமில்லை. அமாண்டாவோ, ஆபேரா நடன கலைஞராவதும், திருமணம் செய்வதுகொள்வதுமாகிய தன் கனவுகளை உதறித்தள்ளி, தம் பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறினால் போதும் என்ற எண்ணத்தில், முன்னெப்போதும் சகித்திராத அந்த இளம் பார்பருடன் ஓடிப் போக நேர்ந்தது.

கடைசியில் ஒரு காலையில் அந்த பயங்கர சம்பவம் நடந்தே விட்டது. பெர்னாடும் அப்பெரிய முடிவை எடுத்து விட்டார். கட்டிட உடைமையாளரிடம் தன் வீட்டு சாவியை கொடுத்துவிட்டு அவரும் தப்பியோடினார்.

இப்படியாக விக்டோய்ர் தெருவில் இருக்கும் அந்தக் கட்டிடம் கைவிடப்பட்டது. இதுவரையில் நான் கூறியது சபிக்கப்பட்ட வீட்டின் வரலாறு. இப்போது, வெளியே இருந்து பார்த்தாலும் ஜன்னல்களில் தூசி படிந்துள்ளதும், வெளி முற்றங்களில் புல் உயர்ந்து வளர்ந்திருப்பதையும் காணலாம். யாரும் வீடு பார்ப்பதற்கும் வருவதாயில்லை. இந்த சபிக்கப்பட்ட வீடுள்ள பகுதியில், இதன் பிரசித்தியால் பக்கத்து எதிர் வீடுகளின் மதிப்பும் குறைந்தே போய்விட்டது.

வாடகை குறைப்பு!! இப்படி நடக்கும் என யார் கண்டது!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.