கைக் கொண்டு நிற்கின்ற நோய்கள்

பெரியாழ்வார் தனது பாசுரத்தில் இவ்வாறு பாடுகிறார் ‘நெய்க் குடத்தைப் பற்றியேறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக் கொண்டு நிற்கின்ற நோய்கள்’. உண்ணும் வெற்றிலை, பருகும் நீர் என்று எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ‘என்றென்றுமான இரசாயனம்’ (Forever Chemicals) நம் உணவில், நம் பற்பசையில், நாம் அணியும் ஃபேஷன் ஆடைகளில், நம் தரை விரிப்புகளில், கண்ணிற்குத் தெரியாத வகையில் நம் உடல் உறுப்புக்களைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது. 9252 இரசாயனங்கள், பி எஃப் ஏ என்ற பட்டியலில் வருவதாக அறிவியல் தளங்கள் சொல்கின்றன. அறிவியல் அறிஞர்கள் இதை முற்றிலுமாகப் போக்க முடியாதென்பதில் கவலையுறுகிறார்கள். சில மாற்று வழிகள் இருந்தாலும் அவற்றைச் செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன- குறிப்பாக, மாற்று முறைகள் அதிகச் செலவு பிடிக்கும் ஒன்று. உடல் நலம் பேண செல்வமும் அவசியம் அல்லவா?

பி எஃப் ஏ (PFA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த வேதிப் பொருட்கள் (Chemicals) பர்ஃப்ளுரோ காரங்கள் (Perfluroalkyl) மற்றும் பாலிஃப்ளுரோகாரங்கள் (Polyfluroalkyl) என்ற விஞ்ஞானப் பெயர் கொண்டவை. சுற்றுச் சூழலைக் காப்பாற்றும் முகவை நிறுவனத்தைச் (Environmental Protection Agency) சேர்ந்த மைக்கேல் எஸ் ரீகன், (Michael S Regan) இந்த வேதிப் பொருட்கள்,  குடி நீரில், உணவில், குழந்தைகள் விளையாடும் இடங்களில் நிறைந்து, அதிலும் குறிப்பாக, அரசு முழுமையாக தன் நிர்வாகத்தைக் கவனிக்காத, அலட்சியப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க மக்களின் உடல் நலக் கேட்டிற்குக் காரணமாக இருக்கிறது எனச் சொல்கிறார். இந்த வேதிப் பொருட்கள் ஆண்களின் விதைப்பையை பாதிக்கின்றன; புற்று நோய்க்கு காரணிகளாகின்றன; பெண்களின் மார்பகக் கட்டிகளுக்கும், கருப்பை நோய்க்கும் அடிகோலிடுகின்றன.

நீரின்றி அமையாது இவ்வுலகு

பெரும்பாலும் குழாய்களிலிருந்து நீர் பிடித்து அருந்துகிறோம். அந்தக் குழாய்களில் ஈயக் கலவை இருக்கிறது. தூயக் குடிநீர், யமுனைத் துறையில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் கிடைக்கவில்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன. (தூயப் பெரு நீர் யமுனைத் துறைவனை என்று திருப்பாவையில் ஆண்டாள் சொல்கிறார்.) இந்தக் குடிநீரில் ‘என்றென்றும் வேதிப் பொருட்கள்’ இருக்கின்றன. அவை பல்லாயிரம் ஆண்டுகளானாலும் மக்குவதில்லை. எந்தப் பொருளைப் பயன்படுத்தினோமோ, அந்தப் பொருள் இல்லை, ஆனால், அதிலிருந்த என்றென்றுமான வேதிப் பொருள் அழிவுறாமல் சூழலில் கலந்து நிலைக்கிறது; அப்படித்தான் நம் உடலிலும் இடம் பிடிக்கிறது. பென்சீன், ஆர்செனிக், யுரேனியம் போன்ற வேதிப் பொருட்களுக்கு அளவை நிர்ணயித்துள்ள, கூட்டாச்சியில் உள்ள சில மா நிலங்கள், குடி நீரில் வேதிப் பொருட்களின்  அளவை நிர்ணயிக்கவில்லை. இந்த பி எஃப் ஏ கொண்டு வரும் மாசு, பொதுச் சுகாதாரத்திற்கான அவசர நிலை என்று ஸ்காட் ஃபேபர் (Scott Faber) என்ற சூழலியல் வல்லுனர் சொல்லியிருக்கிறார்.

அமெரிக்க அரசாங்கமும் இதன் தீவிரப் பாதிப்புகளை உணர்ந்து கொள்கைகள் வகுத்து ஒரு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று வரை நாம் அறிந்துள்ள சுமார் 9000 வேதியல் கூட்டுப் பொருட்களில் 600 வேதிப் பொருட்கள் நாம் பயன்படுத்தும் பல பொருட்களில் உள்ளது. இந்த வேதிக்கலவைகளின் தனி இயல்பு என்பது கார்பன் மற்றும் ஃப்ளுரினிடையே நிலவும் ஆழ்ந்த பிணைப்பாகும். எனவேதான் பொருட்கள் அழிந்தாலும் இந்தக் கலவைகள் மக்குவதில்லை. சூழலில் இணைந்து நிலைத்து விடுகின்றன. கொலராடோ சுரங்கப் பள்ளியைச் சேர்ந்த சுற்றுச் சூழல் பொறியாளரான க்ரிஸ் ஹிக்கின்ஸ் (Chris Higgins) இவை, கால, நில மாற்றங்களை எதிர் கொள்ளும் திண்மை வாய்ந்தவை எனச் சொல்கிறார்.

அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாலும், இவை அடங்கியுள்ள பொருட்களை, பயன்பாட்டிற்குப் பிறகு குப்பைகளாக வீசும் மனிதரின் இயல்பாலும், இவை நிலத்தில், நீரில், அடிக்கடலில், நம் உடலில் இடம்பிடித்து வருகின்றன. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தவிர்ப்புத் துறை (The US centers for Disease Control and Prevention) “யாராரின் குருதிகளை பரிசோதித்தோமோ, அத்தனை பேரின் இரத்தத்திலும் இந்த பி எஃப் ஏ இருப்பதைக் கண்டோம்” என்று அதிர்ச்சி அளித்திருக்கிறது. சிறுநீரகம், கணையம், தைராய்ட், மிகைக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், எதிர்ப்புச் சக்தி குறைபாடு போன்ற பலவற்றை அது பட்டியலிட்டிருக்கிறது. இந்த நிலையைப் பற்றி கவலையுற்ற ஆண்ட்ரூஸ், (Andrews) மற்றும் சூழல் பயன்பாட்டுக் குழுவில் உள்ள ஓல்கா நைடெங்கொ (Olga Naidenko) குடி நீரில் இந்த வேதிப்பொருட்கள் எந்த அளவில் கலந்துள்ளன எனக் கண்டறிய ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். பல வழிகளில் அவை நீரில் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளன. தொழிற்சாலைகள், அவற்றைக் காற்றில் அல்லது நீரில் செலுத்தக்கூடும்; அல்லது அவற்றின் கழிவகற்றும் தொட்டிகளிலிருந்து இந்த வேதிக்கலவை பூமியைச் சாரலாம்- நிலத்தடி நீரில் போய்ச் சேரலாம். இராணுவ அமைப்புகளிலும், தீயை அணைக்க விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் நுரைகளிலும் (Fire fighting Foams) இவை இருக்கின்றன. அதன் மூலமும் சூழலில் நிறைந்து விடும். குடிநீரில் இந்த வேதிக்கலவையைப் பரிசோதிக்குமாறு கூட்டாட்சி அறிவுறுத்தவில்லை. அதனால், அறிவியலாளர்கள், எந்த அளவிற்குப் பாதிப்புள்ளது என அறிய முடியாமல் இருக்கிறார்கள்.

பி எஃப் ஒ ஏ (PFOA-Perflurooctonoic Acid) மற்றும் பி எஃப் ஒ எஸ் (PFOS- Perflurooctanesesulfonic Acid) என்ற இரு வேதிக்கலைவகளைப் பற்றிய தரவுகள் இருப்பதால், ஆன்ட்ரூஸ், மற்றும் ஓல்கா ‘குடிநீர்மாசு’ என்ற ஆய்வுக்களத்தில் இறங்கினர். ஒரு ட்ரில்லியனுக்கு ஒரு பங்கு அல்லது அதையும் விட சற்றுக் கூடுதலாக  இந்த பி எஃப் ஒ எ மற்றும் பி எஃப் ஒ எஸ் உள்ள நீர்தான் பெரும்பான்மை அமெரிக்கர்களுக்குக் குடிக்கக் கிடைக்கிறது என முடிவுகள் காட்டின. இந்த ஆய்வாளர்கள், முன்னர் நடந்த ஆய்வுகள் சுட்டியதையும் சொன்னார்கள்: ஒரு ட்ரில்லியனில் ஒரு பங்கு மிகையாகவுள்ள இந்த வேதிக்கலவை, விதைப்பை புற்று, தடுப்பூசிகள் போட்டும் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைவது, பால் சுரப்பிகள் நன்றாக வளராதது போன்ற கவலை தரும் அழிவுகளுக்கு இட்டுச் செல்கிறது. ஒரு ட்ரில்லியனில் பத்து பங்கு என்று அளவைக்கூட்டி ஆய்ந்த போதும், 18 மில்லியனிலிருந்து 80 மில்லியன் வரை அமெரிக்கர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வு முடிவுகள் காட்டின. ஆனால், அமெரிக்க வேதிப் பொருட்கள் குழுமம், (American Chemistry Council) வேதிக்கலவைகளின் உயர்ந்த பட்ச அளவீடு ஒரு ட்ரில்லியனில் 70க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்கு எந்த அறிவியல் சான்றுமில்லை என நாங்கள் நம்புகிறோம் என சைன்டிஃபிக் அமெரிக்கனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

சுற்றுச் சூழல் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கடிதங்கள் (Environmental Science & Technology Letters) என்ற அமைப்பைச் சேர்ந்த, மேற்குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபடாத வல்லுனர்கள், “இதை எதிர்பார்த்தோம், கவலை தரும் ஒன்று” எனச் சொல்லியிருக்கிறாரகள். கிழக்கு கரோலினா ப்ரோடி மருத்துவப் பள்ளியில் (School of Medicine, East Carolina, Brody) மருத்துவம் மற்றும் நஞ்சுகள் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் ஜேமி டெவிட் (Jamie DeWitt) இந்த வேதிக்கலவைகள் பல நீர்நிலைகளில் கலந்து பல மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கின்றன என்று வேதனை தெரிவித்தார். சூரிச் கூட்டாட்சி தொழில் நுட்ப அமைப்பகத்தில் (Swiss Federal Technology Institute, Zurich) பணி புரியும் சூழல் அறிவியலாளர், “அமெரிக்கா போன்ற மக்கள் தொகை பெருத்த நாடுகளில் இந்த வேதிக்கலவை அன்றாடப் பயன் பாட்டில் இருப்பது பயமுறுத்தும் ஒன்றாக உள்ளது; நமக்கு இப்போது தெரிகிறதல்லவா பி எஃப் ஏவின் தாழ்ந்த பாதுகாப்பு நிலை?”

ஆன்ட்ரூஸ் மற்றும் ஓல்காவின் ஆய்வு கூட ஓரிடத்தில் பெறப்பட்ட இரு பி எஃப் ஏ கலவைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது. குடி  நீரில் உள்ள மற்ற வேதிக் கலவைகளை, அவற்றின் தரவுகள் கிடைக்காததால், ஆய்வு செய்ய முடியவில்லை என்றாலும், அவை இல்லை என்றோ, பாதிக்காது என்றோ சொல்ல முடியாது என்று வாங் (Wang) சொல்கிறார்.  இது ஒரு சிக்கல்தான், தரவுகள் இல்லை என்று ஆன்ட்ரூஸ், ஓல்கா சொல்லியிருக்கிறார்கள். குடிநீர் மட்டுமல்ல, வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்கள், நம் உணவு ஆகியவற்றிலும் இந்த வேதிக்கலவைகள் இருக்கிறது என்றும், அவற்றை நாம் கவனிக்காமல் விட்டுவிட முடியாதென்றும், ஹிக்கின்ஸ் சொல்கிறார்.

மாசசூசெட்ஸ் நீர்நிலைகள் ஐந்தில் ஆய்வு மேற்கொண்டவர்கள், இந்தக் குறிப்பிட்ட வகை பி எஃப் ஏ கடந்த சில பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது என்று தரவுகளுடன் சொல்கிறார்கள். தனித்தனியான வேதிக்கலவைகள் பற்றிய தரவில்லாததால், கூட்டாக பி எஃப் ஏ வை ஆராய்ந்த போது, மாசு அதிகரிப்பு கூடியுள்ளதாகவும் சொல்லியிருக்கிறார்கள். நாட்டின் மற்ற பகுதிகளிலும் இதுதான் நிலவரமா என்பது தெளிவாக இல்லை. அரசு ஒழுங்கு முறை அமைப்புகள், வேதியல் தொழிற்சாலைகளிலிருந்து தேவையான தரவுகளைப் பெறவில்லை; அந்தத் தொழிற்சாலைகள், பி எஃப் ஓ ஏ மற்றும் பி எஃப் ஓ எஸ் உபயோகிப்பதை நிறுத்தி வேறு பல வேதிக்கலவைகளை பயன்படுத்தத் தொடங்கியிருந்த போதும், அந்தக் கலவைகளும் பிடிவாதமாக நீடிக்கும் குணம் கொண்டவையே; பல நீர்நிலைகளை அசுத்தம் செய்பவையே. சூழல் பாதுகாப்பு முகமை (Environmental Protection Agency) ‘இந்த விஷயத்திற்கு நாங்கள் முன்னுரிமை கொடுத்து செயற்படுகிறோம்; சுத்த குடிநீர் சட்டம் (Safe Drinking Water Act) சொல்லும் வழிகாட்டுதலைப் பின்பற்றி இந்தக் கலவைகளின் தாக்கத்தைக் குறைக்க முயல்கிறோம்.’ என்று சொல்லியிருக்கிறார்கள். 

வீடுகளிலும், நகராட்சிகளிலும் இந்த பி எஃப் ஏவைப் போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிறுமணிகள் போன்ற துகள் நிரம்பிய கரிப் பொருள் வடிகட்டியும், (Granular Carbon Filters) தலைகீழ் சவ்வூடுபரவல் (Reverse Osmosis) முறையும் பொதுவில் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆயினும் அவை செலவு பிடிப்பவை மட்டுமல்ல, அதைப் பராமரிப்பதும் கடினமே. (நம் ஊரில் மணற்படுகையும், கூழாங்கற்களும் நீர்த்தொட்டிகளில் பயன்படுத்தி, குழாயின் வாயில் துணியில் முடிந்து வைத்துள்ள படிகாரத்தைக் கட்டி குளிப்பதற்கும், தோய்ப்பதற்கும் உபயோகிப்பார்கள்; வெட்டி வேர், நன்னாரி வேர் போன்றவற்றை குடிக்கும் நீரிலும் போடுவார்கள். செப்புப் பாத்திரங்களைப் பயன் படுத்துவார்கள்- எங்கேயோ கேட்ட நினைவு!)

பி எஃப் ஏவைப் பயன்படுத்தி இலாபம் சம்பாதிப்பது தொழிற்சாலைகள்; அதனால் ஏற்படும் சீர்கேடுகளை அகற்ற வரி செலுத்துவோர் அதிகச் சுமையைத் தாங்க வேண்டியிருக்கிறது. அப்படியே  அகன்றாலும் நதிகளிலும், நிலங்களிலும் கலந்து மீண்டு வரும் ரக்த பீஜாக்ஷரன் அவை.

குடிநீரில் எந்த அளவில் பி எஃப் ஏ இருக்கலாம் என்ற அளவுகளை சில மாநிலங்கள் செயல்படுத்தியிருந்தாலும், கூட்டாச்சி அதிகார முறையின் கீழே இதை கொண்டு வந்தால் தான் பலனிருக்கும் என்ற கருத்து பலனளிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏனெனில், இது ஒரு தேவ-அசுரப் போருக்கு நிகரானது. அமெரிக்க அதிபர், பி எஃப் ஏ அபாயகரமானதென்று சொல்லியிருக்கிறார்.   குடிநீரில் அவை எந்த அளவில் இருக்கலாம் என்ற நிர்ணயம், அதன் மாற்றுப் பொருட்களைப் பெற செய்ய வேண்டியவை, நச்சுக்கள் மற்றும் பி எஃப் ஏ ஆய்வுகளை முடுக்கிவிடுதல் போன்றவை கவனம் பெற்றுள்ளன. இரு அவைகளின் ஒத்துழைப்பு கிடைக்காவிடினும், நிர்வாகச் செயல்பாட்டின் மூலம் இதை நிறைவேற்றலாம். இந்தச் சிந்தனை இப்போது செயல் வடிவம் கொண்டுள்ளது. சூழல் பாதுகாப்பு முகமை, பி எஃப் ஏவை எதிர்கொள்ள $1பில்லியன் மான்யம் அறிவித்துள்ளது. குறிப்பாக அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் சிறந்த முறையில் சுத்தத் தண்ணீர் கிடைப்பதற்கு வழிவகை செய்ய மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பி எஃப் ஓ ஏ ஒரு ட்ரில்லியனில் நான்கு பங்குதான் இருக்க வேண்டும் என்றும், பி எஃப் ஓ எஸ் ஒரு ட்ரில்லியனில் இரண்டு பங்குதான் இருக்க வேண்டும் என்றும் அளவீடுகளை நிர்ணயித்துள்ளது.

என்றென்றுமான வேதிக்கலவையான பி எஃப் ஏ வை தன் உற்பத்திகளில், 2025 இறுதியிலிருந்து  பயன்படுத்தப் போவதில்லை என்று 3 எம் (3M) என்ற பெரும் உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பு இட்டு ஒட்டும் தாள் (Post it Note) தொடங்கி இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களில்  பேராபத்தான பி எஃப் ஏ இருக்கிறது. 1940 களில் அருமையான செயற்கை இரசாயனம் என மதிக்கப்பட்ட பி எஃப் ஏ, நீர்புகா ஆடைகளில், ஒட்டாத டெஃப்லான் பொருட்களில் உள்ளது. அது சூழலிற்கும், குடி நீருக்கும் விளைவிக்கும் ஆபத்துக்களால், அதை நீக்க வேண்டிய அவசியம் இருக்கிறது- அது வேறு வடிவெடுத்து வரும் என்பதும் சிந்திக்கத்தக்கதே.

3எம் நிறுவனம், பி எஃப் ஏ அடங்கியுள்ள பொருட்களைத் தயாரிப்பது மட்டுமின்றி, நோவேக் விமான சுத்தப்படுத்துவதிலும், ஃப்ளுரைனெட் மின்னணு திரவத்திலும், ஃப்ளுபாலிமர் பொருட்களிலும் பயன்படுத்துவதை மருத்துவ உபகரணம் மற்றும் கண்டறிதல் தொழிற்துறை (Medical Devices & Diagnostic Industry) தனது ஆய்வில் சொல்லியிருக்கிறது. நார்த்ஃபேஸ், (Northface) டிமபர்லேன்ட், (Timberland) டூபான்ட் (DuPont) போன்ற நிறுவனங்களும் பி எஃப் ஏவை உபயோகிக்கின்றன. இது அடங்கியுள்ள சரக்குகளை, எல் எல் பீன், (L L Bean) ஆர் ஈ ஐ (REI) விற்கின்றன.

சரியான முறையில் பயன்படுத்தினால், தன் பொருட்களால் கேடு வருவதில்லை என்றே 3எம் சொல்லி வருகிறது. தன் நிதிநிலை $1.3 பில்லியனிலிருந்து $2.3 பில்லியன் வரை கீழிறங்கும் என தெரிவித்துள்ள இந்த நிறுவனம், தன் மிகப் பெரும் இலாபத்தில் இது மிகச் சிறு தொகை என்பதை நினைவில் கொள்ளவில்லை.

3எம் மீது அமெரிக்க இராணுவமும் குறை சொல்லியுள்ளது. அதன் காதுசொருகிகள், (Earplugs) குறிப்பாக ஆஃப்கான் மற்றும் ஈராக் போர்களில் ஈடுபட்ட இராணுவ வீர்ர்களின் செவித்திறனை அதிகமாகப் பாதித்து அவர்களால் கேட்க முடியாமல் செய்துவிட்டது. தன் கருவிகளை முறையாக, சரியாகப் பயன்படுத்தினால், இத்தகு குற்றச்சாட்டுகளுக்கு வாய்ப்பேயில்லை என்று சாதிக்கும் 3எம், வீர்ர்கள் போட்டிருக்கும் 2,35,000 வழக்குகளுக்காக, அதற்குத் தீர்வாக, $1பில்லியன் நிதி ஒதுக்கும் திட்டத்தைச் சொல்லியுள்ளது. மேலும், தன் துணை நிறுவனத்தை (இதுதான் இந்த காது அடைப்பான்களை தயாரித்த ஒன்று) திவால் அறிக்கை தாக்கல் செய்யவும் சொல்லியுள்ளது.

2000த்தின் நடுவிலிருந்தே பி எஃப் ஏ பயன்பாட்டிலிருந்து சிறிது சிறிதாக அகற்றப்பட்டு வந்தாலும், அவை நிலத்திலும், விமான நிலையங்களிலும், நீரிலும் பரவியுள்ளன. நீர்ப்பாதையில் தனது தொழிற்சாலைக் கழிவுகளைக் கலந்து, குடி நீர் உட்பட அனைத்திலும் சுகாதாரக் கேடு விளைவித்தது என்று டூபான்ட் மீது மேற்கு வர்ஜீனியாவாசிகள் வழக்குத் தொடுத்தனர். வழக்காளர் ஒருவருக்கு $1.6 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்யப்போவதாகச் சொல்லியுள்ளது.

பி எஃப் ஏவை எதிர்கொள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஒரு வழியைச் சொல்லியுள்ளது. என்றென்றுமான இந்த வேதிக்கலவையை கரைப்பான்களுடன் (solvents) சேர்த்து, குறைந்த வெப்ப நிலையில் சூடேற்றி, அதை சோடியம் ஹைட்ராக்சைடுடன் ( Sodium Hydroxide – சோப்பில் பயன்படும் ஒன்று) பிணைத்தால் இவற்றை அழிக்க முடியும் என்கிறது இந்தப் பல்கலை. இது மிகக் குறைந்த செலவில் செய்யக்கூடிய ஒன்று.

மே மாதம், கலிபோர்னியா பல்கலை, அயோடைடுடன், புற ஊதாக் கதிர்கள் (ultraviolet lights) மற்றும் சல்ஃபைட்டை இணைத்து  என்றென்றுமான வேதிக்கலவையை நீக்கிவிடலாம் என்று சொல்லியிருக்கிறது.

நவீன ஆடைகள்

உலகின் மிகவும் தேவையற்ற தொழிலகங்களில் ஒன்று ஃபேஷன் தொழிற்சாலைகள். அவை வெளியேற்றும் பசும் குடில் வாயுக்கள் உலகின் அத்தகு உமிழ்வுகளில் 8%; மேலும் கறை படியாத நீர் புகாத ஆடைகளைக் கொண்டு வருவதால் அவற்றில் பி எஃப் ஏ அதிகம். ஒரு மதிப்பெண் பட்டியலைப் பார்ப்போம்.

இந்த வரைபடம் நமக்குக் காட்டுவது ஃபேஷன் ஆடையகங்கள் சுற்றுச் சூழலை பல விதங்களில் மாசுபடுத்துகின்றன என்பதைத்தான்.

இந்தக் கரி உமிழ்வுகள், பெரும்பாலும் இத்தகு தொழிற்சாலைகளால் ஏற்படுவை, பூமியின் அதிகரித்து வரும் வெப்பத்தை அரை டிகிரி செல்சியஸ் அளவில் இன்னும் 8 ஆண்டுகளில் கூட்டும் என்றும், 2043ல் அதுவே 20செல்சியஸியல் அளவில் அதிகரித்திருக்கும் என்றும் சூழலியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பணக்கார நாடுகள் இதற்காக அதிக நிதிகள் ஒதுக்க வேண்டும். ஏனெனில், இத்தகைய உமிழ்வுகளுக்கு அவர்களே தலையான காரணங்கள்.

இந்தியாவும் நதிகளும், நீர்நிலைகளும்

‘இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே! இங்கிதன் மாண்பிற்கு எதிரெதிர் வேறே?’ ‘நமாமி கங்கே’. தூய்மை கங்கைத்திட்டத்தில் ரூ.7000 கோடிக்கும் மேல் செலவழித்திருந்தாலும், கனிமவளக் குவாரிகள் தங்கள் கழிவுகளை கங்கை ஆற்றில் கலப்பதை முழுமையாகத் தடை செய்ய முடியவில்லை. கங்கையின் 70 மையங்களில், ஐந்தில் மட்டுமே நீரருந்த முடியும், ஏழில் மட்டுமே குளிக்க முடியும் என்பது கவலைக்குரிய செய்தி. கடந்த 40 ஆண்டுகளில் தன் போக்கினை 500 மீட்டருக்கு நதி மாற்றிக் கொண்டுள்ளது. காரணம், இயந்திரத் தொழிற்சாலைகளின் ஆக்கிரமிப்பு, மற்றும் தடுப்பணைகள். இந்த நிலை நீடித்தால், விவசாய நிலங்கள், கங்கையில் மூழ்கும் அபாயம் உள்ளது. கங்கைக் கரைகளில் சூழலைப் பாதிக்கும் அமைப்புகளை அகற்றவும், நீரைத் தூயதாக்கவும், ஹரித்வாரிலுள்ள ‘மாத்ரி சதன்’ என்னும் துறவிகளின் ஆஸ்ரமம் நீண்ட நெடுங்காலமாகப் போராடி வருகிறது. 2009ல் இந்த ஆஸ்ரமத் துறவி சாது நிகமானந்தா 114 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். அவருக்குப் பின்னர் 2018ல் ஐ ஐ டி பேராசிரியரும், துறவியுமான ஜி டி அகர்வால் என்ற ஸ்வாமி ஞானஸ்வரூப சதானந்த், 111 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார். 2019ல் 24 வயதேயான ஸ்வாமி ஆத்ம போதானந்த் 194 நாட்கள் உண்ணாவிரதமிருந்து போராடினார்; அதிலும் ஏப்ரல்21 தொடங்கி நீரும் அருந்தாமல் தன் எண்ணத்தில் உறுதியாக நின்றார். உத்தரகாண்ட் நீதிமன்றம், கனிமவளக் குவாரிகளை மூட ஆணை பிறப்பித்துள்ளது. குவாரிகளோ, கார்பரேட்டின் கைகளில்; அரசு வேண்டுமானால் தடுப்பணை கட்டுவதை நிறுத்தலாம். தூய கங்கை வாய்ச் சொல்லால் மட்டும் வந்துவிடாது; அதற்கான செயல் முனைப்பில் சாம, தான, பேத, தண்டங்களை பயன்படுத்த அரசு தயங்கக்கூடாது. நமது அண்டை நாடான சீனா, அமெரிக்க வான் பரப்பில் தன் ஒற்றுபலூனைப் பறக்கவிடும் துணிச்சல்  கொண்டுள்ளது. ஆரத்தியுடன், சாரத்தியமும் செய்ய வேண்டிய நேரமிது.

கங்கையில் புனிதமாய என்று ஆழ்வார்கள் கொண்டாடிய காவிரியின் கதை இன்னமும் பரிதாபமானது. அகண்ட காவேரி கனவாய்ப் போனது. ஆற்றில் மண் அள்ளி அள்ளி அன்னையை அழித்துவிட்டார்கள். திருப்பூரிலோ, நொய்யலில் சாயக் கழிவுகளைக் கலந்து, அதை ஆறென்றே சொல்ல முடியாத அளவிற்கு மாற்றிவிட்டோம். உலகப்புகழ் வாய்ந்த சென்னையின் கூவத்தில் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் குளித்தார்களாம், படகில் உல்லாசப் பயணம் போனார்களாம்!

‘புலவர்களே, அறிவுப் பொருள்களே, உயிர்களே, பூதங்களே, சக்திகளே எல்லோரும் வருவீர். ஞாயிற்றைத் துதிப்போம் வாருங்கள். அவன்  துணை. அவன் மழை தருகிறான். மழை நன்று; மழைத் தெய்வத்தை வாழ்த்துகின்றோம். ஞாயிறு வித்தை காட்டுகின்றான். கடல் நீரைக் காற்றாக்கி மேலே கொண்டு போகிறான். அதனை மீளவும் நீராக்கவும் காற்றை ஏவுகிறான். மழை இனிமையுறப் பெய்கின்றது. மழை பாடுகின்றது. அது பல கோடித் தந்திகளுடையதோர் இசைக்கருவி. வானத்திலிருந்து அமுத வயிரக்கோல்கள் விழுகின்றன. பூமிப்பெண் விடாய் தீர்க்கிறாள்; குளிர்ச்சி பெறுகின்றாள். வெப்பத்தால் தண்மையும், தண்மையால் வெப்பமும் விளைகின்றன. அனைத்தும் ஒன்றாதலால், வெப்பம் தவம், தண்மை ஓம். வெப்பம் ஆண், தண்மை இனிது.’ பாரதி வசன கவிதை

‘உயிரே, நினது பெருமை யாருக்குத் தெரியும்? நீ கண்கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன. எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம்.’ பாரதி வசன கவிதை

உசாவிகள்:

நாளிதழ்கள், காணொளிகள்

https://www.scientificamerican.com/article/forever-chemicals-are-widespread-in-u-s-drinking-water/ By Annie Sneed on January 22, 2021

https://www.forbes.com/sites/brianbushard/2022/12/20/3m-will-discontinue-use-of-hazardous-pfas-forever-chemicals-by-2025/?sh=25bb804d31d0

https://www.greenmatters.com/p/pfas-chemicals-list

One Reply to “கைக் கொண்டு நிற்கின்ற நோய்கள்”

 1. சுற்றுச் சூழல் சீர்கேடு நம் உலகின் கோடிக் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையான விதத்தில் பாதித்து உள்ளது.

  அது மட்டுமல்ல, நாம் நம்மை திருத்திக் கொள்ளா விட்டால்,
  கரோனா பெருந் தொற்று போல , இன்னும் பல பெருந்தொற்றுகள் நம்மை துன்புறுத்த காத்துக் கொண்டு உள்ளன என்பது உறுதி.

  இயற்கை வளங்களை சூறையாடுதல்,
  சுற்றுச் சூழல் பாதிப்பு, காற்று, தண்ணீர் மாசுபடுத்தல்,
  பொறுப்பற்ற முறையில் தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றும் போக்கு, வீட்டுக் கழிவு மேலாண்மை கடைப்பிடிக்காமல் அலட்சியப் படுத்தல்,
  வனங்கள் வளம் குன்றும் வேகம்,
  வன விலங்குகள், செடிகொடிகள் தொடந்து அழிப்பு என நாமே நமக்கு கொள்ளி வைத்து கொண்டு இருக்கிறோம்.

  சரி, இதற்கெல்லாம் நாம் என்ன செய்ய முடியும் ?

  தனி மனிதராக, குடும்பமாக, சமூகமாக, ஊராக, மாநிலமாக , நாடாக நாம் செய்ய நிறைய உள்ளன.

  சரியான திட்டம் இடுதலால்,
  மக்களை செயல் ஊக்கத்துக்கு கொண்டு வர முடியும்.

  தற்போது நம் நாட்டில் உடனடியாக செய்யக் கூடிய திட்டங்கள்.

  குப்பை என்பது வீண் போவது இல்லை,

  குப்பைகளை தரம் பிரித்து,
  வகை ப் படுத்தி,

  சேர்த்து,

  சேமித்து,

  மறு சுழற்சி செய்தால்.

  உதாரணம் ,,;

  பிளாஸ்டிக்.

  கால்நடைத் தீவனம்..

  இயற்கை உரம்.

  எரி பொருள்.

  தலை முடி.

  காகிதப் பொருட்கள்.

  அலுமினிய foils.

  கயிறுகள்.

  இது குப்பையை பிரித்து பயன் படுத்திய நாடுதான்.

  தலை முடியை தனியாக எடுத்து வைத்தவர்கள் தான் நாம்.

  காய்கறி கழிவுகள், வாழைப் பழ தோல், இவற்றையெல்லாம், பொறுப்பாக மாடு, ஆடுகளுக்கு உணவாக அளித்தவர்கள் தாம் நாம்.

  சின்னச் சின்ன பிளாஸ்டிக் கவர் களை ஒரே ஒரு பெரிய பையில் போட்டு விட்டு, அதை தூய்மை காவலரிடம் கொடுத்தல் கோடி புண்ணியம்.

  இந்த விழிப்புணர்வு, பொறுப்புணர்வு நம் மக்களுக்கு வந்தால், நம் வீட்டு மக்கும் குப்பை , இயற்கை உரமாகும்.

  மக்காத குப்பை மறுசுழற்சி ஆகும்

  நம் வீட்டுக் கழிவு எப்படி, எந்த அளவுக்கு,
  மறு சுழற்சி முறையில் பயன் படுத்தப் படுகிறது,.

  மறு சுழற்சி செய்யப் படாமல் நேரடியாக ஆற்றில், குளத்தில்,

  குப்பைக்கு செல்கிறது என்பதை அறிய வேண்டும்.

  இதனை நேர்மையான முறையில்,
  நம் மன சாட்சிக்கு உண்மையாக,
  நாம் சுயமதிப்பீடு செய்தால் மட்டுமே
  முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

  இது போலத்தான்.

  ஆறுகள் மாசு அடைவதற்கு நாம் அனைவரும் ஒவ்வொரு விதத்தில்,
  ஒவ்வொரு அளவில்
  காரணம் என்பதை புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  நாம் அனைவரும் நம்மால் முடிந்த மாசு குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணி, செயல்பட்டால் தான் ஆறுகள் மாசு குறைப்பு நடவடிக்கை வெற்றி பெறும்.

  அரசாங்கம், அதிகாரிகள், தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் பொறுப்பு, கடமை இருக்கிறது.

  அதே சமயம், பொது மக்களும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு, செயல் படவும் வேண்டும்.

  ஆனால் ஒரே நாளில் வெற்றி கிடைக்காது.

  மிக மிக மெதுவாகத் தான் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  l
  மரங்களை நடுவது நன்று.

  மரங்களை வெட்டாமல் தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய முயற்சி எடுப்பது அதனினும் நன்று.

  கொட்டான்குச்சிகள் collection ஒரு எளிய ஆரம்பம்.

  விறகுக்கு பதிலாக , சூரிய ஒளி வெப்பம்
  Boilerகளில் பயன்படுத்தப் பட்டால், காசு மாற்று குறையும்.
  மரங்களும் காக்கப் படும்.

  தொழில் வளர்ச்சி ஏற்படும்.

  வாரம் 4 நாட்கள் மட்டுமே வேலை !

  அதே சமயம்,

  அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட பலவும்,
  பொது மக்கள் பயன்படுத்துவதற்கு உகந்த வகையில்,

  வாரத்துக்கு 7 நாட்களும் வேலை செய்தால்

  விளையும் பலன்கள்

  புதிதாக கட்டடங்கள்,

  சாலைகள் ,

  இட வசதி,

  இருக்கை வசதி,

  ஓய்விட வசதி,

  விளையாட்டு மைதானங்கள்,

  பொழுது போக்கு வசதிகள்

  இன்ன பிறவும் கட்ட வேண்டும் என்ற தேவை இல்லாத

  துறை,

  அலுவலகம்,

  நிறுவனம்,

  ஊர் ,

  மாவட்டம்,

  மாநிலம்,

  என்று எதுவும் உண்டா ?.

  வார இறுதி நாட்களில்,

  தொடர் விடுமுறை தினங்களில்,

  பண்டிகை காலங்களில்,

  சாலைகளில்,

  உணவு விடுதிகளில்,

  தங்கும் இடங்களில,

  ரயில், பேருந்து நிலையங்களில்,

  சுங்கச் சாவடிகளில்,

  வழிபாட்டுத் தலங்களில்

  கடுமையான கூட்ட நெரிசல்,

  நீண்ட நேரம் காத்திருத்தல்,

  அநியாய கட்டணக் கொள்ளை என்று புகார் வராத நிலை உண்டா ?

  ஒரே ஒரு கையொப்பம் பெற,

  வங்கி வரைவோலை எடுக்க,

  ஆவணங்களை சமர்ப்பிக்க,

  சாதாரண , வழக்கமான சேவைகளை பெற ,

  தொடர் விடுமுறை,

  வார இறுதி,

  என்று பல முறை சிரமப் படாத மனிதர் உண்டா ?

  இதற்கு புதிதாக அதிகப் படியான வசதி செய்வது என்றால்,

  இடம் ஒதுக்குதல்,

  கட்டுமானம் செய்தல் இவற்றுக்கு பொருளும், பணமும் நிறைய தேவைப் படுகிறது

  மேலதிகமாக ,

  சுற்றுச் சூழல் மாசுபாடு,

  நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு,

  மணல் பயன் பாடு,

  மர அழிப்பு இவையும் நம் கவனத்துக்கு

  வந்து கொண்டே தான் உள்ளது.

  இது ஒரு தொடர் நிகழ்வு.

  இதற்கு தீர்வு ?

  ஏற்கெனவே உள்ள கட்டுமானங்களை , சாலைகள், கட்டிடங்கள், வாகனங்கள் ஆகியவற்றை முழுமையாக பயன் படுத்துதல்தான்.

  உதாரணமாக,

  தற்போது பெட்ரோல் விற்பனை நிலையங்கள்,

  வாடகை மோட்டார் வண்டி கள்,
  ரயில், பஸ், விமானம் உள்ளிட்ட
  பொதுப் போக்குவரத்து,

  தண்ணீர் மற்றும்
  மின்சார விநியோகம்,

  உணவு, தங்கும் விடுதிகள்,

  உள் நோயாளிகள் தங்கி இருந்து சிகிச்சை பெரும்
  மருத்துவ மனைகள் ,

  காவல் துறையினர்,

  தனியார் சில்லறை விற்பனை கடை கள்,

  காய்கறி அங்காடிகள்,

  பால் உற்பத்தி, செய்தித் தாள்கள் தயாரிப்பு, விநியோகம்,

  மருந்துக் கடை கள்,

  திரை அரங்கு கள் ( கூட்டம் மிகக் குறைந்த அளவே என்றாலும் )

  உள்ளிட்ட பல,

  வாரம் ஏழு நாட்களும் செயல் பாடு உள்ளது.

  சில 24 மணி நேரம் இயங்குகின்றன.

  பல இரண்டு shift பணி உண்டு.

  இதனால்

  மூலதன,
  கட்டுமானச் செலவு புதிதாக ஏதும் இல்லாமல்,

  ( Existing physical infrastructure பயன்படுத்தி )

  அதிகப் படியான மக்களுக்கு வேலையும் கிடைக்கிறது.

  நுகர்வோர்கள் தடையற்ற சேவையும் பெறுகின்றனர்.

  இதே போல்

  பொது மக்கள் நேரடியாக தினமும் பயன் படுத்தும்

  அரசு அலுவலகங்கள்,

  நிறுவனங்கள்,

  வங்கிகள் ( குறிப்பாக அரசு வங்கிகள் ) ,

  பொது விநியோக கடைகள்,

  ( ரேஷன் கடை )

  நீதி மன்றங்கள், ( ஆம் நீதி மன்றங்களும் தான் )

  நூலகங்கள்,

  கல்வி நிலையங்கள்,

  மருத்துவ மனைகள்,

  அருங்காட்சியகங்கள்,

  இன்ன பிறவும் வாரம் ஏழு நாட்களும்

  விடுமுறை எதுவும இல்லாமல் செயல் பட்டால் ,

  வருடம் 365 நாட்களும் ( 366 நாட்கள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும் leap year)
  செயல்பட்டால்

  ( தேவையெனில்,

  இரண்டு shift,)

  வேலை வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.

  மக்கள் சேவை பெறுதல் விரைவாய் நடக்கும்.

  கட்டுமான செலவுகள் ஒரு பைசா கூட அதிகம் செய்யாமல் இந்த நிலை ஏற்படும்.

  ( ஊழியர்கள், அதிகாரிகள் , நீதிபதிகள், வழக்கறிஞர்கள்,

  மருத்துவர், செவிலியர்,

  ஆசிரியர், மாணவர் யாரானும், வாரம் 4 அல்லது 5 நாட்கள்தான் வேலை செய்ய வேண்டும் )

  சுழற்சி முறையில், பணி ஒதுக்க வேண்டும்.

  இவ்வாறு செய்தால்,

  சாலைகள், ரயில், பஸ்கள், சுங்கச் சாவடிகள் உள்ளிட்ட அனைத்து
  போக்குவரத்து கட்டமைப்பு

  வழிபடு தலங்கள்,

  திரை, நாடக அரங்கங்கள்,

  விளையாட்டு மையங்கள்,

  சுற்றுலா மையங்கள இன்ன பிற இடங்களில

  வார இறுதி நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறையும்.

  வருமானம் அதிகரிக்கும்.

  பயன் படுத்தும் மக்களுக்கு செலவும் குறையும்.

  இது ஒரு சிந்தனைக்கு ,

  கருத்துப் பகிர்வுக்கு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.