
(1)
உதிக்கும்
சூரியனைச் சுட்டுகிறாள்
அம்மா.
சந்திரனாய்க் காணுமோ
குழந்தை அதை?
அறியும் வரை
ஆச்சர்யம்
அறியாமையல்ல.
(2)
நினைவு தெரிந்த
நாளிலிருந்து
நினைவுள்ள என் பெயருள்
நழுவி விழுந்த நான்
இது வரை அதிலிருந்து
எழுந்திருக்க
யத்தனிக்கவே இல்லை.
(3)
ஏமாறாது
இருக்க வேண்டியிருக்கும்
யத்தனத்தின்
அயர்ச்சியை விட
ஏமாறுவது அறிந்தே
ஏமாறுவது
சில சமயங்களில்
தேவையாகிறது
நிம்மதிக்கு- அதன்
நியாய விலையாய்.
(4)
உற்று நோக்குமென்னை
உற்று நோக்கி
கடுகு விழிகளை
உருட்டி
வளைத்த கம்பியாய்
வாலை நிமிர்த்தி
ஓடாது நிலைக்கும்
ஓணானின் எதிர்ப்பில்
தெரிந்தது
என் பகைமையை
வெற்றி கொள்ளும்
அதன் தைரியம் போல்
தெரியும் பயம்.
(5)
பிற்பகல்-
அறைக்குள்
பின்வாங்கியிருந்தது
வெயில்.
நிழல் நெருக்க
இப்போது அறை
பின்வாங்குவது போல்
தெரிகிறது எனக்கு.
(6)
ஒளிந்திருந்ததிலிருந்து
தப்பியோடி
மல்லாந்து விழுந்த
கரப்பான் பூச்சியை
நிமிர்த்தி, அதன் தைரியத்தை
நிமிர்த்தப் பார்த்தும்
மறுபடியும் மல்லாந்து விழும்
அதன் நடுக்கத்தில்
மரணத்தின்
என் அச்சம்
அதன் அச்சமாய்
பதிலியிட்டுத்
தெரிகிறது
எனக்கு.
(7)
இல்லாத
யாரிடமோ
முடியாத
என் யுத்தத்தில்
என் வெற்றியில்
என் தோல்வி.
(8)
குழந்தை
கேள்விகளில்
துளைக்க,
அம்புப்
படுக்கையில்
பீஷ்ம
விடை.
(9)
நிலவைச் சுட்டும் விரல்
நிலவில்லையாயினும்
விரல் சுட்டும் நிலவு
வெறும் கிரகமல்ல.
(10)
காணும்
ஒவ்வொரு முறையும்
கண்ணாடிக்கு
நினைவில்லை
என்னையென்று
நினைவில்லை
எனக்கும்.
(11)
இன்னொரு பிரமையில்-
இருளில்
அரவாய்த் தெரிந்த
கயிறு,
தன்னைக்
கயிறாயன்றி
தனக்கு
அரவேயாய்த்
தான் தெரிய
விஷத்துக்கு
அலைகிறது
இருளிலல்ல-
பகலில்.
(12)
நிலம் வானிடையே
முறிந்து முறிந்து
விழும்
நீர்க்காடு –
மழை.
கவிதைகள் அனைத்தும் அருமையாக வந்துள்ளன. வரிசை எண் 4-ல் ஓணானின் எதிர்ப்பு: சிறுவர்களிடம் எதிர்ப்பைக் காட்டி கல்லடி பட்டு குருதி வழிந்த நிலையிலும் தலை நிமிர்த்தி நேர் நோக்கும் சிறப்பைக் கொண்டது….கோரா