கவலைதோய்ந்த காவிரி நினைவுகள்

‘உங்களுக்கும் சேத்து போட்டுறவா?’ என்று கேட்ட நண்பர்  பாலாவிடம் முன்பதிவு செய்யச் சொல்லிவிட்டேன். பலமுறை யோசித்து இந்தமுறை நெரூர் பயணம். நண்பர் தொடர்ந்து அங்கே சென்று கொண்டிருப்பவர். என்னைவிட பத்துவயது இளையவர். அவருக்கு தியானத்தில் ஒருவிதமான ஈடுபாடு. அப்படி பல இடங்களில் தியானம் செய்து எந்த ஊரில் தியான அதிர்வலைகள் (vibration) எப்படி இருந்தது என்று சிலாகிப்பார். சனி, ஞாயிறு இரண்டு நாள் திட்டம். முதல் நாள் காலையில் சதாசிவ பிரும்மேந்திராள் அதிஷ்டானம், அன்று மதியமே திருஈங்கோய்மலை. மறுநாள் காலை திருமுக்கூடல், சாயங்காலம் தான்தோன்றிமலை பெருமாள், கரூர் பசுபதீஸ்வரர் கோயில் என்று ஒரு இறுக்கமான திட்டத்துடன் மங்களூர் எக்ஸ்பிரஸில் செப்டம்பர் 30 ஆம் தேதி கரூர் செல்ல ஏறி அமர்ந்தோம்.

கைபேசியின் ஒளியில் எல்லோர் முகமும் ‘தேஜஸா’க இருந்தது. பலரும் மற்றவரைப்பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் சத்தம்போட்டு கைபேசியை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தனர்.  நண்பர் படுத்த சற்றுநேரத்திலேயே தூங்கிவிட்டார்.  ரயில் ஓடும்பொழுது முன்பெ ல்லாம் பக்கவாட்டிலும், முன்னும்பின்னுமாகவும் ஆட்டும். தொழில்நுட்பம் மாறி விட்டது போலும். இப்போது மேலும் கீழுமாக உதறிக்கொண்டிருந்தது. சரிதான், நண்பர் சொல்லுகிற vibration நமக்கு இப்படிக் கைகூடினால்தான் உண்டுபோலும் என்று நினைத்துக்கொண்டு தூங்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.ஒவ்வொரு ரயில்நிலையத்திலும் ஓடும் ரயிலுக்கு அடியில் ‘டார்ச்’ விளக்கை அடித்துக்கொண்டு ரயில்வே பணியாளர்கள் போன சக்கரங்களெல்லாம் திரும்பிவந்ததா என்று பார்த்துக்கொண்டிருந்தனர்.    
 
சூரியன் தெரிந்தும் தெரியாத, விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் ‘சைடு பெர்த்’தில் படுத்துக்கொண்டு வர்ணக்கலவை வாரியிறைக்கப்பட்ட வான விதானத்தையும், கடந்துபோகும் வாழை, தென்னந்தோப்புகளையும் பார்த்தபடி படுத்திருந்தேன். ஏதோ முடிவற்ற பாதாளத்தில் நினைவோடு விழுந்துகொண்டிருப்பது போல ஒரு பிரமை. தண்டவாளத்தைப் பொடித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தது ரயில்வண்டி. ஊர்பெயரைப் படிக்கமுடியாத வேகத்தில் ரயில் நிலையங்கள் கடந்துபோயின. கண்ணையும் கண்ணாடியையும் கூர்மையாக வைத்துக்கொண்டு பார்த்தபோது மகாதானபுரம் கடந்து போனது. குளித்தலை வருவதற்கு முன்னாலேயே அங்கங்கே காவிரி வாய்க்கால்களில் கெத்து கெத்தென்று தண்ணீர் போய்க்கொண்டிருந்தது. மக்கள் அந்த விடிகாலையிலேயே சுகமாகக் குளித்துக்கொண்டிருந்தார்கள். மேட்டூரிலிருந்து ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. திருச்சியில் காவிரியைக் கடந்தபோது விடியவில்லையாதலால் குளித்தலையில் வெளிச்சத்தில் பார்த்துவிடலாம் என்று ஆர்வமாக இருந்தேன். ரயில் காவிரிக்கு இணையாகச் சென்றுகொண்டிருந்தது பிறகுதான் தெரிந்தது. கரூர் ரயில் நிலையத்தில் நுழைவதற்கு சற்று முன் அமராவதி பரிதாபமாகக் கடந்துபோனது. குறுக்கும் நெடுக்குமாக பன்றிகளும் ஒரு ஓரத்தில் ஆறும் ஓடிக்கொண்டிருந்தன. 

கரூரிலிருந்து நெரூருக்கு பேருந்துப்பயணம் அரை மணிநேரம்தான். திண்ணப்பாவில் ‘பொன்னியின்செல்வன்’ நேற்றுதான் ரிலீசாகி ஓடிக்கொண்டிருந்தது. வழியில் பஞ்சமாதேவி என்றொரு ஊர் கடந்து போனது. நாங்கள் மட்டும்தான் நெரூர். மற்றவர்கள் எல்லாம் முன்னாலேயே இறங்கிவிட்டனர். பேருந்து நெரூருக்கு சற்று முன்னால் பழுதாகி நின்றுவிட்டது. நடத்துனர் எங்களை சற்றுநேரம் காத்திருக்கவைத்து நெரூருக்குச் செல்லும் இரண்டு ‘பைக்’ குகளில் ஏற்றிவிட்டார். என்னுடைய ஓட்டுனரிடம் ஊர் பற்றிய விசாரணையைத் தொடங்கினேன். முக்கியமான தொழில் விவசாயம். முக்கியப்பயிர் கோரைப்புல். அப்போதுதான் கவனித்தேன். இரண்டுபக்கமும் அலையடித்துக்கொண்டிருந்த பச்சைக் குளங்களெல்லாம் நெல்லல்ல, கோரைப்புல் என்று. ஊர்ப் பெயர்ப்பலகையே ‘நெரூர் அக்ரஹாரம்’ என்றுதான் இருக்கிறது. காவிரி வாய்க்கால் வீதியின் நடுவே ஓடும் ஒரே ஒரு அக்ரஹாரம்தான் ஊரே. அதிலுள்ள  இருபது வீடுகளும், அதுபோக உள்ள பத்து, இருபது வீடுகளுமே மொத்த ஊரும்.

 ‘ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திராள் சாரிட்டபிள் டிரஸ்ட்’ நடத்தும் விடுதியில்தான் எங்களுடைய ஜாகை. உரிமையாளர் திரு.ரங்கநாத் அமெரிக்காவில் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். அக்ரஹாரத்து வீட்டை பழமை மாறாமல் எடுத்துக்கட்டியிருக்கிறார். தி.ஜா சொல்வதுபோல் ‘டெலெஸ்கோப்பை திருப்பிப் பாத்தாப்பல’ வீடு. நெடுக ரயில்வண்டி போலப் போய்க்கொண்டே இருக்கிறது. வீட்டைப் பார்த்துக்கொள்பவர் அறுபதுவயதான பானுமாமி. அவருடைய மகன் சென்னையில் வேதபாடசாலை நடத்திக்கொண்டிருக்கிறார். நாங்கள் உள்ளே நுழைந்தபோது ‘ஹாலி’ல் நெற்றிநிறைய விபூதியோடு ஒருவர் ஜபம் செய்துகொண்டிருந்தார். ‘பெங்களூர்ல வேல பண்றார், அடிக்கடி வருவார்’ என்றார் மாமி.

நல்ல காப்பி கிடைத்தது. சீக்கிரம் குளித்துவிட்டு அதிஷ்டானத்துக்குப் போய்விடலாம் என்று பரபரத்தார் நண்பர். எங்கே குளித்துவிட்டு? என்றேன். குளியலறையைக் கையைக் காட்டினார். மாமியிடம் ‘மாமி,ஆத்தங்கரை எவ்வளவு தூரம்?’ என்றேன். ‘இந்தோ இருக்கு, பத்து நிமிஷ நடை,நெரூர் ஸ்னானம் ரொம்ப விஷேஷம் ‘ என்றார். மேற்கு மலைகளில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கிப் பாய்ந்து, இரண்டு மாநிலங்களைக்கடந்து, பூம்புகாரில் கடலில் கலக்கும் காவிரி எங்கெல்லாம் வடக்கு நோக்கி ‘உத்தரவாஹினி’யாகப்  பாய்கிறதோ அங்கெல்லாம் குளித்தால் கங்கையில் குளித்தபலனுண்டு, அந்த இடங்களும் காசிக்கு நிகரானவை என்றொரு ஐதீகம். அவையெல்லாம் முக்கியமான ஸ்நான கட்டங்கள் திருமழப்பாடி, கோட்டூர் போல. நெரூரில் மேற்கிலிருந்து கிழக்காகத்தான் ஆற்றின் பாய்ச்சல். ஆனாலும் ஊர்ப்பாசம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?  ‘குளிக்கலாமா? தண்ணி ரொம்பப் போகுமோ?’ என்றேன் என் பயத்தை வெளிக்காட்டாமல். ‘அது போகும், நீங்க ஓரமாக் குளிச்சுட்டு வந்துடுங்கோ’ என்றார் எச்சரிக்கையாக.  ‘யோவ், மொக்கச்சாமி, இதுதான் நீ குளிக்கிற லட்சணமா?’ என்ற என் பார்வையைப்  புரிந்து கொண்ட நண்பரும் சிரித்துக்கொண்டே வேறுவழி இல்லாமல் கிளம்பி விட்டார். விடுதிக்கு எதிரே கோரைப்புல்வெளியில் ஆங்காங்கே மயில்கள் அகவிக் கொண்டிருந்தன. நாங்கள் தெருவில் காலடி எடுத்து வைத்தோம், ‘நில்லுங்க’ என்றார் தெருவில் எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பெண்மணி, அவருக்கு சற்று முன்னே ஒரு நீளமான பாம்பு தெருவைக் கடந்துபோனது.

ஆற்றுக்குச் செல்லும் பாதை நெடுக இருபுறமும் தென்னை மரங்கள், வாழை, கரும்பு. அதிஷ்டானத்தைக் கடந்துதான் சென்றோம். மயிலின் அகவல் திரும்பியபக்கமெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது. எதிரே இரண்டு மணல் லாரிகள் கடந்து போயின. எச்சரிக்கைப் பலகை இங்கு ஆற்றில் ஆழம் அதிகம், சுழல் உள்ள பகுதி, பலபேர் பலியான இடம் என்று பயமுறுத்தியது. ஆறு எங்கு ஆரம்பிக்கிறது என்று குறிப்பாகச் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நாணல் மண்டிக்கொண்டு வருகிறது. ஒரு சின்ன மணல் பள்ளம். ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்திருக்க வேண்டும். ஏறினால் மணல் மேடு. ஒரு காலத்தில் பள்ளமாகும். அங்கு ஒரு குடும்பம் திதி கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே நாணல் குச்சங்கள். மணல்மேடு மறுபடியும், மேடுதோறும் திதி முடித்துச் செல்லும் மனிதக்கூட்டம் விட்டுச் செல்லும் கழிவுகள், வாழைப்பழம், இலை, காய்ந்த பூ இத்யாதி…  பக்கத்தில் சின்ன நீர்த்திட்டு.ஆங்காங்கே வெள்ளித் தகடுகளாக சத்தமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது காவிரி.  

தண்ணீர் தொடமுடியாதபடி சில்லென்றிருந்தது. பல்லைக் கிட்டித்தபடி தடாலடியாக விழுந்து முதல்குளியலைப்போட்டேன். திருகித் திருகி நின்றுகொண்டிருந்த நண்பர் மேல் நீரை வாரியிறைத்து நெஞ்சை நிறுத்தினேன். நீர் வரும் திசையை நோக்கி நின்றுகொண்டு மூக்கைப்பிடித்துக்கொண்டு மூன்று முழுக்கு போடவேண்டும். இதுவே ஆற்றில் குளிக்கும் முறை என்று இறந்த என் மாமனார் கூறியது நினைவில் வர, அதுபடி செய்தேன். அங்கு குளித்துக்கொண்டிருந்த ஒருவரிடம்’ என்ன, ஒரு லட்சம் கனஅடி தொறந்து விட்டுருக்காங்கன்னாங்க, தண்ணி அவ்வளவா இல்லையே?’ என்றேன். சிரித்துக்கொண்டே ‘மெயின் கோர்ஸ்’ அங்க போகுது, என்று கையைக் காட்டினார். சற்றுதூரத்தில் தண்ணீர் சதும்பலாகப் போய்க் கொண்டிருந்தது. நீச்சலில் ‘பேசிக் கோர்ஸ்’ கூடப் படிக்காமல் அங்கு போவது உசிதமில்லையாதலால் முழங்கால் அளவுத் தண்ணீரிலேயே குளித்துவிட்டுக் கரையேறினோம். துண்டைக்கட்டிக்கொண்டே அறைக்கு நடந்து வந்துவிட்டேன். ஒரு சின்ன மெடிக்கல் ஷாப். ஒரு சின்ன டீக்கடை. அதிஷ்டானம் வாசலில் இரண்டு பூக்கடைகள்.  மொத்த ஊருக்கும் இவ்வளவுதான் கடைகள்.போகும்போதும் வரும்போதும் எதிரே ஒருஆள் வரவில்லை. இதற்காகவே இன்னொருமுறை  வரலாம் என்று நினைத்துக்கொண்டேன். மாமி கொடுத்த இட்டிலி, காப்பி சாப்பிட்டுவிட்டு அதிஷ்டானம் கிளம்பிவிட்டோம். 

சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சந்நிதி. பிரம்மேந்திரர் சமாதியான இடத்தில் உள்ள சுயம்பு லிங்கத்திற்கு பூஜை நடந்துகொண்டிருந்தது. போய்த் தியானத்தில் அமர்ந்தோம். ‘கஜானனம் பூத கணாதி…’ முதல் ‘மந்தாரை முல்லை பிச்சி…’ ஈறாக ஒரு பதினைந்து இருபது சுலோகங்கள் அம்மா ஐம்பது வருடங்களுக்கு முன் சொல்லிக்கொடுத்தது வடமொழியும், தமிழும் கலந்து மணிப்பிரவாளமாக ஆழுள்ளத்திலிருந்து மெதுவாக ஒலிக்கவாரம்பித்தது..’நானும் பாத்துக்கிண்டே இருக்கேன் செல் போன வெப்பேளுன்னுட்டு,மூணுசுத்து முடிஞ்சும் பேசிக்கிண்டே இருக்கேளு?’ ன்னு அர்ச்சகர் யாருக்கோ ‘டோஸ்’ விட்டுக்கொண்டிருந்த சத்தம் கேட்டு லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்தேன். ‘மன்னிச்சிருங்க சாமி’ என்று ஒரு பெரியவர் கைபேசியை பையில் வைத்துக் கொண்டிருந்தார். நண்பர் முகத்தில் லேசான சிரிப்பு. குழந்தைகள் தூக்கத்தில் அழகாகச் சிரிக்குமே? சுவாமி தாமரைப்பூ காட்டுகிறார் என்பார்கள் அதுபோல. ம்ம்…தியானம் கைகூடி விட்டதுபோல. வெப்பேளு, இருக்கேளு…எங்கு கேட்டிருக்கிறேன்? இப்படிப்பேசியவர்களையெல்லாம் நினைவு கூர்ந்தேன். எல்லாரும் தஞ்சாவூர்காரர்கள். காலையில் கூட மாமி டிபன் சாப்பிட்டுவிட்டு காப்பி கேட்டபோது ‘காலம்பறயே ரசிச்சு குடிச்சேளு, டிகாக்ஷன் எடுத்து வெச்சுருக்கேன்’ என்றார். தஞ்சாவூர்ப் பேச்சு. நடுப்பற என்பார்கள் இடையில் என்ற அர்த்தத்தில். இதன்னியில என்றால் இதைத்தவிர என்று அர்த்தம். க.நா.சு நாவல்களில் நிறையப் பார்க்கலாம்.

சதாசிவ பிரம்மேந்திராளைப் பற்றி என்ன தெரிகிறதோ அவர் நிர்வாணச் சாமியார் என்பது மட்டும் எல்லாருக்கும் தெரியும். அம்மா அவரைப்பற்றி சின்ன வயசிலேயே சொல்லியிருக்கிறார். ‘மானஸ சஞ்சரரே…’ அவர் பாட்டுதான். க.நா.சு வின் ‘அவதூதர்’ படித்தபோது, எனக்கு உடனே நினைவுக்கு வந்தது சதாசிவ பிரம்மேந்திராள்தான். அடடா…இதென்ன தியானத்திற்கு நடுவே…தியானமா?…எங்கே விட்டேன்..அதனாலென்ன, பிரம்மேந்திராள் பத்திதான..ம்ம்.ஆதௌ ராமம்…சரி..மொதல்லேந்தே ஆரம்பிப்போம்.. எல்லாம் சொல்லி முடித்தாயிற்று. என்ன வேண்டிக்கொள்வது, முன்னெல்லாம் பொதுநலனுக்காகக் கூட வேண்டிக்கொண்டிருக்கிறேன். நாட்டிலே எல்லோரும் சுபிட்சமாக இருக்கவேண்டும் என்று. அதை ரொம்பப் போலித்தனமாக உணர்ந்ததால் நிறுத்திக்கொண்டேன். எல்லாருக்கும்  நல்ல புத்தியக் குடு ஆண்டவா… அதுக்குமேல ஒண்ணுமில்ல…என்ன வேண்டிக்கொண்டாலும் அதன் திரண்டகருத்து சின்னவயதில் அம்மா சொல்லிக்கொடுத்த ‘உம்மாச்சி காப்பாத்து’ தான்.

மதுரையைச் சேர்ந்த தெலுங்கு பிராமணர் சோமநாத அவதானி – பார்வதி அம்மாள் இணையருக்கு மகனாகத் தோன்றியவர் சிவராம கிருஷ்ணன். மதுரையிலேயே வேதம் கற்றவர், திருவிசைநல்லூர் குருகுலத்தில் சேர்ந்து ராமபத்ர தீக்ஷிதரிடம் சகல சாஸ்திரங்களையும் கற்றுத்தேர்கிறார். சிவராமகிருஷ்ணனின் மனம் துறவறத்தில் படிந்ததைக் கண்ட குரு அவரை ஸ்ரீ பரம சிவேந்திரரிடம் அழைத்துச்செல்ல, அவர் வைத்த பரீட்சைகளில் தேறி, மாணவராய் அமைகிறார். அவரிடம் ‘சதாசிவ பிரும்மேந்திரர்’ என்ற தீஷா நாமம் பெற்று, குருவின் சார்பாக நாட்டின் பல பகுதிகளுக்கும் திக்விஜயம் செய்து வாதங்களில் கலந்துகொண்டு வெற்றிதேடித் தருகிறார். பின் குருவின் அனுமதி பெற்று, மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான விதவானாகப் பொறுப்பேற்கிறார். அங்கு தான் கூறுவதுதான் சரி என்கிற ஜல்ப வாதத்திலும், பிறர் கூறுவது தவறு என்கிற விதண்டா வாதத்திலும் பெரும் வெற்றிபெற்று பலருடைய பாராட்டுகளையும், வயிற்றெரிச்சல்களையும் கொட்டிக் கொள்கிறார். தன் சிஷ்யன் தடம் மாறுவதைக் கண்ட குரு, ஒருவரிடம் ‘குரு தங்களை தரிசிக்க விரும்புகிறார்’ என்று செய்தி சொல்லி அனுப்புகிறார். ‘தரிசிக்க’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பதறி, குருவைக் காணச்செல்கிறார் பிரம்மேந்திரர். ‘கைகட்டி வாய்பொத்தி நின்றால் ஆச்சா? ஊர் வாயை அடக்கியவனுக்கு தன் வாயை அடக்கத் தெரியவில்லையே?’ என்று குரு பொங்கியெழ, அன்றிலிருந்து பேச்சை ஒழித்து மௌன குருவாக தன் இரண்டாம்கட்ட வாழ்வைத் தொடங்குகிறார் பிரம்மேந்திரர். உணவு, உடை மறந்து பல யோகசாதனைகளில் ஈடுபடுகிறார்.

இவர் பற்றிய பல வாய்மொழிக்கதைகள் உண்டு. ஒருமுறை கொடுமுடியில் காவிரி ஆற்றின் நடுவே ஒரு பாறையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். மக்கள் பார்த்துக்கொண்டிருக்க, திடீரென்று வெள்ளம் வந்து இவரை அடித்துச்சென்று விடுகிறது. எங்கு தேடியும் உடல் கிடைக்காமல் போக, இவர் இறந்துவிட்டார் என்று நினைத்துவிட்டார்கள். சிலநாட்கள் கழித்து அங்கு வீடுகட்ட மண்தோண்டியபோது மண்வெட்டியில் ரத்தம் படிந்ததைக் கண்டவர்கள் மெதுவாகத் தோண்டிப்பார்த்தபோது அங்கு தியானத்தில் இருந்த சதாசிவ பிரம்மேந்திரர் எழுந்து நடந்து சென்றாராம். அதேபோல் மகாதானபுரத்தில் சில குழந்தைகள் சித்திரைத்திருவிழாவிற்கு மதுரைக்குச் செல்ல ஆசைப்பட, அவர்களை கண்ணைமூடச் சொல்லியிருக்கிறார். கண்ணைத்திறந்தால் மதுரை. நிர்வாணமாக அலைந்துகொண்டிருந்த இவருடைய கையை ஒரு முஸ்லீம் மன்னர் துண்டாக்கிவிட, இவர் இன்னொருகையால் எடுத்து ஒட்டவைத்துக்கொண்டு நடந்து சென்றது. இப்படி….

புன்னைநல்லூர் மாரியம்மன், தேவதானப்பட்டி காமாட்சியம்மன், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில்களை நிறுவியதில் இவருக்கு முக்கியப்பங்குண்டு. சரஸ்வதி மகால் நூலகம் ஆரம்பிக்க தஞ்சாவூர் மன்னரைத் தூண்டியதும் இவரே. புதுக்கோட்டை மன்னர் தொண்டைமானுக்கு இவர் தக்ஷிணாமூர்த்தி மந்திரம் உபதேசித்து விரலால் எழுதிக்கொடுத்த மணல் இன்றும் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. இவர் சிறந்த வாக்கேயக்காரரும் கூட. இன்றளவும் கர்நாடகசங்கீத மேடைகளில் பாடப்படுகிற “மானஸ ஸஞ்சரரே”, “சர்வம் ப்ரம்ம மயம்”, “பிபரே ராமரஸம்”, “ப்ரூஹி முகுந்தேதி” போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், “பிரம்ம சூத்ர வ்ருத்தி”, “ப்ரம்ம தத்வ பிரகாசிகா”, “யோக சுத்தாகரா”, “ஆத்ம வித்ய விலாஸம்” போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார். ஸ்தூல சரீரம் (நெரூர்), சூட்சும சரீரம் (மானாமதுரை), காரண சரீரம் (கராச்சி,பாகிஸ்தான்) என்று மூன்று இடங்களில் ஜீவசமாதி ஆகியிருக்கிறார். பாகிஸ்தானில் இவருடைய சமாதி சூஃபியுடைய சமாதியாக வணங்கப்படுகிறது என்கிறார்கள்.     

சாப்பிட்டுவிட்டு நண்பர் ‘தட்க’லில் ஊர்திரும்ப முன்பதிவு செய்ய கரூர் சென்றிருந்தார். நான் அந்த வீடைச்சுற்றிவருவதும், ஊஞ்சலில் ஆடுவதுமாக இருந்தேன். கடைசியாக, நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒரு நண்பனின் வீட்டில் ஆடியது.. ஊஞ்சல் கம்பியிலிருந்து ஒரு சப்தம் இல்லை. யானை,குதிரை,சிங்கம் போன்ற சிற்பங்கள் கொண்ட அழகான வெண்கல ஊஞ்சல் கம்பி. சுகமான ஆட்டம். மாமி கொலுவைத்திருந்தார். அதைப்பார்க்க பக்கத்துவீட்டுப் பெண்களெல்லாம் வந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அக்ரகாரத்தில் நான்குபேர்தான் பிராமணர்கள். ஒரு  வீடு இடிந்துவிழுந்து துளசிமாடம் மட்டும் ‘கொல்’ லென்று சிலிர்த்துக்கிடந்தது. இப்படி ஒருவீட்டிலிருந்துதான் காலையில் பாம்பு கிளம்பிச்சென்றது. வீட்டு உரிமையாளர் ரங்கநாத் எம்.ஜி.ஆர் ஒரு மேடையில் பேசும்பொழுது மேடையில் அமர்ந்திருந்த புகைப்படம் இருந்தது. எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சைக்காகச் சென்றிருந்த பொழுது எடுக்கப்பட்டிருக்கலாம். நண்பர் சென்றமுறை நெரூர் வந்திருந்த போது அவர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாராம். எண்பது வயதான முதியவர். அவருடைய மேற்பார்வையில் பழமைமாறாமல் வருடக்கணக்காகக் கட்டப்பட்ட வீடு. மாடியில் இரண்டு அறைகள் ஐந்துபேர் தங்குவதுபோல. குளிர்சாதன வசதி, கட்டில், மெத்தைகளோடு. கீழே சாதாரணமாக மூன்று அறைகள். வீட்டின் பின் பகுதியில் மாட்டுக்கொட்டம். நான்கு பசுமாடுகள் பராமரிக்கப்படுகின்றன.  ‘லெட்சுமி கர்ப்பமா இருக்கா?’ என்றார் வெட்கத்தோடு அங்கே வேலை செய்யும் பெண். 

சற்றுநேரம் அறையில் படுத்திருந்தேன். மின்விசிறியை இயக்கவேண்டிய அவசியமில்லாத மிதமான தட்பவெட்பம். வீட்டின் அமைதி மனதிற்குள் இறங்கிக்கொண்டிருந்தது, இந்த அமைதி நாம் எப்போதும் இருக்கும் வீட்டில் கிடைப்பதில்லையே, ஏன்?  பக்கத்துவீட்டில் யாரோ ஜோதிடசிகாமணி வந்தவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ‘இன்னும் ஆறு மாசம்தான். அதுக்கப்புறம் சனி வந்துர்ரான்ல, நீ நெனச்சது நடக்கும்’ என்று. வந்தவரின் முகமலர்ச்சி மனக்கண்ணிலேயே தெரிந்தது. ‘ஆறுமாசம் நீ நெனைச்சதெல்லாம் நடக்கும், அப்பறம்தான் சனி வந்துர்றானே..’ என்று சொன்னால்தான் கஷ்டம். எல்லோருக்குமே ஒரு பற்றுக்கோடு வேண்டியிருக்கிறது. ‘க்கும்…கும்…கும்’ என்று எங்கிருந்தோ செம்போத்து குரலெழுப்பியது. திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் (1986-89) மாலைநடை செல்லும்போது தென்னந்தோப்புகளிலிருந்து கடைசியாகக் கேட்டது.         

தி.ஜானகிராமன் – சிட்டி எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’யில், ‘காவிரியை எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கலாம், ஆனால் திருஈங்கோய்மலையிலிருந்து பார்ப்பதைப்போல அதன் முழு அழகையும் வேறெங்கும் காணமுடியாது’ என்று படித்தபோதுதான் அந்தப்பெயரைக் கேள்விப்படுகிறேன். காலைக்கடம்பர் (குளித்தலை), மத்தியானச் சொக்கர்(திருவாட்போக்கி, அய்யர்மலை), அந்தி ஈங்கோய்நாதர் (திருஈங்கோய்மலை) இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் காண்பது விசேடமாகக் கருதப்படுகிறது. இன்று மதிய உணவு அருந்திவிட்டு சிறிது இளைப்பாறியபின் அங்கு புறப்பட்டோம். பேருந்தில் கரூர் சென்று அங்கிருந்து குளித்தலைக்கு இன்னொரு பேருந்து. இங்கிருந்து காவிரியைத் தாண்டி வடகரைக்குச் செல்ல இன்னொரு பேருந்து. அங்கிருந்து திருச்சி-நாமக்கல் சாலையில் அமைந்திருக்கும்  கோயிலுக்கு இன்னொரு பேருந்து என்று சற்றே அயர்வளிக்கும் பயணம். ஆனால் புது இடம், வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்று விட்டோம். குளித்தலை காவிரிப் பாலம் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர். ஆற்றின் அகலம் பிரமிப்பூட்டுகிறது. ‘மெயின் கோர்ஸ்’ சுக்கும் நமக்கும் மின்னற்பொழுதே தூரமாகையால் நடத்துனர் யாரையும் படியில் நிற்கவிடுவதில்லை. பேருந்துமே பாலத்தின் சுவரைவிட்டு தொலைவிலேயே செல்கிறது. பல ‘மெயின் கோர்ஸ்’ கள் போகும் போல இருந்தது. கருநீல நிறத்தில் செல்வதெல்லாம் அநேகமாக அவைகளாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

படிகள் ஆரம்பிக்கும் இடத்திலேயே இடது புறம் போகருக்கு தனிக்கோயில் உள்ளது. பூட்டியிருந்தது. போகர் பழனிதண்டாயுதபாணி நவபாஷாணச் சிலைக்கு இறுதிவடிவம் கொடுத்தது இந்தமலையில்தான் என்று மலையில் ஏறும்போது உள்ள செய்திப்பலகை கூறுகிறது. ஐநூற்றிச் சொச்சம் படிகள். படிகள் சீராக இல்லை, நிறைய இடங்களில் சிதிலமடைந்து இருந்தது. சற்றே கவனமாக ஏறவேண்டியிருந்தது. ஆனாலும், அரைமணி நேரத்தில் மேலேறி கோயிலுக்குக்குள் சென்று விட்டோம். இதுபோன்ற மலைக்கோயில்களையெல்லாம் உடல் திடமாக இருக்கும்போதே பார்த்துவிடுவது நல்லது என்று தோன்றுகிறது. அவ்வப்போது நின்று திரும்பி காவிரியின் அழகைப் பருகிக்கொண்டே ஏறினோம். ஒரு லட்சம் கனஅடி நீர் செல்லும்போதே நிறைய மணல்திட்டுக்களைப் பார்க்க முடிந்தது. கண்ணம்பாடி, மேட்டூர் அணைகள் கட்டுவதற்கு முன்னால் தண்ணீர் இரு கரையையும் தொட்டுக்கொண்டு போயிருக்கலாம்.அன்றெல்லாம் ஆற்றின் ஒவ்வொரு மணற்துகளும் உயிர்ப்பாக இருந்திருக்கும்.

இன்றைக்கு ஒவ்வொரு முறை மேட்டூரில் தண்ணீர் திறக்கும்போதும் கேட்கிற குரல் ‘கடைமடைக்கு நீர் சேரவில்லை’. ஆற்றில் மணலை அள்ளி மனிதன் போடுகிற பேராசைக்குழிகளை நிரப்ப உலகத்து ஆறுகளையெல்லாம் ஒன்றாகத் திருப்பிவிட்டாலும் காணாது என்று நினைத்துக்கொண்டேன். சோழர்காலத்திலும் கூட இங்கிருந்து காணுகின்ற விரிந்த நிலக்காட்சியில் எந்த மாற்றமும் இருந்திருக்காதாய் இருக்கும். குன்றிற்கும் காவிரி ஆற்றுக்கும் இரண்டு கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். ஒரு தொலைநோக்கி இருந்திருந்தால் இன்னும் தெளிவாகக் கண்டிருக்கலாம். இதுபோலவே கேரளாவிலும் ஒரே நாளில் காணவேண்டிய மூன்று சிவன்கோயில்களாக கோட்டயத்திற்கு அருகிலுள்ள  ஏத்தமானூர், கடுந்துருத்தி, வைக்கம் என்ற மூன்று கோயில்களையும் சொல்வார்கள்.  

அகத்தியர் ஈ வடிவத்தில் சிவனை வழிபட்டு முக்திபெற்ற ஸ்தலம். தேவாரப் பாடல்பெற்ற தலம். மலைமீது மகாதேவர். மங்களாம்பிகை உடனுறை மரகதாசலேஸ்வரர். ஆனால், என்னை ஆச்சரியப்படுத்தியது இங்கு உள்ள பாலதண்டாயுதபாணி சிலை. நான் பார்த்த மிக அழகான முருகன் சிலை. கருங்கல்லில் செய்யப்பட்டது.  ‘மலைநின்ற திருக்குமரா…மால்மருகா..’ என்ற டி.ஆர்.மகாலிங்கத்தின் பாடல் மனதில் ஒலித்தது. பாவம், அர்ச்சகர் மட்டும்தான் இருந்தார். யாரும் இல்லையென்றால் ஐந்தரை மணிக்குக் கிளம்பிவிடுவேன், நீங்கள் வருவதைப் பார்த்துவிட்டேன் என்றார். கோயில் பராமரிப்பில்லாமல் சிரமதிசையில் இருக்கிறது.கும்பாபிஷேகம் கடைசியாக நடந்தே ஐம்பது வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. அர்ச்சகர் வீடு மலையடிவாரத்தில். முப்பது வருடமாக தினந்தோறும் ஏறி வந்துகொண்டிருக்கிறார். ‘ஆடி  அம்மாவாசைக்கி புதுசாக் கல்யாணம் ஆனவங்கள்லாம் கூட்டம்கூட்டமா வருவாங்க, வருசத்துக்கு அந்த ஒரு நாள்தான் கூட்டம் வரும்’ என்றார். நூறு ரூபாயைத் தட்டில் போட்டுவிட்டு இறங்க ஆரம்பித்தோம். ஒரு கல்யாணமான புது ஜோடி நாங்கள் இறங்கும்போது ஏற ஆரம்பித்திருந்தார்கள். ‘வேகமாப் போங்க’ என்று சொல்ல வாயெடுத்து, படிகளின் மோசமான நிலைமையை நினைத்து நிறுத்திக்கொண்டேன். நிச்சயம் அர்ச்சகர் இவர்களைப் பார்த்திருப்பார்.  

மறுநாள் காலை மறுபடியும் காவிரிக் குளியல். நேற்று நாங்கள் குளித்துக்கொண்டிருந்த இடத்தில் ஒரு பெண்கள் கூட்டம் கலக்கியடித்துக்கொண்டிருந்ததால், வேறு ஒரு படுகையைத் தேடிச் சென்றோம். ஓரிடத்தில் இருவர் நெஞ்சளவு ஆழத்தில் குளித்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன் பாதுகாப்பாக இடுப்பளவு ஆழத்தில் குளிப்பதாக திட்டமிட்டு இறங்கி சுகமாகக் குளித்துக்கொண்டிருந்தோம். அவ்வப்போது மீன்கள் காலை வெடுக் வெடுக்கென்று கடித்து கிளுகிளுக்க வைத்துக்கொண்டிருந்தன. அப்போது திடீரென்று தண்ணீரின் நிறம் கருப்பாக மாறத்தொடங்கியது. மற்றவர்களும் கூறினார்கள் நிச்சயம் ஏதோ சாயப்பட்டறைத் தண்ணீர்தான் என. சிறிது நேரத்தில் முற்றிலுமே நிறம் மாறிவிட்டது. யாருக்கும் குடித்துப்பார்க்க தைரியமில்லை. மஹ்ஸீர் (Mahseer) என்ற ஐம்பத்திலிருந்து அறுபது கிலோ வரை எடைகொண்ட மீனினம் கொன்றொழிக்கப்பட்டது இதே காவிரியில்தான். 

ஈரோட்டில் சாயப்பட்டறைக் கழிவுநீர் காவிரியில் கலப்பதையும், மீன்கள் ஆயிரக்கணக்கில் செத்து மிதப்பதையும் ஆண்டாண்டுகாலமாக செய்திகளில் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதற்கு நானே சாட்சியாகையில் ஒரு பெரிய திடுக்கிடலே ஏற்பட்டது. ஆற்றின் மரணம்தான். கொல்பவன் மனிதன். அவனுக்கு உயிர்கொடுத்து வாழவைப்பதைத் தவிர அந்த ஆறு எந்தப் பாவத்தையும் செய்யவில்லை. இப்படியே விட்டால்தான் பத்தாயிரம் கோடியில் காவிரி சுத்திகரிப்புத் திட்டம் போடமுடியும் என்பது அரசுக்குத் தெரியாதா,என்ன? கங்கைக்கு அப்படி ஒரு திட்டம் இப்போது நடைமுறையில் உள்ளது. உலகத்தையே சுத்திகரிக்கும் ஆற்றுக்கு தன்னைச் சுத்தம் செய்துகொள்ளத் தெரியாதா என்ன? சுற்றிலும் எத்தனையோ மரணங்கள் செய்தியாகக் கடந்துபோகின்றன. ஆனால், நம் கண்ணெதிரே ஏற்பட்டால் வேறொன்றுதான். அளவாகக் குளித்து விட்டு, விடுதிக்கு வந்து இன்னொருமுறை குளித்தேன். 

சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு திருமுக்கூடலூர் செல்லக்கிளம்பினோம். நண்பர் யாரிடமிருந்தோ  ‘ஸ்கூட்டர்’ இரவல் வாங்கிவந்ததிலிருந்து அவர் பாதி நெரூர்வாசி என்று தெரிந்தது. நெரூரிலிருந்து நாலு கிலோமீட்டர் தூரம். காவிரியும், அமராவதியும் கூடுமிடத்தில் உள்ளது திருமுக்கூடலூர். ஆற்றங்கரையில் அகஸ்தீஸ்வரர் கோயில். காசியிலிருந்து தான் கொண்டுவந்த லிங்கத்தைத்தான் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று வாலி அகத்தியரிடம் சண்டையிட, முடிந்தால் நான் பிரதிஷ்டை செய்த மண்ணாலான லிங்கத்தை பெயர்த்தெடுத்துவிட்டு நீ கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்துகொள் என்று கூற, தன் வாலினால் லிங்கத்தைப் பெயர்த்தெடுக்க முடியாமல் தோற்ற வாலி, காவிரிக்கரையில் ஸ்ரீராமசமுத்திரம் என்னும் ஊரில் வாலீஸ்வரரை பிரதிஷ்டை செய்தார். இது தலபுராணம். தலவரலாறு கிடைக்கவில்லை. எந்த மன்னன் காலத்தில் கட்டப்பட்டு எப்போது கைவிடப்பட்டது என்ற தகவல் இல்லை.திருஈங்கோய்மலைக்காவது திருஞானசம்பந்தர் தேவாரம் பாடியிருப்பதால் நிச்சயம் சோழர்காலக் கோயில் என்று தெரிகிறது. இரண்டிலுமே அகத்தியர் சம்பந்தப்பட்டிருக்கிறார்.கோயிலின் உள்ளே மரத்தடியில் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்தார். அறநிலையத்துறையாக இருக்கலாம்.

 ‘கொழந்தையும் தெய்வமும் கொண்டாடற எடத்துல’ என்பார் என் அம்மா. மேல்விதானம் உடைந்து விழுந்த அறையில் கொண்டாட யாருமில்லாத எல்லா மூர்த்தங்களும் எங்களை நின்று, கிடந்து, அமர்ந்தவண்ணம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். கோயில் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ‘லட்சக்கணக்கான கனஅடித் தண்ணீர் வருவதால் ஆடு,மாடுகளோடு ஆற்றுக்குள் இறங்கிவிடாதீர்கள்’ என்று எச்சரித்தது ‘ஃப்ளெக்ஸ்’ விளம்பரத்தட்டி.     கோயிலின் ஒருபகுதி ஆற்றுக்குள்ளேயே இடிந்துவிழுந்து கிடக்கிறது. நண்பர் இதுபோன்ற பாழடைந்த கோயில்களுக்குப் போகக்கூடாது என்று சொல்வார்கள் என்றார். வரும்பொழுது நான் வண்டியை ஓட்டினேன். வழுக்கிவிழ ஏதுவாக கோரைப்புல்லை சாலையோரமாக வரிசையாகக் காயவைத்திருந்தனர். சாலை என்றால் ஓரமாகத்தான் போகவேண்டுமென்ற என் மரபணு விதியை மீறமுடியாதவனாய் இரண்டோரு இடங்களில் சற்று ரொம்பவே ஓரமாகப் போய் நண்பரின் ரத்தஅழுத்தத்தை எகிறச் செய்தேன். திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். 

‘கல்கத்தா காளிக்கப்பறம் நெரூர் காளிதான்’ என்று காலையில் கிளம்பும்போதே கூறியிருந்தார் நெரூரின் கலாச்சாரத் தூதுவர் பானுமாமி. நெரூர் காளி கோயிலுக்குச் செல்லும்பொழுது நண்பருக்கு  நடுரோட்டிலேயே வண்டி ஓட்டிக்காண்பித்தேன். நவராத்திரி அலங்காரத்திற்காகத் திரை போட்டிருந்தார்கள். ஒருமணி நேரமாகுமென்றார் அர்ச்சகர். பக்தையைக் கேலி செய்ததற்கு கைமேல் பலன். நேரமின்மையால் மானசீகமாக வணங்கிவிட்டு விடுதிக்குக் கிளம்பினோம்.         

நாங்கள் உள்ளே நுழையும்போது முன்புறம் சேதமடைந்த விபத்துக்குள்ளான ஒரு கார் வெளியே நின்றிருந்தது. அதிஷ்டானத்திற்கு வந்த ஒரு பக்தருடையது. நெரூருக்கு சற்று முன் ஒரு இருசக்கர வாகனத்தோடு மோதி, அதில் வந்த இருவருக்கும் அடி. அபாயமில்லை என்றார்கள். அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வந்து பக்தர் அவசர அவசரமாக உணவருந்திக்கொண்டிருந்தார். விசாரணைக்கு போலீஸ்காரர் வந்திருந்தார். ஊர்க்காரர்கள் இருவர் வந்து மத்தியஸ்தம் பண்ணிக்கொண்டிருந்தனர்.விருந்தினருக்கு இப்படி ஆகிவிட்டதே? என்ற பதற்றத்தோடு போலீஸ்காரருக்கு பாயசம் கொடுத்து உபசரித்துக்கொண்டிருந்தார் பானுமாமி. நாங்கள் சாப்பிட்டுவிட்டு மாமியிடம் அடுத்தமுறை குடும்பத்தோடு வருவதாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்டோம்.  

தான்தோன்றி மலை கரூர் – திண்டுக்கல் சாலையில் ஐந்தாவது கிலோமீட்டரில் உள்ளது. அருள்மிகு கல்யாண வெங்கடரமண பெருமாளைக் காண ஞாயிற்றுக்கிழமையன்றும் நல்ல கூட்டம். திருப்பதிக்குச் செல்லமுடியாத பக்தனுக்கு காட்சிதரத் தானாகவே தோன்றியதால் தான்தோன்றிப் பெருமாள். திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம். மலைக்கட்டுக் கோயில். குடைவரைக்கோயில். முதல்பார்வையிலேயே பெருமாளின் முகம் சற்றே வித்தியாசமாக (அல்லது விகாரமாகவா?) இருந்ததுபோல எனக்குத் தெரிந்தது. நண்பரும் நான் சொன்னபிறகு ஒத்துக்கொண்டார். அங்கிருந்து கரூர் பேருந்து நிலையம் வந்து, பசுபதிநாதர் கோயிலை நடந்தே சென்றடைந்தோம். பாடல் பெற்ற தலம். பழமையான கற்கோயில். 

நாங்கள் சென்றபொழுது கோயில் வெளிப்பிரகாரத்தில் ஏதோ ஒரு ஆன்மீகப் பேரவையின் சார்பாக சிறார்களின் கலைநிகழ்ச்சி. முகத்தில் ஜிகினா மினுங்க ஆடி முடித்த குழந்தைகள் சிரிப்போடும், ஆடவிருக்கிற குழந்தைகள் பதட்டத்தோடும் இருந்தனர். அவர்களைத் தயார்ப்படுத்தும் மும்முரத்தில் பெற்றோர்கள். பசுபதிநாதரையும் அம்பாளையும் கருவூராரையும் வணங்கிவிட்டு குழந்தைகளின் ஆடல் பாடலை சிறிதுநேரம் பார்த்துவிட்டுக் கிளம்பினோம். இரண்டு நாட்கள், வேறொரு உலகம், வேறொரு வாழ்க்கை. நாளைமுதல் மறுபடி ‘கிரைண்ட’ரில் போட்ட அரிசிதான். அரிசி என்றதும் நினைவுக்கு வருகிறது, இந்த இரண்டு நாட்களும் காவிரிக்கரைகளில் சுற்றினோமே, ஒரு நெல்கதிரைக் கூடப்பார்க்கவில்லை. இது பயிரிடும் காலம் இல்லையா? அல்லது நெற்பயிருக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறதா?

சாப்பிட்டுவிட்டு வேகவேகமாக நடந்து சென்று ரயில்நிலையத்தை அடையவும் வண்டி வரவும் சரியாக இருந்தது. ரயில்பெட்டியைக் கண்டுபிடித்து ஏறுவதற்குள் மழைவந்து நன்றாகக் குளிப்பாட்டிவிட்டது. துவட்டிக்கொண்டு காய்வதற்காக ஓடும்ரயிலில் கதவருகே நின்றுகொண்டிருந்தபோது மோகனூர் காவிரிப்பாலத்தின் மீது ரயில் சென்றுகொண்டிருந்தது. விடைபெற்றுக்கொள்ள வந்தாற்போல காவிரிஆறு  நீர்நிறைந்து சென்றுகொண்டிருந்தது. காலையில் என்னைக்கடித்த நெரூர் மீன்களெல்லாம் அந்த ரசாயன அலையில் தப்பித்திருக்குமா? ‘இந்தச் சூழியல் கொலையை எப்போதடா நிறுத்துவீர்கள்?’ என்று ஆறும் கேட்டுக்கொண்டிருக்கலாம்.நாம் பதில் சொன்னோமா, என்ன?  ‘நடந்தாய் வாழி காவேரி’ யின் கடைசி அத்தியாயத்தில் பெரிய சங்கீதவித்வான்களையும், நாகஸ்வரக்கலைஞர்களையும் பெயர் குறிப்பிட்டுவிட்டு தி.ஜானகிராமன் இப்பிடி எழுதியிருப்பார் ‘குழாயிலும்தான் தண்ணீர் வருகிறது. அதுவே ஆறாக ஓடினால் இப்படியா சிற்பமாக, பாட்டாக, கலையாகப் பொலியும்’ என்று. நாம் அடுத்த தலைமுறைக்காவது ஆற்றைக் கொண்டு சேர்ப்போமா? 

One Reply to “கவலைதோய்ந்த காவிரி நினைவுகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.