கனவு மெய்ப்பட வேண்டும்

இதன் முதல் பகுதி

கற்பனைகள் கொண்டு வரும் கனவுகள், அதை நனவாக மாற்றும் பெரும் முயற்சி, அவற்றில்  சில வெற்றி பெறும், சில கருத்துக்களாக மட்டுமே நிலவும், சில மனித வாழ்வின் தரத்தை மேம்படுத்தும், சில பாதிப்பதே தெரியாமல் சூழலை சிதைத்துக் கொண்டே வரும். எப்படியிருப்பினும், கற்பனைகள், கனவுகள் உருவம் பெறுகையில் எழும் உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்கி விடாது.

காரில் பறப்போமா?

மனிதனின் கண்களுக்கெட்டிய வானம் கை வசமாகாமல் நழுவிக் கொண்டிருக்கையில், மரக் கிளையில் ஊஞ்சலாடும் பறவைகள் ஜிவ்வென்று பறந்து மிதந்து இந்தப் புவியின் ஈர்ப்பை மீறிச் செல்கையில், பொறாமைப் படாத மனங்கள் இருக்கிறதா? அதையும் விமானங்கள், விண்வெளிப் பயணங்கள், இன்று நிறைவேற்றி விட்டன.

மாயக் கம்பளத்தில் பறந்து வரும் இளவரசனோ, பேரழகியோ, மந்திரவாதியோ இளமையில் நம்மைக் கவர்ந்தவர்கள். இன்று உங்கள் மகிழுந்துவில் நீங்கள் பறக்கலாம் என்பது இத்தகு கற்பனைகளின் நீட்சி பெற்ற காட்சி வடிவம். ஏ5 (A5) என்ற பறக்கும் கார், 2023 பயனர் மின்னணு கண்காட்சியில் (Consumer Electronic Show) அனைவரையும் கவர்ந்த ஒன்று. ‘ஆஸ்கா’ (ASKA) நிறுவனம் இதை $7,89,000 விலையில் கொண்டு வருகிறது. அமரிக்கக் கூட்டாட்சி விமான நிர்வாகம் (Federal Aviation Administration) ஒரு மாதத்திற்குள் இந்தக் கார்களுக்கான அனுமதி வழங்கிவிடும் என்று அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் கை கப்லின்ஸ்கி (Guy Kaplinsky) சொல்கிறார். 2026-ல் கூட்டுப் பயணங்களுக்கு இது மிகவும் உதவும். 

முன்னர் ஒரு அறிவியல் மாநாட்டில், பெரும் வளாகங்களின் மேற்தளங்கள் ஒடு தளங்களாக, அவற்றில் பறக்கும் கார்களை நிறுத்தி (நம் பேருந்து, இரயில் நிறுத்தங்களைப் போல) பயணிகளை ஏற்றிச் செல்லவும், இறக்கி விடுவதுமான ஒரு கருதுகோள் விவாதிக்கப்பட்டது. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்களைக் குறைக்கவும், வேகமாகப் பயணிக்கும் வசதி இருப்பதால் நகரங்களில் வசிப்போர், புற நகரங்களில் வசித்துக் கொண்டு, அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று திரும்புவதை எளிதாக்கவும் இந்தப் பறக்கும் ஊர்திகள் விவாதிக்கப்பட்டன. ‘ஆஸ்கா’ நிறைவேற்றுகிறது. இந்தக் கார் ஒரு மணி நேரத்தில் 150 மைல்களைக் கடக்கும். ஒருமுறை ஏற்றும் மின்சக்தியில் 250 மைல்கள் பயணிக்கலாம். 100 மைல்களை 30  நிமிடங்களில் கடக்க முடியும் என்பது எத்தனை நிறைவு!

லாஸ்வேகஸ்சில் இப்போது இந்த நிறுவனம் காட்சிப்படுத்திய கார் பார்ப்பதற்கு எப்படி இருந்தது?  நான்கு இருக்கைகள், ஒரு எஸ் யூ வி போன்ற தோற்றம். ஓட்டிச் சென்று, அந்த வாகனத்திலேயே பறந்து, பிறகு சாலையில் ஓட்டி நிறுத்திவிட்டு உங்கள் வேலைகளுக்கு நீங்கள் சென்றுவிடலாம். நீங்கள் வீட்டிலிருந்து பொதுப் பேருந்தில் பயணித்து, பின்னர் விமானத்தில் பயணித்து,  இறங்கும் இடம் வந்த பிறகு மீண்டும் ஒரு வாகனத்தை அமர்த்திக் கொண்டு உங்கள் அலுவலகத்திற்கோ, பள்ளிக்கோ, மாநாட்டிற்கோ செல்வீர்கள். அந்த மூன்றையும் இணைத்து ஒன்றிலேயே செய்ய முடிவது இதன் சிறப்பு. தனியாக நிறுத்தும் இடம் தேடி அலைய வேண்டாம். செங்குத்தாகவும், சிறியதாகவும் இது தளத்தை விட்டுக் கிளம்பும், இறங்கும். முழுதும் மின் மயமாக்கப்பட்ட இதில் மின்கலன்கள் மூலமும், இயந்திரத்தின் மூலமும் இயங்கு சக்தி பெறப்படுகிறது. இதிலிருக்கும் வரம்பு நீடிப்பு இயந்திரம் (Range Extender) வாயுவால் (LPG, CNG)  இயக்கப்படுவதால், வாயு நிரப்பும் கேந்திரங்களில் எளிதாக நிரப்பிக் கொள்ள முடியும். ஆபத்துக் காலங்களில், இந்தக் கார்- விமானத்திலிருக்கும் பெரும் இறக்கைகள் இறகு போல் சரிந்து பக்குவமாக, பத்திரமாக தரையிறங்கும். அந்த இறக்கைகள் ஒவ்வொன்றிலும் ஆறு துடுப்புக்கள் (Propellers) உந்து விசை தடுப்பான்களாக அத்தகைய ஆபத்துக் கால தரையிறக்கத்தில் செயல்படும். வெகு தூரம் செல்லக்கூடிய வான்குடை மிதவையும் (Parachute) இருக்கிறது. 2026ல் சாலைகளில், வானத்தில் இதைப் பார்க்கலாம் என்று கூறியுள்ள இந்த நிறுவனம் முன் பதிவுகளை வரவேற்கிறது.

மடி, சறுக்கு, வடிவத்தை மாற்று

நம் திறன்பேசிகள் நீள் செவ்வகமாக இருக்கின்றன அல்லவா? அவற்றை மடிக்க முடிந்தால், சறுக்க முடிந்தால், திரை வடிவத்தை மாற்ற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ‘ஃப்ளெக்ஸ் ஹைப்ரிட்’ (Flex Hybrid) என்று பெயரிட்டு சாம்சங் குழுமம் இதைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஒரு புத்தகத்தைப் போல இதை மடிக்கலாம்; ஒரு கணினியின் அளவிற்கு திரையை விரிக்கலாம். 10.5 அங்குலத்திலிருந்து 12.4 அங்குலம் வரையான திரை அளவிற்கு காட்சிப்படுத்துதலைச் செய்ய முடியும். இது எப்படி சாத்தியமாகிறது? கரிம உமிழ்வு டியோட்ஸ் (OLED) இதில் பயன்படுத்தப்படுகிறது. எனவே பின் ஒளி (Back light) தேவையில்லை. இந்தக் கரிம உமிழ்வுகள் மிகவும் மெல்லியதாக இருக்கக்கூடிய நெகிழி (Plastics) அடுக்குகளில் அச்சிடப்படுகின்றன. மடக்கவும், நீட்டவும், திரையை அமைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கிறது. இந்தச் சந்தையில் டி சி எல் போன்ற குழுமங்களும் இருக்கின்றன. (Lisa Eadicicco)

சாதனை செய்யும் சாம்சங் தொலைக்காட்சிப் பெட்டி

75 அங்குலத்தில் வடிவ மாற்றுத் திரை கொண்ட தொலைக்காட்சிப் பெட்டியையும் சாம்சங் கருத்தளவில் காட்டியுள்ளது. அதன் மாதிரியே அசத்தலாக உள்ளது. அதில் இலட்சக்கணக்கில் ஒளி உமிழ்வு டியோட்கள் உள்ளன. ஏதேனும் ஒன்று பழுதுபட்டால், அதை மட்டுமே நீக்கி சரி செய்ய முடியும் என்பதும் ஒரு சிறப்பு. இது சாம்சங் குழுமம் காட்சிப்படுத்தியுள்ள ஒன்றுதான். அதன் மின்னணுப் பிரிவு இதன் தயாரிப்புத் திட்டத்தை சீரமைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் மற்றுமொரு சாதனம் 8கே என்ற ப்ரொஜெக்டர். பிரிமீயர் என்று பெயரிடப்பட்டுள்ள இது, எந்தச் சுவற்றையும் 150 அங்குலத் திரையாக்கும் வல்லமை உடையது. சுவற்றிலிருந்து சில அங்குலத் தொலைவில் இதை வைத்தால் போதும். சிறிய வசிப்பிடங்களுக்கும் ஏற்ற வகையில் இதன் வடிவமும், அளவும் இருப்பதால், எளிதாக அனைத்துத் தரப்பினரும் பெரிதாக்கப்பட்ட காட்சிகளை வீட்டுச் சுவற்றில் பார்த்து களிக்கலாம். 

உழவில் ரோபோ

ஜான் டியர் ரோபோ நடவு (John Deere Robot Planter) உழவர்களுக்கு மட்டுமின்றி, சுற்றுச் சூழலுக்கும் உகந்தது எனச் சொல்கிறார்கள். இந்த ரோபோ ‘எக்ஸாட் ஸ்பாட்’ (Exact Spot) என்று அழைக்கப்படுகிறது. இதில் உணரிகளும், இயந்திரக் கற்றலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிலத்தில் உரமிடும் போது, அது பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் தூவப்படுவதால், விதைகளுக்கு இடையில் உள்ள பகுதிகளிலும் இரசாயன உரம் சேர்கிறது. அது மண்ணை மலடாக்குவதோடு, நோய்கள் அல்லது உடல் அழற்சிகள் தரும் நச்சினை நம் உணவுப் பொருட்களில் சேர்க்கிறது. இந்த ரோபோ விதையாளன், தேவையான இடங்களில் மட்டும் உரத்தைச் செலுத்தும். அதுமட்டுமல்ல இந்த முறையில் உரங்களின் தேவை 60% குறையும் என்றும் சொல்கிறார்கள். இரசாயன உரங்களைக் குறைத்து, இயற்கையாக மண்ணை வளப்படுத்துவது சாலச் சிறந்தது. உலகின் மக்கள் தொகை 8 பில்லியன்களைத் தாண்டிய நிலையில் உணவு உற்பத்தியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். (Claire Reilly, Bree Fowler)

சூர்ய சக்தியும், இணைவு ஆற்றலும் (Solar Power and Fusion Power)

தொல்லெச்ச எரி பொருட்களால், காற்றும், நீரும், பூமியும் அடைந்து வரும் மாசும், பசுமைக்குடில் வாயுக்களும், புவி வெப்பமடைதலும் நாம் அறிந்த ஒன்றே. உலகெங்கும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வைப் பற்றிய கருத்தரங்கங்களும், போராட்டங்களும் நடை பெறுகின்றன. இயற்கையில் கிடைக்கும் சூர்ய சக்தியை நாம் மாற்று எரி பொருளாக நம் மின் சக்தி தேவைகளுக்குப் பயன் படுத்தினால், மாசு, தூசுகளைக் குறைக்கலாம். ஒளி ஊடுருவும் பலகைகளும், (Transparent Solar Panels) இணைவு ஆற்றல் (Fusion Power) பெறுவதில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களும் நமக்கு ஒரு தீர்வினை அளிக்கும் விதத்தில் உருக் கொள்கின்றன. இவை நீடித்த சக்திகளாக இருந்தால் தான் அவற்றின் நோக்கம் நிறைவேறும்.

ஆதவனை, உதயத்தில் பிரும்மனாகவும், மதியத்தில் சதாசிவனாகவும், அந்தியில் விஷ்ணுவாகவும், மும்மூர்த்திகளாக ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் சொல்கிறது. ஆனால், இரவில் அவன் ஒளி நமக்குக் கிடைப்பதில்லை. சூர்யன் மறையாத நாடுகளில் கூட அவன் ஒளி தொடர்ந்து கிடைப்பதில்லை. வணிகத் தயாரிப்புகளில் சூர்யத் தகடுகள், காற்றாலைகள் தரும் சக்திக்கு ஈடாக மின் உற்பத்தியைச் செய்வதுமில்லை. இந்தச்சூழலை எதிர் கொள்ளும் வகையாக, ஒளி புகும் திரைகள் வந்துள்ளன. அவற்றை சட்டகங்களில் ஒட்டிக் கொள்ளலாம்; பிற ஏதுவான பொருட்களின் மேற்புறத்தில் ஒட்டி விடலாம். இந்தத் திரைகள் சக்தியை அறுவடை செய்யும். ‘உபிக்யூடஸ் எனெர்ஜி’ (Ubiquitous Energy) மற்றும் ‘ சோலார் விண்டோஸ்’ (Solar Windows) இந்தத்துறையில் செயல்படுகிறார்கள்.

இந்த இரண்டு நிறுவனங்களுமே பயனர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் நோக்கத்திலில்லை; வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தில் உள்ளனர். நம் வீட்டிலோ, அலுவலகங்களிலோ நம் ஜன்னல்களிலும், நாம் பயன்படுத்தும் கார்களிலும் இந்த ஒளித் திரைகளை ஒட்டுவதன் மூலம் மின்னாற்றலைப் பெறலாம்.

மின்னியங்கி மகிழுந்துக்களில் (Electric Cars) சில தயாரிப்பாளர்கள் சூர்ய வில்லைகளைப் பொருத்தி விற்பனை செய்கிறார்கள். பெரும் பயணங்களில் இவைகளை மின்னேற்றம் செய்து கொள்ள வேண்டும்- நாம் கார்களில் பெட்ரோல், டீஸல், வாயு ஆகியவற்றை நிரப்புவதைப் போல. எத்தகைய சூர்யத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன, அவற்றின் செயல் திறன் என்ன என்பதைப் பொறுத்து, சிறு பயணங்களில், ஒரு நாளில் 40 மைல் வரை சூர்ய சக்தி ஆற்றலை மட்டுமே கொண்டு பயணம் செய்ய முடியும். உங்கள் வாகனங்கள் எங்கு நிறுத்தப்படுகின்றன என்பதும் அதன் ஆற்றல் நீடித்து நிற்க வகை செய்யும்.

அப்தேரா, (Aptera) சோனோ சையான், (Sono Sion) லைட்இயர் 0 (Lightyear0) போன்ற சூர்ய ஆற்றலில் இயங்கும் கார்கள் வடிவமைப்பில் எடை குறைவாக, சூர்ய சக்தியின் மிகு பயனை அடையும் விதமாக வடிவகைப்பட்டுள்ளன.

வானக அடுப்பிலிருந்து கதிரவன் தரும் சக்தியைப் போல பூமியில் இணைவுச் சக்தியை உண்டாக்க முடியுமா என்றும் அறிவியலாளர்கள் முயல்கிறார்கள்.

சமீபத்தில் லாரன்ஸ் லிவர்மோர் நேஷனல் (Lawrence Livermore National Labs) ஆய்வகத்தில், உள்ளிட்ட மின் சக்தியை விட சற்று அதிகமான சக்தியைப் பெறமுடிந்தது, இணைவாற்றல் உற்பத்தியில் ஒரு சிறந்த முன்னேற்றம். 10 மெகாவாட் மின்சக்தியைச் செலவழித்து ஏழு மெகாவாட் சக்தி பெறுவதில் தொல்லெச்ச எரி பொருட்களின் பங்கு தானே மிகையாக இருக்கிறது. அதை மாற்றிக் காட்டியுள்ள லிவர்மோர் ஆய்வகத்தின் செயல்பாடு கவனிக்கத் தக்கது. நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு- சுண்டைக்காய் அரைப் பணம்; சுமை கூலி முழுப் பணம்! நடைமுறையில் உட்செலுத்தப்படும் சக்தியைப் போல பத்து மடங்கான சக்தி பெறப்பட்டால் தான் இது ஒரு மாற்று மின் சக்தியாக உருவெடுக்கும். அதற்கு காலமாகலாம். (வரும் நிதியாண்டிற்கான இந்திய நிதி நிலை அறிக்கை சூர்ய சக்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ரூ 20,700 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு ரூ 8,300/- கோடி ஒதுக்கியிருக்கிறார் நிதி அமைச்சர். லடாக்கில் அமையவிருக்கும் இது சோலார் ஆற்றலை உற்பத்தி செய்யவும், பல மானிலங்களின் மின் கிடங்கிற்கு அனுப்பவும் உகந்த ஒன்றாக, அதன் புவியியல் அமைப்பினாலும், சூர்யக் கதிர்கள் விரிந்து பரவிக் கிடைப்பதாலும் இதைத் தேர்வு செய்துள்ளார்கள். அதைப் போல மின் உந்துகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களின் இறக்குமதி தீர்வை வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்கள் போலவே மின் வாகனங்களும் சக்தியை நிரப்பு உதவும் மையங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது)

கடற்சக்தி

வானிலிருந்தும், காற்றிலிருந்தும், நீரிலிருந்தும், பூமியின் கனிமப் பொருட்களிலிருந்தும் சக்தியைக் கொண்டு வந்த மனிதன் கடலை விட்டு வைப்பானா?

ஆஸ்த்ரேலியா, கிங் தீவில், கடலில், ‘வேவ் ஸ்வெல் எனெர்ஜி’ (Wave Swell Energy) என்ற நிறுவனம் செயற்கை ஊதுகுழியைப் (Artificial blowhole) பயன்படுத்தி மின்சக்தி தயாரிப்பதை ஒரு வருடமாகச் செய்து வருகிறது. இயற்கையில் காணப்படும் ஊதுகுழியினால் தூண்டப்பட்ட இந்த அமைப்பு, யூனிவேவ் 200 (Uniwave 200) என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் நடு அறைக்கு அலைகள் அனுப்பப்படுகின்றன; அங்கே காற்று அழுத்தப்படுகிறது; அது விசையாழியைச் (Turbine) சுழற்றுகிறது; அதன் மூலம் சக்தி பிறக்குது. அது மின் விநியோக மையத்தில் சேமிக்கப்படுகிறது.  இந்த செயற்கை ஊதுகுழியை மேம்படுத்தி, கட்டுக்குள் செலவுகளைக் கொண்டு வந்து, நம்பிக்கைக்கு உரியதாக செய்யும் ஆய்வில் இந்த நிறுவனம் தற்சமயம் ஈடுபட்டுள்ளது.

மற்றொரு நிறுவனமான ‘எகோ வேவ் பவர்’ (Eco Wave Power) மனிதர்கள் வடிவமைத்த மிதவைகளைக் கடலில் கட்டுகிறது. இந்த மிதவைகள் மேற்புறத்தில் இருக்கும். எழும்பும் அலைகள் அவற்றை மேலெழுப்பி திரவ அழுத்தத்தை உண்டாக்கும். இந்த அழுத்தம் ‘ஹைட்ரோமோடாரை’ (Hydromotor) சுழலச் செய்யும். இந்தச் சுழற்சி மின் ஆக்கியின் (Generator) வழியே மின் விநியோக மையத்திற்கு இன்வெர்டர் மூலமாகச் சென்று சேரும்.

இந்த அமைப்பில் புயலை முன்கூட்டியே அறியும் சாதனங்கள் இருக்கின்றன. அத்தகையக் காலங்களில் தண்ணீரிலிருந்து மிதவைகள் வெளி வந்துவிடும். இது சாதனத்தை காப்பாற்றும். ஜிப்ரால்டரிலும், இஸ்ரேல், டெல் அவீவ், ஜாஃபா துறைமுகத்திலும் (Jaffa Port) தன் மிதவைகளின் மூலம் மின் சக்தியை இது ஏற்கெனவே உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டது. லாஸ் ஏஞ்செலிஸில் ஒரு கட்டுமானத்தையும் தொடங்கி விட்டது. இந்த வருடம் செயற்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலைசக்தியை கடல் அடியிலிருந்தும் பெறும் செயல்களும் உள்ளன. ‘ஏ டபிள்யூ எஸ் எனெர்ஜி’ (AWS Energy) என்ற நிறுவனம் மிகப் பெரிதான ‘ஆர்க்கிமீடீஸ் வேவ் ஸ்விங்’ (Archimedes Wave Swing) என்று பெயரிடப்பட்டுள்ள மிதவையை, கடலின் மேற்பரப்பிற்கிற்கு கீழே கடல் தரையில் பிணைத்துள்ளது. அலைகளின் மேல் கீழ் இயக்கப் பயணத்தில், மின்னாழி, மின் சக்தி உற்பத்தி செய்கிறது. (Jessie orrall Jan 15, 2023))

சில விசித்திரங்கள்

அனைத்து சாதனங்களும் மனித வாழ்விற்குத் தேவையான ஒன்றா அல்லது விசித்திரங்களும் உண்டா?

“பட்டனைத் தட்டிவிட்டா ரண்டு தட்டுல இட்லியும்” என்றொரு சினிமா பாடல் வரும். சில கருவிகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். சில நம்மை மேலும் சோம்பேறிகளாக்கும். சில கருவிகள் நம் கவனத்தைக் கவர்வதற்கென்றே சந்தைக்கு வரும். கவர்ச்சியில் மதி மயங்கி வாங்கி விட்டு, அதைப் பயன்படுத்துவதில் சுணக்கம் வந்து விடும். சிலது இருப்பதே மறந்து விடும். இவைகளை ‘ரோக் கேலரி’யில் பார்க்கலாம். சில சாதனங்கள் தொடர்ச்சியாக ஆண்டு தோறும் காட்சிப் படுத்தப்பட, சில புதிதாக இங்கு வரும்.

  • டைசன் ஜோன் தலையணி- (Dyson Zone Headphone) இது நமக்கே நமக்கான காற்று வடிகட்டி. கோவிட் சமயத்தில் நாம் அணிந்த முகமூடிக் கவசம் போன்றது இது. இது கோவிட்டிற்கு முன்பாகவே வந்திருந்தாலும், இதை அணிபவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிகுதி! ஏனெனில், இதன் ஆற்றல் மிகு விசிறிகள் வேகமாக நுண்கிருமிகளை எடுத்துக்கொள்ளும். பெருந்தொற்றுக்கென இல்லாவிட்டாலும், சுவாசிக்கும் காற்று மாசுகளை இது வடிகட்டும்.
  • ஆலும், வேலும் பல்லிற்குறுதி என்று படித்திருப்போம். இப்போதைய பல் துலக்கும் குச்சிகளில் நெகிழி மெல் இழைகள் உள்ளன. நாம் கையை அசைத்தாவது அந்தப் பல்குச்சியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்தோம். அது கூட வேண்டாம்- மின்சாரத்தில் இயங்கும் பல் துலக்கும் முறையில், நீங்கள் சரியான, முழுமையான சுத்தம் அடைந்துவிட்டீர்களா என்று உங்கள் திறன்பேசி காட்டும்! ‘கோலிப்ரீ ஸ்மார்ட் டூத் ப்ரஷ்’ (Kolibree Smart Toothbrush) இது.
  • வீட்டில் செல்லப் பிராணிகளை நேசித்து வளர்ப்பவரா நீங்கள்? அதன் உடல் அழுக்குகளைப் போக்க என்ன செய்வீர்கள்? குளிப்பாட்டுவீர்கள், துடைத்துவிடுவீர்கள், வெய்யிலில் சிறிது நிற்க வைப்பீர்கள். ‘பெப்பே உலர்த்தி’ (Pepe Pet Dryer) என்ற ஒரு கன சதுரப் பெட்டி இதையும் மாற்றுகிறது. அதனுள் உங்கள் செல்லத்தை 25 நிமிடங்களுக்கு வெப்ப வாயுவில் இருக்க வைப்பீர்கள்; உங்கள் வேலை முடிந்தது; அந்தச் செல்லப் பிராணி என்ன நினைக்குமோ?
  • ‘நொறுங்கத் தின்றால் நூறு ஆயுள்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சில யோகப் பள்ளிகளில் குருமார்கள், ஒரு கவளம் உணவை 21 முறை வாயில் உமிழ்நீருடன் கலந்து, கடித்துக் கூழ் நிலையில் இரப்பைக்குள் செலுத்துவதற்கான பயிற்சி அளிப்பார்கள். அது முக்கியமான ஒன்றாக ஆயுர்வேதமும் சொல்கிறது. நாம் உணவை விழுங்குகிறோம்; செரிமானத்திற்காக குடல் இதனால் அதிக வேலை செய்து விரைவில் தன் செயல் திறனை இழக்கத் தொடங்குகிறது. ‘ஹேப்பிஃபோர்க் வைப்ரேட்டிங் (Hapifork Vibrating Gadget) சாதனம் உங்கள் உணவை நீங்கள் மெதுவாகச் சாப்பிடவும், அதிகமாக உணவு எடுத்துக் கொள்வதைத் தடுப்பதற்குமான சாதனம். பகவான் க்ருஷ்ணன் சொல்கிறார்: ஒரு நாள் உன் வயிற்றின் முழுக் கொள்ளவிற்குச் சாப்பிடு; அதை அறிந்த பிறகு என்றும் அதில் மூன்றில் ஒரு பகுதிதான் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்; மூன்றில் ஒரு பகுதி நீராக எடுக்க வேண்டும்; மீதமுள்ள பகுதி குடல் இயங்குவதற்கானது. நம் முன்னேற்றம் மின் கருவியின் துணையைத் தேடச் சொல்கிறது.
  • ‘பகலில் பக்கம் பார்த்து பேசு; இரவில் அதுவும் வேண்டாம்’ என்று சொல்வார்கள். அலுவலகத்தில், ‘ஹஷ் மீ’ (Hush Me) என்ற கருவியைப் பயன்படுத்தினால், அருகிலுள்ள பிறர் கேளா வண்ணம் பேசலாம். அது இல்லாமலே இந்தியப் பதின் பருவ ஆண்களும், பெண்களும் அப்படித்தான் பேசுகிறார்கள்! ‘காதோடு தான் நான் பேசுவேன்’
  • ‘வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டாற் போல’ உங்கள் ‘பெல்ட்’ கொக்கியில் நீங்கள் சக்தியை சார்ஜ் செய்து கொள்ளலாம். பெல்டி(Belty) என்ற பெயருடன் வந்திருக்கும் இது முன்னர் அமரும் போதும், உண்ணும் போதும் தானாகவே இளகித் தரும்; இப்போது அதன் கொக்கிகள், மின்சக்தி ஏற்றும் சாதனமாக வந்துள்ளன.

சிந்திப்பதற்கு மட்டுமா, சிரித்து மகிழவும் தான் அறிவியலும், தொழில் நுட்பமும்!

உசாவிகள்:

நாளிதழ்கள்

https://www.cnet.com/science/green-tech-to-watch-in-2023/?ftag=CAD090e536

Other Related Webs

One Reply to “கனவு மெய்ப்பட வேண்டும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.