கங்கோத்ரி

This entry is part 6 of 12 in the series கங்கா தேசத்தை நோக்கி

உத்தரகாசி விடுதியில் அதிகாலையில் நான்கரை மணிக்கே எழுந்து குளிக்கச் சென்றால் சுடுதண்ணீர் சிறிது நேரம் வந்து பிறகு நின்று விட்டது. அடடா! ஈஷ்வர் குளிக்க தண்ணீர் வேண்டுமே என்று விடுதி வரவேற்பாளரை அழைத்துக் கேட்டால், “எல்லோரும் இன்று கோவிலுக்குச் செல்ல ஒரே நேரத்தில் குளிக்கிறார்கள். அதனால் தான் இப்படி என்றார்”. அறைக்கு அறை தனியாக சுடுதண்ணீர் மோட்டார் வைத்தும் இப்படியா? என்னவோ போடா மாதவா! ஈஷ்வரிடம் ‘ஜில்ல்ல்ல்’ தண்ணீரில் தான் குளிக்க வேண்டும் என்று முன்னெச்சரிக்கை கொடுத்து தேநீருக்கும் சொல்லி விட்டு பால்கனி கதவைத் திறந்து பார்த்தால் பாகீரதி அமைதியாக உத்தரகாசி கோவிலை நோக்கி ஓடிக்கொண்டிருந்த காட்சி கொள்ளை அழகு! சரியாக ஆறு மணிக்கெல்லாம் நாங்கள் தயாராக, அதற்குள் காலை உணவை அழகாகப் பொட்டலம் கட்டி கொடுத்து விட்டார்கள்.

விடுதியின் வெளியே வரிசையாக வண்டிகள். நேற்றிரவு சந்தித்த அனைவரும் அங்கே குழுமியிருந்தனர். அனைவரின் முகத்திலும் கோவிலுக்குச் சென்று விடுவோம் என்ற பலத்த நம்பிக்கை தெரிந்தது. அதே எண்ணத்துடன் கோவிலில் சந்திப்போம் என்று அவரவர் வண்டியில் ஏறிப் புறப்பட்டோம். ஆங்கிலம் பேசும் வண்டியோட்டுநர்களைப் பார்க்கும் பொழுது மட்டும் நமக்கு அப்படி ஒருவர் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் வந்தது. மொழியின் அவசியம் தெரியும் பொழுது தான் அதைக் கற்றுக் கொள்ளாமல் இருந்த மடத்தனமும் புரிந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் வேற்று மொழிகளை அதுவும் ஹிந்தியை கற்றுக் கொள்வதில் எந்த தவறுமில்லை. எப்படி என் பெற்றோர்கள் எங்களைப் படிக்க வைக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை!

நம்பிக்கையில்லாமல் டிரைவர்ஜி சிரித்துக் கொண்டே வண்டியை ஒட்டிக் கொண்டு வர, கங்கோத்ரி பயணம் ஆரம்பமாயிற்று. தடையில்லாமல் எங்கள் பயணம் தொடர ‘மா கங்கா’வை மனதில் வணங்கிக் கொண்டேன். ஊரைத் தாண்டி ஒரு அரைமணி நேரம் போல சென்றிருப்போம். ஓரிடத்தில் எல்லா வண்டிகளையும் நிறுத்தி விட்டார்கள். “அதிகாரிகள் எட்டு மணிக்கு மேல் வந்து நிலவரத்திற்கேற்றபடி அறிவுறுத்துவார்கள். அதுவரை காத்திருக்க வேண்டியது தான்” என்று அங்கே இருந்த அதிகாரி ஒருவர் கூறி விட்டார். “நானும் இதைத்தானே சொன்னேன்” என்று டிரைவர்ஜி சொல்ல, சரி! எவ்வளவ நேரம் தான் வண்டியில் உட்கார்ந்திருப்பது என்று வண்டியை விட்டிறங்கினேன். சரியான தூக்கம் இன்றி ஈஷ்வர் களைப்பாக இருக்கிறது என்று குட்டித்தூக்கம் போடப்போவதாகக் கூற, நான் காத்திருக்கும் கூட்டத்தினரை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

அந்த அதிகாலை நேரத்தில் கூட அங்கே ஏகப்பட்ட வாகனங்கள் வரிசையாக வந்து சேர்ந்து கொண்டிருந்தது. எங்கள் வண்டிக்கருகில் குவாலியர் நகரத்திலிருந்து வந்த பேருந்தில் அதிகளவில் ‘தாதிமா’, ‘நாநா’க்களும் நடுத்தர வயதினரும் புண்ணிய யாத்திரைக்கு வந்திருந்தார்கள். பெண்கள் எல்லோரும் நன்கு திடமாக இருக்கிறார்கள். அதிக உடலுழைப்பு செய்பவர்கள் போல! நாள் முழுவதும் கணினி முன் உட்கார்ந்து பொழுதைக் கரைப்பவர்கள் அல்ல என்று நான் பார்த்த வடஇந்தியர்கள் அதுவும் கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்களைப் பார்த்தால் நன்கு தெரிந்தது. ‘டபக்டபக்’கென்று குத்த வைத்து உட்கார்ந்து எழ முடிகிறது. ‘கிடுகிடு’ வென்று படிகளில், ஏற்றத்தில் மூச்சிரைக்காமல் ஏறுகிறார்கள். பொறாமையாக இருக்காதா பின்ன? எவ்வளவுதான்  சத்தான சாப்பாடு சாப்பிட்டு காசு கொடுத்து ஜிம்மில் சேர்ந்து மாங்குமாங்கென்று ஓடினாலும் அவர்களின் உடற்கட்டிற்கு முன்னால் நாமெல்லாம்…ம்ம்ம்ம் பெருமூச்சு தான் விட முடிந்தது. நான் அந்தப் பெண்களைக் கவனிக்கிறேன் என்றவுடன் அவர்கள் எங்கிருந்து வருகிறேன் என்று என்னிடம் கேட்டார்கள்.

குழப்பமான கேள்வி தான். பிறந்த ஊரைச் சொல்லவா அல்லது தற்போது இருக்கின்ற ஊரைச் சொல்லவா என்று எப்பொழுதுமே எனக்குள் ஏற்படும் தடுமாற்றம் இப்பொழுதும். மதுரை என்றவுடன் ஆனந்தித்தவர்கள் நியூயார்க் என்றதும் ஆச்சரியப்பட்டார்கள். பெண்கள் பலரும் வகிடுகளில் குங்குமம், நெற்றியில் பொட்டு, ‘பாயல்’ (கொலுசு) அணிந்திருந்தது அழகு😍 ‘போலே சூடியான் போலே கங்கநா’ பாடல் நினைவிற்கு வந்தது. பழுப்பு நிறப் பெண்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு முந்தானை விலகி இருப்பதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் சேலை கட்டியிருந்த விதம் கவர்ச்சியாக இருந்தது. அவர்கள் பேருந்திலிருந்து பெரிய அடுப்பு ஒன்றையும் அலுமினிய பாத்திரம் ஒன்றையும் இறக்கி தேநீர் போட ஆரம்பித்து விட்டார்கள். அட பரவாயில்லையே! என்று அவர்களிடம் இருந்து விடைபெற்று நடக்க ஆரம்பித்தேன்.

ஒரு வேனில் இருந்து ஏழு ஜெர்மனியர்கள் ஆண்களும் பெண்களுமாய் ஒரு சிறிய குழு இறங்கியது. ‘டஸ்க்புஸ்க்’என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவர்கள் பேசியது ஜெர்மன் என்று புரிந்தது. என் குழந்தைகள் இருவரும் அதைப் படித்ததால் ஓரளவிற்கு கேட்டால் ஜெர்மன் என்று தெரியும் அளவிற்குத் தான் என்னுடைய ஞானம். படித்த இளைஞர் போல் ஒருவர் பார்க்க தமிழர் என்று சொல்லும் படியான தோற்றம். சினேகமாக ‘ஹாய்’ சொல்ல நானும் ஹாய் சொல்லி அறிமுகம் செய்து கொண்டோம். எங்கிருந்து வருகிறேன் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். “இவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசுகிறீர்களே எங்களுக்கு உங்களை மாதிரி டிரைவர் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று சொன்னேன். அவருடைய தொலைபேசி எண்ணை கொடுத்து “அடுத்த முறை வரும் போது என்னை கூப்பிடுங்கள். நான் வந்து அழைத்துச் செல்கிறேன்” என்றார். குறித்து வைத்துக் கொண்டேன். “இந்த ஜெர்மனியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது போலிருக்கே? எப்படி இவர்களிடம் பேசுவீர்கள்”என கேட்டேன். “ஓரளவிற்கு நான் ஆங்கிலத்தில் சொல்வதைப் புரிந்து கொள்வார்கள். அவர்கள் சொல்ல வருவதை நானும் புரிந்து கொள்கிறேன்” என்றார். நம்மள மாதிரி அங்கேயும் ‘பேசும்படம்’ தான் போல. சிரித்துக் கொண்டேன்😊

உத்தரகாண்டைச் சேர்ந்தவர் என்றவுடன் அங்கிருக்கும் அரசியல் நிலவரம், யாத்திரை அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். “படித்திருக்கிறீர்கள்? ஏன் இந்த ஓட்டுநர் வேலை?” என்று கேட்டதற்கு “இந்த வேலையில் பலவிதமான மக்களைச் சந்திக்கும் அனுபவத்திற்காக” என்றார். நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்றவுடன் ஒரு சுவையான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். ஒரு முறை அவருடைய நிறுவனம் டேராடூனிலிருந்து ஒருவரை அழைத்து வர அனுப்பி இவரும் போய் அவரை அழைத்து வந்திருக்கிறார். ரிஷிகேஷில் சந்தையில் சிறிது நேரம் நிறுத்தச் சொல்ல, இவரும் வண்டியை நிறுத்தி “இது தான் சந்தை. போயிட்டு கால் பண்ணுங்க.” என்று இறக்கி விட்டு காத்திருந்திருக்கிறார். சிறிது நேரத்தில் நிறுவனத்தில் இருந்து “எங்கே இருக்கிறாய்?” என்று கேட்க, “சந்தையில் அவர் ஏதோ வாங்க இறங்கிச் சென்றிருக்கிறார்” என்று தகவல் சொல்ல, “நீயும் ஏன் கூட செல்லவில்லை. அவர் யார் தெரியுமா?” என்று கேட்டு இவரைக் கோவித்திருக்கிறார்கள்.

சென்ற மனிதர் கையில் பொருட்களுடன் திரும்பி வர, “என்ன சார்? நீங்க யாருன்னே சொல்லவில்லை. சாரி! உங்களை இப்படி பார்க்கையில் எனக்கு அடையாளமே தெரியவில்லை. நானும் உங்களோடு வந்திருக்க வேண்டும்” என்று பலமுறை மன்னிப்பு கேட்டாராம் டிரைவர். அதற்கு அவரும், “சே சே! இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. நான் கண்டக்டரா இருந்தவன். டோன்ட் ஒர்ரி. சாதாரணமாக இருப்பது தான் எனக்குப் பிடிக்கும்.” என்றெல்லாம் பேசியவர் யாருன்னு இப்பொழுது  உங்களுக்கும் புரிந்திருக்கும். “என்ன மாதிரியான மனிதர்! ‘டௌன் டு எர்த்’ என்பார்களே அப்படியான ஒரு குணம். அந்தப் பயணத்தில் அவருடனே இருந்தேன். சிரித்துக் கொண்டே ‘கலகல’வென்று இருந்தார்”என்று தலைவருடனான அவருடைய அனுபவங்களை அனுபவித்துப் பேசியதும் ‘மலை டா. அண்ணாமலை’ என்று சந்தோஷமாக இருந்தது.

தன்னுடைய சொந்த ஊர் ரிஷிகேஷ் என்றவர், அங்கே எங்கெல்லாம் போகப்போகிறீர்கள் என்றவுடன் சிவானந்தா, தயானந்த சரஸ்வதி ஆசிரமங்கள் பெயரைக் கேட்டதும்,” இங்கே வெளியில் சென்றவுடன் சிவானந்த ஆசிரமம் உள்ளது. அங்கு யோகா, தியானம் கற்க வெளிநாட்டினர் பலரும் வருகிறார்கள். அப்படி வந்தவர்கள் தான் இந்த ஜெர்மனியர்கள்” என்றார். இங்கு ஆசிரமம் இருப்பது எங்களுக்குத் தெரியாது என்றவுடன் “நேரமிருந்தால் போய் விட்டு வாருங்கள்” என்றார்.

“பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதியையும் பல முறை விமான நிலையத்திலிருந்து அழைத்து வரவும் கொண்டு போய் விட்டும் வந்திருக்கிறேன். தங்கமான மனிதர். அவர் உயிரோடு இருந்த பொழுது அவரைக் காண, அவருடைய உபந்நியாசங்களைக் கேட்க அப்படி ஒரு கூட்டம் வரும். இப்பொழுது அது மிகவும் குறைந்து விட்டது” என்றார். “அவரைப் பார்க்கவே புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவருடன் பேசி, அவரின் ஆசீர்வாதங்களையும் பெற்றிருக்கிறீர்கள். கொடுத்து வைத்த மனிதர் நீங்கள்!” என்றேன்.

“டேராடூனில் ஷாப்பிங் செய்யவில்லையா!” என்று ஆச்சரியப்பட்டார். “வெளிநாடுகளில் கிடைக்கும் பொருட்களை விட அதிக தரத்தில் குறைந்த விலையில் ஜாக்கெட், ஷூ, பெட்டிகள் என்று பலவும் கிடைக்கும். என்னுடைய பயணிகளை நான் அங்கு அழைத்துச் சென்றால் அவர்கள் விலையைக் கேட்டு அதிசயித்துப் போவார்கள். நிறைய பொருட்களையும் வாங்கிச் செல்வார்கள். முடிந்தால் நீங்களும் அங்கே போய் பாருங்கள்” என்று டிப்சும் கொடுத்தார்.

“காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் வரை அரசு நிர்வாகத்தில் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த ஊழல் தற்போது பாஜக ஆட்சியில் கொஞ்சம் குறைந்திருக்கிறது. முற்றிலும் குறைய பல வருடங்கள் ஆகும். ஆனால் சாலை விரிவாக்கம் முதல் கல்வி, வேலைவாய்ப்புகள் கொஞ்சம் கூடி வருகிறது. இன்றைய இளைஞர்கள் பலரும் கல்வி கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாவின் மூலம் கணிசமான வருமானம் வருவதால் அரசும் அதில் அதிக கவனம் செலுத்துகிறது. சுற்றுலாத்துறையால் உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளும் இருக்கத்தான் செய்கிறது. கோவிட் காலத்திற்கு முன்பு வரை உத்தரகண்ட் வண்டி ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே இங்கு ஓட்ட முடியும். இப்பொழுது எந்த மாநிலத்தவர் கூட இங்கு வண்டி ஓட்டலாம் என்று சொல்லி விட்டார்கள். மலைப்பகுதிகளில் வண்டி ஓட்ட அனுபவம் வேண்டும்” என்றார். “இந்த மாதிரியான சாலைகளில் இத்தனை வண்டிகள் போகத்தான் வேண்டுமா?” என்றவுடன் “புண்ணிய யாத்திரை செல்பவர்களால் பிரச்னையில்லை. தற்போது இளைஞர்கள் மத்தியில் இவையெல்லாம் சுற்றுலாத்தலங்களாக மாறி குடி, கூத்து என்ற கலாச்சாரம் பெருகி வருவது தான் வருத்தமாக இருக்கிறது” என்றார். உண்மை தான்!

நாங்கள் எங்கெல்லாம் போகலாம் என்று சில இடங்களைப் பரிந்துரைத்து “கண்டிப்பாக போகவும். தவற விட்டுவிடாதீர்கள்” என்று அந்த இடங்களில் எடுத்த படங்களைக் காண்பித்தவுடன் கண்டிப்பாக போக வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டேன். மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. மழையின்றி வானமும் தெளிய, “இன்று கண்டிப்பாக கங்கோத்ரி போய் விடலாம். கவலை வேண்டாம்” என்றார். சிறிது நேரத்தில் ஒரே சலசலப்பு. வண்டிகள் கிளம்ப ஆயத்தமாக, “உத்தரவு கிடைச்சிடுச்சுன்னு நினைக்கிறேன். உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்”னு சொல்ல, நானும் நன்றி கூறி வண்டியில் ஏறி டிரைவரிடம் “நல்ல வேளையாக நாம் இங்கு வந்தோம்.” என்றேன். அவர் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. அதற்குள் குவாலியர் பயணிகள் அவல் உப்புமா ‘சுடச்சுட’ செய்து சாப்பிட தயாராகிக் கொண்டிருந்தார்கள்!

குறுகிய தெருக்களின் வழியே சிவானந்தா ஆசிரமம், மேய்ச்சலுக்குச் சென்று கொண்டிருந்த ஆடு மாடுகளைக் கடந்து புழுதி பறக்க வண்டிகள் ஒவ்வொன்றாக கிளம்பியது. இடதுபுறம் மலைகளில் வீடுகள். வலது புறம் துள்ளியோடும் பாகீரதி ஆற்றுக்கு அரணாக பச்சைப்பசேலென இமயமலை. மலையின் ஈரம் காயாத சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தோம். வெயிலைப் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. நடுநடுவே சாலைகளில் உடைப்பு ஏற்பட்டிருந்ததால் எதிரே வரும் வண்டிக்கு வழியை விட்டு நகர்வதில் சிரமம் இருந்தது. இத்தகைய சூழலை அனுபவமிக்க ஓட்டுனர்கள் மிக அருமையாக கையாளுகிறார்கள். பைக்கில் பவனி வரும் கூட்டம் இந்த யாத்திரையில் அதிகம் காண முடிந்தது. எப்படித்தான் இப்படிப்பட்ட சாலைகளில் ஓட்டுகிறார்களோ என்று அதிசயித்தோம். சில இடங்களில் சாலைகளை நன்கு விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். பல இடங்களில் சாலை வேலைகளுக்காக மண்ணையும் சரளைக்கற்களையும் குவித்து வைத்திருந்தார்கள். ஜேசிபி எந்திரங்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்திருந்ததில் தெரிந்தது எங்கேயும் மலைச்சரிவு எந்நேரத்திலும் நடக்கலாம் என்று! ஆரம்பித்து விட்டது. சேறும் சகதியும் குண்டும் குழியுமான பயணம்!

பல இடங்களில் ராணுவ முகாம்கள், வண்டிகள், பயிற்சி மையங்கள் தெரிந்தது. சரிந்த மலைகளில் மக்களின் குடியிருப்புகளைப் பார்க்க அழகாக இருந்தாலும் பயமாக இருந்தது. சிறுசிறு மலைக்கிராமங்களைத் தாண்டி சென்று கொண்டிருந்தோம். ஓரிடத்தில் செம்மறி ஆட்டுக்கூட்டம் ஒன்று போக்குவரத்தை ஸ்தம்பித்து விட்டது! யாரும் கவலைப்பட்டது போல தெரியவில்லை. அழகான இளம்பெண்களும் கால்நடைகளை ஒட்டிச் சென்று கொண்டிருந்தார்கள். ஒப்பனை இல்லாத இந்த மலைவாழ் இளம்பெண்கள் தான் எத்தனை அழகு!

மலைச்சரிவு ஏற்பட்டிருந்த பகுதிகளில் பயத்துடன் சென்று கொண்டிருந்தோம். கிளம்பிய ஒருமணி நேரத்தில் மீண்டும் வண்டிகள் நிறுத்தப்பட்டது. வழக்கம் போல பேருந்துகளிலிருந்து இறங்கி சிறிது தூரம் சென்று பார்த்து வர, இயற்கைக்கு உரமூட்ட என்று ஆண்கள் கூட்டம் நடமாடிக் கொண்டிருந்தது. பெண்கள் நிலைமை தான் பாவம். ஓதுங்க எங்கும் இடமில்லை.

அருகில் சிறுசிறு பாறைகள் உருண்டு விழுவதால் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளார்கள் என்று தெரிய வந்தது. இன்னும் நம்பிக்கையில்லாமலே இருந்தார் எங்கள் டிரைவர். சாலைப் போக்குவரத்தை நிர்வகிப்பவர்கள் மிகவும் பொறுப்பாக பாறைகள் உருளுவதை மலை மீதிருந்தும் கீழிருந்தும் கண்காணித்து ஒவ்வொரு வண்டியாக பயத்துடன் அனுப்பினார்கள். கரணம் தப்பினால் மரணம் தான். எங்கள் வண்டியின் கண்ணாடியில் ஒரு சிறு கல் உருண்டு வந்து அத்தனை சத்தத்துடன் விழுந்ததே பயமாக இருக்க, பாறை என்றால் நினைக்கவே பீதியாக இருந்தது. சமீபத்தில் அங்கே பெரும் விபத்து நடந்து ஒரு வாகனமே சிதைந்து போனதாக கேள்விப்பட்டோம். ‘சிவசிவ’ என்று அவனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு அங்கு வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் சேர்த்து வேண்டிக் கொண்டே தொடர்ந்தது எங்கள் பயணம்.

காலை உணவுப் பொட்டலத்தைப் பிரித்தால் ‘தளதள’வென வெண்ணிறத்தில் சுவையான உப்புமா. வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, மல்லி என்று ஏதுமில்லாமல் வெறும் கடலையை வறுத்து தாளித்திருந்தார்கள். கூடவே பிரட் ஓரத்தை வெட்டிவிட்டு ஜாம், பட்டர் தடவி அதுவும் ‘யம்யம்’. சிறு வாழைப்பழம் ஒன்று. வயிறு நிறைந்து விட்டது! ஆனாலும் அந்த உப்புமாவை எப்படி இத்தனை சுவையாக சமைத்திருப்பார்கள் என்று யோசித்து விடுதிக்குச் சென்றதும் சமையல்காரரைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். 

பாலம் மீதேறி பொங்கியோடி வரும் பாகீரதி நதியைக் கடந்து வளைந்து வளைந்து மலைகளில் குறுகலான பாதையில் தொடர்ந்த பயணத்தில் ஆறும் மலையும் அருவிகளும் காலைக்கதிரவனும் என கண்கொள்ளா காட்சியாக இயற்கையும்  கூடவே பவனி வந்தது. வழியில் ‘ஜோ’வென்று நுரைபொங்க ‘கேதி அருவி’ பேரழகு! அருகிலுள்ள ‘மனேரி அணை’யிலிருந்து வரும் நீர் அருவியாகப் பொழிந்து பாகீரதி ஆற்றுடன் கலக்கிறது. கங்கோத்ரி செல்லும் வழியில் பல தனியார் நீர் மின் திட்டத்திற்கான விளம்பர வளைவுகள் தென்பட்டது. மாநிலத்தின் வருவாய் இந்த திட்டத்தை நம்பியிருக்கிறது என்றும் மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கும் பயன்படுவதாக அறிந்து கொண்டோம்.

குறுகலான சாலைகளில் செல்லும் போதெல்லாம் வண்டி எங்கே சரிந்து ஆற்றிற்குள் விழுந்து விடுமோ என்று பயமாக இருந்தது. ஒரு சரளை சறுக்கி விட்டால் அவ்வளவு தான்! சிவலோகம் அடிக்கடி கண்ணில் வந்து சென்றதை மறக்க முடியாது. திடீரென பனிபடர்ந்த சிகரம் கண்ணில் பட, ‘சிவசிவ’! கங்கோத்ரியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற நினைவே பரவசமாக இருந்தது. வழியில் சுரங்கப்பாதை அமைக்க ஆரம்பித்து புண்ணிய நதியைப் பாழாக்கும் இந்த திட்டத்திற்கு எழுந்த தீவிர எதிர்ப்பிற்குப் பின் அந்த திட்டத்தைக் கிடைப்பில் போட்டிருக்கிறது அரசு. மழைக்காலத்தில் எந்த நேரத்திலும் மலைச்சரிவு, சாலைப்பிளவு ஏற்படும் அபாயம் இருக்கும் பகுதியில் எப்படி இப்படி ஒரு திட்டத்தை ஆரம்பித்தார்கள் என்பதே அதிசயமாக இருந்தது!

வழியில் சிறுசிறு அருவிகளில் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். சிலர், வண்டிகளையும் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். புண்ணிய பூமியில் பிரமிக்க வைக்கும் இயற்கை காட்சிகளுக்குக் குறைவே இல்லை. சில இடங்களில் வண்டியை நிறுத்திப் படங்கள் எடுத்துக் கொண்டோம். ஓரிடத்தில் ‘கோமுக்’ மலையின் தரிசனம் மிக அழகாகக் காட்சி அளிக்கிறது.

தீபாவளி முடிந்த சில தினங்களில் கங்கோத்ரியிலிருந்து ‘மா கங்கா’ , ‘மா சரஸ்வதி’, மா அன்னபூர்ணா’ விக்கிரகங்களை எடுத்து வந்து முக்பா கிராமத்தில் இருக்கும் கோவிலில் வைத்து பனிக்காலம் முழுவதும் வழிபடுகிறார்கள். அக்ஷயதிரிதியை அன்று மீண்டும் கங்கோத்ரிக்கு எடுத்துச் சென்று பூஜைகள் செய்து கோவிலைத் திறக்கிறார்கள். மலைகள் மீதேறி சென்று கொண்டிருக்கும் வழியில் ‘ஹர்சில்’ என்னும் ஆப்பிள் கிராமத்தை நெருங்க, வழிமுழுவதும் ஆப்பிள் மரங்களில் பழங்கள் கொத்துக் கொத்தாக கனிந்து தொங்கிக் கொண்டிருந்தது. தேவதாரு, பைன் மரங்கள் சூழ்ந்த மலையில் ராணுவ வண்டிகளை அதிகம் காண முடிந்தது.

வழியில் வரும் பைரவர் கோவிலில் சிவனை வணங்கி அனுமதி பெற்று கங்கா அன்னையைத் தரிசிக்க வேண்டுமாம். முனிவர்களும் மகான்களும் தவம் புரிந்த புண்ணியபூமி கங்கோத்ரியை பதினோரு மணிவாக்கில் அடைந்து விட்டோம். ‘சிரோர்’ பாலத்திற்கருகே ‘சூர்ய குண்டம்’ இருக்கிறது. நாளின் முதல் சூரிய ரேகை அந்த இடத்தில் தான் படுவதாகவும் மலையிலிருந்து பாய்ந்தோடி வந்த கங்கையின் வேகத்தைக் குறைக்க தன் ஜடை முடிகளில் சிவபெருமான் முடிந்து வைத்தது இந்த இடத்தில் தான் என்கிறது இதிகாசம். சிவலிங்க உருவில் இருக்கும் பாறையை அபிஷேகம் செய்து விட்டுச் செல்வது போல் மலைகளுக்கிடையில் நுரை பொங்க ஓடுகிறாள் ‘மா கங்கா’.

காலையில் கங்கோத்ரிக்கு முதலில் வந்து சேர்ந்த சில வாகனங்களில் எங்களுடையதும் ஒன்று. அதனால் கூட்டம் அதிகமாகத் தெரியவில்லை. வண்டிகளை ஒரு மைல் தொலைவிலேயே நிறுத்தி விடுகிறார்கள். அங்கிருந்து கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டும். டோலி/கோவேறு கழுதையில் ஏறிச் செல்லும் வசதிகளும் இருக்கிறது. இத்தனை கூட்டம் வரும் இடத்தில் பெண்களுக்காக இரண்டே இரண்டு கழிப்பிடங்கள் தான். அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஏனோ கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறது. இரு பெண்கள் தொடர்ந்து கழிவறையைச் சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தது சிறப்பு.

கோவிலுக்குச் செல்லும் பாதை முழுவதும் குப்பைகள் இன்றி மிகச் சுத்தமாக இருந்தது. வழியெங்கும் உணவுக்கடைகள். கோவிலை நெருங்கும் பொழுது பூஜைக்கான பொருட்களை விற்கும் கடைகள் என்று ஒரு மைல் நீளத்திற்கு இருபுறமும் பல கடைகள். கங்கா நீரை எடுத்து வர இரண்டு பிளாஸ்டிக் கேன்களையும் அர்ச்சனைப் பொருட்களையும் வாங்கிக் கொண்டோம்.

நான்கைந்து பேர் மட்டுமே நின்று கொண்டிருந்த வரிசையில் சேர்ந்து அழகான கங்கா மாதாவை தரிசித்தோம். இத்தனை எளிதாக அன்னையின் தரிசனம் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கூட்டம் சேர்வதற்குள் மீண்டுமொருமுறை வரிசையில் நின்று இரண்டாவது முறையாகவும் அவளின் தரிசனத்தைப் பூரணமாக கண்டுகளித்தோம். கோவில் வளாகத்தில் சிவபெருமான், விநாயகர், ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளது. மன்னன் பாகீரதனுக்கும் தனி சந்நிதி உள்ளது.

அந்தக் குளிரில் ‘ஜில்ல்ல்ல்ல்’லென காட்டாற்று வெள்ளமாய் பாய்ந்தோடி வரும் ஆற்றில் பல வடஇந்தியர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அன்னையை மனமாற வணங்கி கங்கா நதி நீரை எடுத்துக் கொண்டு விடைபெற்றோம். ஆற்றின் மறுகரையில் பல ஆசிரமங்களும் தங்கும் விடுதிகளும் உள்ளது. புதுக் கட்டிடங்களையும் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்! சிறு தொலைவு வரை நிம்மதியாக நடந்து சென்று ஆரவாரத்துடன் பூமியை நோக்கிப் பாய்பவளின் தரிசனத்தை முற்றிலுமாக மனம்குளிர தரிசிக்க முடிகிறது.

இமயமலையிலிருந்து உருகி பூமிக்கு வரும் புண்ணிய நதி உற்பத்தியாகுமிடத்தைப் பார்ப்பவர்கள் பரவசப்படாமல் இருக்க முடியாது. இதிகாசத்தில் சாகர் எனும் நேர்மையான இறைபக்தி கொண்ட அரசன் அசுவமேதயாகம் செய்ய தீர்மானித்து குதிரை ஒன்றை உலகம் முழுவதும் சுற்றி வர தன்னுடைய 60,000 மகன்களுடன் அனுப்பினான். மன்னரின் புகழையும் ஆற்றலையும் அவன் செய்ய இருந்த யாகத்தையும் அறிந்த இந்திரன் தன்னுடைய இந்திரலோக பதவிக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சி அந்த குதிரையைத் திருடி கங்காசாகரில் இருந்த பகவான் கபில முனியின் ஆசிரமத்தில் கட்டி வைத்து விட்டார். நொடியில் மறைந்த குதிரையைக் காணாது அரசனின் மகன்கள் தந்தையிடம் முறையிட, குதிரை இன்றி யாகம் நடக்காது என்பதால் அதனை எப்பாடுபட்டாவது தேடிக் கண்டுபிடித்து வர அவர்களுக்கு ஆணையிட்டான் மன்னன். மீண்டும் குதிரையைத் தொலைத்த இடத்திற்கே வந்து தேட, பாதாளத்தில் ஆசிரமத்திற்கருகே குதிரையைக் கண்டவர்கள் முனிவர் கூறியதையும் கேட்காமல் அவர் தான் குதிரையைத் திருடி விட்டார் என்று பலவாறு ஏச, கோபமடைந்த முனிவர் அவர்களைப் பொசுக்கிப் பஸ்பமாக்கிவிட்டார். தன் மகன்கள் இறந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட மன்னன் சாகர் மிகுந்த துயரத்துடன் நாரத முனிவரிடம் பரிகாரம் கேட்க, பூமியில் தேவ மங்கை கங்கா, நதியாக பாய்ந்தோடி வரும் நாளில் முனிவரின் சாபம் நீங்கி மன்னன் சாகரும் அவருடைய மகன்களும் விண்ணுலகம் செல்வார்கள் என்று கூறினார்.

அன்னையை பூமிக்கு அழைக்க அரசபதவியைத் துறந்து மன்னன் கடுந்தவம் செய்யலானார். அரசர் பரம்பரையில் மன்னர் பாகீரதன் தன் முன்னோர்களுக்காக பல வருடங்கள் இந்த கங்கைக்கரையில் தவம் புரிந்தார். அன்னையின் அருளும் கிடைக்க, விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கி வரும் தன்னுடைய வேகத்தைக் கட்டுப்படுத்த சிவபெருமானால் மட்டுமே முடியும் என்று கூறியதால் சிவனை நோக்கித் தவம் புரிந்தார் மன்னன் பாகீரதன். அவனின் உள்ளார்ந்த தவத்தை மெச்சி சிவபெருமானும் கங்கையை அழைக்க, விண்ணிலிருந்து பாய்ந்தோடி வருபவளின் சீற்றத்தைக் குறைக்க தன்னுடைய ஜடாமுடியில் அவளை முடிந்து கொண்ட இடம் தான் ‘கங்கோத்ரி’ (கங்கா+உத்ரி , ஆகாயத்திலிருந்து மண்ணிற்குக் கீழிறங்கி வரும் கங்கா) மன்னன் பாகீரதனின் வேண்டுகோளுக்கிணங்க அவனுடைய முன்னோர்களை முனிவரின் சாபத்தில் இருந்து விடுவித்து விண்ணுலகம் செல்ல அருள்பாலித்தாள்.

அகத்திய முனிவர் தன் மனைவி லோபமுத்திரையுடன் கங்கோத்ரியில் தங்கி தவங்கள் செய்ததாகவும் மகாபாரத போருக்குப் பின் பாண்டவர்களும், போரில் மாண்ட தங்களுடைய சகோதரர்கள், குருக்கள் மற்றும் இறந்த உயிர்களுக்காகவும் தங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்ளவும் மிகப்பெரிய யாகத்தைக் கங்கைக்கரையில் செய்து உயிர்நீத்தார்கள் என்று வியாசர் பகவான் அருளிய மகாபாரத இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால் தான் கங்கா நதியில் நீராடுபவர்களுக்குப் பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று நம்புகிறோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து நீராடி அன்னையின் அருளைப் பெற்றுச் செல்கிறார்கள். பூமியை வளப்படுத்தும் ஜீவநதியைத் தினமும் ஆரத்தி செய்து வழிபடுகிறோம். கங்கோத்ரியில் ‘பாகீரதி’ எனும் பெயருடன் உலாவருபவள் தேவபிரயாகை என்னுமிடத்தில் அலகானந்தா ஆற்றுடன் கலந்து ‘கங்கா’வாக உருவெடுக்கிறாள்.

புண்ணிய நதியைத் தரிசித்த திருப்தியுடன் திரும்பி வரும் வழியில் ‘ஹோட்டல் ஸ்ரீஜெய் ராம்’ உணவகத்தில் சுடச்சுட பேப்பர் தோசை சாப்பிட்டோம். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு தோசையை அன்று தான் சுவைக்க முடிந்தது. சாம்பாருடன் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிட்டு விட வேண்டும். அங்கே இட்லி, ஊத்தப்பம், மசாலா, பன்னீர், சாதா தோசைகள் கிடைக்கிறது. அவர்களுக்கு காபி போடத் தெரியவில்லை. அங்கே சென்றால் மரியாதையாக ‘சாய்’ சாப்பிடுவதே நல்லது. அத்தனை சுவையாக இருக்கிறது. மற்றபடி, வழக்கமான சமோசா, நான், ரோட்டி என வட இந்திய சாப்பாடு வகைகள் அதிகம் கிடைக்கிறது.

அங்கிருந்து ‘ஹர்சில்’ ஊருக்குச் செல்லும் வழியெங்கும் நீல வானம், வெள்ளை பஞ்சுப்பொதி மேகங்கள், பசுமை போர்த்திய மலைகள், மேகங்கள் சூழ ‘கோமுக்’ மலைச்சிகரம் என அப்பகுதி முழுவதும் அழகோவியமாக காட்சி அளித்தது. திரும்பிச் செல்லும் வழியில் அதிக போக்குவரத்து இல்லாததால் விரைவில் மலையிறங்க முடிந்தது. மலைகளில் ஆப்பிள் மரங்கள் கொட்டிக்கிடக்கிறது. அங்கிருந்து தான் இந்தியாவில் பல பகுதிகளுக்கு ஆப்பிள் பழங்கள் விற்பனையாகிறது. மிகவும் சுவையாக இருக்கும் ஆப்பிள்களுக்காக குரங்குகளும் காத்திருந்தது. அதற்கும் பழங்களை வாங்கிக் கொடுத்து நாங்களும் சில பல பழங்களை வாங்கிச் சுவைத்துக் கொண்டே அந்த அழகிய சிறிய ஊரைச் சுற்றிப் பார்த்தோம். அங்கும் தங்கும் விடுதிகளும் உணவகங்களும் இருக்கிறது.

பாகீரதி தொடர்ந்து வர, வந்த வழியே உத்தரகாசி நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். வழியில் பலரும் நம்மூர் காவடியைப் போல கங்கா மாதாவிற்கு காவடி எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். 12.30 மணிக்கு கீழிறங்க ஆரம்பித்து மூன்று மணியளவில் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றிருந்த இடத்தை வந்தடைந்தோம். ஆகா! நன்றாக மாட்டிக் கொண்டோமோ? பாறைகள் உருண்டு விழுவதால் இப்போதைக்கு நகருவது சாத்தியமில்லை. எங்கள் விடுதியில் தங்கியிருந்த அட்லாண்டா தம்பதியினரும் அங்கே காத்திருந்தார்கள். அவர்கள் அங்கிருந்து நேராக டேராடூன் சென்று டெல்லி சென்று விடுவதாகவும் இந்த முறை இரண்டு கோவில்களுக்கு மட்டுமே விஜயம் செய்ததாகவும் கூறினார்கள். மலையேறுகையில் எனக்கு ஏற்பட்ட உடல்நலமின்மைக்கு மாத்திரைகளைக் கொடுத்து உதவினார்கள். மலைமீதிருந்து சிறு பாறைகள் உருண்டு விழுவது நின்ற சிறிது நேரத்தில் வண்டிகள் நகரத் தொடங்கியது.

அங்கிருந்து நேராக பாகீரதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ‘பைலட் பாபா’ ஆசிரமத்திற்குச் சென்றோம். அங்கே பெரிய பெரிய திருவுருவங்களில் பத்ரகாளி, காயத்ரி மாதா, விநாயகர், சிவபெருமான், நந்தி பகவான் காட்சியளிக்க, ஆசிரமத்தில் பல வெளிநாட்டினரும் குடும்பங்களுடனும் சிறு குழந்தைகளுடனும் தங்கி இருந்தனர். ராணுவத்தில் விமான அதிகாரியாக பணிபுரிந்த கபில் சிங், இமயமலைப் பகுதிகளில் சஞ்சாரம் செய்து பல குருக்களிடம் இருந்து வேதங்களை முறையாக கற்றுத்தேர்ந்த பின் மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாக பல ஆசிரமங்களை நிறுவி, தனி மனித உடல், மன அமைதியின் மூலம் உலகத்தில் அமைதியை நிலைநாட்டலாம் என்ற கொள்கையைப் பரப்பியிருக்கிருக்கிறார். அவருடைய வரலாறு முழுவதையும் காணொளியாக ஆசிரமத்தில் வைத்திருக்கிறார்கள். அட்லாண்டா தம்பதியினர் யோகா செய்து கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்து மாலை ஐந்து மணியளவிற்கு எங்களுடைய விடுதிக்கு வந்து சேர்ந்தோம். சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு ஆற்றங்கரையோரம் நடந்து செல்கையில் கடமையை முடித்த கதிரவன் விடைபெற்றுக் கொண்டிருந்தான். சுவையான இரவு உணவு. அங்கு வந்திருந்த அனைவர் முகத்திலும் கோவிலுக்குச் சென்று வந்த பரம திருப்தி.

கங்கோத்ரி பயணம் சாத்தியமாகி திவ்யமாக கங்கா மாதாவை தரிசிக்க முடிந்ததை நினைத்து நன்றியுடன் அன்றைய இரவு இனிதாக கழிந்தது. மீண்டும் ஒரு நீண்ட தூரப் பயணத்திற்குத் தயாராக வேண்டும். நாளை என்னென்ன அனுபவங்கள் காத்திருக்கிறதோ! யார் தான் அறிவர்?

போலோ கங்கா மய்யா கீ ஜெய்!

(தொடரும்)

Series Navigation<< உத்தரகாசிஉத்தரகாசி -குப்தகாசி >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.