என் முயற்சிகளில் சிலவும் அவை தந்த அனுபவமும்

இந்த முயற்சியில் வெற்றியைவிடத் தோல்விகள் தான் அதிகம். அதனால், என்னுடைய தோல்வி அனுபவங்கள், வெற்றியை விட அதிகம்! வெற்றி, தோல்வி ஆகிய இரண்டும் பெரிதாக எந்தப் பாடத்தையும் சொல்லித் தரவில்லை. தோல்விகளைத் தாண்டி, ஏன் இந்தத் துறையில் இன்னும் ஈடுபட்டு வருகிறேன் என்று கடைசியில் சொல்ல முயற்சிக்கிறேன்.

வீட்டுப் பொருட்கள், வித்தியாசமான ஒளியமைப்பில்

என் ஆரம்பகாலத் தோல்வியில் இதுவும் ஒன்று, மிக அருகாமையில், செயற்கை ஒளியில், வீட்டுப் பொருட்கள் – கத்திரிக்கோல், சுத்தியல், ஸ்பானர்கள், சாக்பீஸ், கலர் பென்சில்கள், காகித க்ளிப்புகள், சின்ன ரம்பம், அழகிய கைப்பிடியுடன் கத்தி, இப்படி பல பொருட்களை படம் பிடித்து, அவற்றைப் புதிய முறையாக இணைத்து மேலேற்றினால் வெற்றி என்று நினைத்தேன். உதாரணத்திற்கு, ஒரு அளவுகோலையும் (இரு முறை) , கத்திரிக்கோலையும் சேர்த்து, ‘Measure twice, cut once’ என்ற வாசகமும் அதில் பதிவு செய்தேன். இது போல மேலேற்றிய ஒரு 50 படங்கள் இன்றுவரை விற்பனையின்றி தூங்குகிறது! இரு முறை யோசித்து, ஒரு முறை இயங்கி வெற்றி பெற்றவர்களின் கண்ணில் என்னுடைய வண்ணப்படம் சிக்கவே இல்லை என்று தோன்றுகிறது.

எங்கும் நிறைந்த மின்னணுவியலில் என்ன சுகமோ?

சரி, தவறு சூழலில்தான் உள்ளதோ என்று வண்ணப்பட சூழலை மாற்றிப் பார்த்தேன். முப்பரிமாண, பலகோண பலவண்ணப் பின்னணியில், அன்றாட மின்னணுச் சாதனங்களைச் சேர்த்து வண்ணப்படங்களை உருவாக்கினேன். சூழல் முற்றிலும் செயற்கை (கணினியில் உருவாக்கப்பட்டது). திறன்பேசிகள், கடிகாரங்கள், கேட்பொறிகள், கணினி சுட்டிகள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. பலகோண அறைகள் சிலவற்றில் மேலிருந்து தெரியும்படி வடிவமைத்திருந்தேன். அழகான இந்த வண்ணப்படங்கள் இன்றுவரை, ஒன்றுகூட விற்கவில்லை. இவ்வகை வண்ணப்படங்கள் ஏஜன்சிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகு, விற்பனை ஆகும் என்ற எண்ணம் இயற்கைதானே? ஏஜன்சிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட டெக்னிகலாக சிறந்த படங்கள். ஆனால், அதன் தேவை என்னவோ என் மனதில் மட்டும்தான் உள்ளதோ என்று கூடத் தோன்றும். இவ்வாறு, சில மாதங்கள் உழைப்பிற்கு பலன் இல்லாத பொழுது, ஏன் இந்தத் தொழிலில் இறங்கினோம் என்று சில நேரங்களில் தோன்றும். இப்படி அடிபட்டவுடன், மற்ற வெற்றி பெற்றவர்கள் என்ன செய்து வெற்றி பெற்றுள்ளார்கள். அதில் என்ன பாடம் நாம் கற்றுக் கொள்ளலாம் என்று, சில நாள் சோகத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொள்வது என் வழக்கம். இதற்கென்றே, சில ஏஜன்சிகள், ‘Inspiration’ பக்கங்களை பங்களிப்பாளர்களுக்கு அளிக்கிறார்கள். இவற்றில் ஏதோ ஒரு பக்கம், நமக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும்!

அசாதாரணப் பின்னணிகள்

சில பங்களிப்பாளர்களின் வெற்றியைப் பார்த்து, நான் உருவாக்கிய வண்ணப்படங்களின் தோல்வி ராஜா இந்த வகை. வீட்டில் இருக்கும் பெரிய ப்ளாஸ்டிக் ப்ரஷ்கள், சிறிய டார்ச் விளக்குகளின் அழகிய ப்ளாஸ்டிக் டிசைன்கள், ஏன் சில பெயிண்ட் அடிக்கும் ப்ரஷ்களின் நுனிகள் என்று இவ்வகை பொருட்களை மிக அருகாமையில் படம் (macro photography) பிடித்தேன். இவற்றுக்கு கணினி மூலம், பல வண்ணங்களை உருவாக்கி, ஒரு அழகிய இணையதள பினணியாகப் பயன்படுத்தலாம் என்பது என் கணிப்பு. கணிப்புடன் நின்ற ஒரு பெரும் தோல்வி இது! விற்காத பட்டியல்களில், இந்தப் பின்னணிப் படங்கள் அடங்கும்.

‘கனடா’ விற்குள் இயற்கை

கனடா, இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ஒரு நாடு. ஒரு இயற்கை வண்ணப்படக் கலைஞனின் சொர்க்க பூமி என்றே சொல்லலாம். என்னுடைய கற்பனைக்கு விழுந்த ஒரு அடி, ‘கனடா’ என்று ஆங்கிலச் சொல்லுக்குள், இந்த இயற்கை வளத்தை அடக்குவது. மிக அழகாக அமைந்த இந்த வண்ணப்படங்கள், பல ஏஜன்சி இணையதளத்திலும் கொரட்டை விடாத குறைதான். இதில் நான் கற்றுக் கொண்ட பாடம், சில டெக்னிகல் விஷயங்கள் ஒரு கலைஞனுக்கு மிகவும் பிடித்திருந்தாலும், அதற்காகவே ஒரு வண்ணப்படத்தை உழைத்து உருவாக்கினால், வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது.

மிகச் சிறு பொருட்களில் தோல்வி

மிக நெருக்கமாக பொருட்களை படம் பிடிப்பது ஒரு பிரத்யேகக் கலை. அதுவும், பொருட்கள் சற்றும் அசையாமல் படம்பிடிப்பது macrophotography -ல் மிகவும் கடினமான ஒன்று. கலைஞரின் மூச்சுக் காற்று, அருகில் இருக்கும் ஏசியின் காற்று எல்லாமே இந்தத் துறையின் எதிரி! சிறு பொருட்களை நகர்த்தி விடும். அவ்வளவு அருகில் சென்று படம் பிடிப்பதில், இன்னொரு பிரச்சினையும் உண்டு. காட்சி பொருளின் ஒரு பகுதி மட்டுமே தெளிவாக பதிவாகும். முழு பொருளும் ஃபோகஸில் இருக்காது.

வீட்டிலுள்ள அலங்காரப் பொருட்களில் பலவற்றின் ஒளிச்சிதறலை/ வண்ணச்சிதறலை, ஸ்பெஷல் லென்ஸ்களைப் பொருத்தி பல நூறு படங்களை பதிவு செய்து ஏஜன்சிகளுக்கு மேலேற்றியதில், மிகவும் குறைந்த பலனே கிடைத்தது. இதற்கான உழைப்பு மிக அதிகம் என்று சொல்ல முடியாது. குளிர்கால மாதங்களில் இவ்வகை வண்ணப்பட சேர்க்கை ஒரு நல்ல விஷயம். ஆனால், இன்னும் கொஞ்சம் விற்றிருந்தால், மேலும் இக்கலையில் தேறியிருக்கலாமே என்ற ஏக்கம் எப்பொழுதும் உண்டு.

கற்பனைக்கு கிடைத்த இடி

இதுவரை நான் இத்துறையில் சந்தித்த தோல்விகளில் மிகவும் வலித்த தோல்வி என்னுடைய மூன்று வண்ணப்படக் கற்பனைத் தோல்வி. இதற்கு கொஞ்சம் கனடா பற்றிய பூகோள அறிவு தேவை. கனடா, கிழக்கும் மேற்குமாக பரந்த ஒரு தேசம் (இந்தியா வடக்கும் தெற்குமாக பரந்த ஒரு நாடு). கனடாவின் ஒரு கோடியிலிருந்து (கிழக்கு – நியூஃபின்லாந்து) மறுகோடி வரை (மேற்கு – பிரிடிஷ் கொலம்பியா) சென்று பல வண்ணப்படங்களை எடுத்துள்ளேன்.

என்னுடைய கற்பனை இதுதான்: ஒவ்வொரு வண்ணப்படத்தையும் மூன்றாகப் பிரித்து, இடது (மேற்கு) பக்கத்தில் ஒரு பிரிடிஷ் கொலம்பியா வண்ணப்படம், நடுவில் ஒரு அண்டேரியோ வண்ணப்படம், வலது (கிழக்கு) பக்கத்தில் ஒரு நியூஃபின்லாந்து வண்ணப்படம் என்று ஒரு 20 படங்களை உருவாக்கினேன். ஒவ்வொரு படத்திலும் ஒரு இயற்கை சூழல் (மலை, ஏரி, காடு, நதி, நீர்வீழ்ச்சி, கலங்கரை விளக்கம், படகுகள்) என்று வெளியிட்டேன். இன்றுவரை, இதை யாரும் செய்யவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு வண்ணப்படம் கூட இன்றுவரை விற்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பது உண்மை. ஆனால், இந்த முயற்சியைக் கைவிடவில்லை. மாறாக, மற்ற இடங்களில் எடுத்த அருகாமையில் இருக்கும் மூன்று வண்ணப்படங்களை இவ்வாறு இணத்து வெளியிட்டதில், சற்று வெற்றி கிடைத்தது உண்மை. இதில், சில விஷயங்கள் கவனமாக இருத்தல் அவசியம். உதாரணத்திற்கு, ஒரு வண்ணப்படத்தின் மலையின் விளிம்பு உயரம், அடுத்த வண்ணப்படத்துடன் சேருவதைப் போலத் தோற்றமளிக்க வேண்டும். அதைவிடக் கடினமான ஒரு விஷயம், இரு படங்களின் வானம், எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது.

பாலமா பாவமா?

வண்ணப்படங்களில் எனக்குப் பிடித்த இன்னொரு வகை ரயில், சாலை மற்றும் பழைய பாலங்களை (bridges) படம் பிடிப்பது. எல்லா படங்களைப் போலவும் கோணம் மற்றும், ஒளி மிகவும் முக்கியம் என்றாலும், பாலத்தை படமெடுக்கும் பொழுது மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், வடிவியல் பிம்பக்குறைபாடு (geometric distortion). பார்க்கும் கண்களுக்கு மிகவும் நேர்த்தியாக இருக்க வேண்டும். சற்று கோணலான கடற்கரைப் படத்தை விட, கோணலான பாலப் படம் எவராலும் கண்டுபிடிக்க முடியும். 

இவ்வாறு, நான் படம் பிடித்த பல ரயில், சாலை, நடை மற்றும் பழைய பாழடைந்த பாலங்களின் வண்ணப்படங்கள் இதுவரை ஒன்று கூட விற்கவில்லை. 

வெக்டர் தொடர் முயற்சிகள்

வெக்டர் முறையில் வண்ணப்படங்களை உருவாக்குவதைப் பற்றி எழுதியிருந்தேன். இதில் உள்ள நல்ல விஷயம், உங்களிடம் காமிரா கூட இருக்கத் தேவையில்லை. முற்றிலும் கணினி கொண்டு படங்களை வரையலாம், உருவாக்கலாம். 

என்னுடைய வெக்டர் அனுபவம், வண்ணப்படத்தைப் பார்க்கையில் ஒரு ஆரம்பப் பள்ளி அளவுதான் என்று சொல்ல வேண்டும். இந்தக் கலையை கற்க ஆரம்பித்ததும் 2020 முதல்தான். வண்ணப்படங்களை நோக்குகையில், அதிக வெக்டர் வண்ணப்படங்கள் (வரைபடங்கள்)  இல்லாததால், எளிதில் வெற்றி பெறலாம் என்ற என்னுடைய எண்ணம் முற்றிலும் தவறானது. இந்தக் கலையில் தேர்ந்தவர்கள் பலர் இருக்கின்றனர்; அத்துடன் அவர்களது படைப்புகள் மிக நன்றாகவும் உள்ளன. மிகக் குறைந்த வரவேற்பைப் பெற்ற வகைகளில், வெக்டர் வரைபடங்களும் ஒன்று.

அருவ வண்ணப்படங்கள்

கண்ணின் முன் தோன்றும் ஒரு பொருளை, அல்லது காட்சியைப் படம்பிடிப்பது ஒரு வகை. ஆனால், அருவ, அதாவது abstract  வண்ணப்படங்கள் இன்னொரு வகை. இவ்வகை வண்ணப்படங்களை உருவாக்குவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அத்துடன், வெக்டர் முறையில் உருவாக்கப்பட்ட வண்ணப்படங்கள் எளிதில் ஒரு அருவ பின்னணி வண்ணப்படமாக மாற்ற இயலும். இவ்வகை முயற்சி எனக்கு பிடித்திருந்தாலும், வாங்குவோருக்கு பிடிப்பதில்லை என்றே தோன்றும். 

இது போல, இன்னும் பல வகை வண்ணப்படங்கள், வாங்குவோருக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. என்றாவது இவற்றிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. சில 2018 முயற்சிகள், 2021-ல் பலனளித்துள்ளன. இவ்வகை வண்ணப்படங்கள் விற்பனையில் ஏமாற்றத்தை அளித்தாலும், இந்தக் கட்டுரையில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு வண்ணப்படமும் (பாலங்கள் வகை தவிர) புதிய கற்பனை முயற்சிகள். 

இப்படி தோல்விகள் பலவற்றைத் தழுவினாலும், கஜினி போல மீண்டும் மீண்டும் படையெடுப்பு என்பது என் வழக்கமாகிவிட்டது. சில தோல்விகள் பாடங்களைக் கற்றுக் கொடுத்தன. மற்றவை, உதறித் தள்ளிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க மட்டுமே தூண்டியது. அடுத்த பகுதியில், ஏன் இந்த முயற்சியில் தொடர்ந்து பயணிக்கிறேன் என்று பார்க்கலாம்.

Series Navigation<< வித்தியாசமாக சிந்தித்தால் வெற்றி பெற முடியாதுஆயிரம் அடி விழுந்தும் ஏன் தொடர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும்? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.