தமிழாக்கம் : நா. கிருஷ்ணா

மேட்டுப்பாங்கான ஸ்பெய்ன்பீடபூமி முதன்மையானதொரு குளிர் பிரதேசம், இவ்விஷயத்தில் வேறொன்று தன்னை விஞ்ச அது அனுமதிப்பதில்லை, உண்மையான குளிர்காலத்தை முதன்முதலாக நேருக்கு நேர் கண்டதும் அங்கேதான். நமது பக்கமுள்ள பகுதிகளிலும் இத்தகைய குளிரை சந்திக்கமுடியும் என்கிறபோதும், அது சுருக்கமாக நடந்துமுடியும். ஆனால் ஸ்பெய்ன் பீடபூமியில் குளிர் பல மாதங்கள் அழுத்தமாக உட்கார்ந்துவிடும், மேலும் வடக்கே செல்ல செல்ல, தொடக்கமெது முடிவெது என்பதை யூகிக்க இயலாதவகையில், எப்போதும் ஒரே மாதிரியான குளிரைச் சந்திக்க நேரும். படைமுகாமுக்கு வந்துசேர்ந்ததோ மாலைவேளை, அப்போது தான்யூபு நதி பிராம்மாண்டமானதொரு பனிக்கட்டிகளாலான பெரியசாலை போன்ற தோற்றத்துடன் ஆரம்பத்தில் குங்கும நிறத்திலும், சிவந்தும் தள்ளிப் போகப்போக நீல நிறமுமாக இருந்தது, அன்றியும் நதியின் ஆழ்பகுதியில் நீரோட்டம் புரிந்த வினையால் உருவான ஆழமான கீறுகள், இரதங்கள் ஓடிய தடங்கள் போலிருந்தன. விலங்கின் மென்மயிர்கொண்டு தயாரிக்கப்பட்ட கம்பளி ஆடைகள் குளிரிலிருந்து எங்களைப் பாதுகாத்தன. தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத எதிரியின் அரூப இருப்பு, சொல்லொணாத மனவெழுச்சியையும், சக்தி அனைத்தும் ஒன்றுதிரண்டதுபோன்ற உணர்வையும் எங்களுக்கு அளித்தது. மனோதிடத்தைக் கட்டிக்காக்க பிறவிடங்களில் எவ்வாறு போராடுவோமோ அவ்வாறு உடலைக் கதகதப்புடன் வைத்திருக்க இங்கு குளிருடன் போராடினோம். பொதுவாக ஸ்டெப்பி புல்வெளிகள் ஒன்றுபோலவே வளர்ந்திருக்கும், அவற்றில் சமமின்மையை உணர்வது கடினம், இந்நிலையில் பனிபொழிந்த நாட்களில், அரைகுறையாக வெளிப்படும் சமமின்மைகூட சுத்தமாகத் துடைக்கப்பட்டிருக்கும்; பனிப்பொழிவால் நுண்பொருட்களும், வெளியும் தூய்மையில் தோய்ந்த உலகம் போலிருக்க அவற்றில் குதிரைகளில் நாங்கள் பாய்ந்துச் செல்வதுண்டு. மென்மையான பொருள்களுக்கு மட்டுமின்றி மிகவும் அற்பமான பொருள்களுக்குங்கூட உறைந்தபனி, தெளிமையையும் தெய்வீகமானதொரு கடினத்தன்மையையும் அளிப்பதை அங்குதான் கண்டேன். எந்வொரு உடைந்த நாணலும் படிக புல்லாங்குழலாக அப்போது மாறமுடிந்தது. காக்கேசியன் இனத்தைச் சேர்ந்த எனது வழிகாட்டி அசார், எங்கள் குதிரைகளுக்குப் பருக நீர்வேண்டும் என்பததற்காக அந்தி வேளையில் பனிக்கட்டிகளை உடைப்பதுண்டு. இவ்விடத்தில் ஒன்றை மறக்காமல் தெரிவிக்கவேண்டும், இதுபோன்ற மனிதர்களுடன் பழகுவதற்கும் வேறுபலபயனுள்ள தொடர்புகளுக்கும் பல கூறுகள் முன்னின்று உதவுகின்றன அவற்றில் ஒன்று விலங்குகளின் பங்களிப்பு, உதாரணத்திற்கு தொழில்முறைவணிகத்திலும், ஓயாத பேரங்களிலும் பங்கெடுக்கும் இருதரப்பு மனிதருக்கிடையே உணரப்படும் குதிரையேற்றத் திறனுக்குச் சமதையான மரியாதைக்கு ஒருவகையில் விலங்குகளே காரணம். இக்குளிர்கால முன்னிரவுகளில், முகாம்களில் தீமூட்டிக் குளிர்காய்ந்து மகிழும்வேளையில் தீயானது இடை சிறுத்த நடனக்கலைஞர்களின் அசாதாரண தாவல்களையும், அணிந்துள்ள ஆடம்பரமான தங்க வளையல்களையும் ஒளிரச் செய்யும்.
வசந்தகாலத்தில் அனேகத் தடவை, அப்பிரதேசத்தின் உட்பகுதியில் வெகுதூரம் பயணிக்கவும், துணிகரமான செயல்களை மேற்கொள்ளவும் உருகும்பனி என்னை ஊக்குவித்தது. பழகிய தீவுகள், கடல்கள் என்றிருக்கும் தென்திசையையும், சூரியன் மறையும் காட்சிக்கு வாய்ப்புள்ள ரோம் நகரம் அமைந்திருக்கும் மேற்கு திசையையும் அலட்சியப்படுத்திவிட்டு வடதிசை அல்லது தொலைதூர ஆசியாவை குறிவைத்து எனது பயணக்கனவை ஸ்டெப்பி புல்வெளிகள், காகேசிய கொத்தளங்களுக்கு அப்பாலென நான் விஸ்தரித்துக்கொள்வதுண்டு. அச்சந்தர்ப்பங்களில் பல்வேறுவிதமான சீதோஷ்ணநிலைகளையும், விதவிதமான விலங்கினங்களையும், மனிதரினங்களில் உள்ள வேறுபாடுகளையும் கண்டு வியப்பில் ஆழ்ந்திருக்கிறேன். நமக்கு வெளியே இவ்வுலகில் பல பேரரசுகள் உண்டென்பதை நாம் எங்கனம் அறிந்ததில்லையோ அதுபோல நம்மைப்பற்றி அறிந்திராத பேரரசுகளும் இருந்தன; மாறாக பால்ட்டிக் பகுதி வாசனை திரவியமான அம்பர் எப்படி நமக்கு அரிதோ அதுபோன்ற அரிதான, பலவணிகர்கள் கைம்மாறிய பண்டங்களின் தயவினால் – உதாரணத்திற்கு இந்திய மிளகு- நம்மை அறிய நேர்ந்தவர்களும் உலகில் இருந்தனர், உலகம்தான் எத்தனை விதம்? ஒடெஸ்ஸோஸ்(Odessos)30 பிரதேசத்தில், பல வருட பயணம் மேற்கொண்டிருநது திரும்பிய வணிகர் ஒருவர் படிகம்போன்றிருந்த புனிதமானதொரு பச்சைக்கல் ஒன்றை பரிசாகக் கொடுத்தார். தனது வணிகப் பயணத்தின்போது, தங்கநேர்ந்த பெரியதொரு இராச்சியத்தின் சமயவழிபாடு, கடைபிடிக்கபட்ட நெறிமுறைகள் முதலானவவற்றில் ஆர்வமின்றி, தனக்கெது இலாபமோ அதில் முற்றாக தன்னை அடைத்துகொண்டதன் பலனாக கடலோரங்களில் வியாபாரி நடந்திருக்கிறார், அப்போது இக்கல் கிடைத்துள்ளது. விண்ணிலிருந்து விழுந்த ஒருகல்-வேறொரு உலகின் எரிநட்சத்திரம் எத்தகு விளைவை நமக்குத் தருமோ அதனை இக்கல் எனக்களித்தது. உண்மையில் இப்புவியின் கட்டமைப்பை நாம் சரியாக புரிந்துகொண்டதில்லை என்றே கூறவேண்டும். இப்படியொரு அறியாமைக்கு, நாம் ஏன் சம்மதிக்கிறோம் என்பதும் எனக்குப் புரிவதில்லை. எங்கு தொடங்கினோமோ அங்கு திரும்ப வரமுடிந்த கிரேக்க மைதானங்களை-(எரட்டோஸ்தெனீசு (Eratosthène)31 இரண்டுலட்சத்து ஐம்பதாயிரமென அவற்றின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிட்டிருந்தார்)- சுற்றிவந்து வெற்றிபெறுபவர்களைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன். ஓர் எளிய முடிவின்படி நம்முடைய சாலைகளைப் பாதையாக உருவகித்து, தொடர்ந்து சுதந்திரமாக முன்னோக்கி நடக்க நினைத்தேன். இப்படியொரு கற்பனை எனக்கொரு நல்ல விளையாட்டு. அதன்படி, நானொரு தனிமனிதன்; உடமைகள், கீர்த்திகள், பண்பாட்டின் தயவிலான சௌகரியங்கள் எதுவுமின்றி அந்நிய மனிதர்களுக்கு மத்தியிலும், எதுவும் நடக்கலாம் என்கிற புதிய சூழல்களுக்கிடையிலும் இருக்கிறவன். ஒருவகையில் இதொரு கனவென்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள், தவிர மிச்சுருக்கமான கனவும் கூட. நான் கண்டுபிடித்த இச்சுதந்திரம் தொலைதூரத்தில் மட்டுமே உணரக்கூடியதாக இருந்தது; இதில் கிடைத்த நனமை எவற்றையெல்லாம் துறக்கவேண்டியிருந்ததோ அவற்றை என்னால் திரும்பப் பெறமுடிந்தது. இப்படி பயணிக்கிறபோது, ரோம் நகரிலிருந்து வெளியில் வந்திருந்தாலும், எனது ரோமானிய அடையாளம் என்னுடன் இருக்கவே செய்தது. ஒரு வகையான தொப்புள் கொடி உறவு என்னை ரோம்நகரத்துடன் பிணைத்திருந்ததென நினைத்தேன், ஒருவேளை திரிப்யூன் பொறுப்பில் இருந்தபோது ரோமானியப் பேரரசோடு என்னை நெருக்கமாக பிணைத்துகொண்டது காரணமாக இருக்கலாம், அத்தனை நெருக்கத்தை பின்னாட்களில் சக்கரவர்த்தியாக இருந்தகாலத்தில் நான் உணரவில்லை. இதே காரணத்தை முன்னிட்டு எனது கை, மூளையைக்காட்டிலும் குறைவான சுதந்திரத்துடன் செயல்பட்டதெனவும் தெரிவிக்கமுடியும். ஆயினும்கூட, எந்தப் பயங்கரமான கனவுக்கு அஞ்சி, நம் முன்னோர்கள் பக்குவப்பட்டமனிதர்களாய் தங்களுடைய லாச்சியும்(Latium)26 எல்லைக்குள் அடைந்திருக்க முடிந்ததோ, அக்கனவை நானும் கண்டு, ஒரு சிலநொடிகள் அதற்கு இடமும் அளித்து அதனூடாக அவர்களிடமிருந்து எப்போதும் வேறுட்டிருக்க முயற்சியும் செய்தேன்.
திராயான், கீழை–ஜெர்மானியா (Germanie Inférieure) பகுதி துருப்புகளின் படைத்தலவர் பொறுப்பில் அங்கிருந்தார்; பேரரசின் புதிய வாரிசுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க தான்யூபு படைப்பிரிவின் பிரதிநிதியாக நான் செல்லவேண்டியிருந்தது. கோல்(Gaule) பிரதேசங்களுக்கு மத்தியில் கொலோனை(Cologne) அடைய மூன்று நாட்கள் இருந்த நிலையில், இடையில் இரவுதங்க நேரிட்டபோது நெர்வா மரணச்செய்தி எனக்குக் கிடைத்தது. எனது ஒன்றுவிட்ட சகோதரர் சக்கரவர்த்தியாவது உறுதியாகிவிட்ட நிலையில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமானச் செய்தியாளர் ஊடாக தகவல் சம்ம்பந்தப்பட்டவரை எட்டுவதற்கு முன்பாக நான் முந்திக்கொள்ள நினைத்தேன். துரிதமாகச் செய்தியைக் கொண்டுபோக நினைத்த அப்பயணத்தின்போது எனது மைத்துனர் செர்வியானுஸ்(Servianus) ஆளுநராக இருந்த திரேவ்ஸ்(Trêves) தவிர வேறு எங்கும் இடையில் நிற்கவில்லை. அன்று நாங்கள் ஒன்றாக சாப்பிட்டோம். மனதில் உறுதியற்ற செர்வியானூஸ் தலைமுழுக்க முடியாட்சி குறித்து அழுக்கான எண்ணங்கள். குறுகிய புத்திகொண்ட அந்த மனிதர் எனக்குத் தீங்கிழைக்க அல்லது குறைந்தபட்சம் நான் அடையவிருந்த சந்தோஷத்தைத் தடுப்பதற்கு முயற்சித்திருந்தான், திராயானுக்குக் கொண்டுபோகவிருந்த தகவல் விஷயத்தில் எனது திட்டத்தைக் குலைத்து, தான் முந்திக்கொண்டு தன்மூலம் செய்தியைக் கொண்டுசேர்க்க விரும்பினான். இரண்டுமணி நேர பயணத்திற்குப் பிறகு ஓர் ஆற்றின் ஆழமற்றபகுதியைத் தேர்வுசெய்து இறங்கி கடக்க முனைந்தபோது நாங்கள் தாக்கப்பட்டோம். தாக்கிய ஆசாமிகள் எனது பணியாளைக் காயப்படுத்தியபின் எங்கள் குதிரைகளையும் கொன்றார்கள். இருந்தும் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் எங்களிடம் பிடிபட்டான் என் மைத்துனரின் முன்னாள் அடிமையான அவன் உண்மை அனைத்தையும் ஒப்புக்கொண்டான். திடமாக முடிவெடுத்து அதன்பொருட்டு பயணப்படும் ஒரு மனிதனின் பாதையில் குறுக்கிட அவனைக் கொன்றாலொழிய வேறுமுயற்சிகள் உதவாதென்பதை செர்வியானூஸ் விளங்கிக் கொண்டிருக்கவேண்டும், இந்நிலையில் அவனுடைய கோழைத்தனத்தால் எதற்கு வம்பென ஒதுங்கிக்கொண்டான். பின்னர் எனக்கு குதிரையொன்றை விற்கத் தயாராக இருந்த ஒரு விவசாயியைச் சந்திப்பதற்கு முன்பு கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் அடிகள் நாங்கள் நடக்க வேண்டியிருந்தது. அன்று மாலையே கொலோனுக்கு வந்து சேர்ந்தேன். எனது மைத்துனரின் தகவலை, எனது தகவல் சிலஅடிகள் தூரத்தில் முந்திக்கொண்டதென்கிறபோதும் அவ்வித்தியாசமே இம்முயற்சியில் எனது வெற்றிக்குக் காரணமாயின. அங்கு இராணுவத்தினர் நல்லதொரு வரவேற்பை எனக்களித்தனர். பேரரசர் அங்கு என்னை இரண்டாவது லீஜியன் ஃப்டெலிக்கு(la Deuxième Légion Fidèle) திரிப்யூனாக நியமனம் செய்து தன்னருகிலேயே வைத்துக்கொண்டார்.
அவர், தான் சக்கரவர்த்தி ஆகவிருந்த செய்தியை வெகுசாதாரணமாக எடுத்துக்கொண்டது, பாராட்டுக்குரியதொன்று. அவர் நீண்ட காலமாகவே அதை எதிர்பார்த்தார்; இருந்தும் அவரது திட்டங்களிலும் செயல்பாடுகளிலும் எவ்வித மாற்றமுமில்லை, எப்போதும் போலவே இருந்தார், அவர் சக்கரவர்த்தி என்றானதற்குப் பிறகும், இறக்கும்வரை ஓர் இராணுவத்தளபதியாகவே வாழ்ந்தார், மறைந்தார். ஆனால் இந்த நற்பண்பை இராணுவத்தின் கட்டுப்பாடான நெறிமுறையின் தயவினால் பெற்றிருந்தார், அரசாங்க நடமுறையிலும் இவ்வொழுங்கு கடைபிடிக்கபட்டது. இக்கருத்தியத்தின் அடிப்படையிலேயே குறைந்தபட்சம் ஆட்சியின் தொடக்கத்தில், யுத்தம் சம்பந்தமான திட்டங்கள், வெற்றியை ஈட்டுவதற்கான வழிமுறைகள் அனைத்தும் நடந்தேறின. அவரும் அடிப்படையில் தம்மையொரு பேரரசன்-படைவீரன் என்ற வரிசையில் வைத்து ஆட்சிநடத்தினாரே அன்றி படைவீரன்-பேரரசன் என்கிற வரிசை அடிப்படையிலல்ல. அவருடைய வாழ்க்கைச் சீராக இருந்தது, பகட்டும் அகங்காரமும் அற்ற தன்னடக்கம் வெளிப்பட்டது. படையினரை மகிழ்விக்கும் வகையில் மன்னரின் நடவடிக்கைகள் இருந்தன. தமது புதிய பொறுப்பை ஏற்ற நாள்முதல், அன்றாடப்பணிகளிலும் வேண்டியவர்களிடமும் குறைகளை காணாது ஓரளவு திருப்தியையும்கண்டு அதை வெளிப்படுத்தவும் செய்தார்.
அவர் பெரிதாக என்மீது நம்பிக்கை வைத்திருந்தார் எனசொல்ல முடியாது. எனக்கு சகோதரர்முறை, என்னை விட இருபத்தி நான்கு வயது மூத்தவர், என் தந்தை இறப்புக்குப் பிறகு என்னை அரவணைத்த இணை பாதுகாவலரும் ஆவார். தனது குடும்பக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஒரு மாகாணவாசியின் பொறுப்புடன் நடந்துகொண்டவர்; ஏதோ ஒன்றிர்க்கு நான் தகுதியுடையவனாக இருந்து மாறாக அதனை அடைய திறமைபோதாதிருப்பின், எந்தவொரு மனிதரிடமும் காட்டாத கடுமையுடன் நடந்துகொண்டு எனது முன்னேற்றத்திற்கென எதையும் செய்யத் தயாராக இருந்தார். எனது இளமைக்கால முட்டாள்தனத்தை கோபத்துடன் அணுகும் குணம் அவருக்குண்டு, இதனை முற்றிலும் நியாயமற்றதென சொல்வதற்கில்லை. அதுபோல, இப்பிரச்சினை எங்கள் குடும்பத்திற்கு வெளியே எழுந்ததுமில்லை. அரசசகுடும்பம் சார்ந்த எனது முரண்பாடுகளை விட எனது கடன்கள் அவரை மிகவும் நோகடித்தன. என்னிலிருந்த வேறுசில குணாதிசயங்கள் அவரை கவலையடையச் செய்தன: கல்விக்கேள்விகளில் பண்பாடுகளில் திராயான் தேர்ந்தவர் என்பதற்கில்லை, இருந்தும் தத்துவவாதிகள் மற்றும் அறிஞர்கள் மீது அவர் வைத்திருந்த மரியாதை நெகிழச்செய்யும். அதேவேளையில் தந்துவவாதிகளை தள்ளிநின்று கொண்டாடிய அவர்தான் இலக்கியத்தில் தீவிர ஈடுபாட்டுடனிருந்த அரசாங்கத்தின் ஓர் இளம் உயர் அலுவலரை பிரியாமல் உடன்வைத்திருந்தார் என்பதையும் இங்கெ குறிப்பிடவேண்டும். எனது கொள்கைகள், இடர்காப்புகள், முட்டு கட்டைகள் எவை அல்லது எங்கிருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் முயற்சியின்றி, நான் ஏதோ. நிர்க்கதியாய் இருப்பதுபோலவும் என்னை நானே எதிர்கொள்ளக்கூட எனக்குத் தெம்பில்லை எனவும் கருதினார். என்னைப்பற்றிய கணிப்பு அவ்வாறிருந்தும் நான் கவனமாக இருந்தேன், எனகென்றிருந்த கடமையில் ஒருபோதும் தவறுவதில்லை. ஒரு அதிகாரி என்றவகையில் நான் எடுத்திருந்த நற்பெயர் அவருக்கு நம்பிக்கை அளித்தது, இருந்தும் நான் வளமான எதிர்காலம்கொண்ட இளம் திரிப்யூன் என்பதால் அவருடைய நம்பிக்கைக்கு எவ்வித ஊறும்நேர்ந்துவிடாமலிருக்கத் தன் பார்வையில் என்னை வைத்திருந்தார்.
எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்ததொரு சம்பவம் கிட்டத்தட்ட சீரழிக்கும்நிலமைக்கு என்னைத் தள்ளியது. விஷயம் இதுதான், அழகான முகமொன்று என்னை வென்றிருந்தது, இளைஞன் ஒருவனிடம் அன்பின் வசப்பட்டு மிகநெருக்ககமாக இருந்தேன், பேரரசர் திராயான் அவனை அறிந்திருந்தார். ஆபத்தான விளயாட்டு என்றாலும்கூட எனக்கது சுவையான அனுபவம். காலுஸ்(Galus) என்ற பெயரில் மன்னருக்கு ஒரு செயலாளர் இருந்தார், நீண்ட காலமாக மன்னரிடம் எனது கடன்கள் பற்றிய தகவல்களை விவரமாக எடுத்துரைத்தும் வந்தார். இந்நிலையில் என்னுடைய சமீபத்திய நடத்தைப் பற்றியும் தெரிவித்துள்ளார். மன்னரின் கோபம் உச்சத்தை எட்ட என்வாழ்க்கையில் மிகமோசமான தருணம் அது. என்னுடைய நண்பர்கள் சிலர், குறிப்பாக அச்சீலியுஸ், அட்டியாயூனுஸ் முதலானோர் ஒன்றினைந்து எனக்காக வாதிட்டு மன்னரை என்மீது கொண்டிருந்த அந்த அபத்தமான வெறுப்பிலிருந்து மீட்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கு முடிவில் அவர் இறங்கியும்வந்தார். சமரசத்திற்கு உடன்பட்ட இருதரப்பும் ஆரம்பத்தில் உள்ளார்ந்த ஒத்துழைப்பை நல்கவில்லை, அரங்கேறிய கோபக் காட்சிகளினும் பார்க்க நான் பட்ட அவமானம் அதிகம். இப்பிரச்சனையில் காலுஸ் மீது நான் கொண்டிருந்த கோபத்திற்கு ஈடுயிணையில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, பொது நிதிக்கணக்கை தவறாகக் கையாண்டு மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார், நானே பழிதீர்த்துகொண்டதுபோல எனக்கு அப்படியொரு சந்தோஷம்.
தொடர்ந்த வருடத்தில், மன்னரின் முதலாவது படையெடுப்பு, அது டேசியர்களுக்கு(Daces)33 எதிரானதாக இருந்தது. எனது விருப்பமும், கொள்கையும் அப்போதெல்லாம் போரை அடிப்படையாகக் கொண்ட அரசியலுக்கு முரண்பட்டது. ஒருவேளை திராயானுடைய படையெடுப்பு போதைக்கு அடிமையாகாமல் இருந்திருந்தால், சராசாரி மனிதனாக நானும் இருந்திருக்கக்கூடும். இவ்வாறிருக்க உண்மையில் எந்தவகையிற் பார்த்தாலும் யுத்த காலங்கள் எனது வாழ்க்கையின் மகிழ்ச்சிக்குரிய காலங்கள். தொடக்கத்தில் யுத்தம் என்பது மிகவும் கடினமானதொரு காரியமாகப் பட்டது, அல்லது அதுபோன்ற தோற்றத்தை அளித்தது. தவிர அப்போதெல்லாம் நான் இரண்டாம் நிலை பதவிகளைமட்டுமே வகித்தேன், காரணம் திராயான் அன்பிற்கு முழுமையாக நான் பாத்திரமாகவில்லை. நமது தேசத்தை நன்கு புரிந்து வைத்திருந்தேன்; விளைவாக எவ்வகையில் அதற்கு நான் பயன் தருவேன் என்பதும் தெரியும். இந்நிலையில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும், ஒவ்வொரு படை முகாமிலும், ஒவ்வொரு யுத்தத்தின்போதும் மன்னருடைய அரசியலை விமர்சிக்கின்ற வகையில் கருத்துக்கள், என்னுள் வளர்ந்துபெருகியதை நான் உணரத் தவறியிருந்தேன். அரசுக்கு எதிரான இந்த மாற்றுக் கருத்துக்களை, அக்காலகட்டத்தில் வெளிப்படையாக உரத்து தெரிவிக்கவேண்டுமென்கிற கடமையும் எனக்கில்லை, உரிமையும் எனக்கில்லை; தவிர, அதைக் கேட்பதற்கும் ஆளில்லை. இராணுவ உத்தியோக வரிசையில் எனக்கான இடம் ஐந்து அல்லது பத்து என்றிருந்ததால் படையினரை நன்கு புரிந்துவைத்திருந்ததோடன்றி, அவர்கள் வாழ்க்கை முறையையும் கூடுதலாக பகிர்ந்துகொண்டேன். இச்செயல்களில் ஒருவகையான சுதந்திரம் எனக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது, அதாவது நான் எதைச் செய்யவேண்டியிருந்ததோ அதில் அக்கறையின்றி பட்டும்படாமல் இருக்கமுடிந்தது. ஆனால் ஒருமுறை அதிகாரத்தைக் கையில் எடுத்தபின்பு, வயதும் முப்பதை கடந்தபின்பு, செய்யும் செயலில் பற்றின்றி இருப்பதென்பது மிகவும் கடினம். எனக்கே எனக்கென்று சில நன்மைகளும் வாய்த்தன: உதாரணத்திற்கு பிரச்சனைக்குரிய இந்நாட்டின்மீது எனக்கிருந்த அளவற்ற பிரியம், அடுத்து அவ்வப்போது விரும்பியே ஏற்றுக்கொண்ட அனைத்து வடிவத்திலான நல்குரவும், எளிமையும். வேறு நாடுகளின் மீதான படையெடுப்பின்போது, ரோமை நினைத்து கவலையில் மூழ்காத ஒரே இளம் அதிகாரி நானாகத்தான் இருக்கவேண்டும். சேற்றிலும், பனியிலும் எத்தனை காலம் செலவிட நேர்ந்ததோ அதற்கீடாக புத்துணர்வையும் சம்பாதிக்க என்னால் முடிந்தது.
அங்குகிருந்த ஒட்டுமொத்த காலமும் ஓர் அசாதாரண மனவெழுச்சியிற் கழிந்ததெனச் சொல்லவேண்டும். என்னைச் சுற்றியிருந்த இராணுவ துணை அதிகாரிகளின் சிறிய குழுவொன்றிற்கும் அதில் பங்குண்டு, தொலைதூர ஆசியாவில் படையெடுப்பு நிமித்தமாக தங்க நேரிட்டு. விநோதமான கடவுள்களை அவர்கள் கொண்டுவந்திருந்தனர். பார்த்தியாவில் நாங்கள் மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு பரவலாக அறியப்பட்டிருந்த மித்ரா வழிபாட்டு முறை (Le cult de Mithra) வெகுவாக குறைந்திருந்த காலம். இந்நிலையில் அம்முறை வற்புறுத்திய தவவாழ்க்கை கெடுபிடிகள் என்னை ஈர்த்தன, அது மரணம், ஆயுதம், இரத்தமென்று வெறிபிடித்திருந்த எனது சித்தத்தை நாணேற்றி திடப்படுத்தியதுடன், வீரர்களின் கடினவாழ்க்கைக்கும் பொருளுண்டு என்றவகையில் நம்முடைய தகுதியையும் உயர்த்தி நிறுத்தியது. நான் போரைக்குறித்து வேறெங்கும் கண்டிடிராத அளவிற்கு எதிரான கருத்துக்களை வளர்த்துக்கொண்டிருந்த நாட்கள். ஆனால் இவ்வழிப்பாட்டு முறையிலிருந்த காட்டு மிராண்டித்தனமான சடங்குகள் உருவாக்கிய உயிர்வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையிlலான பந்தங்கள், பதற்றமான நிகழ்காலம், நிச்சயமற்ற எதிர்காலம் என்றிருக்கும் ஓர் இளைஞனின் மிக அந்தரங்கமான கனவுகளை ஆராதித்து அவற்றூடாக கடவுள்களிடம் கைகாட்டின. தான்யூபு நதிக்கரையில் உள்ள மரங்கள் மற்றும் நாணற்புற்களாலான ஸ்தூபியை ஒத்த கோபுரமொன்றில் என்னுடைய சகஇராணுவத்தோழரான மார்சியஸ் டர்போவை ஞானத்தந்தையாகக் கொண்டு தீட்சை பெற்றேன். எந்தச் சாளரப்பலகை கீழிருந்து மதச்சடங்கின்படி இரத்தத்தால் குளிப்பாட்டப்பட இருந்தேனோ அதனை எந்த நேரமும் சரிந்து விழச்செய்யலாம் என்பதுபோல இறக்கும் தறுவாயில் இருந்த காளையின் எடையை இப்போதும் மறந்தவனில்லை. அண்மை காலத்தில், ஒரு பலவீனமான அரசனின் கீழுள்ள நாட்டிற்கு இதுபோன்ற ரகசிய சமூக அமைப்புகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் பற்றி நான் யோசித்தின் விளைவாக, இத்தகைய சமய வழிபாட்டு முறைகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஆனால் தங்கள் அடியார்களுக்கு பகைவர்களை எதிர்கொள்ள போதுமான தெய்வீக பலத்தை இவ்வகை சமயப் பிரிவுகள் வழங்குகின்றன என்கிற உண்மையையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு மனிதனும் மானுடவாழ்க்கையின் குறுகிய வரம்புகளிலிருந்து தப்பிப்பதாக நினைக்கிறான், ஒரே நேரத்தில், தன்னிடம் எதிரியையும் தன்னையும் ஒரு சேர காணும் உணர்வுக்கு ஆட்பட்டு இறை நிலைக்குத் தள்ளப்படுகிறான். அதன்பின் மிருகமோ மனிதனோ எந்தவடிவில் அவன் கொல்லப்பட்டாலென்ன, தெரிந்து கொள்ளும் அவசியம் அவனுக்கில்லை. தத்துவவாதி ஹெராகிளிட்டஸின்(Héraclite) அம்பு மற்றும் இலக்கின் அடையாளம் குறித்த கோட்பாடுகளிலிருந்து அதிகம் வேறுபடாத இமாதிரியான வினோதமான கனவுகள், தற்போதும்கூட சில சமயங்களில் என்னை பயமுறுத்துகின்றன. எனினும் அவை நம்முடைய உயிர்வாழ்க்கையைச் சகித்துக்கொள்ள பெரிதும் உதவுகின்றன. ஒரு பகற்பொழுதின் வெவ்வேறு சூரியக் கதிர்கள்போல வெற்றியும் தோல்வியும் பின்னிப்பிணைந்தவை, ஒன்றுடனொன்று குழப்பமாக கலந்தவை. என்னுடைய குதிரையின் குளம்படிகளில் நசுக்கப்பட்ட டேசியன் காலாட்படை வீரர்களிடமும், பின்னர் குதிரைகளின் இருக்கைகள் ஒன்றோடொன்று விலாவில் உரச வாளோடு வாள் மோத சண்டையிட்டு தூக்கியெறியபட்ட சர்மதியன்(Sarmate)34 குதிரைப்படை வீரர்களிடமும் என்னை அடையாளப்படுத்த முடிந்ததால் அவர்களைத் தாக்குவது எளிதாக இருந்தது. போர்க்களத்தில் கைவிடப்பட்டநிலையில், ஆடையின்றிருந்த என் உடலுக்கும், பிறவற்றுக்கும் எவ்விதவித்தியாசமுமில்லை. அவ்வாறே வாள்வீச்சில் கடைசியாக நானுற்ற அதிர்ச்சிக்கும் பிறர் அடைந்த அதிர்ச்சிகளிலிருந்து வேறுபட்டதில்லை. என் வாழ்க்கையின் பெரும்பாலான ரகசியங்களுள் இவையும் அடக்கமென சொல்லக்கூடிய அசாதாரண சிந்தனைகளை, இதுபோன்ற வினோதமானதொரு மயக்க வகையை வேறெங்கும் ஒருபோதும் உணர்ந்ததில்லை என்கிற அனுபவங்களை உன்னிடம் இங்கு மறைப்பதில் நியாயமில்லை.
.
தொடரும்…..
———————————————————————————-
பிற்குறிப்புகள் ….
30. ஒடெஸ்ஸோஸ் (Odessos) இன்றைய உக்ரைனின் பண்டைய நிலப்பகுதி.
31. எரட்டோஸ் தெனீசு – Eratos thène (BC 276 – BC194) – பண்டைய கிரேக்க வானியல், புவி இயல், த த் துவம் மற்றும் கணிதவியல் மேதை.
32. லாட்சியும் (Latium) ரோம் அடங்கிய இத்தாலியின் மத்தியப் பகுதி.
33. டேசியர் – Daeces- கீழை டானுப் (Bas – Danube) பழங்குடி மக்களுக்கு ரோமானியர் சூட்டிய பெயர்.
34. பார்சீக குதிரைப்படையினர்