- ஜெயந்தி சூரம்மா & தேவமணி சத்யநாதன்
- மல்லவரபு சுப்பம்மா, வேமூரி ஆண்டாளம்மாள், வேங்கட செல்லாயம்மா & காஞ்சனபல்லி கனகாம்பா
- புலவர்த்தி கமலாவதி தேவி எழுதிய ‘குமுத்வதி’ வரலாற்று நாவல்
- பிராட்டம்மா எழுதிய நாவல் ‘சோபாவதி’
- ஆ. ராஜம்மா எழுதிய நாவல் சம்பகமாலினி
- அயிதம் இந்திரா, பாரதி தேவி, காவேரிபாய், தேவமணி சத்யநாதன்
- மல்லாதி வசுந்தராதேவி எழுதிய நாவல் தஞ்சாவூர் பதனம்
- மாலதி சந்தூர், ரேணுகா தேவி
- கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம்
- ஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு
- வட்டிகொண்ட விசாலாட்சி
- நிஷ்காம யோகி நாவல்
- வட்டிகொண்ட விசாலாக்ஷி-2
- காலாதீத வ்யக்துலு – டாக்டர். பி. ஸ்ரீதேவி
- காலாதீத வ்யக்துலு என்ற நாவல் – டாக்டர். பி. ஸ்ரீதேவி
- காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள்
- தென்னேட்டி ஹேமலதா
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

மாலதி சந்தூரின் நாவல்கள் மொத்தம் 27 என்பது ஒரு கணக்கு. (ஓல்கா, நவலாமாலதீயம், ஜூலை, 2006). அவற்றில் 17 நாவல்கள் 1955 லிருந்து 70 வது தசாப்தம் முடிவு வரை 25 ஆண்டு காலத்தில் வந்தவை. மீதி உள்ள பத்து நாவல்களில் ஒன்பது நாவல்கள் பற்றி அறிய முடிகிறது. சிசிரவசந்தம் என்ற நாவலின் வெளியீட்டுக் காலம் தெரியவில்லை. இந்த ஒன்பது நாவல்களில் சதாப்தி சூரீடு என்ற நாவலைத் தவிர மீதி உள்ளவை எண்பதாவது தசாப்தத்தில் வந்த நாவல்கள். நமக்குத் தெரியவராமல் உள்ள அந்த 27 வது நாவல் 1950 வது தசாப்தத்தில் மேலும் ஆறு பெண் எழுத்தாளர்களுடன் சேர்ந்து எழுதிய சங்கிலித் தொடர் நாவல் சப்தபதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சில இடங்களில் அவருடைய நாவல்களின் வரிசையில் தென்படும் கௌதமீபுத்ரி என்ற நாவலாக இருக்க வேண்டும்.
எண்பதாவது தசாப்தத்தில் முதல் பாதி என்பது அகில இந்திய பெண்கள் தசாப்தத்தின் இரண்டாவது பகுதி (1975 -1985). இரண்டாவது பாதி தெலுங்கு நாட்டில் பெண்ணிய சைதன்யப் புரட்சி மலர்ந்த காலம். தொடக்கத்திலிருந்தே பெண்களின் சைதன்ய வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையம்சத்தை வடிவமைத்து வந்த மாலதி சந்தூர் எதனாலோ பெண்ணிய இலக்கிய இயக்கத்தில் அவ்வளவு ஈடுபாட்டோடு பங்கு பெற்றதாகத் தெரியவில்லை. அவர் ஏற்கெனவே அதே வழியில் தான் இருப்பதாக நினைத்தது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் கேன்சர் நோயால் தாக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மையப்பொருளாக கொண்டு எழுதிய சிசிரவசந்தம் என்ற நாவலில் பெண்ணியம் பற்றிய கருத்துக்கள் வருவதைக் கவனிக்கலாம். (சுஜாதாரெட்டி, நவலாமாலதீயம்). அதைக்கொண்டு இந்த நாவல் 90 வது தசாப்தத்தில் வந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் சர்வ சாதாரணமாக இலக்கியப் பொருளாக உள்ளது. அவரவர்களின் தனிப்பட்ட குணங்கள், பண்பாட்டு நிலை, குலம், செல்வம் முதலானவற்றோடு சேர்ந்து அது பல வேறுபட்ட வடிவங்களில் வெளிப்படுகிறது. அதனால் காதல் என்ற உணர்வு ஒன்றேயானாலும் கதைகள் பல. விளைவுகளும் பிரத்யேகமானவையே. எழுபதாவது தசாப்தத்தில் வெளிவந்த லாவண்யா, மேகாலமேலிமுசுகு, ஏதி மார்க்கம் ஏதி கம்யம் போன்ற நாவல்களைப் போலவே மதுர ஸ்ம்ருதுலு (1983) நாவலிலும் அப்படிப்பட்ட ஒரு ஈர்ப்பு, காதல் போன்றவற்றின் பரிணாமங்களே சித்தரிக்கப்பட்டன. ஆனால் அது சோகச் சாயல் கொண்ட நாவல். இந்த தசாப்தத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு, அன்பு ஆகியவற்றைக் கதைப்பொருளாக கொண்டு வெளிவந்த மேலும் இரண்டு நாவல்கள் கற்பூர பராகம் (1982), வைசாகி (1986).
வைசாகி என்ற நாவல்
வைசாகி என்ற நாவல் விசாகப்பட்டினத்தில் ஒரு மருத்துவ மாணவியின் காதல் கதையை விவரிக்கிறது. விசாகாவைச் சேர்ந்த பெண் என்பதால் நாவலின் பெயர் வைசாகி என்றானது. அது மட்டுமல்ல அவளுடைய காதல் கதை விசாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள காடுகளில் பரவிய புரட்சி போராட்டத்தின் தொடர்போடு வளர்ந்ததால் வைசாகி என்ற பெயர் இதற்கு பொருத்தமாகவே உள்ளது.
நிருபமா மருத்துவப் படிப்பில் மூன்றாம் ஆண்டு மாணவி. மழைபெய்த ஒரு இருண்ட இரவு நேரத்தில் பேருந்துக்காக எதிர்பார்த்து காத்திருந்தாள். அப்போது ஆயுதம் தாங்கிய புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயப்பட்டதால் சிகிச்சை அளிப்பதற்காக நிருபமாவை ஜிப்பில் ஏற்றி அழைத்துச் செல்வதோடு நாவலின் கதை ஆரம்பமாகிறது.
மூன்று நான்கு நாட்கள் அவர்களோடு இருக்க வேண்டிய வந்ததால் அவர்களுடைய சாகசத்தின் மீது ஒரு ஈர்ப்பும், தான் சிகிச்சை அளித்த இளைஞனின் மீது ஒரு அன்பும் ஏற்பட்டு காட்டில் ரகசிய வாழ்க்கை வாழ்வதின் மீது அவளுக்கு ஆர்வம் வளர்கிறது. அவ்வாறு இருக்கையில் போலீசாரின் ரெக்கார்டுகளில் இடம்பிடித்து, இனி விசாகப்பட்டினத்தில் இருப்பது கஷ்டம் என்று தீர்மானித்து ரெட்டியோடு மதராசுக்குச் செல்வதால் அவளுடைய வாழ்க்கையில் எதிர்பார்க்காத திருப்பம் வந்தது. அங்கு நர்சாக ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்த போது ஒரு போலீஸ் ஆபீசரோடு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ஏற்பட்ட மாற்றங்களால் மீண்டும் அவள் விசாகப்பட்டினம் சென்று நடுவில் நிறுத்தி விட்ட டாக்டர் கோர்ஸை பூர்த்தி செய்யும் வாய்ப்புக்கு வழி ஏற்படுவதோடு நாவல் முடிகிறது.
இந்த நாவலில் நிருபமாவுக்கும் ரெட்டிக்கும் இடையே காதல் வெறும் கற்பனையே. புரட்சி வாழ்க்கையின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு என்பது மிகவும் பலவீனமான காரணம். புரட்சி தள போராட்டங்களின் கட்டமைப்பு, அர்ப்பணிப்பு போன்றவை பற்றிய சரியான செய்தியோ புரிதலோ இல்லாமலே எழுத்தாளர் அதனை நாவலின் கதையம்சத்தில் ஒரு பகுதியாகச் சேர்த்துள்ளார்.
புரட்சி தளத்தில் வாழ்ந்த ரெட்டியை கடத்தல்காரனாக மாற்றி ஒரு போலீஸ் ஆபீசரின் கதாபாத்திரத்தை அதில் புகுத்தி உண்மையான காதல் தன்னுடையவர்களின் அழிவுக்குக் காரணமாகக் கூடிய அவசரச் செயல் அல்ல என்று நிரூபிக்கிறார். ஆதரிசமோ ஆவேசமோ அன்றி தனிமனித ஆளுமையும் பொறுப்புகளும் காதலை உயிரோடு வைத்திருக்கும் என்று எழுத்தாளர் கூறாமலே கூறுகிறார்.
கற்பூர பராகம் (கற்பூர மகரந்தம்) என்ற நாவல்
திருமணம் என்பது மனிதனின் சுதந்திரத்திற்கு கட்டப்படும் நிரந்தரமான சமாதி என்றும் உத்தியோகம் என்பது தனிமனித ஆளுமைக்கு முதல் படி என்றும் நம்பி பெற்றோரை சம்மதிக்கச் செய்து மதராஸில் பள்ளி ஆசிரியை உத்தியோகத்தில் சேர்ந்த வசந்தா, தன் தோழி சுஜாதா மூலம் சங்கர்ராவ் என்ற பரிச்சயம் இல்லாத மனிதனிடம் ஏற்பட்ட ஆர்வத்தால் அவனைத் தேடி கண்டுபிடிப்பதும் சஞ்சலத்திற்கு உள்ளாவதும் சன்னியாச தீட்சை எடுத்துக் கொள்வதற்கு தயாராக இருந்த அவனுடைய மனதில் நெருக்கடி ஏற்படுவதற்குக் காரணமாவதும், தான் இல்லாவிட்டால் வாழ முடியாத அவனுடைய நிலைமை புரிந்ததும் அவனுக்காக தன்னில் கூட ஒரு ஏக்கம் உள்ளது என்று புரிந்து திருமணத்திற்கு தயாராவதும் கற்பூர பராகம் என்ற நாவலின் கதையம்சம்.
சங்கர்ராவின் இயல்பு பற்றியும் அவனிடம் கொண்ட தன் காதல் பற்றியும் சுஜாதா கூறிய கதையின் மூலம், அவன் இளம்பெண்கள் விரும்பும் மணவாளன் என்ற புரிதல் வசந்தாவுக்கு ஏற்பட்டது. ஒருவேளை அதுவே அவனை தேடிச் சென்று அறிமுகம் செய்து கொள்வதற்கும் அவனிடம் சிரத்தை காட்டுவதற்கும் காரணமாகி இருக்கலாம். தானாக அறிந்து கொண்ட இளைஞன் ஆனதால் திருமணத்திற்கு எந்த தடையும் இல்லாமல் போனது. ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்து கொள்ளும் விவேகமும் முடிவு எடுக்கும் பொறுப்பும் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இயல்பான ஆர்வத்திலிருந்து எழும் ஈர்ப்பு, காதல் என்ற பெயரோடு தொடர்பு இல்லாமலே சேர்ந்து வாழ்வதற்கான விருப்பமாக மாறக் கூடியது என்று கூறுவது எழுத்தாளரின் நோக்கமாகத் தெரிகிறது.
கலல வெலுகு (கனவுகளின் வெளிச்சம்) என்ற நாவல்
இந்த தசாப்தத்தில் வந்த மற்றுமொரு நாவல் ‘கலல வெலுகு’. க்வாலிடி பப்ளிஷர்ஸ் 2010 ல் பதிப்பித்த பிரதி கிடைக்கிறது. ஆனால் 1986 ல் இதே பதிப்பகத்தார் பதிப்பித்த வைசாகி நாவலின் உட்பக்கத்தில் மாலதி சந்தூர் எழுதிய நாவல்களின் வரிசையில் இந்த நாவல் கூட உள்ளது. அதனால் இதை எண்பதாவது தசாப்தத்தின் நாவலாக அறிய முடிகிறது. ரேணுகாதேவி ஆத்மகதா என்ற நாவலைப் போலவே இதுவும் திரைப்படத் துறையோடு முடியிடப்பட்ட நாவல். காதலைப் பற்றி கனவு காண்பதைத் தவிர ஆண் பெண் இருவரின் திருமண வாழ்க்கையிலோ, சகஜீவனமாக ஒன்றாக சேர்ந்து வாழ்வதிலோ காதலை உண்மையாக அனுபவத்தில் எடுத்து வரக்கூடிய சமுதாயச் சூழ்நிலை இல்லை என்று இந்த நாவலின் கதையம்சத்தில் நிரூபித்துக் காட்டுகிறார் மாலதி சந்தூர் (அக்கினேனி குடும்பாராவு, நவலாமாலதீயம்).
காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் பரஸ்பர விருப்பத்தோடு தொடர்புடைய விழுமியம் என்றால், திருமணம் என்பது ஒரு சமுதாய உறவு, பொறுப்பு, பாதுகாப்பு. இந்த இரண்டிற்கும் இருக்கும் தொடர்பு மூலமாகவே வாழ்க்கை உயர்வாகவும் மனிதாபிமானத்தோடு கூடியதாகவும் ஆகிறது. ஆனால் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சமுதாயத்தில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. திருமணத்திற்கு காதல் அஸ்திவாரமாக இருக்க வேண்டும் என்ற கருத்தே காலாவதியாகிவிட்ட நம் கலாச்சாரத்தில் திருமணம் என்பது வம்ச பாரம்பரியத்தை நிலைநாட்டுவதற்கு ஏற்பட்ட அமைப்பு என்பது தீர்மானமாக உள்ளது. அந்த வகையில் திருமணம் என்றால் ஆணுக்கு சுகத்தை அளிக்கும் ஒப்பந்தம். இந்த நாவலில் ராமச்சந்திரம் அந்த சுகத்திற்காகவே திருமணம் செய்து கொள்கிறான். திருமணத்தில் சுகம் என்றால் ஆணுக்குப் பாலுறவு திருப்தியை அளித்தபடி குழந்தைகளைப் பெற்று வளர்த்து அவனுடைய தேவைகளை நிறைவேற்றி, வீட்டு வேலைகள் செய்து சுவையாக சமைத்துப் போடும் மனைவி கிடைப்பது. ராமச்சந்திரத்திற்கு அந்த சுகம் முழுவதுமாக கிடைக்கவில்லை. பெண்களுக்கு சுகமும் சந்தோஷமும் அளிக்கும் தர்மம் என்பது கணவனை சுகமடையச் செய்வதே. ஆனால் ராமச்சந்திரம் திருமணம் செய்து கொண்ட ரமணம்மாவுக்கு சுகம் என்றால் சிக்கனமாக சம்சாரம் செய்தபடி கணவனின் சம்பாதனையைச் செல்வமாக மாற்றுவதே. அதற்கு முடிவுமில்லை. திருப்தியுமில்லை. அன்பு, காதல் என்ற பேச்சுக்கு இடமில்லாமல் நடக்கும் தாம்பத்தியம் அது.
கேமராமேன் ராமச்சந்திரத்தின் மனதைக் கவர்ந்து அவனுடைய அன்பைச் சம்பாதித்து சினிமாவில் வாய்ப்புகள் பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு அவனுடன் நெருங்கிப் பழகும் பத்மலதா, அந்த நோக்கத்தையே மறந்து ஒரு பாதுகாப்பையும் கௌரவமான வாழ்க்கையையும் விரும்பி இராமச்சந்திரத்தோடு இணைந்து வாழும் சகஜீவனத்தில் திருப்தியைத் தேடிக் கொள்ளும் நிலையில் திருமணம் இல்லாமலேயே அடங்கி இருந்து தன்னைத்தான் முழுமையாக சமர்ப்பித்துக்கொண்டு அனைத்து சேவையையும் சுகத்தையும் அளிக்கும் மனைவியின் தர்மத்தைக் கடைப்பிடிக்கிறாள். இங்கும் காதலுக்கு இடமில்லை. காதல் இல்லாத உறவில் சட்டப் பாதுகாப்பு கூட இல்லாத போது அது அந்த பெண்களின் வாழ்க்கையை எத்தகைய கொடுமைக்கும் உதவியற்ற நிலைக்கும் ஆளாக்குகிறது என்பதை பத்மலதாவின் வாழ்க்கையில் பார்க்க முடிகிறது.
பூமி புத்ரி என்ற நாவல்
இதே தசாப்தத்தில் வெளிவந்த மற்றுமொரு நாவல் பூமி புத்ரி. ஒரே மூச்சில் படிக்க வைக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை முறை இந்த நாவலில் ஆதியோடு அந்தம் விஸ்தாரமாகத் தென்படுகிறது. தந்தை மரணித்து வேறு வழியில்லாமல் தாயோடு கூட பெரியப்பாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்த துர்காவின் இருப்புக்கான ஏக்கம், வாழ்க்கைக்கான போராட்டம், தானாகவே முன்னேறிய விதம் போன்றவை இந்த நாவலின் கதையம்சம்.
பெரியப்பா வீட்டில் படிப்பு எழுத்து என்று ஒன்றும் இல்லாமல் தாயோடு கூட அடிமையாக வேலை செய்ய வேண்டி வந்தாலும் இறுதியில் தாய் மரணம் அடைந்து தனித்து விடப்பட்டாலும் துக்கத்திற்கு அப்பாற்பட்டு தன்னுடைய வேலையை தான் செய்து கொண்டு போகும் சுபாவம் துர்காவுடையது. எதற்கும் குன்றிப் போகாமல் வானம் வரை எழும்பி வாழ்க்கையின் சுக துக்கங்களை சமமாக நிலை நிறுத்திக் கொள்ளும் தனித்தன்மை கொண்ட குணம் அவளுடையது. அந்த இயல்பே அவளை பெரியப்பாவின் வீட்டை விட்டு டவுனில் படித்துக் கொண்டிருந்த அத்தானிடம் வந்து அவனைத் திருமணம் செய்து கொள்வதற்கும் அவனுக்கு தான் பாரமாக உட்கார்ந்திருக்காமல் அவனுடைய படிப்பு நல்லபடியாக தொடர்வதற்கு சிறியதாக இருந்தாலும் தொய்வில்லாமல் அவ்வப்போது படைப்பூக்கத்தோடு முயற்சி செய்கிறாள். அந்த வகையில் அனைவருக்கும் வேண்டியவளாக ஆகி வாழ்க்கையை படிப்படியாக கட்டமைத்துக் கொள்கிறாள். வாழ்வதற்கான உந்துசக்தியாகவும் விளங்குகிறாள்.
“நானும் சில வேலைகளை திறமையோடு செய்யக்கூடியவள்தான். எனக்கும் தனித்தன்மை உண்டு” என்று நிரூபித்துக் கொள்ளும் தவிப்போடு கோலம் போடுவதில் தன் திறமையை பெரியப்பா வீட்டு வாயிலில் வெளிப்படுத்தி திருப்தியடைகிறாள். அதே போன்ற உற்சாகமும் ஊக்கமும் அவளுடைய வாழ்நாள் முழுவதும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது.
அச்சப்படாமல் விடியற்காலையில் துயிலெழும் சுதந்திரத்தையும், நேரத்தை தன் இஷ்டப்படி பயன்படுத்திக்கொள்ளும் சுதந்திரத்தையும் போராடி சாதித்துக் கொண்ட துர்காவின் தனி ஆளுமைச் சைதன்யம் இந்த நாவல் முழுவதும் விரிந்து காணப்படுகிறது.
நேர்மையோடு கூடிய தன்னம்பிக்கை அவளுக்குச் சொந்தம். எந்த ஆசையும் இல்லாமல், என்னுடையது என்ற பொருள் எதுவும் இல்லாமல், வாழ்வதில் எதிர்ப்படும் கஷ்டத்தைக் கூட காலால் உதைத்துத் தள்ளி வாழ்வின் மீது கொண்ட நம்பிக்கையோடு கூடிய தைரியம் துர்காவை நேர்மறை ஆற்றலைப் பரப்பக் கூடியவளாகவும் சூழலை ஒளிமயமாக செய்யக்கூடியவளாகவும் நிலைநிறுத்தின. அந்த ஆளுமையில் இருந்து வாசகர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விழுமியங்கள் நிறைய உள்ளன. (ஜலந்தரா, நாவலா மாலதீயம்).
ஹ்ருதய நேத்ரி என்ற நாவல்
மாலதி சந்தூரின் நாவல்களில் கதைகள் பெரும்பாலும் மதராசு மாநகரத்திலேயே நடக்கின்றன. சில கதைகள் ஆந்திர தேசத்தில் ஆரம்பமானாலும் ஊர்களின் பெயர்களை கட்டாயமாகக் குறிப்பிடுவது என்பது குறைவே. பூமி புத்ரி நாவலை எடுத்துக் கொண்டால் ‘மா ஊரு, மன ஊரு, வேறே ஊரு…’ போன்ற குறிப்புகள் இருக்குமே தவிர உண்மையில் கதை நடக்கும் ஊரின் பெயரை எங்கும் கூறாமல் போவதை கவனிக்க முடிகிறது. கதை நடக்கும் ஊர்களின் பெயர்களைக் குறிப்பிடப்படும் சந்தர்ப்பங்களில் கூட பெரும்பாலும் அவை மதராசையே சென்றடைகின்றன. செம்பகம் – செதபுருகுலு நாவலில் இருந்து வைசாகி நாவல் வரை அனேக நாவல்களில் இந்த வழிமுறையே தென்படுகிறது.
இவருடைய கதைகளில் வாழ்க்கையின் ஓட்டம் இருக்குமே தவிர கதைக்கும் கால இயக்கத்திற்கும் தொடர்பு குறைவு. இதற்கு முழுவதும் விதிவிலக்கு ஹ்ருதய நேத்ரி என்ற நாவல்.
இந்த நாவலில் கதை சீராலாவுக்கு நான்கைந்து மணி நேரம் ரயில் பிரயாண தூரத்தில் இருக்கும் கிராமத்தில் தொடங்கி சீராலா, பெஜவாடா, பந்தர், ராஜமன்ட்ரியின் அருகில் உள்ள சீதாநகரம் ஆஸ்ரமம், ஏலூரு, குண்டூரு, காசி, மதராஸ், போபால் (வார்தாவுக்கு அருகில்) ஆகிய இடங்களில் நடந்து, சீராலாவுக்குச் சென்று முடிகிறது. சீராலா- பேராலா வரி நிராகரிப்பு போராட்டம், பெஜவாடா காங்கிரஸ், காகிநாடா காங்கிரஸ், தண்டி யாத்திரை, சைமன் கமிஷன் புறக்கணிப்பு, தனிமனித சத்தியாகிரகம், தேச சுதந்திரம், காந்தியின் நவ்காலி யாத்திரை, காந்தி மரணம் போன்ற தேசிய விடுதலைப் போராட்ட சம்பவங்களை கதையம்சத்தில் ஒரு பகுதியாக்கி கதையை நடத்தி, நக்சல்பாரி இயக்கத்தையும் எமர்ஜென்சி காலத்தையும் கூடக் கலந்து இந்திரா காந்தியின் கொலை வரை சமகால அரசியல் மாற்றங்களையும் தொட்டபடி இந்த நாவலை முடிக்கிறார் மாலதி சந்தூர்,
அவ்விதமாக 1921ல் இருந்து 1984 வரை ஆறு தசாப்த காலத்தில் நிகழ்ந்த இந்திய அரசியல் மற்றும் பொருளாதார பரிணாமங்கள், கோபாலம் என்ற தனிமனிதனின் வாழ்க்கையை எவ்வாறு கட்டுப்படுத்தி தீர்மானித்தன என்பதை இந்த நாவல் தெரிவிக்கிறது. இன்னொரு விதமாகக் கூற வேண்டுமென்றால் கோபாலம் என்ற தனிமனிதனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களையும் வாழ்க்கை பற்றிய அவனுடைய கண்ணோட்டத்தையும் மையமாகக் கொண்டு ஆறு தசாப்த கால இந்தியாவின் அரசியல் பரிணாமங்களையும் விழுமியங்களையும் பிரதிபலிக்கிறது ஹிருதய நேத்ரி நாவல் (சிங்கிமநேனி நாராயணா, நவலா மாலதீயம்).
அத்தை ராமலக்ஷ்மம்மாவின் ஆலோசனை, அறிவுரை, அவளுடைய கணவரின் ஆதரிசங்கள், நடத்தை போன்றவற்றால் சிறுவயதிலிருந்தே பெற்ற உற்சாகம் வழி நடத்தியதால் சுதந்திரப் போராட்ட அரசியலில் இணைந்த மனிதன் கோபாலராவு. காந்தியின் தலைமைப் பண்பின் மீது அபார நம்பிக்கை கொண்டவன். பாரதத்தாயின் சுதந்திரத்திற்கான தவிப்பு, தேசியர்களின் சுதந்திரத்திற்கான ஏக்கம், வீட்டில் பெற்றோரோடும் மனைவியோடும் சேர்ந்து தன் சுகமும் சந்தோஷமும் போதும் என்று இருக்காமல் அவனுடைய வாழ்க்கையின் மார்க்கத்தை நிர்ணயித்தன. அதன் பலனாகக் கிடைத்தவை கைதும், சிறை தண்டனையும். அவனுடைய ஆதர்சமும் ஏக்கமும் குடும்பத்தினரின் கண்ணோட்டத்தில் பொறுப்பற்றவையாகத் தோன்றுகின்றன. விடுதலை கிடைத்த பின், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அரசாங்கம் அளித்த நிலத்தை நிராகரிப்பதாலும் தேர்தலில் நின்று அதிகாரம் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டாததாலும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத அசடாக அவன் நிந்தைக்கு உரியவனாகிறான்.
மாலதி சந்தூர் எழுத்தாளராக தேசியத்தை எவ்வாறு வரையறை செய்கிறார் என்பது கேள்வி. இந்த நாவல் முக்கியமாக கோபாலராவின் அனுபவங்களின் கதையே ஆனாலும் இதில் சுதந்திர போராட்டத்திற்கு பலமான பிரதிநிதி பாத்திரம் ராமலக்ஷ்மம்மா மட்டுமே. அவளுடைய தாக்கமும் வழிகாட்டுதலும் இல்லாவிட்டால் கோபாலம் இல்லை.
அதனால் தேசியம் குறித்து நாவலாசிரியையின் ஆதரிசத்தை ராமலக்ஷ்மம்மாவின் பேச்சு மூலமும் நடத்தை மூலமும் தேட வேண்டும். “சுயராஜ்ஜியத்தால் மட்டுமே சுதந்திரம். குலம், மதம், ஆண், பெண் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயம் கிடைக்கும். நம் தேசத்தை நாம் ஆண்டு கொள்ளலாம். மக்கள் அனைவருக்கும் உணவும் உடையும் கிடைக்கும். தரித்திரம் இருக்காது. குழந்தைகள் சுதந்திரமாகவும் தைரியமாகவும் வளரலாம். ஒவ்வொருவருக்கும் இஷ்டம் வந்த விதமாக வாழத் தெரிய வேண்டும்”. இவ்விதமான ராமலக்ஷ்மம்மாவின் எண்ணங்களில் மக்களை ஒன்றிணைத்து நிலைநிறுத்தும் அடிப்படை அம்சங்கள் உள்ளன.
இவை நன்றாக தலைக்கு ஏறியதன் காரணமாகவே கோபாலம் குடும்பத்தில் இணைய முடியாமல் போகிறான். காந்தி எந்த ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை ஆசைப்பட்டாரோ அந்த ஹிந்து முஸ்லிம் பிரிவினையாலையே சுதந்திரம் வந்தது. நம் தேசத்தை நாம் ஆள்வது என்பது பணமுள்ளவர்களும் பணத்தை செலவழிக்க முடிந்தவர்களும் அதிகாரத்தைக் கைப்பற்றி அரியணை ஏறுவதும் தன்னலமும் சுயநலமும் முக்கியத்துவம் பெறுவதுமாக நடத்தையில் மாற்றம் அடைவதைப் பார்க்கிறான் கோபாலம். அதனால் சுதந்திரம் கிடைத்தாலும் சந்தோஷம் அடைய முடியாமல் போகிறான். அதிகாரத்தில் தானும் பங்கு வகிப்பதை ஏற்க முடியாமல் போகிறான். அதிகார அடிமைத்தனமும் சம்பிரதாய அடிமைத்தனமும் சற்றும் அசைந்து கொடுக்காமல் போவதை கவனித்து மௌனத்தில் ஆழ்ந்து விடுகிறான்.
1947 ல் சுதந்திரம் வந்த போது கோபாலத்தின் மகன் ஸ்ரீனிவாஸ் பன்னிரண்டு, பதின்மூன்று வயது சிறுவன். அதாவது 1935ல் பிறந்திருப்பான். அவன் பி.ஏ பாஸ் செய்ததைப் பற்றிய குறிப்பு நாவலில் உள்ளது. ஐந்தாவது வயதில் கல்வி கற்கத் தொடங்கினால் பி.ஏ படித்து முடிப்பதற்கு 15 அல்லது 16 ஆண்டு காலம் ஆகும். அதனால் 1955ல் 20 வது வயதில் அவனது படிப்பு முடிந்திருக்கும். அவன் மேற்படிப்பு படிக்கவில்லை. உத்தியோகமும் செய்ய வில்லை. எங்கெங்கோ போகிறான். எப்போதோ வருகிறான். உண்மையில் காணாமலே போகிறான். சில நாட்களுக்குப் பிறகு, “என் இலட்சியத்தை அடைவதற்காக போராடுகிறேன். என்னைத் தேட வேண்டாம்” என்று ஒரு கடிதம் எழுதுகிறான்.
கோபாலம், தன் மனைவி எடுத்தெறிந்து பேசுவதும் குத்தி காட்டுவதும் பொறுக்க முடியாமல் ஊரை விட்டு விலகி வார்தாவில் வினோபா ஆசிரமம் பதிப்பகத்தில் பணியில் சேர்கிறான். மீண்டும் மூன்றாண்டுகள் கழித்து மனைவியின் உடல்நிலை கவலைக்கிடம் என்று தந்தி வந்ததும் வீட்டுக்குத் திரும்ப வருகிறான். வந்தபோது ஸ்ரீநிவாஸின் கடிதத்தைப் பார்க்கிறான். பேத்தியை வளர்க்கும் பொறுப்பு கோபாலத்தின் மேல் விழுகிறது.
ஸ்வராஜியத்தோடு கூட சமத்துவம் வரவில்லை என்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஓட்டு உள்ள தேசத்தில் ஒவ்வொரு மனிதனும் வயிறு நிரம்ப உணவுண்டு உடலை மறைக்கத் துணியுடுத்தும் சூழ்நிலை இல்லை என்றும் தேசமெங்கும் லக்ஷக்கணக்கான ஏழைகளின் பசியும் சிரமஜீவிகளின் கூக்குரல்களும் வேதனையை ஏற்படுத்துகின்றன என்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை வர்க்க போராட்டத்தால் அன்றி திட்டங்களால் வெற்றிகொள்ள முடியாது என்றும் அதனால் துப்பாக்கியை ஆயுதமாக தேர்ந்தெடுக்கிறேன் என்றும் தன் துணைவி கூட தன்னோடு அந்த மார்க்கத்திலேயே பிரயாணம் செய்கிறாள் என்றும் கூறி, தன் மகளை வளர்த்து ஆளாக்கும்படி வேண்டி எழுதிய கடிதம் அது.
1956, 1957 க்கு இடைப்பட்ட காலத்தில் அவன் வீட்டை விட்டுச் சென்று ஆயுதப் போராட்ட வழியில் பிரயாணம் தொடங்கினான் என்று தெரிகிறது. 1947 ல் கிடைத்த விடுதலையால் தெலங்காணாவில் விவசாயிகளின் ஆயுதப் போராட்டங்கள் நிறுத்தப்பட்டபின் ஆந்திராவில் கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்கொண்ட நெருக்கடியிலிருந்து ஸ்ரீகாகுளம் கிரிஜனப் பிரதேசங்களில் மக்களின் ஒத்துழைப்பை அடித்தளமாக விரிவடையச் செய்து கொண்டு நடந்த புரட்சிப் போராட்டத்தோடு சேர்ந்து செய்த பயணமாகவே அது இருக்க வேண்டும். ஆனால் அவன் பங்குபெற்ற இயக்கம், 1967 ல் அதன் தோற்றம், வளர்ச்சி, நக்சல்பாரியின் தொடக்கம் போன்றவை பற்றி எதுவுமே இந்த நாவலில் ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை.
கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு ஸ்ரீனிவாசின் மகள் ஸ்வராஜ்யம் 1960 ல் பிறந்தாள் என்று எடுத்துக் கொள்ளலாம். தாத்தா பத்திரிக்கையில் பணி புரிந்தார். அவருடன் மதராசில் வளர்ந்தாள். இந்திரா காந்தியின் மரணம் பற்றி நாவலில் உள்ள குறிப்பின்படி நாவல் முடியும் போது அவள் 24 வயது இளம் பெண். எம்.ஏ படித்து முடித்து சோஷியல் வொர்க்கில் டிப்ளமோ செய்த பெண். பெண் பார்த்தல், வரதட்சணை, திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே எரிந்து விழுபவள். கல்யாணம் மட்டுமே பெண்ணுடைய வாழ்வின் பரமார்த்தம் அல்ல என்று கூறும் துணிச்சல் உள்ளவள். அநியாயத்தை எதிர்த்து நிற்கக்கூடிய தைரியம் கொண்டவள்.
தாத்தாவின் மீது தாக்கம் ஏற்படுத்திய ராமலக்ஷ்மம்மாவை அவள் பார்க்கவில்லையே தவிர ஜானகம்மாவைப் பார்த்து பேசியிருக்கிறாள். ராமலக்ஷ்மம்மா, மருமகனிடம் கொடுக்கும்படி கூறிய அவள் வீட்டு ஆவணங்களையும் தன்னிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய்களையும் கோபாலத்திடம் கொடுத்து ஏதாவது நல்ல பணிக்கு உபயோகிக்கும்படி ஜானகம்மா கூறிய வார்த்தைகளைக் கொண்டு தன் வாழ்க்கைக்கு நோக்கம் முதியோரில்லம் தொடங்கி நடத்துவதே என்ற நிர்ணயத்திற்கு ஸ்வராஜ்யம் வருவதோடு நாவல் முடிகிறது.
இந்த நாவலில் ஜானகம்மா, சுதந்திரப் போராட்டத்தில் இணைந்து பணி செய்த துவ்வாட சுப்பம்மாவின் மாதிரிப்படிவம் போல் தென்படுகிறாள். தலையை மழித்துக் கொண்ட பால விதவையாக இருப்பது, காந்தியின் போதனைகளால் காங்கிரஸின் அபிமானியாவது, தலையில் கதர்த் துணி மூட்டையைச் சுமந்து சென்று விற்பது, ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் உதவியாக இருப்பது, ஸ்வராஜ்ய நிதிக்கு தன் நகைகளை அளிப்பது, ஒத்துழையாமைப் போராட்டத்தில் சிறை செல்வது, 1923ல் காகிநாடா காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்று வருவது போன்றவை அனைத்துமே சுப்பம்மாவை கருத்தில் வைத்துக்கொண்டு ஜானகம்மா பாத்திரத்தை எழுதி உள்ளதாக எண்ணுவதற்கு வாய்ப்பளிக்கின்றன. எது எப்படியானாலும் சம்பிரதாயத் தளைகளை உடைத்துக் கொண்டு குடும்ப எல்லைகளைத் தாண்டி பெண்கள் திறமையோடு பங்கு பெறுவதற்கு சுதந்திரப் போராட்டம் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது என்பது உண்மை. வம்சத்திற்கு வாரிசுகளாக பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்கும் வீட்டு வேலைக்கும் மட்டுமே என்று வரையறை செய்யப்பட்ட பெண்களின் வாழ்க்கையை சமுதாய, பொருளாதார, அரசியல் விஷயங்களில் தம்முடைய சொந்த ஆலோசனைகளோடும் அபிப்ராயங்களோடும் அர்ப்பணிப்போடும் பணிபுரியக்கூடிய உயர்ந்த நிலைக்கு மாற்றம் செய்வதிலும் சுதந்திர மனிதர்களாக சமுதாயத்தின் மரியாதையைப் பெறுவதற்கு பாத்திரம் ஆகும்படி செய்வதிலும் சுதந்திரப் போராட்டம் எத்தனை உதவியது என்பதை குறிப்பிடுவதற்காகவே இந்த வரலாற்றுக்கு வலிமையான பிரதிநிதிகளாக ராமலக்ஷ்மம்மா, ஜானகம்மா ஆகியோரின் பாத்திரங்களைப் படைத்துள்ளார் மாலதி சந்தூர். அவர்களுக்கு அடுத்த தலைமுறைப் பெண்ணான ஸ்வராஜ்யம் அதைவிடத் திறமையான வளரச்சி கொண்ட, அரசியல், பொருளாதார கண்ணோட்டத்தோடு செயல்திறம் கொண்ட அரங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கையில் அவள் முதியோர் இல்லம் நடத்துவதற்கு கட்டுப்பட்டுப் போவதே வாழ்வின் பெரிய நோக்கம் என்பதாக நாவலை முடித்திருப்பது விசித்திரமாக உள்ளது.
மொழிவாரி மாநிலப் போராட்டங்கள், தனித் தெலங்காணா மாநிலப் போராட்டம், பார்லிமென்ட்ரி பண அரசியல், அரசியல் தலைவர்கள் மற்றும் உத்தியோக வர்க்கங்களில் ஊழல், லஞ்சம், தனியார் கல்வி நிலையங்களின் மேல் வளரும் மோகம் முதலான விஷயங்களின் மீது ஆலோசனைகளும் வாக்குவாதங்களும் அங்கங்கே இந்த நாவலில் தென்படுகின்றனவே தவிர அந்த எண்ணங்களின் தாக்கமும், அதன் பலனாக ஏற்படும் முரண்பாடுகளின் மோதலும் ஸ்வராஜ்யத்திடம் தென்படவில்லை.
ஸ்ரீனிவாஸ் போன்ற இளைஞர்களின் அதிருப்தியும் எதிர்பார்ப்பும் மிகப்பெரும் புரட்சிப் போராட்ட கட்டமைப்பாக மாற்றமடைந்தது. ஆனால் அதன் தாக்கமோ, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு இணையாக சமுதாயத்தில் நெருக்கடிகளுக்கு காரணமாகின்ற தலித் இனப் பெண்களின் பிரச்சனைகளோ போராட்டத்தின் சைதன்யமோ எதுவுமே ஸ்வராஜ்யத்தை எட்டாதது ஏன்?
1975 க்கு பிறகு சர்வதேச மகளிர் தசாப்தத்தில் வடிவமைந்த நவீனகாலப் பெண்களுக்கு ஸ்வராஜ்யம் பிரதிநிதி ஆக முடியாமல் போனது ஏன்? நாவலாசிரியையின் முன்னோக்குப் பார்வை எல்லைகளின் வரையறையே அதற்குக் காரணம் என்று எண்ணலாமா?
சதாப்தி சூரீடு என்ற நாவல்
ஹ்ருதய நேத்ரி நாவலைப் போலவே சதாப்தி சூரீடு என்ற நாவலிலும் கதையம்சம் நீண்ட காலத்தின் மீது விரிகிறது. இதில் கால அளவு நூறு ஆண்டுகள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்த சூரம்மாவுக்கும் நூற்றாண்டின் இறுதியில் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற சௌஜன்யாவுக்கும் இடையில் மற்றும் ஒரு இரண்டு தலைமுறைப் பெண்கள். மொத்தம் நான்கு தலைமுறைப் பெண்களின் வாழ்க்கைப் பரிணாமக் கதையை இந்த நாவல் விவரிக்கிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறைப் பெண்கள். பால விதவை சூரம்மா. அவள் வளர்த்த பெண் கமலா. கமலா பெற்ற மகள் பத்மா. அவளுடைய மகள் சௌஜன்யா. நூறாண்டு கால சமுதாய மாற்றங்கள், சம்பவங்கள், நாட்டின் சரித்திரம் போன்ற எவற்றின் தொடர்பும் தாக்கமும் வெளியில் தென்படாத குடும்பக் கதை இது.
இந்த நாவலில் மாலதி சந்தூர் பிராமண குடும்பத்தில் பிறந்த சூரம்மாவின் வாழ்க்கை மூலம் இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் வாழ்ந்த பால விதவைகளின் வாழ்க்கை நடைமுறைகளையும் அவர்கள் தனிமையில் அனுபவித்த இன்னல்களையும் அனைவரின் தேவைக்கும் கொத்தடிமையாக வேலைசெய்து கடத்த வேண்டிய வாழ்க்கையையும் காட்டுகிறார்.
பிரசவத்தில் இறந்து போன அக்காவின் மகளுக்குப் பிறந்த பெண் குழந்தையை யாருக்கும் பிடிக்காமல் போனபோது அந்த பச்சிளம் சிசுவை அணைத்து சூரம்மா தன் தாய்மை உணர்ச்சிக்கு உயிரூட்ட முன்வருவதில் தொடங்கிய கமலாவுடைய வாழ்க்கையின் மூலம் 20 ம் நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியில் படித்த பெண் என்றாலும் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய திருமணம், எத்தனை அசடாக இருந்தாலும் தீயவனாக இருந்தாலும் கணவனானதால் ஆணுக்கு மனைவியின் மீது கிடைக்கும் அதிகாரம், ஆதிக்கம், அதன் காரணமாக அனுபவிக்கும் ஹிம்சை, அவற்றிலிருந்து விடுதலைக்காக ஏங்கும் ஆளுமைகளின் உருவாக்கம், பொருளாதார சுயசார்பு மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணும் வழியில் மாற்றம் போன்றவை சித்தரிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட தாய்க்கு மகளாகப் பிறந்த பத்மாவின் வாழ்க்கை மூலம் இருபதாம் நூற்றாண்டின் மூன்றாவது கால் பகுதியில் உயர் கல்விக்கும் உத்தியோகத்திற்கும், சமத்துவ விழுமியத்தின் அடிப்படையில் தாம்பத்திய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கும் கிடைத்த வாய்ப்புகளைக் காட்டுகிறார் எழுத்தாளர்.
இனி 1975ல் அடுத்த தலைமுறை சௌஜன்யாவுடையது. அது உலகமயமாக்கும் சந்தர்ப்பத்தில் விரிவாகின்ற தலைமுறை. சூரம்மாவின் வாழ்க்கையை விட கமலாவின் வாழ்க்கை கொஞ்சம் விசாலமானது. ஆனால் இருக்கும் ஊரைத் தாண்டாமலேயே அவள் வாழ்க்கையும் முடிந்து விட்டது. பத்மா படிப்புக்காக ஊரை விட்டு விசாகப்பட்டினம் செல்கிறாள். அவளுடைய மகள் அமெரிக்காவுக்கு பிரயாணம் செய்கிறாள் பெண்களின் வாழ்க்கையில் சமுதாய, பொருளாதார, அரசியல் பரிணாமங்களுக்கு அனுகூலமாக மாற்றங்கள் ஆரம்பித்தன என்று எண்ண வேண்டும்.
எதிர்மறைச் சூழ்நிலையில் வாழ்ந்தும் கூட வாழ்வதற்கும் வாழ்விப்பதற்கும் சூரம்மா போன்ற பெண்களின் அப்பாவித்தனமும் கருணையும் நிறைந்த செயல் உற்சாகமே ஒரு ஊக்கமாக வழிவழியாக தலைமுறைகளுக்கு அளிக்கப்படுகிறது என்ற குறிப்பு இந்த நாவல் முழுவதும் தென்படுகிறது.
இவ்வாறு மாலதி சந்தூர் சொந்தமாக நாவல்களை எழுதியதோடு கூட சுவாதி பத்திரிகையில் பாத்தகெரடாலு என்ற தலைப்பின் கீழ் முன்னூற்றைம்பது ஆங்கில நாவல்களை அறிமுகம் செய்துள்ளார். அவை முன்னர் பாத்தகெரடாலு என்ற பெயரோடே பிரசுரமாயின. அது இப்போது 160 உள்நாட்டு வெளிநாட்டு மொழி நாவல்களின் அறிமுகம் – நவலா மஞ்சரி என்ற பெயரில் ஆறு தொகுதிகளாகக் கிடைக்கிறது. உலக நாவல் இலக்கியத்தை தெலுங்கு வாசகர்களுக்கு அத்தனை சரளமாகவும் சுந்தரமாகவும் அறிமுகம் செய்த மாலதி சந்தூரின் முயற்சி அசாதாரணமானது.
(தொடரும்)