ரயில் ஜன்னலும் ரஹ்மான் பாடலும்

மதியம் மூன்று மணிக்கு கோவையில் இருந்து ரயில் கிளம்பியபோது இல்லாத மழை வடகோவையைத் தாண்டும்போது தூரலாக ஆரம்பித்தது. ரயிலில் ஏறி அமர்ந்ததிலிருந்து ஜன்னலோர மழையிலும் பாட்டிலும் நனைந்திருந்த பிரேமா தன் தோளை யாரோ தொடுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.

ரயில் நடுவழியின் இருபுறமும் தடுப்புகளின் இடையே எதிரெதிராக ஆறு பேர் அமரும் செகண்ட் சீட்டர் பெட்டியில் பிரேமா, பிரேமாவின் பை, அதையடுத்து கறுத்த மீசையும் வெளுத்த புருவமும் கொண்ட முதியவர். பிரேமாவின் எதிரே ஜன்னலை ஒட்டி ஒரு இளைஞன், அவன் அருகே ஒரு நடுத்தர வயது கணவன், மனைவி.

“ஜன்னலை மூடும்மா. தண்ணி உள்ள வருது,” என்றார் முதியவர்.

பிரேமா முயற்சித்தாள், முடியவில்லை. எதிரில் இருந்த இளைஞன் உதவ முன்வந்தான். “கண்ணாடிக் கதவை மட்டும் மூடுங்க,” என்றாள் பிரேமா.

ஜன்னலை மூடிய இளைஞனுக்கு நன்றி சொல்லிவிட்டு இயர்போனைக் காதில் மாட்டிக்கொண்டாள். இருகூரில் வந்த பரிசோதகர் பிரேமாவின் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்துவிட்டு, “பிரேமா. பக்கத்து சீட்டும் உங்களோடதுதானே, ஆள் வரலையா?” என்று கேட்டார்.

“ஈரோட்டுல ஏறுவார்,” என்றாள் பிரேமா.

பரிசோதகர் சென்றதும் முதியவர் கேட்டார் “பிரேமா, நீ என்னம்மா படிக்கற?”

பிரேமா விழித்தாள். எதிர் இருக்கை இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தான். “படிச்சு முடிச்சு நாலு வருஷமா வேலைக்குப் போறேன்,” என்றாள் பிரேமா.

“என்ன வேலை?”

“ஸ்டோர் மேனேஜரா இருக்கேன்”

“எங்க?”

“சார், கொஞ்சம் தள்ளி உட்காரறீங்களா?”

நடுவே பார்த்துவிட்டு “பேக் இருக்கே?” என்றார் பெரியவர்.

“இல்லை உங்க மூக்கு முட்டுது,” என்றாள் பிரேமா.

எதிர் ஜன்னலில் இருந்து யாரும் எதிர்பார்க்காத சத்தமான சிரிப்பு. பிரேமா எதிர் இருக்கை இளைஞனைப் பார்த்து புன்முறுவலித்துவிட்டு இயர்போனைக் காதுகளில் மாட்டிக் கொண்டு கைப்பேசியில் பாடலை தேர்வு செய்ய ஆரம்பித்தாள்.

முதியவர் “இவ்வளவு இடம் இருக்கே” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு சிரித்த இளைஞனைப் பார்த்து, “உங்க பேரு என்ன தம்பி?” என்று கேட்டார்.

“சத்யன்”

“என்ன பண்றீங்க?”

“வெயிட், பேரு சத்யன், வயசு 31, வெப் டெவலப்பர். வொர்க் ப்ரம் ஹோம். ரெண்டு மாசம் ஊட்டில இருந்து வேலை செஞ்சேன். அடுத்த ஒரு வாரம் கட்டாக். ஜாதகம் பேக்ல இருக்கு.”

முதியவர் திருப்தியாகத் தலையாட்டி அமைதியானார். “சார், இவங்க ரெண்டு பேரையும் விசாரிக்க மறந்துட்டீங்க,” என்று அருகே இருந்த தம்பதியைக் கை காட்டினான் சத்யன். முதியவரைத் தவிர மற்ற அனைவரும் சிரிப்பை அடக்கிக் கொள்ள அவர் தம்பதிகளிடம் கேட்டார், “நீங்க என்ன பண்றீங்க?”

பிரேமா மூடிய கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டே அடுத்த பாடலை ஓடவிட்டாள். அவள் காதுகளில் ஒரு ரயில் மெதுவாக டுடுன் டைன்டுடுன் டுடுன் டைன்டுடுன்… என்று தீனமாக ஆரம்பித்து வேகமெடுத்து பாலத்தில் ஓடும்போது பாடலில் ஓ சாயா…(O saya) என்று ரஹ்மானின் குரல் ஆரம்பித்தது. ரயில் இன்ஜின் ஓசை, இரும்புடன் இரும்பு சேர்ந்தோடும் ஓசை, ஓடும் ரயிலில் கதவைத் திறந்து வாசலில் நின்று தலையை வெளியே நீட்டி மனம் விட்டுக் கத்தினால் வரும் ஓசை போன்ற அர்த்தம் இல்லாத ஓசைகள் அந்தப் பாடலில் இசையானது.

பிரேமா எதிரே பார்த்தாள். அவள் காதுகளில் ஒலிக்கும் பாடல் வரிகளுக்கு சத்யன் உதடுகள் அசைந்து கொண்டிருந்தன. பாடலை நிறுத்தினாள். சத்யன் பேசாமல் இருந்தான். பாடலை ஓட விட்டாள். அவன் உதடுகள் மறுபடி அசைந்தன.

பிரேமா சத்யனைப் பார்த்து புருவத்தை உயர்த்தி இயர்போனைக் கழட்டினாள்.

“ஊருக்கே கேக்குது. உங்க இயர்போன்ல இருந்து”

“ஓ…“ என்று இயர்போனை மறுபடி காதுகளில் பொருத்தப்போனாள் பிரேமா.

“ஏங்க” என்றான் சத்யன். பிரேமா சத்யனைப் பார்த்தாள். “கொஞ்சம் சத்தமா வையுங்க. நானும் கேட்டுப்பேன்.”

பிரேமா தயங்கினாள். யார் இந்த ஸ்டாக்கர்?

பிரேமா பதில் சொல்வதற்குள், “சாரி, என் போன்ல சார்ஜ் இல்லை” என்று கைப்பேசியைக் காட்டிய சத்யன் தன் பையில் இருந்து ஒரு சின்ன புளுடூத் ஒலிப்பெருக்கியை வெளியே எடுத்தான். பிரேமா மறுக்க முடியாமல் அவள் போனை ஒலிப்பெருக்கியில் இணைத்து பாடலை ஓடவிட்டாள்.

முதியவர் வெகுநேரமாக பேசாத ஆற்றாமையோடு, “என்னத்தப் பாட்டு போடறாங்க இப்பல்லாம்,” என்றார். பிரேமா பேச வாய் திறந்தாள். சத்யன் கண்ணசைத்து எச்சரித்தான். முதியவர் தொடர்ந்தார், “பாரு, வரியே புரிய மாட்டிக்குது.”

“வேற பாட்டு கேக்கலாம்,” என்ற பிரேமா பாடலை மாற்றினாள், “ஹிந்தி கேக்கலாம்.”

“குருஸ் ஆப் பீஸ்” (gurus of peace) பாடல் ஆரம்பித்தது. “இது?” என்று பிரேமா சத்யனைப் பார்த்தாள். என்ன பாடல் என்று கவனித்த சத்யன் ஆரம்பத்தில் குழந்தைகள் குரல் கேட்டதும் சிரித்துத் தலையாட்டினான். கண்மூடி தலையை பின்னால் சாய்த்து பாடலைக் கேட்டு முடித்தபின் கண்திறந்து பார்த்தான்.

பிரேமா கேட்டாள், “என்ன ஆச்சு?”

சத்யன் கேட்டான், “ஏன்? என்ன ஆச்சு?”

“ஒரு மாதிரி கண்ணை மூடி உக்காந்துட்டு இருந்தீங்களே, அதான்.”

“ஏங்க, உங்களுக்கு இந்த பாட்டு புடிக்காதா?”

“புடிக்கும். ஆனா நீங்க ஓவரா ரசிக்கறது மாதிரியில்ல இருக்கு?”

“அப்படி இல்லைங்க. எனக்கு ராகமெல்லாம் தெரியாது. மியூசிக் புடிக்கும். மத்தவங்களுக்கு ராகமா கேக்கறது எனக்கு கற்பனையா கேக்கும்.”

“அது எப்படி?”

“இப்போ இந்த பாட்டையே எடுத்துக்கோங்க. ஆரம்பத்துல குழந்தைகள் பாடும்போது என் கற்பனைல சில குழந்தைகள் பசியில சத்தம் போட்டுட்டு இருக்காங்க. வெளியே இருந்து ஒரு குரல் வருது, சாதாரண குரல் இல்லை அது, தலைமை ஆசிரியர், ஒரு உஸ்தாத் குரல். உஸ்தாத் குழந்தைகளை அமைதியாக்கி தயார் செஞ்சதுக்கு அப்பறம் ஆசிரியர் குழந்தைகளைப் பார்த்து சொல்றார், அடம் பிடிக்காதீங்க குழந்தைகளா, ஒண்ணா இருங்கன்னு. இதைக் கேட்டு அமைதியாகற குழந்தைகளை அடுத்த வகுப்புக்குக் கூட்டிட்டு போறாங்க ஆசிரியரும் உஸ்தாதும். தபலாவோட உஸ்தாத் நேரடியா குழந்தைகள்கிட்ட வந்து பசிக்கு சிறந்த மருந்து இஷ்க், காதல்ன்னு சொல்றார். உலகையே காதலிக்க சொல்றாங்க ஆசிரியரும் உஸ்தாதும். பதில் தெரிஞ்சுக்கிட்ட குழந்தைகள் இப்போ திரும்பி நம்ம எல்லாரையும் பார்த்து கேக்கறாங்க, மருந்து என்னன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் நீங்க எல்லாம் எதுக்கு நோயோட காத்துட்டு இருக்கீங்கன்னு? ஆசிரியர் நமக்காக பதிலை நீட்டி விவரிக்கறார். உலகுக்கே பதில் சொன்ன சந்தோஷம் உஸ்தாதுக்கு வந்திருச்சு, உன்மத்தம் புடிச்சுருச்சு. அப்பறம் அவருக்கு வார்த்தைகள் வேண்டாம், குரல் மட்டும் போதும். காதல்ங்கற பதிலோட அவர் குரல் எல்லா திசைகளுக்கும் பறக்குது. பதிலை இன்னும் எளிதா சொல்ல குழந்தைகள் நம்மைப் பார்த்து சிரிச்சு காமிக்கறாங்க.”

வெறி கொண்டதுபோல சத்யன் அவசரமாய்ப் பேசி முடித்தான். பிரேமா, முதியவர், தம்பதி என எல்லாரும் சத்யனை விசித்திரமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“இதெல்லாம் அந்த பாட்டுல இருக்கா?” என்று கேட்டார் முதியவர்.

“ஆமாம்”

“யு மீன் நாம இப்போ கேட்ட பாட்டுல?“ என்றாள் பிரேமா.

“ஆமாங்க. நான் சொன்னதெல்லாம் அந்தப் பாட்டுக்கும் எனக்குமான உறவு. உங்களுக்கு அதோடு வேற உறவு இருக்கும்” என்றான் சத்யன்.

“ஓ, மறுபடியும் இதையே கேக்கலாம். என்ன தெரியுது பாப்போம்,” என்றாள் பிரேமா.

“ஷூர். ஒரு பாட்டு, ஒரு கவிதை போதும் ஒரு நாளுக்கு. அ லிட்டில் பாய்ஸன் நவ் அண்ட் தென்”

பிரேமாவிற்கு சத்யன் வேறு தளத்தில் நிற்கிறான் என்று புரிந்தது. எதுவும் பேசாமல் பாடலை இரண்டு முறை ஓட விட்டாள். அவளுக்கு சத்யன் சொன்ன எதுவும் தோன்றவில்லை. வெளியே மழை குறைந்திருந்தது. ஜன்னலைத் திறந்தாள். குளிர்ந்த காற்று வந்து முகத்தில் மோதியது.

ரயில் திருப்பூரில் நின்றது. பணியாளரை நிறுத்தி முதியவர் தேநீர் வாங்கினார். சத்யன் பிரேமாவைப் பார்த்து புரிந்து இரண்டு தேநீர் வாங்கினான். ரயில் கிளம்பியது.

தேநீர் அருந்திக்கொண்டே பிரேமா கேட்டாள், “கட்டாக் முடிஞ்சு?”

“தெரியல. எங்க தோணுதோ அங்க,” என்றான் சத்யன்.

“எங்க எல்லாம் இதுவரை தோணியிருக்கு?”

“இன்னும் நார்த் ஈஸ்ட் பாக்கலை.”

“அப்பா அம்மா எல்லாம்?”

“திருச்சில இருக்காங்க. உங்க பேமிலி?”

“பாட்டி அப்பா அம்மா ஒரு அண்ணன் ரெண்டு பூனைக்குட்டி எல்லாம் இருக்காங்க வீட்ல,” என்ற பிரேமா ஏதோ நினைத்து அமைதியானாள். போனை எடுத்து பாட்டை மாற்றினாள்.

ஏதேதோ பாடல்களுக்கு அடுத்து “லுக்கா சுப்பி” (luka chuppi) என்ற பாடல் ஒலித்தது. பாடல் ஆரம்பித்ததும் முதியவர், “லதா மங்கேஷ்கர் குரலே குரல்தான். ஏன் தம்பி, இந்த பாட்டு என்ன சொல்லுது?” என்று கேட்டார்.

சத்யன் சொன்னான் “இது அழச் சொல்லும்.”

பாடல் ஓடி முடிந்ததும் “நல்ல பாட்டு. என்ன, வரிகள் புரிஞ்சா நல்லா இருக்கும். அந்தக் காலத்துல..” என்று முதியவர் சொல்லச்சொல்ல சத்யன் பிரேமாவிடம் கேட்டான், “உங்களுக்கு ஹிந்தி புரியுமா?”

பிரேமா தலையாட்டிவிட்டுக் கேட்டாள், “உங்களுக்கு?”

“அரைகுறையாத் தெரியும். வழி சொன்னா புரியும், கவிதை புரியாது,” என்ற சத்யன் “இந்தப்பாட்டு லிரிக்ஸ்க்கு அர்த்தம் சொல்லுங்க,” என்றான்.

“ஐயயோ, அதெல்லாம் எனக்கு வராதுங்க,” என்றாள் பிரேமா.

“லுக்கா சுப்பி” மறுபடி ஆரம்பித்தது. “சும்மா ட்ரை பண்ணுங்க. நான் எடுத்துக் குடுக்கறேன், சந்தோஷமா ஒரு கிட்டார் ஆரம்பிக்குது,” என்றான் சத்யன்.

பிரேமா ஒலிப்பெருக்கியை உன்னிப்பாகக் கவனித்து பாடலை மொழிபெயர்க்க ஆரம்பித்தாள்.

“ஒளிஞ்சு விளையாடினது போதும், வெளியே வா. உன்னைத் தேடித்தேடி கால் வலிக்குது. பொழுது சாயுது, கவலை கூடுது, பார்வை பூத்துப் போகுது. என்கிட்ட ஓடி வா…

அம்மா, நான் எங்க இருக்கேன்னு எப்படிச் சொல்லுவேன்? நான் பறக்கவே இங்க மொத்த வானமும் திறந்து கிடக்கு. நீ சொல்லும் கதை மாதிரி, கனவு மாதிரி இருக்கு இந்த இடம். நான் விடும் பட்டத்து நூலை பாதில வெட்ட இங்க யாருமே இல்லை…

சீக்கிரம் வா. உன்கிட்ட சொல்ல இன்னும் எவ்வளவு இருக்கு தெரியுமா? இருட்டு வாசல் வரைக்கும் வந்திருச்சு, என் வெளிச்சம் நீ எங்கே? உன்னை வெளியே வர சொல்லிட்டு சூரியன் போய் மறைஞ்சுருச்சு பாரு, என் நிலா நீ, எங்க இருக்கே?

அம்மா இதை நான் எப்படி உனக்குக் காட்டுவேன்? எனக்குன்னே இங்க ஒரு அருவி. மேல என் கனவுகள் எல்லாம் கொத்துக்கொத்தா தொங்குது, குதிச்சா தொட்டுட முடியும். நான் நினைச்சா வெயில், நினைச்சா நிழல், எல்லாமே புதுசா தெரியுது. எல்லாமே இருக்கும்மா இங்க ஆனா யாருமே இல்லாம தனியா இருக்கேன்

சரி போதும் ஒளிஞ்சது. பொழுது சாயுது, என் கவலை கூடுது, பார்வை பூத்து போகுது. ஓடி வா என்கிட்ட… ஓடி வா என்கிட்ட…”

பிரேமா முடிக்கும் முன்பே கேவல் ஒலி கேட்டது. எதிரே இருந்த மனைவி புடவைத் தலைப்பால் வாயைப் பொத்தி விசும்பலை அடக்கிக் கொண்டு எழுந்தோடி ரயில் கதவின் அருகே சென்று வெளியே பார்த்து நின்றாள். கணவன் தரையைப் பார்த்தபடி இருக்கையிலேயே அமர்ந்திருந்தான்.

பிரேமா மெதுவாக “என்ன ஆச்சு?” என்று கேட்டாள். சத்யன் அமைதியாக இருக்கச் சொல்லி சைகை காட்டினான். பிரேமா கதவருகே நிற்கும் மனைவியைப் பார்த்தாள்.

“நான் போய் அவங்ககிட்ட பேசறேன்,” என்று பிரேமா எழுந்தாள். அந்தப் பெண்ணின் கணவர் பிரேமாவின் கையைப் பிடித்து தடுத்து, “ரொம்ப வருஷம் கழிச்சு அழுதுட்டா. அவளை அழ விடும்மா. நல்லா அழட்டும்” என்றார்.

பிரேமா சுற்றிப் பார்த்து மலங்க விழித்தாள். சத்யன் எழுந்து பிரேமாவின் அருகே வந்து “நீ எதுவும் தப்பா பண்ணல,” என்றான்.

“நான் சொன்னதைக் கேட்டுத்தானே அழுதாங்க” என்று சொல்லும்போது பிரேமாவின் உதடுகள் துடித்தது. சத்யன் பிரேமாவின் தோளைத் தொட்டு “வாங்க கொஞ்சம் நடந்துட்டு வரலாம்.” என்றான்.

பிரேமா சத்யன் பின்னால் நடந்தாள். எஸ் இரண்டில் இருந்து ஒரு பிச்சைக்காரர், கல்லூரிக் காதலர்கள், சீசன் டிக்கெட் தினப்பிரயாணிகள், ஆசி அருளும் அரவாணிகள், அழுகையை நிறுத்த மறந்த குழந்தை என அனைவரையும் கடந்து சாயம் போகாத ஒரிஜினல் காட்டன் உள்ளாடை விற்பனை நடந்து கொண்டிருந்த எஸ் ஏழாம் பெட்டிக்கு வந்ததும் பிரேமா சொன்னாள், “சீட்டுக்கே திரும்பப் போலாம்.”

பெட்டிக்குள் நுழையும்போதே பிரேமா கவனித்தாள், கணவனும் மனைவியும் ரயில் வாயிற்படியருகே வெளியே பார்த்தபடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். முதியவரைக் காணவில்லை. “எல்லாம் நார்மல் ஆயிடுச்சு,” என்று சொன்ன சத்யன் அவன் இருக்கையில் அமராமல் பிரேமாவின் அருகே அமர்ந்தான். பிரேமா எதுவும் பேசவில்லை. ரயில் ஓடும் சத்தம் நொடிக்கு நொடி அதிகமானது.

பிரேமா பாட்டை ஆரம்பித்தாள். “ரேனா து” (rehna tu) பாடல் ஒலித்தது. வானில் குளிர்ந்த மேகங்கள் கொஞ்சம் வெளிச்சத்துக்கு இடம் கொடுத்து நகர்ந்தன. பிரேமா திரும்பிப் பார்த்தாள்.

கண்ணை மூடி எங்கோ பாட்டுக்குள் மிதந்து கொண்டிருந்தான் சத்யன். மூடிய கண்களில் அவன் விழிகள் அங்குமிங்கும் நகர்ந்தன. மெய்மறந்த தலையசைப்பு வேறு. அருகே இருக்கைகளில் யாரும் இல்லை. பின்னூசி எடுத்து சத்யனைக் குத்தலாமா என்று யோசித்தாள் பிரேமா.

பாட்டு முடிந்ததும் கண் திறந்த சத்யன் தலையைச் சிலுப்பிக்கொண்டு சொன்னான் “மனசைத் திருட ஒவ்வொரு பாட்டுலயும் ஒவ்வொரு அஸ்திரம் வெச்சுருக்காரு ரஹ்மான். இந்தப் பாட்டுல ஃபிங்கர்போர்ட். நம்ம மனசைக் கொக்கில மாட்டி ஒரு சுத்து சுத்தி விட்டுடறார்.”

பிரேமா கேட்டாள், “என்னமோ எல்லா பாட்டையும் அவர் உங்களுக்கு ரகசியமா வாசிச்சுக் காட்டின மாதிரி பேசறீங்க?”

“ரகசியம்தான். ஒரு படைப்பாளி படைப்போட காதுல ஓதும் ரகசியம். சமைக்கறவன் சொல்லற ருசியை சாப்பாடு ரகசியமா சாப்பிடறவனுக்குக் கடத்தத்தானே செய்யும்.”

“இந்தப் பாட்டு என்ன ரகசியம் சொல்லிச்சு? என்கிட்ட மட்டும் சொல்லுங்க.” என்று தன் காதை அவன் முகத்தருகே வைத்துச் சிரித்தாள் பிரேமா.

“தேங்கிக் கிடக்கும் தண்ணீர் மாதிரி அமைதி. பாட்டோட ஆரம்பத்துல அந்த நீர்ல ஏதோ விழ தண்ணீர் தனக்குள்ள விழுந்தது என்னன்னு தேட ஆரம்பிக்குது. நீருக்கே வலிக்காம நீருக்குள் தேடற அலை மாதிரி ஒரு குரல். சின்னதாவும் பெருசாவும் மாறும் அலை தண்ணீருக்குள்ளே, தனக்குள்ளேயே தேடுது. ஆரம்பிச்ச இடத்துக்கு அலை திரும்பப் போறதே இல்லை. மாறி மாறி அலைஞ்சு கரைக்கு வந்த அலை திரும்பிப் பார்த்தா அலை இப்போ கடல் ஆயிடுச்சு. கொந்தளிக்கலாமானு அலை யோசிக்கும்போது கரையில் இருந்து ஒரு ஓசை. அலையைத் தாலாட்டி தூங்க வைக்குது அந்த ஃபிங்கர்போர்ட் இசை. தண்ணீருக்குத் தெரியுது, அலையடிச்ச பின் அமைதியான தண்ணீர் இனி எப்போதும் அலைக்கு முன் இருந்த தண்ணீரா மாறாதுன்னு. தண்ணீருக்குள் முதலில் விழந்தது கல்லாய் இருந்தா காதலாயிடும், மழைத்துளியா இருந்தா கடவுள் ஆயிடும்.”

பிரேமாவின் கைவிரல்களைப் பார்த்து பேசிக்கொண்டிருந்த சத்யன் தலைதூக்கிப் பார்த்தான். அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். பிரேமாவின் கண்களை ஆழமாகப் பார்த்து சத்யன் சொன்னான் “விழுந்தது கல்லா, இல்லை மழைத்துளியான்னு தெரியல.”

ரயில் குலுங்கலுடன் ஈரோடு ரயில்நிலையத்தில் நின்றது. பிரயாணிகள் பெட்டிக்குள் ஏற ஆரம்பித்தனர். பிரேமாவும் சத்யனும் கவனம் கலைந்து கண்களை பிரித்துக்கொண்டு திரும்பிப் பார்த்தார்கள். சுற்றி அமர்ந்திருந்த கணவன் மனைவியும், முதியவரும் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். சத்யனும் பிரேமாவும் எதிர்ரெதிர் பக்கம் திரும்பிக் கொண்டார்கள்.

“ஹலோ, நான் இருக்கறதையே மறந்துட்டே போல?”

பிரேமா நிமிர்ந்து பார்த்தாள். செந்தில் அவள் முன் நின்றிருந்தான். செந்தில் சத்யனிடம் சொன்னான், “எய்ட், என்னோட சீட்.”

“சாரி” என்று சத்யன் எழுந்தான். செந்தில் பிரேமாவிற்கும் முதியவருக்கும் நடுவே அமர்ந்தான். மொட்டை மாடியில் இருந்தவளை ஒரே நொடியில் தூக்கிக் கழுத்தளவு மணலுக்குள் புதைத்ததுபோல வார்த்தைகளின்றி செந்திலைப் பார்த்தாள் பிரேமா. சத்யன் பிரேமாவின் எதிரில் அவனது இருக்கையில் அமர்ந்தான். ரயில் ஈரோட்டில் இருந்து கிளம்பியது.

“நாளைக்குத் திரும்பி வரப்போ இறங்கி பைக்கை எடுத்துட்டுப் போயிடலாம்,” என்ற செந்தில் பிரேமாவின் பின்இருக்கைமேல் கையை நீட்டிக் கொண்டான்.

“என்ன பேய் பிடிச்ச மாதிரி இருக்கே?”

“ஒன்னும் இல்ல. வேற ஏதோ யோசனை.”

“பூமிக்கு வா.” என்று சொன்ன செந்தில் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து தன் கைப்பேசியை எடுத்து இயக்க ஆரம்பித்தான்.

பிரேமா எதிரே பார்த்தாள். சத்யன் ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பதுபோல் நடித்துக் கொண்டிருந்தான். அவனருகே இருந்த கணவனும் மனைவியும் பிரேமாவைப் பார்த்தார்கள். முதியவர் பேச விருப்பமின்றி வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்.

மேகம் விலகிய கிழக்கு வானில் தோன்றிய வானவில்லைக் கைகாட்டிய பிரேமா திரும்பிப் பார்த்தாள். “நல்லா இருக்கு. அண்ணா ஒரு பிளேட்” என்று செந்தில் காகிதத்தட்டில் பஜ்ஜி வாங்கிக் கொண்டிருந்தான். “உனக்கு?” என்று பிரேமாவிடம் கேட்டான். பிரேமா தலையைத் திருப்பிக்கொண்டாள். “உனக்கு வானவில் புடிக்குது, எனக்கு வாழக்காய் பஜ்ஜி புடிக்குது. அவ்வளவுதானே?”

தன் தட்டில் இருந்த பஜ்ஜியைப் பிய்த்து சட்னியில் தோய்த்த முதியவர் சொன்னார், “சிலருக்கு பஜ்ஜி, சிலருக்கு பாட்டு, சிலருக்கு வானவில், சிலருக்கு கவிதை, இல்லையாப்பா?”

அவரை வினோதமாகப் பார்த்த செந்தில் கேட்டான், “என்கிட்டயா பேசறீங்க?”

முதியவர் சொன்னார், “நான் பொதுவா சொன்னேன்.”

சாப்பிட்டு முடித்து காகிதத்தட்டை ஜன்னல் வழியே வீசிவிட்டு எழுந்த செந்தில் “சூடா ஒரு டீ குடிக்கலாம், பேன்ட்ரி வரயா?” என்று பிரேமாவிடம் கேட்டான். பிரேமா மறுக்க செந்தில் நகர்ந்தான். அவன் விலகியதும் பிரேமா சத்யனைப் பார்த்தாள். செந்தில் ஏறியதில் இருந்து சத்யன் அவளைப் பார்க்கவில்லை. “பாட்டு போடட்டுமா” என்று சத்தமாகக் கேட்டாள் பிரேமா. அனைவரும் அவளைப் பார்த்தனர். சத்யனின் பதிலுக்காக காத்திருக்காமல் பிரேமா ஒரு பாடலை ஒலிக்கச் செய்தாள். “தாரே கின்”(taare ginn) என்ற பாடல் ஒலிப்பெருக்கியில் ஒலித்தது.

பிரேமா சத்யனைப் பார்த்தாள். சத்யன் ஒலிப்பெருக்கியைப் பார்த்தான், பின் பிரேமாவைப் பார்த்தான், பார்த்துக் கொண்டே இருந்தான். பாடல் ஒலித்து முடிந்து மறுபடி ஒலித்தது.

பிரேமா அறிவிப்பு போல் பேசினாள், “பாட்டுல ஒரு பொண்ணு ரகசியம் பேசறா.”

கணவன் மனைவி முதியவர் மூவரும் பிரேமாவையும் சத்யனையும் பார்த்தனர். செந்தில் கையில் தேநீர்க் கோப்பையுடன் வந்து பிரேமாவின் அருகே அமர்ந்தான்.

பிரேமா ஒலிபெருக்கியைப் பார்த்துக்கொண்டே சொன்னாள், “ஒரு பொண்ணு ரகசியம் பேசறா. ஒவ்வொரு பொண்ணுக்குள்ளும் இருக்கற ரகசிய ஆசைகளை அந்த பொண்ணு ரகசியமா எதிர்ல இருப்பவன்கிட்ட சொல்றா.”

சத்யன் பிரேமாவைப் பார்த்து பேசினான், “எதிர்ல இருப்பவனுக்கு கேக்குது ஆனா பார்வை ஒண்ணும் மனசு ஒண்ணும் கூடக்கூட வேறவேற குரல்ல பேசுது…“ “….அவன் பேசும்போதே அவ சொல்லறா எல்லா ரகசியங்களும் சத்தமா உடைச்சு பேசிட முடியாது,” என்று சத்யனைப் பார்த்து சொன்னாள் பிரேமா.

சத்யன் சொன்னான், “மனசுக்குப் பிடிச்சதை எதுக்கு ரகசியமா சொல்லணும்னு எதிர்ல இருக்கறவன் கேக்கறான்…” “…மனசுக்குப் பிடிச்சது இன்னுமா ரகசியமா இருக்குன்னு அவன் பாடிட்டு இருக்கும்போதே அவ கேக்கறா,” என்றாள் பிரேமா.

“ரகசியம் ரெண்டு பேர் நடுவுலதான் இருக்க முடியும் மூணாவதா ஒரு ஆள் வர முடியாதுன்னு கூட வரும் இசையைக் காட்டி எதிர்ல இருக்கறவன் சொல்றான்…” ”…டேய் லூசு அது மூணாவது ஆள் இல்ல கூட வரும் குரலுக்கு முன்னாடி பொறந்த குரல்னு அவ சொல்லறா.”

சட்டென ஒரு அமைதி. தடுப்புக்கு வெளியே இருந்தவர்கள் தத்தம் இருக்கையில் இருந்து எழுந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பிரேமாவிற்கு எதிரே அமர்ந்திருந்த கணவன் மனைவி முகத்தில் புன்னகை. முதியவர் சிரித்தே விட்டார். செந்தில் குழப்பமாய்க் கேட்டான், “என்னடி நடக்குது இங்க?“

பிரேமாவும் சத்யனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒலிப்பெருக்கியில் இருந்து ஒரு தனி வயலின் ஒலி ஆரம்பித்தது. பிரேமா சொன்னாள், “மனசைத் திருட ஒவ்வொரு பாட்டுலயும் ஒவ்வொரு அஸ்திரம் வெச்சுருக்கார் அவர். இந்தப் பாட்டுல வயலின். நம்ம மனசைக் கொக்கில மாட்டி ஒரு சுத்து சுத்தி விட்டுடறார்.”

செந்தில் சொன்னான், “பிரேமா, சத்தியமா புரியலடீ.”

பிரேமா சொன்னாள், “ரஹ்மானை சொல்றேன். ரயில்ல போகும்போது கூட வந்து உக்காந்துக்கறார். சிரிக்க வைக்கறார். அழ வைக்கறார். அழும்போது ஆதரவா விரலைப் பிடிச்சுக்கறார்.”

சத்யன் தொடர்ந்தான், “ரயில் ஜன்னல் சீட்ல உக்கார வைக்கறார், வானவில்லை ரசிக்க வைக்கறார், மனசுக்குள்ள புகுந்துட்டு வெளியே போக மாட்டேன்ங்கறார்.”

செந்தில் பேசினான், “ப்ரொ, நீங்க யாரு? ஏன் கூடக்கூட பேசறீங்க?”

பிரேமா செந்திலைப் பார்த்து சொன்னாள், “டேய் அண்ணா, உன்னை இனிமேல் அண்ணானே கூப்பிடறேன்.”

சத்யன் பிரேமாவைப் பார்த்து சிரித்தான். செந்திலின் குழப்பப் பார்வைக்கு பதிலாய் அவன் கைகளைப் பிடித்துக்கொண்ட பிரேமா சத்யனைப் பார்த்து சிரித்தாள்.

****

அடிக்குறிப்பு:

ஓ சாயா (O saya) – Slumdog Millionaire

குருஸ் ஆப் பீஸ் (gurus of peace)

லுக்கா சுப்பி (luka chuppi) – Rang De Basanti

ரேனா து (rehna tu) – Delhi 6

தாரே கின் (taare ginn) – Dil Bechara

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.