மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு

ஹொன்னாவர் 1604

ஹொன்னாவர் மிட்டாய்க்கடை முகப்பில் ஒரு மர முக்காலியில் ஏறி நின்று கொண்டிருந்தாள் ரோகிணி. கையில் கமுகுத் தோரணம் ஒன்றை உயர்த்திப் பிடித்துக்கொண்டு எதிர்ப் பக்கம் சுவரில் அடித்த ஆணியில் அதைக் கட்டுவதைப் பார்த்தபடி நின்றாள். 

ரதவீதி கடைத்தெருவே அவள் மேல்  கண் வைத்து இயக்கம் நிலைத்துப் போயிருந்தது. உயர்த்திய ரோகிணியின் உருண்ட தோள்களை  மீறி வடிவான பென்னாம்பெரிய முலைகள் பக்கவாட்டுத் தோற்றமாக இத்தனை நேர்த்தியாக இதுவரை காட்சிப்படுத்தப்பட்டதில்லை. முக்காலி விழுந்து விடும் என்று ஆதரவாகப் பிடிக்க பிடவைக்கடை சந்திரய்யாவும் பூ அங்காடி வைத்திருக்கும் இரண்டுக்கெட்டான் வயது, என்றால் பதினெட்டு வயது இளைஞன், சத்யனும் மேலே பார்த்தபடி நெருங்கி நின்று பிடித்துக்கொண்டிருக்க, பூ வாங்க வந்த, பிடவையோ கச்சோ வாங்க வந்த வாடிக்கையாளர்கள் காத்திருந்தார்கள். 

மேலே தோரணத்தைப் பார்த்துக் கொண்டு முக்காலியில் வைத்த பாதம் நகர, முக்காலியைத் தரையில் அழுத்தித் தாங்கிக் கொண்டிருந்த சந்திரய்யாவின் புறங்கையில் அந்தப் பூப்போன்ற பாதம் சில வினாடிகள் மெட்டி உரசி ஏறி நின்று அவருக்கு சொர்க்கத்தைக் காட்டியது.

ரோகிணிக்கு தெருவில் பரபரப்பு நிலைத்து நின்றதற்குக் காரணம் தெரியும். அதனாலேயே அவள் உதடுகள் சின்னச் சிரிப்பை வெளியிலும் சிதறாமல் உள்ளேயும் அடக்காமல் அழகிய பல்வரிசையில் லகரியேற்றும் எச்சில் படலமாகப் படிந்து வைத்திருந்தன. 

ஒரு கடைவீதியையே ஸ்தம்பிக்கச் செய்யும் இரண்டு முலைகளும், இரு கருவிழிகளும், ஒரு ஜோடி துடிக்கும் உதடுகளும் உடனடியான கவன ஈர்ப்பு செய்து கொண்டிருக்க, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மிட்டாய்க்கடையை அழகு படுத்திக் கொண்டிருந்தாள் ரோகிணி.  

“ரோகிணியம்மா, தோரணம் இங்கே கட்டிட்டேன். அந்தப் பக்கம்” என்று நிறுத்தினான் உதவி மடையன் ரமணதிலகன். பாகு வைக்கிற பெருந்தேவனும், பாளம் பாளமாக வார்த்தெடுத்த இனிப்பைக் கத்தி கொண்டு கீறிப் பிளந்து சிறு சதுரங்களும் செவ்வகங்களுமாக்கி அடுக்குகிறவனுமான நாராயணனும் பச்சையாகவும், சிவப்பாகவும் சாயம் தோய்த்த கமுகுத் தோரணங்களைத் தோளில் சுமந்தபடி ரோகிணி பக்கம் வந்து, ”அக்கா, நாங்க கட்டறோம், நீங்க கீழே நின்னு காருபாரு மாத்திரம் செஞ்சாப் போதும்” என்று சூழ்நிலை முழுக்கப் புரிந்து, கூடிய கூட்டத்தைக் கலைந்து போக வைக்கிறார்கள். 

பிறைச் சந்திரன் வடிவிலும், நட்சத்திர வடிவிலும் தென்னந் தோரணங்களை அடுத்து அலங்கரிக்க எடுத்தான் நாராயணன்.    கடைவீதி பழக்கடை சாமு   ”தோரணத்தைக் குவிச்சு  ஒரே சீராக மேலே இழுத்து இறுகக் கட்டி நிறுத்தினா பார்த்துக்கிட்டே இருக்கலாம், கண்ணுக்கு இன்பம் மனசுக்கு இன்பம்” என்கிறான். 

இருக்கும் இருக்கும் பின்னே இருக்காது என்று சற்றே சினம் எழ ரோகிணி சேலைத் தலைப்பைத் தோளுக்குக் குறுக்கே இறுகப் போர்த்திக்கொண்டு அவனை முறைக்கிறாள். அடுத்த வினாடி அவள் முக்காலியில் இருந்து குதித்து இறங்கி, வாசலில் இருகை கட்டி நின்றபடி என்னடா புல்லே என்று உலகையே எதிர்க்கும் பார்வையை வீசி நிற்கிறாள்.

”அக்கையவரே, நாம் எல்லாரும் இங்கே ஒண்ணு வைதீக மதம் அதான் இந்து மதம், இல்லேன்னா சமண மதம் இப்படித்தானே இருக்கோம். வெள்ளைக்காரன் ஏசு பண்டிகை இங்கே எப்படி தித்திப்புக் கடைக்கு வந்தது?” ரமணதிலகன் ஏணியில் ஏறி நின்றபடி ரோகிணியைக் கேட்கிறான்.

”இனிப்பு என்பதே மகிழ்ச்சியான நிமிஷம், மணி, தினத்தைக் கொண்டாடறது தான். கிருஷ்ணன் பிறந்ததை சீசந்தி இனிப்புச் சீடையும், உன்னியப்பமும் செய்து கொண்டாடற மாதிரி, சிவபெருமான் அவர் பிறப்பும் இறப்பும் இல்லாத ஒற்றைத் தனி பரமாத்மா, அவருக்கான சிவராத்திரியிலே இனிப்பு அரிசிமாவு உருண்டை செய்து படைத்துக் கொண்டாடற மாதிரி, இருபத்துநாலாம் ஜைன தீர்த்தங்கரர் பிறந்த நாளை பாயசம் செய்து மகாவீரர் ஜெயந்தியாகக் கொண்டாடற மாதிரி, ஏசுநாதர் பிறந்த கிறிஸ்துமஸ் நாளை இனிப்பு செய்து, விநியோகிச்சுக் கொண்டாடப் போறோம். எல்லோரும் தெய்வத்தோட அவதாரம் தான். நாளைக்கு கிறிஸ்துமஸ்ஸுக்கு நம்ம கடையிலே விசேஷமாக ஒரு விற்பனை, கிறிஸ்து பண்டிகைக்காக எல்லாம் பாதி விலையிலே தரப் போகிறோம். சில கேக்குகள் ஒரு வராகன் விலை இருந்தது, அதிலே பாதி அரை வராகன், ஒரு பிரதாபம் காசுக்குத் தரப்படும். சுண்டல் ஒரே ஒரு ஹணம் விலைதான்”.

மிட்டாய்க்கடை தொழிலாளர்களுக்கே தெரியாமல் புது சமாச்சாரமாக என்ன வருது? ரோகிணியைப் பார்க்க அவள் வாசலைச் சுட்டிக் காட்டினாள்.

 கஸாண்ட்ரா ஒரு பரந்த செப்புப் பாத்திரத்தில் ஏதோ வைத்து வாழை இலையால் மூடி எடுத்துக்கொண்டு மிட்டாய்க்கடைக்கு அடுத்த கட்டிடமான சென்ஹோர் பெத்ரோ வீட்டிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள்.

மிட்டாய் அங்காடியின் முன்வசத்தில் தோரணங்களும், நட்சத்திரங்களும் அழகு செய்ய, ஒரு பெரிய மேஜை நடுவாந்திரமாகப் போடப்பட்டிருந்தது. பின்னால் சுவரை ஒட்டி நான்கு சிறு மேஜைகள் வைக்கப் பட்டிருந்தன. நடு மேஜை மேல் இலை,கிளைகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறு மரம். அதன் அடியில் சிறு தொட்டிலில் குழந்தை ஏசு சின்ன பொம்மையாக படுத்திருந்து சிரிக்கிறார். பக்கத்தில் நான்கு மெழுகுதிரிகள், தேவாலயத்தில் இருந்து அன்பளிப்பாகக் கோரி வாங்கியவை எரியத் தொடங்கின.

பின்னால் இட்ட மேஜைகளில் வெண்மையான துணித் துண்டுகள் அலங்காரமாக விரிக்கப்பட்டுப் படிந்திருந்தன. அவற்றின் மேல் பளபளவென்று அலம்பித் தேய்த்த வெங்கலப் பாத்திரங்களில் ஐரோப்பியர்கள் கிறிஸ்துமஸைக் கொண்டாட இயன்ற மட்டில் வீடுகளில் முட்டையும், கோதுமை மாவும், சர்க்கரையும் சேர்த்துச் சுட்டு இறக்கும் கேக்குகள் அடுக்கப்பட்டன. அவை பெரும்பாலும் பழக்கூழ் நிரம்பிய, ரம் கலந்த ப்ளம்கேக்குகளாக இருந்தது சிறப்பு.

வீட்டு வாசலில் ஒரு குதிரைவண்டி நிற்கிறது. கஸாண்ட்ரா வாசலுக்கு ஓடி தகவல் சொல்கிறாள் – பெத்ரோ துரை கிறிஸ்துமஸுக்காக   மனைவி வீடு இருக்கும் கோழிக்கோட்டுக்குப் பயணம் வைத்திருக்கிறார்.  அடுத்த வாரம் திரும்புவார்.

பெத்ரோ வீட்டின் பின் பகுதியில் இருந்து மிட்டாய்க்கடைத் தலைமை மடையராக பரமன் வெளியேறி கடைக்குள் படி ஏறினார். அவர் முகம் திருப்தியைக் காட்டியது. புதியதாகச் செய்யக் கற்றுக்கொண்ட கேக்குகள் அவரை மனம் கவர்ந்து பெருமை கொள்ள வைத்திருக்க வேண்டும்.

ரமணன் பரமனிடம், இந்த கேக்கை இப்போது கத்தியால் வெட்டிக் கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா என்று ஆர்வமாக விசாரித்தான். கேக்குகளை ருசிக்க அவனுக்கு ஈடுபாடு ஏற்பட்டிருந்தது அந்த ஆர்வத்தில் தெரிந்தது.

’ நம்போன்ற சாமான்ய ஜீவிகளுக்குப் பிறந்தநாள் கொண்டாடத்தான் வெட்டி வீழ்த்துவது எல்லாம். இது கிறிஸ்துமஸ். பழங்கள் பொதிந்த கேக்குகளை, சற்றே மது கலந்து, முக்கியமாக ரம் கலந்து சுட்டெடுத்து, பரிமாறி உண்டு சுவைக்க வேணும்” என்று பரமன் சொன்னார். 

கஸாண்ட்ரா ”இது ப்ளம் கேக்” என்று பெரிய, பழுப்பு நிற கேக் ஒன்றை அவள் கொண்டு வந்த பாத்திரத்தைச் சற்றே கவிழ்த்துக் காட்டினாள். கிறிஸ்துமஸுக்கு மற்ற கேக்குகளைவிட விசேஷமானவை இவை என்று சொல்லி ரோகிணியை நோக்கினாள். 

“ரோகிணி அக்கா எல்லோருக்கும் கொடுக்கலாமா?” 

“இரும்மா ஏசுவுக்கு நைவேத்தியம் பண்ணிக் கொடுக்கலாம்” என்று கிருஷ்ண பூஜைக்கான உடுப்பியில் வாங்கிய சிறு மணியை அடிக்க, பரமன் தண்ணீரால் மூன்று முறை சுற்றி, தீபாராதனை செய்து குழந்தை பொம்மைக்குப் படைத்தார். 

“அடுத்து ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி விடணும்” என்றான் ரமணன். அது இங்கே கிடையாது என்று சிரித்தார் பரமன்.

”ஏது, ரதவீதி கடைகள் கிட்டத்தட்ட எல்லாமே கிறிஸ்துமஸ் இன்னிக்கு அல்லது நாளைக்கு கொண்டாடறாங்க இந்த வருஷம். பழக்கடையிலே பிரம்புக் கூடையில் போட்டு பழக் கலவை. சந்த்ரய்யா பிடவைக்கடையில் ஐரோப்பிய உடைக்கான துணி பாதி விலைக்கு. முட்டைக்கடைக்காரர் கூட விலையிலே சலுகை அறிவிச்சதோட ஒரு மூங்கில் கழியை ஊன்றி அதன் மேல் கிறிஸ்துமஸ் நட்சத்திரமும் தோரணமும் தொங்க விட்டிருக்கார்”.  ரமணன்  சொன்னார்.

”நாளைக்குத்தான் கிறிஸ்துமஸ். நாம வியாபார ஸ்தலமா இருக்கறதாலே இன்னிக்கே கொண்டாடறோம். கேக் செய்து கொடுத்தவர் கஸாண்ட்ரா. அவங்களுக்கு உதவி ரோகிணி. முட்டைகளைச் சேர்த்துத்தான் கேக்குகள் செய்யப்படும் என்பதால், இனிப்பு அங்காடியில் அவற்றை உருவாக்க முடியாது. இங்கே முட்டைக்காரர் கிருஷ்ணப்பா படியேறலாம். அவர் விற்கும் முட்டை உள்ளே வர முடியாது. ஆகவே பெத்ரோ துரை வீட்டிலே, அவர் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கோழிக்கோடு பயணம் வைக்க முன்பு அனுமதி வாங்கி அவர் வீட்டு குசினியில் இவற்றைச் செய்தோம். நூறு வருஷத்துக்கு முந்தி அதாவது 1400களில் போர்த்துகீசிய நாட்டில் பிரபலமாகி இன்னும் எல்லோராலும் விரும்பப்படும் பாவ் டெ லோ கேக்குகள் அதிகபட்சமான முட்டைகளோடு செய்யப்படுகிறவை என்பதால் அவற்றை முட்டை வாடைக்காக ஒதுக்கி பழ கேக்குகளில் கவனம் செலுத்தினோம். இப்போது விற்பனைக்கு வரும். விளம்பரத்துக்காக நான்கில் ஒரு பங்கு விலைக்கு இந்த கேக்குகள் கிடைக்கும். ஒருத்தருக்கு ரெண்டு அதிகபட்சம் கிடைக்கும்”. என்றாள் ரோகிணி. 

“சீக்கிரம் இனிப்புகளோடு கேக்குகளும், பிஸ்கோத்துகள் போல்  வேறு ஐரோப்பிய நொறுக்குத் திண்டிகளும் தினசரி கிடைக்கறமாதிரி கடையை விரிவாக்குங்க” என்றார் பாத்திரக்கடைக்காரர். 

”பூக்கடைக்காரர் அவர் கடைவாசலில் சீன பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் தீபாவளிக்கு ஒரு வாரம் முன் வியாபாரம் ஆரம்பித்தார். தீபாவளி முடிந்து கிறிஸ்துமஸ்ஸுக்கு மறு கடை திறப்பு செய்து காசை அள்கிறார்” என்று பழக்கடைக்காரர் வருடம் பூரா பண்டிகை வர, கொண்டாட்டம் ஏற்பட வாழ்த்தினார்.

மிட்டாய்க்கடையில் சந்தோஷம் படர்ந்திருக்க எல்லோரும் கேக்குகளை ருசித்து அனுபவிக்கும் வேளை. வாசலில் திடீரென்று ஓவென ஒரு பெரும் சத்தம் –

“என்னடா நினைச்சுக்கிட்டீங்க? ஜவுளிக்கடையிலே போனா கிறிஸ்துமஸ். பாத்திரக்கடையிலே கிறிஸ்து பிறந்தாராம். அரிசி மண்டியிலே இதோ வந்திட்டிருக்கார் கிறிஸ்து நாதராம். பழக்கடையிலே பழத்தோடு கிறிஸ்து நாதர் படம் போட்ட சங்கிலிப் பெட்டகம். பூக்கடையிலே ஐரோப்பிய மோஸ்தரில் பூக்குலை. வாசனை திரவியம் விற்கற கடையிலே மிளகு தவிர கிராம்பும், ஏலமும், முந்திரிப் பருப்பும் பாதி விலையாம் கிறிஸ்துமஸுக்கு. எங்கேயோ பிறந்த கிறிஸ்து இங்கே பிறந்தார்னு தோரணம் கட்டி வைக்கிறாங்க இந்த வியாபாரிங்க எல்லாம். ஆனால் பாரு, இந்த தேசத்திலே பிறந்து இங்கேயே இருந்து இங்கேயே இறந்துபோன கவுதம புத்தருக்கு ஒரு கொண்டாட்டம் கிடையாது. உடனடியா குரு பூர்ணிமா கொண்டாடுங்க எல்லோரும். இது அரச கட்டளை”.

கடைவீதி நெடுக இடுப்பில் துணி எந்த நேரமும் அவிழ்ந்து விடக்கூடும் என்று பயமுறுத்தியபடி நெகிழ்ந்திருக்க, கனமான குரலில் தனக்குத்தானே பேசிக்கொண்டு போதை பாதி தெளிந்தோ அல்லது பாதி தெளியாமலோ கடை கடையாக நின்று தோரணங்களைப் பறிக்க முயற்சி செய்து தோற்று கடைவாசலில் குந்தி உட்கார்ந்தும் படுத்தும் போக்குக்காட்டி நகர்ந்து கொண்டிருந்தவர் வீர நரசிம்மன் என்ற வீரு. 

உள்ளால் மகாராணி அப்பக்கா சௌதாவின் கணவரான ஐம்பது வயது கம்பீரம் இன்னும் குறையாத வீர நரசிம்மன் ரோகிணி தித்திப்புப் பலகாரக் கடை முன் குரல் எறிந்து பதிலை எதிர்பார்ப்பது போல் ஓரமாக கிடந்த முக்காலியில் அமர்ந்துகொண்டார். 

கடைக்கு காவல் இருக்கிறவர் போல் முக்காலியில் ஆரோகணித்திருந்த வீரு பக்கம் வந்து நின்றார் நஞ்சுண்டய்யா பிரதானி, சென்னபைரதேவி மகாராணியின் அவையில் மூத்த ஆலோசகர். 

“ராஜராஜர் அவர்களே, இங்கே எல்லாம் உட்கார்வது உங்கள் கௌரவத்துக்கு ஏற்றதில்லை. வாருங்கள். என் இல்லம் இங்கே தான் இதோ இருக்கிறது, எழுந்திருங்கள் என்று கையைப் பிடிக்காத குறையாக மன்றாடினார்.

 வீரு என்ற வீர நரசிம்மன் எழுந்து தெளிவில்லாமல் பேசினார் –  ”அப்படியானால் சரி, போகலாம் பிரபு, இந்த ஆசனத்தையும் எடுத்துப் போகலாம், விட்டால் திரும்பக் கிடைக்காது என் சிம்மாசனத்தை பார்த்தீர்களா? உள்ளாலில் இல்லை பன்குடியில் இருக்கு என்றார்கள். அங்கேயும் இல்லாமல் இப்போது ஹொன்னாவரில் கடைவீதியில் கடைகடையாகத் தேடி இனிப்பு மிட்டாய்க்கடை வாசலில் கிடக்கிறது. இருங்கள், எடுத்துக் கொண்டு வருகிறேன்.” 

வீரு முக்காலியை எடுக்கும்போதே போதை தலைக்கேறி விழுந்துவிட்டார். மிட்டாய்க்கடை ஊழியர்களும் பிரதானியின் சேவகர்களும் பிரதானி வீட்டு முன் அறையில் வீருவைப் படுக்க வைத்தார்கள். 

“என்னால் நடக்க முடியும், பேச முடியும், ஓட முடியும், சிம்மாசனத்தில் உட்கார்ந்து ராஜாவாக இருக்க முடியும்.” 

சொல்லிக் கொண்டிருந்தபோதே புது சாரட்டில் புதுக் குதிரைகள் பூட்டி நேமிநாதன் வந்து இறங்கினான். வீரு என்ற வீர நரசிம்மன் எழுந்து உட்கார்ந்து தரையில் இருந்தபடியே சலாம் ராஜ்குமார் என்றார் நேமிநாதனிடம். 

“மாமா இங்கே என்ன பண்றீங்க?” என்று நேமி கேட்கும்போது ”நீ வருவேன்னு தான் காத்துட்டிருக்கேன். மதுசாலையிலே திராட்சைச் சாறு கொஞ்சம் குடிச்சு நேரம் போக்கிட்டிருந்தேன். பாரு எப்படி சீரா, நேரா நான் நடக்க முடியுது” என்று சொல்லியபடி வளைந்து நெளிந்து அறைக்குள் ஓடி சுவரில் முட்டிக் கொண்டார். 

திரும்ப மறுபடி தரையில் உட்கார்ந்து சுவரை வீட்டுக்கு நடுவே எழுப்பியதற்காக பிரதானியைக் குற்றம் சொன்னார். நேமிநாதன் இதோ வந்துட்டேன் மாமா என்று பிரதானியிடம் சொல்லி மிட்டாய்க்கடை மாடிக்குப் போனான். எழுந்து உட்கார்ந்து இதோ வந்துட்டேன் மாமா என்றார் சுவரைப் பார்த்தபடி வீரு. அப்புறம் படுத்தவர் எழுந்திருக்கவில்லை.

கிறிஸ்துமஸ் அன்று முழு விடுமுறை விடலாம் என்று இனிப்பு அங்காடியில் பலரும் அபிப்பிராயப்பட்டதால், ரோகிணி தன் முந்தைய    விற்பனை – விடுமுறை திட்டத்தைச் சற்று மாற்றிப் புதுத் திட்டத்தை அறிவித்தாள். விற்பனை அட்டகாசமாக நடந்ததால் இன்னும் இரண்டு நாள் விடுமுறை கூட நியாயமான கோரிக்கையாக இருக்கலாம்.

இந்த நடுப்பகலுக்கு இனிப்பு அங்காடிக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவித்தாள் ரோகிணி. மறுநாளும், கிறிஸ்துமஸ் முழுநாள் விடுமுறையாக  அறிவிக்கப்பட்டது. அதற்கு முன், காட்சிக்கு வைத்திருந்த கிறிஸ்துமஸ் இனிப்புகளை கால் விலைக்கு விற்றதால் ஒரு சின்ன சதுரம் கூட மீதி இல்லாமல் எல்லாம் விற்றுத் தீர்ந்தன. காரமான சுண்டலும் தேங்குழலும் இலவசமாக வாரி வழங்கப்பட, கடைவீதி வணிகர்கள் தாம் தாம் உண்டது மட்டுமில்லாமல், வீட்டுக்கும் எடுத்துப் போகும்முன் ஒரே குரலில் ரோகிணியிடம் சொன்னது –

”இனிப்பு ராணி ரோகிணி வாழ்க”. 

ரோகிணி பதறிப்போய் மிளகுராணியை பகடி பண்றதா யாராவது எடுத்துக்கப் போறாங்க என்றாள். 

”பட்டம், பதவி எல்லாம் பயப்பட்டுக்கிட்டே கொடுக்கவோ வாங்கவோ கூடாது. எனக்கு கூட ஏல ராஜான்னு முந்தாநாள் உள்ளால்லே ஒரு சிறு வர்த்தகர் குழு அறிவிச்சாங்க. நான் வாங்கி வச்சுக்கிட்டேன்” என்றான் கடைக்குள் வந்த நேமிநாதன். 

அரை மணி நேரம் கழித்து கடைவீதியே ஆள் அரவமின்றிப் போனது. கடைக்காரர்கள் சேர்ந்து தீர்மானம் செய்து பிற்பகல் கிறிஸ்துமஸ் விடுமுறையாக ஒருசேர அறிவித்ததால் பாதி தினம் விடுமுறையானது சகலருக்கும். 

அகஸ்டின்ஹோவும் கார்லோஸும் மிட்டாய்க்கடை மாடி அறைக்கு வந்து காத்திருந்தார்கள். அவர்களுக்கு வந்த இடத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இந்திய இனிப்புகளும், கஸாண்ட்ராவும் ரோகிணியும் செய்த பழக் கேக்குமாக வந்திருந்தது. 

“சென்ஹோர் அகஸ்டினோ, கார்லோஸ் எங்கள் கேக் முயற்சிகள் எப்படி உள்ளன?” ரோகிணி கேட்க, பின்னால் இருந்து புது கிறிஸ்துமஸ் உடுப்பில் தேவதை போல் நின்று கொண்டிருந்தாள் கஸாண்ட்ரா. 

“ப்ளம் கேக் பிரமாதம், அதில் ஊற்றியிருந்த ரம் தின்னக் கிடைத்த அபூர்வமான மது” என்றார் கார்லோஸ்.  

“அது ரம் இல்லை” என்றாள் ரோகிணி. ”இந்திய மதுவகை. அரிசியிலிருந்து செய்யப்படுவது. பெயர் பாங்க். இதோ இதுதான்”. ரோகிணி மேஜை இழுப்பறையைத் திறந்து ஒரு போத்தல் பாங்க் எடுத்து அகஸ்டின்ஹோவிடம் அளித்தாள் – 

“மெரி கிறிஸ்துமஸ்”. 

அவர்கள் அனைவரும் மெர்ரி கிறிஸ்துமஸ் சொல்ல நேமிநாதன் மாடிப்படி ஏறி உள்ளே நுழைந்தான். கூடவே வீர நரசிம்மனும் வந்ததை ரோகிணி ஆச்சரியம் விலகாமல் பார்த்தாள். 

“மாமா என்ன பேசப்போகிறோம் என்று கேட்டீர்களே, கொங்கணிக் கவிதைகளை போர்த்துகீஸ் மொழியாக்கம் செய்கிறோம். தேர்ந்தெடுத்த கவிதைகளை உரக்கச் சொல்லி சிலாகிப்போம். வாங்க, உட்காருங்க”. 

வீரு நாற்காலியில் அமர்ந்து உலகத்துக்கு சகஜமான கருத்துத் தெரிவிப்பு நடத்திக் கொண்டிருக்கிறார் –

”கொங்கணி கொங்கைகளை போர்த்துகீஸ் மொழியாக்கம் செய்வது நல்ல காரியம். மற்றவையும் சீராகப் பரிசீலிக்கப்பட வேண்டும்”.

அடுத்து மேஜை திறப்பில் பாங்க் இருப்பதைப் பார்க்கிறார் வீரு. ரோகிணியை அருகே கூப்பிடுகிறார் – 

”கிறிஸ்துமஸுக்கும் சிவராத்திரி போல் பாங்க் பருகணும் என்பது நல்ல பழக்கம். நானும் கொண்டாடுகிறேனே” என்கிறார். 

“பாங்க் மட்டும் ஏன் மாமா, முந்திரிப் பருப்பு ஃபென்னி கோவாவிலிருந்து விருந்தாளிகள் கொண்டு வந்திருக்கிறார்கள்”. 

வீரு அவசரமாக அவர்களுக்கு நன்றி சொல்லி ஃபென்னி போத்தலையும் எடுத்துக் கொள்கிறார். வெளி விதானத்துக்குப் போய் தரையில் உட்கார்ந்து அன்போடு ஃபென்னி, பாங்க் போத்தல்களைத் திறக்கிறார். 

“மாமா போர்த்துகீஸ் கவிதை”. நேமிநாதன் அவரை அழைக்கிறான். ரோகிணி குவளை கொண்டு வந்து தருகிறாள். 

“போர்த்துகீஸ் கவிதை நாசமாகப் போகட்டும். எல்லா கவிஞர்களும் நரகத்துக்குப் போகட்டும். நரகம் கவிஞர்களால் நிரம்பி வழியட்டும்”. 

 சொல்லியபடி போத்தலிலிருந்து ஃபென்னி எடுத்து குவளையில் வார்த்துக் குடிக்கிறார் வீரு. அப்புறம் அவர் வழக்கம்போல் உறங்க ஆரம்பிக்கிறார்.

”கிறிஸ்துமஸ் அன்று கூட பேச வேண்டும் என்று கூட்டம் கூட்டியதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா?” நேமி நாதன் கேட்டான். 

“நானே இன்று ஹொன்னாவர் வருவதாக இருந்தேன். நல்லதாகப் போனது. இல்லை என்றால் வாரத்தில் ஐந்து நாள் ஹொன்னாவரில் தான் இருக்கிற திட்டம் என்றால் நீயும் குடும்பமும் அங்கேயே இருந்து வாரம் இறுதியில் ஜெரஸோப்பா வந்து போகலாமே என்று மகாராணி கூடக் கேட்கிறார்”.

 ரோகிணி பேச்சை வெட்டிக்கொண்டு நடுவில் புகுகிறாள். 

“ராஜகுமாரன் மன்னிக்கவும் பேரரசர் நேமிநாதன் மன்னிக்க வேணும். ஒரு முக்கியமான விஷயத்தை பேசி முடிவு செய்தால் இந்த இரண்டு போர்த்துகீஸ் நண்பர்கள் கோவா வழியாக லிஸ்பன் புறப்பட்டுப்போய் கார்டெல் செயல்பட பச்சைக் கொடி காட்டி விடுவார்கள். அப்புறம் உட்கார்ந்து பேச நேரம் இருக்காது” என்றாள் ரோகிணி. 

“ஆம், அடுத்த வருடம் இந்த நேரத்தில் மகாராஜா நேமிநாதனும் துணைவியார் இனிப்பு மகாராணியாக ரோகிணியும் ஆட்சியில் இருப்பார்கள். மற்றவர்கள் எங்கே இருப்பார்கள், இருப்பார்களா என்பதை காலமும் கார்டலும் முடிவு செய்யும்”. 

ரோகிணி பேசி முடிக்க கனத்த மௌனம். 

“ராஜகுமாரி ரஞ்சனாதேவி இரண்டாம் மகாராணி ஆவார்தானே?”

 நேமிநாதன் கேட்க, ரோகிணி சொல்வாள் – 

“ஆமா, அப்புறம் கஸாண்ட்ரா மூணாவது மகாராணி, வழுவழுத்த கைகாலோடு மிங்கு நான்காவது மகாராணி என்று நேமிநாதன் மகாராஜா அந்தப்புரத்தை விருத்தி பண்ணுவதில் தான் மும்முரமாக இருப்பார். மிளகு வர்த்தகத்தை புறக்கணித்து விடுவார் அப்படித்தானே?” 

ரோகிணியைப் பார்த்து சுவாதீனமாகச் சிரிக்கிறான் நேமிநாதன்.

”இன்றைய கூட்டம் அடுத்த தளத்தில் நட்பு யாரோடு கார்டலும் அவர்கள் வழி நாமும் பூணலாம் என்று யோசிக்க. வழக்கமான நடைமுறைப்படி, விஜயநகரப் பேரரசருக்குத்தான் இங்கே நம் போன்ற சின்னதும் பெரியதுமான தேச ராஜாக்கள்   மரியாதை நிமித்தம் கீழ்ப்படிதலும் நட்பும் கொண்டு இணங்கிப் போக வேண்டியது. விஜயநகரப் பேரரசர் இந்த நாடுகளுக்குச் சகல பாதுகாப்பும், சுல்தானிய அரசுகள், முகலாயர் என்று பலரும் இவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க அளிக்க வல்லவர். ஆனால் விஜயநகரம் சீரழிந்து விட்டதால் அந்தக் கடமையை வேறு யார் செய்ய முடியும்?” 

அகஸ்டின்ஹோ ஒரு மடக்கு பாங்க் சுவைத்து விட்டு நேமிநாதனைக் கேட்கிறார்.

”அதற்குத்தான் வீர நரசிம்மன் அவர்களைக் கையோடு கூட்டி வந்தீர்களா?” என்று ரோகிணி கேட்க, ஃபென்னி என்றபடி புரண்டு படுக்கிறார் வீரு.

 எல்லோரும் சிரிக்க, அமைதியாகச் சொல்கிறான் நேமிநாதன் – 

“இந்த முயற்சிகளில் நம்மோடு தோள் கொடுத்துக் கூட்டிப் போக பில்ஜி  அரசர் திம்மாஜி உடன்படுவார் . மிளகு வர்த்தகத்தில் இன்னொரு கால் சதவீதம் அவருக்குக் கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்?” 

நேமிநாதன் சொல்ல மற்ற மூவரும் ப்ரவோ என்று வாழ்த்துகிறார்கள். 

“கேலடி அரசரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தப் போவது யார்?”

 அகஸ்டின்ஹோ கேட்க, வேறு யார் மிளகு அரசர் தான் என்கிறாள் இனிப்பு ராணி. கரகோஷம்.

”கேலடி அரசர் வெங்கடபதி நாயக்கருடைய ஆதரவும் கிடைக்குமா என்று கார்லோஸ் கேட்கிறார். 

“நானும் கேலடி அரசரின் ஆதரவைத்தான் முதலில் திட்டமிட்டேன்” என்றான் நேமி. ”எல்லாவற்றுக்கும் அவரை அழைத்து வந்து நடுவில் உட்கார வைத்து தலைப்பாகை கட்டுவது அவருக்கு தன்னைப் பற்றி அதிகமாக ஒரு தோற்றம் மனதில் ஏற்பட வைக்கும்.  கல்யாண வீட்டிலே மாப்பிள்ளை, சாவு வீட்டிலே பிணம் என்று எல்லா இடத்திலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். பில்ஜி அரசர் திம்மாஜியும் கேலடி அரசர் போல் நாயக்கர் வம்சம். இளம் வயது. நமக்குச் சென்று பழக எளியவர். தேவை வந்தால் கேலடி நாயக்கரையும் அழைத்துக் கொள்வோம்”. 

நேமி பேசி முடித்த பிறகு ரேணுகா கைதட்டினாள். 

ராஜா வந்தாச்சு ராஜா வந்தாச்சு என்று முழங்க, மற்றவர்கள் சத்தம் உயர்த்தாமல் மிளகு ராஜாவுக்கு ஜெயவிஜயிபவ சொன்னார்கள்.

போதையும் உறக்கமும் கலைந்து உட்கார்ந்த வீர நரசிம்மர் எழுந்து தரையில் சம்மணம் கொட்டி அமர்ந்து, ”பஸகுடி அரசர், சக்கரவர்த்தி எல்லாரும் நான் தான். ஐரோப்பாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் கூட நானே அரசன். பாங்க் அரசர் வீர நரசிம்ம ராஜு வாழ்க” என்று தானே வாழ்த்திக் கொள்கிறார். 

“ஆஹா, பாங்க் அரசர் வீரு வாழ்க” என்கிறான் நேமிநாதன்.

(தொடரும்)

Series Navigation<< மிளகு அத்தியாயம் முப்பத்தேழுமிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.