மித்ரோ மர்ஜானி 6

This entry is part 6 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

ஸோமாவும் ராணியும் இந்த நாடகத்தை பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டார்கள். பொய்யான ஆச்சரியத்துடன் மாமியாரை பார்த்தனர். மாயாவந்தி, தன் துப்பட்டாவால் மகளின் கண்ணீரை துடைத்து விட்டு, அவளுக்கு தைரியம் சொல்லும் விதமாக, “மகளே, நீ என்னதான் அவர்கள் உனக்குச் செய்த அக்கிரமங்களை மூடி மறைக்க முற்சித்தாலும், எனக்கும் இந்த ஊராருக்கும் அவையெல்லாம் நன்றாகவே தெரியும்” என்றாள்.

சின்ன மருமகள் ராணி, மூத்த மருமகள் ஸோமாவிடம் கண் ஜாடையிலேயே அனுமதி பெற்றுக்கொண்டு, ” பாபோ, நம் ஃபூலாவைப் போல ஒரு அப்பாவியை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்து விடுகிறாள். ஆனால் வயதான அவருடைய மாமனார் மாமியார் ஏன் அவளுக்கு எதிரி போல நடந்து கொண்டார்கள்?” என்று கேட்டாள்.

மாயாவந்தி சுதாரித்துக் கொண்டாள். பேச்சை மாற்றுவதற்கு முன்பு, மருமகளை உற்று நோக்கினாள். எமகாதக ராட்சசி! பிறகு மென்மையான குரலில், “மருமகளே, பேராசைக்கு ஏது எல்லை? சண்டைக்கார மாமியார், மருமகளை பிறந்த வீட்டிலிருந்து இதைக் கொண்டு வா அதை கொண்டு வா என்று எந்நேரமும் நச்சரித்துக் கொண்டிருந்தால், நல்ல வீட்டுப் பெண், பாவம், தூக்கு மாட்டிக் கொள்ளவா முடியும் ? என்றாள்.

இளைய ஓரகத்தி விட்ட அம்பு, குறியை சரியாக தாக்கியதில், ஸோமா மனதுக்குள் மகிழ்ந்தாள். ராணியை முறைத்து பார்த்துவிட்டு, மாமியாரை ஆமோதித்து தலையாட்டினாள்.”உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், பாபோ, பேராசை பிடித்து அலைகிறவர்களுக்கு, இந்த குணவதியின் அருமை எங்கே தெரியப்போகிறது!”

ராணி, தான் கூறியதற்கு வருத்தப்படுபவள் போல, ” பாவம் ஃபூலா. அவர்களது லட்சணம் நமக்கு எப்படி தெரியும்? ஆனாலும் இவ்வளவு மோசமாக இருப்பார்கள் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லையே,” என்று தூபம் போட்டாள்.

மாயாவந்தி தன் கெட்டிக்கார மருமகளை சந்தேகத்துடன் பார்க்கவே, ராணி உடனே சுதாரித்துக் கொண்டு பேச்சை மாற்றினாள். கண்களில் போலி இரக்கம் சொட்ட, “போகட்டும் ஃபூலா, நீ உன்னுடைய எல்லா நகைகளையும் பத்திரமாக கொண்டு வந்து விட்டாயல்லவா? என்றாள்.

உற்றார் உறவினரும் அண்டை அசலாரும் மருமகள்கள் மூலமாக விஷயத்தை தெரிந்து கொள்ள முற்படுவதற்கு முன்னரே, மாயா வந்தி தன் மருமகள்களை கைக்குள் போட்டுக் கொள்ள விரும்பினாள். ராணியின் வெளிப்படையான பேச்சைக் கேட்டு எரிச்சல் அடைந்த மாயாவந்தி, அதட்டும் குரலில் சற்றே துக்கத்தையும் கலந்து, ” நகைகளைப் பற்றிக் கவலைப்பட இதுவா சமயம் மருமகளே. மகள் உருப்படியாக உயிரோடு வீடு வந்து சேர்ந்தாளே, அது போதாதா? இவளுடைய சகோதரர்கள் சரியான நேரத்தில் அங்கு போய் சேர்ந்திராவிட்டால், அந்த பிச்சைக்கார ராட்சசர்கள் என் மகளை இன்னும் என்ன பாடு படுத்தி இருப்பார்களோ!” என்றாள்.

மாமியாரின் சவாலுக்கு ராணி சரியான பதிலடி கொடுத்தாள். ” பாபோ, என்ன அநியாயம் இது! ஃபூலா தன்னுடைய வளையல் சங்கிலி மோதிரம் நெக்லஸ் எல்லாவற்றையும் அங்கேயே விட்டுவிட்டு, வெறுங்கையோடு வர அண்ணன்மார்கள் எப்படி சம்மதித்தார்கள்?” என்றாள்.

ஸோமா இப்போது களத்தில் இறங்கினாள்.

” கொஞ்சமாவது புத்திசாலித்தனமாக இருந்திருக்கலாமே நாத்தனாரே! வேறு எதுவும் இல்லாவிட்டாலும், பிறந்த வீட்டில் போட்ட நான்கு வளையல்களையாவது, காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கலாமே!” என்றாள்.

மாயாவந்தி குரோதம் நிரம்பிய கண்களால் இரு மருமகள்களையும் முறைத்துவிட்டு, கையை விரித்து, சம்பந்தி வீட்டாரை வாய்க்கு வந்தபடி திட்டி, “என் மகளின் நகைகளை அபகரித்துக் கொண்டவர்கள் நரகத்துக்கு தான் போவார்கள்,” என்று கை நொறுக்கி சாபமிட்டாள்.

இளைய மருமகள் மாமியாரின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து விட்டு, கீழ்ப்படிதல் உள்ள மருமகளை போல அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு “ஆமாம் மற்றவர்களை ஏமாற்றி சொத்தை அபகரிக்க நினைப்பவர்கள் நிச்சயமாக நரகத்துக்குத்தான் போவார்கள்,” என்றாள்.

அடி பலமாக விழுந்தது புரிந்து கொண்ட மூத்த மருமகள், ஒத்தடம் கொடுத்தாள். ” நல்ல காலம் பாபோ! அந்த கசாப்புக் கடைக்காரர்களிடமிருந்து நம் வீட்டு மகள் உயிரோடு தப்பித்து வந்து விட்டாள். நகை நட்டுக்கு என்ன? உயிர் தானே முக்கியம்! சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? இன்னும் புதிதாக நகைகளை செய்து கொண்டால் ஆயிற்று!” என்றாள்.

தன் தாய் நகர்த்திய காய்களுக்கு மிகவும் சாதுரியமாக தன் அண்ணிகள் பதில் அளித்ததைக் கண்டு உள்ளுக்குள் பதறிய ஃபூலா, அண்ணியின்யின் மடியில் முகம் புதைத்து விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.

*******

அன்று தனவந்தி, காலையில் கண்விழித்த போது, சந்தோஷமான செய்தி ஒன்று காத்திருந்தது.அதைக்கேட்டதும், மனதில் இருந்த எல்லா கவலைகளும் விலகி, மனம் பளிச்சென்று கழுவி விடப்பட்டது போல சுத்தமானது. குளித்துவிட்டு துளசி செடிக்கு நீர்வார்த்துவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்த போது, அங்கே சுஹாகிற்கு பதிலாக மித்ரோ, வேலை செய்து கொண்டிருந்ததை கண்டு தனவந்தி ஆச்சரியமடைந்தாள். சமையலறை வாசலில் நின்று கொண்டு, “மகளே சுமித்ரா வந்தி, இன்று சுஹாகிற்கு பதிலாக நீ வேலை செய்து கொண்டிருக்கிறாயே! உன் ஓரகத்திக்கு உடல்நல கேடு எதுவும் இல்லையே?” என்றாள்.

மித்ரோ மாமியாரை நேராக பார்க்காமல், கடைக் கண்ணால் பார்த்து இடக்காக பதில் சொன்னாள்.”உங்கள் செல்ல மருமகள் ஃபூலா பிறந்த வீட்டிற்குப் போன பிறகு, அந்த துக்கத்தில் நீங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவதையே விட்டு விட்டீர்கள்,” என்றாள்.

” விடிந்ததும் விடியாதமாக இப்படி புதிர் போட்டால் எப்படி மித்ரோ? உன் ஓரகத்திக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லை தானே.”

மித்ரோ, மாமியாரை மேலும் கீழும் பார்த்துவிட்டு, “ஒன்றுமே தெரியாத மாதிரி நடிக்காதீர்கள் அம்மா! மகள்கள் மருமகள்கள் நிறைந்திருக்கிற வீட்டில் வழக்கமாக என்ன நடக்கும்? ஒருத்தி கொஞ்சநேரம் கணவனோடு கூடிக் குலாவி விட்டு, அதற்காக ஒன்பது மாதம் வருத்தப்படுவாள். இன்னொருத்தியோ பாட்டிக்குச் சீராட்ட பேரனைப் பெற்று தருவாள்!” என்றாள்.

“அடிப்பெண்ணே! நீ சொல்வது உண்மையா?”

மாமியாரின் முகத்தில் படர்ந்த செம்மையையும் பதட்டத்தையும் கவனித்து,

மித்ரோ, அவளை வம்புக்கி ழுத்தாள். “அம்மா, பொறுமையாக இருங்கள். இப்படி அவசரப்பட்டால் எப்படி? இது என்ன ராத்திரியோடு ராத்திரியாய் முடிகிற காரியமா? நீங்கள் இன்னும்ஒன்பது மாதம் காத்திருக்கத்தான் வேண்டும்” என்றாள்.

தனவந்தியின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் முத்துக்களாக உதிர்ந்தன. “உன் வாயில் நெய்யும் சர்க்கரையும் போட வேண்டும். உன் வாக்கு பலிக்கட்டும். நல்லதே நடக்கட்டும்” என்றாள்.

இந்த சந்தோஷத் தேதியை தன் கணவனோடு பகிர்ந்து கொள்ள விரைந்த தனவந்தியை பார்த்து, மித்ரோ, மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். ”மனிதப் பிறப்பின் பின்னால் இது எம்மாதிரியான விசித்திரமான வியாபாரம்! தன் மகன் விதை விதைத்தால் அது புண்ணியம்! அடுத்தவர் விதைத்தால் அது பெரும் பாவம்!”

குர்தாஸ் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, தனவந்தி சமையலறைக்கு திரும்பி வந்து ஒரு பலகை எடுத்துப் போட்டுக் கொண்டு மருமகளுக்கு அருகே உட்கார்ந்தாள்.

பால் காய்ச்சிக் கொண்டிருந்த மித்ரோவை பார்த்து, சந்தோஷமாக,”என் புத்தியை என்னவென்று சொல்ல? நேற்று முழுவதும் சுஹாக்கை வீடு துடைத்து பெருக்க வைத்துக் கொண்டிருந்தேன். உன்னுடைய ஓரகத்தி என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டாளோ?” என்றாள்.

“என் ஓரகத்தி என்ன நினைத்துக் கொண்டுவிடப் போகிறாள்? அவள் போன ஜென்மத்தில் உங்களுடைய சேடிப் பெண்ணாக இருந்திருப்பாள்!

நீங்கள் உட்கார் என்றால் உட்காருவாள். எழுந்து நில் என்றால் நிற்பாள்,” என்று பதிலளித்தாள்.

தனவந்திக்கு சுஹாகின் மீது பாசம் பொங்கி வந்தது.” சுஹாக் நன்றாக இருக்க வேண்டும் சுமித்ராவந்தி! கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்! காலம் தாழ்த்தி விட்டானே தவிர நமது பிரார்த்தனைகளை அவன் நிராகரிக்கவில்லை” என்றாள்.

மித்ரோ மாமியாரை சீண்டிப் பார்த்தாள்.”அம்மா, நீங்கள் சொல்கிற அந்த கடவுளை யார் பார்த்திருக்கிறார்கள்? அந்தக் கடவுளின் உண்மையான தூதர் உங்கள் மகன் தான். அவர்தான் விதையை விதைத்திருக்கிறார்,” என்றாள்.

தனவந்தி காதுகளை மூடிக்கொண்டாள்.” ஹே ராம்! என் தலையில் பாவ மூட்டையை ஏற்றி விடாதே மருமகளே. இந்த ஏழை அவனுடைய கருணைக்காக எப்போதும் ஏங்கிக் காத்திருக்கிறேன்,” என்றாள்.

மித்ரோ, உட்கார்ந்த இடத்திலிருந்து ரொட்டி மாவு பிசையும் தட்டை கை நீட்டி எடுத்த போது, அவளுடைய ஆடை உடலை கெட்டியாக பிடிக்காமல், தளர்ந்து இருந்ததை தனவந்தி கவனித்து திடுக்கிட்டாள். மித்ரோவின் வாளிப்பான கட்டுக்கோப்பான உடல் எப்போது எப்படித் தளர்ந்து போனது என்று யோசித்தாள்.

திடீரென ஏன் இப்படி மெலிந்து விட்டாள்? பல நொடிகள் தொடர்ந்து தன் மருமகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். வாயைத் திறந்து எதையோ கேட்க நினைத்தபோது தன்வந்தியின் பார்வை, மித்ரோவின் பெரிய பெரிய கண்களின் மீது படிந்தது. இதை கவனித்த மித்ரோவால் வாயை மூடிக் கொண்டு இருக்க முடியவில்லை.” அப்படி என்ன என்னை விழுங்கி விடுவது போல பார்க்கிறீர்கள் அம்மா? ஏதாவது கேட்க வேண்டுமென்றால் நேரடியாக கேட்டு விடுவது தானே,” என்றாள்.

மருமகள் தன் மனத்தைப் படித்து விட்டதை கண்டு சற்றே தடுமாறி, உடனேயே சமாளித்துக் கொண்டு, தனவந்தி, தயக்கத்துடன், நிறுத்தி நிறுத்தி,

“மாமியார் சொல்வதை தவறாக நினைத்துக் கொள்ளாதே மருமகளே. நீ ஏன் இளைத்துப் போய்க் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டாள்.

மித்ரோ முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு, பாத்திரத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் பாலின் மீது ஒரு கை தண்ணீரை தெளித்தாள்.

தனவந்தியின் கண்கள் துப்பட்டாவிற்கு உள்ளே இருக்கும் மித்ரோவின் உடலை ஊடுருவின.

மித்ரோ இன்னமும் வாயை திறக்காமல் இருந்ததை பார்த்து தனவந்திக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்நேரமும் கேலி கிண்டல் சிரிப்பு பேச்சு வாக்குவாதம் என்று கலகலப்பாக இருப்பவள் இப்படி எப்படி மௌனமாக மாறினாள்?

தனவந்தி கெஞ்சலோடு “மருமகளே” என்று அழைத்தாள்.

மித்ரோ புருவத்தைச் சுருக்கிக் கொண்டு தன் மாமியாரை ஏறிட்டு பார்த்து விட்டு மீண்டும் விறகைச் சரி செய்து அடுப்பை ஊதுவதில் ஈடுபட்டாள்.

மடையற்ற காட்டாற்று வெள்ளம் போல துள்ளிப் பாயும் மருமகள், இன்று இருட்டு அறையைப் போல ஏன் மௌனமாக இருக்கிறாள்?

தனவந்திக்கு சர்தாரியின் நினைவு வரவே, ஒரு நொடியில் அவளுக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. அவன் தான் கண்டிப்பாக எதையோ சொல்லி இவளை காயப்படுத்தி இருப்பான்! அன்று கணவனின் அறையில் கேள்வி பதிலாகவும் விசாரணையாகவும் நடந்த நிகழ்ச்சி, ஒரு வேளை தினமும் தொடர்கிறதோ? தன்வந்தி கனிவான குரலில், “மகளே எனக்கு எல்லாம் புரிகிறது. எல்லாவற்றுக்கும் என் புத்தி கெட்ட மகன்தான் காரணம். சின்னச்சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதுபடுத்தி, சண்டை போட்டு, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பான்!” என்றாள்.

இதைக் கேட்ட மித்ரோ, கண்களில் கோபம் கொப்பளிக்க, அடிபட்ட சிங்கம் போல கர்ஜித்தாள்.”வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதால் ஒரு பயனும் இல்லை. அம்மாவும் மகனும் சேர்ந்து, என் தோலைச் சீவி, என்னைக் கண்டதுண்டமாக வெட்டி ஊறுகாய் போட்டு விடுவது தானே” என்றாள்.

தனவந்தி வாயடைத்து நின்றாள். அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. மாமியாரின் முகத்தில் கரி பூச ஃபூலா வந்தி ஒருத்தி போதாதா? இப்போது இவளும் அதே பாதையில் செல்கிறாளே! அவளை சமாதானப்படுத்தி புரிய வைக்கிற வகையில், ”மகளே, என் மகன் சுபாவத்தில் கடுகடுவென்று இருப்பவன் தான். ஆனால், சூதுவாது தெரியாதவன். கடவுளின் கிருபையால் உன் மடியிலும் குழந்தைகள் தவழும்போது அவன் தானாகவே வழிக்கு வந்து விடுவான்” என்றாள்.

மித்ரோ மாமியாரை பார்த்துக் கொண்டே நின்றாள். அவளது கண்கள் நெருப்பென கனன்றன. குரலோ கூர்மையான கத்தி போல. சிவந்த முகத்துடன், ” அம்மா, உங்கள் மகனிடம் ஏதேனும் இருந்தால், இந்த மித்ரோ, கீழ் ஜாதிப் பெண்ணின் கால் கழுவின நீரை குடித்தாவது, தான் பிறந்த பலனை அடைந்து விடுவாள்!” என்றாள்

சம்மட்டியை எடுக்காமல், தன் சொற்களாலேயே, மாமியாரின் நெஞ்சத்தில் கூர்மையான ஆணிகளை இறக்கினாள் மித்ரோ. தனவந்தி நெஞ்சு துடிக்க ஹா ஹா என்று பெருமூச்சு விட்டாள்.

மித்ரோவின் முகத்தைச் சிதைத்து விடலாமா என்று தனவந்திக்கு ஒரு கணம் தோன்றியது. ஆனால், வயிற்றில் ஏற்பட்ட சங்கடத்தில், வாயைத் திறந்து மருமகள் கதறியதில் ஏதேனும் உண்மை இருக்குமோ என்று எண்ணிக் கலங்கினாள்.

குரல் தழுதழுக்காமல் கண்களில் கண்ணீர் கூட வராமல், தனவந்தி வெகு நேரம் சிலை போல நின்று கொண்டிருந்தாள். அவள் இடம் காலம் நேரம் எல்லாவற்றையும் மறந்து விட்டிருந்தாள்.

“அம்மா”

தலை நிமிர்த்தி பார்த்தபோது, எதிரே சுமித்ராவதி அல்ல, சுஹாக் நின்று கொண்டிருந்தாள். பரிவுடனும் கூச்சத்துடனும்.

“இரண்டாம் ஜாமத்தில் கண்ணயர்ந்து விட்டேன் போலிருக்கிறது. தினப்படி வேலைகள் எல்லாம் சுணங்கி விட்டன. ஒரு குரல் கொடுத்து என்னை எழுப்பிருக்கலாமே அம்மா” என்றாள் சுஹாக்.

தனவந்தி எதுவும் பேசவில்லை. ஒளியிழந்து வெளிறிப் போன பார்வையோடு, இலக்கின்றி, எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். பிறகு திடீரென்று சுஹாகின் தோள்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு, “நான் இனி உயிர் வாழ்வதில் பொருள் ஏதுமில்லை. நான் இறப்பது தான் நல்லது,” என்று கதறினாள்.

குல்ஜாரிலாலும் அவன் மனைவி ஃபூலாவந்தியும் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டதை தனவந்தி மறுபடியும் நினைத்து வருந்துகிறாள் என்று சுஹாக் நினைத்தாள். ” சுமித்ராவந்தி சரியாகத்தான் சொல்கிறாள். இந்த வீட்டில், குல்ஜாரிக்கும் ஃபூலாவுக்கும் சமமாக நீங்கள் வேறு யாரையும் கருதுவதில்லை,” என்று சுஹாக் மாமியாரை மறைமுகமாகச் சாடினாள்.

தனவந்தி தலையசத்து, ” இல்லை மருமகளே! விஷயம் அது இல்லை,” என்றாள்.

சுஹாக் விடுவதாயில்லை. ” இல்லை அம்மா. இதுதான் விஷயம். இல்லாவிட்டால், மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மாமியார் வீட்டில் சென்று உட்கார்ந்திருப்பானா? அந்த அப்பாவி ஒருநாள் இல்லையேல் ஒரு நாள் கண்டிப்பாக தன் தாயிடம் திரும்பி வருவான். உங்களைப் போன்ற தைரிய

சாலி பெண்மணிக்கு சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?” என்றாள்.

தனவந்தியின் முகத்தில் தெரிந்த குழப்பத்தை பார்த்து, சுஹாக், மன்றாடுகிற குரலில், ” அம்மா, என் மீது சத்தியம், அந்த மூளை கெட்டவர்களுக்காக நீங்கள் இனியும் உங்களை வருத்திக் கொள்ளக் கூடாது,” என்றாள்.

தனவந்தியின் புண் பட்ட இதயத்திற்கு, மருமகளின் வார்த்தைகள் மருந்தாக இருந்தன. கண்களை துடைத்துக்கொண்டு மருமகளை பாசத்துடன் பார்த்து சிரித்தாள்.

“சுஹாகந்தி, உன் ஓரகத்தி ஏதோ சொல்கிறாளே, அது நிஜமா?” என்றாள்.

சுஹாக், புரிந்து கொண்டு, பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

“அதைப் பற்றி இப்போதிலிருந்தே ஏன் கவலைப்பட வேண்டும்? நான் நன்றாகத் தான் இருக்கிறேன் அம்மா” என்றாள்.

தனவந்தி கண்களை துடைத்துக் கொண்டு மனதிற்குள்ளேயே, “என்னைப் போன்ற துரதிர்ஷ்டசாலிக்கு இப்படி ஒரு நல்ல மருமகளை கொடுத்தாயே இறைவா! உன் கருணையே கருணை,” என்று கண்ணீர் மல்கினாள்.

தேநீர் கோப்பையை மாமியார் முன்னால் வைத்து, சப்பாத்திக்கல்லில் இருந்த சப்பாத்தியை திருப்பிப் போட்டபடியே, மிகுந்த முதிர்ச்சியுடன், சுஹாக், ” சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனதை தளர விடலாமா அம்மா?” என்று மாமியாரிடம் கேட்டாள்.

“எனக்கு கொஞ்சம் கூட பசி இல்லை முதலில் உன் மாமனாருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வா” என்றாள் தனவந்தி.

சப்பாத்தியை கல்லில் இருந்து எடுத்து, அதற்கென இருக்கும் டப்பாவில் வைத்துவிட்டு, சுஹாக், போலிக் கோபத்துடன், “மாமனார் இப்போது தான் பல் விளக்கி இருக்கிறார் இவ்வளவு சீக்கிரம் சாப்பிட மாட்டார். நீங்கள் சாப்பிடவில்லை என்றால் நானும் சாப்பிடப் போவதில்லை அம்மா” என்று மாமியாரை அதட்டினாள்.

தனவந்தி ஒரு துண்டு சப்பாத்தியை விண்டு வாயில் இட்டபோது, கண்களில் நீர் பெருகியது.. எங்கோ பிறந்து வளர்ந்த பெண், இந்த அதிர்ஷ்டக் கட்டைக்கு இப்படிச் சேவை செய்கிறாளே என்று மனம் சந்தோஷத்தில் பூரித்தது.

மாமியாரின் கவனத்தை திசை திருப்ப, சுஹாக், கூச்சத்துடன், “அம்மா, மாமனாரிடம் இப்போது எதுவும் சொல்ல வேண்டாம்” என்றாள்.

தனவந்தியின் உடலிலும் மனதிலும் புத்துணர்ச்சி பெருகியது.

“நன்றாகத்தான் சொன்னாய் போ. உன் மாமனார் இந்த நாளுக்காகவும் இந்த செய்தியை கேட்பதற்காகவும் ஏங்கிக் காத்துக் கிடக்கிறார். அவரால் இந்த சந்தோஷத்தை தாங்க முடியாது மகளே” என்றாள்.

நடுமருமகள் மித்ரோவின் கடும் சொற்களை மறந்து, தனவந்தி கணவனின் அறைக்கு வந்தபோது அவளது கால்கள் தரையில் பாவவில்லை.

கம்பளிக்குள் ஒடுங்கிக் கிடந்த குர்தாஸ், தனவந்தி தன் தினசரி கடமைகளை மறந்து விட்டதாக குற்றம் சாட்டி, ”ரொட்டியும் தேநீரும் இன்னும் வரவில்லையே. மதிய சாப்பாட்டின் போது தான் கிடைக்குமா?” என்று கேட்டார்.

கட்டிலில் உட்கார்ந்த தனவந்தி மருமகளுக்கு குரல் கொடுத்தாள்.

“மகளே சுஹாக்! உன் மாமனாருக்கு காலையுணவு கொண்டு வா.”

குர்தாஸ் எழுந்து உட்கார்ந்து கொண்டார். “இதோ பார் தன்வந்தி, இப்படி நீ உட்கார்ந்த இடத்திலிருந்து அதிகாரம் செய்து கொண்டிருந்தால் இந்த மருமகளும் தனிக்குடித்தனம் போய்விடுவாள்” என்று எச்சரித்தார்.

தனவந்தி எரிச்சலுடன், ”ஃபூலாவந்தி வீட்டை விட்டுப் போனாலும் போனாள், இந்தக் கிழவியின் மீது தீராக் களங்கம் ஏற்பட்டு விட்டது. இந்த வயதான காலத்தில், குறைந்தபட்சம் நீங்களாவது எனக்கு ஆதரவாக இருப்பீர்கள் என்று நினைத்தேன்,” என்று எரிச்சலுடன் கூறினாள்.

குர்தாஸ் சிரித்துக் கொண்டே, “நான் உனக்கு ஆதரவாகப் பேசியிருந்தால், இந்த வீட்டில் இன்னும் இரண்டு தனி அடுப்புகள் எரிய ஆரம்பித்திருக்கும்” என்றார்.

கணவனின் கேலிப்பேச்சு தனவந்திக்கு எரிச்சலூட்டியது.

கோபமான குரலில், ” இப்படி வாய்க்கு வாய் என்மீது பழி சுமத்துவதற்கு பதிலாக, பாவம் ஃபூலாவந்தி ஒன்றும் தெரியாத அப்பாவி, நான் தான் அவளை துன்புறுத்தப் பிறந்த ராட்சசி என்று ஒரேடியாக சொல்லிவிடுங்களேன்” என்று சிடுசிடுத்தாள்.

குர்தாஸ், இன்னும் பலமாகச் சிரித்து, “என்னிடம் ஏன் கோபப்படுகிறாய் வந்தி? உன்னைக் கைப்பற்றிய பிறகு, உன் எந்த கெட்ட குணத்தையும் நான் பொருட்படுத்தியதே இல்லையே,” என்றார்.

நன்றாக தூங்கி எழுந்து உடலுக்கு ஓய்வு கொடுத்திருந்ததால், கணவனுக்கு இம்மாதிரி கேலி வேடிக்கை எல்லாம் தோன்றுகிறது என்று தனவந்தி புரிந்து கொண்டாள்.

சுஹாக், தேநீர் கோப்பையையும் ரொட்டியையும் மாமனார் முன் வைத்ததும், தனவந்தி கிண்டல் தொனியில்,” மகளே சுஹாக், என்னைப் பற்றி கவலைப்படாமல் பயமேதுமின்றிஉன் மாமியார் எவ்வளவு பொல்லாதவன் என்று உன் மாமனாரிடம் சொல்,” என்றாள்.

சுஹாக் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு, புருவத்தை நெறித்து விட்டு வெளியே சென்றதும், தனவந்தி சிரித்தாள். “மருமகளுடைய முகத்தில் ஏதாவது குறை குற்றம் தெரிந்ததா மகாராஜா? ” என்றாள். பிறகு சடார் என தீவிரமான முகத்துடன், “ஏதாவது நல்ல செய்தி கேட்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லட்டுமா?” என்றாள்.

குர்தாஸ் தேநீரை உறிஞ்சி கொண்டு, “தனவந்தி, வயதான காலத்தில் மனிதன் எந்த நல்ல செய்தியை எதிர்பார்க்கப் போகிறான்? நமக்கு எதிரே மலை போல நிற்கும் இந்த கஷ்ட காலம் விடிந்தால் அதுவே போதும்!” என்றார்.

கணவரின் பேச்சைக் கேட்டு தனவந்தி வருத்தமுற்றாலும், புன்னகையுடன் அவரைச் செல்லமாக அதட்டி, “இவ்வளவு வேதாந்தம் எதற்கு மகராஜ்? நான் சொல்லப் போகிற செய்தியை கேட்டதும் மறுபடியும் குடும்ப வாழ்க்கைக்குள்

திரும்பி வரத் துடிப்பீர்கள்,” என்றாள்.

தனது ஒளி இழந்த கண்களால் குருதாஸ் மனைவியை பார்த்ததும், தானாகவே அனைத்தையும் புரிந்து கொண்டார்.

தனவந்தி கர்ப்பமுற்ற போதெல்லாம், குட்டிக் கண்ணனின் வரவை அவருக்கு இப்படித்தான் தெரிவிப்பாள்!

******

“மருமகளுக்கு ஒரு ஜோடி ஜிமிக்கி செய்ய வேண்டும் மகனே,” என்று சொன்ன அம்மாவை பன்வாரி ஆச்சரியத்துடன் பார்த்தான்.

மகனிடமிருந்து பதில் வராமல் போகவே, ” இப்போது உனக்கு தொழிலில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், முடியாதென்று மட்டும் சொல்லி விடாதே மகனே” என்றாள்.

தாயின் குரலில் இருந்த கெஞ்சலைக் கேட்டு பன்வாரி மனதுக்குள் சிரித்துக் கொண்டான். சுஹாகின் காட்டில் மழை தான்! இப்போதெல்லாம் அம்மா அவளுக்காக புதிது புதிதாக எதையோ தினமும் தருவித்துக் கொண்டிருந்தாள். பன்வாரி சிரித்துக்கொண்டே, “அம்மா நீங்கள் வேண்டுமானால் உங்கள் மருமகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுங்கள். ஆனால் நான் அவளை இப்படிக் கெடுக்கப் போவதில்லை” என்றான்.

தனவந்தி, மகிழ்ச்சியில் பூரித்தபடி , “என் மருமகள் லட்சத்தில் ஒருத்தி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவளைக் கெடுக்க நாம் யார்? உண்மையை சொல்ல வேண்டுமென்றால், வைரம் போன்று ஜொலிக்கும் அவளுக்கு முன் தங்கம் வெள்ளி எல்லாம் எம்மாத்திரம்? மாலைக்கும் வளையலுக்கும் அடிமைப்பட்டதல்ல அவளது அழகு!” என்றாள்.

பன்வாரிலால் படுத்தபடியே அம்மாவை பார்த்து, பெருமிதம் நிறைந்த குரலில்,” அம்மா, மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லுங்கள். நீங்கள் ஆணையிட ஏன் இவ்வளவு தாமதம்?” என்றான்.

மகன் காட்டிய மரியாதையில் தனவந்தியின் உடலும் ஆன்மாவும் ஒருசேர திருப்தி அடைந்தன.

“மகனே பன்வாரி உன்னை மகனாகவும் சுஹாகை மருமகளாகவும் அடைய கொடுத்து வைத்த நான், ராஜ்ஜியம் எதுவும் இல்லாத போதிலும் எந்த மகாராணிக்கும் குறைந்தவளில்லை” என்றாள். பிறகு தணிந்த குரலில், ” மகனே ஜிமிக்கியை நான் சர்தாரியின் மனைவிக்காகச் செய்ய நினைக்கிறேன்” என்றாள்.

அம்மா இன்னும் ஏதோ சொல்லப் போகிறாள் என்று பன்வாரி காத்திருந்தான்.

தனவந்தி, மகனருகே வந்து அமர்ந்து, கிசுகிசுத்த குரலில், “மகனே அன்று நடு மருமகள் மித்ரோ, சுஹாக் கர்ப்பமாய் இருக்கும் நல்ல செய்தியை தெரிவித்த போது, சாதாரணமாகத்தான் இருந்தாள். ஓரகத்தியைப் பற்றிப் பேசிச் சிரித்து மகிழ்ந்திருந்தாள். திடீரென என்ன ஆயிற்றென்று தெரியவில்லை, பிசாசு பிடித்தவள் போல கத்த ஆரம்பித்து விட்டாள். ராட்சசியைப் போல மூச்சுவிட்டு கொண்டு கோபத்தில் துடிக்க ஆரம்பித்து விட்டாள். மகனே, என்ன சொல்ல! இந்த பெண்ணை ஒருவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. சில நேரம் மிகவும் நல்லவளாக இருந்து எல்லோரையும் மகிழ்விக்கிறாள். சில நேரம் மிகவும் கெட்டவளாக மாறிவிடுகிறாள். மனம் இருக்கும்போது உண்மையான தோழியைப் போல, தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் அள்ளிக் கொட்டுகிறாள். மனம் கெடும் போது, வீட்டாரை கடித்துத் துப்புகிறாள்.” தனவந்தி பார்வையை தாழ்த்திக் கொண்டு, ” என்ன சொல்லட்டும் பன்வாரிலால், எனக்கு வார்த்தைகள் சிக்கவில்லை” என்றாள்.

பிறகு நிறுத்தி நிறுத்தி, “மருமகள் உன் தம்பியை வாய்க்கு வந்தபடி திட்டுகிறாள். மகனே, உன் தம்பியிடம் குறை ஏதும் இல்லையே? நான் உன்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்” என்றாள்.

பன்வாரி அம்மாவை பார்ப்பதை தவிர்த்தான். பிறகு தொண்டையை செறருமிக் கொண்டு, “சர்தாரியிடம் எந்த குறையும் இல்லை அம்மா! ஆனால், இந்த விஷப்பாம்பு, எங்களைப் போன்ற சாதாரண ஆண்களுக்கு கட்டுப்பட மாட்டாள்,” என்று கூறினான்.

தனவந்தி சற்று நேரம் மௌனமாக அமர்ந்திருந்த பின்பு மோவாயில் கை வைத்துக் கொண்டு, ” மகனே, நம் வீட்டு மருமகளை பற்றி அக்கம் பக்கத்தில் அரசல் புரசலாக பேசிக்கொகிறார்களே, அதில் ஏதேனும் உண்மை இருக்குமா?” என்று கேட்டாள்.

“உண்மை எது, பொய் எது, என்று முடிவு செய்பவர் வேறொருவர். ஆனால், சர்தாரியின் மனைவியின் நடத்தை சரியில்லை அம்மா,” என்றான் பன்வாரி.

தனவந்திக்கு தொண்டை அடைத்தது. மகனே என்று ஆரம்பித்து பேச வராமல் பாதியில் நிறுத்தினாள்.

“அம்மா இக்பால் அத்தையின் மகன் நிஹாலை உங்களுக்கு தெரியும் தானே? மண்டியில் கடையில் உட்கார்ந்து கொண்டு, எல்லோர் காதிலும் விழுகிற மாதிரி, ” பன்வாரி அண்ணா, உங்கள்” அண்ணியிடம் நிஹால் அவளை விசாரித்ததாகச் சொல்லுங்கள்” என்று கூச்சலிடுவான்” என்றான்.

தனவந்தியால் மேற்கொண்டு கேட்க முடியவில்லை. காதுகளைப் போத்திக்கொண்டு, ” போதும் பன்வாரி, நிறுத்து. இம்மாதிரியான பேச்சுக்கெல்லாம் கால் தலை எதுவும் கிடையாது. எந்த ஆதாரமும் கிடையாது. இந்த வீட்டு குருமார்களின் மீது சத்தியம்! நான் இருக்கும் வரை இந்த வீட்டில் வெளி ஆண்களின் நிழல் கூட விழவில்லை என்பது தான் உண்மை” என்றாள்.

பன்வாரிக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. வெகு நேரம் வரை மனதுக்குள்ளேயே வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான். பிறகு, “கண்களில் மண்ணை தூவ வேண்டும் என்று நினைத்தால் எத்தனையோ வழிகள் உண்டு” என்றான்.

(தொடரும்)

Series Navigation<< மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 5மித்ரோ மர்ஜானி – 7 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.