
1
ஒரு குழந்தை அறிந்ததை
நான் அறியவில்லை
ஒரு பித்தன் அறிந்ததை
நான் அறியவில்லை
ஒரு மூடன் அறிந்ததை
நான் அறியவில்லை
அறிந்தவை எல்லாம்
அற்ப ஆயுளில் அழிந்துபோக
எனக்கு முன்னும் பின்னுமாய்
இருக்கும் வாழ்க்கையில்
நான் எங்கு இருக்கிறேன்
என்று என்னைச் சொல்ல
அனுமதிக்காத ஒரு நேரத்தில்
இருப்பதைக் கொண்டு
இதைச் சொல்கிறேன்
இயற்கையில் அழிவையும்
இணைத்துக் கொண்டால்
முடிவேயில்லை அதற்கென
நிற்காத போராட்டத்தை
நான் தான் முடித்தாக வேண்டும்
2
யாரும் அமராத நாற்காலிகளில்
உட்காரவேண்டிய எண்ணம்
வீணாய்ப் போயிற்று
மின்விசிறியின் காற்று
நஷ்டத்தைக் கூடுதலாய் காட்டியது
தரையெங்கும் கிரானைட் கற்கள்
வெளிச்சத்தைச் சம அளவில் பிரதிபலித்து
இருளையும் ஒளியாக்கி
யாரோ ஒருவரின் எண்ணத்தை
ஆழத்திற்கு எடுத்துச் சென்றன
தலையில்லாத நான்கு கால்
பிராணி ஒன்று
புகழ்பெற்ற ஓவியனுடன்
விண்ணில் பறந்தது
மரியாதை தெரியாதவர்கள் வீட்டில்
அமர்வதற்கு நாற்காலிகள் இல்லை
ஓய்வுபெற்ற உடல்
காத்திருப்பின் வாடிய மலர்
சுமைதாங்கியின் பண்பாட்டுச் சித்திரம்
3
பிறந்துகொண்டே இருக்கிறேன்
அப்படி இல்லையென்றால்
எப்பொழுதோ நான்
இறந்து விட்டிருப்பேன்
என்னை நான் நினைக்கிறேன்
என்னை நான் மறக்கிறேன்
என் சவத்தை
இழுத்துக்கொண்டு அலைகிறேன்
மறைந்திருக்கும் நபர்
என்னுடன் என்றும் வருவது போல்
யாரோ எழுதியதை
இன்று நான் படிக்கிறேன்
கைது செய்யப்பட்ட
எல்லாவற்றிற்கும்
விடுதலை கொடுக்கிறேன்
பிறகு ஒன்றன்பின் ஒன்றாகச்
சொல்கிறேன் அல்லது எழுதுகிறேன்
இப்பொழுது பார்க்கிறேன்
என் முகம்
எனக்குத் தெரிகிறதா என்று
தெரியவில்லை என்றால்
என்னை நான் விட்டு விடுகிறேன்
என்னைத் தாக்கும்
எது ஒன்றும்
உண்மையாகி விடுமென