பிரிவினும் உளதோ பிரிதொன்று?

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
ありあけの
つれなく見えし
別れより
暁ばかり
憂きものはなし

கனா எழுத்துருக்களில்
ありあけの
つれなくみえし
わかれより
あかつきばかり
うきものはなし

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் ததாமினே

காலம்: கி.பி 866-965.

99 வயது வரை உயிர்வாழ்ந்த இவர் கி.பி 898 முதல் 920 வரை அரசவைக் கவிஞராக இருந்தார். இளவரசர் கொரேசதா தனது இல்லத்தில் நடத்திய கவிதைப்போட்டியில் இவரது கவிப்புலமை முதன்முதலில் வெளிப்பட்டது. பின்னர் காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் பட்டியலில் இடம் பெறும் அளவுக்கு வாழ்வில் பல உயரங்களை அடைந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 82 பாடல்களை இயற்றியிருக்கிறார். மற்ற புலவர்களின் புகழ் காலப்போக்கில் மங்கி வந்தாலும் தொடர்ந்து பல நூற்றாண்டுகளுக்கு இவர் புகழுடன் இருந்திருக்கிறார். இவரது மகன் ததாமியும் (இத்தொகுப்பின் 41வது பாடலை இயற்றியவர்) சிறந்த புலவராகப் போற்றப்படுபவர்.

பழங்குறுநூறு தொகுப்பை உருவாக்கிய சதாய்யேவிடமும் அவரது நண்பர் இயேதகாவிடமும் (இத்தொடரின் 98வது பாடலின் ஆசிரியர்) இந்த நூறு செய்யுள்களில் சிறந்ததாக எதைக் கருதுவீர்கள் எனக் கேட்கப்பட்டபோது சிறிதும் தயக்கமின்றி இருவருமே இப்பாடலைச் சுட்டினராம்.

பாடுபொருள்: காதலி சந்திக்க மறுத்த பொழுதின் நினைவு.

பாடலின் பொருள்: சந்திக்க ஆவலுடன் ஓடோடி வந்த என்னை அதிகாலை வரை காத்திருந்தும் காண விருப்பமில்லை என நீ மறுத்ததிலிருந்து அந்த அதிகாலை நிலவைவிடத் துன்பம் தரக்கூடிய கொடிய பொருள் வேறொன்றில்லை.

மிகவும் எளிமையாக நேரடியாகப் பொருள்கொள்ளத் தகுந்த பாடல். இதுவரை இத்தொகுப்பில் இடம்பெற்ற காதல் பாடல்களிலிருந்து சற்று வேறுபட்டது. காதலன் சந்திக்க மறுத்த துயரைக் காதலி வெளிப்படுத்தும் பாடலோ ஆணொருவன் ஒரு பெண்ணைக் கண்டவுடன் காதலில் விழும் பாடலோ அல்ல. ஏறத்தாழ நம் “முதல் மரியாதை”யில் வரும் நடுத்தர வயதுக் காதலை ஒத்தது. சாய்ந்துகொள்ளத் தோள் தேடும் ஆண்மகனுக்கு ஆறுதல் கிடைக்காத நிலையை உரைப்பது. எனவே வயதில் இளையோருக்குப் புரிவது சற்று சிரமம் என்ற முன்னுரை ஒன்றும் இப்பாடலுக்குக் காணக்கிடைக்கிறது.

அன்று முழுநிலவு உதயமாகிப் பட்டொளி வீசி வானத்தை வலம்வரத் தொடங்கி இருந்தது. உன்னைச் சந்திக்க வந்து வருகையைத் தெரிவித்துவிட்டு உன் சாளரத்துக்கு வெளியே உன் அழைப்பை எதிர்நோக்கி இருந்தேன். முழுநிலாதான் நகர்ந்துகொண்டே இருந்ததே தவிர உன் குரல் எனை நோக்கி நகரவே இல்லை. நேரம் தேயத்தேயக் குளிர்நிலவு வாட்டத் தொடங்கியது. அப்போதிலிருந்து இன்றுவரை அத்தகைய கொடுமையைத் தரக்கூடிய வேறொரு பொருள் எதுவும் தோன்றவில்லை.

வெண்பா:

காத்தும் இருந்தும் விரையினும் சாளரம்
சாத்தும் மனமது கொண்டவள் – கைத்தும்
விரட்டும் பொருளோ துயர்சூழ் விடியல்
நிலவின் பிரிதொன் றிலது

கைத்து – வெறுத்து
(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

Series Navigation<< வெண்பனியா வெண்மலரா?நிலவு ஒரு பனியாகி >>

One Reply to “பிரிவினும் உளதோ பிரிதொன்று?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.