‘நியூமீ’ – பொது ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு திட்டம்

சென்ற வருடம் செப்டம்பர் மாதம் பிறந்த நாளுக்கு சில வாரங்களுக்கு முன்பு, முகநூலில் நியூமீ பொது ஆரோக்கியம் மற்றும் எடை இழப்புக்கான திட்டத்தை மருத்துவர் பால் அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்தேன். மருத்துவர் பால் என்றால் அமெரிக்க வெள்ளை மருத்துவர் என்று நினைக்க வேண்டாம். அமெரிக்கர் தான், ஆனால் பச்சைத் தமிழர். முழு பெயர் பழனியப்பன் மாணிக்கம்.

சொந்த முயற்சியில் இதற்கு முன் பேகன் டயட், இடைப்பட்ட உண்ணாவிரதம் (இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்) முயற்சி செய்திருக்கிறேன்.

சிறந்த டயட் முறைகளில் ஒன்றான பேலியோ, வேகன் இரண்டும் கலந்த டயட் உணவு முறை தான் பேகன் டயட். அமெரிக்க மருத்துவர் மார்க் ஹைமன் அவர்களால் தொடங்கப்பட்ட உணவு முறை. மார்க் ஹைமனின் ‘உணவு: நான் என்ன சாப்பிட வேண்டும்?’ மிகவும் பிரபலமான புத்தகம். மருத்துவர் மார்க் ஹைமனின் புத்தகங்கள், கட்டுரைகள், காணொளிகள், வலையொளிகளை பின்பற்றி என்னால் சில வருடங்களுக்கு முன்பு, அதிகமாக மூன்று மாதங்கள் வரை இந்த உணவு முறையைக் கடைபிடிக்க முடிந்தது. உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம்.

இடைப்பட்ட உண்ணாவிரதம் (இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங்) அநேகம் பேர் கேள்வி பட்டு இருப்பீர்கள். எட்டு மணி நேர உணவு, 16 மணி நேர விரதம் என்பது, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் அருமையானதொரு டயட் முறை. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க முடிவது மட்டுமல்லாமல், திரும்பவும் பழைய நிலைக்கு மாற முடியும். மறுபடியும் இந்த உணவு முறையையும் ஓரிரு மாதங்களே தொடர முடிந்தது.

நாமே சொந்தமாக முயற்சி செய்யும் போது, சரியாகத் தான் செய்கிறோமா என்ற சந்தேகம் இருக்கும். நம்மை கவனிக்க ஆட்கள் கிடையாது. பொறுப்புணர்வு பல தடவை தவறுவதற்கு வாய்ப்புள்ளது.

நியூமீ பொது ஆரோக்கியம் மற்றும் எடை இழப்புக்கான திட்டத்தில் மருத்துவர் பால் அவர்களின் மேற்பார்வையில், வாழ்க்கை பயிற்சியாளர் ஒருவரோடு இந்த திட்டத்தை பின்பற்றுவதற்கான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்படும்.

மாதம் நூற்றி ஐம்பது டாலர்கள் கட்டணம். மூன்று மாதங்களுக்கு முன் பணம் கட்டினால், நான்காவது மாதம் இலவசம். அமெரிக்காவில் உள்ள நபர்கள் தான் கலந்துக் கொள்ள முடியும் என்று இல்லை. வாட்ஸ்அப், மெய்நிகர் கூட்டங்கள் என்பதால், உலகில் எந்த நாட்டில் இருந்தும் கலந்து கொள்ளலாம்.

கண்டிப்பாக லாப நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. ஒவ்வொரு அணியிலும் மிகக் குறைவான நபர்களைத் தான் சேர்த்துக் கொள்கிறார்கள். முதலில் பரிசோதனை முயற்சியாக சிறு குழுவை வைத்து இலவசமாக ஆரம்பிக்கப்பட்டது. எனக்கு முன் இந்த திட்டத்தில் சேர்ந்த நண்பர்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

“ஒரு நோயாளியின் HbA1c அளவு பதினொன்றில் இருந்து ஏழாகக் குறைந்தது, மற்ற நோயாளிகள் இந்த முறையைப் பின்பற்றி கணிசமான அளவு எடையை இழந்துள்ளனர். இதுவரை எங்களின் அனுபவத்தின் அடிப்படையில், இந்த உலகில் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்கிறார் மருத்துவர் பால்.

HbA1c என்பது கிளைகேட்டேடு ஹீமோகுளோபின் ஆகும். இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை ஹீமோகுளோபின் புரதத்துடன் பிணைக்கப்படும் போது உருவாகிறது. இது சிவப்பு அணுக்களுக்குள் காணப்படுகிறது. பொதுவாக சாதாரண நீரிழிவு பரிசோதனை அன்றைய தினத்தில் உள்ள இரத்த சர்க்கரை அளவை மட்டுமே கணக்கிட்டு கூறுகிறது. ஆனால் இந்த HbA1c பரிசோதனையில் கடந்த மூன்று மாதங்களில் இரத்த சர்க்கரை அளவு எவ்வளவு இருந்திருக்கிறது என்பதை கூட அறிந்து கொள்ளலாம்.

கட்டணம் செலுத்தி ஆரம்பிக்கப்படும் இரண்டாவது அணியில், செப்டம்பர் முதல் வாரத்தில் சேர்ந்து கொண்டேன். பலன்களை அனுபவிக்க, குறைந்தது மூன்று மாதங்கள் அணியில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நான் மூன்று மாதங்களுக்கு முன் பணம் செலுத்தினேன்.

திட்டம் ஆரம்பிக்கும் முன், விரிவான இரத்தப் பரிசோதனை செய்யச் சொல்கிறார்கள். மூன்று மாதம் முடிவில் மறுபடியும் இரத்தப் பரிசோதனை செய்து, உடல் எடை குறைப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொழுப்பு அளவுகள் (LDL , HDL, Triglycerides) கண்டிப்பாக குறைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்கிறார்கள்.

நாம் உணவு உண்ணும் நேரத்தில் கவனம் செலுத்துவார்கள், திட்டத்தின் மற்ற தூண்களான தியான பயிற்சியாளர், உணவியல் நிபுணர், உடற்பயிற்சி பயிற்சியாளர் களுடனான சந்திப்புகளும் நம் வாழ்க்கை முறையின் அடிப்படையில் மெதுவாகச் சேர்ப்பார்கள். மூன்று மாதங்களில் இரத்த வேலையை மீட்டிப்புச் செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள். இது ஒரு தூய எடை இழப்பு திட்டம் மட்டுமல்ல, நம் சர்க்காடியன் தாளத்தை (circadian rhythm) மீட்டமைப்பதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். திட்டத்தின் முடிவில் இரத்த வேலையில் கண்காணிக்க கூடிய உள் மாற்றங்களை ஏற்படுத்தும்.

மருத்துவர் பால் அவர்களின் மேற்பார்வையில், வாழ்க்கை பயிற்சியாளர், அணியில் கலந்து கொண்ட ஒவ்வொருவருடன், தனித்தனி வாட்ஸ்அப் குழுமம் உருவாக்கப்படும். இந்தக் குழுவில் நமக்குத் தோன்றும் எந்த சந்தேகங்களையும் கேட்டு பதில் பெறலாம். ஒவ்வொருவர் உடல்நிலையும் வெவ்வேறாக உள்ளதால், நமக்கான பிரத்யேக ஆலோசனைகள் இந்த சிறு குழுமத்தில் வழங்கப்படும்.

மொத்த உறுப்பினர்கள் கொண்ட பெரிய குழுமமும் உண்டு. மருத்துவர் பால் இந்த குழுமத்தில் அவரின் தினசரி முன்னேற்ற அறிவிப்புகளை பகிர்ந்து கொள்கிறார். மற்ற குழு உறுப்பினர்கள் கேட்கும் பொது கேள்வி பதில்கள் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை, மருத்துவர் பாலிடம் கேள்வி பதில் மெய்நிகர் சந்திப்பும் உண்டு.

ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நாள், நேரத்தில் உங்கள் வாழ்க்கை பயிற்சியாளருடன், நம்முடைய சென்ற வார முன்னேற்றம் எப்படி இருந்தது, அடுத்த வாரத் திட்டம் என்னவென்று கலந்தாலோசிக்க படும்.

முதல் மாதம் நம் உடலை நேரம் கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறைக்கு (டைம் ரெஸ்ட்ரிக்டெட் ஈட்டிங்) தயாராக்குவது. உதாரணமாக, காலை உணவு ஒன்பது மணிக்கு எடுத்தால், மாலை உணவு ஏழு மணிக்கு உணவு முடிக்க முடியும் என்றால் பத்து மணி நேர உணவு உண்ணும் நேரம், மீதி பதினான்கு மணி நேரம் விரத நேரம். நம்மால் பத்து மணி பதினைந்து நிமிடம் அல்லது முப்பது நிமிடம் தான் கடைபிடிக்க முடியும் என்றால், அதை தினந்தோறும் தவறாமல் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

சூரிய உதயத்தில் இருந்து சூரிய மறைவை ஒட்டி, நம் உடலில் இயற்கையாக நிகழும் சர்க்காடியன் சுழற்சியை (circadian rhythm) பின்பற்றி இந்த டயட் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் சூரிய ஒளியையொட்டி நம் தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் சுரப்பு நின்று விட்டு, இன்சுலின் சுரப்பு ஆரம்பிக்கும்.

சர்க்காடியன் கடிகாரத்தின் உதவியுடன், ஒவ்வொரு உறுப்பும் காலை உணவில் தொடங்கி, பல மணி நேரங்களுக்கு உணவைச் செயலாக்க குறிப்பிடப் பட்டுள்ளது. காலை உணவு எட்டு மணிக்கு என்பது எட்டு முதல் பத்து மணி நேரம் வரை நமது அமைப்பு அதன் செயல்பாட்டை சரியாகச் செய்யும். ஒவ்வொரு உணவிற்கும் உடல் செரிமானம், உறிஞ்சுதல் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு தேவைப்படுகிறது, இது பல மணி நேரம் நீடிக்கும். ஒரு உணவுக் கடியைக் கூட உடல் செயல்படுத்த இரண்டு மணி நேரம் ஆகும்.

பத்து மணி நேர கால அளவு முடிவடையும் போது, ​​வளர்சிதை மாற்ற உறுப்புகள் மற்றும் குடல் இன்னும் உணவைக் கையாளும், ஆனால் அவை நாள் முழுவதும் வேலை செய்யக்கூடாது என்பதால் அவற்றின் செயல்திறன் குறையும். இது அமில வீச்சு அல்லது அஜீரணத்தை உருவாக்கும். தாமதமான இரவு உணவு அல்லது சிற்றுண்டி நம் உடலமைப்பை இன்னும் குழப்பிவிடும். இது நம் உடலை கொழுப்பை எரிப்பதில் இருந்து கொழுப்பை உருவாக்கும் நிலைக்கு மாற்றும்.

நாம் இரவும் பகலும் தன்னிச்சையாக சாப்பிடும் போது, ​​கொழுப்பை உருவாக்கும் செயல்முறை ஒருபோதும் அணைக்கப்படாது. செரிமானம் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து உருவாகும் குளுக்கோஸ் நமது இரத்தத்தை எடுத்துக்கொள்கிறது மற்றும் கல்லீரல் குளுக்கோஸை உறிஞ்சும் திறனை இழக்கிறது. இதை தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு தொடர்ந்து அதிகரித்து, நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைக்கு நம்மை கொண்டு வந்து விடும்.

நமது சர்க்காடியன் கடிகாரங்களைக் கருத்தில் கொள்ளாமல், நாம் கலோரிகளைக் கண்காணிப்பது, உடற்பயிற்சி செய்வது, இனிப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை அகற்றுவது மற்றும் நிறைய புரதங்களை உட்கொள்வது உதவாது. நேரம் மிகவும் முக்கியமானது. தாமதமான இரவு உணவை நாம் தவிர்க்க வேண்டும். நமது காலை உணவு நேரத்தை மாற்றுவதையும் தவிர்க்க வேண்டும். தீர்வு எளிது. நாம் ஒரு உணவு அட்டவணையை வரைந்து அதை கடைபிடிக்க வேண்டும்.

அதனால் தான், தூங்கி எழுந்தவுடன், ஒரு மணி நேரத்துக்கு காபி, டீ அருந்துவதை வேண்டாமென்று சொல்கிறார்கள். என்னால் காபி, டீ குடிக்காமல் இருக்க முடியாது என்று சொல்பவர்கள், பிளாக் காபி, டீ சர்க்கரை இல்லாமல் அருந்தலாம். தூங்கி எழுந்தவுடன் நீர் அருந்துவது மிகவும் நல்லது.

அதேமாதிரி, இரவில் சூரிய மறைவுக்குப் பின்னர் இன்சுலின் சுரப்பு நின்று விட்டு, தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் சுரப்பு நிகழும். கடைசி உணவை எட்டு மணிக்கு முன்பு முடித்துக் கொள்வது உத்தமம்.

நாமெல்லாம் நடு இரவு இரண்டு மணிக்கு பிரியாணி சாப்பிடுவதெல்லாம், நம் உடல் நலத்திற்கு நாம் செய்யும் பெரும் அநீதி. எப்போதாவது விருந்து மாதிரி உணவு உண்ண வேண்டும் என்றால், மதியம் இரண்டிலிருந்து மூன்று வரை, இன்சுலின் சுரப்பு உச்சத்தில் இருக்கும் போது சாப்பிடலாம். அதற்காக முழு கட்டு கட்டவேண்டாம் தினந்தோறும்.

இந்த உணவு உண்ணும் நேரத்தை, தினந்தோறும் கட்டாயம் கடைபிடிக்க கோருவார்கள். முக்கியமாக ஒரு நாளின் கடைசி உணவு இந்த கட்டுப்படுத்த உணவு முறைக்குள் இருக்குமாறு வலியுறுத்துவார்கள். ஓரிரு வாரங்களிலேயே, நம் உடலே இந்த நேர வரைமுறைக்குள் பழக்கப்பட்டுவிடும்.

ஏதோ ஒரு காரணத்தால், மிகத் தாமதமாக உணவு உண்ண நேரிட நேர்ந்தாலும், உங்கள் வயிறு அதை ஏற்றுக் கொள்ள கொஞ்சம் அசெளகரியப் படலாம். ஒரு நாளின் கடைசி உணவு தாமதமாக உண்ண நேர்ந்தால், நம் உடல்நிலை முன்னேற்றத்தில் சில நாட்கள் பின்னோக்கி நகர்ந்து விடுவோம். அதற்காக எல்லா நாளும் நாம் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடியாமல் போகலாம். ஒரு நாள் இரவு உணவு தாமதம் ஆகிவிட்டது என்றால், மறுநாள் காலை உணவை தாமதமாக உண்பது மிகவும் முக்கியம்.

முதல் வாரத்தில் உங்கள் ஒரு நாளின் கடைசி உணவு (லாஸ்ட் பைட்) இரவு எத்தனை மணிக்கு முடிக்க முடியும் என்று உங்களிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். அடுத்தடுத்த வாரங்களில், இரவு உணவு இன்னும் முன்னே முடிக்க முடியுமா என்று திட்டமிடப்படும்.

எட்டு மணி நேரம் உணவு உண்ணும் நேரம், பதினாறு மணி நேரம் விரதம் என்பது தான் இறுதி குறிக்கோள். ஆனால், உங்களால் பத்து மணி நேரம் நேரம் தான் தினம் உணவு உண்ணும் நேரமாகக் கடைபிடிக்க முடியும் என்றால், அதைத் தவறாமல் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

முதல் மாதம் நேரக்கட்டுப்பாடு தான் முக்கியமே தவிர, எந்த உணவு உண்ண வேண்டும் என்பதில் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அதனாலேயே, இந்த டயட் முறையை பின்பற்ற ஆரம்பிப்பது எளிது.

இரண்டாவது மாதத்தில் இருந்து, உங்கள் உணவின் கலோரிகள் அளவு இரண்டாயிரத்தில் இருந்து, ஆயிரத்து எண்ணூறு அல்லது அதற்கும் குறைவாக படிப்படியாக குறைக்க முடியுமா என்று உங்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள் .

நீங்கள் காலையில், மாலையில், இரவில் என்ன உணவு உண்ணவேண்டும் என்று பரிந்துரைகள் கிடையாது. எந்த உணவுகளை உண்பது என்பதை விட, ஒரு நாளில் காலையில் எந்த நேரத்தில் ஆரம்பித்து, இரவில் எத்தனை மணிக்கு முடிக்கிறீர்கள் என்பதுதான் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம்.

ஆனால், எடை குறைப்பு விரைவாக நிகழ வேண்டும் என்று விரும்புவார்கள், ஒரு நாளைக்கு ஆயிரத்து அறுநூறு கலோரிகள் அல்லது அதற்கும் குறைவான கலோரிகள் உணவு உண்பது முக்கியம். அதற்காக

ஆயிரத்து இருநூறு கலோரிகளுக்கு குறைவாக கண்டிப்பாக உண்ணக் கூடாது.

ஒரு நாள் உணவில் இருநூறு கிராமில் இருந்து படிப்படியாக நூற்றி ஐம்பது கிராம் அல்லது அதற்கும் குறைவாக உங்களால் கார்போ ஹைட்ரேட்ஸ் உணவுகளை உண்ண முடியும் என்றால், எடைக் குறைப்பு கண்டிப்பாக விரைவாக நிகழும் என்கிறார்கள். கார்போ ஹைட்ரேட்ஸ் உணவுகளை குறைத்து, புரதச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பது எடைக் குறைப்புக்கு உதவும்.

மைஃபிட்னஸ்பால் செயலி மூலம் உங்கள் கலோரி அளவில், எத்தனை சதவிகிதம் கார்போ ஹைட்ரேட்ஸ், புரதம், கொழுப்பு உணவுகள் இருக்க வேண்டும் என்று குறிக்கோள்களை நீங்கள் திட்டமிட்டு, நீங்கள் தினமும் உண்ணும் உணவை கண்காணித்தால், மைஃபிட்னஸ்பால் செயலியே (கட்டண பதிப்பு) எந்தந்த உணவில், எவ்வளவு கார்போ ஹைட்ரேட்ஸ், புரதம், கொழுப்பு , நார்ச்சத்து உணவுகள் இருக்கிறது என்பதைத் தெரிவித்துவிடும். வெள்ளை அரிசி, மாவுச் சத்துப் பொருட்களில் கார்போ ஹைட்ரேட்ஸ் அளவு அதிகம். இந்த உணவுகளை உண்ணக்கூடாது என்றில்லை, குறைவாக உண்பது நல்லது.

நீங்கள் தினமும் உண்ணும் உணவை, எடை அளவு கருவியில் அளந்து மைபிட்னெஸ்பால் செயலி மூலம் அளவிட்டு மறு நாள் பகிரச் சொல்லுவார்கள்.

டயட்டீஷியன் உடனான சந்திப்பில் சிறந்த உணவுகள் பரிந்துரை வழங்கப்படும். நீங்கள் வலைதளத்தில் தேடினாலே கார்போ ஹைட்ரேட்ஸ், புரதம், கொழுப்பு , நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தை பின்பற்றும் போது, நமக்குத் தெரியாமல் நம் உடலில் ஆரோக்கிய மாற்றங்கள் நிகழ குறைந்தது ஆறு வாரங்களாகும். அதுவரை பொறுமையாக கடைபிடிக்க வேண்டும். ஓரிரு வாரங்களிலேயே, காலை பசியெடுப்பது மட்டுப்பட்டு விடும். ஒன்பது மணிக்கு தான் காலை உணவை உண்பது என்றால், உங்கள் உடலே படிப்படியாக இந்த மாற்றத்துக்கு உள்ளாகி விடும். அதற்கு முன்பு, பசியெடுக்காது.

அதே மாதிரி, ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது கண்டிப்பாக நம் பசி அளவை மட்டுப்படுத்தும். முதல் வாரமே மூன்று லிட்டர் அளவில் ஆரம்பிக்கப்பட மாட்டாது. இரண்டு லிட்டரில் ஆரம்பித்து, ஒவ்வொரு வாரமாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்படும். முதல் ஓரிரு வாரங்களுக்கு புதிதாக அதிகமாக நீர் அருந்துவதால் நடு இரவில், கழிவறை நோக்கி அடிக்கடி நாம் செல்ல வேண்டியிருக்கும். ஆனால், போகப் போக நம் உடல் பழகிவிடும்.

உறக்கம் குறைந்தது எட்டு மணி நேரமாக இருக்குமாறு அறிவுறுத்துவார்கள்.

உணவு, நீர், உறக்கம் மூன்றும் தினமும் ஒரு திட்டமிட்ட வரைமுறைக்குள் படிப்படியாகக் கொண்டு வரப்படும். தடாலடி மாற்றங்கள் என்று இல்லாமல், மிக மெதுவாக, நிதானமாக பல்வேறு நிலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவோம்.

வாழ்க்கை பயிற்சியாளருடனான சந்திப்பு போக, தியான பயிற்சியாளர், உணவியல் நிபுணர், உடற்பயிற்சி பயிற்சியாளர் களுடனான சந்திப்புகளும், அவர்களின் ஆலோசனைகளும், பயிற்சிகளும் நமக்கு வழங்கப்படும்.

இந்த திட்டம் பற்றிய விரிவான, அதிகமான காணொளிகள் மருத்துவர் பால் அவர்களின் முகநூல் பக்கத்திலும், வலைஒளி பக்கத்திலும் இருக்கின்றன. அவைகளை பார்த்து நாமே பின்பற்றிக் கொள்ளலாம். ஆனால், ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையில் மருத்துவர், மருத்துவரால் பயிற்சிக்கப் பட்ட வாழ்க்கை பயிற்சியாளரின் மேற்பார்வையில் நம் ஆரோக்கியத்தில் நீண்ட கால நன்மை வேண்டுபவர்களுக்கு, மிகவும் உபயோகமான திட்டம்.

மிகக் குறுகிய காலத்தில் பயன் வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் எந்த பலனும் தராது.

இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து, என்னால் இரவு உணவு ஏழு முப்பதுக்குப் பிறகு உண்ண முடியவில்லை. கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் இருந்தால், இரவு கொஞ்சம் பசித்தாலும், நீர் அருந்தினால் போதும். இந்தத் திட்டத்தில் சேர்ந்த பிறகு காலையில் காபி, டீ குடிக்கத் தோன்றுவதில்லை. காலை உணவு 9 மணிக்குப் பிறகு தான் சாப்பிடுகிறேன்.

முதல் மாதத்திலேயே இரண்டு பவுண்ட் எடை குறைந்து விட்டது. 3 மாதத்தில் நான்கு பவுண்டு எடைக்கு கொஞ்சம் அதிகமாக எடை குறைந்து விட்டது. அடுத்தடுத்த மாதங்களில், கார்போஹைட்ரேட் உணவை இன்னும் குறைத்து உடல் எடை குறைப்பை தீவிரப்படுத்த முடியுமென்று நினைக்கிறேன். மூன்று மாத முடிவில் இரத்த பரிசோதனை அளவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனக்கு. இந்தத் திட்டத்தை ஒவ்வொரு நாளும் நேர்மையாக கடைப் பிடித்ததின் பயனை இப்போது அனுபவிக்கிறேன்.

இந்தத் திட்டத்தில் சேர்ந்ததின் முதன்மை நோக்கம் எடை குறைப்பு மட்டுமல்ல, நீண்ட கால ஆரோக்கியமான உடல் நலத்தை போற்றும் வாழ்க்கை வாழ்வதுதான். அடுத்தடுத்த இரத்தப் பரிசோதனையில் உடல் நலத்தில் இன்னும் நல்ல முன்னேற்றங்கள் இருக்குமென்று நம்புகிறேன்.

எனக்கும், மற்ற நண்பர்கள் பலருக்கும், நேரம் கட்டுப்படுத்தப்பட்ட உணவுண்பது (டைம் ரெஸ்ட்ரிக்டெட் ஈட்டிங்) கட்டாய விருப்பம் என்றில்லாமல், ஒரு பழக்கமாகிவிட்டது என்றே சொல்லலாம். எல்லா உறுப்பினர்களும் இருக்கும் பெரிய வாட்ஸ்அப் குழுமத்தில் மற்ற உறுப்பினர்களின் உடல் நல முன்னேற்ற பதிவுகள், ஊக்கமளிக்கும் மேற்கோள்கள், நாம் ஒரு விஷயத்தை சிறப்பாகக் கடைபிடிக்கும் போது மற்றவர்களின் ஊக்க கருத்துக்கள் என்பது நாம் இந்தத் திட்டத்தை உற்சாகமாக கடைபிடிக்க மிகவும் உதவியாக இருக்கிறது.

எனக்குத் தெரிந்து எந்த பக்க விளைவுகளும் இல்லை. என்ன நீங்கள் சரியாக இந்த முறையை பின்பற்ற வில்லை, அல்லது பாதியிலே இந்தத் திட்டத்தை விட்டு விலக வேண்டும் என்று விரும்புபவர்கள் உங்கள் உடல் ஆரோக்கியம் பழைய நிலைக்கு திரும்பி விடும். மூன்று மாதங்கள் குறைந்தது இந்தத் திட்டத்தில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள். நம் உடலில் நமக்கேத் தெரியாமல் இந்த மாற்றங்கள் நிகழ, குறைந்தது மூன்று, நான்கு மாதங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து இருப்பது அவசியம். அதன் பின் அவர்கள் திட்டத்தை பின்பற்றி பலன் பெறுவது சுலபம். ஆனால், இது கண்டிப்பாக வாழ்நாள் முழுமைக்கும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற திட்டம் தான் என்று உறுதியாக நம்புகிறேன்.

நம் ஆரோக்கியம் நம் கையில்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.