தொடர்பிற்கு வெளியில்

ஆறு மணி வாக்கில் ஜெனி படுக்கையிலிருந்து எழுந்து செல்வது நிழல் போன்று தெரிந்தது. மின்விசிறியை அணைத்து விட்டு சன்னலை சின்னதாக திறந்து வைத்துப் போயிருப்பாள் போலும். முன்பனிக்காற்று அறையைக் குளிரூட்டியது. ம்மூம்..ம்மூம்.. என்று தொடர்ச்சியான ஃபோன் அதிர்வுகள்.

ஊரிலிருந்து அம்மா அழைக்கிறாள். இந்த நேரத்தில் எதற்கு விடாமல் அழைத்துக் கொண்டிருக்கிறாள்? ஒரு வேளை கனவாக இருக்கும்.  அவசரம் என்றால் ஜெனிக்கும் அழைப்பு வந்திருக்குமே! 

ம்மூம்..ம்மூம்..

வயிற்றில் கால் தூக்கிப் போட்டுக்கொண்டு கழுத்தை கட்டிப்பிடித்து உறங்கிக் கிடக்கும் பொடிசின் மென் குறட்டை அதிர்வில் இமை திறக்க முயன்று தோற்றுக் கொண்டிருக்கையில்…

நானும் தம்பியும் மாமா வீட்டிற்கான பழைய காட்டுப் பாதையின் வழி திரும்பிக் கொண்டிருக்கிறோம். வழியில் தென்படும் முட்புதர்களில் எல்லாம் உலர்ந்த தேங்காய் அரைப்பு சிதறல்களாகக் கொட்டிக் கிடக்கிறது. கையில் தொங்கும் தூக்குவாளியில் ததும்பும் கருவாட்டுக் குழம்பின் நிறத்தில். அதே மணத்துடன். சட்டென்று ஞாபகம் வந்தவனாய் தம்பியிடம், “டேய், நாம வந்த சைக்கிள் எங்கடா?” என்கிறேன். அவன் முழிப்பதைக் கண்டு, “ச்சே, மாமா வீட்டிலையே போட்டுட்டுனா…சரி நீ நட.. நான் போய் எடுத்து வாறேன்” என்று செல்கிறேன். 

மாமா வீடு முத்தாரம்மன் கோவில் சரிவில் இருக்கிறது. காம்பௌண்டிற்குள் நிறுத்தப்பட்டிருக்கும் சைக்கிள்களில் என் ஹெர்குலசைக் காணாமல் தேடுகிறேன்.

வீட்டின் முன் தொலி உரிந்த பசுமாடொன்று இமைகள் இல்லாத பெரிய  கண்களை உருட்டியபடி செந்நிறப் பற்களுடன் வாசலை மறித்து நிற்கிறது. ஒரு கோணத்தில் நாய் போலவும் தெரிகிறது. பார்ப்பதற்கே அருவருப்பு.

காம்பௌண்ட் வாசல் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து கொள்கிறேன். “அஜி.. லேய் அஜி.”  

வீட்டிலிருந்து எச்சில் பருக்கைகள் ஒட்டிய கையுடன் வெளியில் வருகிறான் அஜி. அவனது கையை அந்தப் பிராணி ஆசையாக நக்குகிறது. ‘விருத்தி கெட்ட சவம்’ என்று  மனதிற்குள் வைகிறேன். என்னைப் பார்த்து சிரித்தபடி, “அப்பா இன்னைக்கு கருவாட்டுக் கொளம்பும், கோழியும் பொரிச்சு வைச்சுட்டுப் போயிருக்காரு..செம ருசி,” என்கிறான். “நான் வீட்டுல இருந்து கொண்டு வைச்சதுல மயிர,” என்கிறேன் கோவமாக. 

“லேய் யாங் சைக்கிள் எங்கல?” 

பதிலில்லை. நீலப் பூச்சையாக மாறி சுவரில் ஏறி தாவிச் செல்கிறான் அஜி. “தாயிலி” என்று கூவியபடி மறுபடியும் அதே படிக்கட்டில் அமர்கிறேன். படிக்கட்டு இப்போது விரிந்த வாழை இலை ஆக, நான் ஓரத்தில் அமர்ந்திருக்கிறேன். இலையின் நடுவில் குவிந்து கிடக்கும் பரோட்டாவின் மீதிருந்து ஓடிவரும் கறிக் குழம்பு என் லினென் கோட்டைத் தொடுகிறது. “கொஞ்சம் தள்ளி உக்காருங்க.. கொழந்த சாப்புடுகது தெரியலையா?” என்கிறாள் பிளாஸ்டிக் கவரின் வாயைப் பிடித்து குழம்பை கொட்டிக் கொண்டிருப்பவள். 

மாமா தனது வழக்கமான கள்ளச் சிரிப்புடன் வருகிறார். இவர் செத்துப் போய் விட்டார் என்று யாரோ சொன்ன ஞாபகம். “வீட்டினகம் வாடா,” என்கிறார். கையில் இருக்கும் அவருக்குப் பிடித்த கருவாட்டுக் குழம்பு வாளியை மறைத்துப் பிடிக்கிறேன். ‘பாத்தார்னா இங்கையே தொறந்து கைவிட்டு கொளம்புல மிதக்கும் கருவாட்டையும் முருங்கைக்காயையும் காலி பண்ணிருவாரு’ என்று எண்ணிக்கொள்கிறேன்.

வீட்டிற்கு நடப்பவர் அந்த பிராணியைக் கண்டுகொள்ளாமல் அகம் நுழைவதை வியந்தபடியிருக்கிறேன். அஜியின் தாத்தா என் முன் வருகிறார். சட்டையில்லாத உடம்பில் கட்டியிருந்த வேட்டி மடிப்பிற்குள் கிடக்கும் மூத்திரப் பையின் குழல் தொடையை ஒட்டிச் செல்கிறது. “மக்கா, அம்மையையும், சித்தியையும் வரச் சொல்லு. எனக்கு கொஞ்சம் காரியம் பேச வேண்டியிருக்கு.” 

“என்ன தாத்தா?”

“உன் மாமன் திருந்தி வந்திருக்கான்னு நினைச்சேன். இல்ல போலருக்கு.” 

‘எதுக்கு திருந்தணும்? பொண்டாட்டியில்லன்னா அவரு என்ன தான் செய்வாரு?’ என்று நினைத்துக் கொள்கிறேன். 

“சரி தாத்தா.”

“மறந்துறாத,” என்றபடி செல்கிறார். 

ஈரக் கையால் ஸ்விட்ச் போர்டைத் தொட்டது போன்று நடுமுதுகில் மடார்  என்று ஒரு அறை. உறக்கம் கலைந்து, பிரமையில் எழுந்தமர்ந்தேன். தலைமாட்டில் டீ ஆறிக் கொண்டிருந்த பீங்கான் குவளையைக் கையில் எடுத்தேன்.

“ஆபீஸ் போகண்டாமா?” என்று அதட்டிவிட்டு சன்னல் சீலையை ஒதுக்கிக் கட்டிக்கொண்டிருந்தாள் ஜெனி. 

இறந்து பத்து வருடங்களுக்கு மேலாகிற மாமா எதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் இறந்த அத்தையின் அப்பாவுடன் வந்தார்? அதுவும் அந்த தாத்தாவுடன் பேசியதாக ஒரு வார்த்தை கூட ஞாபகமில்லை.

தேநீரில் பால் துளியாக கலக்கம் கண்ட மனதில் பிரக்ஞை குவிந்து கலைந்த படி இருக்க சைலென்ட்டில் கிடந்த ஃபோனை எடுத்தேன். அம்மா ஆறேழு முறை அழைத்திருக்கிறாள். ‘Call Mom once you are free’ தம்பி வாட்ஸப் செய்தி அனுப்பியிருக்கிறான். 

இம்மனநிலையில் அம்மாவுடன் பேசினால் நன்றாகும் தான், ஆனாலும் இந்நேரம் வேண்டாம் என்று பட்டது. கிளம்பும் அவசரத்தில் ஜெனி சரியாகப் பேசாவிடின் என் தலை தான் கிடந்து உருளும்.

எழுந்து போய் சிங்க் செட்டில் காய்ந்து கொண்டிருந்த பாத்திரங்களை துலக்கத் துவங்கினேன். 

கடைசியாக அஜியிடம் ஊரில் வைத்துக் கண்டு நலம் விசாரித்த போது பேசியது. அவன் அக்காள் சுஜியிடம் பேசி இரண்டு வருடங்கள் இருக்கும். திருமண நாள், கிரிஸ்மஸ் வந்தால் பரஸ்பரம் வாழ்த்துச் செய்தி அனுப்புவதோடு சரி. 

வெகுநேரமாக  ஒரு பாத்திரத்தையே தேய்த்துக்கொண்டு திறந்த பைப்பில் இருந்து கொட்டும் நீரையே வெறித்துக் கொண்டிருப்பதை கவனித்தவள் தண்ணீரை அடைத்தாள். 

“என்னாச்சு ஒனக்கு?”

கனவில் பார்த்ததை சினிமாக் கதையாக அப்படியே ஜெனியிடம் ஒப்பித்தேன்.  

“ஹ்ம்ம்.. இதுக்குத் தான் நேரத்துக்கு வீட்டுக்கு வான்னு சொல்றது. சாயுங்காலமானா பிரெண்ட்ஸ் கூட அரட்டை அடிக்கப் போக வேண்டியது. அறக்கப் பறக்க சாப்பிட்டு அரைகுறையா தூங்குனா நைட்மேர் வராம,” நேற்றைய மீதியை சமயம் பார்த்து இறக்கிவிட்டாள். 

“இவ ஒரு மண்ணுக் கூதி,” என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டு மள மளவென்று எனக்கான வேலையை முடிக்கத் தொடங்கினேன்.

திருமணம் முடிந்த கையோடு மாமனார் பரிசளித்த பிளாட் சாவியினை வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்தது. பொடிசு பிறந்ததிலிருந்து ஊருக்கு அதிக போக்குவரத்து இல்லாமல் எதுவும் நல்லது கெட்டது என்றால் மட்டும் சென்று தலை காட்டி வருவது என்றாகிவிட்டது. 

எங்கள் இருவருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை. ஜெனி உற்பத்தி மேலாளர். நான் விற்பனைத்துறை தலைவர்.  கொரானாவிற்குப் பிறகு ஹை-பிரிட் பணியாளர்களாக (வீட்டில் இருந்து பணிபுரிபவர்கள்) மாறினோம். பராமரிப்புச் செலவீனங்களில் லாப வரவை கவனித்த நிர்வாகம் ஹை-பிரிட் பணிமுறையை தற்போது  நிரந்தரம் ஆக்கிவிட்டனர். 

தொடக்கத்தில் குதூகலமாக இருந்தது. நாட்கள் போகப்போக வீடு அலுவலகமாக மாறி வேலை இடைவெளியில் அவசரக் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறோம். வெகு நாட்களுக்குப் பிறகு ஜெனி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கிறாள். அதற்குள் பிரேக்ஃபாஸ்ட் தயாரிக்க வேண்டும்.       

ஒரு கண்ணாடிக் கோப்பையில் ஓட்ஸைத் தட்டி, ஷியா சீட்ஸ் ஒரு கரண்டி கலந்து, பாதாம் பால் விட்டு மைக்ரோவேவிற்குள் தள்ளி டைமரில் மூன்று நிமிடங்களை அழுத்தினேன். 

குறையத் தொடங்கிய நொடிகள் எண்களாக ஒளிர்ந்து கொண்டிருக்க, ஆழத்தில் மீந்து கிடக்கும் நினைவு எச்சத்தால் புள்ளி வைத்து விரித்தெடுத்த சித்திரப் பரப்பில் பால்ய கோலத்தில் அசைவுறத் துவங்கினேன்.    

2

மாமா வீடு என்றால் அப்போதெல்லாம் எனக்கு கொள்ளைப் பிரியம். நானும் தம்பியும் விளையாட எங்கள் வயதொத்த அஜியும், சுஜியும் அங்கிருந்தனர். அவர்கள் வீட்டு முற்றத்தில் எங்கள் வீட்டைப் போலில்லாமல் தென்னை மரங்களும், எப்போதும் காய்போட்டுக் கிடக்கும் கொய்யா மரமும் உண்டு.

“வீடு பிடிச்சுருக்கா மருமகனுக்கு? உனக்குத் தான்.. எம்மவள மட்டும் கெட்டுனாப் போதும்,” என்று மாமா என்னைச் சீண்ட அத்தையின் கால்களுக்குப் பின் நாணி நிற்கும் சுஜியைப் பார்க்க கூச்சமாக இருக்கும்.

மாமா அத்தையை திருமணம் செய்த அன்று சுஜி, அஜியுடன் நாங்கள் அனைவரும் தேவாலயத்திற்குச் சென்றிருந்தோம். அன்று தான் சுஜி அஜியின் ஞானஸ்நானமும் நிகழ்ந்தது. திருமணப் பூசையில் மாமாவும் அத்தையும் மூன்றடி உயர சிலுவையைச் சுமந்தபடி நிற்பதைப் பார்ப்பதற்கே வேடிக்கையாக இருந்தது.  மாமா கடுகடுவென இருந்தாலும், அத்தை மலர்ந்த முகத்துடன் இருந்தாள். 

திருச்சபைக்கு எதிராக மணம் புரிந்து கருத்தரித்த பின் கிறிஸ்துவத்திற்குத் திரும்புகிறவர்கள் தங்கள் பாவத்திற்காக செய்யும் பிராயச்சித்த சடங்கு அவர்கள் மணநாளில் சுமக்கும் சிலுவை. அவமானத்தின் அடையாளம்.  

இரு வீட்டாரின் நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்து கொண்ட திருமணம் என்றாலும், கிண்டலான குசுகுசுப்புகள் எழாமல் இல்லை. இப்போது யோசித்துப் பார்த்தால் எல்லாம் அப்புப்பாவிற்காக (அம்மாவின் அப்பா) இருக்கலாம்.

‘சரஸ்வதியை கட்டலேன்னா கடல்ல விழுவேன்’ என்ற மாமாவின் மிரட்டலுக்கு அப்புப்பா பணியவில்லை என்றதும் இருவரும் ஓடிச் சென்று கட்டிக்கொண்டனர். இரண்டு பேரின் குடும்பமும் நாலாபுறமும் தேடுவதறிந்து ஒரு வாரம் கழித்து வந்தவர்களை அம்மா அழைத்துச்  சென்று அப்புப்பாவையும், தன் கூடப் பிறந்தவர்களையும் சமாதானப் படுத்தியிருக்கிறாள்.

‘வாழ்ந்து கெட்டதா இருந்தாலும் நல்லக் குடும்பத்துல தான போய் ஏறியிருக்கா’ என்று அத்தையின் உறவினர்கள் ஒருவழியாக நிறைவுற  அவர்கள் வீட்டிலும் சேர்த்துக் கொண்டனர். 

வருமானத்தில் அப்புப்பாவின் குடும்பத்தின் அளவிற்கு நிரந்தரம் இல்லையெனினும் அத்தைக்குப் பின்னிருந்த இரண்டு மகன்களையும் மூன்று கொமறுகளையும் பொருட்படுத்தாது தன் வீடு தவிர்த்து, இருந்த பதினைந்து சென்ட் நிலத்தையும் அத்தையின் பெயரில் எழுதி பத்திரத்தை மாமாவின் கையில் கொடுத்து மீசையை ஒதுக்கிக் கொண்டார் அத்தையின் அப்பா. 

திருமணத்திற்கு பின் அத்தையின் பெயர் ‘லில்லி’யானது.  

‘மூத்தவன், தான் திருமணமாகாமல் இருக்கும்போது வேறு ஜாதிப் பெண்ணை கட்டிக்கொண்டான், தனக்கு அடுத்திருக்கும் தங்கைகளின் வாழ்க்கையைப் பற்றிய அக்கறையில்லாதவன்’ என்ற பெரிய மாமாவின் பராதியை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று அம்மா அத்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த ஒரு பிற்பகலில் நான் அத்தையின் மடியில் படுத்திருந்தேன்.  

நான் தூங்கிவிட்டதாக எண்ணி, “பெரியவருக்கு என் மேல வேறக் கோவம். கல்யாணத்துக்கு முந்தி நான் அறிவொளி வவுப்பு எடுக்கப் போயிட்டு இருந்தேன். ஒருநா.. இவரு பெட்டிக்கடையோரமா சிகரெட் பிடிச்சுட்டு நின்னாரு..பெரியத்தானாச்சேன்னு சிரிச்சேன். அன்னைல இருந்து கரெக்ட்டா நான் வர்ற நேரம்  ஆஜர் ஆகிருவாரு.. பாவமா இருக்கும்,” என்றாள் அத்தை.

“அடிக் கள்ளி,” என்று அம்மா அத்தையின் தோளைப் பிடித்துத் தள்ள, பாளையுள் வெடித்துச் சரிந்த தென்னம் பூவாட்டம் சிரித்துக் கொண்டனர்.

சீதனம் கிடைத்த நிலத்திலேயே அடக்கமாக ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டார் மாமா. பால்காய்ப்பிற்கு பாதிரியார் வந்து புனித நீர் தெளித்து வீட்டை ஆசிர்வதித்தார்.

வருஷங்கள் போகப் போக மாமா முத்தாரம்மன் கோவிலில் பங்குத் தொகை கட்டிக் கொண்டிருக்கிறார், அத்தையின் ஊர்க் காரர்களுடன் வேன் பிடித்து மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடைக்குச் சென்று பலிச் சோறு உண்கிறார் என்று வந்த செய்திகளும், வயது வந்த தங்கை வீட்டில் இருக்க, தன் கொழுந்தியின் திருமணத்தை மாமா முன்னின்று நடத்திய நிகழ்வும் அத்தையின் மீது கோபத்தையும் குடும்பங்களுக்கிடையே  கொஞ்சம் கொஞ்சமாக விலகலையும் கொண்டு வந்திருந்தது.  

இப்படியிருக்க, ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு அஜியை கூட்டிக் கொண்டு வந்த அத்தை கூடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து அவர்கள் பின்னாலேயே வந்த மாமா, “என்ன அவமானப் படுத்தனும்னே அலையிரியா?” என்று அடிக்கப் பாய்ந்தார். 

“விடுடா தொட்டிப்பயல,” என்று இடை செருத்த அம்மா, “போய் அப்பாவையும் பெரிய மாமாவையும் கூட்டிட்டு வா,” என்று என்னையும் அஜியையும் அனுப்பினாள்.

“என் மானத்தை வாங்கிட்டு அலையிகா புண்டச்சி மொவா”

“அந்தப் பலவட்ரய தூக்கி மடிக்குள்ள இருத்தும் போது மானம் எங்கப்போச்சி?” என்று மூக்கைச் சிந்தினாள் அத்தை.

“இவக்கு வட்டு அளியா.. எதுக்கெடுத்தாலும் சந்தேகம்,” என்று அப்பாவிடம் கருவிக் கொண்டிருந்த மாமாவை சமாதானப்படுத்தி மூவரையும் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.  

“இவளச் சொல்லணும்.. அக்கா, மைனி, கொழுந்தின்னு கண்ட நாய்வள வீட்டுக்குள்ள கூட்டியடைச்சுட்டு இப்போ வந்து ஒப்பாரி வைச்சா,” என்று தன் தம்பியை நியாயப்படுத்திக் கொண்டு அப்பாவிற்கு இரவு சோறு விளம்பினாள் அம்மா.

ஒரு புதன்கிழமை, பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கு வீட்டிற்குச் சென்று வந்த நண்பன், “மக்கா, உங்க அத்தை வீட்டுல ஏதோ பிரச்சனை போலிருக்கு.. போலீஸெல்லாம் வந்து நிக்குது,” என்றான். 

மாலையில் பள்ளி விட்டுவந்த என்னையும் தம்பியையும் பெரிய மாமா சைக்கிளில் அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் முகம் கருத்து கலங்கியிருந்தது. 

பள்ளிச் சீருடையில் இருந்த சுஜியையும் அஜியையும் மடியில் இருத்தி அத்தையின் அம்மாவும் தங்கைகளும் அழுது கொண்டிருந்தனர். வீட்டிற்குள் இருந்து கரிந்த பிளாஸ்டிக் நாற்றம் எடுத்தது. வீட்டுச் சுவற்றில் தார் உருக்கி ஊற்றியது போல அங்கிங்காக கருந்திட்டுகள். அவற்றில் அத்தையின் சேலைத் துண்டுகள் ஒட்டியிருந்தன.  மாமாவும் சிலருமாக ஒரு சவப்பெட்டியைக் கொண்டு வீட்டு முற்றத்தில் இறக்கினார்கள். கடைசிவரை திறக்கவேபடாத அச்சவப்பெட்டிக்குள் அத்தை இருப்பதாக சொன்ன அம்மா எங்களிடம் தொட்டு முத்தச் சொன்னாள்.

துஷ்டிக்கு வந்திருந்த எங்கள் உறவினர்களில் சிலர், “சர்ச்சுக்கு தூக்கிட்டுப் போனா தெம்மாடிக் குழியில இல்லா இறக்குவாங்க. அதவிட குடும்பத்துக்கு கேவலம் உண்டுமா,” என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

திருச்சபையின் கிறிஸ்துவ வழிகாட்டுதலுக்கு எதிராக வாழ்ந்தவர்களையும், இறந்தவர்களையும் தான் தெம்மாடிக் குழியில் புதைப்பார்கள். தற்கொலை கிருஸ்துவத்திற்கு எதிரானது.

இறுதியாக அத்தை வளர்த்து விட்ட தென்னை மரத்தின் மூட்டிலேயே அவளைப் புதைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு குழி பறிக்கப்பட்டது.

ஒரு கரையோடு இடிந்தமர்ந்திருந்த அத்தையின் அப்பா திடீரென பெருங்குரலெடுத்து ஓடி வந்து மாமாவின் சட்டையைப் பிடித்தார்.  “மலையாளத்தான் வேண்டாமுன்னு சொன்னனே கேட்டாளா.. தேவிடியா மொவன் எம்மொவள கொன்னுட்டானே,” என்று அழ அத்தையின் சொக்காரர்களுக்கும் எங்கள் உறவினர்களுக்கும் இடையே சிறிது நேரத் தள்ளுமுள்ளானது. 

அத்தையின் தம்பிகள் இருவரும் அவர்களை விலக்கினர். “அத்தான் மேல கை வைச்சீங்கன்னா நடக்கது வேற,” என்று கத்தினர். மாமா சவப்பெட்டியை கட்டிப்பிடித்தபடி அமர்ந்திருந்தார். 

3

டைமரில் பீப்.. பீப் என்ற ஒலி ஓட்ஸ் தயார் ஆகிவிட்டதை உணர்த்தியது. வெந்த ஓட்ஸ் கஞ்சியை வெளியெடுத்து நறுக்கிய ஆப்பிள் துண்டுகளைப் போட்டு ஜெனிக்குப் பிடித்த பட்டைத் தூளை மேலாகத் தூவி உணவு மேசையில் கொண்டு வைத்தேன். 

பொடிசு எழுந்தால் கெல்லாக்ஸ் இருக்கிறது, பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டம் வகுத்துக் கொண்டேன்.       

உள்ளிருந்து “ஒரு நிமிஷம் இங்க வாயேன்” என்று குரல் கொடுத்தாள் ஜெனி. மொடமொடப்பான காட்டன் புடவையின் முந்தானை மடிப்பை கையற்ற தன் ரவிக்கையில் குத்திக்கொண்டு, “இந்தப் பிளீட்ட கொஞ்சம் பிடிச்சுவிடேன் பிளீஸ்,” என்றாள். 

வெகு நாட்களுக்குப் பிறகு சிரத்தையாகக் கட்டியிருக்கும் சேலையில் கொள்ளை அழகாகத் தெரிந்தவளை முழந்தாளில் நின்று வயிற்றுச் சேலையை விலக்கி முத்தம் பதித்தேன். “பொறுக்கி,” என்று சிணுங்கியவள் கன்னத்தைப் பிடித்து கிள்ளிக்கொண்டு, “ராத்திரியானா ஊர் சுத்திட்டு லேட்டா வர வேண்டியது,” என்று தொடங்க, எழுந்ததும் தணிந்த எரிச்சலில் “பிரேக்ஃபாஸ்ட் ரெடி ஆயிட்டு வா,” என்று சாப்பாட்டு மேசைக்கு நடந்தேன்.

அம்மாவிற்கு அழைக்கலாமா என்ற யோசனையில், ஃபோனின் காண்டாக்ட் லிஸ்ட்டை மேலே தள்ளிக் கொண்டிருந்தேன். 

கடைசியாக ‘திருமண நாள் வாழ்த்து’ வந்த சுஜியின் புதிய எண் கூட  இன்னும் சேமிக்கப்படவில்லை. இப்போது தான் உறைக்கிறது. நுனி நாக்கை கடித்துக் கொண்டேன்.

எத்தனையோ முறை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் போய் இறங்கிதான் கன்னியாகுமரிக்கு யாத்திரை செய்திருக்கிறேன். இருந்தாலும், சுஜி வீட்டிற்குச் சென்று அவள் குழந்தையும், கணவனுமாகக் கண்டு நலம் விசாரிக்க வேண்டும் என்று ஏனோ தோன்றியதில்லை. ஒருவிதத் தயக்கம். 

அத்தை இறந்த பின்னர் எல்லா கிரிஸ்மஸுக்கும் மாமா, சுஜி, அஜியோடு எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார். அன்று அவர் தான் கறி எடுப்பார். “மருமகன் சொல்லு கேட்கட்டு, இன்றைக்கு என்ன கறி எடுக்கலாம்?” என்று அபிப்ராயம் கேட்கும்போது சுஜி உதடுகளில் வெட்கச் சிரிப்படக்கி நிற்பாள். வரும்போதெல்லாம் எங்கள் வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டு செய்வாள்.    

பஜாரில் இருந்த கடையை விற்ற மாமா கை வியாபாரியான பின் அஜியும் சுஜியும் மேல் படிப்பைத் தொடரவில்லை. பிளஸ் டூ-வோடு நிறுத்திக் கொண்டனர். சுஜி வீட்டை கவனித்துக் கொள்ள, அஜி  அத்தை வழி சொந்தம் ஒருவருடன் இணைந்து கேபிள் டீ.வி. டீலரானான். 

அத்தை இறந்து பத்து வருடங்களுக்குப் பிறகு வந்த டிசம்பரின் முதல் வாரத்தில் நெஞ்சு வலி கண்ட மாமாவை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் கொண்டு சேர்த்தோம். செவிலியர்களும் மருத்துவரும் பதற்றமாக சுற்றி நின்ற சூழலிலும் கண்ணாடிக் கதவின் பின் நின்று அழுது கொண்டிருந்த அம்மாவையும் என்னையும் கை சைகையால் அழைத்தார். ‘சத்தியம் எதும் வாங்கவாக இருக்குமோ’ என்று நான் கலங்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அடங்கிவிட்டார். 

“எவ்வளவு செய்தாலும் இரண்டு பேருக்கும் ஒரு நிறைவு கிடையாது” என்கிற சொந்தங்களின் முணுமுணுப்போ, “செய்தது வரை போதும்” என்கிற எண்ணமோ, அஜியும் சுஜியும் தூரமாகினர்.

என் திருமணத்தன்று மூக்கு முட்ட குடித்து வந்த அஜி, சாப்பாட்டுப் பந்தியில் தகராறில் ஈடுபட்டு நாறடித்தான். விலக்கச் சென்ற அப்பாவையும் மரியாதை குறைவாகப் பேசவே அம்மா சுஜியிடம் சென்று வெடித்தாள். அஜியை கன்னத்தில் அறைந்து இழுத்து வந்த சுஜி, விழா முடியும் வரை அருகிலேயே பிடித்து இருத்திக் கொண்டாள்.

ஆரஞ்சுப் பழச் சாறோடு பிரேக்ஃபாஸ்ட்டை முடித்தெழுந்த ஜெனி, உதட்டில் மென் முத்தம் தந்து “லஞ்சுக்கு வந்துடுவேன்,” என்று கிளம்பவும் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. 

“எத்தனை வாட்டி கூப்பிடறது டா?” அம்மாவின் குரலில் கோபம் கலந்த படபடப்பு. 

“வேலையா இருந்தேம்மா” 

“உன் சின்ன மாமா கனவுல வந்தான்டா. அஞ்சு மணி ஆயிடுச்சு, பால் காரன் வந்துருப்பான்னு கதவத் தொறக்கேன். சின்னப் பிள்ளையா இருக்க ஒன்ன கைல தூக்கி வைச்சு விளையாட்டு காட்டிட்டு வாசல்ல நிக்கான்.”

“நல்ல பசிக்குதுக்கா, மீங்கறி வைச்சு சோறு தான்னு கேட்டான். அய்யோ இன்னும் உலை கூட வைக்கலியேன்னு நினைக்கவும் முழிப்புத் தட்டிடுச்சு. சொப்பனம் தான்னு மனசுக்குத் தெரிஞ்சாலும் உடம்பு கொஞ்ச நேரத்துக்கு புல்லரிச்சு நின்னுடுச்சு,” என்று அதிசயித்தாள்.  

நானும், கனவில் மாமா வந்த கதையைக் கூறவே, உடைந்து அழத் தொடங்கினாள்.

“இதே மாசம் தான் அவன் இறந்தான்.  அவன் செத்த நாள நினைவு வைச்சு  பூச சொல்லதுக்கோ, ஆத்மாக்கள் நாள் வந்தா அவன் கல்லறைல ஆரம் வாங்கிப் போட்டு, ஒரு துண்டு மெழுகுத்திரி ஏத்தி வைக்கவோ யாரு இருக்கா?”

“வந்த வழி மறந்தாச்சு. எல்லார்க்கும் அவரவர் பாடு தான முக்கியம். அவன யாருக்கும் வேண்டாம்” என்று விசும்பினாள்.  உள்ளுள் தைத்துத் தறித்தது எனக்கு. 

“கிறிஸ்மஸுக்காச்சும் நீ ஊருக்கு வந்தான்னா அஜியையும் சுஜியையும் பிள்ளைகளை கூட்டிட்டு வீட்டுக்கு வரச் சொல்லுவோம். மாமாவை நினைச்சு அன்றைக்கு எல்லாரும் சேர்ந்து சமைச்சு சாப்பிடலாம் என்ன?” 

சுஜி வருவாளா? நினைத்துக் கொண்டேன். “பாக்கிறேன் மா,” என்றேன்.

“எப்பவாச்சாதும் அஜிட்ட போன் பண்ணி பேசுடா.. பார்க்கும்போதெல்லாம் உன்னக் கேட்பான்”  

அம்மாவுடனான அழைப்பைத் துண்டித்ததும், என் ஃபோனின் தொடர்புப் பட்டியலில் அழைக்கப் படாமல் அழிய சேர்ந்து கிடக்கும் நூறு கூட்டம் எண்களுக்கிடையே அஜியைத் தேடத் தொடங்கினேன்.

“ம்பா… ம்பா…” கனவில் அரற்றும் பொடிசின் குரல் கேட்டது. 

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.