தமிழகம்-தமிழ்நாடு சர்ச்சை பற்றி

தாய்மொழியும் தாய்மண்ணும் ஒவ்வொரு மனிதனுள்ளும் எத்தனை திட்பமான உணர்வுகளால் நெய்யப்பட்டுள்ளது என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை. அதன்படி தமிழ் என்ற சொல்லே நமக்குள் ஒரு தித்திப்பை உருவாக்குவதை நாம் உணர்ந்திருப்போம். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல் உலகின் ஏதோ ஒரு மூலையில் நம் செவியில் தமிழ் விழுந்தால் நம்முள் ஏற்படும் மாற்றங்கள் தாய்மொழியின் வீரியத்திற்கு ஒரு உதாரணம். மொழியையும் மண்ணையும் ஒரே சொல்லால் சுட்டுவது என்பது “கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா…” என்பது போன்ற இரட்டிப்பு மகிழ்வு தருவது. தமிழ் என்னும் சொல் அத்தகையதே. நம் முன்னோர்கள் தந்த இலக்கியங்களில் தமிழ் மொழியையும் அது பேசப்படும் இடத்தையும் எவ்வாறு அழைத்தார்கள்? அதில் எத்தகைய உணர்வுகள் பிரதிபலித்தன?

உணர்வு என்பதே ஒரு அற்புதமான சொல். நேர்மறையான, உன்னதமான, நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் அகத்தை ஊடுருவும் பொழுது ஏற்படுவதே உணர்வு. தொன்மையில் இருந்தது போலன்றி தற்காலத்தில் சொற்கள் அவரவர் விருப்பதிற்கேற்றவாறு பயன்படுத்தப்பட்டு பொருளின் அடர்த்தி நீர்த்துப் போய்விட்டது. பள்ளி செல்லும் வயதில், 80களின் முற்பகுதியில், மதுரை மேம்பாலங்கள் அனைத்திலும் “இன உணர்வு கொள்” என்று கரியினால் எழுதப்பட்ட வாசகத்தை பார்த்தபடி கடந்ததுண்டு. அறியாமையில் ஈர்ப்பு ஏற்படுத்திய‌ வாசகம். ஆனால் அதிலுள்ள உணர்வு என்னும் பொருள் விரிவடைவதற்குரிய‌ உன்னதம் இல்லாமல் சுருங்குதற்குரிய சுயநலம் மிக்கது என்று அறிய சில‌வருடங்கள் ஆனது. தமிழ் சார்ந்த சொல்லாடல்கள் பலவும் தற்போது அத்தகைய நிலையில் தான் உள்ளது என்பதை நினைவில் கொண்டு இலக்கியம் பக்கம் நகரலாம்.

தமிழ்நாடு என்ற பெயர் எப்போது வந்தது என்றவுடன் சட்டென்று பதிலாய் தோன்றுவது அறுபதுகளில் நடந்தவையே. ஆனால் அதற்குச் சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்னால், மூவேந்தர்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே, அவர்களின் நிலப்பரப்பை எல்லாம் ஒன்றடக்கி “தமிழ்நாடு” என்றார் இளங்கோ அடிகள். சிலப்பதிகாரத்தில் காட்சிக் காதையில் ஒரு பாடல்:

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீ ருலகில் முழுவது மில்லை
இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது
கடவு ளெழுதவோர் கற்கே யாதலின்
வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்
தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி
மண்டலை யேற்ற வரைக வீங்கென…”

காட்சிக் காதை என்பது வஞ்சிக்காண்டத்தில் குன்றக் குரவையின் பின்னே வருவது. குன்றக் குரவையில், கோவலன் இறந்தபின், அவன் தேவர்களுடன் வந்து கண்ணகியை விமானம் மூலம் வானுலகம் அழைத்துச் செல்லும் காட்சியை குறவர்கள் பார்க்கின்றனர். தாங்கள் கண்டதை காட்சிக் காதையில் அவர்கள் சேரன் செங்குட்டுவனிடம் விவரிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, காட்சிக் காதையில், கண்ணகிக்காக கல் நடும் பொருட்டு இமயத்திலிருந்து கல் எடுத்து வர திட்டமிடுகிறான் செங்குட்டுவன். ஆனால் வடக்கில் இருக்கும் மன்னர்கள் அவனை தடுக்கக்கூடும் என்ற தன் எண்ணம் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசிக்கிறான். அப்போது வில்லவன் கோதை என்னும் அமைச்சர், கடலை எல்லையாகக் கொண்ட இந்நிலம் முழுவதையும் (இமயம் முதல் குமரி வரை) உன் ஆளுகையின் கீழ் “தமிழ்நாடு” என கொண்டுவர எத்தனித்திருக்கும் உன்னை எவரும் தடுக்க இயலாது என்று சொல்வதே இப்பாடல்.

இதே சிலப்பதிகாரத்தில், அரங்கேற்று காதையில், மாதவியின் ஆசிரியர் எப்படிப்பட்ட தன்மை கொண்டவர் என்பதற்கு ஒரு பாடல் வருகிறது:

“இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி
வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து…”

தமிழ் முழுமையாய் கற்றறிந்த, கடலை எல்லையாகக் கொண்ட தமிழகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவன் என்கிறது இப்பாடல். தமிழ்நாடு, தமிழகம் என்ற இரண்டையும் ஒரே பொருளில் தனது படைப்பில் கொடுத்திருக்கிறார் இளங்கோ அடிகள். சாதாரண தமிழ்நாடா என்ன? இவர் இன்னும் ஒருபடி மேலே போய், நாடுகான் காதையில் “தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரை…” என்கிறார். அதாவது வெறும் நாடு இல்லை, “தமிழ் நன்னாடு”!

காலத்தால் இன்னும் சற்று பின்னோக்கி, சங்கத்துள் நுழைந்தோமென்றால், பெரும்பாலும் நாம் காண்பது “தண்டமிழ்” என்னும் பிரயோகத்தையே…நம் மண்ணையும் மொழியையும் ஒரே சொல்லில் சொல்வது எத்தனை இன்பம்! “நான் தண்டமிழாக்கும்…” என்று சொல்லும் போது எத்தனை விதமான பொருளில் உவப்பு மிகுகிறது! தண்டமிழ் என்றால் தண்மை உடைய தமிழ். தண்மை என்பது குளிர்ச்சியைக் குறிக்கும். எனினும், குளிர்ச்சி என்பதை “பதப்படுத்தப்பட்ட” என்றும் கொள்ளலாம். அதாவது “முதிர்ச்சி பெற்ற”… நான் பக்குவப்பட்ட மக்கள் வாழும் நாட்டைச் சேர்ந்தவன், நான் இதமான மொழி பேசுபவன், நான் முதிர்ச்சியடைந்த மூத்தோர் வழி வந்தவன்…அடடா…

கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஒருவனை ஐயூர் முடவனார் என்னும் புலவர் பாடும் பாடலொன்று புறநானூற்றில் உண்டு. அதில் “சினப்போர் வழுதி தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்…” என்கிறார். புறத்தில் இருந்து தொகையைத் தொட்டால் பதிற்றுப்பத்தில் ஒரு பாடலைப் பார்க்கலாம். பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. பத்து சேரமன்னர்களைப் பற்றி, அவர்கள் ஒவ்வொருவர் குறித்தும் பத்து பாடல்கள் பாடப்பட்டதால் இது பதிற்றுப்பத்து. ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு புலவரால் பாடப்பட்டவை. கபிலருடன் கரம் குலுக்காமலா கவின்மிகு தமிழ் பற்றி எழுதுவது? செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் சேர மன்னனின் குணங்களை வாழ்த்தும் ஏழாம் பத்தை பாடியவர் கபிலர். இதில் “அருவியாம்பல்” என்றொரு பாடல். அதில் வரும் இரண்டு வரிகள்:

“சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்து…”

என்கிறார் கபிலர். உழிஞை என்பதற்கு முடக்கத்தான் கொடி என்றும் அர்த்தம் உண்டு. தெரியல் என்றால் மாலை. உழிஞை மாலை சூடி செய்யும் போர் உழிஞைப் போர் எனப்படும். உழிஞைத் திணை என்றொரு திணை வகையே உண்டு. “எயில் காத்தல் வெட்சி அது வளைத்தல் ஆகும் உழிஞை” என்றொரு பாடல் வரி இதன் பொருளை எளிதாக்குகிறது. எயில் என்றால் மதில். மதிலை வளைத்து பகைவரை வெல்லுதல் உழிஞைத் திணைக்குரிய போர் முறை. கொண்டி என்றால் வென்று கொண்டு வரும் பொருள். இருவரி பொருளையும் சேர்த்தால், சிறிய இலைகளை உடைய உழிஞை மாலை சூடிய நீ பகையரசர்களின் செல்வங்கள் அனைத்தையும் கொணர்ந்து செறிவேற்றிய தமிழ்நாடு உனது என்று பொருள் கொள்ளலாம். மூத்தோர் எழுதிய உரைகளில் தண்டமிழ் என்பது தமிழ் மறவர் படை என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது என்பதையும் நாம் நினைவில் கொண்டாக வேண்டும்.

வைகை பாய்ந்த மண்ணில் வளர்ந்து விட்டு நான் பரிபாடலிடம் பாராமுகம் காட்ட முடியுமா?

“தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு.”

என்னும் பாடலின் முதல் வரி தமிழை எல்லையாகக் கொண்டது தமிழ்நாடு என்கிறது….

இப்படியாக தமிழகம், தமிழ்நாடு, தண்டமிழ் என்று தமிழன்னையின் வசிப்பிடங்களுக்குத்தான் எத்தனை பெயர்கள்! கபிலரும் இளங்கோவும், தமிழ் கண்ட புலவர் யாரும் “நான் ஒன்றைக் குறிக்க‌ பயன்படுத்திய சொல் தான் சரி. நீங்களும் நான் பயன்படுத்திய சொல்லை வைத்துத்தான் பாட வேண்டும்” என்று மற்ற புலவர்களிடம் சண்டையிட்டதாக குறிப்புகள் இல்லை :). எனவே தான், படித்து முடிப்பதற்கே பல ஜன்மம் எடுக்கவேண்டும் என்கின்ற அளவு சொற்செறிவுள்ள, பொருட்செறிவுள்ள‌ அற்புதமான இலக்கியங்கள் நமக்குக் கிட்டின. அரசியல் பிழைப்போர், மாநிலத்தை எப்படி அழைப்பது என்று அவர்களுக்குள் ஆயிரம் சண்டையிட்டுக் கொள்ளட்டும். நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதும், வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியதும் ஒன்றே:

தண்டமிழ் இன்பம் பெற, தமிழ் நாடும் ஒவ்வொருவரின் தன்மையாய் உறைவதே தமிழின் அகம் ஆகும் என்பதே அது.

One Reply to “தமிழகம்-தமிழ்நாடு சர்ச்சை பற்றி”

  1. சிறப்பான கட்டுரை. அரசியலை வைத்துப் பிழைப்போர் அறத்தை பிழை செய்கிறார்கள்.வெற்றுச் சொற்சிலம்பங்கள், ஒரு மொழியை வளர்க்குமா என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.