
(1)
காலத்திடம் வயதென்றால் என்ன என்று வினவும்
தொல் மரத்தின் சிறு பொந்தின் வாசலில்
இரவை ஒளித்து வைத்திருப்பதாய்
பகலை வழி மறித்து உட்கார்ந்திருக்கிறது
பகலிலோர் ஆந்தை.
பகலிடம் வினவுகிறது அது:
இரவில் வெளிப்படையாய் எல்லாம்
நடப்பது போல்
ஏன் பகலில் அவ்வளவு நடப்பதில்லை?
பதிலுக்கு பகல் வினவுகிறது:
பகலில் வெளிப்படையாய்
நடப்பவற்றையெல்லாம்
இரவு பதுக்கியிருப்பதை
இரவில் ஏன் காண்கிலை நீ?
பொந்துக்குள் நுழைகிறது
பேசாமல் ஆந்தை.
பொந்தின் இருட் கதவைச்
சாத்துகிறது மெல்லப்
பகல்.
(2)
வசிக்க கூண்டொன்று
கட்டி வைத்தேன்
சிட்டுக் குருவிக்கு.
ஏன் வசிக்க வரவில்லை
இன்னும் அது?
கூண்டைக் கவனிக்கவில்லையா?
கவனித்தும் கூண்டு பிடிக்கவில்லையா?
கூண்டில் தான்யங்கள்
போட்டு வைத்துள்ளேன்.
தான்யங்கள் தேவையில்லையா?
தேவையாயினும்
தான்யங்கள் பிடிக்கவில்லையா?
ஒரு வேளை கூண்டு வைத்த
என் மீது நம்பிக்கையில்லையா?
கூண்டில் குருவி வசிக்க வருவதற்கு
எப்படி என் நம்பகத்தை நிரூபிப்பது?
சிட்டுக் குருவிக்கு கட்டிய கூண்டில்
வசிக்கத் தொடங்கினேன் நானே
சிட்டுக் குருவியாகி.
(3)
பறவைகளின் இரைச்சல்கள்
முதுபெரும் ஆலின் மோனத்தில்
மூழ்கி எழும்பும்;
காலத்தின் நெடுந்தூண்களாய்
ஆலின் விழுதுகள்
நிலத்தில் ஊன்றிக்
கட்டியெழுப்பியிருக்கும்
ககனவெளி மாளிகையில்
மோதி எதிரொலிக்கும்.
தின்று ஆலம்பழத்தின்
விதைகளைத்
தன் மீது துப்பும்
பறவைகளை
ஆல நிழலின் கீழ்
ஆசுவாசமாய் நோற்கும்
சாமி சபிக்கவில்லை.
பறவைகள் பாட மகிழும்
சாமி ’வரம் கேளெ’ன்றால்
சாமியிடம்
என்ன வரம் கேட்கும்
பறவைகள்?
கேட்டாலும்
நிச்சயம்
ஆசைகளில்
கூடு கட்ட
இருக்காது.
(4)
பனந்தோப்பின் அடர்நிழலில்
குளிர்ந்த அமைதியைப்,
பறந்து ’விர்விர்’ரென்று
ஒலி அம்புகளில்
சல்லடையாய்த் துளைக்கும்
தூக்கணாங் குருவிகள் கட்டிய
நெடும்பனையின் காதுக் கம்மல்களாய்த்
தொங்கும் கூடுகளில்
நேற்றடித்த சூறைக்காற்றில்
அறுந்து விழுந்த
கூடொன்றைக் கண்டு
என் அவாவில் பின்னும்
பின்னல்கள் போலில்லை
கூட்டின் பின்னலென்ற
அறிதலில்
ஆச்சர்யமாயிருக்கும்
எனக்கு-
தூக்கணாங் குருவிகள்
கூட்டைப் பின்னிய முறையிலல்ல –
அதைப் பின்னாத முறையில்.
(5)
சிறுகுருவி தானேயென்று
சிறைப்பிடிக்க எண்ணிய
சிறுகணத்துக்குள்
ஊடுருவும் மின்னலாய் உள்நுழைந்து,
உள்நுழைந்த வேகத்திலேயே
விட்டு வெளியேறி
சிறுகணம் தன்னைச்
சிறைப்பிடிக்க முடியாமல்
ஏமாந்து போகச் செய்யும்
சிறுகுருவி-
சிறுகணத்தை
இன்னும் பொடிந்து
சிறுகணமாக வேண்டிய
சிறுகணமாயில்லாமலாக்கி.
(6)
சட்டெனக் குதிக்கிறது
சிறுகுருவி
சிறுநொடியின் மீது- ஒரு
சிறுகிளை மீதமர்ந்து
சிறிது குலுங்குவது போல்
தெரிகிறது அது
எனக்கு.