
பருவம் தப்பிய நிலங்களில்
கொற்றவை நிலை கொள்கிறாள்
தன் உதிரத்தின் வெம்மை கொண்டு
அந்நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நெருப்பை மூட்டி அதன் நடுவே
கோடான கோடி இச்சைகளைக்
கொட்டி எரிக்கிறாள்
எங்கும் விரவிப் பரவுகிறது
அதன் நெடி
சுடர்விட்டு எரிகின்றன
மாமிசக் கொழுப்புகள்
அதை அள்ளி திண்ணும் கொற்றவையின் செங்கழுத்து
ஆகாசத்திற்கும்
பூமிக்குமாக
ஏறி இறங்குகிறது
அங்கே
கொற்றவை
காலம் அழித்து
நின்று சுடர்ந்து
ஆடத் துவங்குகிறாள்
நிலமெனும் கருக்குழியில்
விழுந்து திமிர்ந்து உருண்டு திரண்டு
வளரத் துவங்குகின்றன
தீயின் நாவுகள்
நினைவு தப்பிவிட்டது
நிலம் இல்லை
அது
கொற்றவையின்
உடல்
இல்லை
வெறும் இச்சை
இல்லை
அது
நீயும்
நானுமாக
எரியும்
காலத்தின்
எக்காள ஒலி