அறிவாகிய கோயிலின் புதிய தீபங்கள்

இதன் தொடர்ச்சி

2023ம் ஆண்டின் ‘பயனர் மின்னணுக் காட்சி’, (CES- Consumer Electronics Show) தொழில் நுட்பமும், மதியூகமும், மிகு கற்பனைகளும் நிறைந்து, நீண்ட இரு ஆண்டுகளுக்குப் பின்னர் லாஸ் வேகஸில் அருமையாக நடத்தப்பட்டது. சில முக்கிய தொழில் நுட்பங்களையும், சில அருமையான சாதனங்களையும், மின்னணு மற்றும் குவாண்டம் நுட்பம் கொண்டு வரும் அருமைகளையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகப் பங்கு கொண்ட இந்தப் பயனர் திருவிழாவில், 2200 குழுமங்களும் கலந்து கொண்டு அவர்களின் எதிர்பார்ப்புகளையும் சொன்னார்கள். 2020க்குப் பிறகு முதல் முறையாக கணினி வலை இணைப்பு மின்னணு தொழில் நுட்பம் (CNET-Computer Networking and Electronics Technology) சார்ந்த சுய ஆர்வமுள்ள சி என் இ டியின் (CNET) ஆசிரியர்களும் இதில் நேரே கலந்து கொண்டனர்.

இதில் அவர்கள் கீழ்க்காணும் அணுகுமுறையை மேற்கொண்டார்கள்.

முக்கியமாகக் கருதத் தக்கவைகள் என்னென்ன, எதிர்கால தொழில் நுட்பம் எது, வியப்பான, விசித்திரமான படைப்புகள், சாதனங்கள், சேவைகள் என்னென்ன, அனைத்துக்கும் மேலாக 2023-ல் சந்தையில் நீங்கள் வாங்கும் விதத்தில் கிடைக்கப் போகிற பொருட்கள்/ சேவைகள் என்ன என்று வகைப்படுத்தித் தருவது. இதற்கான சி என் இ டியின் செயல்பாடு இவ்வாறாக இருந்தது.

  • ஐந்து முதல் ஏழு வரையிலான சாதனங்களை மிகச் சிறந்ததாக தேர்வு செய்வது.
  • முன்னர் பார்த்திராத கருதுகோள் கொண்ட பொருட்கள்.
  • பயனர்களின் தேவையை எளிதில் நிறைவேற்றக்கூடிய அமைப்பு.
  • தற்சமயம் பயன்படும் பொருட்களின் மேம்பட்ட வடிவம், செயல் திறன்
  • ஒரு வருட காலத்தில் பயனர்களுக்குக் கிடைக்கும் கால நிர்ணயத்துடன் வரும் பொருட்கள் அல்லது சேவைகள். குறிப்பிட்ட ஆண்டில் வெளி வரும் எனச் சொல்ல இயலாத மங்கலானவைகள் இதில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

எல் ஜியின் 97 இஞ்ச், கம்பிகளற்ற ஓ எல் இ டி (LG 97 inches Wireless OLED) தொலைக்காட்சிப் பெட்டி

இது எல் ஜி எம்3 (LG M3) வரிசையில் வந்துள்ள பெரும் சாதனம்; அனைத்தும் அதற்கும் அப்பாலும் என்றே இதன் பட, வண்ணத் தரங்களைச் சொல்லலாம். 97 இஞ்ச் என்பது எத்தனை பெரியது! அரங்குகளில் பார்ப்பதைப் போன்ற அனுபவத்தை அதன் அளவு, அதன் வண்ணம், அது பயன்படுத்தும் தொழில் நுட்பம் அனைத்தும் தரும்; ஆனால், அற்புதம் என்பது பெட்டியின் முன்போ, பின்போ ஊஞ்சலாடும் கம்பிகள் இல்லை என்பதுதான். 83 மற்றும் 77 இஞ்சு அளவுகளிலும் கிடைக்கும் இது, 2023-ல் சந்தைக்கு வருகிறது. உங்கள் எதிர்பார்ப்புகளைத் தூண்டும் வண்ணம் 77 இஞ்ச் டி வியின் விலை $2900, 97 இஞ்ச் $25,000. ஒ எல் இ டி {OLED} என்பது கரிம ஒளி உமிழும் டயோட்களைக் (Organic Light Emitting Diodes) கொண்டது.

விதிங்க்ஸ் யு-ஸ்கேன் (Withings U-Scan) உங்கள் சிறுநீரைப் பகுப்பாயும்

வீட்டிலிருந்தபடியே உங்கள் உடல் நலம் சார்ந்த விவரங்களை அறிய வேண்டுமா? இந்த யூ-ஸ்கேன் நீங்கள் சிறுநீரைக் கழிக்கும் போது அதைத் தன் உணரிகளால் ஆய்வு செய்து விடும். இந்தக் கருவியை, கழிப்பறைப் பகுதியில் நீங்கள் அமர்ந்து கொண்டு சிறுநீர் கழிக்கும் போது அது உங்கள் சிறுநீரில், விட்டமின் ‘சி’ எந்த அளவில் இருக்கிறது, ‘கீடோன்ஸ்’ எப்படி உள்ளது, உங்கள் சிறு நீரகங்களின் நிலை, சாத்தியமான ஹைட்ரஜன் (pH) அளவு ஆகிய விவரங்களை அருகலையின் (Wi-Fi) மூலம் உங்கள் அலைபேசிக்கு அனுப்பிவிடும். பெண்களுக்கான மாத விடாய் சுழற்சிகளை அறிவதற்கும் தனியாக ஒரு செயலி அதிலுள்ளது. பொதுவாக, சிறுநீரைப் பரிசோதிக்க பயன்படுத்தப்படும் கீற்றுகள், (Strips) கைகளை உபயோகப்படுத்தி செய்ய வேண்டி வரும், இது அப்படியல்ல, தானாகவே மாதிரியை எடுத்துக் கொள்ளும்; முடிவை உங்கள் ஃபோனுக்கு அனுப்பிவிடும். நீங்கள் அது இயங்குகிறது எனக் கூட அறியமாட்டீர்கள். தினமும் இந்தப் பரிசோதனை நடக்கும் என்பது இந்தக் கருவியின் மற்றொரு சிறப்பம்சம். [சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவினை இது காட்டுமா எனத் தெரியவில்லை. அதேபோல, கற்கள் அல்லது தடைகள் இருப்பதை இந்த உணரிகள் கண்டுபிடிக்குமா என்பதும் தெரியவில்லை.]

ஹெச் டி சியின் வைவ் ஹெச் ஆர் எலீட் (HTC Vive HR Elite) நிகழ்நிலை தலையணி (Virtual Headset)

இதுவரை வெளி வந்துள்ள ஹெட்செட்களில், அது நிகழ்நிலை உண்மையோ, (Virtual Reality) அதிகரித்த யதார்த்தமோ, (Augumented Reality) நாம் மிக நெருக்கமாக உணரக் கூடிய இந்த ஹெச் டி சியின் ‘வைவ்’, நம் அனுபவத்தை மிகவும் மேம்படுத்தும். பிப்ரவரியில், $1099 விலையில் இது சந்தைப்படுத்தப்படும்.

இந்தத் தலையணிகள் என்ன புதுசா? சந்தையில் இல்லாததா? ஆம், இது புதிது. நாம் அணியும் கண்ணாடிகளின் அளவில், க்வெஸ்ட் ப்ரோ வி ஆர் ஹெட்செட்டின் (Quest Pro VR Headset) எடையில் பாதி நிறையுடன் வந்துள்ள இது அதிக பளுவைக் குறைக்கும், அனுபவத்தை சிறப்பாக்கும் ஒரு சாதனம். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், இதைப் பயன்படுத்தும் போது கண்ணாடி தேவையில்லை. டைஆப்டர்ஸ் (Diopters) என்ற சிறு கரங்கள், (Dials) லென்ஸ் (Lens) நிலையை மாற்றி, தானாகவே சரி செய்து கொள்ளும். எதிர்பார்க்கும் விதத்தில் இது செயல்பட்டால், இந்த ‘சுயச் சரி செய்யும் அமைப்பு’ மிக வசதியாக இருக்கும். இதன் சிறிய எடையும், குறைந்த அளவும், கண்ணாடி அணிபவர் அது இல்லாமலேயே இதைத் தலையணியாக உபயோகப்படுத்த முடியும் என்பதும் பயனர்களுக்கான நிறைவை அளிக்கும் ஒன்று. (கட்டுரையாளர்: எரிக் ஃப்ராங்க்ளின்)

டி சி எல்லின் ரே ந்யூ எக்ஸ்2 அதிகரித்த யதார்த்தக் கண்ணாடி வெவ்வேறு மொழி உரையாடல்களை உடனுக்குடன் மொழி பெயர்க்கும் (TCL’s RayNeo X2 AR glasses can translate conversations in real time)

சீனாவின் இந்த டி சி எல் குழுமம், தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குப் பெயர் போனது. இப்போதோ வி ஆர், ஏ ஆர் கருவிகளையும் செய்கிறது. சி என் இ டியின் ஸ்காட் ஸ்டெய்ன், (Scott Stein) இதைப் பயன்படுத்தி சீன மொழி பேசுபவருடன் ஒரு உரையாடல் செய்தார். உடனுக்குடன் அது செய்த சிறந்த மொழியாக்கத்தைக் கேட்டு மகிழ்ந்தார். இக்கருவியின் குறைபாடு அதன் மிகு எடை.

இந்தக் கருவியின் சட்டகங்கள் சற்று அதிக எடையுடன் இருக்கின்றன. ஆனால், வேறு கண்ணாடிகளைப் பயன்படுத்தத் தேவையில்லை என்பது பயனர்களுக்கு உதவும் ஒன்று. க்வால்காமின் ஏ ஆர்1 சில்லுகளைப் (Qualcomm AR1Chipset) பயன்படுத்தும் சிந்தனை இருக்கிறது. அது செயல்பட்டால், எடை குறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

முதலில், 2023ன் முதல் காலாண்டிற்குள் இந்தக் கருவி, இதைச் சார்ந்த தொழில் நுட்ப வல்லுனர்களிடம், தரப்பட்டு, தேவையெனில் சிறு மாற்றங்கள் செய்யப்படும். பின்னர் ஆண்டு இறுதிக்குள் சந்தைப்படுத்தப்படும். (கட்டுரையாளர்: பீட்டர் பட்லர், டேனியல் வேன் பூம்)

பிஎம்டபிள்யுவின் ஐ விஷன் டீ (BMW I Vision Dee)

இது ஒரு கருத்துச் சிந்தனை என்பதால் இதைக் கொஞ்சம் கவனத்தோடு அணுக வேண்டும், இதுவும் ஒரு ஹூட் (HUD) தான்- அதாவது ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே- (Heads-up Display). ஒட்டுனரின் பார்வையின் கீழுள்ளவற்றை, காற்றுத் தடுப்புக் கண்ணாடியில் (Windshield) காட்டும் சாதனம் இது; ஓட்டுனர்களுக்கு உதவிகரமாக இருக்கும். 2025-ல் வரும் கார்களில் இந்த ஹூட் நிச்சயமாக இடம் பெறும் என்று பி எம் டபிள்யு சொல்கிறது. பொதுவாக, டேஷ் போர்ட் (Dash Board) திரையில் இந்தக் காட்சிகளை ஓட்டுனர் பார்க்கிறார்கள். இப்போது பி எம் டபிள்யு செய்திருப்பது அதை முழுமையாக காற்றுத்தடுப்பு கண்ணாடியில் காட்டுவது. ஒட்டுனரின் தோழன்; அதாவது பெரிய திரையில் துல்லியப் படங்கள். இது அதிகரிக்கப்பட்ட யதார்த்தத்தில், (Augumented Reality) காற்றுத்தடுப்பானின் முழு அகலத்தையும் ஐந்து வழிகளில் ஆழப்படுத்துகிறது. முதல் கட்டம் அத்தியாவசியங்களை, அதாவது, வேகமானி (speedometer), வழி செலுத்தும் விவரங்கள், (Navigation) போன்றவை அடங்கியது. இரண்டிலிருந்து நான்கு வரையான நிலை நிறையத் தகவல்களைக் கொடுத்து சாலை வழியை நமக்குத் தெளிவாக்கும். ஐந்தாம் நிலை நிகழ்நிலை சூழல்களைக் (Virtual Environment) காட்டும் ஒன்று. இது கார் ஓட்டும்போது செய்யும் ஒன்றல்ல. அதாவது, கார் உங்களை ஓட்டிச் செல்லும் போது பயன்படுத்த வேண்டிய ஒன்று. கார் இயக்கத்தில் இருக்கும் போது பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்று இது. உங்கள் காரை, உங்களுக்கு நெருக்கமாக்கும் இந்த சாதனம். இதில் (இ-மை) மின்னணு மை முக்கியப் பங்காற்றுகிறது. விரும்பும் வண்ணங்கள், உணர்வுகள், மனித முகங்களில் வண்ண வேலைப்பாட்டுடன் கூடிய வலைத் திரைகள், சிறப்பான செயற்கை நுண்ணறிவு உங்களுக்கு அடிமையாகச் செயல்படாமல், நண்பனாக இருக்கும் இணக்கம் எல்லாமே வியக்க வைக்கின்றன. இந்த இ-மை காற்றுத் தடுப்பானில் மட்டும் பயன்படுத்தப்படவில்லை. 240 இ-மை மின்னணுக் கதவுகள் உள்ளன. விரும்பும் நிறங்களுக்கு, விரும்பும் முறையில் மாற்றிக் கொள்ளலாம். இப்போது கருத்தளவில் இருந்தாலும், சில அம்சங்களை பி எம் டபிள்யூ கார்களில், வரும் வருடங்களில் எதிர் பார்க்கலாம். செயற்கை நுண்ணறிவால் செறிவூட்டப்படும் ‘ஹப்’ தரும் தொழில் நுட்பத்தை 2025ல் வெளி வரும் பி எம் ட்பிள்யூ கார்கள் கொண்டிருக்கும் என்று அதன் தலைமை நிர்வாகியான ஆலிவர் ஜெஸ் (Oliver Zipse) சொல்கிறார்.

இந்தக் கருது கோள் காரின் அடிப்பீடத்தில், இ இங்க் உறை (E ink Cover) ஒன்று இருக்கிறது. நீங்கள் விரும்பும் வண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்தக் கார் உங்கள் கிட்டைப் (KITT) போல பேசவும் செய்யும் என்ற மாயையை பி எம் டபிள்யு நிறுவனத்தினர் ஏற்படுத்தினர். அவர்கள் திரை மறைவில் ஒரு பெண்ணைப் பேச வைத்துவிட்டு, வருங்காலத்தில் இந்த உரையாடல் நிகழும் வாய்ப்புக்களைக் காட்டுவதற்காக அவ்வாறு செய்ததாகச் சொன்னார்கள்.

இதில் சொல்லப்பட்ட இ மை (இ இங்க்) என்பது என்ன? தெளிவான திரவத்தில் சிறு சிறு கேப்சூல்களில் வெள்ளை மற்றும் கறுப்பு நிறமிகள் தொங்கவிடப்பட்டிருக்கும். இதில் கறுப்பு நிறமிகள் எதிர்மறை மின்னோட்டத்தையும், வெள்ளை நிறமிகள் நேர் மின்னோட்டத்தையும் மின்னணுத் தகடுகள் மூலம் பெறும். கிண்டில் இ நூல் இந்த இ-மையின் உபயம்.

மேலே ‘கிட்’ என்ற ஒன்றையும் பார்த்தோம். அது Knight Industries Three Thousand-KITT. இதில் கணினியில் ஆடும் ஒரு விளையாட்டு. நிகழ்நிலையில், நேனோ தொழில் நுட்பம் கொண்டு ஆடும் இந்த வீர விளையாட்டில் மணிக்கு 377 மைல்ஸ் வேகத்தில் பயணித்து எதிரிகளை அழிக்கலாம். இராணுவ உபகரணங்களும் தேவைக்குப் பெற்றுக் கொள்ளலாம்- விளையாடுவதற்கான நிகழ் நிலை கருவிகள் அவை.

சாம்சங் எஸ் 95 சி 77 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டி க்யூ டி- ஒ எல் இ டி (Samsung S95C 77-inch QD-OLED TV)

குவாண்டம் புள்ளிகளாலான (Ouantum Dots) க்யூ எல் இ டி (QLED) என்பது நிறை ஓளி, அதிக வண்ணங்கள், போன்ற தன்மைகள் கொண்டுள்ள ஒன்று. குவாண்டம் புள்ளிகளின் அடுக்கில் சிறிய எல் இ டிகள் (LED) இருப்பதால் இந்த அமைப்பு சாத்தியமாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் சென்ற ஆண்டை விட இதன் அமைப்பில் சிறந்த கவனம் செலுத்தி, பிரகாசமாக, சிறந்த வண்ணக் கலவைகளில் காட்சிகளைக் காட்டுகிறது. முக்கியமாகக் கண் கூச்சம் இல்லாமல் பார்க்க முடிகிறது. டேவிட் காட்ஸ்மயர் (David Katzmaier) என்ற தொலைக்காட்சி பெட்டி நிபுணர் இதன் வண்ணங்களைப் போல் வேறெங்கும் காணேன் என்று சொல்கிறார். எனினும் இதன் திரை அமைக்கப்பட்ட விதம் சற்று சாம்பல் நிறத்துடன் இருப்பதால், பளீரிடும் வண்ணக் கலவை அனுபவம் குறைகிறது.

இதைப் பரிந்துரைக்க அல்லது பட்டியலில் இடம் பெறச் செய்ததற்கு முழுமைக் காரணம் அதன் தரம். 77 இஞ்ச் தொ.கா சந்தையில் இது எல் ஜிக்கு சரியான போட்டியாக இருக்கும். இந்தப் போட்டியால், விலை குறையும்; அது பயனர்களுக்கு இலாபமாகலாம். எதிர்காலத்தில் இத்தகையதொரு பெட்டியை நாம் தகுந்த விலையில் பெற முடியும்.

ஷைன்டரின் திறன் மிகு வீட்டுக் கருவிகளால் உங்கள் மின் கட்டண சேமிப்பு அதிகரிக்கும் (Schneider Smart Home system will maximize your energy savings)

மனிதர்களுக்கு ‘ஷாக்’ கொடுப்பது மின்சாரம் மட்டுமல்ல, அதன் கட்டணமும் தான். சில தடுப்பான்கள், மாற்றிகள் இவற்றைக் கட்டுப்படுத்தும் அட்டவணையைக் கொண்டு மின்சாரம் குடிக்கும் சில சாதனங்கள் எவ்வெப்போது இயங்க வேண்டும் என நாம் தீர்மானித்து செயல்படுத்தினால் மின் கட்டணச் சேமிப்பு சாத்தியமாகும்.
மின் வாகனங்களைப் பயன்படுத்துவோர், அவை எப்போது சக்தி ஏற்றிக் கொள்ள வேண்டும், எந்த சமயத்தில் செய்தால் குறைந்த கட்டணத்தில் செய்யலாம், அல்லது சூர்ய சக்தியை உபயோகிக்கலாமா என்று அட்டவணையிட்டு பரிசீலிக்கலாம்.
நடுத்தர வர்க்கம் சமாளிக்க முடியாமல் ஏறிக்கொண்டே செல்லும் மின் கட்டணத்தைக் குறைக்க இந்த சாதனம் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மின் சாதனமும் ஒவ்வொரு வீட்டிலும் பயன்பாட்டில் இருக்கிறது. வெளியில் செல்லும் போது அனைத்தையும் மின் இணைப்பிலிருந்து துண்டித்து விட்டுப் போக மறந்து விட்டால், பயன்படுத்தாத மின்சாரத்திற்கும் சேர்த்து கட்டணம் கட்டுகிறோமே, அதை, இந்தச் சாதனத்தைப் பொருத்துவதன் மூலம் தவிர்க்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் மாதமொருமுறை மின் அளவைக் கணக்கிட்டு கட்டணம் வசூலித்தார்கள். இப்போது இரண்டு மாதங்களுக்கொருமுறை இதைச் செய்து அளவைக் கூட்டி, அதற்கேற்றக் கட்டணமாக வறையறுத்துள்ளார்கள். பொது மக்கள் அவதியுறுகிறார்கள்.

360 டிகிரியில் காரின் உள்ளே துல்லிய இசை (The utterly surreal Dolby Atmos in-car sound in a Maybach)

நீங்கள் கேட்பது எதுவானாலும், அதைத் தெளிவாக, துல்லியமாகக் கேட்க உதவும் ‘டோல்பி அட்மோஸ்’ (Dolby Atmos) என்பது ஒரு ஒலி நுட்பம். நீங்கள் பொதுத் திரையரங்குகளில், வீட்டுத் திரையரங்குகளில் அனைத்துத் திசைகளிலிருந்தும் வழிந்தோடி இசை அல்லது ஒலி உங்கள் செவிகளை அடைவதை அறிந்திருப்பீர்கள். ஆனால், உங்கள் மகிழுந்துவில்? டீலக்ஸ்- மெர்சீடீஸ்- (Deluxe-Mercedes-Maybach) மைபாக் இந்த ஒலி நுட்பத்தைக் காரில் வழங்குகிறது. அது எத்தனை அருமையாக இருக்கிறது? சி என் இ டியின் ஆசிரியர் பிரிட்ஜெட் கேரி (Bridget Carry) சொல்கிறார்: “இசை என்னுடன் மிதந்தது. எங்கே ஒலி அமைப்பான்கள் உள்ளன என்றே தெரியவில்லை. அமானுஷ்யமாக நிறைந்து பரவியது. க்வீன் குழுவினரின் போஹீமியன் ராப்சோடியைக் (Bohemian Rhopsody) கேட்கையில் ஃப்ரெட்டி மெர்குரி (Freddie Mercury) என் முன்னால் மிதந்து கொண்டிருந்தார்.” அவரது அந்தப் பாடல் ‘நான் நானாக இல்லை’ என்று தத்துவார்த்தமாகப் போகும் ஒன்று.’

இந்த மைபாக்கின் விலை அப்படியொன்றும் அதிகமில்லை, மேதகு மக்களே- வெறும் $1,85,000/- மட்டுமே! அனைவராலும் இதை வாங்க முடியாது ‘அட்மாசை’ பெரும்பாலோர் பயன் படுத்தும் கார்களிலும் கொண்டு வரவும், வழமையான ஆறு ஒலிபெருக்கிகளில் இந்த ஒலி நுட்பத்தைக் கொண்டு வரவும் இயலும் என்றும், அதற்கான முயற்சிகள் நடக்கின்றன என்றும் டோல்பி சொன்னாலும், எப்போது அது கிடைக்கும் என்ற கால நிர்ணயத்தை அது கொடுக்கவில்லை.

சி இ எஸ் சிறந்த சாத்தியக் கூறுள்ளவற்றை முதன்மைப்படுத்தியிருக்கிறது. சிலது புதியவை, சிலது மேம்படுத்தப்பட்டவை, பயனர்கள் எதிர்கொள்ளும் சிக்கலைத் தீர்க்கும் விதமாக முன்னேற்றப்பட்டவை சில கருவிகள்

உலகம் போகின்ற வேகம், உருவமும் இனிமேல் மாறும், நடக்கும் கதைகளைப் பார்த்தால் நமக்கே சிறகுகள் முளைக்கும்.

இந்தப் பட்டியலில் இடம் பெறும் தகுதியுடன் இருப்பவைகள் பலது இருக்கின்றன.

இன்னும் சில கருவிகள், சேவைகள் பற்றி இதன் தொடர்ச்சியில் பார்ப்போம்.

உசாவி: https://www.cnet.com/tech/the-most-noteworthy-tech-at-ces-2023-we-couldnt-ignore/?ftag=CAD090e536

One Reply to “அறிவாகிய கோயிலின் புதிய தீபங்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.